ஆலிஸ் மன்ரோ குறித்து பல முறை கேட்டு இருந்தாலும் முதன்முறையாக அவரின் சிறுகதைத் தொகுப்பில் சில கதைகளை வாசித்தேன். வழக்கம் போல் ‘டூ மச் ஹேப்பினெஸ்’ புத்தகத்தில் ஆங்காங்கே கிடைத்த சிலதை மட்டுமே படித்தேன்.
உரையாடல் இருக்கிறது. கரடு முரடான பல்லுடைக்கும் சிறுபத்திரிகை நடை கிடையாது. சமூகப் பிரச்சினைகள கூட த்ரில்லர் போல் எப்படி முடிக்கப் போகிறார் என்று எதிர்பார்க்க வைக்கிறது. விநோத மனிதர்களின் வித்தியாசங்களை நியாயப்படுத்தாமல், அவர்கள் தரப்பின் எண்ணங்களை விதைக்கிறது.
அறம் பாடாமல் அறம் எழுதுவது எப்படி என்றும் நேர்மையாக எழுதினால் அலுப்பு தட்டும் என்பதை உடைப்பது எப்படி என்றும் கிரிமினல்களின் வாழ்க்கையை விவரித்தால் ஒரு பக்கம் மட்டும் சொல்லாமல் மறுபக்கங்களையும் செண்டிமெண்ட் கலக்காமல் உணர்ச்சிகரமாக சொல்வதெப்படி என்றும் அறியலாம்.