Tag Archives: Top

அரசகட்டளையாக பார்த்து வைக்க வேண்டிய பத்து படங்கள் என்ன?

தமிழில் ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படங்கள் உண்டு.

எழுதப்படாத விதியாக அறிவிக்கப்படாத அரசாணையாக, “அரங்கிற்கு சென்று விட்டீர்களா?” என விசாரிப்பதற்கான முகாந்திரம் கொண்ட பட்டியல் இது.

இந்தப் பட்டியலில் நுழையத்தான் #PS1 எடுத்திருக்கிறார் மணி ரத்தினம். – இது ஐந்தாவது காரணம்.

எனக்கு இவ்வாறு புகட்டப்பட்ட இந்தப் பட்டியலைப் பார்ப்பதற்கு முன் உங்களுக்கு இந்த மாதிரி விதிக்கப்பட்ட இராசநீதி என்ன படங்கள்?

(பட்டியல் எந்த வரிசையிலும் இல்லை)

  1. ஔவையார் / சந்திரலேகா
  2. சம்சாரம் அது மின்சாரம்
  3. கல்யாணப் பரிசு
  4. சிவகவி
  5. சிந்து பைரவி
  6. மனோகரா
  7. உருவங்கள் மாறலாம் / சரணம் ஐயப்பா
  8. திருவிளையாடல் / ஆதிபராசக்தி
  9. திரிசூலம் / ஊட்டி வரை உறவு
  10. பொன்னியின் செல்வன் 1

அவ்வையார் – சாமி படம் என்பதால் ஒரு சாராரும் இலக்கியப் பெருமை என்பதால் தமிழ்ப் பற்றாளர்களும் உதாரண பெண்டிர் என்பதற்காக மற்றொரு குழுவும் அதை குழந்தைகளுக்கு காண்பித்தார்கள். அந்த மாதிரி கட்டாயக் கருத்துத் திணிப்பு என்பதால் சேர்த்துக் கொண்டேன்

திருவிளையாடல் – குறை என்றில்லை. இந்தப் படம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். இந்தப் படம் உம்மாச்சி படம். இந்தப் படம் எளிமையாக (புராணங்களை) தத்துவங்களைச் சொல்கிறது. இது போன்ற வலுக்கட்டாயங்கள் கலந்த உத்தமத்தோங்களை விதந்தோந்து பீடத்தில் அமர்த்தி விட்டதால் விமர்சிக்கவும் மேற்

உங்களுக்கு வலிந்து திணிக்கப்பட்ட சினிமாக்களை, ஆறாவடு ஆக மனதில் தோன்றிய படங்களைப் பகிருங்கள்.

Top 10 Indians of 2018 – Gnani Sankaran

என் கணக்கில் இந்த வருடத்தின் தலை பத்து இந்தியர்கள் யார் என்பதை பட்டியலிட எண்ணம். அந்தப் பட்டியலை ஞாநி சங்கரன் கொண்டு துவக்குகிறேன்.

அவரைப் போன்ற மிதமான குரலில் தீர்க்கமாக பிரச்சினையை அணுகி, சுயசிந்தனையுடன் இயங்குபவர் குறைவு. அதுவும் தொலைக்காட்சியும், சமூக ஊடகங்களும், அரசியல் பிரச்சார கோஷங்களும் ஆக்கிரமித்திருக்கும் தமிழ் வெளியில் தொடர்ச்சியாக தன் குரலை வாதங்களுடன் முன்னிறுத்தி செயலிலும் கூட்டு செயல்பாடுகளிலும் முன்னெடுப்பவர் அதனினும் குறைவு. சினிமா மயக்கம், பதவி ஆசை, பண லட்சியங்கள் என்று சமரசம் செய்து கொள்ளாமல், சொந்த வாழ்விலும் அறவிழுமியங்களை பின்பற்றுபவர் ஓரிருவர் மட்டுமே நான் அறிவேன்.

அவர் சென்ற வருடம் மறைந்தார்.

Gnani Sankaran - ஞாநி (ஞானி) - Jnani (Njaani Sangaran)

சில காரணங்கள்

  1. ஆம் ஆத்மி ஆகட்டும்; நோட்டா – 49 ஓ போடு ஆகட்டும் – ஏதாவது சிக்கலான விஷயம் என்றால் தலை பதுங்கும் கூட்டத்தினுள், தன் குரலை தீர்க்கமாக முன்வத்தவர்
  2. மூத்திர சட்டி தூக்க இன்னொருவரின் உதவி தேவைப்படும் வயதில் திறமையாக தலைமைப் பதவியை செயலாற்ற முடியுமா என்று கருணாநிதியின் முதல் மந்திரி பேராசையை போட்டுடைத்தவர் – ஓ பக்கங்கள்
  3. எளிமையானவர்; அழைக்கும் போதெல்லாம் நெருக்கமாக உரையாடியவர்; எசகு பிசகான கேள்வியானாலும் வெளிப்படையாக பதிலுரைத்தவர் – மனிதன் பதில்கள்
  4. கேணி
  5. சிந்தனையாளர்
  6. பரிக்ஷா
  7. நேர்மையான கொம்பன்
  8. “கண்டதைச் சொல்கிறேன்” என்றவர்
  9. ‘அறிந்தும் அறியாமலும்’
  10. தீம்தரிகிட
  11. ஜூனியர் போஸ்ட்
  12. ராமசாமியையும் விடவில்லை (அய்யா – EVR)

ஞாநி குறித்த என்னுடைய பதிவுகள்

கல்வியின் தரமும் இளைஞர்களின் ஆற்றலும்

இந்தியாவில், 2017 ம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் + கல்லூரிகளின்  பட்டியலை (2017 ranking of institutions based on performance) மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதையொட்டி சில எண்ணங்கள்:

  1. பொறியியல் கல்லூரிகள்:

    முதலில் இருக்கும் கல்லூரிகள் எல்லாம் ஏன் தொழில்நுட்பம் அல்லது பொறியியல் அல்லது அறிவியல் கல்லூரிகளாகவே இருக்கின்றன? கலை மற்றும் பொருளாதாரம் மற்றும் நிதி மற்றும் கல்லூரிகளுக்கு இந்தியாவில் மரியாதை கிடையாதா?

