Tag Archives: Sci-fi

முடிபொருட்டொடர்நிலை

ராணி: ட்விட்டர்ல் ஒண்ணு பார்த்தேன்.

ராஜா: தப்பு… தப்பு! முதல்ல அது டிவிட்டர் கிடையாது ஆக்கும் — எக்ஸ் என்பார் எலான். இரண்டாவது என்னிக்காவது ட்விட்டரில் ஒண்ணேயொண்னை மட்டும் பார்க்க முடியுமா என்ன!?

ராணி: மிடில… நான் படிச்சது, ‘மனித இனம் ஏன் மற்ற மிருகங்களை முன்னேற்றவில்லை?’ – என்னும் வினா.

ராஜா: ஆட்டுக்குட்டியை இன்னும் சதைப் பற்றொடு வளர்ப்பது எப்படி? பூனையும் நாயும் பிறந்தவுடனேயே சொன்னபடி கேட்டு நடக்கும் செல்லப்பிராணி ஆக ஆக்குவதெப்படி? கசாப்புக் கடைக்கு மிச்சம் மீதி இல்லாமல் முழு ஊனையும் தருவதெப்படி… இப்படியா?

ராணி: முருகா! அதைவிட மனுஷன் மனசு வச்சா எந்த உயிரினத்தையும் புத்திசாலியாக மாற்றி இருக்கலாம்.

ராஜா: கணினிக்கு அறிவுத் திறன் ஊட்டுவதற்கு பதிலாக விலங்குகளுக்கு மதி நுட்பம் புகுத்தியிருக்கலாம் என்கிறாய். இத்தனை ஆண்டுகளாக நாகரிகமாக வாழும் நாமே இன்னும் மந்தையாகத்தான் செயல்படுகிறோம். அதெல்லாம் நடக்கிற காரியமா?

ராணி: Payton E. Pearson III எழுதிய “Artificially Selecting for Intelligence in Dogs to Produce Human-level IQ Within 100 Generations” தேடிப் பார் என்பது ட்விட். அதை வச்சு, ‘ஏன் எவளும் அறிபுனை கதை ஒன்று எழுதவில்லை?’ என்பது சங்கிலிக் கேள்வி.

ராஜா: நல்ல கேள்வி. இதைக் கேட்டவுடன், எனக்குத் தோணுது… ‘கும்பகர்ணன் என்பது AGI குறியீடு. தூங்கிட்டிருக்கிற AI சிங்கம். சாமா-னு செல்லமாக அழைக்கப்படுகிற சாம் ஆல்ட்மேன் தான் இராவணன்!’ – இப்படி ஒரு அறிவியல் புனைவை ராமகாவியமாக எழுதப் போறேன்.

ராணி: ராவணன் திராவிடர் ஆச்சே?

ராஜா: ராவணன் மணி ரத்தினம் எடுத்த படம்.

ராணி: உசிரே போகுதே!

ராஜா: அப்ப மணியும் இல்லுமினாட்டிங்கிற!!

தமிழில் கருத்துருவக (allegory) நாவல்கள் உண்டா?

வாசகர்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் படித்ததில் எந்த ஆக்கத்தை நவீன உருவகக் கதையாக கருதுகிறீர்கள்? எவை படிமத்தை தன்னுள்ளே கொண்டே நாவலின் தன்மையையும் தன்னுள்ளே வைத்திருக்கிறது?

வெ.சா.

