இட்லி வடை ஆரம்பித்து பத்தாவது ஆண்டு துவங்கப் போகிறது.
பத்தாண்டுகளாக தமிழ்ப்பதிவுகள் எப்படி இருக்கிறது என்று ரிப்போர்ட் கார்ட் போடலாம். பேருந்து விபத்தில் சென்னை நகரத்தின் பள்ளி சிறுவர்கள் இறப்பது போல் அது அடிக்கடி நடப்பது.
பத்தாண்டுகளில் இட்லி வடை எழுதியதில் பெஸ்ட் எது என்று பார்க்கலாம். டெண்டுல்கர் சதம் அடிப்பது போல் ஆயிரக்கணக்கான பதிவுகளில் நூறு திக்கி திணறி தேறலாம்.
சமகால ஜாம்பவான்களான பேயோன், மனுஷ்யபுத்திரன் போன்ற புனைப்பெயர்களோடு ஒப்பிட்டு அலசலாம். கோகுலாஷ்டமிக்கு கிருஷ்ணர் வேடம் அணிவது பொருத்தம் என்பது போல் இட்லி வடையில் அசுரர்களுக்கு இடம் இல்லை.
அப்படியானால் என்ன செய்யலாம்?
நீங்களும் இட்லி வடையாக ஒன்பது யோசனைகள் கொடுக்கலாம்:
1. தற்பெருமை, சுய அங்கீகாரத்தின் வெளிப்பாடாக அகங்காரம், தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்காத தன்மை, காதல் மன்னர்களின் வசீகரம் என்று அரசியல்வாதிக்கும் வலைப்பதிவருக்கும் உள்ள ஒற்றுமைகள் நிறைய. ஆனால், அரசியலில் வாக்கு கேட்டு வெற்றி பெற்றால்தான் மதிப்பு. வலையில் எழுதினாலே குவியும் வாக்கு.
2. இட்லி-வடை என்பது வாரிசு அரசியல் மாதிரி. முன்னுமொரு மூதாதையர் காலத்தில் இருந்து தியாகி பென்சன் பெற தகுதி பெற்றவர். நேற்றைய பினாமி பாலிடிக்சில் மில்லியனரானது போல் புதிதாக முளைத்தவர் இந்த பூமியில் காலூன்றுவது எப்படி? திண்ணை, சொல்வனம், உயிரோசை எதையும் விட வேண்டாம். ட்விட்டர், பேஸ்புக், பிண்டெரஸ்ட் எங்கும் தோன்றவும்.
3. எனக்கு ரொம்ப பிடித்தமான வினா: ‘எல்லோரும் இப்படி செஞ்சா என்ன ஆகும்?’ – அஞ்சு பைசா அன்னியன் ஆகட்டும்; எனக்கு காரியம் ஆனால் போதும் என்று கூடங்குளத்தை மூடச்சொல்லும் உதயகுமார் ஆகட்டும். உலகில் உள்ள அனைவரும் எனக்கு மட்டும் இது நடந்தால் போதும் என்று நம்பும் மனநிலையை உடைக்கலாம்.
4. எனக்கு நிரலி எழுதத் தெரியும். ஆனால், கணினி ப்ரொகிராமிங் குறித்து எழுதியது ரொம்பக் குறைவு. மொத்தம் ஏழெட்டு பதிவுகளில் இரண்டாயிரம் வார்த்தைகளை தாண்டாது. இந்த மாதிரி நம் துறை சார்ந்து எழுதலாம்.
5. சுவைக்காக தண்ணியடிப்பது ஒரு ரகம். பழக்கத்திற்காக சரக்கடிப்பது ஒரு ரகம். தூக்கத்திற்காக குவார்ட்டர் அடிப்பது இன்னொரு ரகம். எப்பொழுதாவது கம்பெனிக்காக குடிப்பது என் ரகம். நீங்கள் பதிவதில் எந்த ரகம்?
6. சண்டைக் காட்சிகளில் வாத்தியார் மூன்று அடி வாங்கிய பிறகுதான் நிமிர்ந்து திரும்பக் கொடுப்பார். பாவப்பட்ட ஹீரோவிற்கு மவுசு அதிகம். சிண்ட்ரெல்லாவிற்குத்தான் அனுதாப அலை அடிக்கும். எனவே, அவ்வப்போது உங்களை மனிதராக காட்டிக் கொள்ளுங்கள். அடக்கம் அமரருள் உய்க்கும்
7. ஒரே விஷயத்தையே கட்டி அழாதீர்கள். சங்க இலக்கியமாக இருக்கட்டும்; அரசியல் குழாயடிகளாக இருக்கட்டும். கொஞ்சம் உலகம்; நிறைய உள்நாடு; அப்படியே உங்களால் மட்டுமே எழுதக்கூடிய தனியாள் அனுபவங்கள். எல்லாம் கலந்து கட்டி அவியல் மணக்கட்டும்.
8. நாய் என்றால் கரண்ட் கம்பம் பார்த்து ஒன்றுக்கிருக்கும். வலைப்பதிவர் என்றால் மூக்கை நுழைத்து சண்டை போடுவார்.
9. என் மூளை ஔவையார் மூளை. இடது சாரியாக எல்லாவற்றையும் ஒன்று, இரண்டு, மூன்று என பட்டியல் போட்டு அழகு பார்க்கும். ஆனால், இலக்கியவாதிகளுக்கு வலப்பக்க மூளை புனைந்து கவி பாடும். வைரமுத்துவாக இரண்டையும் நன்றாக குழைத்து கருப்பு மை போட்டு வாழ்க! வளர்க!!
//பேருந்து விபத்தில் சென்னை நகரத்தின் பள்ளி சிறுவர்கள் இறப்பது போல் அது அடிக்கடி நடப்பது.//
Bad example. Please correct…