  2. ஆராய்ச்சி மையங்கள்: இந்தக் கல்லூரிகளில் இருந்து எவ்வளவு ஆராய்ச்சிக் கட்டுரைகள் மதிக்கத்தக்க இடங்களில் வெளியாகின்றன? ஒவ்வொரு ஆண்டிலும் உலக அளவில் உரிமைக்காப்புகள் எத்தனை வாங்கப்படுகின்றன? இங்கிருந்து படித்து கரையேறுபவர்கள் எத்தனை நிறுவனங்களைத் தோற்றுவிக்கிறார்கள்? இந்த தலை பத்து பல்கலைக்கழகங்களில் பட்டதாரி பட்டம் பெறுபவர்களில் எத்தனை பேர் கவனிக்கத்தக்க கண்டுபிடிப்புகளைக் கொடுத்திருக்கிறார்கள்?
  3. மேலாண்மை:

    தலை இருபது கல்லூரிகளில் நான்கே நான்கு மட்டுமே மற்றவர்களுக்கு கிட்டியிருக்கிறது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், அரசுத்துறையின் பட்டியல் என்பதால் அரசாங்கம் நடத்தும் கல்லூரிகளுக்கு முன்னுரிமை தரப்பட்டதா?
  4. களத்தில் பயிற்சி: இந்தியாவில் நிஜ வாழ்க்கைக்கும் கல்லூரிகளில் கற்றுத்தரும் விஷயங்களுக்கும் பெரிய இடைவெளி உண்டு. இன்னும் மதிப்பெண்களில் நம்பிக்கை கொண்ட நாடு இந்தியா. இன்றளவும் தொடர்ச்சியான பரீட்சைகள் வைக்காமல், பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு, செமஸ்டர் முடிவில் ஒரேயொரு தேர்வு என்று செயல்படும் நாடு. இதில் அசலான நிறுவனங்களில் சுயமான செயல்பாடு என்பதைக் கணக்கிலேயே எடுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பழமொழி மட்டும் பேசுவார்கள்.
  5. தமிழகக் கல்லூரிகள்: அண்ணா பல்கலை, 13ம் இடம் பெற்றது. நஷ்டத்தில் இயங்கும் அண்ணாமலை பல்கலை, 92ம் இடம் பெற்றது. நுாற்றாண்டு பழமையான, சென்னைப் பல்கலை, 64ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கு, 45ம் இடம் கிடைத்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலை, சேலம் பெரியார் பல்கலை போன்றவை, 100க்கும், 150க்கும் இடையிலான, இரண்டாம் கட்ட பட்டியலில் மட்டுமே, இடம் பெற்றுள்ளன.

    பல்கலைகளுக்கான தரவரிசை பட்டியலில், பாரதியார் பல்கலை, 28; பாரதிதாசன் பல்கலை, 88ம் இடங்களை பிடித்துள்ளன. திருவள்ளுவர், மனோன்மணியம் சுந்தரனார், சட்ட பல்கலை, இசை பல்கலை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை போன்றவை, தரவரிசைக்கு விண்ணப்பித்தோர் பட்டியலில் இடம் பெறவில்லை.

    கல்லுாரிகளுக்கான தனி தரவரிசை பட்டியலில், முதல், 100 இடங்களிலும், 100 முதல், 150 வரையிலான, இரண்டாம் கட்ட பட்டியலிலும், தமிழக அரசின் கலை, அறிவியல் கல்லுாரிகள் எதுவும் இடம் பெறவில்லை

  6. சுய சிந்தனை வளர்க்கும் கல்விக்கூடங்கள்: எப்படிப்பட்ட ஆளுமைகளை இந்நிறுவனங்கள் தயார் செய்கின்றன? அவர்களுக்கு வரலாறு, இந்தியத்துவம், சூழலியல் போன்ற பல்துறைகளில் நாட்டம் வரவைக்குமாறு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறதா? குடியியல் கொள்கை இந்திய அரசாண்மை என்று சமூகம் சார்ந்தவற்றில் விருப்பம் தரவைக்கிறார்களா?
  7. வேலைவாய்ப்பு: இதை மட்டுமே அஸ்திவாரமாகக் கொண்டு பல்கலை தரவரிசையை தயார் செய்திருக்கிறார்களோ என நினைக்க வைக்கும் பட்டியல் இது.
  8. நிரலிக்கான விதிமுறையை எவ்வாறு திட்டமிட்டார்கள்:
    1. கல்விமுறை மற்றும் அடிப்படை வளவசதிகள் – 30%
    2. ஆராய்ச்சி மற்றும் சீரிய நடைமுறை – 30%
    3. பட்டம் பெற்ற பிறகு கிடைக்கும் பயன்கள் – 20%
    4. எல்லோரையும் சேர்த்துக் கொள்ளும் ஏற்றுக்கொள்ளும் தன்மை மற்றும் சமூகப் பிணைப்பு – 10%
    5. கல்லூரியைக் குறித்த பொது மனநிலை – 10%
  9. செய்தி: The Hindu | தி இந்து | கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியல் வெளியீடு
  10. தொடர்புள்ள பதிவுகள்: 37/100 மட்டும்தானாடா? வோத்தாடாய், எவ்ளோ வொளச்சிர்க்கோம் – மிச்சம் கீர 63ஐயும் எங்க்ளுக்கே கொடுங்கடா! | ஒத்திசைவு
  11. பிட்ஸ், பிலானி: எல்லாவற்றையும் சொல்லிவிட்டு நான் படித்த பிர்லா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி & சயின்சஸ் பற்றி சொல்லாவிட்டால் ‘மிஸ்டர் ரோபாட்’ தொலைக்காட்சி சீரியலில் பாதியில் “இதுவரை சொன்னதெல்லாம் கற்பனை!” என்று ஏமாற்றுவது போல் ஆகிவிடும். அசலில் கலக்கும் மாணவர்களை உருவாக்குவதற்கும் பேப்பரில் புலிகளை உரும விடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

