Tag Archives: சொந்தக்கதை

Vital Statistics: 32 Personal Questions

உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

வெட்டிப்பயல் எழுத்து இளநீர் மாதிரி. சல்னு நேச்சுரலா உண்மையா இருக்கும்; கொஞ்சம் தேங்காய் சரக்கும் உள்ளே இருக்கும். அப்படி ஒன்று.

உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?

பாலாஜி, பாஸ்டன் என்னும் மின்னஞ்சல் கையெழுத்தை மாற்றிப் போட்டவர் பாரா(கவன்). பாபா என்றழைத்து மரத்தடியில் மதிமயங்கச் செய்தது பின்னர் பலர்.

உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர்; ஆயிரம் பேரில் வலைப்பதிபவர் அரை எழுத்தாளர் என்றால் ம்ஹும்; மற்றபடி பவர்லெஸ் பாபா என்பதால் ம்ம்ம்.

கடைசியாக அழுதது எப்போது?

போட்டு உடைத்த மாதிரி சொல்ல வெட்கப்படுவதால், சிறுகதையே உகந்தது; எனினும், ‘குட்டி‘ மாதிரி சினிமாப் படங்களுக்கு கூட கண் தளும்பும்.

உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

ஆங்கிலம் – ரொம்ப; தமிழ் – ஐஸ் க்ரீம் மாதிரி; துவங்கும்போது சப்புக் கொட்டும்; போகப் போக உருகி ஆறாக ஓடி, குச்சி குச்சியாய் நிற்கும்.

பிடித்த மதிய உணவு?

அலுவலில் இருந்தால் சத்து bar; அலுவல் உலாவில் அமெரிக்க நளபாகம்; வீட்டில் மோர்க்குழம்பு + ரசம் + பருப்புசிலி; சுற்றுலாவில் பீட்ஸா.

நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?

ஃபேஸ்புக்கில்தானே? உடனடியாய் நானும் பின் தொடர்ந்து விடுவேன். Hi5, Piczo, Bebo, Tagged எல்லாம் நட்பு வைத்துக் கொள்வதில்லை.

கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

பிறந்ததில் இருந்து சென்னை, நியு யார்க், சிகாகோ, பாஸ்டன் என்று கடற்கரை அலுப்பிலேயே வாசஸ்தலம் என்பதால், அருவி மீது பற்று.

ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

அறிமுகமானவர் என்றால் கையை – குலுக்க; இல்லை என்றால் முகத்தை – புன்சிரித்து வைக்க; அவர் பார்க்கவில்லை என்றால் – மே.கீ டு இ.வ.

உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

எதுவும் முடியும் என்று நம்பிக்கை வைப்பது; அதுவும் நம்மாலும் இயலும் என்று முயலாதது.

உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விசயம் எது?

பொறுமை; நான் புத்தகம் வாங்கிய நூல் மூட்டை தபாலில் வரும்போது, அதை காற்றில் பறக்க விடுவது.

மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்?

சமையல்.

இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

அக்கா.

இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெள்ளை அரைக்கை சட்டையில் சிவப்பு கோடுகள்; பழுப்பு காக்கி முழுக்கால் சராய்.

என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

வெக்கை பிடுங்கும் இரவில், குளிரூட்டப்படாத அறையின் மின்விசிறியில் காற்று வருகிறதா என்னும் சத்தம்.

வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கறுப்பு.

பிடித்த மணம்?

சந்தனம்; காபி; பட்சண வாசம்.

பிடித்த விளையாட்டு?

நான் கலந்து கொண்டால் கால்பந்து, ஃப்ரிஸ்பீ, ராக்கெட் பால்; கண்டு களிக்க கூடைப்பந்து, டென்னிஸ்.

கண்ணாடி அணிபவரா?

ஆமென்.

எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

எழுபத்தியோரு விமர்சனம் படித்தால் மட்டும் புரியக்கூடிய படமாக இராமல், அதே சமயம் சிறார்களும் நிராகரிக்கும் அறிவுகூர்மையற்ற மசாலாகவும் இல்லாதவை.

