Category Archives: Tamil Blog

Solvanam 296th Issue: சொல்வனம் மின்னிதழ்

296ஆம் இதழை – சொல்வனம்.காம் புதிய பதிப்பை – கவிதை குவிமைய இதழ் எனலாம்.

முகப்புக் கட்டுரையாக நம்பி கிருஷ்ணன். நான் அறிந்ததெல்லாம் ஷெல்லி, ஷேக்ஸ்பியர். இவர் வழக்கம் போல் தெரிந்து கொள்ளத்தக்க, வாசிக்க வேண்டிய மற்றுமொரு முக்கியமான எழுத்தாளரை ரசித்து, விதந்தோதுகிறார்: ”*எலிசபெத் பிஷப்*: இரு மொழிபெயர்ப்புகளும் சில குறிப்புகளும்”

அடுத்ததாக, மீனாக்ஷி பாலகணேஷ். ஆங்கிலத்தில் அரவிந்தரை வாசிக்க இலகுவாக இல்லை என்று சொன்னவுடன், அவரின் உன்னத காவியமான ஊர்வசீயை அழகுத் தமிழில் கொணர்ந்திருக்கிறார். இந்திய இலக்கியம் பலவிதமான தொன்மங்கள் மற்றும் புனைவுகளில் நிறைந்துள்ளது. அதில் அப்ஸரசுகளுக்கு முக்கிய சிம்மாசனம் உண்டு. இங்கே ரிக் வேதத்தில் வந்த புராணக் கதையை கவிதையாக்கின ஸ்ரீ அரவிந்தரை தமிழாக்கம் செய்துள்ளார்.

காம்பின்றித்‌ தானே மலர்ந்த மலரென ஊர்வசியை வர்ணிக்கிறார்‌. அவள்‌ இந்தியக்‌ கவிகளை வரலாறு நெடுகிலும்‌ கடுக்க முடியாத வலிமையுடன்‌ ஈர்க்கும்‌ தன்‌ கவர்ச்சிக்கு உட்படுத்தியிருக்கிறாள்‌. ஸ்ரீ அரவிந்தர்‌ இவ்விஷயத்தை மிகமேம்பட்ட முறையில்‌ தீட்டியுள்ளார்‌. இக்காவியத்தின்‌ மாண்பு அவலச்சுவை அடங்கியிருக்கும்‌ நிலையிலோ காமத்தின்‌ வெறியுணர்ச்சி துடிதுடிக்கும்‌ நேரத்திலோ, ஓவ்வொரு நிலையிலும்‌ வெளிப்படுகின்‌றது.

உட்பொருளானது இரு காதலரும்‌ தாம்‌ தகுதியுடன்‌ பெற்ற இன்பத்தைக்‌ கடந்து இருக்கின்றது. உண்மையாகவே, புரூரவஸ்‌ மரணத்திற்குட்பட்ட இம்மண்ணுலக மானுட நிலையிலிருந்து மரணமிலாத்‌ தேவர்‌ வாழும்‌ விண்மண்டலத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளான்‌. காதலர்‌ இப்புவியை அடியோடு துறந்து விட்டனர்‌. ஆயினும்‌, கீழே தொலைவிடத்தில்‌ மோனம்‌ நிறைந்ததும்‌ வல்லமை வாய்ந்ததுமான அண்டவெளியின்‌ ஊடே பசுமை நிறைந்ததும்‌, விடாமுயற்சியும்‌ சுறுசுறுப்பும்‌ உடையதுமான இப்பூமி இடைவிடாமல்‌ சுழன்று கொண்டேதான்‌ வருகின்றது.

சுழல்வது என்றவுடன் 300ஆம் இதழ் நினைவிற்கு வருகிறது. நீங்கள் வாசித்த புதிய எழுத்தாளர்களை, தற்கால புனைவுகளை, சமீபத்திய புத்தகங்களைக் குறித்து எழுதி விட்டீர்களா?

உடனடியாக அவற்றை solvanam.editor@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

மந்திரவாதியும் மணி ரத்தினமும் – பொன்னியின் செல்வன் இரண்டு

மணி ரத்னம் ஏன் பொன்னியின் செல்வன் எடுக்கிறார்?

