Daily Archives: ஒக்ரோபர் 29, 2008

'ஒபாமாவிற்கு மிருத்யுஞ்சய ஹோமம் & இளநீர் தாரா தேவை': தினமலர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பராக் ஒபாமா வெற்றி பெற 75 சதவீத வாய்ப்பு உள்ளதாக, கோவை ஆரிய வைத்திய பார்மசியின் ஜோதிடர் குழு கணித்துள்ளது.

ஒபாமா வெற்றிக்காகவும், அவர் சிறந்த உடல் ஆரோக்கியம் பெறவும், கோவையில் சிறப்பு ஹோமம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து கோவை ஆரிய வைத்திய பார்மசியின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் கூறியதாவது: அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒபாமா, அங்குள்ள மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். 1961ல் பிறந்த அவரது ஜாதகப்படி, அவருக்கு இப்போது ‘வியாச (குரு) திசை‘ நடக்கிறது. அவரது ‘கர்மா’வின்படி, டிசம்பர் 2008க்குப் பின் அனைத்து விஷயங்களும் அவருக்கு சாதகமாக அமையும். அவர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் ஆக 75 சதவீத வாய்ப்பு உள்ளது.

ஏப்ரல் 2008 முதல் ஏப்ரல் 2009 வரையிலான காலகட்டத்தில் அவருக்கு வேலை மாற்றம் அமையும். இந்த காலகட்டத்தில் அவர் உயர்ந்த நிர்வாக பொறுப்பை அடைய வாய்ப்பு உள்ளது. ‘நிபுண யோகக்காரர்’ என்பதால் இவர் சிறந்த வாதத் திறமை உள்ளவர். இறைவனின் சகல அனுகிரகங்களும் இவருக்கு உண்டு.

ஜாதகத்தின்படி ‘நீசபங்க ராஜ யோகம்‘ உள்ள இவர், கடும் போராட்டங்களுக்குப் பின், ‘ராஜ யோக நிலை’யை அடைவார்; நம்பிக்கைக்கு உரியவர்; அடிக்கடி டென்ஷன் ஆவது மட்டுமே இவரது ஒரே பிரச்னை. அதனால், இவரது உடல் நிலை பாதிக்கப்படலாம். இவர் 2010 வரை, வாகனப் பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. இதற்கு, ‘மிருத்யுஞ்சய ஹோமம்‘ செய்து தீர்வு காணலாம். டென்ஷனால் பணிகள், உடல் ஆரோக்கியம் பாதிக்காமல் தடுக்க, சிவபெருமானுக்கு ‘இளநீர் தாரா‘ வழங்க வேண்டும் இவ்வாறு, கிருஷ்ணகுமார் கூறினார்.

ஒபாமாவின் நலனுக்காக, கோவை, ராமநாதபுரத்திலுள்ள ஆரிய வைத்திய பார்மசியில், அதிகாலை நேரத்தில் ‘மிருத்யுஞ்சய ஹோமம்’ மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. “அதிபராக தேர்வு செய்யப்பட்டால் ஒசாமா பின்லேடனை பிடிக்காமல் ஓயப் போவதில்லை” என பிரசாரம் செய்து வரும் ஒபாமாவுக்கு, நிறைய எதிரிகள் இருக்க வாய்ப்புள்ளது. அவர்களை முறியடிக்க ‘சத்ரு சம்ஹார பூஜை’யும் நடத்தப்படுகிறது.

“ஒபாமா இந்தியாவுக்கு ஆதரவான மனநிலையை கொண்டவர். அமெரிக்கா ஒரு பெரிய நாடு என்பதால், இந்தியா போன்ற வளரும் நாடுகள் நன்மை பெற, அந்நாட்டில் ஒரு சிறந்த மனிதர் அதிபர் அமைய வேண்டியது முக்கியம். எனவேதான், அவரது நன்மைக்காகவும், இந்தியாவின் எதிர்கால வளர்ச் சிக்காகவும் இந்த ஹோம பூஜைகள் நடத்தப்படுகின்றன,” என, ஹோமம் நடத்துவதற்கான காரணத்தை விளக்கினார், கிருஷ்ணகுமார்.

குஜராத் முதல்வராக நரேந்திரமோடி வெற்றி பெறவும், இவர் ஹோம பூஜைகள் நடத்தியுள்ளார். “ஜோதிடம் ஒரு அறிவியல் கலை; துல்லியமாகக் கணித்தால் பரிகாரங்கள் மூலமாக பெரும் இழப்புகளை தவிர்க்கலாம். நாட்டின் முக்கிய பொறுப்புகளுக்கான தேர்தலுக்கு முன், வேட்பாளரின் ஜாதகத்தை கணிப்பது நாட்டு வளர்ச்சிக்கு நல்லது,” என்று முத்தாய்ப்பாக அவர் குறிப்பிட்டார்.

நன்றி: தினமலர்

துக்கடா: கருத்து – குசும்பு – கும்மாங்குத்து

அதிபருக்கு பள்ளி மாணவர்களின் கடிதம்!

தேசிய எழுத்து இயக்கமும், கூகுள் டாக்ஸும் இணைந்து, ‘அடுத்து வரவிருக்கும் அமேரிக்க அதிபருக்கு கடிதம்’ என்ற தலைப்பில் 13 முதல் 18 வயதிலான நடுநிலை மற்றும் உயர்பள்ளி மாணவர்களுக்காக கடிதம் எழுதும் போட்டி நடத்துகின்றனர்.

