ராகா.காம் செய்யும் மிக உத்தமமான காரியம் என்பது நான்-ஸ்டாப் கன்னலில் பாடல்களை தொடர் ஒலிபரப்பாக கோர்ப்பதுதான். ஒரு நாள் சந்திரபாபு, இன்னொரு நாள் இசையமைப்பாளர் வேதா, என்னும் வரிசையில் இன்று கிளாசிக்ஸ் ஓடிக் கொண்டிருந்தது.
அப்பொழுது வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் கொத்தமங்கலம் சுப்பு எழுதி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ‘வெற்றிவேல்… வீரவேல்’ கிடைத்தது.
பல நல்ல புறநானூறு பாடல்களையும் பரணி பாடிய வரலாற்றையும் எழரை நிமிடத்திற்கான நாடகக் காட்சியாக ஒருங்கிணைத்திருக்கிறார்கள். சட்டென்று ‘பிரேவ் ஹார்ட்’ திரைப்படத்தை நினைவிற்கு கொண்டு வந்தது.
ஸ்காட்லாந்து மக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக ஏன் சண்டை போட்டார்கள்? போர்களுக்காக வில்லியம் வாலஸ் எவ்வாறு மக்களை சேர்த்தார்? Offence is the best defense என்பதை தற்கால விளையாட்டு பயிற்றுநர்களுக்கு, அக்கால வரலாறு கொண்டு விளக்கிய படம். மெல் கிப்சன் நடித்த ’பிரேவ்ஹார்ட்’டில் சிலந்தியைப் பார்த்து விடாமுயற்சியைக் கற்றுக் கொண்ட ராபர்ட் ப்ரூஸும் இருந்தார்.
இரண்டுமே பிரும்மாண்டமான போர்ப்படங்கள். வில்லன்களாக அரசர்களைக் கொண்டவை. காதல் நிறையவே உண்டு. இரண்டு நாயகிகள் கொண்ட கதை. வீரதீரம் நிறைந்த நாயகன். 1958ல் தமிழில் வெளியான ‘வ.கோ.வா.’ சூப்பர் ஹிட். ப்ரேவ்ஹார்ட்டும் நல்ல வசூல் கொடுத்தது.
மீண்டும் இந்த மாதிரி சரித்திரத்தையும் மசாலாவையும் தேசப்பற்றையும் சரியாக மிக்ஸ் செய்யும் மசாலாக்கள் எப்பொழுது வரும்?
இந்தப் படத்தில் வரும் வைஜயந்தி மாலா, பத்மினியின் நடனமும் இதன் வெற்றிக்குக் காரணம். இருவருக்கும் இருந்த கடுமையான பகையினால் ரொம்பவும் கஷ்டப் பட்டு இந்தப் பாடல் காட்சியை படமெடுத்ததாக படித்திருக்கிறேன்.
நல்லதொரு மலரும் நினைவு – கூடவே ஒரு ஆதங்கத்தையும் பதிவு செய்திருக்கிறீர்கள்!