Tag Archives: Jayamohan

பொன்னியின் செல்வன் – இரண்டாம் பாகம்

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் தேவலாம்.
அதாவது ரஜினியின் ‘பாபா’ படத்தைப் பார்த்த பிறகு ‘சந்திரமுகி’ தேவலாம் என்று தோன்றுமே… அந்த மாதிரி தேவலாம்!

கல்கியின் ‘நந்தினி’ என்ன ஆனாள்? பொன்னியின் செல்வன்/முடிவுரை – விக்கிமூலம் (wikisource.org)

ஆபத்துதவிகள் பாண்டிய ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் முயற்சிகளில் மேலும் ஈடுபட்டு வருகிறார்கள். நந்தினி உயிரோடு இருந்த வரையில் ஆதித்த கரிகாலனுடைய அகால மரண இரகசியம் பற்றி விசாரிக்கப்படவில்லை. அதில் நந்தினியின் பெயரும் வரும் என்ற காரணத்தினால்தான். நந்தினியின் மரணத்துக்குப் பிறகு, இராஜராஜ சோழன், ரவிதாஸன் முதலிய ஆபத்துதவிகளைக் கைப்பற்றித் தண்டனை விதித்து அவர்களுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் கட்டளை பிறப்பிக்கிறான்.

நந்தினி அமரபுஜங்கன் இறந்த பிறகு தானும் உயிர் துறக்கிறாள். அதற்கு முன்னால் அவளை இராஜ ராஜ சோழர் சந்திக்கிறார். அவரிடம் தன் பிறப்பைக் குறித்த உண்மையையும், கரிகாலனின் மரணத்தைப் பற்றிய உண்மையையும் கூறிவிட்டு இறக்கிறாள்.

ஆனால், ஜெயமோகன் என்ன செய்து விடுகிறார்?

அந்த மாதிரி ஒரு தைரியசாலி சட்டென்று முடிவை எடுத்து விடுவதாகச் சொல்கிறார். நந்தினியைப் போன்று பல்வேறு சிக்கல்களை சாதுரியமாக எதிர்கொண்ட கதாபாத்திரம் அவ்வாறான இறுதியைத் தேடிக்கொள்ளும் என்பது மஹாபாரதத்தை வெண்முரசாக்கிய போதும் மாற்றப்பட்டது போல் இங்கும் பெண்களுக்கான அவருடைய பொதுமைப்படுத்திய சிறுமையாக்கம்.

சில அசல் வசனங்களும் அதற்கு ஆசானின் அசல் எண்ணங்களும்:

அசல்: குதிரை உங்களுடையதாக இருக்கலாம்; காடு என்னுடையது.
ஆசான்: கதை கல்கி உடையதாக இருக்கலாம்; கோணி என்னுடையது.

அசல்: மக்களை நம்பாதவன் மக்களை ஆள முடியாது.
ஆசான்: வாசகரை நம்பாதவன் வாசகரை வரவழைக்க முடியாது.

அசல்: அரசர் அறம் தவறினால் மக்கள் எப்படி இருப்பார்கள்?
ஆசான்: நான் அறம் உபயோகிக்காவிடில் மக்கள் எப்படி என்னை நினைப்பார்கள்?

பல இடங்களில் #PS2 இன்ன பிற படங்களையும் பாடல்களையும் நினைவுக்கு மீட்டன. #பொசெ2 -க்கு என்று தனித்துவமான மனதில் நிற்கும் காட்சி என்றால் ஒன்றே ஒன்றுதான்: கடம்பூர் மாளிகைக்குள் அபிமன்யு போல் தன்னந்தனியே குதிரை மேல் எகத்தாளமோடு சுற்றி நிற்கும் சிற்றரசர்களிடமும் பாட்டா-விடமும் ஆதித்த கரிகாலன் பொங்கி கர்ஜிக்கும் இடம்.

மற்ற எல்லா காட்சியமைப்புகளும் கதாபாத்திரங்களும் வுட்வர்ட்ஸ் கிரைப்வாட்டர் தேய்வழக்காக, ஃப்ரிட்ஜ் கஞ்சியாக, ஏற்கனவே எங்கேயோ பார்த்த குரலாக, முன்பெங்கோ கண்ட காட்சியாக இருக்கிறார்கள்.

என் பங்கிற்கு:
1. நெஞ்சில் ஓர் ஆலயம்
2. பாசமலர்
3. 96
4. திரிசூலம்

உங்களுக்கு என்னவெல்லாம் படம் நினைவிற்கு வந்து தொலைத்தது?

PS1 | Snap Judgment (snapjudge.blog)

வளநீர்ப் பண்ணையும் வாவியும்

”சின்னச் சின்னக் குற்றங்கள்” என்னும் தலைப்பைத்தான் முதலில் தேர்ந்தெடுத்திருந்தேன். அது எதிர்மறை என்பதால் வேறு தலைப்பிற்கு மாறிவிட்டேன். ஏன் அந்தத் தலைப்பை முன்வைக்க நினைத்தேன்? ஏன் அப்படிப்பட்ட அனுபவத்தை முன்னிலையாக்க எண்ணினேன்?

நான் ஓர் அக்மார்க் இண்ட்ரோவெர்ட். விக்சனரி பாஷையில் சொல்வதானால் “தன்னைப் பற்றியே எண்ணுபவன்”. எனவே முகாமிற்கு வந்த ஒவ்வொருவரைப் பற்றிய சிறுகுறிப்புடன் தொடங்குவது சாலச் சிறந்தது.

முதற்கண்ணாக ஏற்கனவே அறிமுகமானவர்கள். அவர்களில் முதன்மையாகத் தெரிந்தது பழனி ஜோதியும் மகேஸ்வரியும். எனக்குப் பெயர்கள் மறந்து விடும். முகங்கள் நினைவில் தங்கும். மகேஸ்வரியை ஓட்டுநர் என்று அறிந்து வைத்திருந்தேன். நியூ ஹாம்ப்ஷைருக்கு ஜெயமோகன் உடன் சென்றபோது கும்மிருட்டில் அலுங்காது குலுங்காது தூங்காது கொண்டு சேர்த்தவர். அவரின் சாரதித்தன்மை தெரிந்திருந்தாலும் எங்கு பார்த்தோம் என்று தடுமாறி ஓரளவு சமாளித்து மீண்டும் அறிமுகம் செய்து கொண்டேன். இவர்கள் இருவரும் பாடல் பெற்ற வாசகர்கள். அவர்களை ஜெயமோகன்.இன் தளத்திலேயே அறியலாம்.

அடுத்தவர் சிஜோ. இவர் இன்றைய சாரதி. கஷ்டமான மொழியாக்கம் என்றால் “கூப்பிடு சிஜோவை!” என்று சொல்வனம் பதிப்புக் குழுவினால் பரிந்துரைக்கப்படுபவர். இந்த பூன் முகாமிற்கு வெளியூரில் இருந்து வந்தவர்களை பத்திரமாகக் கொண்டு சேர்த்தவர்களில் ஒருவர்.

இன்னொரு ஓட்டுனர் தாமோ எனப்படும் தாமோதரன். இவரும் அட்லாண்டாக்காரர். தன் காரை இசை-ரதமாக ஆக்கியவர். சிஜோ-வையும், விபி எனப்படும் வெங்கட் பிரசாத்தின் அழைப்புகளையும் கவனித்துக் கொண்டே பின்னால் நடக்கும் தாளக் கச்சேரியையும் ஒருங்கிணைத்த மேஸ்ட்ரோ.

நிறைய வெங்கட்கள் இருப்பதாலோ விஐபி என்பதன் சுருக்கமாகவோ, வி.பி. என்று அழைக்கப்படும் வெங்கட்பிரசாத் வீட்டில் நளபாக உணவு கிடைத்தது. இதை கொண்டாட்டத்தின் துவக்கம் எனலாம். முதன் முதலாக சக பயணிகளின் அறிமுகமும் உரையாடலும் கூடவே அமர்க்களமான விருந்தும் கிடைத்தது. சின்ன வெங்காயம் போட்ட கார குழம்பு, பூசணிக்காய் கிடைக்கும் அரைத்து விட்ட சாம்பார், மிளகும் தக்காளியும் போட்டி போட்ட சூடான ரசம், சிறிது சிறிதாக வெட்டப்பட்ட உருளைக் கறி, சுரைக்காய் கூட்டு, கெட்டித் தயிர், ஊறுகாய் என அனைத்தையும் கபளீகரம் செய்த பிறகு இரண்டு டம்ளர் பருப்பு பாயாசம் என்று கனஜோரான வீட்டுச் சமையல் போஜனத்தில் விழாவைத் துவக்கி களைகட்ட வைத்தனர் விபி தம்பதியினர். விபி ஒரு கவிஞர்.

இவ்வளவு முக்கியமான சாரதிகளைச் சொல்லிவிட்டு, சாரதியைச் சொல்லாவிட்டால் எப்படி? “நீங்க கிஷோர்தானே?” என்று அவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். அவர் சாந்தமாக புன்னகையுடன் “நான் சாரதி.” என்றார். வழக்கம் போல் எதற்கும் உதவாத “மன்னிக்கவும்.” உதிர்த்துவிட்டு என் ஆர்பாட்டப் பேச்சைத் தொடர்ந்தேன். இந்த சாரதி என் பெட்டியை விமான நிலையம் முழுக்க சுமந்தவர். கலிஃபோர்னியாக்காரர். தலபுராணங்கள் எதன்பொருட்டு?, ஓநாய்குலச் சின்னம் என கடிதங்கள் எழுதியவர்.

சாரதியின் பேட்டைக்கு பக்கத்திலேயே வசிப்பவர் சாரதா. விவாதங்களில் பங்கெடுத்தவர். தன் கருத்தை வெளிப்படையாக பதிவு செய்தவர். அமெரிக்க பண்பாட்டையும் இந்தியாவில் வாழாவிட்டாலும் பட்டிக்காட்டான் போல் குட்டி பாரத்தை உருவாக்கி அதில் மட்டும் பவனிவரும் தேஸி கலாச்சாரத்தையும் அவர்களுக்குப் பிறந்த இந்திய-அமெரிக்க குழந்தைகளின் குழப்பங்களையும் வினாக்களாகத் தொடுத்தவர்.

முக அடையாளம் நன்றாக ஞாபகம் இருக்கும் எனச் சொல்லிக் குழப்பிக் கொண்ட கிஷோர் – கனெக்டிகட் வாசி. சாரதிக்கும் இவருக்கும் ஆறு வித்தியாசத்திற்கும் மேல் இருக்கும். ஒற்றுமைகள் எனப் பார்த்தால் இருவரும் கண்ணாடி அணிந்திருந்தனர். இருவரும் கவனிப்பவர்கள். உள்வாங்குபவர்கள். அமைதியானவர்கள்.

சிஜோ அழைத்து வந்த பட்டாளத்தில் எங்களுடன் இணைந்தவர் கண்ணப்பன். துடிப்பானவர். நான்கைந்து கார்கள் சார்லட் நகரத்தில் பூன் மலைவாசஸ்தலத்திற்கு கிளம்பின. இதில் பயணித்த இருபதிற்கும் மேற்பற்பட்டவர்களின் விண்ணப்பங்கள். ”ஸ்டார்பக்ஸ் போகலாம்!”, “குடிநீர் வாங்கலாம்!”, “அவசரமாக ஒன்றுக்கு வருகிறது”, என்னும் கோரிக்கைகளை காதில் வாங்கிக் கொண்டு செல்பேசியையும் இன்னொரு காதில் வைத்து பேசிக் கொண்டு அதே செல்பேசியில் செல்லுமிடத்திற்கான வழித்தடத்தையும் காண்பித்தவர். நிறைய வினாக்களுடன் உண்மையான மாணவராக ஆசான் முன் கைகட்டி நின்று கவனித்தவர்.