ஏற்கனவே பத்து காரணங்களைப் பார்த்து அலுத்து இருப்பீர்கள்.

இருந்தாலும் #PS2 வந்த பிறகு 11வது காரணம்:

டைரக்டர் ஷங்கர் தியாகராஜன் மகன் நடிகர் பிரசாந்த்தை வைத்து ஜீன்ஸ் இயக்குகிறார்.
அது மதுராந்தாகன்.
தகுதி இல்லாதவர்.
பணத்தினால் பதவியை அடைபவர்.
இதுவே மாந்திரீக யதார்த்தம்.

டைரக்டர் மணி ரத்தினம் புகழ்பெற்ற விஜய் சேதுபதியையும் பணம் படைத்த அருண் விஜய்யையும் வைத்து செக்கச் சிவந்த வானம் இயக்குகிறார்.
இது பொன்னியின் செல்வன் – அருண் மொழி – ராஜராஜன்.
இது பணம் படைத்த தயாரிப்பாளர் மகன் ‘ஜெயம்’ ரவி.
இது குறிப்பால் பொருளுணுர்த்துவது.

இத்தனை காலமாய் நான் ஏன் இதை புரிந்து கொண்டு உணரவில்லை… என் போதாமைதான்!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹ்மான் தன் மச்சான் ரகுமானுக்காக “சங்கமம்” கொடுக்கிறார்.
உறவினரால் வாய்ப்பளிக்கப் படுகிறார் ஒருவர்.
அது மதுராந்தாகன்.
தகுதி இல்லாதவர்.
இதுவே ஒன்றைக் கொண்டு இன்னொன்றைச் சொல்வது.
அதற்கு பெயர் மாந்திரிகம்; எதார்த்தம்.

இது போன்ற சமரசங்களை மேஜிக்கல் ரியலிசமாகக் கொடுப்பதுதான் #பொசெ2 திரைப்படம்.

கொலைவெறியில் உண்மையான ஆதிக்க அரசர் அரக்கராக – ஆதித்த கரிகாலன் உதாரண இயக்குநர்.
அவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா போன்றவர்.
அவரிடம் கொடுத்தால் ‘ஓரம் போ’, அல்லது ‘மாடர்ன் லவ்: சென்னை’ போன்ற அசல் பதார்த்தம் வரும்.

உண்மையான சூத்திரதாரி என்பவர் திறைமறைவில் எக்சியூடிவ் ப்ரொடியூசர் ஆக இயங்குபவர்.
அவர் அசல் வாழ்வில் தோல்வியுற்றவர்.
அவர் தனியாக படையெடுத்து போரிட்டால் வெற்றி பெற மாட்டார்.
அந்த ஆள் தன் சொந்தக் காலில் சுய முயற்சியாக படம் எடுத்து படுதோல்வி கண்டிருப்பார்,
அது ‘சிவா’ – “ஓகே காதல் கண்மணி” படத்தின் அண்ணனாக வருவாரே… அவர்.
பொ.செ. கதையில் வல்லவரையன் வந்தியத் தேவன்.

நந்தினி என்பார் ‘ஐஷ்வர்யா ராய்’ என்பாரே தான்.
அவர் அசல் நடிகையாக மதிக்கப் பெறாதவர்.
ஒரு ராதிகா ஆப்தே-விற்கோ. கொன்கொனா சென்-னிற்கோ… அவ்வளவு ஏன் தற்போதைய என்னுடைய நாயகி ‘தேவி’ தபூ-விற்கோ கிடைக்கும் அந்தஸ்து கிடைக்கப் பெறாதவர்.
அதே போல் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அரசியாகக் கொண்டாடப் படாதவர்.
அவரை குறித்துணர்த்தத் தான் நந்தினிக்கு அய்ஷ்வர்யா ராயே நடிக்கிறார்.

அவரின் வயதை நேரடியாக மந்தாகினியாக மேக்கப் இல்லாமல், பூச்சுகள் இல்லாமல் உலா வருகிறார்.
டிம்பிள் கபாடியாவிற்கும் கனவுக்கன்னி ஹேமமாலினிக்கும் வயதாகும்.
இருந்தாலும் இளமையாக நினைப்போம். நடிக்கிறோம்.
நாடக மேடை.
அரச சபை.
அரசி என்பவள் நடிகை
அரசன் என்பவன் தந்தையை ரவுடியாகக் கொண்டவன்.
இயக்குநர் என்பவர் ராஜகுரு.
அனிருத்த பிரும்மராயர்.
காதில் ஒதுவார்.
ஒதுவது புரிந்தத்தா?

