ஆதியில் டைனோபாய் வந்தார். இப்போது மூஸ்ஹன்ட்டர்.
அவரிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்குமுன் அவரைக் குறித்து பின்னணி கேட்டேன். அவர் சொன்னதில் இருந்து.
- ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஹில்லரி க்ளின்டன் வரவேண்டுமென்று விரும்பினேன். 2016 வரை ஒபாமா காத்திருந்திருக்கலாம்!
- என்னுடைய பீச்சாங்கை பக்கம் ஆப்பிரிக்க-அமெரிக்க குடும்பம் வசிக்கிறார்கள். சோத்தாங்கை பக்கம் இந்தியர்கள். எதிர்த்தாப்பல வெள்ளக்காரங்க. அந்தப்பக்கம் இரானில் இருந்து வந்திருக்கிறவங்க. ஒரே வெரைட்டிதான்!
- ஜான் மெகயின கீட்டிங் விவாகாரத்துல விசாரிக்கறப்ப இந்த ஊருக்கு வந்து சேர்ந்தேன்.
இனி அவர்:
1. ஒபாமாவா? மெகெயினா? இரண்டும் பேரும் சரியில்லை என்று தப்பிக்கக்கூடாது. இருப்பதற்குள் எவர் ஒகே? ஏன்?
இரண்டு பெரிய கட்சிகளின் வேட்பாளர்களான இவ்விருவரோடு சிறிய கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர் என்று மொத்தம் ஐந்து பேர் களத்தில் உள்ளனர்.
ஆகியோரும் களத்தில் உள்ளனர். வெகுஜன ஊடகங்களில் அதிகம் பேசுப்படுவதில்லையாகையால் இவர்களைப் பற்றி அதிகம் தெரிவதில்லை. ஆனாலும் இவர்களின் கட்சி சார்ந்து அவர்களுடைய கொள்கைகளை, திட்டங்களை ஓரளவு கணிக்கலாம்.
ரால்ப் நேடரைப் பற்றி ஓரளவு தெரியும். பலமுறை அவருடைய செவ்விகளை பசிபிகா, என். பி. ஆர். வானொலிகளில் கேட்டிருக்கிறேன். பத்திரிகைகளிலும் அவரைப் பற்றிப் படித்திருக்கிறேன்.
பாப் பார் இன் செவ்வியினை என். பி. ஆர். இல் கேட்டிருக்கிறேன். குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினராக இருந்தவர். இப்போது லிபர்டேரியன் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். லிபர்டேரியன் கட்சியின் கொள்கைகள் எனக்கு ஒத்து வராது.
பசுமைக் கட்சியின் இணைய தளத்தை மேலோட்டமாக மேய்ந்ததோடு சரி. ஆகையால் சிந்தியா மெக்கின்னியைப் பற்றி அதிகம் தெரியாது. சமீபத்தில் மூன்றாம் கட்சியினர் தேசிய பத்திரிக்கையாளர் கிளப்புடன் இணைந்து நடத்திய கூட்டத்தை C-SPAN இல் ஒளிபரப்பினார்கள். அதிலும் நேடரும், ரான் பாலும் பேசியதை மட்டும் தான் பார்க்க முடிந்தது. மெக்கின்னி பேசியதை பார்க்கவில்லை.
ஆக களத்தில் இருக்கும் வேட்பாளர்களின்-அவர்களுடைய கட்சிகளின் நிலைப்பாடுகள், அவர்கள் ஆற்றிய பணிகள், அவர்களுடைய நேர்மை ஆகியவற்றை வைத்து முடிவு செய்ய வேண்டுமென்றால் என்னுடைய முதல் தேர்வு ரால்ப் நேடர் தான்.
அடுத்த தேர்வு ஒபாமா.
நான் இருக்கும் மாநிலத்தில் நேடருடைய பெயரைச் சேர்க்க வேண்டுமென்று மனு கொடுக்கப்பட்டதாக செய்தித் தாளில் படித்தேன். சாலையோரத்தில் ஓரிரு நேடர்/கன்சாலஸ் விளம்பரப் பலகைகளும் தென்படுகின்றன. அனேகமாக அவருடைய பெயர் வாக்குச்சீட்டில் இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவர் பெயர் இருக்கும் பட்சத்தில் அவருக்கு ஓட்டு போடலாம் அல்லது ஒபாமாவுக்குப் போடலாம்.
நேடருக்கு விழும் வாக்குகள் அனேகமாக அதிருப்தி ஜனநாயக் கட்சியினரின் வாக்குகளாகத் தான் இருக்கும் (நான் எந்த கட்சியிலும் உறுப்பினர் ஆகவில்லை. இந்த நாட்டுக்கு வந்து 17 வருடங்களுக்குப் பின் சமீபத்தில் தான் குடியுரிமை பெற்றேன். முதல் முறையாக இப்போது தான் வாக்களிக்கப்போகிறேன்).
