முதலில் நாகார்ஜுனன் பதிவு. அதன் தொடர்ச்சியாக பிரகாஷ் மீம் வித்திட்டிருக்கிறார்.
1 – அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
ஐந்து வயதில் இருந்து ஓரளவு நினைவில் உள்ளது.
1 – ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
ப்ரியா.
1 – இ. என்ன உணர்ந்தீர்கள்?
- பெண்கள் சினிமாவில் நுழைந்தால் ஆபத்து பின்தொடரும்.
- ஸ்ரீதேவி நீச்சலுடை.
- எவராவது கடத்தி சென்றுவிட்டால் குடும்பப் பாட்டு கற்றுவைத்துக் கொள்ளவேண்டும்.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தமிழ்: தசாவதாரம் (ஆங்கிலம்; வால் – ஈ)
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
கடைசியாக முழுமையாகப் பார்த்த படம் ட்யூப் தமிழ் வலையகத்தில் – அஞ்சாதே.
ஆனால், மிக சமீபத்தில், பாதி பார்த்த நிலையில் விட்ட படங்கள் தாக்கத்தை நிறையவே கொடுத்தது.
- அறை எண் 305இல் கடவுள் – மகாமக கொடுமையான நாடகத்தனம்
- அன்பைத் தேடி – எத்தனையோ பழைய படங்களை புத்துருவாக்கம் செய்யும் நிலையில் இந்த premise நன்றாக இருந்தது. ஏதாவது கற்பனையில் சஞ்சரித்து நிஜத்தைக் கோட்டை விடும் நாயகன் சிவாஜி. (குழந்தை நடிகை) இந்திரா (காந்தி) & நாயகன் (ம.கோ.) ராமுவையும் கோர்த்து அரசியல் கிண்டல் செய்யும் சோ.
- எவனோ ஒருவன் – சுவாரசியமான அறச்சீற்றம்
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
எல்லோரும் ‘அவள் அப்படித்தான்‘ என்கிறார்கள். ஆனால், என் வாழ்வை திசை திருப்பக் கூடிய சம்பவத்தை ‘அவள் அப்படித்தான்’ நிகழ்த்தியது.
குழந்தையாக இருந்தபோதே ‘எது கலைப்படமோ அதைச் சொல்லி ஒப்பேத்தலாம்’ என்னும் சுபாவம் innate ஆக அமைந்திருக்க வேண்டும். 1979ஆம் ஆண்டு குழந்தைகளின் ஆண்டாக கொன்டாட்டப்பட்டது. என்.எஃப்.டி.சி ஆதரவில் படம் எடுக்க, சென்னை தூர்தர்ஷனில் audition வைத்தார்கள். நானும் சென்றிருந்தேன்.
குடிகாரனாக, பிச்சைக்காரனாக, ஊமையாக எல்லாம் சிவாஜித்தனமான செயற்கையில், அங்கு வந்திருந்த பிற சிறுவர்களைப் போலவே நானும் ஓவர் – ஆக்டிங்கில் மின்னினேன்.
லன்ச்-ப்ரேக்.
பிற்காலத்தில் ரகுவரனை நாயகனாகக் கொண்ட ‘ஏழாவது மனிதன்‘ உட்பட பல படங்களை இயக்கிய ஹரிஹரனின் குழுவோடு உணவருந்தும்போது எல்லோரிடமும் சும்மா கேள்வி கேட்டுக்கொன்டிருந்தார்கள்.
‘உனக்கு என்ன படம் இப்ப பார்க்கணும்? எது பிடிச்ச படம்?’
அன்னை ஓர் ஆலயம், ஆறிலிருந்து அறுபது வரை மாதிரி அப்போதைய படங்கள் அனைத்தையும் வெள்ளித்திரையில் பார்த்த வெறித்தனமான ரஜினி ரசிகன். அம்மாவின் ஒப்புதல் கிடைக்காதது அந்தப் படத்திற்கு மட்டும்தான். இத்தனைக்கும் முதல் எதிரி கமல் வேறு நடித்திருக்கும் படம். தயங்கவே இல்லை.
பட்டென்று சொன்னேன்: ‘அவள் அபப்டித்தான்’
குழுவினர் திகைத்துப் போனார்கள். அவர்கள் டீம் உழைத்த படம் அது. அங்கிருந்த பலரின் செல்லப்பிள்ளை அது. உடனடியாக எனக்கு சான்ஸ் கொடுத்தார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ?!
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – அரசியல் சம்பவம்?
பெங்களூரில் உடனடியாக வருமா? கன்னடர்கள் கல்லெறிவார்களா?
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – தொழில்நுட்ப சம்பவம்?
இரத்தத்தையும் வன்முறையையும் வலிக்க வலிக்க காட்டுவது.
சாதாரண மனிதனின் ‘சத்ரியன்‘ ஆகட்டும்; விபத்தின் பின்விளைவுகளையும் அடிபட்டவர்களாக எண்ணிக்கையில் 167ஓடு 168ஆக கூடிப் போகும் ‘அன்பே சிவம்‘ ஆகட்டும்; ஏழையாக இருந்தால் என்னவெல்லாம் அமுக்கப்படும் என்று கோடிட்ட ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்‘ ஆகட்டும்.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
சிவகுமார் சுயசரிதை, தினத்தந்தி வரலாறு, தி ஹிந்து விமர்சனம், வலைப்பதிவு அசைபோடல், கனவுத் தொழிற்சாலை குறித்து வண்ணத்திரை முதல் வெகுசன ஊடகங்களில் வரும் கருத்து/கட்டுரை.
