Tag Archives: Maniratnam

மந்திரவாதியும் மணி ரத்தினமும் – பொன்னியின் செல்வன் இரண்டு

மணி ரத்னம் ஏன் பொன்னியின் செல்வன் எடுக்கிறார்?

ஏற்கனவே பத்து காரணங்களைப் பார்த்து அலுத்து இருப்பீர்கள்.

இருந்தாலும் #PS2 வந்த பிறகு 11வது காரணம்:

டைரக்டர் ஷங்கர் தியாகராஜன் மகன் நடிகர் பிரசாந்த்தை வைத்து ஜீன்ஸ் இயக்குகிறார்.
அது மதுராந்தாகன்.
தகுதி இல்லாதவர்.
பணத்தினால் பதவியை அடைபவர்.
இதுவே மாந்திரீக யதார்த்தம்.

டைரக்டர் மணி ரத்தினம் புகழ்பெற்ற விஜய் சேதுபதியையும் பணம் படைத்த அருண் விஜய்யையும் வைத்து செக்கச் சிவந்த வானம் இயக்குகிறார்.
இது பொன்னியின் செல்வன் – அருண் மொழி – ராஜராஜன்.
இது பணம் படைத்த தயாரிப்பாளர் மகன் ‘ஜெயம்’ ரவி.
இது குறிப்பால் பொருளுணுர்த்துவது.

இத்தனை காலமாய் நான் ஏன் இதை புரிந்து கொண்டு உணரவில்லை… என் போதாமைதான்!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹ்மான் தன் மச்சான் ரகுமானுக்காக “சங்கமம்” கொடுக்கிறார்.
உறவினரால் வாய்ப்பளிக்கப் படுகிறார் ஒருவர்.
அது மதுராந்தாகன்.
தகுதி இல்லாதவர்.
இதுவே ஒன்றைக் கொண்டு இன்னொன்றைச் சொல்வது.
அதற்கு பெயர் மாந்திரிகம்; எதார்த்தம்.

இது போன்ற சமரசங்களை மேஜிக்கல் ரியலிசமாகக் கொடுப்பதுதான் #பொசெ2 திரைப்படம்.

கொலைவெறியில் உண்மையான ஆதிக்க அரசர் அரக்கராக – ஆதித்த கரிகாலன் உதாரண இயக்குநர்.
அவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா போன்றவர்.
அவரிடம் கொடுத்தால் ‘ஓரம் போ’, அல்லது ‘மாடர்ன் லவ்: சென்னை’ போன்ற அசல் பதார்த்தம் வரும்.

உண்மையான சூத்திரதாரி என்பவர் திறைமறைவில் எக்சியூடிவ் ப்ரொடியூசர் ஆக இயங்குபவர்.
அவர் அசல் வாழ்வில் தோல்வியுற்றவர்.
அவர் தனியாக படையெடுத்து போரிட்டால் வெற்றி பெற மாட்டார்.
அந்த ஆள் தன் சொந்தக் காலில் சுய முயற்சியாக படம் எடுத்து படுதோல்வி கண்டிருப்பார்,
அது ‘சிவா’ – “ஓகே காதல் கண்மணி” படத்தின் அண்ணனாக வருவாரே… அவர்.
பொ.செ. கதையில் வல்லவரையன் வந்தியத் தேவன்.

நந்தினி என்பார் ‘ஐஷ்வர்யா ராய்’ என்பாரே தான்.
அவர் அசல் நடிகையாக மதிக்கப் பெறாதவர்.
ஒரு ராதிகா ஆப்தே-விற்கோ. கொன்கொனா சென்-னிற்கோ… அவ்வளவு ஏன் தற்போதைய என்னுடைய நாயகி ‘தேவி’ தபூ-விற்கோ கிடைக்கும் அந்தஸ்து கிடைக்கப் பெறாதவர்.
அதே போல் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அரசியாகக் கொண்டாடப் படாதவர்.
அவரை குறித்துணர்த்தத் தான் நந்தினிக்கு அய்ஷ்வர்யா ராயே நடிக்கிறார்.