Idly Vadai 9 Year Greetings

இட்லி வடை ஆரம்பித்து பத்தாவது ஆண்டு துவங்கப் போகிறது.

பத்தாண்டுகளாக தமிழ்ப்பதிவுகள் எப்படி இருக்கிறது என்று ரிப்போர்ட் கார்ட் போடலாம். பேருந்து விபத்தில் சென்னை நகரத்தின் பள்ளி சிறுவர்கள் இறப்பது போல் அது அடிக்கடி நடப்பது.

பத்தாண்டுகளில் இட்லி வடை எழுதியதில் பெஸ்ட் எது என்று பார்க்கலாம். டெண்டுல்கர் சதம் அடிப்பது போல் ஆயிரக்கணக்கான பதிவுகளில் நூறு திக்கி திணறி தேறலாம்.

சமகால ஜாம்பவான்களான பேயோன், மனுஷ்யபுத்திரன் போன்ற புனைப்பெயர்களோடு ஒப்பிட்டு அலசலாம். கோகுலாஷ்டமிக்கு கிருஷ்ணர் வேடம் அணிவது பொருத்தம் என்பது போல் இட்லி வடையில் அசுரர்களுக்கு இடம் இல்லை.

அப்படியானால் என்ன செய்யலாம்?

நீங்களும் இட்லி வடையாக ஒன்பது யோசனைகள் கொடுக்கலாம்:

1. தற்பெருமை, சுய அங்கீகாரத்தின் வெளிப்பாடாக அகங்காரம், தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்காத தன்மை, காதல் மன்னர்களின் வசீகரம் என்று அரசியல்வாதிக்கும் வலைப்பதிவருக்கும் உள்ள ஒற்றுமைகள் நிறைய. ஆனால், அரசியலில் வாக்கு கேட்டு வெற்றி பெற்றால்தான் மதிப்பு. வலையில் எழுதினாலே குவியும் வாக்கு.

2. இட்லி-வடை என்பது வாரிசு அரசியல் மாதிரி. முன்னுமொரு மூதாதையர் காலத்தில் இருந்து தியாகி பென்சன் பெற தகுதி பெற்றவர். நேற்றைய பினாமி பாலிடிக்சில் மில்லியனரானது போல் புதிதாக முளைத்தவர் இந்த பூமியில் காலூன்றுவது எப்படி? திண்ணை, சொல்வனம், உயிரோசை எதையும் விட வேண்டாம். ட்விட்டர், பேஸ்புக், பிண்டெரஸ்ட் எங்கும் தோன்றவும்.

3. எனக்கு ரொம்ப பிடித்தமான வினா: ‘எல்லோரும் இப்படி செஞ்சா என்ன ஆகும்?’ – அஞ்சு பைசா அன்னியன் ஆகட்டும்; எனக்கு காரியம் ஆனால் போதும் என்று கூடங்குளத்தை மூடச்சொல்லும் உதயகுமார் ஆகட்டும். உலகில் உள்ள அனைவரும் எனக்கு மட்டும் இது நடந்தால் போதும் என்று நம்பும் மனநிலையை உடைக்கலாம்.

4. எனக்கு நிரலி எழுதத் தெரியும். ஆனால், கணினி ப்ரொகிராமிங் குறித்து எழுதியது ரொம்பக் குறைவு. மொத்தம் ஏழெட்டு பதிவுகளில் இரண்டாயிரம் வார்த்தைகளை தாண்டாது. இந்த மாதிரி நம் துறை சார்ந்து எழுதலாம்.

5. சுவைக்காக தண்ணியடிப்பது ஒரு ரகம். பழக்கத்திற்காக சரக்கடிப்பது ஒரு ரகம். தூக்கத்திற்காக குவார்ட்டர் அடிப்பது இன்னொரு ரகம். எப்பொழுதாவது கம்பெனிக்காக குடிப்பது என் ரகம். நீங்கள் பதிவதில் எந்த ரகம்?