PS1 | Snap Judgment (snapjudge.blog)

வனபோசனம்

சென்ற மாதம் லண்டன் சென்ற வர நேரம் வாய்த்தது.
போன சமயத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக #சொல்வனம் பதிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் பிரபுவையும் கிரியையும் சந்திக்க வாய்ப்பும் அமைந்தது.
அலுவல் நெருக்கடியினாலும் கடைசி நிமிட திட்டமிடலினாலும் சிவாவினால் தலை காட்ட இயலவில்லை.
அவருக்காக இன்னொரு தடவை இங்கிலாந்து போக வேண்டும்.

வழக்கம் போல் சுவாரசியப் பேச்சு.
நிறைய இலக்கிய அரட்டை.
கொஞ்சம் போல் சொந்தக் கதை.

ஒரு தசாப்தம் முன்று சென்றிருந்தபோது ரதசாரதியாக கையில் குழலுக்கு பதில் ஸ்டியரிங் வளையத்தைப் பிடித்து விமானதளத்தில் இருந்து அழைத்துச் சென்ற கிரியின் வீட்டிற்கு சென்று சுவையான தமிழக சிற்றுண்டிகளை வெட்ட முடிந்தது.
இந்த தடவை பிரபுவின் வீட்டிற்கு செல்ல முடிந்தது. இரு வால் பெண்கள். படு சுட்டி. இங்கிலீஷ் டீ. வாயில் கரையும் இனிப்புகள்.

Jeyamohan’s Stories of the True : Translated from the Tamil கொண்டு வந்திருந்தார் கிரி.

Solvanam முன்னூறாவது இதழ் குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனையை முன்வைத்தார்.

நாள் முழுதும் உழைத்து, பேசிக் களைத்த சோர்வு தெரியாமல் உற்சாகமாக விவாதித்து, ஆரோக்கியமான விஷயங்களை முன்னெடுத்து, நான்கு மணி நேரத்திற்கும் மேல் என் தர்க்கங்களுக்கு செவி மடுத்த பிரபுவிற்கும் கிரிக்கும் நன்றி!

பூன் கேம்பிற்கு உள்ளாவது ஆங்கிலக் கதைகளை வாசித்து விட வேண்டும்.

சொல்வனம் 294ம் இதழ்

சொல்வனத்தின் புத்தம் புதிய இதழில் 23 உருப்படிகள் வந்திருக்கின்றன.
ஆறு கதைகள்; மூன்று நாவல் தொடர்கள்; மூன்று கவிதைகள் – விட்டு விடலாம்.

கட்டுரைகளில்:

  1. அந்நியனின் அடிச்சுவட்டில் – நம்பி
  2. நாடும் சுவை, தேடும் தொல்லியல் – அருணாசலம் ரமணன்
  3. நோயுற்ற சுயத்தின் அரற்றல் – மௌனியின் படைப்புகளை முன்வைத்து – சுரேஷ் பிரதீப்
  4. சர்க்கரை பூஞ்சை – லோகமாதேவி
  5. நவீனப் போர்விமானங்கள் – ஒரு அரிசோனன்
  6. இன்று நேற்று நாளை – பானுமதி ந.
  7. இந்து மதத்தில் தந்த்ரா நெறிகள் – ஷாராஜ்
  8. காசி – லதா குப்பா (தொடரில் இறுதிப் பாகம்)
  9. ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில் – மீனாக்ஷி பாலகணேஷ்

இரண்டு கட்டுரைகளை அவசியம் வாசிக்க கோருகிறேன்.

