Tag Archives: tortoise

Vital Statistics: 32 Personal Questions

உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

வெட்டிப்பயல் எழுத்து இளநீர் மாதிரி. சல்னு நேச்சுரலா உண்மையா இருக்கும்; கொஞ்சம் தேங்காய் சரக்கும் உள்ளே இருக்கும். அப்படி ஒன்று.

உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?

பாலாஜி, பாஸ்டன் என்னும் மின்னஞ்சல் கையெழுத்தை மாற்றிப் போட்டவர் பாரா(கவன்). பாபா என்றழைத்து மரத்தடியில் மதிமயங்கச் செய்தது பின்னர் பலர்.

உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர்; ஆயிரம் பேரில் வலைப்பதிபவர் அரை எழுத்தாளர் என்றால் ம்ஹும்; மற்றபடி பவர்லெஸ் பாபா என்பதால் ம்ம்ம்.

கடைசியாக அழுதது எப்போது?

போட்டு உடைத்த மாதிரி சொல்ல வெட்கப்படுவதால், சிறுகதையே உகந்தது; எனினும், ‘குட்டி‘ மாதிரி சினிமாப் படங்களுக்கு கூட கண் தளும்பும்.

உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

ஆங்கிலம் – ரொம்ப; தமிழ் – ஐஸ் க்ரீம் மாதிரி; துவங்கும்போது சப்புக் கொட்டும்; போகப் போக உருகி ஆறாக ஓடி, குச்சி குச்சியாய் நிற்கும்.

பிடித்த மதிய உணவு?

அலுவலில் இருந்தால் சத்து bar; அலுவல் உலாவில் அமெரிக்க நளபாகம்; வீட்டில் மோர்க்குழம்பு + ரசம் + பருப்புசிலி; சுற்றுலாவில் பீட்ஸா.

நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?

ஃபேஸ்புக்கில்தானே? உடனடியாய் நானும் பின் தொடர்ந்து விடுவேன். Hi5, Piczo, Bebo, Tagged எல்லாம் நட்பு வைத்துக் கொள்வதில்லை.

கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

பிறந்ததில் இருந்து சென்னை, நியு யார்க், சிகாகோ, பாஸ்டன் என்று கடற்கரை அலுப்பிலேயே வாசஸ்தலம் என்பதால், அருவி மீது பற்று.

ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

அறிமுகமானவர் என்றால் கையை – குலுக்க; இல்லை என்றால் முகத்தை – புன்சிரித்து வைக்க; அவர் பார்க்கவில்லை என்றால் – மே.கீ டு இ.வ.

உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

எதுவும் முடியும் என்று நம்பிக்கை வைப்பது; அதுவும் நம்மாலும் இயலும் என்று முயலாதது.

உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விசயம் எது?

பொறுமை; நான் புத்தகம் வாங்கிய நூல் மூட்டை தபாலில் வரும்போது, அதை காற்றில் பறக்க விடுவது.

மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்?

சமையல்.

இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

அக்கா.

இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெள்ளை அரைக்கை சட்டையில் சிவப்பு கோடுகள்; பழுப்பு காக்கி முழுக்கால் சராய்.

என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

வெக்கை பிடுங்கும் இரவில், குளிரூட்டப்படாத அறையின் மின்விசிறியில் காற்று வருகிறதா என்னும் சத்தம்.

வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கறுப்பு.

பிடித்த மணம்?

சந்தனம்; காபி; பட்சண வாசம்.

பிடித்த விளையாட்டு?

நான் கலந்து கொண்டால் கால்பந்து, ஃப்ரிஸ்பீ, ராக்கெட் பால்; கண்டு களிக்க கூடைப்பந்து, டென்னிஸ்.

கண்ணாடி அணிபவரா?

ஆமென்.

எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

எழுபத்தியோரு விமர்சனம் படித்தால் மட்டும் புரியக்கூடிய படமாக இராமல், அதே சமயம் சிறார்களும் நிராகரிக்கும் அறிவுகூர்மையற்ற மசாலாகவும் இல்லாதவை.

கடைசியாகப் பார்த்த படம்?