அவரின் வயதை நேரடியாக மந்தாகினியாக மேக்கப் இல்லாமல், பூச்சுகள் இல்லாமல் உலா வருகிறார்.
டிம்பிள் கபாடியாவிற்கும் கனவுக்கன்னி ஹேமமாலினிக்கும் வயதாகும்.
இருந்தாலும் இளமையாக நினைப்போம். நடிக்கிறோம்.
நாடக மேடை.
அரச சபை.
அரசி என்பவள் நடிகை
அரசன் என்பவன் தந்தையை ரவுடியாகக் கொண்டவன்.
இயக்குநர் என்பவர் ராஜகுரு.
அனிருத்த பிரும்மராயர்.
காதில் ஒதுவார்.
ஒதுவது புரிந்தத்தா?

PS1 | Snap Judgment (snapjudge.blog)

PS1 Reasons: Blue Sattai Maran

எடுத்ததெல்லாம் எடுத்தான்
அவன் யாருக்காக எடுத்தான்
சன் டிவிக்கா எடுத்தான் ?
இல்லை!
ப்ளூ சட்டைக்காக எடுத்தான்!!

சன் டிவிக்கா எடுத்தான்?
இல்லை…
ப்ளூ சட்டைக்காக எடுத்தான்!!

கிராஃபிக்ஸ்
கிடையாதென்றால் மாறன்
வீடியோ போட மறந்திடுமா

டிக்கெட்
இருநூறென்றால்
போய் வர
மிரண்டுடுமா

உனக்காக
ஒன்று எனக்காக
ஒன்று ஒருபோதும்
மணிரத்னம் எடுத்ததில்லை

எடுத்ததெல்லாம்
எடுத்தான் அவன் யாருக்காக
எடுத்தான் சன் டிவிக்கா
எடுத்தான் இல்லை
ப்ளூ சட்டைக்காக எடுத்தான்

எடுத்தவன்
மேல் பழியுமில்லை
விமர்சித்தவன் மேல்
பாவம் இல்லை

கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார்
பார்த்தவர்கள் பாயை
பிராண்டினார்

பலர் வாட
வாட சிலர் வாழ
வாழ ஒரு போதும்
மணிரத்னம் எடுத்ததில்லை

எடுத்ததெல்லாம்
எடுத்தான் அவன் யாருக்காக
எடுத்தான் சன் டிவிக்கா
எடுத்தான் இல்லை
மாறனுக்காக எடுத்தான்

புரியல என்போர்
இருக்கையிலே புரிபவர்கள்
புரியல என்பார்

தலை நிறைய வலி
இருக்கும் வாய் நிறைய
பபுள் கம் இருக்கும்

புரியாத
போதும் பிட்டு பிட்டென்று
எடுத்து வைக்கின்ற
பேரை வாழ்த்திடுவோம்

PS1 எடுத்ததெல்லாம்

எடுத்தான் அவன் யாருக்காக
எடுத்தான் சன் டிவிக்கா
எடுத்தான் இல்லை
ப்ளூ சட்டைக்காக எடுத்தான்

சன் டிவிக்கா
எடுத்தான் இல்லை
ப்ளூ சட்டைக்காக எடுத்தான்

(பொன்னியின் செல்வன் ஏன் உருவானது – ஏழாவது காரணம்)

அந்தப் பாடல் பெற்ற விழிய விமர்சனங்கள்:

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஏன் எடுத்தார்கள்?

பத்து நாளுக்கு தினம் ஒரு காரணம் போட திட்டம். உங்கள் உதவியைக் கோருகிறேன்.

முதல் காரணம் எளிது:

கல்கி கதையின் போதாமைகளைச் சொல்லத்தான் இந்தப் படம் வெளிவந்திருக்கிறது. இதுவரை யானைக்காலாக யாரும் படிக்க முடியாத அளவு பக்கங்களாக பாகங்களாக இருந்ததை திரைப்படமாக்கியதால் இப்போது எல்லோரும், “இந்தக் கதை மொக்கையா இருக்கே!” என ஊர் எல்லாம் அறியும்படி தன் ஆனைக்கால் கொண்டு உதைத்து விட்டார் மணி ரத்னம்.

ஜெயமோகனுக்கு எப்போதுமே தனக்கு மட்டுமே அரியாசனம் வேண்டும். அது சுஜாதா, ஜெயகாந்தன், கல்கி போன்றோரால் சரியாசனமாக இருந்தது. கூடவே மும்மூர்த்திகள் என்று எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்ற சமகாலத்தவரும் போட்டியில் இருந்தார்கள். விஷ்ணுபுரம் எழுதி ஒருவரை சாய்த்தார் என்றால், விஷ்ணுபுரம் விருது கொடுத்து இன்னொருவரை சாய்க்கிறார்.