கடைசியாகப் பார்த்த படம்?

தொலைக்காட்சியில் ‘சேது‘; வெள்ளித்திரையில் முப்பரிமாண ‘Up

பிடித்த பருவ காலம் எது?

பிடிக்காதது – வசந்த காலம்; மற்றது எல்லாம் நேசிப்பேன்.

என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

1. What every American should know about the Middle East / Melissa Rossi
2. The Pushcart prize: Best of the small presses

உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

படம் எல்லாம் போட்டால், கணினி வேகத்தைக் கட்டுப்படுத்தி இடத்தை அடைக்கும் என்பதால், வெறும் நீல நிறம்.

பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

நேரத்தே ட்ரெயின் வருவதன் அறிகுறியாக எழுப்பும் ஒலி இனிமை; அதைப் பிடிப்பதற்கு எழுப்பிவிடும் கடிகாரம் அலறம்.

வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

முதன் முதலாக நுழைவுத் தேர்வு எழுத தன்னந்தனியாக சென்ற காரைக்குடி. புதிய அறிமுகங்களுடன் அப்படியே பிள்ளையார்பட்டி, திருச்சி என்று உலாவியது.

உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நாலாயிரம் வார்த்தை கட்டுரையின் சக்கை இதுதான் என்று முழுக்கப் படித்தோ படிக்காமலோ ட்விட்டுவது.

உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

கருக்கலைப்பும் செய்யாமல் காப்பாற்றவும் முடியாமல், வதவதவென்று மக்களைப் பெற்றுப்போட்டு, கடவுள் நம்பிக்கையில் பழிபோடும் பொறுப்பற்றவருக்கு வக்காலத்து வாங்குபவர்.

உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சும்மாயிருக்காத பொழுதுகள்… நண்பரைக் குத்திக் கிழிக்கும்; பயனிலருக்கு சாமரம் வீசும்.

உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஜார்ஜ் ஏரி, ப்ளாசிட் ஏரி, நியு யார்க்.

எப்படி இருக்கணும்னு ஆசை?

இருபது கிலே கம்மியாக; ஒரு மணி நேரத்தில் ஐந்து மைலாவது ஓடுபவனாக; அம்மாவுடன் இன்னும் நேரஞ்செலவழிப்பவனாக; சம்பளத்தில் 5%க்கு மேல் தொண்டு நிதி ஒதுக்குபவனாக.

வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கை வரிக்குதிரை மாதிரி. கருப்பு நிறைய இருக்கா, வெள்ளைக் கோடு நிறைந்திருக்கா என்றெல்லாம் கணக்கு பார்க்காவிட்டால் டக்காரா பறக்கும். Life Is What Happens When You Are Busy Making Other Plans.

நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

1. வார்த்தைகளின் விளிம்பில் – இவரைக் குறித்து அதிகம் தெரியாது. சமீப காலத்தில் நான் படிக்கத் துவங்கியதில், கவனிக்கத்தக்க வகையில், பொருளடக்கத்துடன் எழுதுகிறார்.

2. குரல்வலை – முன்பொருமுறை இந்த மாதிரி மீம் அழைப்பு விட்டிருந்தார். இன்னும் நான் அதை நிறைவேற்ற இயலவில்லை. அதற்காகவும், நீண்ட நாளாக அவரின் பதிவு கிடப்பில் இருப்பதாலும்.

3. கண்ணோட்டம் – நானும் இலக்கியவாதி என்பதற்கு அடையாளமாக, தமிழ்ச்சூழலில் புரியாத பெயர்கள் பலவற்றை அவிழ்த்துவிடும் பெரும்புள்ளியை அழைக்கும் ஒதுக்கீடு.

4. இகாரஸ் பிரகாஷ்: வித்தியாசமாக யாரையாவது தொடர அழைப்பார்; பதில்களில் அன்னியோன்யம் தொற்றிக் கொள்ளும்.

