பரதேசி பாலாவின் படம். டிஸ்னி படம், ஜேம்ஸ் பாண்ட் படம், குவெண்டின் டாரெண்டினோ படம் என்று சொல்வது போல் பாலாவின் படம் பார்த்து கொஞ்ச நாளாச்சு.
ஆறு படம்தான் செய்திருப்பவருக்கு டிரேட்மார்க் இருக்குமா?
கடவுள் நம்பிக்கையை வைத்து ஏமாற்றுபவரை நையாண்டி செய்வது; ஒடுக்கப்படுபவர்களின் பரிதாப நிலையை கதைக்களானாக்குவது; புதிய முகங்களை கதாபாத்திரங்களாக்குவது; இளகிய மனம் படைத்தோரையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சமரசமில்லா காட்சியாக்குவது… இவை இயக்குநர் பாலா பட முத்திரைகள்.
வலிந்து திணிக்கப்பட்ட நகைச்சுவை; சிம்ரன் போன்ற அயிட்டம் பாடல்; இவை எல்லாம் முந்தையவற்றில் துருத்தி நிற்கும்; இங்கே காணோம். ‘பரதேசி’யின் ஒவ்வொரு பாடலையும் திரையில் காண்பித்த விதத்தில் பாலு மகேந்திராவின் கோர்வையும் மணி ரத்னத்தின் செதுக்கலும் ஒருங்கே கிடைக்கின்றன.
எஸ் ராமகிருஷ்ணன் வசனம் எழுதும் படங்களில் சாதாரண தமிழ்ப்பட எழுத்து மட்டுமே தென்படும். ஜெயமோகன் சம்பந்தப்பட்ட படங்களில் மொழி ஆக்கிரமித்து நிற்கும். இரா முருகன் படங்களில் டைட்டிலில் மட்டுமே காணப்படுகிறார். ’பரதேசி’ நாஞ்சில் நாடனோ, “யாருங்க வசனம்” என்று விசாரிக்க வைக்கிறார்.
சமீபத்திய எதிர்பார்ப்புகளான ‘கடல்’ பல கோணங்களில் சென்று அலைபாய்ந்து மூழ்கடித்தும், ‘விஸ்வரூபம்’ சர்ச்சைகளில் மட்டும் பிரமிக்க வைத்தும் ‘நீதானே என் பொன் வசந்தம்’ சாக்லேட் கல்லூரி காதலை மறுஒளிபரப்பியும் குண்டுசட்டி கோடம்பாக்கத்தினுள் ஆமை ஓட்டிய நேரத்தில், உருப்படியான தமிழ் சினிமாவிற்கான அடி பரதேசி.