ஆர்தர் கெஸ்லர் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விரக்தியும் ஏமாற்றமும் அடைந்து விலகினார். அது பற்றி ஒரு குறியீட்டு (allegorical) நாவlலும் எழுதினார். Darkness at Noon என்று அதற்குப் பெயர். அது உடனே உலகம் முழுதும் புகழப்பட்ட, கெஸ்லருக்கு உலகப் புகழ் அளித்த நாவலும் ஆயிற்று. நாவல் முழுதும் நிகழ்வது ஒரு சிறைச்சாலையில். அரசியல் கைதியின் சிறைவாசம் பற்றியது. ஒரு கைதிக்கும் இன்னொரு கைதிக்கும் (அவனும் அரசியல் சதிச்செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவன்} இடையே பழக்கம் ஏற்படுவது கதவைத் தட்டித்தான். கதவையா, சுவரையா? என்பது மறந்து விட்டது. அந்தத் தட்டலிலும் ரகசியக் குறிப்புகள் உண்டு. எல்லாமே அன்றைய ரஷ்யாவில் நடந்த அரசியல் சதிகள், வழக்குகள், கொலைகளைப் பிரதிபலிப்பதாகத் தான் சிறைச்சாலை நடப்புகளை நாம் புரிந்து கொள்வோம். இதே போல இன்னொரு குறியீட்டு நாவலும் அப்போது பெரும் சலசலப்பை உண்டாக்கியது. ஜியார்ஜ் ஆர்வெல் என்னும் ஆங்கில நாவலாசிரியரின் மிருகங்களின் பண்ணை ( Animal Farm) என்னும் ஒரு நாவல். பன்றிகள் அந்தப் பண்ணையைக் கைப்பற்றி விடுகின்றன. முன்னால் இரண்டு கரடிகள் ஓன்றையொன்று அழிக்கத் திட்டமிட்டு இரண்டுமே அழிகின்றன. பன்றிகளின் ராஜ்யத்தில் ஒரு கோஷம் “எல்லாரும் சமம் இங்கு. ஆனால் கொஞ்சம் கூட சமம் கொண்ட பன்றி தான் அதிகாரம் செய்கிறது. (All are equal. But some are more equal) நமக்குப் பரிச்சயமான பஞ்ச தந்திரக் கதைகள் பாணியில் ரஷ்யாவில் நடைமுறையிலிருந்த கோஷங்களையும் அதன் நடைமுறை அர்த்தங்களையும் கிண்டல் செய்தது மிருகங்களின் பண்ணை.

– வெங்கட் சாமிநாதன் (நினைவுகளின் சுவட்டில் …)

கருத்துருவகம் (அலிகரி) ஒரு திட்டவட்டமான பொருளைச் சுட்டும் பொருட்டு உருவாக்கப்பட்ட இன்னொரு பொருள் அல்லது அமைப்பு அல்லது கூற்று.

பராசக்தி ஒரு உருவகக்கதையாக (allegory) அமைக்கப் பட்டிருந்தது 1952 வெளிவந்த இந்தப்படக்கதை பிரிட்டீஷ் இந்தியாவில் அதாவது 1952 நடப்பதாக அமைக்கப்பட்டிருந்தது. அதிலும் அந்த புகழ்பெற்ற நீதிமன்றக் காட்சி, நீதிபதியின் இருக்கைக்கு மேலிருக்கும் பிரிட்டீஷ் அரசின் சின்னத்தின் வெகுஅண்மைக்காட்சியுடன் தொடங்குகின்றது. தணிக்கை முறையிலிருந்து தப்ப பலநாடுகளில் இத்தகைய உத்தி அமைக்கப் பட்டிருந்தாலும் பராசக்தி தணிக்கை வாரியத்தில் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது

– சு. தியடோர் பாஸ்கரன் (மீதி வெள்ளித்திரையில்)

என் பார்வையில் கீழ்க்கண்ட தமிழ்ப் படைப்புகளைச் சொல்வேன்:

  1. காடு – ஜெயமோகன்
  2. வெயிலைக் கொண்டு வாருங்கள் – எஸ். ராமகிருஷ்ணன்
  3. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி (சூரியனுக்கு அருகே சென்று கருக விரும்பும் பறவையாக ஜோசப் ஜேம்ஸை கற்பிதம் செய்வது)
  4. பூனைக் கதை – பா. ராகவன்
  5. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் – எம்.ஜி. சுரேஷ்
  6. ஜி.கே. எழுதிய மர்ம நாவல் – தமிழவன்
  7. சொல் என்றொரு சொல் – ரமேஷ் – பிரேம்
  8. ராஸ லீலா – சாரு நிவேதிதா
  9. அரசூர் வம்சம் – இரா முருகன்
  10. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம்

உங்களின் எண்ணங்களைப் பகிருங்கள்.

குன்றின் மீது அமர்ந்த குமரன்

அரூ: கனவுருப்புனைவு காலாண்டிதழ் – அறிவியல் சிறுகதைப் போட்டி முடிவுகளை முன்வைத்து சில அறிமுகக் குறிப்புகள

இன்று அடுத்த கதை: நகுல்வசன் எழுதிய கடவுளும் கேண்டியும்

“பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்; உங்களிடமுள்ள முத்துக்களைப் பன்றிகளுக்கு முன்னால் போடாதீர்கள்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 7:6)

“பூமிக்கு நீங்கள் உப்பாக இருக்கிறீர்கள். தன் சுவையை உப்பு இழந்தால் மீண்டும் அதை உப்பாக மாற்றவோ, வேறு எதற்கும் பயன்படுத்தவோ முடியாது. அது தெருவில் எறியப்பட்டு மக்களால் மிதிக்கப்படும்.

