Daily Archives: ஒக்ரோபர் 25, 2008

சுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க தேர்தலும்: வாரயிறுதி விஐபி

பத்ரி:

1. தமிழக அரசியல் களத்திற்கும் அமெரிக்க அரசியல் களத்திற்கும் என்ன ஒற்றுமை?

இரண்டு தேர்தல்களிலும் மக்கள் அனைத்து ‘வயதுக்கு வந்தவர்களும்’ வாக்களிக்கிறார்கள் என்பதைத் தவிர ஒரு பொருத்தமும் இல்லை. அமெரிக்கத் தேர்தலில் இரண்டே இரண்டு ‘அங்கீகரிக்கப்பட்ட’ கட்சிகள்தான். சுயேச்சை வெற்றிபெறுவது கடினம். தேர்தல் கூட்டணி என்பது காணப்படாத ஒன்று.

2. அங்கு நடக்கும் தேர்தலுக்கும், இங்கு நிகழும் தேர்தலுக்கு ஆறு வித்தியாசங்கள் சொல்ல முடியுமா?

1. தமிழகத்தில் கொள்கை குறைவு – அல்லது இல்லவே இல்லை. வெறும் வாக்குறுதிகளும் ஹை-வோல்டேஜ் பிரசாரங்களும் மட்டுமே. அமெரிக்காவில் கொள்கைகளைப் பற்றி அலசுதல் அதிகம். மக்களுக்கு சற்றே அதிகமாக மதிப்பு கொடுக்கப்படுகிறது.

2. தமிழகத் தேர்தலில் வேட்பாளர்கள் பெரும்பாலும் டம்மிகள். தலைவர்களைப் பொருத்தும், கூட்டணி பலத்தைப் பொருத்துமே வெற்றியும், தோல்வியும். அமெரிக்காவில் உள்ளதே இரண்டு கட்சிகள்தான். கூட்டணி கிடையாது. ஒவ்வொரு தொகுதியிலும் யார் நிற்கிறார்கள் என்பதைப் பொருத்தும் அந்த இடத்தில் எந்தக் கட்சிக்கு செல்வாக்கு அதிகம் என்பதைப் பொருத்தும்தான் ஜெயம்.

3. தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட பொறுக்கிகள், ரவுடிகள், என்கவுண்டரில் போட்டுத் தள்ளப்பட்ட ரவுடிகளின் மனைவிகள் என்று மணி மணியான வேட்பாளர்கள் களத்தில் நிற்பது சகஜம். அமெரிக்காவில் அந்த அளவுக்கு மோசம் என்று சொல்லமுடியாது.

4. தமிழக தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மக்கள் ஜே ஜே என்று கூடுவார்கள். நிறைய நேரம் காத்திருந்து, அம்மாவோ, அய்யாவோ கையசைத்து நாலு வார்த்தை பேசுவதைக் கேட்பார்கள். அமெரிக்காவில் கன்வென்ஷன் தவிர வேறு எங்கும் கூட்டம் சேரும் என்று சொல்ல வாய்ப்பே இல்லை.

5. அமெரிக்காவில் தேர்தல் செலவுக்கு எப்படிப் பணம் வசூலாகிறது என்று ஓரளவுக்கு டிராக் செய்யமுடியும். தமிழகத்தில் சான்ஸே இல்லை. ஆனால், பெட்டி பெட்டியாக பணம் மட்டும் செலவாகிறது.

6. ஆனால் ஒன்று… மத்திய தேர்தல் ஆணையம் நடத்தும் தமிழகத் தேர்தல்களில் தில்லுமுல்லுகள் நடக்க வாய்ப்பு இல்லை. அமெரிக்கத் தேர்தல்களில் மிகவும் நுண்ணிய வகையில் தேர்தல் தில்லுமுல்லுகள் எப்பொதும் நடக்கின்றன என்று நான் கருதுகிறேன்.

3. இலவச கலர் டிவி போல் ஒபாமாவும் ‘வறியவர்களுக்கு வரி விலக்கு’, ‘வீட்டின் விலைமதிப்பு குறைந்ததற்கேற்ப வங்கிக்கடன் தள்ளுபடி’ என்று பற்பல சலுகைகளை வாக்கு வங்கிக்காக அள்ளி வீசி வருகிறார். ‘NAFTAவை மீண்டும் பேரம் பேசுவேன்’ போன்று கட்சிக்குள் நடக்கும் ப்ரைமரியில் ஜெயிக்க ஒரு பேச்சு. பொதுத் தேர்தலில் ஒரு மாகாண வேட்பாளர்களைக் கவர இன்னொரு பேச்சு; அதே நாளில் இன்னொரு மாகாணம் சென்றால் முரணாண மற்றொரு பேச்சு. இன்னும் ஒபாமாவை நம்புகிறீர்களா?

ஒருமித்த கொள்கைகளை முன்வைப்பதில் சில பிரச்னைகள் உள்ளன. ஒருவருக்கு ஏற்புடையது இன்னொருவருக்கு இல்லை. ஆனால் தேர்தலில் ஜெயிக்க அனைவரது – அல்லது பெரும்பான்மையினரது – வாக்குகள் தேவை. எனவே சில இடங்களில் மழுப்பவேண்டியுள்ளது. ஒபாமா இதனைச் செய்கிறார். மற்றவர்கள் அதிகமாகச் செய்கிறார்கள். இதெல்லாம் நியூட்ரல் வாக்காளர்களை எப்படியாவது கவர்வதற்கான வழி.

இது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், ஒபாமா, மெக்கெய்னை விட 100 மடங்கு சிறந்தவர் என்பது என் கருத்து.

4. பச்சை பார்ட்டி, ரால்ஃப் நாடர், பாப் பார் என்று இன்னும் சிலர் கூட அமெரிக்க அதிபராக முயற்சிக்கிறாங்களே… அவங்களப் பத்தி உங்க எண்ணங்களை சொல்லுங்களேன். இவர்களை ஏன் நீங்க ஆதரிக்கவில்லை?

இவர்கள் எல்லாம் ஒருவகையில் சுப்ரமணியம் சுவாமி போன்றவர்கள். அமெரிக்கத் தேர்தல் முறையில் இவர்கள் யாருமே ஜெயிப்பதற்கு வாய்ப்பே இல்லை. அந்த முறையை மாற்றுவதற்கான வழிமுறையில் இறங்காமல் கையில் இருக்கும் காசைக் கொட்டி வீணாக்கி, கோமாளியாகத் தோல்வியடைபவர்களை வேறு என்ன சொல்லலாம்? இவர்களை நான் அதற்கு ஆதரிக்கவேண்டும்?

5. திடீரென்று தற்போது நடக்கும் பொருளாதாரப் பிரச்சினையினால் அமெரிக்க தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டு நடிகரை ஜனாதிபதியாக்க முடிவெடுக்கிறார்கள். எவர் பொருத்தமானவர்? ஏன்?

வடிவேலு.

ஜார்ஜ் புஷ்ஷைவிட மோசமாக இவரால் நடந்துகொள்ள முடியாது. ஒருவேளை அமெரிக்கா படுவேகமாக சுபிட்சமான நாடாக ஆகவும் வாய்ப்புகள் உள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக, அவரது நிறம், பல கருப்பர்களுக்கு மன ஆறுதலை அளிக்கும். வெள்ளை மாளிகையில் கருப்பு அதிபர்.

பத்ரி