5. தேன் துளி: இவர்களை சந்தித்தவுடனேயே பதிவு போட வேண்டுமென்று ட்ராஃப்டில் வைத்து அது ஊசிப் போனதால், மன்னிப்பு விடு தூது.

நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை

‘படிக்கிற வயசில் என்னடா அரசியல்?’ என்பதுதான் நான் கேட்டு வளர்ந்த சூழலில் புழங்கிய நிலை. அமெரிக்காவில் நிலைமை நேர் எதிர்.

என்னுடைய எட்டு வயது மகள் ப்ரைமரியிலேயே வாக்களித்தாள். இந்தப் பதிவு தொடங்கப்பட்ட ஃபெப்ரவரியில் எழுதியதில் இருந்து:

எனக்கு நேரடியாகத் தெரிந்த, பழக்கமான அமெரிக்கர்களிடம் ‘உங்க வோட்டு யாருக்கு’ என்று வினவியதில் எவரும் நேரடியாக பதில் சொல்லாமல் நழுவி விட்டார்கள். கட் அன்ட் ரைட்டாக மகளிடமிருந்து மட்டும் பதில் வந்தது.

பள்ளியில் ஒவ்வொரு வேட்பாளரைக் குறித்தும் சிறு அறிமுகம் கொடுத்த வாத்தியார், அதன் பிறகு புகைப்படத்தைக் காட்டி வாக்கு கோரி இருக்கிறார்.

முதலாம் வகுப்பின் வாக்கு எண்ணிக்கை நிலவரம்:
மொத்தம் – 21 + 20 (ஏ & பி – இரு பிரிவுகள்)
ஹில்லரி: 15
ஒபாமா: 6
ராம்னி: 9 (இவர் உள்ளூரில் கவர்னராக இருந்தவர்)
மெக்கெயின்: 8
மற்றவை – செல்லாதவை & இன்ன பிற

இருபத்திரண்டு பெண்கள் இருந்தும், என்னுடைய மகள் வாக்கையும் சேர்த்து பதினைந்து மட்டுமே ஹில்லரிக்கு விழுந்துள்ளது.

க்ளின்டனுக்கு ஏன் வாக்களித்தாய் என்றும் கேட்டிருக்கிறார்கள். மகள் மூன்று காரணங்களை முன்வைத்தாள்:
1. அவர் மட்டும்தான் பெண் வேட்பாளர்
2. ஏற்கனவே கேட்ட பெயராய் இருந்தது (வீட்டில் ஹில்டன் பெயர் அடிபட்டிருக்கும்; பாரிஸ் ஹில்டனுக்கும் ஹில்லரி கிளின்டனுக்கும் இடையே குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்)
3. மறந்து போச்சு என்றாள் (இரண்டாம் காரணத்தை இங்கு மீண்டும் படித்துக் கொள்ளவும்)

அமெரிக்கர்களுக்கு குழந்தை மனது.

  • நாளையை குறித்த கவலை இருக்க கூடாது (பொருளாதாரம்).
  • அவர்களின் பொம்மை அவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் (குடிபுகல்).
  • பனிப்பொழிந்தோ அல்லது இன்ன பிற உபாதைகளினாலோ வாரயிறுதி கொண்டாட்டாங்கள், பிறந்தநாள் விருந்துகள் தடைபடக் கூடாது (புவிவெப்பமடைதல்).
  • தன்னை விட யாரும் பாப்புலர் ஆகிவிடக் கூடாது (இராக்/இரான்/போர்).
  • ரொம்ப வீட்டுவேலை செய்ய வைக்க கூடாது (வரிச்சுமை).

அரசியல் ஆர்வத்தை குழந்தைகளை மேலும் ஊக்குவிக்கும் விதமாக ஹாலோவீன் மாறுவேடப் போட்டியில் தேசத்தலைவர்களாக வேஷம் கட்டுகிறார்கள். காபேஜ் பாட்ச் பொம்மைகளை விற்கிறார்கள்:

Cabbage Patch Politics: Celebrity Gossip | Arts And Entertainment: “While children aren’t allowed to vote, a few lucky little ones can still pick — and hug and kiss and squeeze — their president.

EBay and Cabbage Patch Kids have partnered to create a special series of Obama, Palin, McCain and Biden dolls as part of the Cabbage Patch Kid 25th Anniversary.”

பி.கு.: இறுதித் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகையும் மகள் வகுப்பில் நடந்து முடிந்து விட்டது. ஒபாமாவுக்கு ஒரே ஒரு வோட்டும் மற்றது எல்லாம் மெகயினுக்கும் விழுந்திருக்கிறது.

‘நீ ஏன் மெகயினுக்கே வோட்டு போட்டே?’

‘அவர்தான் பள்ளிக்கூடத்துக்கு நிறைய லீவு கொடுப்பான்னு ஜோ சொன்னான். அதே சமயம், எல்லாரும் மெகயினு சொன்னாங்களா! அப்படியே நானும்…’

India Films to Indie Movies – Meme

முதலில் நாகார்ஜுனன் பதிவு. அதன் தொடர்ச்சியாக பிரகாஷ் மீம் வித்திட்டிருக்கிறார்.

1 – அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

ஐந்து வயதில் இருந்து ஓரளவு நினைவில் உள்ளது.

1 – ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

ப்ரியா.

1 – இ. என்ன உணர்ந்தீர்கள்?

  • பெண்கள் சினிமாவில் நுழைந்தால் ஆபத்து பின்தொடரும்.
  • ஸ்ரீதேவி நீச்சலுடை.
  • எவராவது கடத்தி சென்றுவிட்டால் குடும்பப் பாட்டு கற்றுவைத்துக் கொள்ளவேண்டும்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தமிழ்: தசாவதாரம் (ஆங்கிலம்; வால் – ஈ)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கடைசியாக முழுமையாகப் பார்த்த படம் ட்யூப் தமிழ் வலையகத்தில் – அஞ்சாதே.

ஆனால், மிக சமீபத்தில், பாதி பார்த்த நிலையில் விட்ட படங்கள் தாக்கத்தை நிறையவே கொடுத்தது.

  • அறை எண் 305இல் கடவுள் – மகாமக கொடுமையான நாடகத்தனம்
  • அன்பைத் தேடி – எத்தனையோ பழைய படங்களை புத்துருவாக்கம் செய்யும் நிலையில் இந்த premise நன்றாக இருந்தது. ஏதாவது கற்பனையில் சஞ்சரித்து நிஜத்தைக் கோட்டை விடும் நாயகன் சிவாஜி. (குழந்தை நடிகை) இந்திரா (காந்தி) & நாயகன் (ம.கோ.) ராமுவையும் கோர்த்து அரசியல் கிண்டல் செய்யும் சோ.
  • எவனோ ஒருவன் – சுவாரசியமான அறச்சீற்றம்

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

எல்லோரும் ‘அவள் அப்படித்தான்‘ என்கிறார்கள். ஆனால், என் வாழ்வை திசை திருப்பக் கூடிய சம்பவத்தை ‘அவள் அப்படித்தான்’ நிகழ்த்தியது.

குழந்தையாக இருந்தபோதே ‘எது கலைப்படமோ அதைச் சொல்லி ஒப்பேத்தலாம்’ என்னும் சுபாவம் innate ஆக அமைந்திருக்க வேண்டும். 1979ஆம் ஆண்டு குழந்தைகளின் ஆண்டாக கொன்டாட்டப்பட்டது. என்.எஃப்.டி.சி ஆதரவில் படம் எடுக்க, சென்னை தூர்தர்ஷனில் audition வைத்தார்கள். நானும் சென்றிருந்தேன்.

குடிகாரனாக, பிச்சைக்காரனாக, ஊமையாக எல்லாம் சிவாஜித்தனமான செயற்கையில், அங்கு வந்திருந்த பிற சிறுவர்களைப் போலவே நானும் ஓவர் – ஆக்டிங்கில் மின்னினேன்.

லன்ச்-ப்ரேக்.

பிற்காலத்தில் ரகுவரனை நாயகனாகக் கொண்ட ‘ஏழாவது மனிதன்‘ உட்பட பல படங்களை இயக்கிய ஹரிஹரனின் குழுவோடு உணவருந்தும்போது எல்லோரிடமும் சும்மா கேள்வி கேட்டுக்கொன்டிருந்தார்கள்.

‘உனக்கு என்ன படம் இப்ப பார்க்கணும்? எது பிடிச்ச படம்?’

அன்னை ஓர் ஆலயம், ஆறிலிருந்து அறுபது வரை மாதிரி அப்போதைய படங்கள் அனைத்தையும் வெள்ளித்திரையில் பார்த்த வெறித்தனமான ரஜினி ரசிகன். அம்மாவின் ஒப்புதல் கிடைக்காதது அந்தப் படத்திற்கு மட்டும்தான். இத்தனைக்கும் முதல் எதிரி கமல் வேறு நடித்திருக்கும் படம். தயங்கவே இல்லை.

பட்டென்று சொன்னேன்: ‘அவள் அபப்டித்தான்’

குழுவினர் திகைத்துப் போனார்கள். அவர்கள் டீம் உழைத்த படம் அது. அங்கிருந்த பலரின் செல்லப்பிள்ளை அது. உடனடியாக எனக்கு சான்ஸ் கொடுத்தார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ?!

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – அரசியல் சம்பவம்?

பெங்களூரில் உடனடியாக வருமா? கன்னடர்கள் கல்லெறிவார்களா?

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – தொழில்நுட்ப சம்பவம்?

இரத்தத்தையும் வன்முறையையும் வலிக்க வலிக்க காட்டுவது.

சாதாரண மனிதனின் ‘சத்ரியன்‘ ஆகட்டும்; விபத்தின் பின்விளைவுகளையும் அடிபட்டவர்களாக எண்ணிக்கையில் 167ஓடு 168ஆக கூடிப் போகும் ‘அன்பே சிவம்‘ ஆகட்டும்; ஏழையாக இருந்தால் என்னவெல்லாம் அமுக்கப்படும் என்று கோடிட்ட ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்‘ ஆகட்டும்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

சிவகுமார் சுயசரிதை, தினத்தந்தி வரலாறு, தி ஹிந்து விமர்சனம், வலைப்பதிவு அசைபோடல், கனவுத் தொழிற்சாலை குறித்து வண்ணத்திரை முதல் வெகுசன ஊடகங்களில் வரும் கருத்து/கட்டுரை.

7. தமிழ்ச்சினிமா இசை?

  • திருப்புகழ் கூட டி.எம்.எஸ் பாடிய சினிமாப் பாட்டு – ஆன்மிகம்
  • எஸ்.பி.பி பாடிய பாடல் என்பதால் சங்கராபரணம் – கர்நாடக/சாஸ்திரீய சங்கீதம்
  • வேப்பமரத்து உச்சி பேய் முதல் கல்லை மட்டும் கண்டால் – சமூகம்
  • மன்றம் வந்த தென்றலுக்கு என்பதும் கல்யாண மாலை கொண்டாடுவதும் – வாழ்க்கை

என்று எல்லாவற்றுக்கும் இசையை நம்பியிருப்பதால், தனித்தீவுக்கு போக விதிக்கப்பட்டாலும் 80 ஜிபி ஐ-பாட் இல்லாமல் செல்லமாட்டேன்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் நிறைய. சில ஸ்பானிஷ்.

  • When Harry met Sally – ஆங்கிலம்
  • City of God – வேற்றுமொழி (துணையெழுத்து உபயம்)
  • Mississippi Masala (தேசி – NRI)
  • Raju Ban Gaya Gentleman – இந்தி

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடியாக நடித்த படம் – வாண்டட் தங்கராஜ்.

