Daily Archives: ஒக்ரோபர் 23, 2008

அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் தமிழக ஜனநாயகம் எவ்வளவோ தேவலாம் – மூஸ் ஹன்ட்டர்

5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா? வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை? எவ்வாறு வேறுபடுகிறது?

இந்த கேள்வி விலாவரியாக விவாதிக்கத் தகுந்தது. கோர்வையாக என்னால் பதிலளிக்க முடியுமா என்று தெரியவில்லை.

முதலில், தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா என்று தெரியவில்லை. வேண்டுமானால் பொதுவாக இந்திய, அமெரிக்க அரசு, அதிகார முறைகள், தேர்தல்கள், அவற்றையொட்டிய பிரச்சார முறைகள் போன்றவற்றை வேண்டுமானால் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

முதலில் இந்தியாவில் தேர்தல் என்பது ஒரு திருவிழா போன்றது. பொதுமக்களின் ஆர்வமும், பங்கேற்பும் அதிக அளவில் இருக்கும்.

இங்கு அப்படி வெளிப்படையாகத் தெரிவதில்லை. வாக்களிப்பு சதவீதமே மிகக்குறைவு.

இந்தியாவிலும் நடுத்தரவர்க்கத்தினர் அதிகமாக வாக்களிப்பதில்லை என்று கூறப்படுவதுண்டு. இங்கு ஏழைவர்க்கத்தினர் தான் அதிக அளவில் வாக்களிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது.

வாக்கு வங்கி அரசியல் இங்கும் இருப்பதாகவே நினைக்கிறேன். நம் ஊரில் மதம், ஜாதி என்றால், இங்கு இனம், மதம் வாக்கு வங்கி அரசியலுக்கு அடிப்படையாக உள்ளன. ஒரே வித்தியாசம் பலகட்சி ஜனநாயகமான இந்தியாவில்/தமிழ் நாட்டில் இந்த குழுக்கள் ஏதாவது ஒரு சிறுகட்சியையாவது முன்னிறுத்தி செயல்படுவதால் இப்போதெல்லாம் பல கட்சிகளைச் சேர்த்து கூட்டணி அமைத்து இத்தகைய வாக்கு வங்கிகளைக் கவர முயற்சிக்கிறார்கள்.

இந்நாட்டில் இரு கட்சி ஜனநாயகம் செயல்படுவதால் அந்த குழுக்களின் அரசியல் சாரத அமைப்புகளை கவர வேண்டியுள்ளது. அக்குழுக்கள் நடத்தும் கூட்டங்களுக்கு இரு தரப்பு வேட்பாளர்களும் அழைக்கப்படுகிறார்கள். ஆனாலும், நம் ஊரில் மதங்கள், ஜாதிகள் வெளிப்படையாக கட்சிகள் அமைத்து செயல்பட்டாலும், அவை தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதாக நான் நினைக்கவில்லை.

பெரிய கட்சிகள், அவற்றின் தலைவர்கள் மீதிருக்கும் அபிமானம் பெருமளவும், அப்போதைய பொதுப் பிரச்சினைகள் ஓரளவும் தான் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன என்பது என் கருத்து. ஜாதி, மதக் குழுக்கள் ஒட்டு மொத்தமாக ஒரு பக்கம் சாய்ந்து முடிவுகளை மாற்றுவதில்லை.

ஓரிரு ஜாதிகள் வேண்டுமானால் அரசியல் ரீதியில் வெற்றிகரமாக ஒன்று திரண்டிருக்கலாம். அதற்குக் காரணம் அந்த ஜாதிகளில் தோன்றிய நம்பிக்கைக்குரிய தலைவர்கள் மட்டுமே காரணம். இங்கும் வேட்பாளர்கள் ஒவ்வொரு மக்கள் குழுவுக்கும் தகுந்த மாதிரி பேச வேண்டியுள்ளது.

இனம் என்று எடுத்துக்கொண்டால் யூதர்கள், ஹிஸ்பானிக்குகள், கறுப்பர்கள் போன்ற இனக்குழுக்கள் ஏதாவது ஒரு கட்சியை அல்லது வேட்பாளரை பெரும்பான்மையாக ஆதரிக்கும் நிலை உருவாகிறது.