டாலஸ் பாலாஜி. இவர் ஏ.டபிள்யூ.எஸ். (AWS) கஞ்சுகம் அணிந்திருந்தார். என்னுடன் தன் படுக்கையை பாதியாக விட்டுக் கொடுத்துப் பகிர்ந்தவர். என் குறட்டையை பொருட்படுத்தாது இன்முகத்தோடு அடுத்த நாளும் சிரித்து, மீண்டும் என்னுடன் துணிந்து உறங்கிய தைரியசாலி.

இசையமைப்பாளர் ராஜன். முதல் இரு ஜெயமோகன் வருகைகளை முன்னின்று கவனித்தவன் நான் என்றால், சமீபத்திய இரு வருகைகளை செவ்வனே செய்பவர் ராஜன். விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவர். வெண்முரசு பிள்ளைத்தமிழுக்கு சங்கீதம் இயற்றியவர்.

மியாமியில் இருந்து இன்னொரு ராஜன். ஜெயமோகனுக்காக… ஆசானை சந்திப்பதற்காக மட்டும்… பிரத்தியேகமாக குருவின் குரலைக் கேட்பதற்காக… என வந்தவர்கள் பெரும்பாலானோர். அவர்களின் பிரதிநித்துவம் இவரைப் போன்றோர்.

விபி வீட்டில் ஸ்ரீகாந்த் அறிமுகமானாலும் அவரின் புல்லாங்குழல் திறமை பின்னரே தெரியவந்தது. சினிமாப் பாட்டு, கர்னாடக சங்கீதம், பஜன்கள் என்று எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுக்கும் விரல்களும் பான்சூரியும் நிகழ்வின் ஒவ்வொரு பகுதியின் துவக்கத்தில் ஒலிக்கும் பாடலுக்கும் சூழலுக்கும் இனிமையைக் கொணர்ந்தது.

இனி சற்றே கொத்து கொத்தாக வந்தவர்களைப் பார்க்கலாம்.

வெண்முரசு ஆவணப்பட மொழிபெயர்ப்பில் பெரும் பங்காற்றியவர் என நான் அறிந்திருந்த ரெமிதா சதீஷ். ஜெயமோகன் தளத்தை சற்றே தேடிய பிறகு, பல்வேறு மொழியாக்கங்களை ரமிதா சிறப்பாக செய்து வெளியிடுவது தெரிய வந்தது. சிரித்த முகமும் மோனப் புன்னகையும் தவழவிட்ட ராலே ரவி. விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக நடத்திய முத்து காளிமுத்து. ஏற்கனவே செய்த சொல்வன மொழிபெயர்ப்புகள் மூலமாகவும் நன்கு அறிமுகமானவர் முத்து. பூன் முகாமில் உணவும் உபசரிப்பும் சிறக்க இன்னொரு முக்கிய காரணமான விவேக்கும் வட கரோலினாகாரர்.

இவர்கள் உள்ளூர் படை என்றால், தமிழ்.விக்கி திறப்புவிழாவைத் தொடர்ந்து வந்த வாஷிங்டன் டிசி, மேரிலாந்து மாகாணம் மற்றும் வர்ஜினியா மாநிலக்காரர்கள் பெரும்சேனை. ஆசான் முதன் முறை அமெரிக்கா வந்தபோது வரவேற்று விருந்தோபியவர்கள் வேல்முருகன் பெரியசாமியும் நிர்மல் பிச்சையும். இருவரும் பல தசாப்தங்களாக ஜெயமோகனை வாசித்து பின் தொடர்பவர்கள். பாசக்கார மகேந்திரன் பெரியசாமி. யோகா குறித்து கட்டுரை மட்டுமல்ல காலையில் யோகம் செய்து காண்பித்த விஜய் சத்தியா. ரவியும் அவரின் மனைவி ஸ்வர்ணலதாவும் தத்தமது அறிமுகத்தில் ஆழமாக அசத்தினார்கள். என் வாசிப்பெல்லாம் ஒன்றுமேயில்லை என எண்ணவைக்குமளவு நேர்த்தியான வாசகர்கள் நிறைந்த சபை என்பதை உணர்த்தினார்கள்.

வந்தவர்களை நிறுத்திவைத்துவிட்டு, கொஞ்சம் மூச்சு வாங்கி தமிழ்.விக்கி குறித்து பார்ப்போம். ஒரு பக்கம் கூகுள் தேடுபொறியில் எதைத் தேடினாலும் முதல் முடிவாக வரும் தமிழ் விக்கிப்பீடியா. இன்னொரு பக்கம் காலச்சுவடு, உயிர்மை, சொல்வனம் போன்ற அதிகாரமையங்கள். இவர்களுக்கு நடுவாந்தரமாக திரிசங்கு சொர்க்கம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பூமியிலிருந்து சொர்க்கத்துக்கு தன்னுடைய உடலுடனேயே போக முயற்சித்தானாம் திரிசங்கு என்கிற மன்னன். ராஜா திரிசங்குவை தமிழர் என வைத்துக் கொள்ளுங்கள். சொர்க்கத்துக்கான யாத்திரையில் பாதிவழியிலேயே அவனுக்கு விசா கொடுக்காமல் நிறுத்தி விட்டாராம் சொர்க்கத்தின் அதிபர் இந்திரன். இந்திரனை கூகிள் எனக் கொள்ளவும். பூமியை விட்டு வெளியேறி விட்டதால் மீண்டும் பூமிக்கும் திரும்ப முடியவில்லையாம் திரிசங்குவால். அந்தரத்திலேயே இருந்த அவனுக்கு தன் தவ வலிமையால் தனி சொர்க்கத்தை விஸ்வாமித்திரர் உருவாக்கிக் கொடுத்தாராம். விசுவாமித்திரரை ஜெயமோகன் எனலாம். இதைத்தான் திரிசங்கு சொர்க்கம் என்கிறது புராணக் கதை. இந்தக் காலத்தில் தமிழ்.விக்கி. அந்தத் திரிசங்கு சொர்க்கத்தில் கரப்பான் பூச்சிகளைத் தோற்றுவிக்கிறார் கௌசிகர். அங்கே எலிகளையும் பல்லிகளையும் உருவாக்குகிறார் பிரும்மரிஷி. இந்த திரிசங்கு போல் இங்குமில்லாமல் அங்குமில்லாமல் நடுவில் இருக்கிறது தமிழ்.விக்கி என்பது என் எண்ணம்.

சாதாரண மக்கள் தங்களுக்கானத் தேடல் முடிவுகளைச் சென்றடைய கூகிள் உதவுகிறது. கூகுள் தளத்திற்கு அதிகாரபூர்வ விக்கிப்பீடியா மிகவும் பிடித்திருக்கிறது. எனவே, கூகிளில் எதைத் தேடினாலும் முதன்முதல் முடிவாக விக்கிப்பிடியாவை வரவைக்கிறது. அந்த கூகிள் உதவியில்லாமல் தமிழ்.விக்கி முதல் பக்கத்தில் சாதாரணத் தமிழரின் கவனத்திற்கு வரவே வராது. கூகுள் தளமே க்னால் (knol), கீன் (keen) என்று பல்வேறு முயற்சிகளில் சோதனை செய்கிறது. அவர்களின் ஆசி, அதாவது அசல் ப்ரம்மரிஷியான வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பெறாவிட்டால் தமிழ்.விக்கி தளத்திற்கு சொர்க்கலோகம் கிட்டாது.

ஏன் வசிஷ்டர் கூகுள், புதிய தமிழ்.விக்கியை கைகொடுத்து வரவேற்க மாட்டேன் என்கிறது? நவீன விருட்சம் அழகியசிங்கர் தினசரியைத் துவங்குவார். கௌதம சித்தார்த்தன் ஆலா என்னும் நிரலியை புழக்கத்தில் விடுகிறார். 25க்கும் மேற்பட்ட இலக்கிய பத்திரிகைகள் இணையத்தில் தீவிரமாக இயங்குகின்றன. இவற்றில் எது கொந்தர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு உங்களின் கணினியை பாதிக்காது என்பதையும் கூகுள் கண்காணிக்க வேண்டும். இந்தத் தளங்களில் எதில் உள்ளடக்கம் சீரழிந்து சற்றே மோசமான ஆக்கங்களை உள்ளீடு செய்கிறார்கள் என்னும் தரக்கட்டுப்பாடும் தேவை. அதே சமயம் தினசரி புதுசு புதுசாக, வித விதமாக, வெவ்வேறுத் தலைப்புகளில் தனித்துவமான விஷயங்களைக் கொடுக்கிறார்களா என்றும் பார்க்க வேண்டும். பணத்திற்காக விளம்பரங்களை விஷயங்கள் என்று விற்கிறார்களா என்றும் யோசிக்க வேண்டும். இப்படியெல்லாம் நாள்தோறும் எல்லாவற்றையும் மேய்த்து தன் சக்தியை வீணடிப்பதற்கு பதிலாக விக்கிப்பிடியாவிற்கு தன் முடிவுகளை குத்தகைக்கு விட்டிருக்கிறது கூகுள்.

ஜெயமோகனின் நண்பரான வேதசகாயகுமார் விட்டுவிட்டதை ஜெயமோகன் கையில் எடுத்திருக்கிறார்:

தமிழ் விமார்சனக் கலைக் களஞ்சியம், தமிழ்ப் புனைகதைக் களஞ்சியம், சங்க இலக்கியக் கலைக் களஞ்சியம் என்ற மூன்று கலைக் களஞ்சியங்களை உருவாக்கத் திட்டமிட்டார் குமார். தமிழ் விமர்சனக் கலைக் களஞ்சியம் பல்கலைக்கழக மானியக் குழு நிதி உதவியுடன் நிறைவு பெற்றது. அவருடைய கல்விப் பணியில் இது முக்கியமானது.

பொன்னீலன்

அது வேறு சிக்கல். இன்னொரு தடவை விரிவாக அரசியலும் சமூகப் போரும் தனித் தமிழ்ப் போராளிகளின் நிலையையும் பல்கலைக்கழகப் பதவி போட்டியும் கலந்து ஆலோசிக்க வேண்டிய ஒன்று. அதற்குள் இன்னொரு நாள் செல்லலாம்.

மீண்டும்… பூன் காவிய முகாமிற்குள்ளும் அங்கே பங்கு பெற்றவர்களுக்குள்ளும் செல்லலாம்…

டெக்சாஸில் இருந்து வந்தவர்கள் தனித்தனியாக வந்ததாலோ என்னவோ தனித்துவம் கொண்டிருந்தார்கள். கிதார் வாங்கபோவதாக மிரட்டி கைக்கு அடக்கமான வாத்தியப் பொட்டி வாங்கி அதை வாசித்தும் அசத்திய ஸ்கந்தநாராயணன். இரண்டாம் நாள் புகைப்படங்களில் ஒவ்வொருவரையும் தனித்தனியே அழகழகாக சுட்டுத் தள்ளிய கோபி. பண்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பாளராக நன்கு அறிமுகமான ஹூஸ்டன் சிவா.

டெட்ராயிட்டில் இருந்து வந்தவர்கள் இன்னொரு இனிய குழுமம். திருச்செந்தாழையின் கதையான ஆபரணத்தை அறிமுகம் செய்த மதுநிகா. எல்லோருடனும் இயல்பாக கலந்து பழகி வாய் நிறையப் பேசிய மேனகா. ஒளி ஓவியரும் மண்டலா கலைஞரும் இனிய குரல் கொண்ட பாடகருமான டெட்ராயிட் சங்கர்.

கலிஃபோர்னியாவில் இருந்து வந்த பெருங்கூட்டத்தில் பெரும்பாலானோரை ஏற்கனவே அறிமுகம் செய்து கொண்டோம். அவர்களைப் போலவே புத்தரைப் போன்ற சாந்தத்துடனும் அதே ஆனந்தர் போல் ஆழமான அவதானிப்புகளுடன் பழகிய சன்னிவேல் விஜய்.