“உலகுக்கு ஒளித்தரும் விளக்கு நீங்களே. ஒரு குன்றின் மேல் அமைந்த பட்டணம் மறைந்திருக்க முடியாது. மக்கள் எரிகின்ற விளக்கைக் குடத்தின் கீழ் வைத்து மறைப்பதில்லை. மாறாக, அதை மக்கள் விளக்குத் தண்டின் மீது வைக்கிறார்கள். அப்பொழுது தான் விளக்கு வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் தருகிறது. ( மத்தேயு 5 )

“நான் சொன்ன இந்த விஷயங்களைக் கேட்டு, இவற்றின்படி நடக்கிறவன் பாறைமேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ள மனுஷனைப் போல் இருக்கிறான். கனமழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கர காற்றடித்து, அந்த வீட்டின் மேல் மோதியபோதும், அது இடிந்து விழவில்லை. ஏனென்றால், அது பாறைமேல் அஸ்திவாரம் போடப்பட்டிருந்தது” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 7:24, 25) இந்த வீடு ஏன் இடிந்து விழவில்லை? ஏனென்றால் அந்த மனுஷன், ‘ஆழமாகத் தோண்டி, பாறைமேல் அஸ்திவாரம் போட்டிருந்தான்.’ (லூக்கா 6:48) இதிலிருந்து, இயேசுவின் வார்த்தைகளை வெறுமனே கேட்டால் மட்டும் போதாது, அவற்றின்படி ‘நடக்க’ நாம் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்கிறோம்.

பிரச்சாரம் போதும். பிரசங்கத்தை நிறுத்திக் கொள்கிறேன். கிறித்துவின் மலைப் பிரசங்கத்தை ஏன் இந்தக் கதைக்கு எடுத்துக் கொள்கிறேன்?

  1. யேசு ஒன்றும் புதிய விஷயத்தைச் சொல்லிவிடவில்லை. கிறித்துவ கடவுள் அபவாதம் பேசவில்லை. அது முழுக்க முழுக்க கிறித்துவ கடவுளின் வார்த்தை. ஒத்துக் கொள்கிறேன். யூதர்களைப் பொருத்தவரை யேசு ஒரு தேவதூதர். அரூ போட்டியைப் பொருத்தவரை நகுல்வசன் எழுதியது அறிவியல் கற்பனை. அதே சமயம் சாமானியரை பொருத்தவரை, கடவுளும் கேண்டியும் இலக்கிய பாரம்பரியத்தின் தொடர்ச்சி. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் என்று புதுமைப்பித்தன் எழுதினார். அதை நகுல்வசன் சற்றே தொட்டுக் கொண்டு நவீனமாக்கி புதுமையாகத் தந்திருக்கிறார்.
  2. கடவுள் நேரில் வருவாரா? யேசு எப்படி தன்னிடம் கடவுள் சொன்னதை மலைமேல் பிரசங்கமாகப் பொழிந்தார்? யேசு இந்தியாவுக்கு வந்து புத்தமதத்தின் தத்துவங்களைக் கற்றுக் கொண்டு, அதன் பின் வளைகுடா நாட்டிற்குச் சென்று கிறித்துவமாக மாற்றிச் சொன்னாரா? இந்த மாதிரி வித விதமாக இந்தப் புனைவையும் அணுகலாம்.
  3. கிறிஸ்து சொன்ன கருத்தில் தெளிவு இருந்தது; குரலில் தீர்க்கம் இருந்தது; சொற்பொழிவில் கோர்வையான சிந்தனை தெரிந்தது; அதே சமயம் சுவாரசியமாகவும் கவர்ந்திழுக்கும் தன்மையுடனும் நம்பிக்கையும் அன்பும் கொடுக்கும் கருத்துக்களை முன்வைக்கிறார். அதெல்லாம் இந்தக் கதையில் கிடைக்கிறது.

கதையில் இருந்து…

கடவுள் ஹெட்செட்டைப் பொருத்திக்கொண்டார். திரையில் தெரிந்த நினைவுப் பட்டியலிலிருந்து அவர் நினைவுகளிலேயே மிகப் புராதன ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்.

