புதிய தமிழ்க் கதைகள் – 293

புத்தம்புதிய சொல்வனம் இதழில் வந்துள்ள கதைகளுக்கான அறிமுகம் + விமர்சனம்:

1. ஜா. ராஜகோபாலன் எழுதிய தெய்வநல்லூர் கதைகள்:
நன்றாக எழுதக் கூடியவர்; கட்டுரைகளில் கவர்ந்தவர் புனைவில் மிளிர்வது கடினம். கட்டுரையாசியராக மிளிர்ந்த ஜாஜா கதாசிரியராகவும் நடத்திக் காட்டுகிறார்.

கதைகளில் அரசியல் சரிநிலை பயங்கள் கூடாது. இன்றைய கதைகளில் உள்ளதை உள்ளபடியே காண்பது அரியதாக உள்ளது. இந்தப் புனைவு சிறப்பான துவக்கம். அந்தக் காலத்திற்கு நம்மை அழைக்கிறது. நீங்கள் பார்த்த, சந்தித்த மனிதர்களைச் சொல்லுகிறது.

எல்லாவற்றையும் விட சுவாரசியமாக இருக்கிறது!


——

2. சாந்தி மாரியப்பன் எழுதிய கொடுக்கு:

முடிவை நோக்கி ஓடும் கதை. “ஆறும் அது ஆழமில்ல…” என, பெண்களுக்குள் இத்தனை விஷயம் இருக்குமா?

நாலு மாதம் கழித்து இந்தப் புனைவின் சமபவங்கள், மனதோரத்தில் கீறலாக நிலைத்திருக்குமா – இல்லை.
படிக்கும்போது திருப்தி கிடைக்கிறதா – ஆம்.

சற்றே சமீபத்திய ‘தப்பட்’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘அம்மு’, ‘ஜெய ஜெய ஜெய ஹே’ – போல் இன்னொரு முடிவு.

கதையின் நடுவே சம்பவங்கள் பலஹீனம். கதையின் உச்சகட்டம் நிறைவு.


——

3. அர்ஸுலா லெ க்வின் எழுதிய உள்ளும் வெளியும்

இதைக் குறித்து தனியாக எழுத வேண்டும். எழுதலாம்


——

4. பத்மகுமாரி எழுதிய அறுவடை

நெகிழ்வான கதை.

இந்த மாதிரி ஆக்கங்களின் ஆகப் பெரிய சிக்கல் என்னவென்றால், ஐம்பதாண்டுகள் முன்பே இதைப் படித்திருக்கிறோமோ என்னும் சந்தேகம் வரவழைக்கும் விஷயங்களைச் சொல்லும்.

இன்றைய காலகட்டத்தில், இக்கால இளைஞர்களுக்கு இந்த மாதிரி செண்டிமெண்ட் பிழிசல்கள் ஒத்து வருமா?


——

5. ந.சிவநேசன் எழுதிய சைக்கிள்

“வானத்தைப் போல”, விக்கிரமன் படம் போல் இன்னும் ஒரு எளிமையான சம்பவம்.

நடக்கக் கூடியதுதான். நல்லா இருக்கிறதுதான்.

இன்னும் நம் தமிழ் சமூகம் தொலைக்காட்சி நெடுந்தொடர் பிடியில் இருந்து வெளிவரவில்லை என்பதை நினைவூட்டிக் கொண்டால், எவ்வாறு இவ்வாறான புனைவுகள் ஹிட் ஆகின்றன என்பது புரியும்.


——

6. ஜாபாலன் எழுதிய இன்வெர்ட்டி-வைரஸ்

Reactance theory கேள்விப் பட்டிருப்பீர்கள். அதனுடன் கொஞ்சம் கோவிட், நிறைய காத்தாடி ராமமூர்த்தி, எஸ்.வி. சேகர், கிரேசி மோகன் நடை.

தத்துவார்த்தமாக “எதனால் ஊக்கம் கொள்கிறோம்?”, ‘எப்படி சொன்ன காரியத்தை, நம் மனம் செய்ய மறுக்கிறது?’ என்று சென்றிருக்கலாம். ஆராய்ச்சி, சிந்தை வளர மனம் மாறும் நிலை போன்றவற்றை உணர்த்தியிருக்கலாம்.

இப்போதைய அளவில் – ஏதோ நகைக்க வைக்க முயல்கிறார்.


——

நன்றி #solvanam

மேற்கத்திய உலகுடன் ஒப்பிட்டால் இந்தக் கதைகள் இன்னும் மூன்று அல்லது நான்கு தலைமுறை பின் தங்கியே இருக்கிறது. தமிழுலகின் தீவிர சிந்தனையாளர்கள் பணத்தைத் துரத்துவதாலோ அல்லது சீரிய முறையில் புனைவுலகை நெறியாண்டு கற்றுத் தரும் ஆசிரியர்களின் போதாமையினாலா?

சிறார் கதைகளும் ஆன்மிகமும் சற்றே ஜோதிடமும் – ஆர். பொன்னம்மாள்

ஆசானின் தளத்தில் அம்மாவைப் பற்றி பார்த்தபொழுதில் பெரிதும் மகிழ்ச்சியாக இருந்தது.