ஆல்பர்ட் காம்யூவைக் குறித்த நம்பி கிருஷ்ணனின் அலசல் – அமர்க்களம் + அட்டகாசம் + அன்னியோன்யம்.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-294/


ஸ்ரீ அரவிந்தரின் கரடு முரடான கவிதையை உள்வாங்கிக் கொண்டு அற்புதமாக மொழியாக்கம் செய்துள்ள மீனாக்‌ஷி – திறம்பட செயல்படுகிறார். – தேவையான அளவு புராணம்; கச்சிதமான செதுக்கிய கவித்துவம்; மூலத்துக்கு இம்மியளவும் பிசகாத தமிழாக்கம் – ஆன்மிகமும் தத்துவமும் தொன்மமும் சரியாகக் கலந்த உச்சம்!

அரிசோனனின் சண்டை விமானங்கள் தொடர் இந்த இதழோடு நிறைவடைகிறது. நிறைய தகவல்.
இரு போதைகள் – மனிதன் எவ்வாறு மிதக்கத் துவங்கினான் என்பதை அருணாச்சலம் ரமணனும் லோகமாதேவியும் கோடிட்டு விவரிக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் சிகரம் – வழக்கம் போல் சுரேஷ் ப்ரதீப்பின் மௌனி குறித்த பதிவு.
இதுவரை எழுதிய, வெளியாகிய எல்லா விமர்சனங்களையும் தொகுத்து வைத்துக் கொள்கிறார். அதன் பின் தன் பார்வையை முன் வைக்கிறார்.
தமிழுக்கு சிறப்பே இந்த மாதிரியான காத்திரமான தீவிரமான உரையாடல் எழுத்து தான். செமையாக இருந்தது!

நன்றி!

ஆத்தி… இது வாத்துக் கூட்டம்!

கோழி மிதித்து குஞ்சு சாகுமா?

சாகும்.

முந்தாநாள் பார்த்தபோது ஆறு வாத்துக்குட்டிகள் இருந்தன.
நேற்று ஐவரானது.
இன்று நால்வர் மட்டுமே காணக் கிடைத்தனர்.

சாட்ஜிபிடி இடம் ஏன் இப்படி என்று கேட்டால்,

  1. இங்கே நிறைய குள்ளநரிகளும் பெருச்சாளிகளும் பருந்துகளும் உண்டு. அவை வேட்டையாடுகின்றன
  2. குழந்தையாக இருப்பதால் நோய்க்கு எளிதில் உள்ளாகும். அந்த உடல்நல பாதிப்பால் இறக்கின்றன
  3. பாஸ்டன் பக்கம் திடீரென்று பூஜ்யம் டிகிரிக்குச் சென்று குளிரும். நாலு நாளாக நல்ல மழை. அந்த தட்பவெட்ப மாற்றங்களினால் மரணமடைகின்றன
  4. தந்தை வாத்திற்கு தன் குழந்தைதானா என்று சந்தேகம் வந்தால் குட்டிகளைக் கொன்றுவிடுகின்றன

அது சரி, சாட்ஜிபிடியிடம் ஆதித்த கரிகாலன் எப்படி இறந்தார் என கேட்டால் அது மணி ரத்தினத்தை உதிர்க்கிறது.

பொன்னியின் செல்வன் – இரண்டாம் பாகம்

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் தேவலாம்.
அதாவது ரஜினியின் ‘பாபா’ படத்தைப் பார்த்த பிறகு ‘சந்திரமுகி’ தேவலாம் என்று தோன்றுமே… அந்த மாதிரி தேவலாம்!

கல்கியின் ‘நந்தினி’ என்ன ஆனாள்? பொன்னியின் செல்வன்/முடிவுரை – விக்கிமூலம் (wikisource.org)

ஆபத்துதவிகள் பாண்டிய ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் முயற்சிகளில் மேலும் ஈடுபட்டு வருகிறார்கள். நந்தினி உயிரோடு இருந்த வரையில் ஆதித்த கரிகாலனுடைய அகால மரண இரகசியம் பற்றி விசாரிக்கப்படவில்லை. அதில் நந்தினியின் பெயரும் வரும் என்ற காரணத்தினால்தான். நந்தினியின் மரணத்துக்குப் பிறகு, இராஜராஜ சோழன், ரவிதாஸன் முதலிய ஆபத்துதவிகளைக் கைப்பற்றித் தண்டனை விதித்து அவர்களுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் கட்டளை பிறப்பிக்கிறான்.