இப்பொழுது கல்கியின் போதாமைகளை உணர்த்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறார் ஆசான். அதற்கான பிரும்மாஸ்திரம் — பொ.செ.1, 2, 3…

ஆதித்த கரிகாலனுக்கு தோல்வியைக் கண்டு பயம் என்பதை கல்கி உணர்த்துவார். படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தை பார்த்தால் வடிவேலு மாதிரி சிரிப்பு வருகிறது.

யானை ராணியை மாந்திரீகமாக, மாயாவாதமாக, பூடகமாக கல்கி உலவ விடுவார். இங்கே மேக்கப் இல்லாத ஐஷ்வர்யா என்று கெக்கலிப்பு வருகிறது.

ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரம் தூணிலும் இருப்பான், தூணாகவும் இருப்பானாக மிளிரும். இங்கே நிஜமாக நகைச்சுவைக்காக உலவுகிறது.

கல்கியைக் கொண்டாட வேண்டுமானால் சமரசங்கள் இல்லாமல் திரைக்குக் கொணர முயன்றிருக்க வேண்டும்.

மஹாபாரதம் எழுதிய போது எவ்வாறு தன் திரைவடிவத்தை ஏற்க மறுத்த சன் டிவியை உதாசீனம் செய்தாரோ… அது மாதிரி!

ஆனால், ”கடல்” போல் உருப்படியாக எடுத்தால் எவ பார்ப்பாள்? எனவே, திருடா… திருடா… பகுதி இரண்டை #PS1 ஆக எடுத்து விட்டார்கள்.

சிவாஜி என்றால் ரஜினியின் படம் என நிறுவியது ஷங்கர்.

பொன்னியின் செல்வன் என்றால் ஜொள்ளுச்சோழர் படம் என நிறுவுவது – 1ஸ்ட் ரீஸன்

கடல் திரைப்படம் – விமர்சனம், சுட்டிகள்

என்னைக் கவர்ந்த வசனங்களில் சில

* ‘கெட்டவங்களுக்குத்தான் கடவுள் துணை தேவை. நோயாளிதான் டாக்டர்கிட்ட போவாங்க… அது மாதிரி தப்பு செய்யறவங்கதான் தெய்வத்துகிட்ட வருவாங்க!.’

* சாத்தான் சொல்வதாக… ‘ஜீஸஸ் ஜெயிச்சுட்டார். என்னைக் கொல்வதன் மூலம் பாஸ்டர் சாமுவேல் போராளி ஆயிட்டார். சாத்தானை சாகடிப்பதன் மூலம் நேர்மையும் அமைதியும் வென்று விட்டதா?’

எல்லாம் நினைவில் இருந்து தோராயமாக எழுதியது. என்னுடைய புரிதலுக்கு ஏற்ப மாற்றி விட்டேன்.

அடுத்ததாக சமகால தமிழ்ப்படங்களை பார்க்கலாம். ஒரு வகை நவீன மொழியில் திரைக்கதையை நம்பி வருபவை. பீட்சா, நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம், நான் ஈ வகையறா.

இன்னொன்று எண்பதுகளின் தேய்வழக்கோடு வருபவை. தாண்டவம், ’கண்ணா லட்டு திங்க ஆசையா’, மாற்றான் போன்றவை.

இந்தச் சூழலில் கடல் போன்ற படங்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எண்பதுகளின் காலகட்ட திரைப்படம், பீரியட் படம் என்றெல்லாம் சகஜமாக ஹாலிவுட்டில் வரும். அந்த மாதிரி ஒன்றாக கடல் படத்தைப் பார்க்கிறேன்.

சாதாரண கதை. வில்லன் மகளை ராபின்ஹுட் வளர்க்கும் அனாதை ஹீரோ காதலிக்கிறான். ரஜினி அல்லது கமல் நடித்து வெளியான பல படங்களில் சொல்லப்பட்ட விஷயம்.

அதை எப்படி புதுசாக சொல்வது?