அதிலும் எங்கோ சிம்மாசனத்தில் காந்தியைப் போல், ராமானுஜரைப் போல், ரஜினியைப் போல் அமர்த்தி வைத்து பின்பற்றுவோனை “நண்பர்” என்று வேறு சொல்லியிருந்தது ஊக்கமும் பெருமிதமும் கொள்ள வைத்தது.

ஜெயமோகன் எப்பொழுதுமே செயல்வேகமும் தண்மையான பரிந்துணர்வும் கொண்டவர். அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே.
ஜெ.மோ. எப்பொழுது கடிந்து கொள்வார், எவ்வாறு அறச்சீற்றம் என்னை இடித்துரைக்கும் என்று புயல் கடந்த பிறகே உணர முடியும். அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே.
ஜெயம் என்றால் எழுத்துப் பிசாசு, கதைசொல்லி. அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே.

ஆர்.பொன்னம்மாள் – Tamil Wiki

விக்கி பக்கத்தைக் குறித்து அம்மாவிடம் காண்பித்தேன்; சொன்னேன்.

“நீயும் விக்கிப்பீடியா பக்கம் செய்யறேன்னு சொன்னே… என்னிக்காவது நேரம் கிடைக்கும்போது, ரிடையர் ஆனபிறகு செஞ்சுடுவே! நம்பிக்கை இருக்கு… ஒண்ணும் அவசரமில்ல!” என்றார்.

வாழும் போது கிடைக்கும் மரியாதை அட்சர லட்சம்!

ஆர்.பொன்னம்மாள் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

சென்னை வீரர்களும் சி.எஸ்.கே.வும்

சென்னை சூப்பர் கிங்ஸ் என்று பெயர்.
ஆனால், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வீரர் கூட இல்லை.

சோனு யாதவ் – ஆர்.சி.பி – பெங்களூர்
சாய் சுதர்சன் – குஜராத் டைட்டன்ஸ்
முருகன் அச்வின் – ராஜஸ்தான் ராயல்ஸ்
என் ஜெகதீசன் – கல்கத்தா க்நைட் ரைடர்ஸ்
விஜய் ஷங்கர் – குஜராத் டைட்டன்ஸ்
ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் – குஜராத் டைட்டன்ஸ்
டி நட்ராஜன் – சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
ரவிச்சந்திரன் அச்வின் – ராஜஸ்தான் ராயல்ஸ்
தினேஷ் கார்த்திக் – ஆர்.சி.பி – பெங்களூர்
வருண் சக்கரவர்த்தி – கல்கத்தா க்நைட் ரைடர்ஸ்
வாஷிங்டன் சுந்தர் – சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
ஷாருக் கான் – பஞ்சாப் கிங்ஸ்

பிசாத்து இருபது லட்சம் கொடுத்து, ஒருவரைக் கூடவா ஏலத்தில் எடுக்கவில்லை?

புரிகிறது…

இதே போல்தானே கால்பந்து கிளப்புகள் நடக்கின்றன!?
அமெரிக்க ஃபுட்பால், கூடைப்பந்து எல்லாம் கூட இப்படித்தானே…
பாஸ்டன் நகரத்தில் பிறந்த வீரர் –> சிகாகோ அணிக்காக ஆடுவாரே!?

இருந்தாலும்…

துலீப் கோப்பையிலும், ரஞ்சி டிராபியிலும் நம்ம உள்ளூரு பசங்க ஜெயிக்க வேண்டும் என்னும் நினைப்பு வரும்.
இப்பொழுது ராஜஸ்தான் ராயல் ஜெயிக்கணும்னு நெனப்பு வருது.

எது எப்படியோ…

இருபது ஓவர் பந்தயத்தில் கடைசி பந்து வரை இருக்கை நுனியில் இருபத்தைந்து பேர் உட்கார்த்தி வைக்கிறார்கள்.
அதற்கு தனி மேலாண்மை நிர்வாகமும் நடுங்காத அமரிக்கையும் சூது தகிடுதத்தங்களும் வேண்டும்.
அத்தனையும் ஒருங்கிணைக்கிறார்கள். அரங்கேற்றுகிறார்கள்.

லலித் மோடி இல்லாவிட்டால் என்ன? எத்தனையோ எத்தர்கள்!

Solvanam Stories – 292nd Issue

சொல்வனம் இதழின் 292வது வெளியீட்டில் நிறைய கதைகள் வந்திருக்கின்றன.

ஒவ்வொன்றையும் பற்றி எனக்குத் தோன்றியவை:

  1. 1/64, நாராயண முதலி தெரு: சித்ரூபன் எழுதியிருக்கிறார்

அந்தக் கால நினைவுகள். சொல்வனம் என்றாலே நொஸ்டால்ஜியா என்னும் தேய்வழக்கிற்கு பொருத்தமான ஆக்கம். அவ்வப்போது, அந்தக் கால ‘ரெட்டை வால் குருவி’, ‘அழியாத கோலங்கள், ‘கோகிலா’ என்று பழைய படங்களைப் பார்ப்பேன். இதுவும் அது போன்ற ஒண்டுக் குடித்தன பதிவு. இங்கு சென்றிருக்கிறேன். பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். அனுபவித்திருக்கிறேன். அதை சிறப்பாக மலரும் நினைவுகள் கொடுக்கிறார்.

