1. ஒபாமாவா? மெகெயினா? இரண்டும் பேரும் சரியில்லை என்று தப்பிக்கக்கூடாது. இருப்பதற்குள் எவர் ஒகே? ஏன்?
சந்தேகமேயில்லாமல் ஓபாமாதான். பல காரணங்கள் உண்டு, எனக்கு மிக முக்கியமாகப் பட்ட இரண்டு மட்டும் இங்கே (பெருவாரியான அமெரிக்க மக்கள் வாக்களிப்பதற்கு இவை அடிப்படையாக இருக்காது என்றும் கருதுகிறேன்) :
(அ) அமெரிக்காவின் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப் படவேண்டும் அல்லது யார் தேர்ந்தெடுக்கப் படக் கூடாது என்பதில் அமெரிக்க நலன் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த உலக நலனும் அடங்கியிருக்கிறது.
சோவியத் யூனியன் இருந்தவரை இரு வல்லரசுகளிடையேயிருந்த போட்டியில் இரண்டு நாடுகளும் ஓரளவுக்காவது தங்கள் ஏகாதிபத்தியச் சண்டித்தனத்தை எச்சரிக்கையுடன் கையாண்டன. அதனால்தான் ரீகன் தலைமையிலான அமெரிக்க முதலாளித்துவ ஆதிக்கவெறியர்கள் சோவியத் யூனியனை எப்படியாவது உடைத்தெறிவதில் முழுமுனைப்பாக இருந்து வெற்றியும் கண்டனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கை மட்டுப்படுத்துவதில் எந்த பெரிய நாடும் அமெரிக்காவுடன் மோதிக் கொண்டதில்லை.
பொதுவுடைமைப் போலியான சீனா போன்ற நாடுகள் தங்களுடைய குறுகிய தேச நலனுக்காக எல்லாவிதச் சமரசங்களைச் செய்து கொள்வது மட்டுமல்லாமல், தம்மளவில் புதிய மக்கள் விரோதச் சண்டிநாடுகளாகத்தான் இருந்து வருகின்றன. எனவே அமெரிக்காவின் தலைவராக வருபவர் உலக ஒற்றுமைக்கும், அமைதிக்கும் முனையாவிட்டாலும் (எ.கா: ஜிம்மி கார்ட்டர் முயற்சி செய்தார்) பரவாயில்லை, சுயநலத்தின் உந்துதலால் உலக அமைதியைச் சிதைப்பவராக இல்லாமல் இருப்பதே பெரிது (எ.கா: புஷ்-சேனி கும்பல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது).
அமெரிக்காவில் உள்நாட்டில் எத்தனையோ பொருளாதார மற்றும் சமூகப் பிரச்னைகளுள்ளன. அவற்றின் மேல் முதலில் அக்கறை செலுத்துபவராகவும் இருந்தால், உலகத்தைச் சீர்குலைப்பதில் குறைவான கவனம் செலுத்தக் கூடும் (எ.கா: பில் கிளிண்டன்).
மேலும் அமெரிக்க அரசிடம் ஏகோபித்த செல்வாக்கு செலுத்தி வரும் இஸ்ரேலிய ஆதாயக் கூட்டத்தின் முழுமையான கைப்பாவையாகச் செயல்படக்கூடியவராக (எ.கா. மெக்கெய்ன் – பேலின்) இல்லாமல் இருக்க வேண்டும்.
உலகெங்கும் இசுலாமிய அடிப்படைப் பயங்கரவாதம் உருவாக முக்கியமானதொரு காரணம் அமெரிக்க அரசை ஆட்டிப்படைக்கும் இஸ்ரேலிய ஆதரவுக் கும்பல்தான். விளைவு பயங்கரவாதத்தை ஒடுக்குகிறேன் என்ற போர்வையில் பல நாடுகளில் தற்பொழுது அரசு பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது.
மெக்கெய்னுக்கும், பேலினுக்கும் இஸ்ரேல் மட்டும்தான் செல்ல நாடுகள் என்பது அவர்களுடைய வாதங்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. எனவே அவர்கள் வந்தால் நிலைமை மோசமாகவே வாய்ப்பிருக்கிறது. மெக்கெய்ன்- பேலின் தேர்ந்தெடுக்கப் பட்டால் போரும், இராணுவமும் பூதாகரமான வளர்ந்து எல்லா நாடுகளிலும் மக்களை வறுமை, வேலையிழப்பு, பட்டினி என இட்டுச் செல்லும் வாய்ப்பு அதிகம்.
(ஆ) கடந்த தலைவர் தேர்தலுக்குப் பின் உருவான ஓபாமா என்ற புதிய நட்சத்திரத்தை(அல்லது பிம்பத்தை)ப் பற்றி நண்பர்கள் பேசியபொழுதெல்லாம் நான் ஓபாமாவைப் பற்றிய நல்லதொரு அபிப்ராயத்தைக் கொண்டிருக்கவில்லை. ஒபாமவை தமிழரங்கம் சொல்லியதுபோல் ”பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி“யாகத்தான் அல்லது சன்னாசி-சுந்தரமூர்த்தி-செல்வராஜ் போன்ற நண்பர்களின் கருத்துப்படி சரக்கில்லா வெறும் பிம்பமாகத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். இன்னமும் அவர்கள் எழுப்பிய ஐயங்கள் பொய்யாகத்தோன்றவில்லை. சன்னாசியின் இந்த இடுகையுடன் எனக்கு உடன்பாடில்லை என்றும் சொல்லி வைக்கிறேன். ஆனால், ஓபாமாவின் இனங்களுக்கிடையேயான சிக்கல்களைப் பற்றிய பேச்சில் தெரிந்த யதார்த்தமும், நேர்மையும் அவரைப் பற்றிய நம்பிக்கையைக் கூட்டியிருக்கிறது.
தலைமையும், வழிகாட்டலுமில்லாமல் வெள்ளை மேட்டுக்குடியினரிடம் பல துறைகளில் போட்டியிட இயலாத கருப்பினத்து மக்களிடையே தன்னம்பிக்கையுடன் சில மாற்றங்களைக் கொண்டுவர ஓபாமாவின் தேர்வு மிகப் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.
மிக எளிமைப் படுத்திச் சொல்வதாயிருந்தால், இராஜாஜியையும், சிதம்பரத்தையும் விட கல்வியறிவிலும், மேதாவித்தனத்திலும் பின்தங்கியிருந்தாலும், கருணாநிதியும், மாயாவதியும் ஆட்சிக்கு வந்தபின்னால் பிற்படுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு ஏற்பட்ட தன்னம்பிக்கை மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.
மூதறிஞர் என்று சொல்லப் பட்ட இராஜாஜி சாதித்ததை விட கல்வியறிவும், அனுபவமுமில்லாத எம்.ஜி.ஆர் சாதித்தது எவ்வளவோ மேல்.
மற்றபடி மருத்துவ நலம், கல்விக்கட்டணங்கள், வேலை வாய்ப்பு என எத்தனையோ உள்நாட்டு விசயங்களில் பெரிய மாற்றங்களையெல்லாம் கொண்டுவரக்கூடிய சூழ்னிலையில் அமெரிக்கப் பொருளாதாரம் இன்றைக்கில்லை. எனவே யார் வந்தாலும் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை.
2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது?