மூன்று படங்கள் பார்க்கக் கிடைத்தது. எக்கச்சக்கமாக எல்லோராலும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய ‘சூது கவ்வும்’ ஏமாற்றியது. ‘நாளைய இயக்குநரில்’ குறும்படம் நிறைய எடுத்திருந்ததால், முதல் பகுதி இயல்பாக அமைந்திருந்தது. இண்டர்வலோடு படத்தை முடித்து அனுப்பி இருக்கலாம். அதன் பிறகு குழப்பமும் சொதப்பலும் திணிப்புகளும் “படத்தை ஏண்டா ஃப்ரீயா போட்டோம்” என்று மனைவியைக் கேட்கவைத்தது.
காரை வேகமாக ஓட்டுவது என்பது குறித்த இலக்கை சுருக்கமான நேரத்தில் கடப்பது. ஆரம்பமும், முடிவும் ஒன்றே என்பதற்காக, அங்கேயே நின்று கொண்டிருந்துவிட்டு, வெற்றியடைந்து விட முடியாது. நம்ப இயலாத கதாபாத்திரங்கள் பிரச்சினையில்லை. நடக்க இயலாத சம்பவங்கள் பிரச்சினையில்லை. லோ பட்ஜெட் பிரச்சினையில்லை. விறிவிறுப்பு என்னும் பேரில் யு டர்ன் மட்டுமே அடித்துக் கொண்டு ஜெர்க் மட்டுமே தருகிறது இரண்டாம் பகுதி.
இதற்கு வசனத்தாலேயே கொன்ற ‘மூன்று பேர்; மூன்று காதல்’ கொஞ்சம் தேவலாம். எதிர்பார்த்த பாதையில் பயணித்து, பாடலுடன் ஊடலும் கொடுத்த ‘எதிர் நீச்சல்’ எவ்வளவோ தேவலாம். வசந்த்திற்கு விஷுவல் மொழி கைகூடாமல் போயிருக்கலாம். தனுஷ் தயாரிப்பு மசாலாவாக இருந்திருக்கலாம். சிவ கார்த்திகேயனுக்கு ஆட்டம் வராமல் இருந்திருக்கலாம். அர்ஜூனுக்கு ஜோதிகாவின் டூப் தேவையாக இருந்திருக்கலாம். ஆனாலும், இரண்டரை மணி நேரத்திற்கு அலுக்காமல் பார்வையாளனை உட்கார வைக்கும் கர்ம்சுத்தத்தைப் பாராட்டலாம்.
நலனின் அடுத்த பிராஜெக்டாவது டெமொ பிராடக்ட் போல் புறத்தே மட்டும் மினுக்காமல், prototype போல் டிரெய்லர் மட்டும் ருசிக்காமல், முழுக்க வேகணும்.
வித்தியாசமாக முயன்றிருக்கிறார். ஒரு மணி நேரத்திற்கு சரக்கு வைத்திருக்கிறார். தமிழ் சினிமா நகைச்சுவையில் இருந்து விலகிச் சென்றிருக்கிறார். எனக்கும் இதெல்லாம் பிடித்திருக்கிறது.
எனக்கு கவுதம் மேனன் படங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால், ”நடுநிசி நாய்”களை மீண்டும் முழுவதுமாகப் பார் என்றால் வதை கலந்த சலிப்பு எழும். பலாப் பழத்தை வெட்டி உண்பது போல் சூது கவ்வும் சில பகுதிகள் மிக நன்று; சில பகுதிகள் பலாப்பழச்சுளை புதுசு. சிம்பு தேவனின் இம்சை அரசனை நினைவுறுத்தும் பாடல் எல்லாம் கூட போனால் போகிறது, பலாக் கொட்டை என்று சாம்பாராக்கி விட்டு விடலாம். ஆனால், இரண்டாம் பாதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் சகுனிகளும் குப்பைகளும் களைய மட்டுமே கோருகின்றன.
”மதுபானக் கடை” போல் நேர்மையும் இல்லை. பேசுபொருளை மட்டும் சொல்லிய படம். பாடல் வேண்டும், துரத்தல் காட்சி வேண்டும், இரண்டரை மணி நேரம் வேண்டும், நாயகியின் அரையாடை வேண்டும் என்று எதையும் திணிக்கவில்லை. சூது கவ்வும் புத்திசாலித்தனமான உப்புமா.
State of Tamil Cinema Reviewers: Movies vs Books
கடந்த பதினைந்து வருடங்களாக பட அறிமுகங்களை எழுதுபவன் + இணையத்திலும் பத்திரிகைகளிலும் விமர்சனங்களை அவ்வப்போது வாசித்தும் வருபவன் என்ற முறையில் எனக்குப் பட்டது….