  1. இப்படியும் ஒரு நாள், ஒரு கதை: மோஹன் ஹரிஹரன் எழுதியிருக்கிறார்

இது “Everything Everywhere All at Once” போன்று எல்லாமுமாக இருக்கிறது.
அதி புனைவா… உண்டு
அறிவியல் புனைவா… உண்டுங்க அம்மா
நிஜ சம்பவங்கள்… உண்டு ஐயா
கட்டுரை தளத்தில் தகவல்கள்… அதுவும் உண்டு
இதையெல்லாம் கிண்டலடிக்கும் சுய எள்ளல்… எல்லாம் உண்டு

  1. ஒரு குழந்தையும் இரு உலகங்களும்: விக்னேஷ்

இது சிறப்பான ஆக்கம். மனதில் பதியும் சித்திரங்கள். பாத்திரப் படைப்பு. இருண்மையைக் கோரும் விவரிப்பு. நல்ல படைப்பு!
வாழ்த்துகள்!!

  1. Femino 16: சப்னாஸ் ஹாசிம்

இதை விமர்சித்தால் மாட்டிக் கொள்வீர்கள். முதலில் கதை புரிந்ததா என்று கேட்டுக் கொள்ளுங்கள்… அப்புறம் பெண்ணியம், அரசியல் சரிநிலை, இஸ்லாம் மதம் – வேண்டாம்… மாட்டிக்குவேன். விளங்கிக் கொண்டு வருகிறேன்.

நீங்கள் படித்துப் பார்த்து உங்களுக்குப் புரிந்ததை சொல்லுங்கள்

  1. சுத்தமும் ஐரீனும்: பிரதீப் நீலகண்டன்

கோகுலம் படித்த திருப்தி கிடைக்கிறது. குழந்தைகள் பகுதி துவங்கியிருப்பதை அறிவிக்க மறந்து விட்டார்கள் #Solvanam

  1. ஒரு தபலா, சாரங்கி, கே.கே மற்றும் நான்: தேஜூ சிவன்

தமிழ் தொலைக்காட்சிகளின் சீரியல் பார்த்த நிறைவைத் தரும் நெகிழ்வான உருக வைக்கும் கண்ணீர் காட்சிகள் நிறைந்த சிந்து பைரவி. ‘சுந்தரி’, ‘எதிர் நீச்சல்’, ‘மிஸ்டர் மனைவி’, ‘இனியா’, ‘கயல்’, ‘இலக்கியா’, ‘அன்பே வா’, ‘அருவி’ எல்லாம் பார்த்து கொலை வெறியில் உருவாகிய கதை.

  1. பனிக்காலத்தின் பகல்: ராஜேஷ் வைரபாண்டியன்

தேவலாம். முடிவை நோக்கி ஓடும் கதை. Everything Everywhere All at Once பார்த்ததன் மல்டிவெர்ஸ் விளைவு!

தமிழில் இவ்வளவு பேர் தீவிரமாக இலக்கியத்தை பேணுவது ஆரோக்கியமான விஷயம். பல்சுவையும் உண்டு. உட்பொதியும் கிடைக்கிறது.

உங்களுக்கு எந்தக் கதை கவர்ந்தது?

Invitation: Articles for Solvanam

சொல்வனம் பத்திரிகை இதழ் எப்பொழுதும் புது எழுத்துகளைச் சிறப்பிக்கும் இதழாக அமையும். புதியவர்களையும் இளையவர்களையும் பற்றிய கட்டுரைகளை வரவேற்கிறோம். ஆர்வமுள்ள வாசகர்கள், தங்கள் என்ன தலைப்பில், எதைக் குறித்து எழுதப் போகிறோம் என்பதை எங்களுக்கு solvanam.editor@gmail.com தெரிவியுங்கள்.

அனைத்து இதழிலும் பிரபலமடைந்த எழுத்தாளர்கள் சிலரோடு, அத்தனை பிரபலமாகாத பல எழுத்தாளர்களையும் வாசக கவனத்திற்குக் கொண்டு வர முனைய வேண்டும். என்னவெல்லாம் எழுதலாம் என்று யோசித்தவுடன் தோன்றிய எண்ணங்கள் இவை:

அ) இரண்டு குழுக்களாக வயதையொட்டிப் பிரித்துக் கொண்டு அவர்களின் படைப்புகளை மொத்தமாக அணுகலாம். இருபது வயது முதல் முப்பது வயது வரையிலானவர்கள்; முப்பதில் இருந்து நாற்பது வயதை எட்டியவர் வரை – இந்த இரு தலைமுறையினரில் எவரெவரை நீங்கள் வாசித்து இருக்கிறீர்கள்? அவர்களுக்கு இடையேயான ஒற்றுமைகள் என்ன? அந்தப் புனைவுகளை எவ்வாறு விமர்சனப் பூர்வமாக அணுகுகிறீர்கள்?

ஆ) கடந்த பத்தாண்டுகளில் உங்களைக் கவர்ந்த மூன்று முக்கியமான நூல்கள் என்ன? கட்டுரையில் வித்தியாசமான முறையில் அணுகுகிறார் என்று எவரைச் சொல்வீர்கள்? சிறுகதைத் தொகுப்பில் எதையெல்லாம் விரும்பி வாசித்தீர்கள்?