6. சண்டைக் காட்சிகளில் வாத்தியார் மூன்று அடி வாங்கிய பிறகுதான் நிமிர்ந்து திரும்பக் கொடுப்பார். பாவப்பட்ட ஹீரோவிற்கு மவுசு அதிகம். சிண்ட்ரெல்லாவிற்குத்தான் அனுதாப அலை அடிக்கும். எனவே, அவ்வப்போது உங்களை மனிதராக காட்டிக் கொள்ளுங்கள். அடக்கம் அமரருள் உய்க்கும்

7. ஒரே விஷயத்தையே கட்டி அழாதீர்கள். சங்க இலக்கியமாக இருக்கட்டும்; அரசியல் குழாயடிகளாக இருக்கட்டும். கொஞ்சம் உலகம்; நிறைய உள்நாடு; அப்படியே உங்களால் மட்டுமே எழுதக்கூடிய தனியாள் அனுபவங்கள். எல்லாம் கலந்து கட்டி அவியல் மணக்கட்டும்.

8. நாய் என்றால் கரண்ட் கம்பம் பார்த்து ஒன்றுக்கிருக்கும். வலைப்பதிவர் என்றால் மூக்கை நுழைத்து சண்டை போடுவார்.

9. என் மூளை ஔவையார் மூளை. இடது சாரியாக எல்லாவற்றையும் ஒன்று, இரண்டு, மூன்று என பட்டியல் போட்டு அழகு பார்க்கும். ஆனால், இலக்கியவாதிகளுக்கு வலப்பக்க மூளை புனைந்து கவி பாடும். வைரமுத்துவாக இரண்டையும் நன்றாக குழைத்து கருப்பு மை போட்டு வாழ்க! வளர்க!!

Most Competitive Cities in India: Top places to live, earn and have a Metro lifestyle

It happens only in India: பத்து அதிசயங்கள்

இந்தியாவில் மட்டுமே இது சாத்தியம். நம்பமுடியவில்லை  பத்து வினோத நகைச்சுவை நேரங்கள் + கதாமாந்தர்களின் தொகுப்பு:

  1. மொத்த வருவாயில் இருபது சதவீதத்துக்கு மேல் இவர்கள் கபளீகரம் செய்கிறார்கள். ஜாம் ஜாம் ரிடயர்மெண்ட்; அந்த ஓய்வில் கை நிறைய பென்ஷன். ஆனால், வேலை நேரத்தில் கை அசைக்கக் கூட லஞ்சம் கோருவார்கள்: அரசு ஊழியர் / ஐ ஏ எஸ் ஆபீசர்
  2. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சிறப்பிதழ் கொண்டு வருவார்கள்; நேற்று பிறந்த பாரதியாருக்கு ‘நீயா/நானா’ டைட்டில் சாங்கில் கூட சான்ஸ் கிடைக்காது. : மீடியா / தொலைக்காட்சி ஊடகங்கள்.
  3. ஊழலுக்கு எதிராக ‘இந்தியன்’, ‘ரமணா’க்கள் வெள்ளி விழா கொண்டாடுவோம். அன்னா ஹஜாரே வைபவம் அனுசரிப்போம். ஆனால், அவசரத்திற்கு கொள்ளிக்கட்டையைக் கொண்டு தலையை சொறிகிறோம்: லஞ்சம் / கையூட்டு.
  4. ருபாயா சயீத் கடத்தப்பட்டால் அரசாங்கம் பதை பதைக்கிறது. உடனடியாக, மண்டல் கமிஷன் நாயகர் விபி சிங் செயலில் இறங்குகிறார். மந்திரி மகளை விடுவிக்க பணமும், பொருளும், தீவிரவாதிகளும் தரப்படுகிறது: வாரிசு /அதிகார வர்க்கம்.
  5. மஞ்சள், துளசி, மூலிகை காலங்காலமாக இருக்கும்; இருந்தாலும் நச்சுப் பொருள் கொண்ட ஜான்சன் & ஜான்சன் கொண்டு பிஞ்சுகளைக் குளிப்பாட்டுகிறோம். சந்திராயன் கொண்டு கண்டுபிடித்தாலும் கிணற்றிலிட்ட விளக்காக சந்தைப்படுத்த மாட்டோம்: நய்பால்த்தனம் / கலாம் அடக்கம்.
  6. நூறாண்டுகளுக்கு ஒரு முறை லிங்கனும் கென்னடியும் கொல்லப்பட்டால் அமெரிக்கா; பத்தாண்டுக்கு ஒரு முறை லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா, ராஜீவ் கொய்யப்பட்டால் இந்தியா: உளவுத்துறை / தேசிய பாதுகாப்பு.
  7. ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருப்பார்; சசிகலா & கோ கவனிக்கப்படுவார். அது ஜெயலலிதாவின் தியாகமாக கருதப்படவில்லை. ஆனால், இத்தாலியின் போஃபர்ஸ் சோனியா இன்றும் செம்மல்: தலையாட்டி பொம்மை / அனுதாப அலை.
  8. சிவில் போர் நடக்கிறது; பிரச்சினை சுமூகமாகிறது. ஆக்குபை வால் ஸ்ட்ரீட் பிரகடனமாகிறது; 99% குரல் ஒலிக்கிறது. தலித், முஸ்லீம், சிறுபான்மை உரிமை நசுக்கப்பட்டது; மாயாவதி, திருமா, கருணாநிதி பில் கேட்ஸ் ஆகிறார்: சாதி / இனம் / மதம் / குலம்.
  9. அமெரிக்க அதிபர் ஆக வேண்டுமானால், இவாஞ்சலிக்க கிறித்துவராக இருக்க வேண்டும்; கருத்தடையை ஆதரிக்கக் கூடாது; அறிவியலை நம்பக் கூடாது; இந்தியாவில் கடவுளையும் நவக்கிரகங்களையும் நம்பிக் கொண்டே டெஸ்ட் ட்யூப் பேபி முதல் இதயமாற்று வரை முன்னோடி மருத்துவ முறை சாத்தியம்: பரிசோதனை எலி / பகுத்தற்வு பாசறை.
  10. சொல்லி அலுத்து விட்டது. வருடம் மாறலாம்; காலம் செல்லலாம்; பாகிஸ்தான் கூட பாய் பாய் ஆகிவிடலாம். பஞ்சாப் போச்சு; காஷ்மீர் வந்தது! டும்!! டும்!!! : தீவிரவாதம் / பயங்கரவாதம்.