ஆனால் முப்பதாண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையை சொல்வதா அல்லது கிறித்துவ இறையியலை மையப்படுத்துவதா என்று அங்குமிங்கும் அலைபாய்கிறது.

எதிர்பார்ப்புகளை பொய்ப்பதில் அர்விந்த்சாமி முன்னணியில் இருக்கிறார். டச் விட்டுப் போனதோ, அல்லது அடக்கி வாசித்தாரோ… தமிழருக்கு ஓவர் ஆக்டிங் பிடிக்கும்; அவர் தேமே என்று ஏம்போக்கி மாதிரி வந்து போகிறார்.

எவராலும் தவறு மட்டுமே செய்து வாழ முடியாது. உற்றார் உறவினருக்கோ அல்லது கூட்டாளிக்கோ… எங்காவது யாருக்காவது நன்மை செய்து விடுவார்கள். ஆனால், குற்றம் மட்டுமே வாழ்க்கையாக பெர்க்மான்ஸ் கொண்டிருக்கிறார்.

ஆனால், ஒரே ஒரு நன்மை செய்கிறார். மிக இறுதியில். தேவனின் பாதைக்கு வந்து விடுகிறார். ஒரு நல்ல காரியம் மட்டுமே போதும்… அதன் சுவை அப்படியே மெதுவாக நம்மை திருத்தி விடும் என்பதாக யேசுவின் வழியை குறிக்கிறார்கள். இதை பொருளாதாரத்தில் multiplier effect என்பார்கள்.

ஏ ஆர் ரெகுமானின் இசையைக் குறித்து விமர்சனம் செய்யும் முன் மூன்று விஷயம் செய்தாக வேண்டும்.

1. படத்தை இரு முறையாவது பார்த்திருக்க வேண்டும்
2. மூன்றாவது முறை படத்திற்கு நீங்கள் செல்லும்போது, தயவு செய்து கண்னை இறுகக் கட்டிக் கொண்டு முழுப்படமும் பார்க்க வேண்டும்.
3. இந்த மாதிரி குறைந்த பட்சம் ஏழெட்டு திரைப்படங்களையாவது பார்த்திருக்க வேண்டும்.

இப்படி எல்லாம் அனுபவிப்பதற்கு முன்பே, இங்கே வயலின் வந்திருக்கலாம்; அங்கே குழைந்திருக்கலாம் என்று அனுமாணிக்க இயலாது.

இரண்டாவதாக அருமையான நாவலை காட்சிப்படுத்தல். வசந்த பாலன் ஒரே ஒரு விஷயத்தைத்தான் ‘காவல் கோட்டம்’ போன்ற மிகப் பெரிய புத்தகத்தில் இருந்து எடுக்கிறார். மிக மிக ஜனரஞ்சகமாக ‘லிங்கன்’ எடுக்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எப்பொழுதுமே ஒரே ஒரு குறிக்கோளை நோக்கித்தான் பயணிக்கிறார்.

சட்டதிருத்தத்தை கொண்டு வர லிங்கன் என்ன செய்கிறார் என்பதுதான் முக்கிய புள்ளி. அது செய்தார் என்பதை படம் பார்க்கும் அனைவருமே அறிந்திருந்தாலும், இருக்கை நுனிக்கு வரவைக்கிறார். கறுப்பர்களுக்கு நேர்ந்த அநீதிளை கொடூரமாக சித்தரிக்கவில்லை. தேர்தலில் எப்படி வென்றார் என்பதை விளக்கவில்லை. போரை எப்படி நடத்தினார் என்று காட்சியாக்கவில்லை. இந்த உபகதை அனைத்துமே தொட்டுக் கொள்ள கொஞ்சமாய் வைத்துக் கொண்டார்.

நாவலை ஒரே தினத்தில் வாசித்து முடிப்பதில்லை. திரைப்படத்தை இரண்டரை மணி நேரத்தில் முடித்து விடுகிறேன். அனேக திரைப்படங்களை ஒரு தடவைதான் பார்க்கிறேன். நாவல்களை இரண்டு முறையாவது படிப்பது சகஜம்.

அதனால், ‘கடல்’ திரைப்படத்தில் இந்த மாதிரி ஃபோகஸ் இல்லாதது என்னை அலைக்கழித்தது.

