Tag Archives: நன்றி

சொல்வனம் – இ.பா. சிறப்பிதழ்

இ.பா. சிறப்பிதழ் அமர்க்களமாக வெளியாகி விட்டது.
புத்தம்புது சொல்வனம் இதழை வாசியுங்கள்.
உங்கள் வாழ்த்தும் விமர்சனங்களும் தேவை.

இதழ்-370 – சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

கனடா வெங்கட் இதழின் சிறப்பாசிரியர்.
அவர் தனிப்பட்ட நெருக்கடிகளில் இருந்தாலும் துவக்கிய விஷயத்தை செவ்வனே முடித்துக் கொடுத்தார்.

சொல்வனம் சிறப்பிதழ் போட வேண்டும் என்று பல்வேறு தலைப்புகளில் பேசிக் கொண்டே இருந்தோம்.
– திருநெல்வேலி சிறப்பிதழ்
– இந்திய மொழிகளுக்கான தமிழாக்க சிறப்பிதழ்
– ஆல்பர்ட் காம்யூ
– ஹிந்தி மொழி
…இன்னும் பல விவாதித்தோம்; பொறுப்பை ஒப்படைத்தோம்; சற்றே முஷிந்தோம்.
எனினும், எதுவும் கைகூடவில்லை.

எனக்கு இந்திரா பார்த்தசாரதியை தொலைபேசி மூலமாக அறிமுகம் செய்தவர் வார்த்தை பி.கே சிவக்குமார்.
அழைத்தவுடன் தொலைபேசி மூலமாக நேர்காணல் பேட்டிக்கு ஒத்துக் கொண்ட இளைஞர் இ.பா.
அப்போது தமிழோவியம். இன்று சொல்வனம்.
பேட்டி மறு பிரசுரம் கண்டிருக்கிறது.

நான் ஏ.ஐ., காணொலி, ஊர் சுற்றல், தொலைக்காட்சி, தூக்கம் என்று மந்தகதியில் வாழ்க்கையைக் கொண்டாடி இருந்தேன்.
வாரம் ஒரு முறையாவது அழைத்து, தமிழின் எல்லா விமர்சகர்களையும் பட்டியலிட்டு, அவர்களையும் ஒருங்கிணைத்து முழு மூச்சாக இதழை நடத்திக் காட்டியவர் வெங்கட்ரமணன்.
அவரின் எழுத்துமுறை ஆகட்டும்; செயல்பாடு ஆகட்டும் – எளிமையும் கறார்தன்மையும் கலந்த இராணுவ ஒழுங்கு.
வெங்கட் இவ்வளவு சிரத்தை எடுக்காவிட்டால் சிறப்பிதழ் சிறப்பான இதழாகி இருக்காது.

இதுவரை வந்த எல்லா சிறப்பிதழுக்கும் பதாகை வடிவமைத்தவர் அனுகிரஹா.
அவருக்கு(ம்) உடல்நலம் சரியில்லை.
எனக்கும் சரியான பல்வலி.
கடைசி நேரத்தில் அருண் அருணாச்சலம் கை கொடுத்தார்.
இந்தியாவில் இருந்தாலும் பயணத்தின் நடுவிலும் பேனர் கொடுத்தார்.
நல்ல வேளை – ஏ.ஐ. உபத்திரவத்தில் இருந்து உங்களுக்கு விடுதலை.

ஏ.ஐ. முழுக்க முழுக்க விமர்சன ஆய்வு கட்டுரையை அடிக்குறிப்புகளுடன் மொழியாக்கம் செய்து தந்துள்ளது.
அந்த ஆய்வறிக்கையின் பேராசிரியரை நம் சிறப்பிதழ் பேராசிரியர் தொடர்பு கொண்டு ஒப்புதல் பெற்றது, நிரந்தர ஆசிரியர் மைத்ரேயனின் கண்களைக் குளமாக்கி கண்ணீர் மல்கச் செய்தது.
“இதைத்தானே செய்யச் சொன்னே பாலா!” என்று அவர் இடித்து, வெங்கட் வழி அனைத்திற்கும் உரிமமும் மரியாதையும் செய்யப் பணித்தார்.