நந்தினி அமரபுஜங்கன் இறந்த பிறகு தானும் உயிர் துறக்கிறாள். அதற்கு முன்னால் அவளை இராஜ ராஜ சோழர் சந்திக்கிறார். அவரிடம் தன் பிறப்பைக் குறித்த உண்மையையும், கரிகாலனின் மரணத்தைப் பற்றிய உண்மையையும் கூறிவிட்டு இறக்கிறாள்.

ஆனால், ஜெயமோகன் என்ன செய்து விடுகிறார்?

அந்த மாதிரி ஒரு தைரியசாலி சட்டென்று முடிவை எடுத்து விடுவதாகச் சொல்கிறார். நந்தினியைப் போன்று பல்வேறு சிக்கல்களை சாதுரியமாக எதிர்கொண்ட கதாபாத்திரம் அவ்வாறான இறுதியைத் தேடிக்கொள்ளும் என்பது மஹாபாரதத்தை வெண்முரசாக்கிய போதும் மாற்றப்பட்டது போல் இங்கும் பெண்களுக்கான அவருடைய பொதுமைப்படுத்திய சிறுமையாக்கம்.

சில அசல் வசனங்களும் அதற்கு ஆசானின் அசல் எண்ணங்களும்:

அசல்: குதிரை உங்களுடையதாக இருக்கலாம்; காடு என்னுடையது.
ஆசான்: கதை கல்கி உடையதாக இருக்கலாம்; கோணி என்னுடையது.

அசல்: மக்களை நம்பாதவன் மக்களை ஆள முடியாது.
ஆசான்: வாசகரை நம்பாதவன் வாசகரை வரவழைக்க முடியாது.

அசல்: அரசர் அறம் தவறினால் மக்கள் எப்படி இருப்பார்கள்?
ஆசான்: நான் அறம் உபயோகிக்காவிடில் மக்கள் எப்படி என்னை நினைப்பார்கள்?

பல இடங்களில் #PS2 இன்ன பிற படங்களையும் பாடல்களையும் நினைவுக்கு மீட்டன. #பொசெ2 -க்கு என்று தனித்துவமான மனதில் நிற்கும் காட்சி என்றால் ஒன்றே ஒன்றுதான்: கடம்பூர் மாளிகைக்குள் அபிமன்யு போல் தன்னந்தனியே குதிரை மேல் எகத்தாளமோடு சுற்றி நிற்கும் சிற்றரசர்களிடமும் பாட்டா-விடமும் ஆதித்த கரிகாலன் பொங்கி கர்ஜிக்கும் இடம்.

மற்ற எல்லா காட்சியமைப்புகளும் கதாபாத்திரங்களும் வுட்வர்ட்ஸ் கிரைப்வாட்டர் தேய்வழக்காக, ஃப்ரிட்ஜ் கஞ்சியாக, ஏற்கனவே எங்கேயோ பார்த்த குரலாக, முன்பெங்கோ கண்ட காட்சியாக இருக்கிறார்கள்.

என் பங்கிற்கு:
1. நெஞ்சில் ஓர் ஆலயம்
2. பாசமலர்
3. 96
4. திரிசூலம்

உங்களுக்கு என்னவெல்லாம் படம் நினைவிற்கு வந்து தொலைத்தது?

PS1 | Snap Judgment (snapjudge.blog)

புதிய தமிழ்க் கதைகள் – 293

புத்தம்புதிய சொல்வனம் இதழில் வந்துள்ள கதைகளுக்கான அறிமுகம் + விமர்சனம்:

1. ஜா. ராஜகோபாலன் எழுதிய தெய்வநல்லூர் கதைகள்:
நன்றாக எழுதக் கூடியவர்; கட்டுரைகளில் கவர்ந்தவர் புனைவில் மிளிர்வது கடினம். கட்டுரையாசியராக மிளிர்ந்த ஜாஜா கதாசிரியராகவும் நடத்திக் காட்டுகிறார்.

கதைகளில் அரசியல் சரிநிலை பயங்கள் கூடாது. இன்றைய கதைகளில் உள்ளதை உள்ளபடியே காண்பது அரியதாக உள்ளது. இந்தப் புனைவு சிறப்பான துவக்கம். அந்தக் காலத்திற்கு நம்மை அழைக்கிறது. நீங்கள் பார்த்த, சந்தித்த மனிதர்களைச் சொல்லுகிறது.