இ) முகப் புத்தகம் (ஃபேஸ்புக்), உடனடி எழுத்து (ஃப்ளாஷ் ஃபிக்ஷன்), குறுங்கதை என்றெல்லாம் எழுதித் தள்ளுபவர் எவர்? அவற்றில் எது நெஞ்சில் நிற்கின்றன?

ஈ) கவிதைகள்: ஹைக்கூ, திரைப்பாடல், யாப்பு இலக்கணத்திற்கு உட்பட்ட வெண்பா, டிவிட்டர் குறுமொழிகள் என்று பல வகைகளில் ஒவ்வொன்றிலும் உங்களைக் கவர்ந்த ஆக்கங்கள் என்ன? ஏன் அந்தக் கவிதைகள் உங்களுக்கு நெருக்கமாகின?

உ) தினசரி எவரை வாசிக்கிறீர்கள்? எப்பொழுதாவது மட்டுமே ஒருவர் எழுதினாலும், எவர் எழுதியதை தவறவிடாமல் வாசிக்கிறீர்கள்? அத்தி பூத்தது போல் எழுதுபவர்கள் யார்? காட்டுமல்லியாகப் பூத்துக் குலுங்குவது யார்?

ஊ) எந்த முன்னணி எழுத்தாளர்கள் எவரைப் பரிந்துரைக்கிறார்கள்? அவர்களின் முக்கியமானப் படைப்புகள் என்ன? எவர் அச்சுலகில் புத்தகங்கள் நிறைய வெளியிட்டிருக்கிறார்? அவற்றில் எது இலக்கியத் தரமானது?

எ) யுவ புரஸ்கார், இளம் எழுத்தாளர் விருது போன்ற பட்டியல்களில் இருந்து நீங்கள் நாவல்களையும் கதைகளையும் தேர்ந்தெடுத்து வாசித்து, உங்கள் பார்வைகளை முன்வைக்கலாம்.

ஏ) காலச்சுவடு, உயிர்மை, தமிழினி, யாவரும், டிஸ்கவரி, சந்தியா, கிழக்கு, வல்லினம், நற்றிணை, புலம், எதிர், சிக்ஸ்த் சென்ஸ், எழுத்து, ஜீரோ டிகிரி , விடியல், தேநீர், சீர்மை, செங்கனி இன்ன பிற – புதிய எழுத்தாளர்களை எவர்கள் வெளியிடுகிறார்கள்? எந்தப் புனைகதைகளை வாசித்து இருக்கிறீர்கள்?

ஐ) நீங்கள் சிறுகதைகளைப் படிக்கிறீர்களா? கேட்கிறீர்களா? ஒலிப்புத்தக வடிவில் எதை ரசித்து உள்வாங்கினீர்கள்? கிளப்ஹவுஸ், டிவிட்டர் ஸ்பேசஸ் போன்ற தளங்களில் உங்களின் இலக்கிய கருத்துக்களையும் வாசக விமர்சனங்களையும் பதிவிடுவது உண்டா?

ஒ) புனைவு எழுதுவது என்பது செயல்பாடு; ஒரு சார்பு நிலையை எடுப்பது. அதற்கு சமூக ஊடகங்களில் தன் கொள்கை சார்ந்த நிலை எடுத்து பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையைப் பெருக்குதல் அவசியம். இந்த வகையில் பிரபலமாக இரட்டைக் குதிரை சவாரி செய்பவர்கள் யார்? அவர்களின் எழுத்துக்களை எப்படி மதிப்பிடுவீர்கள்?

ஓ) கதை மீறும் கதை, நாடகம், மொழியாக்கம், மாந்திரீக எதார்த்தம், பேய்க்கதை, துப்பறியும் கதை, காதல் கதை, அறிபுனைவுகள், வரலாற்றுப் புனைவு, மர்மக் கதை, தொன்ம மருவுருவாக்கம், திகில் கதை, பதின்ம வய்தினருக்கான ஆக்கம் – இவற்றில் ஒவ்வொரு வகையிலும் எந்தப் புத்தகங்களை பரிந்துரைப்பீர்கள்?

ஔ) கதைகளின் செவ்வியல் மற்றும் நவீன வடிவங்கள், உலக மொழிகளிலும், தமிழிலும் நிகழ்ந்துவரும் பரிசோதனை முயற்சிகள் என்ன?

இணையத்தில் எத்தனை உள்ளடுக்குகள் இருந்தாலும் எதுவொன்று சுழித்து மேலெழுந்து வருகிறதோ, அதுவே பார்வையில் விழுந்து உணர்வைத் தொடுகிறது. ஒரே சமயத்தில் ஒரு பெரும் களஞ்சியமாகவும் பொங்கிப் பெருகும் புதுவெள்ளத்தின் குமிழாகவும் நித்தியத்தையும் நிலையின்மையையும் தன் இயல்பாய்க் கொண்டது இணையம். அச்சுக்கு உரிய நேர்த்தொடர்ச்சி இணையத்தில் இல்லை, அதன் போக்கு சுழன்று விரிவது. உரையாடல்களும் எதிர்வினைகளும் பகிர்தல்களுமே இணையத்தில் உள்ள படைப்புகளுக்கு உயிர் அளிக்கின்றன. எனவே வாசகர்கள் புதிய படைப்புகள் குறித்து தொடர்ந்து பகிர்ந்து உரையாட வேண்டுமென்றும் எழுத்தாள நண்பர்கள் தம் பங்களிப்பை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

எந்த ஒரு இதழுமே படைப்புகளால்தான் கவனம் பெறுகின்றது. #solvanam அந்தப் படைப்பாளிகளின் மொத்த பங்களிப்பைக் குறித்த அறிமுகத்தையும் விமர்சனத்தையும் வரவேற்கிறது. இந்த இதழுக்குப் பல நண்பர்களும் படைப்பாளிகளும் ஒத்துழைக்க அழைக்கிறோம்.

உங்கள் தொடர்ந்த நல்லாதரவிற்கு மனமார்ந்த நன்றி. உங்கள் எண்ணங்களை எடிட்டருக்கு அனுப்பவும்- அவரது மின் அஞ்சல் முகவரி இது – solvanam.editor@gmail.com

Tamil Podcasts: Novels, Classics and Literature for Listening

சொல்வனம் ஒலிவனம் வழியாக: தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி : ஒவ்வொரு புதன்கிழமையும் கேட்கத் தவறாதீர்கள்!

கூடிய சீக்கிரமே, Saraswathi Thiagarajan சரஸ்வதி தியாகராஜன் ‘தினம் ஒரு தொடர்’ போர்டு போட்டுவிடுவார்.

இப்போதைக்கு இவற்றை ஒலியும் ஒளியுமாகக் கொடுத்து வருகிறார்:
1. இரா. முருகனின் ‘மிளகு’ – #சொல்வனம் தளத்தில் வெளியாகும் பெருங்காப்பியம் (மாதத்தின் இரண்டாம் ஞாயிறு மற்றும் நான்காம் ஞாயிறு)

2. கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம்: செவ்வியல் இலக்கியங்கள்

3. தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவல்: காலச்சுவடு கிளாசிக்

4. இரா. முருகனின் ‘தினை’ – புத்தம் புதிய புதினம்: திண்ணை (வாரந்தோறும்)

5. அதிரியன் நினைவுகள் – #solvanam Series (மாதத்திற்கு இரு முறை)


6. ராக் தர்பாரி – சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் : வெள்ளிதோறும்

இது தவிர சமகாலச் சிறுகதைகள், அஞ்சலிகள், சுவாரசியமான கட்டுரைகள், சொல்வனம் இதழில் வெளியாகும் இடுகைகள் எல்லாமும் சொல்வனம் ஒலி/ஒளிவனத்தில் கிடைக்கிறது.

https://www.youtube.com/@thamils/playlists

அவருடன் ஜமீலா. ஜி என்பவரும், வித்யா அருண் என்பவரும் கூட இணைந்து செயல்படுகிறார்கள். சுகா எழுதிய கட்டுரைகளை வித்யா சுபாஷ் வாசித்து இருந்தார்.

தரையில் இறங்கும் விமானங்கள் இந்துமதியால் 1982-ல் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதப்பட்டு பின்னர் நூல்வடிவம் பெற்றது. பொதுவாசிப்புக்குரிய படைப்பு எனினும் நாடகத்தன்மை கொண்ட நிகழ்வுகளோ செயற்கையான உணர்வுகளோ இல்லாமல் எளிய உரையாடல்கள், ரசனையின் பரிமாற்றங்கள் வழியாகச் சென்று நிறைவுறுகிறது. எண்பதுகளின் உணர்வுநிலைகளை மிகச்சரியாக வெளிப்படுத்திய பொதுவாசிப்புக்குரிய நூல்களில் ஒன்று என அடையாளப்படுத்தப்படுகிறது (நன்றி: ஜெ. விக்கி)

இந்த நாவல், துரை இயக்கி அஜித் நடித்த திரைப்படமான ‘முகவரி’யை எனக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தது. இசைத்துறையில் ஆர்வமும் திறமையும் கொண்ட ஓர் இளைஞன் சினிமாவில் முட்டி மோதி தோற்றுப் போய் குடும்பச் சூழல் காரணமாக இறுதியில் பணிக்குச் செல்லும் கதை. இந்துமதியின் நாவலில் இருந்து துரை தூண்டுதல் பெற்றிருந்தாலும் ஆச்சரியமில்லை. அண்ணன், அண்ணி பாத்திரம் உட்பட திரைப்படத்திற்கும் நாவலுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த நாவல், தொலைக்காட்சி தொடராக படமாக்கப்பட்ட போது விஸ்வம் பாத்திரத்தில் ரகுவரன் நடித்திருந்தார் என்று நினைவு. ஆனால் ‘முகவரி’யில் நாயகனுக்கு அண்ணனாக, அதாவது பரசு பாத்திரத்தை அவர் ஏற்றிருந்தார். (நன்றி: பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணன்)

வலைபரப்பு – உங்களுக்குப் பிடித்த பாட்காஸ்டிங் வலையொலி நிரலி வழியாகக் கேட்கலாம்
காணொளி – யூடியுப் கன்னல் வழியாகப் பார்க்கலாம்.