ஆனால், கோகுல் சால்வாடியின் ‘பைரசி’ போன்ற தொடர்களை கேட்டு வாங்கி அலசி ஆராய்ந்து பதிப்பித்தாலும் காப்புரிமையை வாழையிலை விருந்தில் உப்பாக கவனிப்பவன் நான்.
இதழில் தொடர்களும் வந்திருக்கிறது.
இந்தத் தொடர் ஆசிரியர்கள் இல்லாவிட்டால் இவ்வளவு நாள் சொல்வனம் தாக்குப் பிடித்திருக்காது.
ஜூலை நான்கு – அமெரிக்க சுதந்திர தினம் – அதை ஒட்டிய லதா குப்பா கட்டுரை.
அருணாச்சலம் ரமணன் அலாஸ்கா சென்றிருக்கிறார் – அவரின் பயணத்திலும் வேதியியலும் இரசாயனவியலும் கலக்கிறது.
ஆசாத் ஹைக்கூ-வில் கரைக்கிறார்.
ரவி நடராஜன் கனடியன் – நம் தகவலை விற்று – எனக்குத் தரவு, அவர்களுக்கு வரவு என்பதை சுட்டுகிறார்.
சொர்ணவேல் ஈஸ்வரன் – கரணம் தப்பினால் மரணம் என்னும் மீடூ விஷயத்தில் மாட்டிய இயக்குநரின் படைப்பை ஆராய்கிறார்.
ஜெகதீஷ் எழுத்தை மூன்று முறையாவது வாசிக்க வேண்டும் – தத்துவம் + வாழ்க்கை + ஆன்மிகம்
லோகமாதேவி முக்கியமான தொடரில் கொலம்பஸ் உடன் கப்பலில் அழைத்துச் செல்கிறார்.
ரகு ராமன் எழுத்து என்றும் என் மனதிற்கு இனிமை. நான் பேட்டி கண்ட முதல் எழுத்தாளர் இ.பா. என்றால், வீடியோவில் நேர்கண்ட முதல் நபர் இவர்.

மீண்டும் இ.பா. சிறப்பிதழ் நன்றிகளுக்கு வந்து விடுவோம்.

என் நலம் விரும்பி சரஸ்வதி தியாகராஜன்.
பல விஷயங்களைக் கொணர்ந்து சேர்த்தார்.
இ.பா. மகள் பத்மா உடன் உரையாடி அரிய புகைப்படங்களைப் பெற்றுத் தந்தார்.

மாலன் கட்டுரை ‘அசல் ஆசான்’ யார் என்று எண்ண வைக்கும்.
அழகியசிங்கர் எனக்குப் போட்டியாக பட்டியல் போட்டு இருக்கிறார்.

நான் ஃபேஸ்புக்கில் இட்ட பதிவைப் பார்த்து இரு விமர்சகர்கள் தங்கள் ஆக்கங்களைப் பகிர்ந்தார்கள்
– ராஜா ராமஸ்வாமி
– அன்பழகன்

வெங்கட் துறை வாரியாக விமர்சகர்களைப் பிடித்தார்.
நாடகம்
ஒவ்வொரு நாவலுக்கும் ஒருவர்
நட்பு
ஆசிரியர் – தமிழ்ப் பேராசிரியர்
சிறுகதை
விமர்சனம்
வைணவம் – இந்து மதம்
சரித்திரம் – வரலாறு
சமகாலத்தவர்
புது தில்லி வாசம்

அது அனைத்தும் இதழில் இடம் பிடித்திருக்கிறது.