இருப்பு இல்லாமை இரண்டுமற்ற இருளை இருள் சூழ்ந்திருந்த வெளி.

இரவு பகல்கள் அற்று திசைகளின்றி வேறுபடுத்தலில்லாத வெறுமையால் போர்த்தப்பட்டிருக்கும் வெளி!. அப்படிப்பட்ட ஒரு வெளியில் வெப்பத்தின் திண்மையிலிருந்து அவர் உயர்த்தெழுகிறார். ஒருமையின் தனிமையால் அவருள் விழைவு ஊடுறுவுவதை அவரால் உணர முடிந்தது, அவ்விழைவின் அதிகரிப்பில் ஒர் உச்சம். அதன் தகிப்பில் பீஜம். அதன்பின், அதன்பின்… திரையில் இருள் கவிந்தது.

“End of selected memory” என்ற அறிவுப்பு திரையில் ஓடியது

கதையின் சவால்கள்

  1. துவக்கத்தில் வரும் பாஸ்டன் சமாச்சாரங்கள் பச்சைத்தமிழனை அன்னியமாக்கும்
  2. அந்தத் தத்துவப் பகுதிகள் கனவுகளில் வருவது தெளிவாக வெளிப்பட்டிருந்தாலும், இன்னும் சற்றே தத்வமசியை விவரித்து வாசக இடைவெளியைக் குறைத்திருக்கலாம்
  3. மனதில் பதியும் ஆக்கம் என்றாலும் இவ்வளவு ஜாலியான கதையின் முடிவில் “எல்லாமே நிராவிடம் தானோ?” என்ற எண்ணத்தை நிரப்பியிருக்கலாம்.

சென்ற பதிவு: குக்குரன்

தழற்சொல் – சிறுகதை பரிந்துரை

Thomas_Pierce_This_is_an_alert_New_Yorker

இந்தக் கதையை நியு யார்க்கர் இதழில் வாசிக்கலாம்: This Is an Alert – The New Yorker

இந்தக் கதையைப் படித்தால் அறிபுனை கதையைப் படிப்பது போல் இருக்கிறது. வருங்காலத்தில் எங்கெங்கும் பீடித்திருக்கும் போர் மற்றும் போர்ச்சூழலினால் தோன்றும் அச்சத்தையும் பிரதிபலிக்கிறது. அறிவியலின் வளர்ச்சியான ஆளில்லாமல் பறக்கும் தூரயியங்கி விமானங்களின் ஆபத்துகள் நிறைந்த அவநம்பிக்கையான சமூகத்தைச் சுட்டுகிறது. அறிவியல் குறைவாகவும், புனைவு அதிகமாகவும் காணப்படுவதால் அறிபுனை என்னும் வகையில் இந்தக் கதையை வைக்கிறேன்.

பதினான்கு வயது மகளுடனும் மனைவியுடனும் மாமியார் வீட்டிற்கு விருந்துண்ணச் செல்பவனின் நிகழ்வுகளை தாமஸ் பியர்ஸ் எழுதி இருக்கிறார். கதையின் தலைப்பில் சொல்வது போல், ‘இது ஒரு எச்சரிக்கை’ என்னும் அறிவிப்பு, அவர்களை அன்றாடம் துரத்துகிறது. எப்போது அந்த அபாய அசரீரி ஒலிக்கும், எதற்காக அதற்கு அடிபணிகிறோம், எவ்வளவு நேரம் அந்த எச்சரிப்பு நீடிக்கும் என்று தெரியாது.

பதின்ம வயதில் மகளுக்கு நிகழும் மாற்றங்களும் குழப்பங்களும் இயல்பாக வந்து போகின்றன. மார்பகப் புற்றுநோஇல் இருந்து மீண்ட மாமியாரின் செய்கைகள், வயதானோரின் பாதுகாப்புணர்வை சொல்கின்றன. கணவன் உடன்பிறந்தான் பார்க்கும் காமப் பார்வைகள் வருங்காலக் கதைக்கு உயிரூட்டுகின்றன. சொட்டைத் தலையை நினைத்து வருந்தும் நடுத்தர வயதினன் கதையோடு ஒன்ற வைக்கின்றன.