அடுத்து தம்பதி சமேதராக வந்தவர்களைப் பார்க்கலாம்.

விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான ஆஸ்டின் சௌந்தரும் அவரின் மனைவி ராதாவும். காற்றின்நிழல் மூலமாகவும் வெண்முரசு ஆவணப்படம் மூலமாகவும் நன்கு அறிமுகமானவர்கள். முதல் முறையாக நேரில் பார்க்கிறேன்.

ஜெகதீஷ் குமாரும் அவரின் மனைவி அனுஷாவும். ஆங்கிலத்தில் பல கதைகளை மொழிபெயர்த்து அவற்றை பல்வேறு பத்திரிகைகளில் வெளியிட்டவர் என ஜெகதீஷை அறிந்து வைத்திருந்தேன். அனுஷா அவர்கள் முதல் நாள் புகைப்படங்களை சுட்டுத் தள்ளினார். இருவரும் கல்யாணத்திற்கு வந்தது போல் பாரம்பரிய ஆடைகளில் வளைய வந்தது முகாமிற்கு திருவிழா கோலத்தைக் கொடுத்தது.

விசுவும் அவரின் மனைவி பிரமோதினியும். இவர்கள் இருவரும் ஜெயமோகனோடும் அருண்மொழியோடும் அமெரிக்கா நெடுக பயணிக்கப் போகிறவர்கள் என்றவுடன் காதில் பெரும்புகை கிளம்பியது.

அதே போல் அந்த தொடர் பயணத்தில் காரில் கூட செல்லப் போகிறவராக ஸ்ரீராம் அறிமுகமானார்.

கடைசி அங்கமாக இந்த கால்கோள் முகாமில் பேசியவர்களில் சிலர்.

மெம்ஃபிஸ் செந்தில் கம்பராமாயணப் பாடல்களை வாசித்து விளக்கினார். கவிதைகள் குறித்து பாலாஜி ராஜு.

இறுதியாக என்னை பூன் முகாமிற்கு கொண்டு சேர்த்த ஷங்கர் பிரதாப். உடன் பயணித்த மதன். மற்றும் திரும்பும் வழியில் அமரிக்கையாக முதன்மையான கேள்விகளைத் தொடுத்து பயணத்தை சுவாரசியமானதாக்கிய ஓவியர் அருண். செல்பேசி உரையாடல்களில் மூலமே அறிமுகமாகியிருந்த பிரகாசம். இவர்கள் மீண்டும் மீண்டும் என்னைத் தரைக்குக் கொணர்ந்தவர்கள். உனக்கும் மேலே உள்ளவர்கள் கோடி… நினைத்துப் பார்த்து நிம்மதியை நாடு என்னும் தத்துவத்தை பூடகமாக தங்களின் வாசிப்பினாலும் (மதன், சியாட்டில் ஷங்கர் ப்ரதாப் போன்றோர்), திறமையினாலும் (ஓவியக்கார அருண், ஓளி ஓவிய கலைஞரான மிச்சிகன் சங்கர நாராயணன் போன்ற படைப்பாளிகள்), ஹூஸ்டன் சிவா போன்ற திறமையான முழுமையான மொழியாக்க வல்லுநர்களும் என் போதாமையையும் போக வேண்டிய தூரத்தையும் தங்களின் செயல்திறமையினால் விளக்கினார்கள்.

விடுபட்டவர்கள் மன்னிக்க வேண்டும். அவர்கள் மட்டுமே ஜெ என்னும் ஆளுமையின் முழுமையான சொற்பொழிவுக்கும் ஈர்க்கும் வசீகரத்திற்கும் உட்பட்டவர்கள்.

மீண்டும் தலைப்பிற்கே வந்துவிடலாம். ஜெயமோகனின் புகழ் பெற்ற பிரிவுகளில் ஒன்று – டால்ஸ்டாயும் தாஸ்தவெய்ஸ்கியும். ஒருவர் நல்லவர்களைப் பார்ப்பவர். இன்னொருவர் எதிலும் எல்லாவற்றிலும் குற்றங்களை நுணுக்கி நுணுக்கி தெரிந்து மகிழ்பவர். அறம் அற்ற இந்தியர்களை எங்கும் காண்கிறேன். குப்பையை அப்படியே வீசுவது. மாற்றுத் திறனாளிக்கான கார் நிறுத்துமிடத்தைத் திருடுபவர். பத்து பைசா அதிகம் கொடுத்தால் தன் விசுவாசத்தை இன்னொருவருக்குத் தந்துவிடும் முதலிய வழிபாட்டாளர். பற்பசை திருடுபவர்.

கூட்டம் என்பது மந்தை. திரள் பொதுசனம். அதில் இருந்து எது ஒருவரை வித்தியாசப்படுத்துகிறது?

அவர்கள் மேற்சென்று தங்கள் திறமையை செயலூக்கமாக்குகிறார்களா? ஒரு renaissance போல் மறுமலர்ச்சி போன்ற குறுகியவட்டத்தில் தளத்தில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு ஒரு கூட்டத்தை, ஒரு நாட்டை, ஒரு பிரதேசத்தை, தங்களின் ஈர்ப்பு விசையால் ஆகர்ஷித்து மேற்கொணர்ந்து முன்னகர்த்துகிறார்களா? ஆசானையும் குருவையும் வெறுமனே போஷிக்காமல், அவரின் லட்சியங்களையும் அவரின் குணாதிசயங்களையும் கடைபிடித்து, அவரின் சித்தாந்தங்களை உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக செயல்படுத்துகிறார்களா?

இங்கே குழுமியவர்களில் படத் தயாரிப்பாளர்கள் இருந்தார்கள். திறமையான இசைக் கலைஞர்கள் பலரும் பங்கு பெற்றார்கள். நிர்வாகமும் எல்லோரையும் கட்டி மேய்க்கும் அதிகாரமும் கொண்டவர்கள் விழாவை வெகு சிறப்பாக நடத்திக் காட்டினார்கள். ஓவியர்கள், சித்திரக்காரர்கள், கலைநயம் மிக்க புகைப்படக்காரர்கள், என்று தங்கள் பணிபுரியும் அறிவியல், பொறியியல், கணிதம், நிதி நிர்வாகம், மேலாண்மை போன்ற துறைகள் தவிர்த்து பரிமளிக்கும் வித்தகர்கள் இருந்தார்கள். பலரும் பண்பட்ட எழுத்தாளர்கள்.

பொது யுகத்திற்கு முன் நான்காம் நூற்றாண்டில் ஏத்தனியர்கள் என்று கிரேக்கத்தில் ஒரு குழு அமைகிறது. நாம் அறிந்த சாக்ரடீஸ், ப்ளாட்டோ, அரிஸ்டாட்டில், பித்தோகரஸ் போன்ற பல அறிஞர்களும் அவர்களின் வழித்தோன்றல்களும் இன்றளவும் நம் சிந்தையையும் செயலையும் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

அதே போல் பொது யுகத்திற்கு பின் பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பிய வரலாற்றின் மறுமலர்ச்சி (renaissance) காலம் இத்தாலியில் உதயமாகிறது. அதற்கு ஆதரவு தந்தவர்கள் கலைகளில் அவதானம் செலுத்தக்கூடிய சுதந்திர மனநிலையை உடையோராக இருந்ததுடன் கலைகளை ஆதரிக்கக்கூடிய பணபலமும் அவர்களிடம் இருந்தது.

இத்தாலியில் தாந்தே, இங்கிலாந்தில் வில்லியம் ஷேக்ஸ்பியர், பிரான்சில் இராஸ்மஸ், சித்திரக் கலைஞர்களில் லியானாடோ டாவின்சி, மைக்கல் ஆஞ்சலோ, விஞ்ஞானத் துறையில் போலந்தரான நிக்கலஸ் கொபர்னிகஸ், ஜேர்மனியரான ஜொஹென்ஸ் கெப்லர், இத்தாலியரான கலிலியோ கலிலி, இங்கிலாந்தைச் சேர்ந்த ஐசக் நியுட்டன் என அறிவியல், அரசியல், மருத்துவம், சிற்பம், கட்டிடம், பொருளாதாரம், மொழி, இலக்கியம் என பலவற்றிலும் தங்கள் முத்திரையைப் பதித்து புதிய எழுச்சியை உருவாக்கினார்கள்.

இந்தக் குழு அப்படிப்பட்டகுழு என்றுதான் எண்ணுகிறேன். காலம் விடை சொல்லும்.

வந்தவர்கள் எல்லாம் சரி! விஷயம் என்ன? எதைக் குறித்து விவாதித்தீர்கள்? என்னவெல்லாம் பேசினீர்கள்? யார் உரைத்தார்கள்? அவற்றை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

மேலும்:

  1. பூன் முகாம் முழுநிகழ்வு- ஜெகதீஷ்குமார்
  2. கூடுதல் என்பது களிப்பு
  3. டல்லாஸ், டெக்ஸாஸ் வாசகர் சந்திப்பு – கடிதம்
  4. அமெரிக்கா- கடிதம்
  5. பூன்முகாம், கவிதை -கடிதம்: ஷங்கர் பிரதாப்
  6. அமெரிக்க பயணம் 2022
  7. பூன் இலக்கியக்கூடுகை

இயல் விருது – 2015: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்

ரவிச்சந்திரிகா

Jeyamohan_Writers_A_Muttulingam_Iyal_Awards_Tamil_Literary_Garden

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினைந்தாவது இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோவில் யூன் 13ம் தேதி ராடிஸன் ஹொட்டலில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு கனடிய எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான திரு டேவிட் பெஸ்மொஸ்கிஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது பா. ஜெயமோகன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நவீனத் தமிழின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகத் திகழும் திரு ஜெயமோகன் அவர்கள் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் விமர்சனங்கள், நாடகங்கள், சினிமா என பல தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

திரு ஜெயமோகன் தன்னைத் தீவிரமாகப் பாதித்த தனது பெற்றோர்களின் மரணங்களை நினவு கூர்ந்து, அதில் இருந்து தனது உரையை “வாழ்க்கையை ஒரு கணமேனும் வீணாக்காது வாழ்வது எப்படி?” என்று விரித்தெடுத்து பேசினார்.

கடுமையான மனக் கொந்தளிப்புக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் ரயில் தண்டவாளங்களில் நடந்து செல்கிறார். அற்புதமான சூரிய ஒளி பரவுகிறது. புதர்களில் ஒரு புழுவைக் காண்கிறார். ஒளி ஊடுருவும் உடல் கொண்ட புழு அது. அந்தத் தருணம் அதன் முழு உடலே ஒளியாக அதன் உச்சத்தை அவர் அறிகிறார். “உச்சகட்ட நெருக்கடியில் இயற்கை புன்னகைக்கும்” என்றுணர்ந்து “இனி ஒருபோதும் வாழ்வில் சோர்வடைவதில்லை. ஒரு கணத்தையேனும் வீணாக்குவதில்லை.” என்று அந்த நிமிடம் முடிவெடுக்கிறார். இன்று வரை பயணமும் எழுதுவதுமாக என் வாழ்க்கையை சோர்வின்றி வாழ்கிறேன் என்று குறிப்பிட்டார்.

. 1981 இல் உயர்கல்வியைப் பாதியில் நிறுத்தி இரண்டு வருடங்கள் துறவியாக அலைந்ததைக் கூறினார். காசியில் இருந்து டேராடூன் செல்லும் ரயிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது யாத்ரீகர்கள் பத்துப் பேர் ஏறுகிறார்கள். ஏறின கணம் தொடக்கம் கிருஷ்ணனைப் பாடுகிறார்கள். ரிஷிகேஷ் சென்று அடையும் வரை பாடிக் கொண்டே இருக்கிறார்கள்.