2000 ஆம் ஆண்டுத் தேர்தலில் நேடர் போட்டியிட்டிருக்காவிட்டால் (குறிப்பாக ஃப்ளோரிடாவில்) கோர் தோற்றிருக்க மாட்டார் என்று ஜனநாயகக் கட்சியினர் கடும்கோபம் அடைந்தனர். ஆனால் நேடருடைய வாதம் நியாயமாகத் தான் இருக்கிறது:
“நான் பேசிய பிரச்சினைகளை கோர் பேசியிருந்தால் எனக்கு கிடைத்த வாக்குகள் அவருக்கு கிடைத்திருக்கும். ஆகையால் என் தப்பு இல்லை. அது கோர் இன் தவறு தான்” என்கிறார். இம்முறையும் தன்னுடைய இணையதளத்தில் சில பிரச்சினைகளைப் பட்டியலிட்டிருக்கிறார், அவற்றைப் பற்றி யார் வேண்டுமானாலும் பேசி தனக்குக் கிடைக்கப் போகும் வாக்குகளை தம் பக்கம் திருப்பிக்கொள்ளலாம் என்கிறார்.
“நேடர் எப்படியும் வெற்றிபெறப் போவதில்லை. ஒரு வாக்கை ஏன் வீணாக்க வேண்டும்” என்று கேள்வி எழலாம்.
பிரச்சினை என்னவென்றால் நான் வசிக்கும் தென் மாநிலம் சிகப்பு நிரையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி மெக்கெய்ன் – ஒபாமா வாக்கு வீதம் 55-35 என்ற அளவில் உள்ளது. ஆகையால் ஒபாமாவும் இங்கு வெற்றிபெறப் போவதில்லை.
அவருக்கு போட்டாலும் என் வாக்கு வீண் தான் (வாக்கு வீணாகக் கூடாது என்பதற்காக மெக்கெய்னுக்கு போட முடியுமா?).
“ஒபாமா இங்கு வெற்றி பெறுவதற்கான சாத்தியம் எவ்வளவெனில், இங்கு வெற்றிபெறுமுன் அவர் வேறு 45 மாநிலங்களில் வெற்றி பெறவேண்டும். அப்படியொரு அலை இப்போது வீசவில்லை” என்கிறார் ஓர் உள்ளூர் அரசியல் பேராசிரியர் (1984 தேர்தலில் ரீகன் 49 மாநிலங்களில் வெற்றி பெற்றார். அந்த தேர்தலுக்கும், இந்த தேர்தலுக்கும் ஒரே ஒற்றுமை என்னவென்றால் தோற்ற/தோற்கப்போகும் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் பெண் என்பது மட்டும் தான். ஆனால் ஒபாமாவின் கவர்ச்சி ரீகனின் கவச்சிக்கு இணையானதாக இல்லை என்பதால் 45 ஐ எட்ட முடியாது).
என் அண்டை வீட்டுக்காரர்களில் ஒரு பக்கம் கறுப்பர், அடுத்த பக்கம் இந்தியர். எதிர் வீடுகளில் ஒருவர் வெள்ளையர் இன்னொருவர் ஈரானியர். எல்லோருமே ஒபாமாவுக்குத் தான் வாக்களிக்கப்போவதாக கூறுகிறார்கள். வெள்ளையர் தன் வீட்டின் முன் ஒபாமா/பைடன் விளம்பரத் தட்டி கூட வைத்திருக்கிறார். நானும் ஒபாமா என்றுதான் சொல்லிவைத்திருக்கிறேன் (ஆனால் நான் வசிக்கும் நகரம் கடைந்தெடுத்த கன்சர்வேடிவ் நகரம்).
ஆனால் உண்மையில் ரால்ப் நேடரா அல்லது ஒபாமாவா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த நாட்டில் இரு கட்சி ஆதிக்கத்தை மாற்ற ஏதோ நம்மாலான முயற்சி.
இருந்தாலும் இந்த தேர்தல் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ஒன்று, முதல் முறையாக கறுப்பர் அதிபராவார் அல்லது ஒரு பெண் துணை அதிபராவார் என்று சொல்லப்படுகிறது.
பசுமைக் கட்சியின் வேட்பாளர் சிந்தியா மெக்கின்னி/ரோசா க்ளமெண்டி வெற்றி பெற்றால் இரண்டு சிறப்புகளும் ஒரேசேர கைகூடும். 🙂
2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது?