Tag Archives: Toys

நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை

‘படிக்கிற வயசில் என்னடா அரசியல்?’ என்பதுதான் நான் கேட்டு வளர்ந்த சூழலில் புழங்கிய நிலை. அமெரிக்காவில் நிலைமை நேர் எதிர்.

என்னுடைய எட்டு வயது மகள் ப்ரைமரியிலேயே வாக்களித்தாள். இந்தப் பதிவு தொடங்கப்பட்ட ஃபெப்ரவரியில் எழுதியதில் இருந்து:

எனக்கு நேரடியாகத் தெரிந்த, பழக்கமான அமெரிக்கர்களிடம் ‘உங்க வோட்டு யாருக்கு’ என்று வினவியதில் எவரும் நேரடியாக பதில் சொல்லாமல் நழுவி விட்டார்கள். கட் அன்ட் ரைட்டாக மகளிடமிருந்து மட்டும் பதில் வந்தது.

பள்ளியில் ஒவ்வொரு வேட்பாளரைக் குறித்தும் சிறு அறிமுகம் கொடுத்த வாத்தியார், அதன் பிறகு புகைப்படத்தைக் காட்டி வாக்கு கோரி இருக்கிறார்.

முதலாம் வகுப்பின் வாக்கு எண்ணிக்கை நிலவரம்:
மொத்தம் – 21 + 20 (ஏ & பி – இரு பிரிவுகள்)
ஹில்லரி: 15
ஒபாமா: 6
ராம்னி: 9 (இவர் உள்ளூரில் கவர்னராக இருந்தவர்)
மெக்கெயின்: 8
மற்றவை – செல்லாதவை & இன்ன பிற

இருபத்திரண்டு பெண்கள் இருந்தும், என்னுடைய மகள் வாக்கையும் சேர்த்து பதினைந்து மட்டுமே ஹில்லரிக்கு விழுந்துள்ளது.

க்ளின்டனுக்கு ஏன் வாக்களித்தாய் என்றும் கேட்டிருக்கிறார்கள். மகள் மூன்று காரணங்களை முன்வைத்தாள்:
1. அவர் மட்டும்தான் பெண் வேட்பாளர்
2. ஏற்கனவே கேட்ட பெயராய் இருந்தது (வீட்டில் ஹில்டன் பெயர் அடிபட்டிருக்கும்; பாரிஸ் ஹில்டனுக்கும் ஹில்லரி கிளின்டனுக்கும் இடையே குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்)
3. மறந்து போச்சு என்றாள் (இரண்டாம் காரணத்தை இங்கு மீண்டும் படித்துக் கொள்ளவும்)

அமெரிக்கர்களுக்கு குழந்தை மனது.

  • நாளையை குறித்த கவலை இருக்க கூடாது (பொருளாதாரம்).
  • அவர்களின் பொம்மை அவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் (குடிபுகல்).
  • பனிப்பொழிந்தோ அல்லது இன்ன பிற உபாதைகளினாலோ வாரயிறுதி கொண்டாட்டாங்கள், பிறந்தநாள் விருந்துகள் தடைபடக் கூடாது (புவிவெப்பமடைதல்).
  • தன்னை விட யாரும் பாப்புலர் ஆகிவிடக் கூடாது (இராக்/இரான்/போர்).
  • ரொம்ப வீட்டுவேலை செய்ய வைக்க கூடாது (வரிச்சுமை).

அரசியல் ஆர்வத்தை குழந்தைகளை மேலும் ஊக்குவிக்கும் விதமாக ஹாலோவீன் மாறுவேடப் போட்டியில் தேசத்தலைவர்களாக வேஷம் கட்டுகிறார்கள். காபேஜ் பாட்ச் பொம்மைகளை விற்கிறார்கள்:

Cabbage Patch Politics: Celebrity Gossip | Arts And Entertainment: “While children aren’t allowed to vote, a few lucky little ones can still pick — and hug and kiss and squeeze — their president.

EBay and Cabbage Patch Kids have partnered to create a special series of Obama, Palin, McCain and Biden dolls as part of the Cabbage Patch Kid 25th Anniversary.”

பி.கு.: இறுதித் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகையும் மகள் வகுப்பில் நடந்து முடிந்து விட்டது. ஒபாமாவுக்கு ஒரே ஒரு வோட்டும் மற்றது எல்லாம் மெகயினுக்கும் விழுந்திருக்கிறது.

‘நீ ஏன் மெகயினுக்கே வோட்டு போட்டே?’

‘அவர்தான் பள்ளிக்கூடத்துக்கு நிறைய லீவு கொடுப்பான்னு ஜோ சொன்னான். அதே சமயம், எல்லாரும் மெகயினு சொன்னாங்களா! அப்படியே நானும்…’