அவர்கள் அனைவரும் தம்மை ராதைகளாக உணர்கிறார்கள் என்று இவர் புரிந்து கொள்கிறார். எப்போதும் ஆடலும் பாடலும் கொண்டாட்டமுமாக இருக்கிறது அவர்கள் வாழ்க்கை. “தங்கத் தட்டில்தானே கிருஷ்ணமதுரம் வைக்க முடியும்” என்று அவர்கள் சொல்வது இவரிடம் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கியதாக கூறினார். அன்றிலிருந்து சோர்வில்லாத, துக்கமில்லாத வாழ்க்கையை வாழுகிறேன். எப்போதும் பயணம் செய்வதும், எழுதுவதுமான வாழ்க்கை என்னுடையது என்று கூறினார்.

இயல் விருதைத் தொடர்ந்து மற்றைய விருதுகளும் வழங்கப்பட்டன:

  • புனைவு இலக்கியப் பிரிவில் “கனவுச்சிறை” நாவலுக்காக தேவகாந்தனுக்கும்
  • “நஞ்சுண்டகாடு” நாவலுக்காக குணா கவியழகனுக்கும்
    அபுனைவு இலக்கியப் பிரிவில் ‘கூலித்தமிழ்” நூலுக்காக முத்தையா நித்தியானந்தனுக்கும்,
  • “ஜாதியற்றவளின் குரல்” நூலுக்காக ஜெயராணிக்கும் விருதுகள் வழங்கப் பட்டன.
  • சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருதை “மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” நூலுக்காக கதிர்பாரதி பெற்றுக் கொண்டார்.
  • மொழிபெயர்ப்பு பிரிவில் “யாருக்கும் வேண்டாத கண்” நூலை மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்த கே வி சைலஜாவும்,
  • “Madras Studios – Narrative Genre and Idelogy in Tamil Cinema” நூலுக்காக சுவர்ணவேல் ஈஸ்வரன் பிள்ளையும் விருதுகள் பெற்றனர்.
  • மாணவர் கட்டுரைப் போட்டியில் சிறந்த கட்டுரைகள் இரண்டு தேர்ந்தெடுக்கப் பட்டு, வாசுகி கைலாசம், யுகேந்திரா ரகுநாதன் விருது பெற்றார்கள்.
  • சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட ’கணிமை விருது’ முத்தையா அண்ணாமலைக்கு வழங்கப் பட்டது.

இந்த விழாவுக்கு பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள். திருமதி உஷா மதிவாணனின் நன்றியுரையைத் தொடர்ந்து இனிய சிற்றுண்டி வழங்கப் பட்டு அந்தச் சனிக்கிழமை மாலை இனிதே நிறைவடைந்தது.

Jeyamohan_Writers_Author_Event_Iyal_Awards_Tamil_Literary_Garden


B. Jeyamohan who has made significant contributions in the last 28 years. He has written 13 novels, 11 short story collections and 50 essay collections. He has also penned scripts for Tamil and Malaiyalam movies Kasthoori Maan, Angaadith Theru, Naan Kadavul, Neer Paravai, Aaru Melukuvarththikal, Kadal, Kaaviya Thalaivan, Ozhimuri, Kaanchi, that were well received. The award was presented by Mr. David Bezmozgis. The award was sponsored by Bala Cumaresan and Vaithehi from the very inception of the organization.

In addition to the Lifetime Achievement Award, the following awards were also presented. Fiction awards went to Devakanthan for his novel ‘Kanavuchirai” and to Kuna Kaviyalakan for “Nachundakadu”. Nonfiction awards were given to Muthiah Nithiyananthan for his book ‘Kooliththamil” and Jeyarani for “Jaathiyatravalin Kural.” The Poetry award was given to Kathirbharathi for his collection of poems ‘Mesiyavukku moondru machangal”

Award for ‘Information Technology in Tamil’ given in honour of Sundara Ramaswamy was awarded to Muthiah Annamalai and the student essay contest awards were shared by Vasuki Kailasam and Yugendra Ragunathan. The translation awards were given to K. V. Shylaja for ‘Yaarukkum vendatha kan” translated from Malaiyalam to Tamil and Swarnavel Eswaran Pillai for his book “Madras Studios – Narrative Genre and Ideology in Tamil Cinema.”

’தி இந்து’ நாளிதழ் தமிழில் – சிந்தனைக் களம் கட்டுரைகள்

தி இந்துவின் தமிழ்ப் பதிப்பு வெளியாக ஆரம்பித்திருக்கிறது. ”சிந்தனைக் களம்” பகுதியில் ’சிறப்புக் கட்டுரைகள்’ வெளியிடுகிறார்கள். தினமணி போன்ற பெத்த பெயரை வைத்துக் கொண்டு (தினகரனின்) தமிழ் முரசு போன்ற உள்ளடக்கம் கொண்டிருக்கிறது.

சிரியாவைக் குறித்து பாரா எழுதிய மேலோட்டமான கட்டுரை கிடைக்கிறது. ஜெயமோகன் பத்தி எழுத்தாளர் ஆனால் நடக்கப் போகும் அபாயமும் தெரிகிறது.

என்னைப் போன்ற சாதாரண விமர்சகர் கூட நாவலின் ஓரிரு பக்கங்களை மட்டும் ஆங்காங்கே படித்துவிட்டு தேர்ந்த அறிமுகத்தைக் கொடுத்துவிட முடியும். அந்த மாதிரி அவ்வப்போது சந்தித்த மனிதர்கள், ஆங்காங்கே பார்த்த தொலைக்காட்சி, இணையத்தில் மூழ்கடிக்கும் நிலைத்தகவல்கள் மட்டுமே கொண்டு மேக்ரோ பார்வை கொடுப்பதன் ஆபத்தை மீண்டும் மீண்டும் ஜெயமோகன் உணர்த்திக் கொண்டேயிருக்கிறார். ஊடகத்தை கவனிப்பதற்கென்றே பிரத்தியேகமாக இயங்கும் medianama.com , fourth-estate-critique, thehoot.org போன்ற பல்வேறு தளங்களின் உதவியைக் கோரி கொஞ்சமாவது ஆராய்ந்து எழுதியிருக்கலாம்.

அந்தக் காலத்தில் நேருவும் கென்னடியும் மட்டுமே செய்தியாளர்களுக்கு முக்கியமானவர்கள். இந்தக் காலத்தில் பக்கத்து மாநகராட்சி கவுன்சிலரும், பையன் ஆடும் கிரிக்கெட் அணியும், முக்குத்தெருவில் உதயமான பவானி அம்மனும் செய்தியை ஆக்கிரமிக்கிறார்கள். எங்கோ 2ஜி கொள்ளை அடிப்பதை நினைத்து அங்கலாய்ப்பதை விட உள்ளூர் ஊழல்களைத் தடுப்பதிலும், பக்கத்து வீடு காதல்களை அங்கீகரிப்பதிலும் செயலூக்கத்தோடு இயங்கவும் ஊடகங்கள் உதவுகின்றன.

செய்தித்தாள் என்பது மேற்கை பொறுத்தவரை இறந்த காலம். வாஷிங்டன் போஸ்ட் கிட்டத்தட்ட திவால் ஆகி அமேசான்.காம் எடுத்துக்கொண்டுவிட்டது. சிகாகோ ட்ரிப்யூன், நியு யார்க் டைம்ஸ் என்று இணையத்துக்கு முந்தைய முன்னுமொரு நூற்றாண்டில் கோலோச்சிய பதிப்புகள் எல்லாம் கணக்கு வைப்பு புத்தகங்களில் சிவப்பு மையை கக்கி கடைசி இரத்தங்களை சுரண்டிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க இந்தியாவில் மட்டும், எப்படி புதுப் புது பத்திரிகைகள், தினசரிகள், நாவல்கள், வார இதழ்கள் முளைக்கின்றன?

காலை எழுந்தவுடன் ஐ-பேட் கொண்டு கக்கூஸ் போகுபவர்கள் குறைந்த அளவில் இருப்பதால்… வலை மேய்வதற்கான கட்டணம் இரவு நேரங்களில் மட்டும் சல்லிசாக இருப்பதால்… எல்லோருடைய செல்பேசியிலும் தமிழ் எளிதாகத் தெரியாததால்… கட்சிக்கொரு பேப்பர் நடத்துவதால்…

”நாவலாசிரியயர்கள் சொற்றொடர்களாக சிந்திப்பதில்லை; அத்தியாயங்களாக யோசிப்பவர்கள்” என்பார் வர்ஜீனியா வுல்ஃப். நல்ல புனைவாளர்களை முன்னூறு வார்த்தைகளுக்குள் வாரா வாரம் கிறுக்க வைக்கும் சுரேஷ் கண்ணன்கள் ஆக்கி விடாதீர்கள் என்று எண்ண வைத்திருக்கிறது தமிழில் வரும் ’தி இந்து’.

Tamil Thinkers Identity: Generalization vs Speculation: Inventing the Brand

அப்பாவை டிவி பார்ப்பவர் என்று சுருக்கலாம். அம்மா வெறும் சமையற்காரி. மகளோ மூளை வளர்ச்சி பெறாதவள். மனைவி பாலியல் தொழிலாளி.

இப்படி அடைமொழிக்குள்ளும் உருவகங்களுக்கும் நடுவே நிஜ வாழ்க்கை சிக்கிக் கொள்வதில்லை. ஆனால், பெரும்பாலான கலை வடிவங்களின் தமிழ் விமர்சனங்கள் அடைபட்டிருக்கிறது.

ஜெயமோகன் இந்துத்வாவாதி. சாரு நிவேதிதா திருடர். எஸ் ராமகிருஷ்ணன் தேய்வழக்கு. காலச்சுவடு கண்ணன் பிசினஸ்மேன். ’அட்டகத்தி’ தலித் காவியம்; உயிர்மை இலக்கிய பத்திரிகை; மக்கள் தொலைக்காட்சி தமிழை வாழவைக்கிறது.

சிக்குண்டவர்களே புதியவர்களை வலைக்குள் நிறுத்து வைப்பது உப வழக்கம். பெருநிதிக் கிழார், டூரிஸ்ட் இலக்கியவாதி என்று பட்டங்கள் கொடுத்து முடக்குவதும் வாடிக்கை.

திரைப்படத்திற்கு சாயம் பூசுதல், எழுத்தாளர்களை தொலைக்காட்சி சவுண்ட் பைட் பார்ட்டி ஆக்குவது, போன்றவை சந்தைப்படுத்தலின் அங்கம். கருணாநிதி மோதிரம் வாங்கி அண்ணா கையால் போட்டுக் கொண்டது போல் தன் ஆக்கங்களை தானே பிராண்டிங் செய்வது எல்லாமே மார்க்கெடிங்கில் நியாயம்.

மோஸ்தர்களை மட்டுமே முன்னிறுத்தும் தமிழக சூழலுக்கு, போதிய அளவு மாற்று சிந்தனையாளர்கள் இல்லாதது முதல் காரணம். எதிர்கருத்து சொல்பவர்களுக்கு ஆங்கில எழுத்துகள் சோறு போடுகிறது என்பது முக்கிய காரணம்.

What have you read among Jeyamohan books?

ஜெயமோகன் எழுதிய புத்தகங்களின் பட்டியலை (http://www.jeyamohan.in/?p=11233) கொடுத்தார்.

எனக்கு மூன்று வினாக்கள் எழுந்தன:

1. உங்களுக்கு இந்த லிஸ்ட்டில் மிகவும் பிடித்தது எது?

2. அவசியம் இந்த வருடம் படிக்க வேண்டும் என்று நினைப்பது?

3. அனுராதா ரமணன்/சுஜாதா மட்டுமே அறிமுகமான நண்பருக்கு, பரிசாக எந்த படைப்பை கொடுப்பீங்க?

தர்மசங்கடத்திற்கு தயார் என்றால்… கொசுறு கேள்வி:
இவற்றுள் தங்களைக் கவராத நூல்?