ஆய்வுகள், சுட்டிகள் & விமர்சனங்கள்:

1. மனவெளிப் பயணம்: கடல்:

அர்ஜுன், யாருடனோ தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருக்கும் வசனமிது. ”பாவம் செய்றது, மனுசன் இயல்பா நடக்குற மாதிரி.. ஈசியா பழக்கிடலாம்.. நன்மை செய்றதுதான் வானத்துலே பறக்க செய்ற மாதிரி.. ரொம்ப கஷ்டம்”. இந்த வசனம்தான் படத்தின் மூலம்.

களங்கமற்ற தன்மை, அறிவாளிகளை விட அசடுகளுக்கே கைக்கூடும். எனவே அவர்களின் களங்கமற்ற தன்மையால், எளிதாக இயேசுவை நெருங்குவார்கள். சாம் பாத்திரத்தால், ஒருபோதும் தீமையை செய்ய முடியாது என்று படம் முழுவதும் நாம் உணர்கிறோம். இறுதியில், அவனுடைய களங்கமற்ற தன்மை, சாத்தானால் பரிசோதிக்கப்பட்டு உடைக்கபடுகிறது. பரிதாபமாக தோல்வியை தழுவுகிறான் சாம். புனிதனான சாம் தனது நற்குணத்தை இழந்து, பெர்க்மான்ஸை தண்ணீரில் முழ்க விட எத்தனிக்கையில், சாத்தான் வெற்றி களிப்பில் எக்காளமிடுகிறான். தேவதை போன்ற பியாட்ரிஸினால் மன்னிக்கப்பட்டு தேவனான தாமஸ், பெர்க்மான்ஸை மன்னித்து மீட்கிறான். இப்போது, மன்னிக்கப்பட்டு உயிர்தெழும் பெர்க்மான்ஸால், இயேசுவை மிக எளிதாக நெருங்க முடியும்தானே.

2. கலங்கிய குட்டை: மணிரத்னத்தின் ‘கடல்’ | எம்.டி.முத்துக்குமாரசாமி:

சிறுவன் ‘அம்மா அம்மா’ என்று அலறுவது மணிரத்னத்தின் அஞ்சலி படத்தில் ‘எந்திரி அஞ்சலி எந்திரி அஞ்சலி’ என்று ஒரு அலறல் வருமே அது போல நீடிக்குமோ என்ற என் பீதியை ‘மகுடி மகுடி’ உற்சாகப்பாடல் நீக்கி என்னை அமைதிப்படுத்திவிட்டது.

பிணத்தின் காலை மண்வெட்டியால் உடைத்து சவப்பெட்டிக்குள் அலட்சியமாக இருத்தினானே அவனிடம் சாத்தானின் சாயல் இருக்கிறது

‘அடியே எங்கே கூட்டிப் போறெ’ என்று சித் ஶ்ரீராம் உருகி உருகி பாடும் காட்சியில் துளசி டிசைனர் சேலை கட்டிக்கொண்டு பாசி மணியெல்லாம் அணிந்து இடுப்பை நோக்கி முக்கோணமாய் வளைந்த இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு பூதகி போல நிற்கிறார். பூதகி நடனத்தில் எங்கே நீ கூட்டிபோறே அடியே என்று கேட்டு கதாநாயகன் பாடும்போது அவன் மேல் நமக்கு கழிவிரக்கம் பிறக்கிறது.

3. The Hindu : Life & Style / Metroplus : Sea of imagination:

According to him, Kadal narrates the “story of a wounded boy who is transformed or elevated to a higher spiritual plane by a girl called Beatrice who comes into his life. It is a film on two youngsters from the fishing community, but not in the genre of Malayalam films such as Chemeen and Amaram, which was on the fishing community. The sea in Kadalis merely a backdrop to the story of a man’s transformation.”

Pointing out that Beatrice was the name of the angel who takes Dante to heaven in the epic work Divine Comedy, he says that the movie’s theme is about how it takes just one step or action to turn man into God but it takes several steps to turn a man into the devil.

4. “Kadal”… Coast analysis « Baradwaj Rangan:

When done, they lower the body, now inside an open coffin, and find a leg sticking out – that old joke about the whore who couldn’t keep her legs crossed comes to mind – and one of them sets about breaking the limb, in order to make it fit inside.