நானும் ராம் கோபால் வர்மாவும்

நீங்களும் இவ்வாறு ஒப்பிட: Twitterize Yourself: How To Create A Visualization Of Your Twitter Profile [INFOGRAPHIC] – AllTwitter

உங்களுடன் ஒப்பிட சிலர்:

  1. ஏ ஆர் ரெஹ்மான்
  2. சுருதி ஹாஸன்
  3. பிரிட்டிஷ் நந்தி
  4. பர்க்கா தத்
  5. கரன் ஜோஹர்
  6. ஷாரூக் கான்
  7. சசி தரூர்
  8. சேகர் கபூர்
  9. சுசித்ரா
  10. சச்சின் டெண்டுல்கர்

10 American Comedy Serials

வேலை அதிகமானால், நகைச்சுவை நாடகங்களை மனம் நாடும். உழைக்கும் வாழ்க்கை நசையானால், சுஜாதாதான் எடுக்கத் தோன்றும். ஜெயமோகனைத் தவிர்க்கும். அடுத்தவரின் துன்பியல் நிகழ்வான செய்திகளை சாய்ஸில் விடும்.

இவ்வாறாக ப்ரைவேட் ப்ராக்டிஸ், சி.எஸ்.ஐ., லா அன்ட் ஆர்டர் அடிதடியை கடந்த வருடம் தவிர்த்துவிட்டேன். வாரந்தோறும் விரும்பிய ‘பாஸ்டன் லீகல்’ முடிந்து போனது. அதற்கு பதிலாக பார்க்கத் துவங்கிய சீரியல்களுக்கு சிறுகுறிப்பு.

எனக்குப் பிடித்த தர வரிசைப்படி உள்ளன.

1. The Big Bang Theory

இத்தனை நாள் எப்படி தவறவிட்டேன்? நாலு அறிவாளிகளும் ஒரு அழகியும். a) அறிவியல்காரர்களுக்கு குட்டி பிடிக்கத் தெரியவில்லை. b) அதில் ஒருவன் தேசி என்.ஆர்.ஐ. c) இன்னொருவன் யூதன். d) எதற்கும் ஆராய்ச்சிபூர்வமாக கர்மசிரத்தையாக பதிலளிக்கும் ஹீரோ. எதிர்த்தவீட்டு பருவப்பெண்.

கனஜோர்.

நிகழ்ச்சியின் முடிவில் தயாரிப்பாளர் கம் இயக்குநர் சக் லோர் போடும் ஸ்லைடு மகா அற்புதம். இங்கே கிடைக்கும்.

2. Modern Family

மூன்று குடும்பங்களின் கதை.

பதின்ம வயதில் மகள்; அக்காவின் அழகை வெறுத்து படிப்பில் புலியாக நினைக்கும் தங்கை; இருவருக்கும் பிறகு வந்த குட்டிப் பையன். பக்கத்து வீட்டு ஆன்ட்டியை ஜொள்ளிடும் அப்பா. கணவனின் பிறந்தநாளை கண்டுகொள்ளாத அம்மா.

அந்த அம்மாவின் பெற்றோர் விவாகரத்தானவர்கள். அப்பா பெருந்தனக்காரர். சிறுசு + இளசு இலத்தீன குட்டியை இரண்டாந்தாரமாக, இலவச இணைப்பான டீனேஜ் மகனோடு கொண்டவர்.

அவருடைய இன்னொரு மகன் மூன்றாவது குடும்பம். தற்பால் திருமணம் புரிந்தவர். வியட்நாமில் இருந்து கைக்குழந்தையை தத்தெடுத்தவர்கள்.

மாமனார் x மாப்பிள்ளை; ஓரினச்சேர்க்கையில் நெளியும் தாத்தா; டேட்டிங் போகும் மகளின் ஊரடங்கு; சம்பவங்களுக்கா பஞ்சம்?

எல்லாவற்றிலும் டாப்: யார் பாட்டி? எவர் அக்கா? என்று விநோதமாக அழைக்கும் நேரம்.

3. The Middle

நான் பார்ப்பது மனைவிக்கு பிடிக்காது. மகளிரின் லைஃப்டைம் திரைப்படம் பார்ப்பதற்கு ‘அத்திப்பூக்கள்’ சகித்துவிடலாம்.

இரண்டுக்கும் நடுவாந்தரமாக ஒத்துவருகிறது ‘மிடில்’.

அமெரிக்காவின் நட்டநடுவாந்தர நகரம். இன்டியானா மாகாணம். கார் விற்றால் கமிஷன் பெறும் இல்லத்தரசி. தொழிற்சாலையில் உழலும் குடும்பத் தலைவன். வயசுக்கு வந்த கோளாறு கொண்ட மூத்த மகன். புத்தகப் புழுவாக சகாக்களை ஒதுக்கும் குட்டிப் பயல். இருவருக்கும் இடையே ஆயிரம் கலைகளில் தேர்ச்சி பெற முயலும் மகள்.