வாக்கெடுப்பு (தற்போதைய நிலை) – தொகுக்கப்பட்ட பதில்:

மனதில் நிற்பவை

காடு – 7

பின் தொடரும் நிழலின் குரல் – 4

விஷ்ணுபுரம் – 3

சங்கச் சித்திரங்கள் – 3

இன்றைய காந்தி – 3

பனிமனிதன் – 2

ஏழாம் உலகம் – 2

நவீன தமிழிலக்கிய அறிமுகம் – 2

ஜெயமோகன் குறு நாவல் முழுத் தொகுப்பு – 2

சிறுகதைத் தொகுப்பு – 2

கொற்றவை

பத்ம வியூகம்

இலக்கிய முன்னோடிகள் வரிசை

நாவல் கோட்பாடு

ஊமைச்செந்நாய் (மத்தகம்)

வாசிக்க விழைபவை

கொற்றவை – 6

விஷ்ணுபுரம் – 4

ரப்பர் – 2

சங்க சித்திரங்கள்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

பின் தொடரும் நிழலின் குரல்

காடு

ஏழாம் உலகம்

குறுநாவல் தொகுப்பு

பரிந்துரை

ஜெயமோகன் குறு நாவல் முழுத் தொகுப்பு – 3

அனல்காற்று – 2

வாழ்விலே ஒருமுறை – 2

சங்கச் சித்திரங்கள் – 2

ஏழாம் உலகம் – 2

காடு

கன்னியாகுமரி

நிகழ்தல்

ஊமை செந்நாய் தொகுப்பு

நிழல் வெளி கதைகள்

நினைவின் நதியில்

இன்றைய காந்தி

தேவகி சித்தியின் டயரி, ஒன்றுமில்லை, விரல், மாடன் மோட்சம்

சிரமதசை

சங்கச் சித்திரங்கள்

இலக்கிய விமர்சனம் தொகுப்பு

ஏழாம் உலகம்

கொற்றவை

விஷ்ணுபுரம்

உங்கள் பதில்களை – https://groups.google.com/forum/#!topic/jeyamohan/R6CvIwQYmfM குழுமத்தில் தரலாம்.

Washington DC: Jeyamohan Visit – Thanksgiving

வாஷிங்டன் டிசி-க்கு எழுத்தாளர் ஜெயமோகன் சென்று வந்து பல மாதம் ஆகி விட்டது. நினைவில் இருந்து சில துளிகளும் நன்றி நவில்தல்களும்.

வாஷிங்டனுக்கு வருகிறேன் என்று ஜெயமோகன் சொன்னவுடனேயே ராஜனை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டவர் வேல்முருகன். ஸ்ரீகாந்த் மீனாக்ஷி டிசி தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்தபோது செயலாளராக இருந்தவர். பிளந்துகிடந்த வாஷிங்டன் தமிழ்ச்சங்கங்களை இணைப்பதில் இவருக்கும் பங்கிருப்பதாக திண்ணை வம்பி கிடைத்தது தனிப்பதிவுக்கான கதை.

வேல்முருகனோடு தொலைபேசியில் கொஞ்சம் tag விளையாடிவிட்டு, கடைசியாக வாய் – அஞ்சலின்றி ஒருவருக்கொருவர் வாயாடும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் இன்முகத்துடன் அழைத்தார். சபையடக்கமாக தாங்க்ஸ் என்னும் வார்த்தையே சொல்லவேண்டாம் என்று உரிமையோடு பேசினார்.

பாஸ்டனில் இருந்து தன்னந்தனியே நியு ஜெர்சி பயணம். செல்லும் வழியில் வழக்கமான கட்டுமானப் பணிகள். ‘அமெரிக்காவில் மறுமுதலீட்டு திட்டம்’ நடைமுறையாக்கத்தில் நிறைய இடித்துப் போட்டு, மாற்றுப் பாதை கொடுத்திருந்தார்கள். அன்று வெள்ளிக்கிழமை மதியம். விடுமுறை அல்ல. எனினும், இரவில் மட்டுமே பணி நடக்கும் என்று பலகை போட்டிருந்தாலும், வேடிக்கை பார்க்கும் காரோட்டுனர்கள் மெதுவாகவே ஸ்டியரிங் பயின்றார்கள். அடிமட்ட தொழிலாளிகளுக்கான வேலைவாய்ப்பு பெருக பெருக, பெருநிறுவனங்களும் லாபம் ஈட்ட, நமக்கும் தேன் வழியும் என்று multiplier effect எல்லாம் சிந்தித்துக் கொண்டே துகாரமின் வீட்டை அடைந்தபோது ஆறு மணி.

டைனோபாய் ரன்னிங் காமென்டரி கொடுத்துக் கொண்டிருந்தார். ப்ரிட்ஜ்வாட்டர் கோவிலில் ராமரின் பளிங்குச்சிலை முன் நிற்கிறோம். ஜெயமோகன் சிற்ப அழகை ரசிக்கிறார். கை கூப்பவேயில்லை. எந்த தெய்வத்தையும் வணங்கவேயில்லை. சர்வமத ஆலயம் போல் சமணருக்கும் சம ஒதுக்கீடு தந்திருப்பதை குறித்து பேசுகிறார். எங்கள் பேச்சைக் கேட்டுவிட்ட மடிசார் கட்டாத மாமி முகஞ்சுளிக்கிறார்.

“எப்ப சார் துக்கா வீட்டுக்கு வருவீங்க?”

“அது மாமி அல்ல. தாவணி கட்டிய பைங்கிளி. இப்பொழுது ஜெமோ…”

ஒருவழியாக ஏழரை மணிக்கு ‘பராக்கா’வும் (குரங்குத்தவம் – http://kuranguththavam.blogspot.com ) உடன் வந்து சேர்ந்தார்கள். ‘இலவசக்கொத்தனார்’ம் கொஞ்ச நேரத்தில் வந்தவுடன் இணையம், போலி டோண்டு என்று வழக்கமான இடங்களில் போரடிக்க, இட்லி+மசால் தோசை மொக்கிய பிறகு தூக்கக் கலக்கத்துடன் துகாவிடம் இருந்து பிரியாவிடை பெற்றபோது ஒன்பதரை தாண்டி இருக்கும்.

அடுத்த நான்கு மணிநேரம் அதி சுவாரசியம். ராஜன் குறிப்பிட்டது போல் ஆளின் கிரகிப்புக்கு ஏற்ப பேசுவதில் ஜெயமோகன் வித்தகர். என்னுடனும் ‘வெட்டிப் பயல்’ பாலாஜியுடனும் நடந்த உரையாடல்களில் பெரும்பாலானவை சினிமாவும் சினிமா சார்ந்த மயக்கங்களுமாக முடிந்து போனது.

பரந்த வாசிப்பாளரான அர்விந்த் கிடைத்தவுடன் யுவன், நாஞ்சில் நாடன் என்று இலக்கியத்தில் துவங்கியது. கொஞ்ச நேரம் கழித்து ஷாஜி, இளையராஜா, யுவன் என்று இசைப்பயணமாக ஆலாபனை ரீங்கரித்தது. படு காத்திரமாக விஷ்ணுபுரம் ஆராய்ச்சி, காடு நாவலில் பொதிந்த இரகசியங்கள், என்று ஜெயமோகனின் படைப்புலகிற்கு பின்புலம் அமைத்தது. அங்கிருந்து, வேதங்களின் குறியீடு, மகாபாரதக் கதைகளின் இருண்மை, ஞான மரபு, தத்துவார்த்த தர்க்கம் என்று ஆங்கில உலகின் புத்தக அறிவுக்கும் தமிழில் வாசித்த படக்கதைகளுக்கும் முடிச்சுப் போட்டு, அதில் ஜெயமோகனின் டச் உடன் தீர்க்கமாக அலசப்பட்டது.

முதலில் போட்ட திட்டத்தின்படி இந்தப் பயணத்தில் வெட்டிப்பயல் உடன் வந்திருக்க வேண்டும். அவர் கழன்று கொன்டதில், அர்விந்த் சேர்ந்துகொள்ள, எதிர்பாராத விருந்து. நான் அவ்வப்போது வண்டியும் ஓட்டினேன் என்பதால் வாஷிங்டன் வந்து சேர்ந்தது.

மணி ஒன்றரை இருக்கும். செல்பேசியில் வேல்முருகனை அழைக்க, தூக்கக் கலக்கத்துடன் ‘எவ…. அவ!’ என்று உருமினார். அமெரிக்காவில் ஹோட்டல்களுக்குப் பஞ்சமில்லை என்பதால் நர்மதா (ரமதா என்பதை செல்லமாக இவ்வாறும் விளிக்கலாம்), ரெட் லைட் இன் ஆகிய எதிலோ தங்கலாம் என்று மனதைத் தேற்றினாலும், வேல்முருகன் இல்லத்திற்கே வந்துவிட்டோம்.

நாங்கள் மூவரும் வேல்முருகனின் வீட்டை அடைந்தபோது பின்னிரவு இரண்டு ஆகிவிட்டது. சில பல குளறுபடிகள் செய்தோம். பாத்ரூம் கதவு பூட்டியே தாளிட்டு விட்டு, அதன் பின் அடைப்பு என்று கொஞ்சம் எசகுபிசகுகள். அமெரிக்க வாழ்வில் நடப்பதுதான்… சல்தா ஹை.

அடுத்த நாள் காலை எழுத்தாளர் சத்யராஜ்குமார் (http://inru.wordpress.com/ ) இணைந்து கொண்டார். ஜெமோ எல்லோருடனும் இயல்பாக உரையாடினார். வீட்டில் இருந்த வேல்முருகனின் தாயார், இசை பயிலும் மகள், Wii ஆடும் மகனுடன் கொஞ்சல். எல்லோருடனும் சகஜமாக உரையாடுவது எனக்கு எம்பிஏ-வில் கற்றுத்தரப்பட்டது. எனினும், விஷயம் அறிந்து பேசுதல் + கூச்சம் போக்கி சகஜமாக்குதல் — இரண்டும் கைவந்த கலையாக அவருக்கு இருந்தது.

வாஷிங்டன் நினைவுச்சின்னம், லிங்கன் நினைவுச்சின்னம், உலகப் போர் 1,2 நினைவாலயம், ஜெஃபர்சன் சிலை, கொரியா போர், வியட்நாம் சண்டை என்று திக்கொன்றாக அமைந்த பரந்து விரிந்த தளபதிகள்; படைக்களங்கள்; வீரர்களுக்கான மெமோரியல்கள்; அமைதிப் பூங்காக்கள். எதையும் அவசரப்படாமல் நிதானமாக கவனித்தார்.

நடுவே சினிமா நடிகர்களுக்கு மட்டும் நிகழும் சில விஷயங்களும் இங்கே நடந்தது. “சார்… நீங்க ஜெயமோகன் தானே?! உங்க ப்ளாகைத் தொடர்ந்து படிக்கிறேன். இன்னிக்கு டிசி வரதா போட்டு இருந்தீங்க! இங்கேதான் இருப்பீங்கன்னு நெனச்சோம். பார்த்துருவோம்னு நெனச்சோம்… அப்படியே உங்களப் பார்த்ததில ரொம்ப சந்தோஷம்!”

“மாலையில் நடக்கும் கூட்டத்திற்கு வரீங்களா?”

“முடிஞ்சா பார்க்கிறோம்! ஆனா, உங்கள இங்க… இப்போ பார்த்து பேசியதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி”.

இரு சிறு கூட்டங்கள். உச்சிவெயில் மண்டையைப் பிளக்கிறது. ஜெமோ சந்தித்த பரவசத்தில் அவர்களிடமிருந்து பல வினாக்கள். ஜெமோவும் பதில் கொடுத்துக் கொண்டே, அவர்களின் விழைவுகளை, பின்புலங்களை கிரகித்துக் கொள்கிறார். ஒருவரல்ல; இருவரல்ல… இரு சிறு சிறு குழாம்களில் இருந்து ஏழு & எட்டு பேர் இவ்வாறு அகஸ்மாத்தாக தொடர்பு கொண்டார்கள். நான் நடிகை ரஞ்சிதாவுடனும் வைகைப் புயலுடனும் விமானங்களில் அளவளாவியது எனக்கு நினைவிலாடி கிறங்கடித்தது.