தொலைக்காட்சியில் ‘சேது‘; வெள்ளித்திரையில் முப்பரிமாண ‘Up

பிடித்த பருவ காலம் எது?

பிடிக்காதது – வசந்த காலம்; மற்றது எல்லாம் நேசிப்பேன்.

என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

1. What every American should know about the Middle East / Melissa Rossi
2. The Pushcart prize: Best of the small presses

உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

படம் எல்லாம் போட்டால், கணினி வேகத்தைக் கட்டுப்படுத்தி இடத்தை அடைக்கும் என்பதால், வெறும் நீல நிறம்.

பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

நேரத்தே ட்ரெயின் வருவதன் அறிகுறியாக எழுப்பும் ஒலி இனிமை; அதைப் பிடிப்பதற்கு எழுப்பிவிடும் கடிகாரம் அலறம்.

வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

முதன் முதலாக நுழைவுத் தேர்வு எழுத தன்னந்தனியாக சென்ற காரைக்குடி. புதிய அறிமுகங்களுடன் அப்படியே பிள்ளையார்பட்டி, திருச்சி என்று உலாவியது.

உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நாலாயிரம் வார்த்தை கட்டுரையின் சக்கை இதுதான் என்று முழுக்கப் படித்தோ படிக்காமலோ ட்விட்டுவது.

உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

கருக்கலைப்பும் செய்யாமல் காப்பாற்றவும் முடியாமல், வதவதவென்று மக்களைப் பெற்றுப்போட்டு, கடவுள் நம்பிக்கையில் பழிபோடும் பொறுப்பற்றவருக்கு வக்காலத்து வாங்குபவர்.

உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சும்மாயிருக்காத பொழுதுகள்… நண்பரைக் குத்திக் கிழிக்கும்; பயனிலருக்கு சாமரம் வீசும்.

உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஜார்ஜ் ஏரி, ப்ளாசிட் ஏரி, நியு யார்க்.

எப்படி இருக்கணும்னு ஆசை?

இருபது கிலே கம்மியாக; ஒரு மணி நேரத்தில் ஐந்து மைலாவது ஓடுபவனாக; அம்மாவுடன் இன்னும் நேரஞ்செலவழிப்பவனாக; சம்பளத்தில் 5%க்கு மேல் தொண்டு நிதி ஒதுக்குபவனாக.

வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கை வரிக்குதிரை மாதிரி. கருப்பு நிறைய இருக்கா, வெள்ளைக் கோடு நிறைந்திருக்கா என்றெல்லாம் கணக்கு பார்க்காவிட்டால் டக்காரா பறக்கும். Life Is What Happens When You Are Busy Making Other Plans.

நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

1. வார்த்தைகளின் விளிம்பில் – இவரைக் குறித்து அதிகம் தெரியாது. சமீப காலத்தில் நான் படிக்கத் துவங்கியதில், கவனிக்கத்தக்க வகையில், பொருளடக்கத்துடன் எழுதுகிறார்.

2. குரல்வலை – முன்பொருமுறை இந்த மாதிரி மீம் அழைப்பு விட்டிருந்தார். இன்னும் நான் அதை நிறைவேற்ற இயலவில்லை. அதற்காகவும், நீண்ட நாளாக அவரின் பதிவு கிடப்பில் இருப்பதாலும்.

3. கண்ணோட்டம் – நானும் இலக்கியவாதி என்பதற்கு அடையாளமாக, தமிழ்ச்சூழலில் புரியாத பெயர்கள் பலவற்றை அவிழ்த்துவிடும் பெரும்புள்ளியை அழைக்கும் ஒதுக்கீடு.

4. இகாரஸ் பிரகாஷ்: வித்தியாசமாக யாரையாவது தொடர அழைப்பார்; பதில்களில் அன்னியோன்யம் தொற்றிக் கொள்ளும்.

5. தேன் துளி: இவர்களை சந்தித்தவுடனேயே பதிவு போட வேண்டுமென்று ட்ராஃப்டில் வைத்து அது ஊசிப் போனதால், மன்னிப்பு விடு தூது.