அக்கம்பக்கத்தில் தெரிந்த, சொந்த வாழ்வில் சந்தித்த நிஜக் குடும்பங்கள் நினைவுக்கு வருகிறது. வீட்டுக்கு வீடு வாசப்படி என்று ரிசஷனுக்கு ஏற்ற காவியம்.

4. The League

இதுவரை சொன்னது எல்லாமே வயது வந்தோருக்கு மட்டும் உகந்தது என்றாலும், லீக் கொஞ்சம் அதிகப்படி அசைவம்.

கூடைப்பந்து சீஸன் ஆகட்டும்; அமெரிக்க கால்பந்து உற்சவம் ஆகட்டும். அலுவலிலோ அடுக்ககத்திலோ ஆள் சேர்த்து கூட்டணி அமையும். இருக்கும் அணிகளில் இருந்து ஆட்டக்காரர்களை விர்ச்சுவல் ஏலம் எடுத்து ஷாரூக்கான் போல், சொந்தமாக்கிக் கொள்ளலாம். நிஜ ஆட்டங்களில் ஆடுவதைப் பொறுத்து, வெற்றி தோல்வி கணிக்கப்படும்.

இதைப் பின்னணியாகக் கொண்ட களம்.

கணவனைக் கட்டியாளும் மனைவி. தோட்டத்தில் இருந்து பச் பச்சென்று பறித்தது போல் வெட்டிவேரு பிடுங்கிய வாசத்துடன் பிரிந்த தம்பதியர். பால்குடி குழந்தை கொண்டதால் பாலுறவு மறந்த தம்பதியர். தேசிப் பெண்ணை டாவடிக்கும் வழுக்கையன். அக்மார்க் பேச்சிலர். ஆடம்பர பிரம்மச்சாரி.

பரவாயில்லை.

வெகு முக்கியமாக கிடுக்கிப்பிடி செக்ஸ், கொங்கையின் கனம், சவாலில் தோற்றதால் நிர்வாணம் என்று பேசாப்பொருளை பாடுபொருளாக்கியதால் ருசிக்கிறது.

5. 30 Rock

ரொம்ப காலமாகப் பார்த்து வருவதால் போரடித்துவிட்டது. ‘சாடர்டே நைட் லைவ்’ டீமின் சாகசங்கள்.

உங்களுடைய சி.ஈ.ஓ.வை அலெக் பால்ட்வின் நினைவுறுத்தலாம். நியுயார்க் மாந்தருக்கு டினா. ஒவ்வொரு வாரமும் பெருந்தலை எவராவது எட்டிப்பார்ப்பதாலேயே இன்னும் ஈர்க்கிறது.

6. Gary Unmarried

மணவிலக்கு ஆகியபிறகும் ஆதுரத்தோடு காதல் பாராட்டும் முன்னாள் கணவன் – மனைவி. கணவன் பிற பெண்களுக்குத் தூண்டில் போடுவதும், அதன் பின் விவாகரத்தான முந்தையவளுக்காக, இன்றையவளை த்ராட்டில் விடுவதும் வாராந்தர வழக்கம்.

ஒரே மாதிரி அமையும் நிகழ்ச்சியாகி விட்டது தற்போதைய குறை.

என்னவாக இருந்தாலும் ஒருத்தனுக்கு ஒருத்தி என்னும் சிலப்பதிகார பண்பாட்டை மீட்டுருவாக்குவதால் மகத்துவம் அடைகிரது.

7. Better off Ted

இதுவும் மொக்கை டைப்.

அலுவலில் இடைநிலை அதிகாரி டெட். இவனுக்கு மேலதிகாரி ஸ்கர்ட் பொம்மை. செக்ரடரியுடன் கொஞ்சம் கிஸ் உண்டு. கீழே இரு டாம் அன்ட் ஜெர்ரி ஆராய்ச்சிக்காரர்கள்.

பணியிடத்தில் போடப்படும் அடாவடி தீர்மானங்கள், பாலியல் அத்துமீறல்கள், ஆகியவற்றுடன் அகமும் புறமுமாகிய குடும்ப – குழும குழப்பங்களும் போதிய அளவில் கலக்கப்பட்டு தரப்படும்.

8. It’s Always Sunny in Philadelphia

இப்பொழுதுதான் முழு சீஸனும், சென்ற வருடத்திய எபிசோடுகளுமாக முழு வீச்சில் இறங்கி இருக்கிறேன். கொஞ்சம் கருப்பு… அதாங்க டார்க் வகையறா. அதற்காக ப்ரூனோ அளவு விகாரமல்ல.

களுக் சிருப்பு வராது. ரத்தக்கண்ணீர் ப்ளேடு நிச்சயம் கிடையாது. ஜோக் புரியாமல் தூக்கத்தில் புரிந்துவிடும் அபாயம் உண்டு.

9.Two and a Half Men

சென்ற ஆண்டுகளில் பார்த்தது. பத்தில் ஒரு ஒடம் தரலாம். இப்பொழுது நிறுத்தியாகி விட்டது.

அண்ணன் – தம்பி. அண்ணன் பணக்காரன். தம்பி ஜீவனாம்சத்தில் வாழ்க்கையைத் தொலைத்து, அண்ணனிடம் அண்டியிருக்கிறான். அண்ணாவுக்கு ‘ஆசை நூறு வகை; வாழ்வில் ஆயிரம் சுவை’. தம்பிக்கு மகன் மட்டுமே.

இதில் வரும் பெண்கள் லட்சணமாயிருந்தது, பார்க்கத் தூண்டியது.

10. Cougar Town

இதெல்லாம் நான் பார்ப்பதாக சொன்னால் இமேஜ் போயிடுங்க.