ரொம்பவே போரடித்து விடக் கூடிய களம். அதை எப்படி கதாசிரியர் சுவாரசியமாக்குகிறார்? கொஞ்சம் போல் பாலுணர்வு உலவ விடுகிறார். துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை குறித்த விவாதத்தை எழுப்புகிறார். இதுதான் இறுதி முடிவு என்று சொல்லாமல் விட்டு வைக்கிறார். ஆறு கதாபாத்திரங்கள் இருந்தாலும் நாய்க்குக் கூட போதிய அளவு விவரிப்புகளும் குறியீடுகளும் கொடுக்கிறார்.

ஐஸிஸ் வளராமல் இருக்க எங்கோ இருக்கும் சிரியாவில் குண்டு போடுகிறார்கள். ஹௌத்திகள் வளராமல் இருக்க யேமனில் பறந்து பறந்து தாக்குகிறது சவுதி அரேபியா. தலைக்கு மேலே எங்கோ நடக்கும் சண்டைகள். அமெரிக்காவில் நிலத்தில் வாழ்வோருக்கும் இந்தப் போர்களுக்கும் சம்பந்தமே இல்லை. அந்தச் செய்திகளை, தொலைக்காட்சியிலும், தினசரிகளிலும், இணையத்திலும் மட்டுமே பார்க்கிறோம். அவர்கள் கெட்டவர்கள் என்பதால் தாக்குகிறோம். இந்தக் கதையில் வான்வெளியில் நடப்பதாகச் சொல்லப்படும் டிரோன் போர்கள் அதை நினைவுக்குக் கொணர்ந்தது. ”இந்த நாட்டிற்குச் செல்லாதே” என்னும் கபர்தார் அறிக்கைகள், அவ்வப்போது வரும் அசரீரிகள் உணர்த்தின.

தாமஸ் உடன் ஆன நேர்காணலை இங்குப் படிக்கலாம்: » INTERVIEW: Thomas Pierce, author of Hall of Small Mammals

சிறுகதைத் தொகுப்பு புத்தகத்திற்கான விமர்சனம்: ‘Hall of Small Mammals,’ Short Stories by Thomas Pierce – NYTimes.com

அறிவியல் புனைவுகள்: 2014 சிறுகதை சிறப்பிதழ்

தினமலரில் அறிவியல் புனைவுகளை சென்னை தினம் 375 – சிறுகதை சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறார்கள். அது குறித்த பார்வை.

1. “சக்கரம்” – பிரசன்னா

ஒரே கதையில் எக்கச்சக்கமாய் திணித்திருக்கிறார் பிரசன்னா. ஒரு இடத்தில் நிலைக்கும் சூரியன் போல் கதை நகர வேண்டும். இங்கோ மழை போல் மூத்திரம் அடிக்கிறது. தினமலர் என்பதால் இது போதும் என்று முடிவெடுத்து இருப்பார் கதாசிரியர். வாசகனிடம் எந்தவித கருத்துருவாக்கமும் எண்ணவிதைப்பும் உருவாக்காத ஆக்கம். அதைவிட படு பொருத்தமில்லாத ஓவியங்கள் இந்தக் கதையின் நடுவே வருகிறது. கதையில் அறிவியல் என்பதே கிடையாது. வருங்காலத்தில் நடப்பதாக பாவ்லா செய்கிறது. அந்த வருங்காலத்தைக் குறித்தும் கற்பனாசக்தி இல்லாத கதை. புனைவு என்றால் நம்பகத்தன்மை வேண்டும். முக்கிய கதாபாத்திரத்துடன் ஒன்ற வேண்டும். புதியதாக ஏதாச்சும் விஷயம் இருக்க வேண்டும்.

ஒன்றுமே இல்லாமல் அறிபுனை கதை என்கிறார். அதாவது மேஜிகல் ரியலிசமாக வருங்காலமும் இக்காலம் போல்தான் இருக்கும் என்கிறார்.

  1. ஒரு காப்ஸ்யூல் சோறு – சுதாகர் கஸ்தூரி
  2. கால இயந்திரக் கைதி – ஜீவ.கரிகாலன்
  3. சென்னை 2114 – ஆயிஷா இரா.நடராசன்
  4. போகம் தவிர் – இரா.முருகன்
  5. 2047 ஆகஸ்ட் 15 – ராஜேஷ்குமார்
  6. நாளை மற்றுமொரு – தவமணி வசீகரன்
  7. இன்னும் 5 நிமிடங்களில் – ஜி.பி