Tag Archives: Mayilsamy

மயில்சாமி – அஞ்சலி

முதன் முதலாக அந்த கேசட்டை கேட்டபோது “இப்படித்தானே நகைச்சுவை இருக்க வேண்டும்! சுருளிராஜனும் தேங்காய் சீனிவாசனும் உசிலை மணியும் பக்கோடா காதரும் ஏன் இப்படி பாடாய் படுத்துகிறார்கள்?” எனத் தோன்றியது.

அது “சிரிப்போ சிரிப்பு”

மயில்சாமி என்னும் மிமிக்ரி கலைஞரும் லட்சுமணன் என்பவரும் இணைந்து அன்றைய பிரபலங்களை கிண்டல் அடித்து இருப்பார்கள்.

ஆளுங்கட்சி எம்.ஜி.ஆர். எதிர்க்கட்சி கருணாநிதி. ஆன்மீகச் செம்மல் கிருபானந்த வாரியார். சூப்பர் ஸ்டார் ரஜினி – எல்லோரையும் வைத்து ரசனையாக செய்திருப்பார்.

அதில் கடி ஜோக் ஒரு வகை – அது (சுருதி) லட்சுமணன் வகை – அந்த வகை இன்றும், என்றும், எங்கும், எப்பொழுதும் கடிக்கலாம். அவற்றுக்கு ரொம்ப யோசிக்க வேண்டாம். ஆனந்த விகடனில் வெ. சீதாராமன் நகைச்சுவை மாதிரி. கொஞ்சம் பழைய நினைப்பு + நிறைய கேலி + நிச்சயம் உல்டா. ஜாலியாக இருக்கும். மனதில் நிலைக்காது. மறந்து விடும்.

ஆனால், குரல் மாற்றிப் பேசும் மைல்சாமி குரல் – அந்தந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும். புரட்சித் தலைவர் என்றால் அவரின் பாணி. கலைஞர் என்றால் சொற்சிலம்பம், நெடுங்கவிதை புராணம். ரஜினிக்கேற்ற டயலாக், டி ராஜேந்தருக்கு ஏற்ற எதுகை மோனை வசனம்.

குறிப்பாக, ‘நிலா அது வானத்து மேல’ பாட்டிற்கு வாரியார் சொல்லும் சொற்பொழிவு. அது எனக்கு எந்தப் பாடலை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உயர்த்தி வைக்கலாம்; எந்தக் கருத்தையும் நைச்சியமாக விமர்சனமாக உள்ளே வைக்கலாம்; எந்தக் குப்பை சரக்கையும் நம் வசதிக்கேற்ப மாற்றலாம் – என்னும் நுட்பத்தை செய்முறையாக முதன் முறையாக விளக்குவார் மயில்சாமி.

ஸ்டாண்ட்-அப் என்கிறோம்; பகிடி என்கிறோம்; கலாய்த்தல் என்கிறோம்; டிஜே ஒருங்கிணைப்பு; விஜே வர்ணனை; சந்தானம், சிவ கார்த்திகேயன், மா.க.பா, ரோபோ சங்கர் எல்லோருக்கும் முன்னோடி.

ராஹுல் காந்தியை தங்கபாலு அவர்கள் மொழிபெயர்த்ததற்கு முன்னோடியாக இயக்குநர் விசுவும் கிஷ்மு அவர்களும் ஒரு நிகழ்ச்சியில் அன்றே செய்திருப்பார்கள். அதன் தொடர்ச்சியாக கொஞ்சம் காலம் கழித்து ஈழத்து தமிழை மொழிபெயர்ப்பவராக திரைப்படம் ஒன்றில் மயில்சாமியைப் பார்த்தேன்.

அந்த ஒலிப்பேழையை மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது அவர்(களின்) சாதனை. அதை சாடர்டே நைட் லைவ் போல் ஒரு இயக்கமாக மாற்றியது தற்செயல் பிறவிப்பயன். எங்காவது பாக்கியராஜையோ சந்திரசேகரையோ ஜனகராஜையோ கேட்டால் மயில்சாமி நினைவில் வருவது மெய்க்கீர்த்தி!