10.  Community

தினந்தோறும் ஜே லீனோ வந்து கழுத்தறுத்ததால் இந்த மாதிரி மொக்கை பார்க்க வேண்டி வரும்.

ஐயா! ஜாலி… ஜே லேனோ நிறுத்தப் போறாங்களாம்… இனிமே, கத்தியின்றி துப்பாக்கியோடு என்.சி.ஐ.எஸ். கொண்டாடலாம்.

கட்டாங்கடைசியாக ஓர் எச்சரிக்கை: Accidentally on Purpose பார்த்து விடாதீர்கள். டீலா/நோ டீலா கூட தாங்கி விடலாம். ஆனால், Knocked Upனினும் அடைந்த வேதனையை நீவிர் தவிர்ப்பீர்.

தமிழ்ச் சிறுகதைகள்: ஆகஸ்ட் 2009

இந்த மாதம் படித்த கதைகளில் என் மனதை அசைத்துப் பார்த்து, கவனத்தை ஈர்த்து, உங்களுக்கும் குறிப்பிடத்தக்கவையாக இருந்த சில:

1. ஹரன்பிரசன்னா :: சொல்வனம் » அலை

நாவல்களிலே ஃப்ளாஷ்பேக் என்னும் வஸ்து சிரமமானது. சிறுகதையிலேயே நிகழ்த்தி காட்டுகிறார். சில வார்த்தைகள் கதையில் வரும்போது, அப்படியே நெகிழச் செய்து விடும். இங்கே ‘கந்தரப்பம்’. அப்படியே என்னை எங்கோ கொண்டு போய் விட்டது.

வம்பு கேள்வி: அதெல்லாம் சரி… ஹரன் பிரசன்னா ஏன் பைத்தியக்காரன் நடத்திய ‘உரையாடல்‘ போட்டியில் பங்குபெறவில்லை?

2. வ. ஸ்ரீநிவாசன் ::சொல்வனம் » உயிரிழை

முதல் வரியில் கதை முடிஞ்சுடணும் என்னும் கோட்பாட்டை பின்பற்றுகிறார். அந்த ஆரம்பத்தை வாசித்தவுடன் மேஜிகல் நியலிசமோ, குறியீட்டு இம்சையோ என்னும் பயத்தை அறவே போக்கியும் விடுகிறார்.

வம்பு கேள்வி: கதை கூட புரிஞ்சுக்கலாங்க. அது என்னங்க! அப்ஸ்ட்ராக்டா தோட்டா வட்டம் போட்ட படம்?

3. கர்ட் வானகட் :: சொல்வனம் » ஹாரிசன் பெர்ஜரான்மொழிபெயர்ப்பு :: விஷ்வநாத் சங்கர்

இம்சை இல்லாத மொழிபெயர்ப்பு. கதை ரொம்ப கவலைப்படுகிறது. கனவு லோகத்தில் சஞ்சரிக்கிறது. வெகு தீவிரமாக பிரசாரிக்கிறது.

வம்பு கேள்வி: கர்ட் வானகட் இப்ப இருந்தா ஒபாமாவின் உடல்நலத் திட்டமான சம்ச்சீர் ‘சேமநலக் காப்பீடு’ குறித்து என்னங்க சொல்லியிருப்பார்? அதற்கும் கத விட்டிருப்பாரோ!

4. கிச்சாமி | சத்யராஜ்குமார்.காம்

அமெரிக்க வாழ்க்கையை இவ்வளவு வெளிப்படையாக எழுதினால் தாங்காது சாமீ. ஆனாலும், நம்ம இணைய வாசகர்கள், கதையை கதையாகப் பார்க்காமல், ‘நீங்களா?’, ‘அப்படி சட்டம் கிடையாதே?’, ‘என் மனைவி அவ்வாறு இல்லையாக்கும்‘ என்று மறுமொழிவது தனிக் கதை.

வம்பு கேள்வி: கதைக்கு கீழே கருத்து சொல்ல முடியாம, வலைப்பதிவிலே தனியா இன்னொரு இடத்திலே பதில்பொட்டிய வச்சிருக்கீங்களே! ஏனுங்க?

5. நாகார்ஜுனன் :: திணை இசை சமிக்ஞை: 108

ஒரு கதை. அதை எப்படியெல்லாம் சொல்லலாம்? நாகார்சுனன் மறுமொழியில் இருந்து: தமிழ் எழுத்தாளர்கள் ஒரே ஸ்டைலில் பல கதைகளை எழுதியதை, எழுதுவதை (இதற்கு ஒரே major விதிவிலக்கு புதுமைப்பித்தன்) வாசிக்கிற, எழுதப்போவதையெல்லாம் வாசிக்கப்போகிற நமக்கு ஒரே கதையை பல ஸ்டைலில் எழுதினால் ஏன் வாசிக்க முடியாது..

வம்பு கேள்வி: உங்களுக்கு கதைக்கான கரு பஞ்சமா சார்? வேணும்னா நான் ரெண்டு knot சொல்லட்டுமாங்க!

6. முரளிகண்ணன் :: நீரோடை: துண்டு சிகரெட்

வெட்டிப்பயல் மாதிரி சொல்ணுமின்னா, இவரோட எழுத்து ‘சும்மா நல்லா இருக்கு நல்லா இருக்குனு சொல்லி போர் அடிச்சி போச்சி...’

வம்பு கேள்வி: உங்களுக்கு மெய்யாலுமே கற்பனை ஜாஸ்தியா? அல்லது நாட்குறிப்பை அப்படியே எழுத சங்கோசமா?

