Daily Archives: ஜூலை 27, 2006

Chidambaram temple deekshidars to take important decision today

Chidambaram temple deekshidars to take important decision today

சிதம்பரம் நடராஜர் கோவில் சர்ச்சை: தீக்ஷிதர்கள் இன்று முக்கிய ஆலோசனை

சிதம்பரத்தில் உள்ள பிரபலமான நடராஜர் கோவிலில் தேவாரம், திருவாசகம் ஆகியவற்றைப் பாட, கோவிலை நிர்வகித்து வரும் தீக்ஷிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக சிதம்பரம் நீதிமன்றத்தில் தடை உத்தரவும் வாங்கி வைத்துள்ளனர்.

முதல்வரின் கருத்து தீக்ஷிதர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில், நடராஜர் கோவிலுக்குள் தேவாரம், திருவாசகம் பாட சிதம்பரம் நீதிமன்றம் விதித்திருந்த தடையுத்தரவு நேற்றுடன் முடிந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தடையை நீடிக்கக் கூடாது என்று தமிழார்வலர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடினர். ஆனால் தீக்ஷிதர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந் நிலையில் தீக்ஷிதர்களுக்கு ஆதரவாக அர்த்தஜாம சிவபுராண வழிபாட்டுக் குழு, தில்லை திருமறை கழகம், பவுர்ணமி வழிபாட்டுக் குழு, தில்லை காளி வார வழிபாட்டு மன்றம் ஆகியவை கிளம்பியுள்ளன.

இந்த அமைப்பினர் இன்று மாலை சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள நடராஜர் கிருபா திருமண மண்டபத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தள்ளனர். இதில் தீக்ஷிதர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதுதொடர்பான அழைப்பிதழில்,

தமிழை மட்டுமே தாய் மொழியாகக் கொண்ட தீக்ஷிதர் சமுதாய பெருமக்கள், தமிழுக்கு விரோதிகள் போல ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. அதையே காரணம் காட்டி, பாரம்பரியமாக நமது முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ள ஆலய வழிபாட்டு முறைகளை விமர்சனம் செய்து ஒரு கூட்டம் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

எனவே நடராஜ பக்தர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்

என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தீக்ஷிதர்கள் தரப்பில் என்ன முடிவெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழார்வலர்களிடையே எழுந்துள்ளது.