மதியம் சமர்த்துப் பையன்களாக தாஸனி வாங்கப் போக, “பாலா… நீங்க தண்ணியடிப்பீங்கதானே? உங்களுக்கு வேணுமின்னா வாங்கிக்கிடுங்க” என்று பெர்மிட் தரப்பட, குளிர்ந்த கரோனா ருசிக்க கிடைத்தது.

காலையில் இட்லி. மதியம் ஒரு சிக்கன் சான்ட்விச். பிற்பகலில் இரு பழங்கள். இதுதான் ஜெயமோகனின் அன்றைய டயட். அது தவிர முந்தின நாள் இரவு பாத்ரூம் களேபரம் போன்ற சிக்கல் முடிந்து உறங்கும் போது இரண்டரை ஆவது இருக்கும். காலையில் ஆறு மணிக்கு எழுந்து, எட்டு மணிக்கு காரில் காலடி.. மன்னிக்க… டயரடி வைத்தாகி விட்டது. கொஞ்சம் போல் வீட்டில் ஓய்வெடுக்கலாம் என்பதையும் நிராகரித்து, ‘போனால் வராது’ எனபதாக காங்கிரஸ் நூலகம், கேபிட்டல் என்று பொசுங்கும் வெயிலில் நடையோ நடை.

கால் டம்ளர் டீ மட்டும் அவருக்கு காட்டிய பிறகு, சிறப்புரையாற்ற அவரை அழைத்து சென்றோம். போகும் வழி வெறும் இருபது நிமிடம்தான் என்றாலும். வெளியில் கொளுத்திய நூறு பதாகையில் இருந்து குளிரூட்டப்பட்ட காரும், காலை எட்டில் இருந்து சாயங்காலம் நான்கு வரை நடந்த நடையும், அந்த நடையின் நடுவே ஆதுரமிக்க ஜெமோவின் சொல்லாடல்களும், அப்படியே கேப் விட்ட இடைவேளைகளில் என்னுடைய டிசி சொற்பொழிவுகளையும் கேட்ட மயக்கத்தில் ஜெமோ கொஞ்சம் கண்ணயர்ந்தார்.

நிகழ்ச்சி அமைப்பாளரான பீட்டர் யெரோனிமௌஸ் அறிமுகம் தர அரம்பித்தார். அதற்கு பவர்பாயிண்ட் வைத்திருந்தார். அதன் பிறகு அடுத்த அறிமுகம் தர வேல்முருகனை அழைக்க, அவர் என்னை அழைத்து ஒதுங்கி விட்டார்.

டிசி வரும் பயணத்தின் நடுவில் ஜெயமோகன் சொன்னது இப்பொழுது நினைவிற்கு வந்து செமையாக இம்சித்தது. ‘எனக்கு அறிமுகம் கொடுப்பவர்கள் சரியான அறிமுகம் தருவதில்லை. “இவர் தீரர், வீரர்; சூரர்” என்றோ, “இவர் பதினேழரை நாவல்களும் மூவாயிரத்து அறுநூற்றி இருபத்தெட்டு பக்கங்களும் எழுதியவர்” என்றோ, “இவர் சாகித்திய அகாதெமி, ஞானபீடம் வென்றவர்” என்றோ, “தமிழகத்தின் விடிவெள்ளி, எழுஞாயிறு” என்று அடைமொழிகளால் குளிப்பாட்டியோ பேச அழைப்பார்கள். அதற்கு பதில் என் எழுத்து எவ்வாறு அவரை சென்றடைந்தது, எப்படி செழுமையாக்கியது என்றெல்லாம் சொல்லலாம்’

அப்படித்தான் அறிமுகம் கொடுத்தேனா என்று தெரியாது. எழுதியும் தயார் செய்யவில்லை. சுருக்கமான அறிமுகம் வைத்தேன்.

அதன் பின் ஜெயமோகன் பேசினார். இருபது நிமிஷங்களுக்குள்ளேயே முடித்துவிட்டார்.

புறவயமான உலகை அகவயமாகப் பார்ப்பதன் அவசியம் என்ன? எப்படி விரிந்து பரந்த அகில அண்டத்தையும் — தக்கினியூண்டு மனசும் கையளவு மூளையும் கொண்டு மதிப்பிடுவது? அவ்வாறு மதிப்பிட்டாலும், புறச்சிக்கல்களை தன்வயப்படுத்தி சிக்கல் நீக்கி உள்ளே கொணர்ந்தாலும், அதை விட குறுகலான மொழியைக் கொன்டு வெறும் 10,000 வார்த்தைகளேக் கொன்ட பாஷையை சாதனமாக வைத்து விவரிப்பது எங்ஙனம்?

காலங்காலமாக உலகம் எவ்வாறு ஒவ்வொரு துளியையும் ஒவ்வொருவருக்குள்ளும் அனுப்பி வருகிறது? அதைப் புரிந்து கொள்வதன் சூட்சுமம் என்ன? கலாச்சாரம் என்கிறோம். பாரம்பரியம் என்று சொல்கிறோம். அதெல்லாம் எப்படி வருகிறது?

இப்படி abstract ஆக அரம்பித்த உரை சட்டென்று ஜனரஞ்சகமாகி கிளைதாவி முடிந்துவிட்டது. சாதாரண கேள்வி – பதில் என்றால், இதில் எழும் வினாக்கள் ஏராளம். அதைக் கேட்டிருப்பார்கள். குளிர் நம்மை அணுகாமல் இருக்க கையுறை அணிந்த கைகளை, பாக்கெட்டுக்குள் திணித்துக் கொள்வது போன்ற மனப்பான்மையுடன் வினாத் தொடுப்பவர் கூட்டம்.

‘வார்த்தை’ பிகே சிவக்குமார் சொன்னது போல் இது வேறு கும்பல். “நீங்க சினிமாவுக்கு வசனம் எழுதியிருக்கீங்க! அதனால், எந்த நடிகை அதிகமாக குலுக்குவார்கள் என்பதைக் குறித்து ஏன் நீங்கள் அவதானிக்கவில்லை?” என்பன போன்ற வினாக்கள் வந்தன. விலாவாரியான தகவல்களுக்கு கீழே இருக்கும் ட்விட் வர்ணனையைப் படிக்கலாம்.

சாதாரணமாக ஜெயமோகன் இத்தகைய கேள்விகளை நேரடியாகவே எதிர்கொண்டு அதற்கும் தர்க்கபூர்வமாகவும் இந்திய சிந்தனை மரபுவழியாகவும் விளக்குவார்; விளக்குகிறார்; விளக்குகினார். அன்று ‘உங்கள் பதிலை மூன்றரை நொடிகளில் முடித்துக் கொள்ளவேண்டும்! அடுத்த கேள்விக்கு செல்ல வேண்டும் அல்லவா?’ என்று ஸ்பீட் செஸ் போன்ற ஆட்டம். கலைஞர் கருணாநிதியின் எகத்தாள ஒன்லைனர்கள் எடுபட்டிருக்கும். விசாலம் கோரும் விவாதம் நிகழ இடம் பொருள் ஏவல் அமையவில்லை.

அன்றைய பின்னிரவில் வேல்முருகன் தனக்கு ‘பெரியார் இன்றளவிலும் முதன்மையானவராகத் தெரிகிறார். அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பியது; அடக்குமுறையை தவிர்த்தது; சுய மரியாதை; தாழ்த்தப்பட்டோருக்கு குரல் கொடுக்கும் விதத்தை நிலைநாட்டியது; பாமரருக்கும் பகுத்தறிவை எடுத்துச் சென்றது’ என்று விரிவாக அடுக்க, ஒவ்வொன்றாக, அனைத்தையும் தவிடு பொடியாக்கும் எதிரணியின் நிலைப்பாடுகளை, அவரே ‘அட… ஆமாம்!!’ என்று மாறிப்போகுமளவு ஜெமோ எடுத்து வைத்தார்.

இவ்வகையான இன்ஃபார்மல் களம் இருந்தால் அன்றைய மீட்டிங் சிறப்புற்றிருக்கும். எட்டரை மணிக்கு அரங்கத்தை காலி செய்ய வேண்டும். ஏழரைக்கு அணு ஆயுதப் பேச்சு என்று வாயில் வாட்ச் கட்டிவிடாத களம் வேண்டும்.

சத்யராஜ்குமார் உடனும் நிர்மலுடனும் ஜெமோ பேசியதும் சுவாரசியமே. நிர்மல் (http://sinthipoma.wordpress.com/2007/05/04/12/ ) குறித்தும் நிறைய எழுதவேண்டும். அவர் அடுத்த நாள் எங்களுடன் இணைந்து கொண்டார்.

இந்த மாதிரி எழுத்தாளர் பயணத்தை அடுத்த முறை திட்டமிட்டால், பாஸ்டனில் இருந்து இரயிலிலோ விமானத்திலோ வாஷிங்டன் செல்வது; அங்கே நிர்மல்/சத்யராஜ்குமார்/வேல்முருகன் பெற்றுக் கொள்வது — என்று சுலபமாக அமைக்கலாம்.

பட்டால்தான் தெரிகிறது!


அப்பொழுது எழுதிய லைவ் டிவிட் கவரேஜில் இருந்து:

1. When a waterfall supposed to represent #FDR presidency is not working, does it symbolize that the administration failed? #Memorials #DC

2. Tomb of the Unknown. Amphitheater. DC Washington. Arlington http://post.ly/1apD

3. Changing of guards in Unknown Soldier Tomb in Virginia Arlington Cemetery. http://post.ly/1anf

4. Jemo in Arlington Cemetery. DC. http://post.ly/1al7

5. Vote of thanks. Young chap; tense; mispronounces names. I am also mentioned. http://post.ly/1Zpq 8:59 PM

6. How Tamils shd stay united against Atomic power plants & nuclear energy? Y no TN leader against this cause. http://post.ly/1ZpC 8:50 PM

7. Why Nuclear, 123 deals, waste management, accidents, catastrophical predictions, Russia job creation. #energy http://post.ly/1Zp1 8:46 PM

8. Udhayakumar takes over the stage. Asuran book gets released by Sankarapandi. http://post.ly/1Zoo 8:44 PM

9. Koodankulam Nuclear project activist Uthayakumar speech. Pulithevan/LTTE contacts. Prabhakaran dead reminiscences. http://post.ly/1Zog 8:43 PM

10. Commemorative plaque presented to Jeyamohan in Washington DC Meet. http://post.ly/1Zmy 8:27 PM

11. Velmurugan Periyasamy tells abt his expediments with Periyar. EVR’s influence on self. Rationalization & influence. http://post.ly/1Zmn 8:23 PM

12. Shylaja abt Bheema’s characterization in Nathi Karaiyiniley. #JM abt Asoka Vanam. Girl wise inheritance property in his http://post.ly/1ZmC 8:19 PM

13. Tamil language classical structure: Qn. Ans by #JM: 4k divya prabhandham, current poets, Pramil. Su. Vilvaratnam. Abhi. http://post.ly/1Zlp 8:16 PM

14. Qn by him abt fights among writer thinkers. #JM Ans: Appreciates Periyar EVR 4 giving freedom to question. Gr8 ans lac http://post.ly/1ZlU 8:12 PM

15. JM has a gr8 reply abt Periyaar. Compares him with MN Roy, EMS, Ambedkar. EVR is not reason based! http://post.ly/1ZlD 8:07 PM

16. MP Siva chokes with emotion. Wants #JM to become a big writer. Qns abt EVR Periyar. Rationality & spirituality mix. http://post.ly/1Zkw 8:04 PM

