”தமிழில் இப்போது எழுதுபவர்களில் நம்பிக்கை அளிப்பவர்களாக யாரைக் கருதுகிறீர்கள்?”
”ஜெயமோகன். அவருக்கு இருக்கும் அனுபவங்களும் வாசிப்பும் இன்னும் அவரைப் பெரிய உயரங்களுக்குக்கொண்டு செல்லும் என்று நினைக்கிறேன். ஆனால், படைப்புகளைத் தாண்டி அவர் எழுது வதும் பேசுவதும்… ம்ஹூம்…”
அசோகமித்திரனின் கதைகளில் சினிமா குறித்தும் அரசியல் குறித்தும் இலக்கியம் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் இருக்கும். அதையே அவர் நேரடியாக பெயரைக் குறிப்பிட்டு சொல்லி இருந்தால் ஜெயகாந்தன் போல் புகழ் அடைந்திருப்பார். உதாரணத்திற்கு விழா மாலைப் போதில் எடுத்துக் கொள்ளலாம்.
அதில் சொல்லப்பட்டவர்களை அடையாளம் காட்டி ஆங்கிலக் கட்டுரை எழுதி இருக்கலாம். குஷ்வந்த் சிங் மாதிரி கவனம் பெற்றிருப்பார்.
அதை அசோகமித்திரன் விரும்பியதில்லை. அதனால்தான் ‘படைப்புகளைத் தாண்டி எழுதுவதும் பேசுவதும்’ அவருக்கு உவப்பாய் இருக்கவில்லை.
‘செய் அல்லது செய்தவரை சுட்டிக் காட்டு’ விரும்பிகள் ஒரு பக்கம். ‘என் கடன் எழுதி கிடப்பதே’ இன்னொரு பக்கம்.