பொதுவாக கறுப்பர்கள் ஜனநாயகக் கட்சியை அதிகமாக ஆதரிக்கிறார்கள். கடந்த தேர்தல்களில் ஹிஸ்பானிக்குகள் பெரும்பான்மை ஜார்ஜ் புஷ்ஷை ஆதரித்தனர். இந்த தேர்தலில் இன்னும் உறுதியாக தெரியவில்லை என்றாலும், ஒபாமா பக்கம் சாய்வதாகத் தெரிகிறது. உதாரணமாக கொலராடோவில் ஹிஸ்பானிக்குகளின் ஆதரவு தேர்தலை முடிவு செய்யும் என்று கருதப்படுகிறது.

அடுத்து பணம். நம் ஊரில் தேர்தலின்போது கருப்புப்பணம் புகுந்து விளையாடும். சொல்லப்போனால் கருப்புப்பணம் வெளியே வர, செல்வம் மறுவிநியோகம் செய்யப்பட தேர்தல் ஒரு முக்கிய காரணியாக செயல்படுகிறது. தேர்தல் பணம் பலத்தரப்பட்ட மக்களை வெவ்வேறு வகையில் சென்றடைகிறது.

இந்த நாட்டில் தேர்தலில் சொந்த பணத்தை செலவிடுவது மிகமிகக் குறைவு. தனிநபர், தனியார் நிறுவனங்களின் பங்களிப்புகள், அரசு நிதி ஆகியவையே தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவியாக இருக்கின்றன. ஆனால் இந்த நாட்டிலிருக்கும் தேர்தல் பிரச்சார முறைகள் காரணமாக செலவிடப்படும் பணம் பெரும்பாலும் தொலைகாட்சி, வானொலி போன்ற பெரிய விளம்பர நிறுவனங்களுக்கே போகிறது.

வாக்களிக்கும் முறைகளில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறேன். இந்தியாவில் இருப்பது போன்று சீரான வாக்களிக்கும் முறை இங்கு இல்லை.

2000 ஆம் ஆண்டு தேர்தலின்போது தான் இங்குள்ள வாக்களிக்கும் முறையில் உள்ள குழப்பங்கள் தெரிய ஆரம்பித்தன. தேர்தலை நடத்துவது, அது நாட்டின் அதிபர் தேர்தலாக இருந்தாலும், பொறுப்பு மாநில அரசைச் சார்ந்தது. ஆகையால் மாநிலத்துக்கும் மாநிலம் வாக்களிக்கும் முறை வேறுபடுகிறது.

இந்தியாவை ஒப்பிடும்போது இங்கு பெரும்பாலான மாநிலங்கள் இதில் பின்தங்கியிருப்பதாகவே நினைக்கிறேன். தேர்தலை நடத்தத் தேவையான அளவு பணம் ஒதுக்குவதில் பல மாநிலங்கள் அக்கறைக் காட்டுவதில்லை என்று தெரிகிறது.

வாக்களிப்பது, வாக்கு எண்ணிக்கை போன்றவற்றில் மாநில அரசுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளின் குறுக்கீடுகள் இருப்பதாகத் தெரிகிறது. 2000 ஆண்டு தேர்தலின்போது ஃப்ளோரிடாவில் மாநிலத் தலைமைச் செயலாளர் கேதரின் ஹாரிஸ் (இவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்; புஷ்ஷின் தேர்தல் பிரச்சார அதிகாரியாகவும் இருந்தவர்) செய்த தில்லுமுல்லுகள் பிரசித்தமானவை.

வாக்காளர்களை மிரட்டுதல், வாக்களிக்கவிடாமல் தடுத்தல் போன்ற பல தில்லுமுல்லுகள் வெளிச்சத்துக்கு வந்தன. இந்த தேர்தலிலும் அதுபோன்று பெருமளவு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (உ-ம்: http://www.npr.org/templates/story/story.php?storyId=95509946).

இதில் ஆளும்கட்சியின் தலையீடு எந்த அளவுக்குப் செல்கிறது என்பதை முன்னாள் அரசுத் தலைமை வழக்கறிஞர் அல்பர்டோ கன்சாலஸ் அவர்களால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு அரசு வழக்கறிஞரின் செவ்வியைக் கேட்டபோது வாயடைத்துப்போனேன்.

அமெரிக்க ஜனநாயகத்தின் லட்சணம் இவ்வளவு தானா என்று.

மணிக் கூண்டு சிவாவின் கேள்விக்கு பதில்: கறுப்பு/வெள்ளை: ஏன் மெகயின்?

மணிக் கூண்டு: அமெரிக்காவின் நிறப்பற்று!!! … | மணிக் கூண்டு: ஓபாமாவிற்காக ஓர் நாள்!