எல்லாவற்றையும் விட சுவாரசியமாக இருக்கிறது!


——

2. சாந்தி மாரியப்பன் எழுதிய கொடுக்கு:

முடிவை நோக்கி ஓடும் கதை. “ஆறும் அது ஆழமில்ல…” என, பெண்களுக்குள் இத்தனை விஷயம் இருக்குமா?

நாலு மாதம் கழித்து இந்தப் புனைவின் சமபவங்கள், மனதோரத்தில் கீறலாக நிலைத்திருக்குமா – இல்லை.
படிக்கும்போது திருப்தி கிடைக்கிறதா – ஆம்.

சற்றே சமீபத்திய ‘தப்பட்’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘அம்மு’, ‘ஜெய ஜெய ஜெய ஹே’ – போல் இன்னொரு முடிவு.

கதையின் நடுவே சம்பவங்கள் பலஹீனம். கதையின் உச்சகட்டம் நிறைவு.


——

3. அர்ஸுலா லெ க்வின் எழுதிய உள்ளும் வெளியும்

இதைக் குறித்து தனியாக எழுத வேண்டும். எழுதலாம்


——

4. பத்மகுமாரி எழுதிய அறுவடை

நெகிழ்வான கதை.

இந்த மாதிரி ஆக்கங்களின் ஆகப் பெரிய சிக்கல் என்னவென்றால், ஐம்பதாண்டுகள் முன்பே இதைப் படித்திருக்கிறோமோ என்னும் சந்தேகம் வரவழைக்கும் விஷயங்களைச் சொல்லும்.

இன்றைய காலகட்டத்தில், இக்கால இளைஞர்களுக்கு இந்த மாதிரி செண்டிமெண்ட் பிழிசல்கள் ஒத்து வருமா?


——

5. ந.சிவநேசன் எழுதிய சைக்கிள்

“வானத்தைப் போல”, விக்கிரமன் படம் போல் இன்னும் ஒரு எளிமையான சம்பவம்.

நடக்கக் கூடியதுதான். நல்லா இருக்கிறதுதான்.

இன்னும் நம் தமிழ் சமூகம் தொலைக்காட்சி நெடுந்தொடர் பிடியில் இருந்து வெளிவரவில்லை என்பதை நினைவூட்டிக் கொண்டால், எவ்வாறு இவ்வாறான புனைவுகள் ஹிட் ஆகின்றன என்பது புரியும்.


——

6. ஜாபாலன் எழுதிய இன்வெர்ட்டி-வைரஸ்

Reactance theory கேள்விப் பட்டிருப்பீர்கள். அதனுடன் கொஞ்சம் கோவிட், நிறைய காத்தாடி ராமமூர்த்தி, எஸ்.வி. சேகர், கிரேசி மோகன் நடை.

தத்துவார்த்தமாக “எதனால் ஊக்கம் கொள்கிறோம்?”, ‘எப்படி சொன்ன காரியத்தை, நம் மனம் செய்ய மறுக்கிறது?’ என்று சென்றிருக்கலாம். ஆராய்ச்சி, சிந்தை வளர மனம் மாறும் நிலை போன்றவற்றை உணர்த்தியிருக்கலாம்.

இப்போதைய அளவில் – ஏதோ நகைக்க வைக்க முயல்கிறார்.


——

நன்றி #solvanam

மேற்கத்திய உலகுடன் ஒப்பிட்டால் இந்தக் கதைகள் இன்னும் மூன்று அல்லது நான்கு தலைமுறை பின் தங்கியே இருக்கிறது. தமிழுலகின் தீவிர சிந்தனையாளர்கள் பணத்தைத் துரத்துவதாலோ அல்லது சீரிய முறையில் புனைவுலகை நெறியாண்டு கற்றுத் தரும் ஆசிரியர்களின் போதாமையினாலா?

சிறார் கதைகளும் ஆன்மிகமும் சற்றே ஜோதிடமும் – ஆர். பொன்னம்மாள்

ஆசானின் தளத்தில் அம்மாவைப் பற்றி பார்த்தபொழுதில் பெரிதும் மகிழ்ச்சியாக இருந்தது.