சொல்வனம் ஒலிவனம் வழியாக: தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி : ஒவ்வொரு புதன்கிழமையும் கேட்கத் தவறாதீர்கள்!

பேட்ட (அ) பட்டினம்

சென்னை என்றால் மதராஸ்.

மதராஸ் என்றால் மதர் ஆசி.

அந்த மதர் உங்கள் அம்மா ஆக இருக்கலாம்!

அல்லது அகில இந்திய அண்ணா திமுக கட்சியின் அம்மா ஆக இருக்கலாம்!

பாண்டிச்சேரி மதர் ஆக இருக்கலாம்!

மதர் தெரஸா ஆக இருக்கலாம்!

அன்னை மேரி ஆக இருக்கலாம்!

அதுதாங்க சென்னை.

இங்கே மதம், கட்சி, எல்லாம் இல்லாததால் –> மதராஸ்.

அது ஒரு மொழி.

பிராமணா பாஷை…

கொங்குத் தமிழ்…

நாகை மலையாளம்…

இதெல்லாம் தமிழென்றால் –> மதராஸில் இருப்பது தொல்காப்பியத் தமிழ். ”வளர்தமிழ்” (வளர்ந்தது, வளர்கிறது, வளரும்)

சோ இதை முதலில் திரையில் விக்கிப்பிடியாத்தனமாகப் பதிந்தார்.

அதன் பின் நாகேஷ், கமல் என்று சினிமாக்காரர்கள் தொடர்ச்சியாக இலக்கண சுத்தமாக இந்த நகரத்தின் உரையாடல்களை உதிர்த்திருக்கிறார்கள்.

பேட்ட ராப், கானா என்று இதற்கு இசை சம்பந்தமான உப பிரிவுகளும் உண்டு.

அவற்றைக் கேட்கும் போது மெரீனா கடைகளின் ஓசையும் தட்டுக்கடைகளின் உணவும் இருந்தால் சுவைக்கும்.

சென்னா பட்டூரா கிடையாது. ஆனால், அதுதான் சோளே பட்டூரா ஆக அன்றைய பாலிமர் உணவகத்திலும் தாசா-விலும் பரிமாறப்பட்டது.

திருவொற்றியூரில் சுந்தரர்

திருமயிலையில் ஞானசம்பந்தர்.

நடுவில் செயிண்ட் தாமஸ் மௌண்ட், ஆயிரம் விளக்கு என்பார்கள் சென்னையை.

அந்த சென்னையை வடது, இடது, மத்திமர் என்று செண்ட்ரல் அரசாங்கம் பிரித்து தொகுதியாக்கினார்கள்.

அதன் பிறகு பா. இரஞ்சித் அதைப் படமாகவும் எடுத்தார்.

அந்தத் தலைப்பை வெற்றிமாறனும் கையாண்டார்.

மதராஸி என்றால் வடக்கத்தவருக்கு குறியீடு.

மதாராஸ் என்றால் சென்னை செண்டிரலும் எல்.ஐ.சி. பில்டிங்கும் என்பான் கோடம்பாக்கத் தமிழன்.

மதாராஸ் என்றால் காந்தி சிலையும் வள்ளுவர் சிலையும் என்பான் சென்னைக்காரன். (அம்பேத்கார் இல்லாத இடமெங்கே?!)

சென்னைக்காரன் என்றால் வாழும் வேட்கை உள்ளவன் என்பது தமிழருக்குப் புரிந்த அடையாளம்.

நான் பச்சை சென்னையையிட்.

கல்கி: பொன்னியின் செல்வன் 2

சொல்வனம் தளத்தில் வெளியான “ஜே ஜே சில குறிப்புகள் – புத்தக விமர்சனத்தில்” இருந்து:

*

உண்மையில் மலையாள எழுத்தாளன் என்ற ஒரு கருவியைப் பயன்படுத்தி தமிழ் கலாச்சாரத்தையே கலாய்க்கிறார் சு.ரா. சரித்திர கதைகள் கொண்டு மக்களை titillate செய்து பிழைப்பு நடத்தும் சரித்தர நாவலாசிரியர்களைப் பார்த்து மலையாள எழுத்தாளர்கள் கேட்பது போல ’என்ன சிவகாமி அம்மாள் தன்னுடைய சபதத்தை முடித்துவிட்டாளா?’ என்று கேட்டு அப்பட்டமாக கலாய்த்துவிடுகிறார்.

*

சுந்தர ராமசாமியின் அந்த நறுக்: (ப.38)

“திடீரென்று சத்தம் போட்டுப் பரிகாசமாகச் சிரித்தபடியே, ‘சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா?’ என்று கேட்டான். இந்தக் கேள்வியின் உட்பொருள் விளங்க எனக்குச் சற்று நேரம் பிடித்தது. தமிழின் கட்டற்ற கற்பனைப் பண்புகளையும் காதல் கதைகளையும் எண்ணியா சிரிக்கிறான் இப்படி?

நான் ஆண்மையற்ற மெல்லிய குரலில் ஜே.ஜேயைப் பார்த்துப் பேச ஆரம்பித்தேன்.