5. கடல் – அலைகளைக்கடந்து ஆழம் ~ வேழவனம்:

தான் தான் மிகுந்த அறிவாளி, சைத்தானின் பிரதி என நினைக்கும் அவரை, தான் எதிரியாக நினைக்கும் அனைவரையும் அவர்கள் யோசிக்க இடம் கொடுக்காமல் தனது திறமையால் தோற்கடித்துக்கொண்டே வரும் அவரை, தன் அறிவால் யோசிக்க கூட முடியாத ஒரு சிறு பெண், எளிய அன்பினால் வெற்றி கொள்வதே இந்தக் கடல்.

துணை நடிகர்களின் பங்களிப்பு அபாரம். ஃபாதருக்கு உதவியாக வருபவர்(யேசுவையே நேருல பார்த்தவரு), மீன் விற்கும் பெண் என பலர்.

6. Karundhel:

தாந்தேவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். புகழ்பெற்ற இடாலியன் கவிஞர். இவரது ‘Divine Comedy’ என்ற கவிதையைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கலாம். நரகம், சொர்க்கம் மற்றும் இதனிடையே இருக்கும் purgatory என்ற மூன்று உலகங்களுக்குள் தாந்தேவின் பயணத்தைப் பற்றிச் சொல்லும் ஒரு நீண்ட கவிதை இது. இந்தப் படத்துக்காக அந்தக் கவிதையைப் படித்துப் பார்த்தேன். மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்தக் கவிதையில், சொர்க்கத்தில் தாந்தேயின் பயணத்தை வழிநடத்திச் செல்லும் பெண்ணின் பெயர் – Beatrice. சொர்க்கத்தில் பல்வேறு புனிதர்களையும் சந்தித்துப் பேசுகிறார் தாந்தே. பியாட்ரிஸ் என்ற இந்தக் கதாபாத்திரம், தாந்தேவின் நிஜவாழ்வில் அவருக்கு மிகவும் பிடித்தமான பெண்ணின் பெயர். இந்தப் பெண்ணை தாந்தே இரண்டே தடவைகள் மட்டுமே சந்தித்திருக்கிறார். இருந்தும் பியாட்ரிஸின் மீதான அவரது காதலை அவரது படைப்புகளில் வெளியிடும் அளவு அவருக்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்துப் போயிருந்தது. அவரது டிவன் காமெடியில் பியாட்ரிஸ், அன்பின் மொத்த உருவமாக சித்தரிக்கப்படுகிறாள். அதேபோல், கடவுளிடம் நேரடியாகப் பேசக்கூடிய ஒரு உயரிய நிலைக்கு (beatific vision) தாந்தேவை உயர்த்தவும் செய்கிறாள் பியாட்ரிஸ்.

7. கடல் « Charu’s blog:

கடலின் முதல் பத்து நிமிடங்கள் ஜெயமோகனின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியைப் போல் இருந்ததும் “தொலைந்தோம்” என்று பயந்து விட்டேன். பாதிரியார் உடையில் எல்லோரும் அப்படித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். பாரதி மணியைப் பார்த்ததும் நம் நாஞ்சில் நாடனும் பாதிரியார் உடையில் வந்து பேசுவாரோ என்று நடுங்கி விட்டேன். அப்புறம் பார்த்தால் படம் வேறு எங்கோ போய் விட்டது. படத்தின் ஹீரோக்கள் என்று பலரைச் சொல்லலாம் போல் இருக்கிறது. முதல் ஹீரோ ஏ.ஆர். ரஹ்மான். இப்படி ஒரு பின்னணி இசையையும் பாடல்களையும் தமிழ் சினிமாவில் பார்த்து பல காலம் ஆகி விட்டது. பல இடங்களில் கண்களைக் கலங்கச் செய்து விட்டது இசை. ஒரு ஐரோப்பியப் படத்தைப் பார்ப்பது போல் இருந்தது இசை.

படத்தின் ஒரே குறை, அந்த ஹீரோயின். அவருடைய அபரிமிதமான எடை. அவர் கௌதமின் சைக்கிளில் முன் சீட்டில் உட்காரும் போது பார்வையாளர்கள் கேலிச் சிரிப்பு சிரிக்கிறார்கள். தமிழில் வேறு நடிகையா கிடைக்கவில்லை?