அதிலும் எங்கோ சிம்மாசனத்தில் காந்தியைப் போல், ராமானுஜரைப் போல், ரஜினியைப் போல் அமர்த்தி வைத்து பின்பற்றுவோனை “நண்பர்” என்று வேறு சொல்லியிருந்தது ஊக்கமும் பெருமிதமும் கொள்ள வைத்தது.

ஜெயமோகன் எப்பொழுதுமே செயல்வேகமும் தண்மையான பரிந்துணர்வும் கொண்டவர். அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே.
ஜெ.மோ. எப்பொழுது கடிந்து கொள்வார், எவ்வாறு அறச்சீற்றம் என்னை இடித்துரைக்கும் என்று புயல் கடந்த பிறகே உணர முடியும். அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே.
ஜெயம் என்றால் எழுத்துப் பிசாசு, கதைசொல்லி. அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே.

ஆர்.பொன்னம்மாள் – Tamil Wiki

விக்கி பக்கத்தைக் குறித்து அம்மாவிடம் காண்பித்தேன்; சொன்னேன்.

“நீயும் விக்கிப்பீடியா பக்கம் செய்யறேன்னு சொன்னே… என்னிக்காவது நேரம் கிடைக்கும்போது, ரிடையர் ஆனபிறகு செஞ்சுடுவே! நம்பிக்கை இருக்கு… ஒண்ணும் அவசரமில்ல!” என்றார்.

வாழும் போது கிடைக்கும் மரியாதை அட்சர லட்சம்!

ஆர்.பொன்னம்மாள் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

சென்னை வீரர்களும் சி.எஸ்.கே.வும்

சென்னை சூப்பர் கிங்ஸ் என்று பெயர்.
ஆனால், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வீரர் கூட இல்லை.

சோனு யாதவ் – ஆர்.சி.பி – பெங்களூர்
சாய் சுதர்சன் – குஜராத் டைட்டன்ஸ்
முருகன் அச்வின் – ராஜஸ்தான் ராயல்ஸ்
என் ஜெகதீசன் – கல்கத்தா க்நைட் ரைடர்ஸ்
விஜய் ஷங்கர் – குஜராத் டைட்டன்ஸ்
ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் – குஜராத் டைட்டன்ஸ்
டி நட்ராஜன் – சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
ரவிச்சந்திரன் அச்வின் – ராஜஸ்தான் ராயல்ஸ்
தினேஷ் கார்த்திக் – ஆர்.சி.பி – பெங்களூர்
வருண் சக்கரவர்த்தி – கல்கத்தா க்நைட் ரைடர்ஸ்
வாஷிங்டன் சுந்தர் – சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
ஷாருக் கான் – பஞ்சாப் கிங்ஸ்

பிசாத்து இருபது லட்சம் கொடுத்து, ஒருவரைக் கூடவா ஏலத்தில் எடுக்கவில்லை?

புரிகிறது…

இதே போல்தானே கால்பந்து கிளப்புகள் நடக்கின்றன!?
அமெரிக்க ஃபுட்பால், கூடைப்பந்து எல்லாம் கூட இப்படித்தானே…
பாஸ்டன் நகரத்தில் பிறந்த வீரர் –> சிகாகோ அணிக்காக ஆடுவாரே!?

இருந்தாலும்…

துலீப் கோப்பையிலும், ரஞ்சி டிராபியிலும் நம்ம உள்ளூரு பசங்க ஜெயிக்க வேண்டும் என்னும் நினைப்பு வரும்.
இப்பொழுது ராஜஸ்தான் ராயல் ஜெயிக்கணும்னு நெனப்பு வருது.

எது எப்படியோ…

இருபது ஓவர் பந்தயத்தில் கடைசி பந்து வரை இருக்கை நுனியில் இருபத்தைந்து பேர் உட்கார்த்தி வைக்கிறார்கள்.
அதற்கு தனி மேலாண்மை நிர்வாகமும் நடுங்காத அமரிக்கையும் சூது தகிடுதத்தங்களும் வேண்டும்.
அத்தனையும் ஒருங்கிணைக்கிறார்கள். அரங்கேற்றுகிறார்கள்.

லலித் மோடி இல்லாவிட்டால் என்ன? எத்தனையோ எத்தர்கள்!