‘புதுமைப் பித்தன் என்றொருவர் எங்கள் பாஷையின் எழுதியிருக்கிறார். நீங்கள் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’

ஜே.ஜே. தலையைக் குனித்து கவனிக்க ஆரம்பித்தான். ஆனால் அதற்குள் அவனுடைய ஆராதகர்கள் அவன் கவனத்தை வேறு பக்கம் திருப்பிவிட்டார்கள்.”

*

அந்த சு.ரா. சிஷ்யன் இன்று சொன்னியின் செல்வன் திரைக்கதையாளர் + வசனகர்த்தா.

காலம்தான் எவ்வளவு பெரிய ஆசான்!?

மயில்சாமி – அஞ்சலி

முதன் முதலாக அந்த கேசட்டை கேட்டபோது “இப்படித்தானே நகைச்சுவை இருக்க வேண்டும்! சுருளிராஜனும் தேங்காய் சீனிவாசனும் உசிலை மணியும் பக்கோடா காதரும் ஏன் இப்படி பாடாய் படுத்துகிறார்கள்?” எனத் தோன்றியது.

அது “சிரிப்போ சிரிப்பு”

மயில்சாமி என்னும் மிமிக்ரி கலைஞரும் லட்சுமணன் என்பவரும் இணைந்து அன்றைய பிரபலங்களை கிண்டல் அடித்து இருப்பார்கள்.

ஆளுங்கட்சி எம்.ஜி.ஆர். எதிர்க்கட்சி கருணாநிதி. ஆன்மீகச் செம்மல் கிருபானந்த வாரியார். சூப்பர் ஸ்டார் ரஜினி – எல்லோரையும் வைத்து ரசனையாக செய்திருப்பார்.

அதில் கடி ஜோக் ஒரு வகை – அது (சுருதி) லட்சுமணன் வகை – அந்த வகை இன்றும், என்றும், எங்கும், எப்பொழுதும் கடிக்கலாம். அவற்றுக்கு ரொம்ப யோசிக்க வேண்டாம். ஆனந்த விகடனில் வெ. சீதாராமன் நகைச்சுவை மாதிரி. கொஞ்சம் பழைய நினைப்பு + நிறைய கேலி + நிச்சயம் உல்டா. ஜாலியாக இருக்கும். மனதில் நிலைக்காது. மறந்து விடும்.

ஆனால், குரல் மாற்றிப் பேசும் மைல்சாமி குரல் – அந்தந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும். புரட்சித் தலைவர் என்றால் அவரின் பாணி. கலைஞர் என்றால் சொற்சிலம்பம், நெடுங்கவிதை புராணம். ரஜினிக்கேற்ற டயலாக், டி ராஜேந்தருக்கு ஏற்ற எதுகை மோனை வசனம்.

குறிப்பாக, ‘நிலா அது வானத்து மேல’ பாட்டிற்கு வாரியார் சொல்லும் சொற்பொழிவு. அது எனக்கு எந்தப் பாடலை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உயர்த்தி வைக்கலாம்; எந்தக் கருத்தையும் நைச்சியமாக விமர்சனமாக உள்ளே வைக்கலாம்; எந்தக் குப்பை சரக்கையும் நம் வசதிக்கேற்ப மாற்றலாம் – என்னும் நுட்பத்தை செய்முறையாக முதன் முறையாக விளக்குவார் மயில்சாமி.

ஸ்டாண்ட்-அப் என்கிறோம்; பகிடி என்கிறோம்; கலாய்த்தல் என்கிறோம்; டிஜே ஒருங்கிணைப்பு; விஜே வர்ணனை; சந்தானம், சிவ கார்த்திகேயன், மா.க.பா, ரோபோ சங்கர் எல்லோருக்கும் முன்னோடி.

ராஹுல் காந்தியை தங்கபாலு அவர்கள் மொழிபெயர்த்ததற்கு முன்னோடியாக இயக்குநர் விசுவும் கிஷ்மு அவர்களும் ஒரு நிகழ்ச்சியில் அன்றே செய்திருப்பார்கள். அதன் தொடர்ச்சியாக கொஞ்சம் காலம் கழித்து ஈழத்து தமிழை மொழிபெயர்ப்பவராக திரைப்படம் ஒன்றில் மயில்சாமியைப் பார்த்தேன்.

அந்த ஒலிப்பேழையை மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது அவர்(களின்) சாதனை. அதை சாடர்டே நைட் லைவ் போல் ஒரு இயக்கமாக மாற்றியது தற்செயல் பிறவிப்பயன். எங்காவது பாக்கியராஜையோ சந்திரசேகரையோ ஜனகராஜையோ கேட்டால் மயில்சாமி நினைவில் வருவது மெய்க்கீர்த்தி!

மிகவானுள் எரி தோன்றினும் குளமீனொடுந் தாட்புகையினும்

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த உரையாடல்:

Meet C/2022 E3 (ZTF) (her friends call her the green comet for short)

“பீஷ்ம ஏகாதசிக்காக புதன்கிழமையன்று வானில் பெருமாள் தோன்றினார். பார்த்தாயா!?”

“தவறவிட்டுட்டேனே… எப்பொழுது, எப்படி வந்தார்?”