7. சித்ரன் :: நீரோட்டம் « புள்ளி

சமீபத்திய ‘கல்கி’ பத்திரிகையில் வெளியான கதை. சோடை போகுமா? நல்ல வேளையாக இந்த மாதம் கதை எழுதியிருக்கிறார். இவரெல்லாம் நம்ம லிஸ்டில் இருப்பது லிஸ்ட்டுக்கு பெருமைங்க.

வம்பு கேள்வி: அந்தக் கடைசி திருப்பம்தான் இதனுடைய மிகப் பெரிய உச்சம் என்றாலும், அப்படிப்பட்ட இறுதிவரி திகில் இல்லாவிட்டால், இந்தக் கதையை எப்படி முடித்திருப்பிர்கள்?

8. ஆல்பர்ட்டோ மொராவியா :: பறவையின் தடங்கள் » Blog Archive » உத்தரவிடு பணிகிறேன்மொழிபெயர்ப்பு :: நாகூர் ரூமி

மொழியாக்கம் என்பதெல்லாம் சொன்னால்தான் தெரியும். அப்படியொரு அசல் படைப்புக்கு நிகரான மொழி லாவகம். இன்னொரு முறை ஆசுவாசப் படுத்திக் கொண்டு வாசித்தால் உள்ளே பொதிந்திருக்கும் மற்ற விஷயங்கள் புலப்படும்.

வம்பு கேள்வி: கப்பலுக்கு போன மச்சான்‘ மாதிரி அடுத்த நாவல் எப்பங்க?

9. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: மெளன கோபுரம்

பறவைகள் விமானத்தில் மோதுவதால் அறுநூறு மில்லியன் டாலர் சேதம் ஆகின்றன. வானூர்தியில் வந்து விழும் பறவைக் கூட்டத்தின் மேல் 583 விபத்துகளின் பழியைப் போட முடியும். செத்த கணக்கு சேர்க்கவில்லை. இப்படியெல்லாம் புள்ளி விவரம் அடுக்குபவரை நேர்த்தியாக எதிர்கொள்ள உதவுவது புனைவுலகம். வாழ்வை சொல்லி, அதன் நியாயங்களை சரித்திர பூர்வமாக, கலாச்சார ரீதியாக புரிய வைக்கும் முயற்சிதான் இலக்கியம். இந்தக் கதை அந்த ரகம்.

வம்பு கேள்வி: உங்களுக்கு கதை எழுதுவது தவிர வேற எதாவது வேல உண்டுங்களா?

10. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: நண்டு சொன்ன `பெரியவங்க` கதை

வித்தியாசமான, அநாயசமான ஆரம்பம். கதை சொல்லி முடிக்கும் அவசரத்தில் நண்டு இருப்பதால், ஆசிரியரைப் பழிக்க வேண்டாம்.

வம்பு கேள்வி: நண்டு சொன்ன நாவலின் சுருக்கம் என்பதுதானே உண்மை?


தொகையறா

அந்தக் கால கவிதைகளில் தொகை (எட்டுத்தொகை போன்ற) நூல்களில் இருப்பதுதான் புகழ்பெற்று கோலோச்சுக்கிறது. அதே போல், இந்தக் கால சிறுகதைகளுக்கும் அறிமுகம் வேண்டுபவர், ‘நெஞ்சில் நிறைந்தவை‘ (சிவசங்கரி வானதி பதிப்பகம்), ‘முத்துக்கள் பத்து‘ (அம்ருதா பதிப்பகம்), ஐம்பதாண்டு கால தமிழ்ச் சிறுகதைகள் (சா. கந்தசாமி கவிதா பப்ளிகேஷன்ஸ்), ‘எனக்குப் பிடித்த கதைகள்‘ (பாவண்ணன்) போன்ற தொகுப்புகளையும் எஸ் ராமகிருஷ்ணன், சுஜாதா, ஜெயமோகன், க.நா.சு. இரா முருகன், போன்றவர்களின் பரிந்துரைப் பட்டியலையும் நாடுகிறார்கள்.

இவர்கள் எல்லோருமே சொல்லி வைத்தது போல் தற்கால இணைய எழுத்துகளை, வலையில் மட்டும் புழங்கும் தமிழ்ச் சிறுகதைகளை முற்றாக புறக்கணித்துவிடுகிறார்கள். இதற்கு நிவர்த்தியாக, தமிழ் வலையகங்களில் (சொல்வனம், திண்ணை, உயிரோசை, நிலாச்சாரல், தமிழோவியம், தமிழ்ப்பதிவுகள், இன்ன பிற) கிடைப்பதில் குறிப்பிடத்தக்க ஆக்கங்களை ஒரு இடத்தில் சுட்டி கொடுத்து தொகுத்தால் செமையாக இருக்கும்.

இணையத்தில் தடுக்கி விழுபவர்களுக்கும் பயனாக இருக்கும். இணையமே கதியாக கட்டுரைகளையும் ட்விட்டுகளையும் மட்டுமே வாசிக்கும் என் போன்றோருக்கும் உருப்படியான விஷயமாக இருக்கும்.

எழுத்தாளர் பெயரோ, எழுதியவரின் மூலமோ கூட தெரியாமல் போகலாம். ஆனால், நாளைய பின்னும் ‘முக்கியமான புனைவு’ என்று தேடினால் எளிதில் மாட்டும்.

Top Polluting Cities in India: Environment & Global Warming: Carbon footprint with Gold

நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ் :: இ-பேப்பர்