7. தமிழ்ச்சினிமா இசை?
- திருப்புகழ் கூட டி.எம்.எஸ் பாடிய சினிமாப் பாட்டு – ஆன்மிகம்
- எஸ்.பி.பி பாடிய பாடல் என்பதால் சங்கராபரணம் – கர்நாடக/சாஸ்திரீய சங்கீதம்
- வேப்பமரத்து உச்சி பேய் முதல் கல்லை மட்டும் கண்டால் – சமூகம்
- மன்றம் வந்த தென்றலுக்கு என்பதும் கல்யாண மாலை கொண்டாடுவதும் – வாழ்க்கை
என்று எல்லாவற்றுக்கும் இசையை நம்பியிருப்பதால், தனித்தீவுக்கு போக விதிக்கப்பட்டாலும் 80 ஜிபி ஐ-பாட் இல்லாமல் செல்லமாட்டேன்.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் நிறைய. சில ஸ்பானிஷ்.
- When Harry met Sally – ஆங்கிலம்
- City of God – வேற்றுமொழி (துணையெழுத்து உபயம்)
- Mississippi Masala (தேசி – NRI)
- Raju Ban Gaya Gentleman – இந்தி
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
நேரடியாக நடித்த படம் – வாண்டட் தங்கராஜ்.
பிடித்ததா? படத்தில் நடித்த அனுபவம் மிகவும் பிடித்திருந்தது.
வேண்டும்போது கிடைக்கும் ஐஸ்-க்ரீம். சொகுசான படுக்கையறையும் விநோதமான விளக்குகளும் கொன்ட உல்லாச அறை வாசம். பழனி கோவிலுக்கு சென்றால் கூட மூலஸ்தானத்தில் இருந்து மூலவரின் சிறுதுளியே பெயர்த்துக் கொடுக்கும் ராஜ மரியாதை.
என்ன செய்தீர்கள்? ஆறு வயதுச் சிறுவன் தங்கராஜ் பழனிக் கூட்டத்தில் தொலைந்து போகிறான். கூத்தில் அனுமனாக வேடந்தரிக்கும் ‘வள்ளி’ நட்ராஜ், வில்லர்கள் கூட்டத்தை Home Aloneஆக ஏய்ப்பது, கடிந்து கொள்ளும் பெற்றோரின் அன்பைப் புரிந்து கொள்ளும் குழந்தை வேடம்.
சினிமா மேம்பட உதவுமா? வெகு இயல்பாக இருந்தது. பாடல் கிடையாது. மூன்று நாளின் சம்பவங்களை 90 நிமிடங்களில் பரபரவென்று தென் தமிழகமெங்கும் சுழன்று விரியும் படம். அலங்காரில் வெளியாகி இருந்தால் மேம்பட உதவி இருக்கும்.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
- அருண் வைத்யநாதன் போன்ற தமிழ் சினிமாவின் நாகேஷ் குகூனூர்கள்
- தொலைக்காட்சி, இணையம், செல்பேசித்திரை என்று விரியும் வழிகள்
- குறைந்த பொருட்செலவும் பத்து நிமிடத்தில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கவைக்கும் நேர விரயமாகாத நுட்பங்களின் அணுக்கம்
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
ஒரு வாரத்தில், ஒரு நாளில் எத்தனை நேரம் கேளிக்கைகாக ஒதுக்குகிறோம்? அதில் எவ்வளவு மணி நேரம் சினிமா ஆக்கிரமிக்கிறது?
காலையில் அலுவல் கிளம்பும் அவசரம்; செய்தித்தாள் வாசிப்பு. அதன் பின் பயணத்தில் பழைய ராஜா இசையுடன் மோனம். அலுவலில் பதிவுகள் கவனச்சிதறல்; இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேர தொலைக்காட்சி. இதில் சினிமா எங்கே இருக்கிறது?
நண்பனின் கார் சாவி தூரத்தில் இருந்தே திறக்கும் வசதி கொண்டது. ஒரு நாள் என்னை அழைத்தான்.
“டேய், கார் ரிமோட் கீ வேலை செய்ய மாட்டேங்குதுடா! எப்படிடா இப்ப காரைத் திறப்பேன்?”
“நேராக காருக்கும் அருகில் செல். உன்னிடம் இருக்கும் சாவியை துவாரத்தில் இட்டு திறக்கலாம்.”
பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் என்னும் பேட்டரி தீர்ந்து போகலாம். சினிமா என்னும் மகிழுந்தைத் திறக்க கற்பனை என்னும் சாவி, ‘விழிகள் மேடையாம்; இமைகள் திரை’யாகுமா?’
இவர்கள் தொடரவேண்டும் என்று நினைக்கிறேன்.
வழிகாட்டலுக்கு மட்டுமாக சில விதிகள்:
- இசை, சினிமாப்படங்கள் போன்ற புள்ளிக்கு மூன்றுக்கு மேல் பட்டியல் போடுவதை தவிர்க்கலாம்
- புள்ளிவிவர ஆட்டத்தைத் தொடர ஐந்து பேருக்கு அழைப்பு விடுக்கவும்
- இந்த வழிகாட்டல்களை முற்றுமாக நிராகரிக்கலாம்; ஆனால், டக்குன்னு பதிவிடணும் 🙂