“‘Zero Dark Thirty’ is an example of a woman’s innate ability to never let anything go.”
இந்த வருட ஆஸ்கார் விருதுகளில் எந்த ஆச்சரியமும் இல்லை. ‘அய்யோ பாவம்’ அனுதாப அலையில் பென் அஃப்லெக்கின் ’ஆர்கோ’ வென்றது. ஜாம்பவான்கள் நிறைந்த துணை நடிகர் பகுதியில் ’ஜாங்கோ அன்செயிண்ட்’ கிறிஸ் வால்ஸ் வென்றார். ‘தி ஹங்கர் கேம்ஸ்’ ஓடுவதற்காக ஜெனிஃபர் லாரென்ஸ்; கதாபாத்திரமாகவே வாழ்வதற்காக டேனியல் டே லூயிஸ்…
இயக்குநரில் மீண்டும் யார் வெல்வார் என்பதில் ’லைஃப் ஆஃப் பை’ ஆங் லீ வென்றது மட்டும் விதிவிலக்கு.
‘நான் முடி வெட்டிக் கொண்டேனாக்கும்’; ‘நான் இருபது கிலோ எடையை குறைத்தேனாக்கும்’; ‘நான் சரிகமபதநிச பாடக் கற்றுக் கொண்டேனாக்கும்’; ‘நான் அழகை கம்மியாக்கி உங்களுக்காக வாழ்ந்தேனாக்கும்’ என்று IIPM அரிந்தம் சவித்ரி போல் சந்தைப்படுத்தியே வென்ற ஆன் ஹாத்வே ஆட்டத்தில் சேர்த்தியில்லை.
விருது வென்றவர்களில் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் இருக்காது என்பதால், விழாவைத் தொகுத்தவரை அதிர்ச்சிகள் தர வைத்தார்கள்.
முன்னாள் தொகுப்பாளர்களான ஸ்டீவ் மார்ட்டின் போன்றோர் படு சைவம். தாத்தா/பாட்டியினரை ஆஸ்கார் பார்க்க வரவழைப்பார். ஆனால், பழங்கால தலைமுறையினரால் எதையுமே வாங்க வக்கில்லை. அவர்கள் வேஸ்ட்.
நடுவாந்தரமாக பில்லி கிறிஸ்டலும் ஜான் ஸ்டூவர்ட்டும் தொகுத்து வழங்கலாம். அந்தத் தலைமுறையினர் ஸாம்சங் கேலக்சி எஸ்4 எல்லாம் வாங்குவதில்லை.
குழந்தைகளுக்கான ‘ஹாப்’, ’ஆல்வின் அண்ட் தி சிப்மன்க்ஸ்’ போன்ற படங்களிலும் டிஸ்னியின் இனிப்பான சினிமாக்களிலும் அணிலும் கரடியும் மழலை பேசும். அதே போன்ற பொம்மைக் கரடியை டோப் அடிக்க வைத்தால் எப்படி இருக்கும்? பெரியவர்களின் வசை மொழியும் அலுப்பும் நிறைந்த வாழ்க்கையை சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கும் பொம்மைக் கரடிக்கு கொடுத்தால் எப்படி இருக்கும்? அதுதான் Ted.
அந்த ‘டெட்’ படத்தை இயக்கி, கரடி பொம்மைக்கு குரல் கொடுத்தவர்தான் இந்த வருட அகாதெமி விருது தொகுப்பாளர்.
பெண்களைக் கிண்டலடிப்பதும், விடலைத்தனமாக ஜொள்ளு விடுவதும், பேசப்பெறாத விவகாரங்களை முகத்திலறைவதும் திரைப்படத்திற்கு பொருந்தும்; ஸ்டாண்ட அப் காமெடியில் பொருந்தும். சுய எள்ளலும் புனிதங்களே அற்ற தன்மையும் பதின்ம வயதினருக்கு எப்பொழுதும் பொருந்தும். எனவே, யூத்திற்கு சேத் மெக்ஃபார்லேன் நகைச்சுவை பிடித்திருக்கும்.
பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்திருந்த பாம்பே ஜெயஸ்ரீ பாடாததை விட இது ஒன்றும் பெரிய குறை அல்ல.