* பெரும்பலான சமயம் படம் வெளியானவுடன் டாரெண்ட் தரவிறக்கத்தில் படம் பார்ப்பதால், திரையரங்கின் மன ஒருமை கிடைப்பதில்லை. அதை விடக் கொடுமை, ஆங்கிலப் படத்திற்கு ப்ளூ ரே ப்ரிண்ட்டும் தமிழ்ப்படங்களுக்கு திருட்டு விசிடியும் பார்க்க வேண்டும் என்னும் மனப்பான்மை.
* விகடன் விமர்சனம் போல் மார்க் போட்டு வாடிக்கை. எல்லாப் படத்திற்கும் மதிப்பெண் மட்டுமே வழங்கத் தெரியும்.
* திக்குவாய், குருடி போன்ற குறைபாடுகளை நல்ல நடிப்பு என்றும் ரஜினி, விஜய் படங்களை மசாலா என்றும் வகைப்படுத்துவோம்.
* கேமிராவில் ஒளிப்படம் எடுப்பதாலும், நாலைந்து முறை குழந்தைகள் நிகழ்ச்சியை வீடியோ எடுத்ததாலும் சினிமா எடுக்கும் அனைத்து வித்தையும் தெரிந்ததாக நினைக்கிறோம்.
* தொலைக்காட்சி சீரியல் (என்னைப் போல் ஆசாமிகள் தூர்தர்ஷன் நாடகம்) பார்த்தே பழக்கம். திரைப்படங்களிலும் அதே வாசனை எதிர்பார்க்கிறோம்.
* புத்தகத்திற்கு அறிமுகம் எழுதுவதை விட சினிமாவிற்கு அறிமுகம் கொடுப்பது எளிதானது. உதாரணமாக இயக்குநர் பாலா போன்ற புகழ்பெற்ற எழுத்துலக ஜாம்பவானை விமர்சிக்க நிறைய திராணி வேண்டும். ஆனால், ‘பாலா’ போன்றவரை விமர்சிப்பதால் சாதாரண மனுஷனாக அடையாளம் காட்டிக் கொள்ளலாம். இன்னும் விரிவாகச் சொன்னால் ஆயிரம் பக்க புத்தகத்தை தாக்கி எழுதினால் இலக்கியவாதியாக ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. ‘கடல்’ படத்தையும் பரதேசியையும் விமர்சித்தால் humble ஆளாகி விடலாம்.
* மோசமான படத்தைப் பாராட்டியும், சுவாரசியமான படைப்பை மட்டம் தட்டியும் எழுதினால் மட்டுமே கவனம் கிடைக்கிறது.
* சென்ற கால சினிமாவில் இருந்து வித்தியாசமாய் நின்று தமிழ்த் திரைப்படங்களை எது முன்னகர்த்துகிறது என்று கவனித்து பகிர்வதை விட, அந்தத் திரைப்படங்களின் கதையை வைத்து மன்றாடுவது எளிது.
என்னுடைய ஆண்டிராய்ட் போனிற்கு புதிதாக ஏதாவது நிரலியை நிறுவிக் கொண்டே இருப்பேன். சில சமயம் அதைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவேன். சில சமயம் உடனடியாக நீக்கிவிடுவேன். அது எனக்கு எப்படி உபயோகமாகிறது, ஏற்கனவே இருக்கும் மற்ற அப்ளிகேஷன்களில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதைப் பொறுத்து என் முடிவு அமைகிறது. வைரஸ் போன்ற தாக்குதல் கொடுத்தால் மட்டுமே, கூகுள் கடை சென்று மட்டகரமான தரமதிப்பீடு தருகிறேன்.
சினிமாவிற்கும் அதே அளவீடு பயன்படுத்தலாம். நோய்க்கிருமி போல் கலையை கீழே இழுக்கிறதா? அல்லது தனிப்பட்ட முறையில் உபயோகமான விதத்தில் முன்னேற்றுகிறதா?
1 பின்னூட்டம்
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது அறிமுகம், இணையம், எழுத்தாலர், கதை, கேமிரா, கோடம்பாக்கம், சினிமா, தமிழ்ப்படம், நூல், படம், பதிவு, புத்தகம், வலை, விமர்சனம், Books, Cinema, Comments, Critics, Films, Hollywood, Kadal, Kodambakkam, Movies, Opinions, Paradesi, Reviewers, Reviews, Tamil