என் துரித வாசிப்பில்
1. சுனில் கிருஷ்ணன் கட்டுரையை சிறப்பிடத்தில் வைப்பேன்
2. கிரிதரன் எழுத்தில் இருக்கும் நேர்மையும் மதிப்பீடும் முழுமையான அலசலும் பிரமிக்க வைக்கிறது.
3. காளி பிரசாத் தற்காலத் தமிழில் இருக்கும் மிகச் சிறந்த விமர்சகர்.

ஸ்ரீதர் நாராயணன் காளிக்கு சரியான போட்டி. ஆனால், காளி சுறுசுறுப்பானவர்; உரிய நேரத்தில் தந்து விடுவதால் முதன்மையானவர் 🙂

அம்பை பகிர்வு எனக்கு படு சுவாரசியம்.
என்னவாக இருந்தாலும் அவர் இன்னும் கொஞ்சம் இ.பா.வைப் பற்றி சொந்தமாக எழுதி இருக்கலாம்.

நான் கூட இ.பா. குறித்து விரிவாக எழுதத் திட்டமிட்டு இருந்தேன்.
இ.பா. (அல்லது ஜெ.மோ) போன்றோர் சிறப்பான பேச்சுக்காரர்கள்.
நிறையச் சொன்னா(ல்வா)ர்கள்.
சொன்னதை எழுத்தில் கொணர்(கிறா)ந்தார்கள்.
நூல் பட்டியலையும் செயல்பாட்டையும் பணியையும் பார்த்தால் குறிப்பிடத்தக்க சாதனையாளராக, ரகரகமாக உருவாக்கி இருக்கிறார்கள்.

கைசிக நாடகம் பார்க்க இ.பா. அழைத்துச் சென்றிருக்கிறார்.
அவர் எப்பொழுதும் மின்னஞ்சலுக்கு உடனடியாக பதில் இடுவார்.
~22 ஆண்டுகள் முன்பு அழைத்த அழைப்புக்கு உடனடியாக நேரம் ஒதுக்கி நான்கு மணி நேரத்திற்கு மேல் உரையாடினார்.
அவருக்கு எங்களின் சிறிய பிறந்த நாள் அன்பளிப்பு.

புத்தகத்திற்கு நன்றி நவிலலா? நன்றியுரைப்பதற்காக புத்தகம் எழுதலா?

ஃபேஸ்புக் தலைவி ஷெரில் சாண்ட்பெர்கு (Sheryl Sandberg) புத்தகம் எழுதியிருக்கிறார். அடுத்த மாதம் நான்காம் தேதி ப்ரூக்ளின் புக்ஸ்மித்தில் வாசகர்களை சந்திக்கிறார். புத்தகத்தின் பெயர் சாய்ந்து கொள் – (‘Lean In: Women, Work, and the Will to Lead’)

அமெரிக்காவில் எல்லோரும் புத்தகம் எழுதுகிறார்கள். நிறுவனத்தின் தலைவர், வக்கீலாக இருந்து நீதிபதியாக விரும்புபவர், நீதிபதியாக இருந்து அரசியல்வாதியாகப் போகிறவர், வழிப்போக்கர், ஆசிரியர், கணினி நிரலி எழுதுபவர், நிரலி எழுதத் தெரியாதவர்… சொந்த வாழ்க்கையை கொஞ்சம் வெளிப்படையாக எழுதத் தெரிந்தால் போதுமானது.

அதைப் புத்தகமாக எடிட் செய்து, கோர்வையாகத் தொகுத்து, உன்னத கோட்பாடுகளை வெளிக் கொணர்ந்து, வாசிப்பவருக்கு சுவாரசியமும் லட்சியப் பாதை வகுப்பதில் புத்துணர்ச்சியும் சாதனைகளுக்கான வழியும் கிடைக்குமாறு அமைத்து நியு யார்க் டைம்ஸ் பெஸ்ட்செல்லர் ஆக்கிவிடுகின்றனர்.

பேஸ்புக் அம்மணி எழுதியது அந்த வகை புத்தகம்.