பிடித்ததா? படத்தில் நடித்த அனுபவம் மிகவும் பிடித்திருந்தது.

வேண்டும்போது கிடைக்கும் ஐஸ்-க்ரீம். சொகுசான படுக்கையறையும் விநோதமான விளக்குகளும் கொன்ட உல்லாச அறை வாசம். பழனி கோவிலுக்கு சென்றால் கூட மூலஸ்தானத்தில் இருந்து மூலவரின் சிறுதுளியே பெயர்த்துக் கொடுக்கும் ராஜ மரியாதை.

என்ன செய்தீர்கள்? ஆறு வயதுச் சிறுவன் தங்கராஜ் பழனிக் கூட்டத்தில் தொலைந்து போகிறான். கூத்தில் அனுமனாக வேடந்தரிக்கும் ‘வள்ளி’ நட்ராஜ், வில்லர்கள் கூட்டத்தை Home Aloneஆக ஏய்ப்பது, கடிந்து கொள்ளும் பெற்றோரின் அன்பைப் புரிந்து கொள்ளும் குழந்தை வேடம்.

சினிமா மேம்பட உதவுமா? வெகு இயல்பாக இருந்தது. பாடல் கிடையாது. மூன்று நாளின் சம்பவங்களை 90 நிமிடங்களில் பரபரவென்று தென் தமிழகமெங்கும் சுழன்று விரியும் படம். அலங்காரில் வெளியாகி இருந்தால் மேம்பட உதவி இருக்கும்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  • அருண் வைத்யநாதன் போன்ற தமிழ் சினிமாவின் நாகேஷ் குகூனூர்கள்
  • தொலைக்காட்சி, இணையம், செல்பேசித்திரை என்று விரியும் வழிகள்
  • குறைந்த பொருட்செலவும் பத்து நிமிடத்தில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கவைக்கும் நேர விரயமாகாத நுட்பங்களின் அணுக்கம்

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு வாரத்தில், ஒரு நாளில் எத்தனை நேரம் கேளிக்கைகாக ஒதுக்குகிறோம்? அதில் எவ்வளவு மணி நேரம் சினிமா ஆக்கிரமிக்கிறது?

காலையில் அலுவல் கிளம்பும் அவசரம்; செய்தித்தாள் வாசிப்பு. அதன் பின் பயணத்தில் பழைய ராஜா இசையுடன் மோனம். அலுவலில் பதிவுகள் கவனச்சிதறல்; இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேர தொலைக்காட்சி. இதில் சினிமா எங்கே இருக்கிறது?

நண்பனின் கார் சாவி தூரத்தில் இருந்தே திறக்கும் வசதி கொண்டது. ஒரு நாள் என்னை அழைத்தான்.

“டேய், கார் ரிமோட் கீ வேலை செய்ய மாட்டேங்குதுடா! எப்படிடா இப்ப காரைத் திறப்பேன்?”

“நேராக காருக்கும் அருகில் செல். உன்னிடம் இருக்கும் சாவியை துவாரத்தில் இட்டு திறக்கலாம்.”

பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் என்னும் பேட்டரி தீர்ந்து போகலாம். சினிமா என்னும் மகிழுந்தைத் திறக்க கற்பனை என்னும் சாவி, ‘விழிகள் மேடையாம்; இமைகள் திரை’யாகுமா?’

இவர்கள் தொடரவேண்டும் என்று நினைக்கிறேன்.

வழிகாட்டலுக்கு மட்டுமாக சில விதிகள்:

  1. இசை, சினிமாப்படங்கள் போன்ற புள்ளிக்கு மூன்றுக்கு மேல் பட்டியல் போடுவதை தவிர்க்கலாம்
  2. புள்ளிவிவர ஆட்டத்தைத் தொடர ஐந்து பேருக்கு அழைப்பு விடுக்கவும்
  3. இந்த வழிகாட்டல்களை முற்றுமாக நிராகரிக்கலாம்; ஆனால், டக்குன்னு பதிவிடணும் 🙂