8. அந்த டேப் ரிகார்ட் சீன் போன்ற நிகழ்வுள்ள ஒரு கட்டுரை :: என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன? (16-1-07 அன்று பாளையங்கோடை தூய சவேரியார் கல்லூரி தமிழ்துறை சார்பில் ஆற்றிய நினைவுச்சொற்பொழிவு)

” ஏன் அவன் அழுகிறான்? குற்ற உணர்வாலா? இல்லை. அதைவிட நுட்பமான ஓர் உணர்வு. சிந்தனைகளின் உச்சியை அடையவும் ,பெரும் வல்லமையுடன் இயற்கையை வெல்லவும் பொருட்டு படைக்கப்பட்ட ஒரு மானுட ஆத்மாவான அவன் வெறுமொரு தெருவாழ் மிருகமாக வாழ நேரிட்டமை குறித்தே அவன் அழுதான். சற்றுமுன் கோபமாக வெளிப்பட்டதும் அந்த அழுகைதான்”

நித்யா தொடர்ந்தார்.” இந்த அழுகை மானுடனைப்பற்றி நான் என்றென்றும் கொண்டிருந்த அழுத்தமான நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை உறுதிசெய்கிறது. மனிதன் இயற்கையின் சாராம்சமான ஒரு வல்லமையை தன்னுள் கொண்டிருக்கிறான். இயற்கையின் உள்ளுறையாக ஒரு பெரும் கருணை, ஒரு மாபெரும் நன்மை உறைகிறது என நான் எப்போதுமே உணர்ந்துவருகிறேன். அதுவே நாம் காணும் இவையனைத்தையும் ஆக்கி நம் முன் விரித்துள்ளது. அந்த சாரம் மானுடனின் உள்ளும் உறைகிறது.”

9. பிச்சைக்காரன்: கடல் – மீட்பு அளிக்கும் தேவதை:

ஹிரோ ஒரு ரவுடியை போட்டு அடிப்பதில் இருந்து தமிழ் சினிமா காதல் ஆரம்பிக்கும். இதை இந்த படம் உடைத்து இருக்கிறது. யோசித்து பாருங்கள் . நம்முடைய சிறந்த நட்போ,. காதலோ காரணம் ஏதுமின்றி இயல்பாகத்தான் அமைந்து இருக்கும் . இயல்பான நெருக்கம் அருமையாக சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் கொஞ்சம் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி இல்லாததைத்தான் படத்தின் பெரிய மைன்சாக சொல்ல முடியும்.

10. Dyno Buoy – Google+ – கடல் – http://www.imdb.com/title/tt2344672/ குருடர்கள்…:

இன்னொருத்தர் நஸரீன் (அதையும் ஒரு எலக்ஸ் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட “நஸ் ரீன்”றார் லூயின்றார். அது லுயிஸ்தான், ஃபிரெஞ்சு போல லூயி பண்ணவேண்டியதில்லை மிஸ்டர் எம்கே டீ காபிஜி). படத்தை பார்த்துட்டு வந்து அவசரசரமா விக்கிபீடியா ஐஎம்டிபி துலாவி அப்படிக்கா இப்படிக்கான்னு அடிச்சி விடவேண்டியது.

எனக்கு தெரிஞ்சது / புரிஞ்சது – ஒவ்வொரு நல்லவனுக்குள்ளயும் ஒரு கெட்டவன், ஒவ்வொரு கெட்டவனுக்குள்ளும் ஒரு நல்லவன். ஏதோ ஒன்னு இன்னொன்னை கொல்லும் அந்த ஒரு நொடிப்பொழுது அவரவர் வாழக்கையை நிர்ணயிக்குது.

ஹேமாமாலினி பொண்ணு போல் இருந்த அந்த பெண்மணி மோகன் பாபுவின் மகளாம். அவரும் கச்சிதமாய் மனதில் நிற்கும் கேரக்டர்.

எல்லாத்துக்கும் மேல் காமெடியன் ஒருவரை கூடவே சுத்தவிட்டு காட்சியில் வருவதை பார்வையாளனுக்கு விளக்காமல் பார்வையாளன் மேல் நம்பிக்கை வைத்ததிற்கு நன்றி மணி ரத்னம் (அந்த காமெடியன் இல்லாத்தால்தான் பலருக்கு படம் புரியவில்லையஓ என்றும் எண்ணம் வருகிறது).