17. Religion, Quran, suicides: search of life thru journeys in Ilakkiyam. http://post.ly/1ZkD 7:58 PM

18. Jeyamohan talks abt Oomai Chennai. Janakiraman, Jeyakanthan, Sujatha, Asoka Mithiran, Sundara Ramasamy. Kaadu: how it came into being?! 7:54 PM

19. Sornam Sankarapandi Sudalaimadan condemns the state of responses given by Tamil writers on demise of LTTE. #srilanka statements #sweep 7:50 PM

20. Dr. Thani Cheran disagrees with #JM on Therkku Vazhgirathu. Says TN is not influential wrt Tamil Eezham. http://post.ly/1ZjS 7:47 PM

21. Ans by #JM: A million Tamils r out of TN. How 2 safeguard if free country is separated out. US is best eg of coexistenc http://post.ly/1Zj3 7:41 PM

22. Qn by Saminathan. Multiplicity, diversity x individuality. Will it curtail rebels? How to ensure Independence. http://post.ly/1Zij 7:38 PM

23. JM ans abt education: economy, British looting. Hope for future gen. Famines, hunger will be history. http://post.ly/1ZiE 7:33 PM

24. I’m a reader of Sanga Chitrangal. The only interesting blog is #JM How to bring ilakkiyam to kids? #lit http://post.ly/1Zhr 7:29 PM

25. Shylaja shared her question with me. Y no female chars are shown as intelligent in his fiction; incl Anal & many Mahabh http://post.ly/1Zhb 7:26 PM

26. Sornam Sudalaimadan Sankarapandi qns abt self righteousness with dravidian movement is debased. http://post.ly/1ZhW 7:23 PM

27. AIIMS India Foundation Rave Shankar chats abt #JM blog; Ajithan school was moving. http://post.ly/1ZhA 7:19 PM

28. Audience is hysterical with #JM narration abt common Tamils addiction with Kumudam/Vikadan vs Kaadu http://post.ly/1Zh2 7:17 PM

29. Lit as infotainment vs prev twit. Ilakkiyam is useful in any nook & corner of the world. Why read fiction? http://post.ly/1Zgk 7:14 PM

30. The magnificence absorbed from the universe into self. Iota of world inside each of us. http://post.ly/1ZgZ 7:12 PM

31. #JM talks about Nithya Chaithanya Yathi. Narration definition. Inner vs outer world. Conversations – language http://post.ly/1ZgK 7:09 PM

32. Myladuthurai MP Siva snaps pictures in the #JM #DC Meet. http://post.ly/1ZfW 6:58 PM

33. Writer Jeyamohan gathering in Washington DC. Intro by Peter Yeronimouse. http://post.ly/1ZfE 6:55 PM

34. Library of Congress. Writer Jeyamohan with books, reference, Washington DC. http://post.ly/1ZS0 4:12 PM

35. With Velmurugan in Virginia. Washington DC visits Jeyamohan. http://post.ly/1Yrm 9:37 AM

36. DC welcomed JM. Car chat» Vishnupuram is an anti-kaaviyam. Yuvan’s Manal Keni. What defines a Kappiam? Discussion vs argument mthds Marabu.1:33 AM Jul 25

தொடர்புள்ள பதிவு:
Jeyamohan DC பேச்சில் நல்ல தரமான இலக்கியத்தை அல்லது எந்நாடு இலக்கியத்தில் முண்ணனி வகிக்கிறது என்று எதுவும் சொல்லவில்லை: http://bit.ly/GJ4vE

வாசக அனுபவம்: கன்னியாகுமரி: ஜெயமோகன்

தொடர்புள்ள பதிவு: நாவலில் என்னைக் கவர்ந்த சில இடங்கள், வரிகள், நிகழ்வுகள், கருத்துகள்

மூன்று என்பது முக்கியமான எண். ட்விட்டரில் கூட விசாரித்திருந்தேன்.

சைவத்தில் படுக்கப்போட்ட மூன்று பட்டை; வைணவத்தில் நிற்கும் நாமத்தில் 3 வரிகள்; ராமரும் அணில் முதுகில் 3 கோடு. முப்புரி நூலும் உண்டு. ஏன் #3 ?

orupakkam: 3றிற்கு ஒரு விளக்கம். முழுமையான வடிவை உருவாக்க குறைந்தபட்ச தேவை. triangle is the polygon with min sides. #trilogy

கன்னியாகுமாரியில் மூன்று கடல் சங்கமிக்கிறது. பிரம்மா, சிவன், விஷ்ணு மூன்று பேரும் சேர்ந்த ஸ்தாணுமாலயன். எல்லாம் 3. ஜெயமோகனின் கன்னியாகுமரி நாவலின் நாயகி அந்த இடத்தில்தான் படைக்கப்படுகிறாள்; காக்கப்படுவதாக வாக்களிக்கப் படுகிறாள். ருத்ரனால் சுட்டெரிக்கப்படுகிறாள்.

அந்த மூன்றும் நாயகனுக்கும் அரங்கேறுவதுதான் நாவலின் அபாரம்.

பெண்ணைக் குறித்து ஆண் தெரிந்துகொள்ள விரும்புகிறான். பெண்ணின் உடை புடைவைக்குள் சுருண்டு புதிராக இருக்கிறது என்பதில் ஆரம்பித்து, எதைக் கண்டு பயப்படுவாள்? எதை ரசிப்பாள்? என்பது போன்ற உளவியல் கூறுகள் தொட்டு அனைத்திலுமே ஆணுக்கு, பெண் புரியாத புதிர்.

இந்தப் புதிரைக் கண்டு கொண்டு, சினிமா மூலம் கொஞ்சமே கொஞ்சம் தொட்டுக் காட்டியவனின் கதை கன்னியாகுமரி.

பதின்ம வயதில் உண்டாகும் இனக் கவர்ச்சி. மணமாகியவளிடம் கிடைக்கும் நிபந்தனையற்ற திருமண பரமபத விளையாட்டு. முறை தவறி நடக்கும்போது கிளறும் குற்றநெஞ்சுறுத்தல். மூன்று நிலையிலும் பெண்களைக் கண்டு அச்சமுறும் ஆண் என்று கதையை சுருக்கலாம்.

சினிமாத் தொழிலில் இருக்கும் ஏற்றத்தாழ்வு. ஸ்டோரி டிஸ்கசன் என்றால் என்ன? அட்ஜஸ்ட்மென்ட் செய்துகொள்வது எப்படி? எங்ஙனம் திரைக்கதை – வசனம் – இயக்கம் உருவாகிறது? எவ்வாறு கதைக்காக அலைகிறார்கள் என்பது backdrop.

கன்னியாகுமரி அம்மன் ஆன்மிக புராண வரலாற்றின் குறியீடு — கதாநாயகி; அல்லது நாயகனின் மௌனசாட்சியான மனப்பிராந்தி. அவற்றில் மொழு மொழு கற்பாறைகள் என கட்டி தட்டிப் போன பிம்பங்கள். எத்தனை நாள் காத்திருந்தும் வராத மூர்த்தமாக அடுத்த சினிமாவுக்கான சூப்பர்ஹிட் கதை. உப்புக் கரிக்கும் கடல் அலைகளென மனதில் மீண்டும் மீண்டும் அடிக்கும் நினைவுகள். இந்த மாதிரி குறியீடுகள் மீள் வாசிப்பைக் கோரும் இலக்கியத்தன்மையைக் கொடுக்கிறது.

சினிமாவுக்குள் முழு மூச்சாக நுழைவதற்கு முன்பே ஜெயமோகன் இந்தக் கதையை நல்ல வேளையாக வெளியிட்டுவிட்டார். இல்லையென்றால் பா ராகவனின் ‘நிலா வேட்டை’யில் சொன்ன இயக்குநரின் மறுபாதி போல் இருக்கிறதே என்றெல்லாம் ஹேஷ்யங்கள் வந்திருக்கும். ஜெயமோகனை நான் சந்தித்த பிறகு, நான் படிக்கும் அவரின் முதல் நாவல் என்பதாலோ என்னவோ, பல இடங்களில் அவரே முன்னே வந்து என்னிடம் பேசுவது போல் எனக்குள் பாவனை எழுந்தது. எழுத்தாளரை சந்திப்பது அபாயகரமானது. 🙂

சமீபத்தில் பார்த்த படங்களை ஒப்புமைக்குக் கொன்டு வருவது என்னிடம் உள்ள கெட்ட பழக்கம். அந்த மாதிரி சில படங்களும் இந்த நாவலும்:

1. மௌன கீதங்கள்: ஆனாதிக்க மனோபாவத்தின் உச்சத்திற்கும், அத்தகைய வெளிப்படையான சிலாகிப்பின் பெருமிதங்களுக்கும் பாக்கியராஜ் என்றால், ஆணாதிக்க கோர முகத்தின் பல்லிளிப்புகளுக்கும், தலைதூக்கும் தருணங்களுக்கும் — கண்ணாடியாக கன்னியாகுமரி அமைகிறது.

தன் மனைவியைத் தவிர பிறிதொருவரை கணவன் சுகித்தால் கண்டுகொள்ளக் கூடாது என்பது மௌன கீதங்களின் சப்பைக்கட்டு. அதுவே, மனைவிக்கு என்றால், சட்டதிட்டங்கள் எவ்வாறு மாறும்? கன்னியாகுமரி போட்டு உடைத்தது போல் சொன்னாலும், அழுத்தந்திருத்தமாக உணர்வுபூர்வமாக சந்திக்கு கொண்டு வருகிறது.

2. சிவா மனசில சக்தி: இந்தப் படத்துடன் எல்லாம் ஒப்பிடுவதற்கு ஷமிக்க வேண்டும். என்றாலும், புத்திசாலி பெண் தன்னுடன் அறிவார்ந்த வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதில் ஆண் சிந்தனை வெல்வது என்பது கன்னியாகுமரியின் ஹீரோ இயக்குநர் ரவிக்கு காமத்தின் உச்சம். ஷார்ப்பான வளைவுகளும் துடிப்பான மூளையும் கொண்டவள் ‘சிவா மனசுல சக்தி’யின் கதாநாயகி. இவ்வாறாகவே அனைத்து பெண்களும் அமைவதெல்லாம் கற்பனையின் உச்சம். வெள்ளித்திரையிலும் அச்சு இலக்கியங்களிலும் மட்டுமே நம்பக்கூடிய வகையில் வெளியாகும் fantasy ecstasy.

காதலைத் திரையில் காட்சியாக்குவது நிறைய பார்த்திருக்கிறோம். அந்தக் காதலை தமிழ் எழுத்தில் வடித்து பெரும்பாலும் படித்ததில்லை. கன்னியாகுமரியில் காமத்தின் உச்சகட்டங்கள் வருகின்றன. விவரிக்கப்படுகின்றன. விலாவாரியாக பின்னணியோடு சொல்லப்படுகின்றன. அவற்றை வெகு லாவகமாக கையாண்டதற்காகவே Hats off சொல்லவேண்டும்.

கன்னியாகுமரி இந்தியாவின் வேர். முக்கடல் சங்கமத்தில் உருவாகும் வித்தில், இந்தியாவே வளர்ந்து நிற்பதாகக் கொள்ளலாம். மூலஸ்தானம். எல்லாவற்றுக்கும் துவக்கமாக இருப்பதால் அங்கே வந்து தங்கள் படத்திற்கான கருவைத் தேடுகிறார்கள். கன்னியாகுமரியும் காத்திருக்கிறாள். இவர்களும் தக்க விதைக்காக காத்திருக்கிறார்கள். குமரியிடம் கருவைத் தேடுவதா? அவளே இன்னும் குமாரிதானே?

மேலே சொன்ன மாதிரி மொத்தமாக நாவல் எழுதினால் பெரும்பாலாரிடம் கொண்டு செல்ல இயலாது. அதை ஜெயமோகன் அறிந்தே இருக்கிறார். அதனால், தாய்மையைக் குறித்து, பாரதம் எழுந்து மரமாக கிளைவிடும் தோற்றுவாய் குறித்து, வாக்குவாதங்களில் ஈடுபடும் துணைவி அதில் சாமர்த்தியமாக தோற்பது குறித்து, நல்ல சினிமா குறித்து, மிட் லைஃப் போராட்டங்கள் குறித்து, வாழ்ந்து கெட்டது போல் பேர் வாங்கத் துடிக்கும் படைப்பாளியின் கோராமை குறித்து, முன்னேற வேண்டுபவர்களின் சமரசங்கள் குறித்து கதையாகவும் குறியீடுகளாகவும் பேசியிருக்கிறார்.

அ முத்துலிங்கத்தை சந்தித்தபோது ஜெயமோகன் குறித்து சொன்ன விஷயம் இது:

இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்னை ஒளிரும் பொற்கம்பளமாக கீழே இறங்கி இறங்கி காணாமல்போகும் நானும் சில அன்னியர்களும் இருண்ட வானில் மிதந்து கொண்டிருபோம் என நினைக்கிறேன்.

ஒரு சாதாரண வலைப்பதிவை முடிக்கும்போது கூட இவ்வாறு கவித்துவ எழுச்சியுடன், அசாதரணமான சித்தரிப்புடன், படம் பிடிக்கும் ஒளிக்கலைஞனின் சிரத்தையுடன் விட்டுச் செல்கிறார்!’ என்பது அ முத்துலிங்கத்தின் பாராட்டு. இந்த புனைவிலும் ஒவ்வொரு அத்தியாயத்தின் உச்சகட்டத்திலும் அதே போன்ற காட்சியமைப்பு இருக்கிறது. அந்தப் பகுதிக்கு முத்தாய்ப்பாக, எண்ணங்களை விட்டு அகலாத படிமமாக, நுரை என்னும் ட்விட் போன்ற வார்த்தைகளையும், அலை என்னும் அனுபவம் போன்ற நிகழ்வுகளையும், கடல் என்னும் வாழ்க்கை போன்ற புரிதல்களையும் மீண்டும் மீண்டும் எழுப்புகிறது.

ஜே ஜே சில குறிப்புகளின் ஜே ஜே போல் இங்கும் ஒரு அவார்டு டைரக்டர் இருக்கிறார். பெயர் கூட ஜார்ஜ். நாவலில் வரும் ஜார்ஜ் ஆதர்ச நெறியாளுநர். ஜோசப் ஜேம்ஸை ஒத்த குறிப்பிடத்தக்க படைப்பாளி.

எண்பதுகளில் வந்த தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கு மைக்கேல், சூசை என்று கிறித்துவப் பெயர் சூடப்பட்டிருக்கும். அதே போல், அனால், குமரி மாவட்டத்தில் நிறைய மைனாரிட்டி இருப்பதாலும் நாவலில் புழங்கும் எதிர்மறை கதாபாத்திரத்திற்கு ஸ்டீபன் என்று பேர் வைக்கப்பட்டிருக்கிறது.

புனைவு எழுத்தாளர்களுக்கு எழுதக் கற்றுத்தரமுடியாது என்பது என்னுடைய தீவிரமான நம்பிக்கை. விசிறியிலிருந்து காற்றை வரவழைக்கலாம். வெளியில் வெக்கையடித்தால், விசிறியும் வேகும். ஆனால், மாலை நேர கடற்கரைக் காற்றில் (என்னதான் கார்பன் நச்சு கலந்திருந்தாலும்), அந்தக் காற்றை வாங்கப் போகும் சுகமே அலாதி. உணர்ச்சிகளை, உள்ளப் பிரவாகத்தை, ஆழ்மனக் கிடக்கையை அப்படியே தங்குதடையின்றி சொல்லிக் கொண்டு போகிறார்.

கன்னியாகுமாரியின் பிரச்சினைகள் என்று பார்த்தால் முன்னுரையில் உரிமை துறப்புகள் (சற்று இளைப்பாறும் பொருட்டு நான் எழுதிய நாவல் இது. இதன் எளிய கதை நகர்வின்…), உத்தம தமிழச்சியாக வந்துபோகும் நாயகி, சினிமாத்தனமாக இயங்கும் சில பெண் கதாபாத்திரங்களை சொல்ல வேண்டும்.

உரையாடல்களினாலும் எண்ணவோட்டங்களினாலும் சம்பவங்களினாலும் இயக்குநரின் மனைவி இரமணிக்கு கொடுக்கும் விவரிப்பும் அழுத்தமான சித்தரிப்பும் பிற பெண்களுக்கு உருவாகவில்லை.

ஆண்களின் குழப்பங்களைக் குறித்து அறிந்துகொள்ள வேண்டுமா? அவர்களின் வெளிப்படையான புன்சிரிப்புக்கு கீழே புதைந்து கிடக்கும் அழுக்குகளை அவசியம் ஆராய வேண்டுமா? ஆணாகிய நீ படித்தாலும் தன்னிரக்கத்தோடு தன்னல செய்கையை புரிய வைக்க முடியுமா? ‘ஜெமோ’வின் கன்னியாகுமரியை எடுங்கள்.

பிற விமர்சனங்கள்:

1. வ.ந.கிரிதரன்: இந் நாவலிற்கான கரு கி.ராஜநாராயணின் கன்னியாகுமரியை மையமாக வைத்துப் ,பின்னப் பட்ட சிறுகதைகளிலொன்றான ‘கன்னிமை’ என்னுமொரு சிறுகதையினை மையமாக வைத்து உருவானதாக நாவலின் நாயகன் ரவிகுமாரினூடாக நாவலாசிரியர் ஜெயமோகன் நினைவு கூருகின்றார்.

2. ஹரி வெங்கட்: ரவி மற்றும் வேணு ஆகியோர் வார்த்தைகளில் அவர் அறிந்த சினிமாவை பேசுகிறார். மேலும், “அவளை துளைத்து மறுபக்கத்தை அடைந்து மெத்தையின் வெறுமையை அடையலாம்”, எனும் வரியில் ஜெயமோகனின் காமம் தெரிக்கிறது.

3. ஜெயக்குமார்: பொதுவாக ஆண்களுக்கு முதிர்ச்சியான மனநிலை கொண்ட பெண்களைப் பார்த்ததும் ஏற்படும் பயமும் அவர்கள் பால் ஏற்படும் இனம் புரியாத பயமும் அவர்களை தவிர்க்க முடியாமல் நேசிக்கவும் செய்யாமல் செய்துவிடுகிறது.

Interview with Jeyamohan: Videos & Audio Chat

நேர்காணுபவர்கள்: தூள்.காம் பிபிபாலாஜி ஸ்ரீனிவாசன் & ச திருமலை ராஜன்

1. தமிழ் இலக்கிய சூழல் இப்போது எப்படி இருக்கு?

2. இணையத்தினால் ஏற்பட்ட பாதிப்பு

3. விஷ்ணுபுரம் உருவான கதை

4. எழுத்தாளர் விமர்சகராக இருப்பதில் +ve -ve (இருக்கும் ”சிறந்த”
லிஸ்டில் எல்லாம் இவர் எழுத்துக்களை இவரே சேர்த்துக்கொள்வது)

5. அமெரிக்க பயணம் எப்படி இருக்கு?

6. அவர் ஊர் மக்களின் நகைச்சுவை உணர்வு

7. இலக்கிய சர்ச்சைகளில் ஈடுபடும் எழுத்தாளர்கள்

8. தன் எழுத்தை மார்க்கெட்டிங் செய்ய வேண்டிய சூழல்

நன்றி: http://www.itsdiff.com/Tamil.html

My experiences with A Muttulingam

சொல்வனம் இதழில் வெளியான வியத்தலும் உண்டே கட்டுரையில் இருந்து:

நெடுஞ்சாலைப் பயணத்தின் நடுவே ஜெயமோகன் இணைந்து கொண்டார். கையில் பத்துத் தோட்டாக்குறிகள் போட்ட சிறு குறிப்பு வைத்திருக்கிறார். அதில் இருந்து கேள்விகள் விழுகின்றன. ‘உங்கள் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் எங்ஙனம் உள்ளன?’; ‘கனவுக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பு?’

முழுவதும் வாசிக்க: முத்துலிங்கத்துடன் ஒரு தினம்


தொடர்புள்ள பேட்டி & சுட்டி:

அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்: “நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்!” :: சொல் புதிது ஏப்ரல் 2003 இதழில் வெளியான பேட்டி

ஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கல்லூரியில் படிக்கும்போதே தன் முதல் சிறுகதை தொகுதியான ‘அக்கா ‘ வை கைலாசபதி முன்னுரையுடன் வெளியிட்டு பரவலான கவனத்தை கவர்ந்தார் . பிறகு வேலை நிமித்தம் வெளிநாடு சென்றார் .

ஐ நா அதிகாரியாக ஆப்ரிக்க நாடுகளிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றினார். இந்த வலுவான அனுபவப்பின்னணியுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத வந்தார் . அவரது அடுத்த சிறுகதை தொகுப்பை மித்ர வெளியிட்டது . ‘திகட சக்கரம். ‘ தொடர்ந்து ‘ வடக்கு வீதி ‘ முதலிய தொகுதிகள் வெளிவந்தன.

சமீபத்தில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ள ‘மகாராஜாவின் ரயில் வண்டி ‘ மிகவும் இலக்கிய முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. அ.முத்துலிங்கத்தின் கட்டுரைகளும் புகழ்பெற்றவை. இலங்கை அரசின் சாகித்ய விருது பெற்றுள்ளார் .


A Muttulingam « Tamil Archives

A Muttulingam is free! But, why? « Snap Judgment

கடற்கரய் in தீராதநதி (குமுதம்) – ஜூன் 1, 2007: “ஜனநாயக்தில் எனக்கிருந்த நம்பிக்கையும், மதிப்பும் போய்க்கொண்டிருக்கிறது – அ.முத்துலிங்கம்”

சமகால தமிழிலக்கியத்திற்கு ஈழம் வழங்கியுள்ள கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். ஒரு வனத்தின் புதிர்ப் பாதையைப்போன்று விரியும் இவரின் படைப்புகள் ஒரு வானத்தின் திடீர் திடீர் வண்ணமாறுதலுக்கு ஒத்து இயங்குபவை. கூடவே இவரின் படைப்புலகம் மரபின் வேர்களிலிருந்து விடுபட்டுவிடாதவை.

1958 முதல் எழுதிவரும் முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தில் பிறந்து பல அரசியல் நெருக்கடிகளால் புலம் பெயர்ந்தவர். இருபது வருடங்களாக ஐக்கியநாடுகள் சபையில் அதிகாரியாகப் பணிபுரிந்துவிட்டு ஓய்வு பெற்றபின் தன் மனைவியுடன் தற்சமயம் கனடாவில் வசிக்கிறார்.

இலங்கை அரசின் ‘சாகித்ய விருது’ (1998), ‘இலக்கியச் சிந்தனை விருது’, ‘இந்திய ஸ்டேட் வங்கி பரிசு’ என பல விருதுகள் பெற்றவர். இவரின் 75 சிறுகதைகள் அடங்கிய முழுத் தொகுதி ‘அ. முத்துலிங்கம் கதைகள்’ ஒன்றும், ‘அங்கே இப்ப என்ன நேரம்’ என்ற முழு கட்டுரைத் தொகுதி ஒன்றையும் ‘தமிழினி’ வெளியிட்டிருக்கிறது. ‘வியத்தலும் இலமே’ என்ற, இவர் எடுத்த உலக எழுத்தாளர்கள் நேர்காணல் நூல் காலச்சுவடு வெளியீடாகவும் வந்திருக்கிறது.

‘கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது’’ ‘உயிர்மை’ வெளியிட்டிருக்கும் நூலின் தொகுப்பாசிரியர் இவர்.