“அது வால் நட்சத்திரம் எனலாம்… பச்சை நிறத்தில் இருக்கிறது. இந்த வால் நட்சத்திரத்தின் மையப்பகுதி இரு கார்பன் அணுக்கள் சேர்ந்த டைகார்பன் (C2) என்ற மூலக்கூறுகளால் நிறைந்துள்ளது. சூரிய ஒளியோடு இந்த டைகார்பன் அணுக்கள்  வினைபுரிவதால் இந்தப் பச்சை நிற ஒளி வருகிறது.”

அருஞ்சொல் தளத்தில் ஜோசப் பிரபாகர் கட்டுரை எழுதுவது போல் பாடம் எடுக்கிறீர்கள். ஆன்மீகமாகச் சொல்லுங்களேன்…”

“மகாவிஷ்ணு மரகத மேனியனாக பச்சை நிறத்தில் பீஷ்மருக்காக விஸ்வரூப தரிசனம் தருகிறார். எனவே இந்த காட்சியை ‘பச்சை வண்ண பெருமாள்’ எனலாம்!”

“ஏதோ ஏகாதசினு சொன்னீங்களே?”

“பீமன் கூட பட்டினி இருப்பதால் நேற்றைக்கு பீம ஏகாதசி என்று பெயர்.”

“எனக்குத்தான் காது ஒழுங்காக் கேக்கலியா! பீஷ்ம ஏகாதசினு சொல்லிட்டு இப்பொழுது சாப்பாட்டு ராமனை உபவாசம் இருப்பதாக சொல்கிறீரே?”

“பீஷ்மர் கதை உங்களுக்குத்தான் தெரியுமே! அவர் அஷ்ட வசுக்களில் ஒருவர். வசு எனும் சொல்லுக்கு வெளி (Space) என்று பொருள். இவர்கள் இயற்கையையும் இயற்கைக் கோட்பாடுகளையும் உருவகிப்பவர்கள்.”

“அதெல்லாம் சரி… பீஷ்மருக்கும் வால் நட்சத்திரத்திற்கும் என்ன சம்பந்தம்?”

“பிரபாசன் எனும் வசு வைகறையை குறிப்பவர். அவருடைய மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, வசிட்டரின் காமதேனு பசுவை கவர்ந்து செல்கையில், வசிட்டரால் சாபம் பெற்று மண்ணுலகில், சாந்தனு – கங்கை தம்பதியர்க்கு பீஷ்மராக பிறந்தார்.”

“பீஷ்ம ஏகாதசி அன்னிக்குத்தான் பீஷ்மர் பரமபதம் அடைந்தார். அன்றைக்கு பச்சை வால் நட்சத்திரம் வருது. சரியா?”

“இல்லை. பீஷ்மர் அஷ்டமியில் மரணமடைந்தார். அதாவது ரத சப்தமி அன்று பரந்தாமத்திற்கு செல்ல நிச்சயித்தார்.”

“அப்படியானால், பச்சை தூமகேது… ஏகாதசி பெருமாள்… பீஷ்ம ஏகாதசி… எல்லாம் எதேச்சைதானே?”

“கோதர்ம: சர்வதர்மாணாம் பவத: பரமோ மத: !

கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்மசம்சார பத்தனாத் !

என்ற யுதிஷ்டிரன் வினவியபோது, “அனைத்து தர்மங்களிலும் சிறந்த தர்மம் எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேட்டபோது, “நாராயண நாம ஸ்மரணையே சிறந்த தர்மம்” என்று பதிலளித்தவர். அர்ஜுனனின் ரத சாரதியாக குதிரைகளை வழி நடத்தும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா என் இதயத்தில் எப்போதும் நிலைக்கட்டும் என்று தியானம் செய்கிறார் பீஷ்மர்”

“வானியல் அறிவு அதிகம் வளராத காலகட்டத்தில் இருந்த மனிதர்கள் அவ்வப்போது வானத்தில் திடீரென்று ஒரு பொருள் நட்சத்திரம் போன்றே ஒளிர்ந்துகொண்டே வால் போன்ற தோற்றத்தில் இருந்ததால் இதற்கு வால் நட்சத்திரம் என்ற பெயரிட்டு அழைத்தார்கள். ஆனால், இது உண்மையில் நட்சத்திரம் அல்ல. கோளும் அல்ல. அதற்கு வால் எப்போதும் இருப்பதில்லை. – என்பார் ஜோசப் பிரபாகர்.”

“சரியே… அதனால்தான் விஷ்ணு சஹஸ்ரநாமம் பூராவும் சொல்லி முடித்தபின், ‘ரதாங்கபாணி ரக்ஷோப்ய: சர்வப்ரஹரணாயுத’ என்ற நாமத்தோடு முடிக்கிறார். அதற்கு முன்பே ‘சக்ரீ’ என்கிறார். அந்த சக்கரத்தின் கனற்கொடியை C/2022 E3 (ZTF) எனலாம்.”

“அந்த மாதிரி ஜீரோ டிகிரி ஃபாரென்ஹீட்டில் தேவுடா காத்தால் பச்சை வண்ணப் பெருமாள் தெரிவார் என்கிறீர்கள்?”

“அதே… அதே… சபாபதே!”

பாஸ்டன் பெருமாள் – பார்த்தசாரதி கோலம்