அப்பாவை டிவி பார்ப்பவர் என்று சுருக்கலாம். அம்மா வெறும் சமையற்காரி. மகளோ மூளை வளர்ச்சி பெறாதவள். மனைவி பாலியல் தொழிலாளி.
இப்படி அடைமொழிக்குள்ளும் உருவகங்களுக்கும் நடுவே நிஜ வாழ்க்கை சிக்கிக் கொள்வதில்லை. ஆனால், பெரும்பாலான கலை வடிவங்களின் தமிழ் விமர்சனங்கள் அடைபட்டிருக்கிறது.
ஜெயமோகன் இந்துத்வாவாதி. சாரு நிவேதிதா திருடர். எஸ் ராமகிருஷ்ணன் தேய்வழக்கு. காலச்சுவடு கண்ணன் பிசினஸ்மேன். ’அட்டகத்தி’ தலித் காவியம்; உயிர்மை இலக்கிய பத்திரிகை; மக்கள் தொலைக்காட்சி தமிழை வாழவைக்கிறது.
சிக்குண்டவர்களே புதியவர்களை வலைக்குள் நிறுத்து வைப்பது உப வழக்கம். பெருநிதிக் கிழார், டூரிஸ்ட் இலக்கியவாதி என்று பட்டங்கள் கொடுத்து முடக்குவதும் வாடிக்கை.
திரைப்படத்திற்கு சாயம் பூசுதல், எழுத்தாளர்களை தொலைக்காட்சி சவுண்ட் பைட் பார்ட்டி ஆக்குவது, போன்றவை சந்தைப்படுத்தலின் அங்கம். கருணாநிதி மோதிரம் வாங்கி அண்ணா கையால் போட்டுக் கொண்டது போல் தன் ஆக்கங்களை தானே பிராண்டிங் செய்வது எல்லாமே மார்க்கெடிங்கில் நியாயம்.
மோஸ்தர்களை மட்டுமே முன்னிறுத்தும் தமிழக சூழலுக்கு, போதிய அளவு மாற்று சிந்தனையாளர்கள் இல்லாதது முதல் காரணம். எதிர்கருத்து சொல்பவர்களுக்கு ஆங்கில எழுத்துகள் சோறு போடுகிறது என்பது முக்கிய காரணம்.