Solvanam Stories – 292nd Issue

சொல்வனம் இதழின் 292வது வெளியீட்டில் நிறைய கதைகள் வந்திருக்கின்றன.

ஒவ்வொன்றையும் பற்றி எனக்குத் தோன்றியவை:

  1. 1/64, நாராயண முதலி தெரு: சித்ரூபன் எழுதியிருக்கிறார்

அந்தக் கால நினைவுகள். சொல்வனம் என்றாலே நொஸ்டால்ஜியா என்னும் தேய்வழக்கிற்கு பொருத்தமான ஆக்கம். அவ்வப்போது, அந்தக் கால ‘ரெட்டை வால் குருவி’, ‘அழியாத கோலங்கள், ‘கோகிலா’ என்று பழைய படங்களைப் பார்ப்பேன். இதுவும் அது போன்ற ஒண்டுக் குடித்தன பதிவு. இங்கு சென்றிருக்கிறேன். பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். அனுபவித்திருக்கிறேன். அதை சிறப்பாக மலரும் நினைவுகள் கொடுக்கிறார்.

  1. இப்படியும் ஒரு நாள், ஒரு கதை: மோஹன் ஹரிஹரன் எழுதியிருக்கிறார்

இது “Everything Everywhere All at Once” போன்று எல்லாமுமாக இருக்கிறது.
அதி புனைவா… உண்டு
அறிவியல் புனைவா… உண்டுங்க அம்மா
நிஜ சம்பவங்கள்… உண்டு ஐயா
கட்டுரை தளத்தில் தகவல்கள்… அதுவும் உண்டு
இதையெல்லாம் கிண்டலடிக்கும் சுய எள்ளல்… எல்லாம் உண்டு

  1. ஒரு குழந்தையும் இரு உலகங்களும்: விக்னேஷ்

இது சிறப்பான ஆக்கம். மனதில் பதியும் சித்திரங்கள். பாத்திரப் படைப்பு. இருண்மையைக் கோரும் விவரிப்பு. நல்ல படைப்பு!
வாழ்த்துகள்!!

  1. Femino 16: சப்னாஸ் ஹாசிம்

இதை விமர்சித்தால் மாட்டிக் கொள்வீர்கள். முதலில் கதை புரிந்ததா என்று கேட்டுக் கொள்ளுங்கள்… அப்புறம் பெண்ணியம், அரசியல் சரிநிலை, இஸ்லாம் மதம் – வேண்டாம்… மாட்டிக்குவேன். விளங்கிக் கொண்டு வருகிறேன்.

நீங்கள் படித்துப் பார்த்து உங்களுக்குப் புரிந்ததை சொல்லுங்கள்

  1. சுத்தமும் ஐரீனும்: பிரதீப் நீலகண்டன்

கோகுலம் படித்த திருப்தி கிடைக்கிறது. குழந்தைகள் பகுதி துவங்கியிருப்பதை அறிவிக்க மறந்து விட்டார்கள் #Solvanam

  1. ஒரு தபலா, சாரங்கி, கே.கே மற்றும் நான்: தேஜூ சிவன்

தமிழ் தொலைக்காட்சிகளின் சீரியல் பார்த்த நிறைவைத் தரும் நெகிழ்வான உருக வைக்கும் கண்ணீர் காட்சிகள் நிறைந்த சிந்து பைரவி. ‘சுந்தரி’, ‘எதிர் நீச்சல்’, ‘மிஸ்டர் மனைவி’, ‘இனியா’, ‘கயல்’, ‘இலக்கியா’, ‘அன்பே வா’, ‘அருவி’ எல்லாம் பார்த்து கொலை வெறியில் உருவாகிய கதை.

  1. பனிக்காலத்தின் பகல்: ராஜேஷ் வைரபாண்டியன்

தேவலாம். முடிவை நோக்கி ஓடும் கதை. Everything Everywhere All at Once பார்த்ததன் மல்டிவெர்ஸ் விளைவு!

தமிழில் இவ்வளவு பேர் தீவிரமாக இலக்கியத்தை பேணுவது ஆரோக்கியமான விஷயம். பல்சுவையும் உண்டு. உட்பொதியும் கிடைக்கிறது.

உங்களுக்கு எந்தக் கதை கவர்ந்தது?