‘பெண்களே… வீறு கொண்டு எழுக!’
‘நிற்காதே… ஓடிக் கொண்டே இரு’
‘தேங்கி விடாதே… தளும்பினாலும் கொட்டினாலும் பொங்குவது முக்கியம்!’
’சிறப்பாக செய்வதை விட, செய்து முடிப்பதே வீரருக்கு அழகு!’
’நீங்கள் எதற்கும் கவலைப்படாமல் இருந்தால், என்ன செய்து கொண்டிருப்பீர்கள்?’

இந்த மாதிரி ஆலோசனை + ஊக்க பூஸ்ட் எல்லாம் பில்லியன் டாலர் ஐ.பி.ஓ. கண்டு செட்டில் ஆனவர்கள் சௌகரியமாக சொல்லலாம்.

காந்திஜி சேஃப்டி பின் எடுத்து வைத்துக் கொண்ட நிகழ்வு போல் இந்தப் புத்தகத்திலும் எனக்கு ஒரு மேட்டர் கிடைத்தது. ஒன்பது பக்கத்திற்கு நன்றிகள் போட்டு இருக்கிறார். அது தவிர முன்னுரை, முகவுரை, பின்னுரை என்று தமிழ்ப் புத்தகங்களை மிஞ்சும் அளவு தெரிந்தவர்களையும் விமர்சகர்களையும் நெஞ்சு நக்கியிருக்கிறார்.

என்னுடைய நூலில் நிச்சயம் பத்து பக்கத்திற்காவது வந்தனம், வணக்கம், தோத்திரம், துதி பாடல் இருக்கும்.

பத்து நாள்களும் இருநூறு பதிவுகளும்

நவம்பர் நான்காம் தேதி செவ்வாய்க்கிழமையோடு அமெரிக்க தேர்தல் மேளா இனிதே முடிகிறது. இன்னும் பத்து நாள்கள் கூட இல்லை.

இதுவரை இந்த வலைப்பதிவும் வலைவிவரங்களும்:

இடுகைகள்: 200
பகுப்புகள்: 36
குறிச்சொற்கள்: 757
மறுமொழிகள்: 594

மொத்தப் பார்வை: 21,160
மிக அதிக வருகையாளர் வந்த தினம்: நேற்று, அக். 24
எண்ணிக்கை: 879

வருகையாளர்களுக்கும் விஐபி விருந்தினர்களுக்கும் நன்றி!

என்ன எழுதலாம்? எது கூடாது?

கண்ட இடம்: வலைச்சரப் பதிவுகளுக்கான மறுமொழிகள்

வணக்கம்.

வலைச்சரத்தில் நீங்கள் இடும் மறுமொழிகள் வலைச்சர ஆசிரியர்களை ஊக்கப் படுத்தும். எனினும் “என்னுடைய பதிவை தொகுத்ததற்கு நன்றி” அல்லது “இன்னாருடைய பதிவை சேர்க்காமல் விட்டு விட்டீர்கள்” என்பது மாதிரியான மறுமொழிகளை தவிர்க்கவும். இவை வலைச்சர ஆசிரியர்களுக்கு சில தர்மசங்கடங்களை ஏற்படுத்தும். நன்றிகூறல் தனிமடலில் இருக்கலாமே 😉

தொகுப்பு பற்றி பொதுவான பாராட்டு, விமர்சனம், குறைகள் ஆகியவற்றை சுட்டிக் காட்டும் மறுமொழிகளை வரவேற்கிறோம். பாராட்டுகள், வாழ்த்துக்கள், விமர்சனங்கள் அவசியம் தேவை.

பின்குறிப்பு: கும்மிகளுக்கு தடை இல்லை 😉

இந்த பின்னூட்ட நெறிகளை விமர்சிக்க அனுமதி உண்டா என்பதையும் தெளிவாக்கி இருக்கலாம் 😛