லெ மிஸ்ஸரப் (Les Meserables) பார்த்திருந்தால், கடல் படத்தின் ஓட்டத்தில் சிலலிடங்களில் ஒத்து போவதை பார்க்கலாம்.

11. bogan R – Google+ – கடல் விமர்சனம் ஜான் ச்டீன்பேக்கின் East of Eden என்றொரு…:

நேரடியாக அறம் போதிப்பதை /விவாதிப்பதை பொதுவாகவே இளைஞர்கள் விரும்புவதில்லை .எதிர் அறம் தான் இன்று மிகப் பெரிய ஆளுமையை அவர்களிடம் செலுத்துகிறது.ஆரண்ய காண்டம் போன்ற படங்கள் பெற்ற பெரிய வரவேற்பைக் கவனத்தில் கொள்ளவும்

12. கடல் – சினிமா விமர்சனம் ~ உண்மைத்தமிழன்:

துளசியின் அறிமுகக் காட்சியிலேயே அவளது லேசான மனநிலை பிறழ்ந்த நிலை அறிமுகப்பட்டிருந்தாலும் பின்னாளில் கலைராணி சொல்லும்போதுதான் நமக்கு உணர முடிகிறது.. படம் பார்த்து 2 நாட்கள் கழித்துதான் இந்தக் காட்சியை மணி ஏன் வைத்திருக்கிறார் என்பதே புரிகிறது..!

13. Narendiran M – Google+ – கடல் வெயிலும் உதிர் மணலும் தினம் மீட்டெடுக்கும் கருவாட்டு…:

“எனக்கு வீட்ல சோறு இல்லை, அதான் விடுதியில சேர்ந்தேன்” – “எனக்கு வீட்ல தியானம் இல்லை. அதை தேடி தான் இங்க சேர்ந்தேன்”என வசனங்களிலேயே கதையின் தளங்களை நிறுவிக்கொண்டே செல்கிறார் ஜெ.எம். உன்னிப்பாக கவனித்தால் குறைந்தபட்சம் அறுபது நாகை வட்டார வசவு சொற்களை கற்கலாம். நாவல் வடிவிற்க்காக காத்திருப்போம்.

14. பிச்சைப்பாத்திரம்: கடல் – மணிரத்னத்தின் Intellectual menopause ..:

தீவிரவாதம்+காதல், நிஜ ஆளுமைகளின் நிழலுருவாக்கம் என்கிற வார்ப்புருக்களின் வரிசையில் மணிரத்னத்திற்கு பிடித்தமானது இதிகாச ரீமிக்ஸ். அவ்வகையில் விவிலியத்தின் சில கூறுகளை எடுத்துக் கொண்டு கிருத்துவப் பின்னணயில் உருவாக்க்கப்பட்டிருக்கும் ‘கடல்

அர்விந்த் தேவனின் மகிமையை தொண்டை நரம்பு புடைக்க உச்சஸ்தாயியி்ல் கத்திச் செல்வதோடு படம் நிறைவு பெறுகிறது.

15. ஆழமும் அலைகளும் அற்ற கடல் | தமிழ் பேப்பர்:

பொருளாதார பலத்தைப் பெற ஆரம்பித்ததும் மேற்கத்திய கிறிஸ்தவ நிறுவனங்கள் எப்படியாகத் தங்கள் மத மதிப்பீடுகளை வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல் ஏற்றுவார்கள் என்பதற்கு சமீபத்தில் வெளியாகும் படங்களே சான்று. கென்னி விக்ரம் – ஜீவா அன்கோவின் டேவிட் என்ற படமும் இதே நாளில்தான் வெளியாகியுள்ளது. விண்ணைத் தாண்டி வருவாயா, பயணம், நான் ஈ, நீர்ப்பறவை, தாண்டவம் என கிறிஸ்தவச் சார்பு படங்கள் சாரைசாரையாக வர ஆரம்பித்திருக்கின்றன. ஏற்கெனவே, பாரதிராஜாவில் ஆரம்பித்து கமலஹாசன் வரை கிறிஸ்தவ மென் சாய்வுடன் பழைய ஏற்பாட்டில் இயங்கிவந்திருக்கிறார்கள்.

இன்னும் பலர்: கடல் – Google Groups

Ravanan Videos

Reviews

Making of Raavanan