அந்த போட்டியில் ‘மக்களுக்காக மக்களால்’ என்ற தலைப்பில் ‘டேனியல்’ என்ற ஒரு மாணவன் எழுதியிருந்த கடிதம் பின்வருவதுபோல் துவங்குகிறது.

–இந்த தேசத்தை வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.   மக்கள் ஆள்வதற்காக மக்களுக்காக இந்த தேசம் உருவாக்கப்பட்டிருக்கிறது.  இருந்தாலும், கடந்த எட்டு ஆண்டுகளாக அந்த கருத்து மறக்கப்பட்டுவிட்டது.–

மேலே படிக்க இங்கே செல்லவும் http://www.letters2president.org/letters/270-by-the-people-for-the-people

சேமி என்ற இன்னொரு மாணவரின் கடிதம் இப்படியாகத் துவங்குகிறது,

–நான் குழந்தையல்ல, இருந்தாலும் உங்களுக்கு அதுபோல் தோன்றலாம். எவ்வாறு நமது தேசத்தை அடுத்த தலைமுறையினருக்கு நல்ல இடமாக்க வேண்டுமென்று பல்வேறு சிந்தனைகளும் ஒருமித்த குரலும் கொண்ட ஒரு அமேரிக்க குடிமகன் நான்–

மேலே படிக்க http://www.letters2president.org/letters/221-we-cant-afford-to-get-smarter

மொத்தமாய் 2000க்கும் மேற்பட்ட மாணவர்களின் கடிதம் அந்த தளத்தில் உள்ளது, படித்துப் பாருங்களேன்!

மெகயினிடம் எனக்குப் பிடித்தது என்ன? – சொ. சங்கரபாண்டி

சென்ற பதிவு

2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது?

ஒபாமா-பைடனின் வெளியுறவுக்கொள்கை. அதுவும் கூட புஷ் கொள்கைகளை ஆதரிக்கும்/தொடரவிருக்கும் மெக்கெய்ன்-பேலின் வந்துவிடக்கூடாதென்ற பயத்தில்தான்.

3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது?

இப்பொழுது எதுவுமில்லை.

2000 குடியரசுக் கட்சி முன்னோட்டத் தேர்தலின் போது புஷ்சுக்கு எதிராகப் போட்டியிட்ட காலத்தில் எனக்கு மெக்கெய்னைப் பிடிக்கும். ஒரு சில விசயங்களாவது இருந்தன அப்பொழுது. இப்பொழுது புஷ்சை ஆதரிப்பவர்களைப் பற்றி நினைக்கவே எரிச்சலாக இருக்கிறது.

4. இந்த இருவரும் இல்லாமல், இன்னொருவர் ஜனாதிபதியானால் சரியாக இருக்கும் என்று சொல்ல நினைத்தால் எவரை கைகாட்டுவீர்கள்? எதற்காக?

ஹில்லரி கிளிண்டன்.

(அ) முதல் கேள்வியில் நான் சொன்ன முதல் காரணம் ஹில்லரிக்கும் பொருந்தும். அதற்காக அவரை ஆதரிக்கிறேன்.

மேலும் தனிப்பட்ட அளவில் அவருக்கு நிறைய திறமைகள் இருந்தும் பில் கிளிண்டனின் மனைவி என்பதற்காகவே குடியரசுக் கட்சியினர், கட்சிச் சார்பற்றவர்கள், ஜனநாயகக் கட்சியின் கருப்பினத்தவர், சாதாரண அமெரிக்கக் குடிமக்கள் என அனைவராலும் பின்வரும் வெவ்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப் படிருக்கிறார்.

குடியரசுக் கட்சியினர் அவரையும் கணவர் கிளிண்டனையும் தங்களுக்குச் சிம்ம சொப்பணமாக நினைத்து வெறியோடு எதிர்ப்பவர்கள்.

கட்சி சார்பற்றவர்கள் என்ன வேண்டுமென்று நினைக்கிறார்களென்று அவர்களுக்கே தெரியாது. கேட்டால் எங்களுக்கு மாற்றம் வேண்டுமென்பார்கள் – கிளிண்டனை ஆதரிப்பது நிச்சயம் அவர்களைப் பொருத்தவரை மாற்றமில்லை.

ஜனநாயகக் கட்சி கருப்பினத்தவருக்கு ஒபாமா கிடைத்ததால் ஹில்லரி வேண்டாம்.

சாதாரண அமெரிக்கக் குடிமக்களில் பெரும்பாலோர் தலைவராக வரக்கூடிய பக்குவம் ஒரு பெண்ணுக்கு என்று வெளிப்படையாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

எனக்கு பில் கிளிண்டன் காலத்திலிருந்தே ஹில்லரியை பிடிக்கும்.

குறிப்பாக ரஷ் லிம்பாக் நிகழ்ச்சியைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஹில்லரி மேல் அளவு கடந்த பற்று வரும். இவர் ஒரு நாள் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அமெரிக்கர்களின் பெண் சமத்துவக் கோட்பாடு சோதிக்கப் படவேண்டும் என்று நினைப்பதுண்டு.

ஒபாமாவுடனான முன்னோட்டத் தேர்தல் விவாதங்களில் கூட ஹில்லரியைத்தான் அதிகம் பிடித்திருந்தது. மற்றபடி அவர் உள்நாட்டுப் பிரச்னைகளில் சொன்னதைச் செய்வாரா என்ற நம்பிக்கையின்மையும் மற்ற அமெரிக்கர்களைப் போல் உண்டு.

5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா? வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை? எவ்வாறு வேறுபடுகிறது?

ஒப்பிட முடியாது, கூடாது என்றும் நினைக்கிறேன்.