நான் வாக்குகள் சேகரிக்க சென்ற பொழுது என் சட்டையில் ஓபாமா பேட்ஜை பார்த்த பொழுது ஓரு சில வெள்ளைகாரர்கள் கதவை சாத்திக் கொண்டார்கள். இதில் துளிக்கூட பொய் இல்லை! என்னைக் கண்டு கதவை சாத்திக் கொண்டார்கள் என்று சொல்லவில்லை! அதாவது நான் ஓபாமா ஆதரவாளன் என்று தெரிந்த காரணத்தாலும், நான் வைத்து இருந்த ஓபாமா சுவர் விளம்பரங்களை பார்த்தவுடன் அதனை நாகரீகமாக மறுக்காமல் அவர்களுடைய அணுகுமுறையில் அவர்கள் ஓபாமாவை ஏற்க மறுக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது!

என்னுடைய வீட்டுக்கு அவ்வப்போது யாராவது வந்துகொண்டிருப்பார்கள்.

  • ‘நாங்க யூடாவிலிருந்து வருகிறோம்! மார்மன் தேவாலயத்தில் இருந்து இலவச பைபிள் கொடுப்போம்’
  • ‘சில்லறை ஏதாவது இருக்குமா? எனக்கு கஞ்சா அடிக்கணும்’
  • ‘ட்ரிக் ஆர் ட்ரீட்’

இப்போதெல்லாம் வாயில் மணியடித்தால் போய் பார்க்க சிரமப்படுவதேயில்லை.

நான் மார்மன் மதத்திற்கோ, அந்த மதத்தை பிரச்சாரம் செய்பவர்களுக்கோ எதிரானவன் இல்லை. இருந்தும் அவர்களுடன் அளவளாவுவதை வெட்டி நேரமாகவே நினைக்கிறேன். அதே போல், திடமான மாற்று முடிவை எடுத்தவர்கள் உங்களைத் தவிர்த்திருக்கலாம்.

கல்லூரியில் பிரச்சாரம் செய்வதற்காக ஒவ்வொரு மாணவனின் கதவைத் தட்டிய அனுபவமுண்டு. ‘உங்க ஆளுக்குத்தான் அய்யா வாக்கு’ என்று சொல்லாவிட்டால் விடமாட்டோம். அடுத்தவரின் குறைகளை மட்டும் வலியுறுத்தி, அவன் கேட்கும் கேள்விகளை நிராகரித்து, மந்திரித்து விட்டவர்கள் மாதிரி சாமியடிப்போம். அந்த பயமாகவும் இருக்கலாம்.

கடந்த ஒரு ஆண்டுகளில் எனக்கு தெரிந்து அல்லது அலுவலகத்தில் அல்லது வேறு இடங்களில் வெள்ளைக் காரர் வெளிப் படையாக ஓபாமாவை ஆதரித்துப் பார்க்கவில்லை!

நியு ஹாம்ஷைரில் நடந்த கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். பல்லாண்டு காலம் முன்பு (போன வருடம்தான்) நடந்த ஐயோவா முதல் நேற்று நடந்த சொற்பொழிவு வரை யூட்யுபிலோ, புகைப்படத்திலோ பார்த்திருப்பீர்கள்.

அமெரிக்காவில் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் சிறுபான்மையினர். பெரும்பான்மையினரான வெள்ளைக்காரர் ஆதரவின்றி ஜனநாயகக் கட்சியின் முதற்கட்ட வாக்குப்பதிவையும் வென்று, ஒபாமாவால் இவ்வளவு தூரம் வந்திருக்க இயலாது.

  • உங்கள் அலுவலில் எத்தனை பேர் வேலை பார்க்கின்றனர்?
  • அவர்கள் எந்தக் கட்சி சார்ந்தவர்கள்?
  • கடந்த தேர்தல்களில் எவ்வாறு வாக்களித்தார்கள்?
  • எவ்வளவு பேரிடம் விசாரித்தீர்கள்?
  • அலுவல் தாண்டி, பள்ளிக்கூடத்தின் சக பெற்றோர்கள், தாங்கள் சேவை புரியும் அமைப்புகள் போன்ற இன்ன பிற இடங்களிலும் இந்தக் கருத்துக் கணிப்பை மேற்கொண்டீர்களா?

அலுவலில் பேசாப்பொருளாக கருதப்படும் அரசியல் குறித்து வெளிப்படையான எண்ணங்களை எதிர்பார்க்க முடியாது.

இப்படி அமெரிக்க பொருளாதரம் ஏராளமான சரிவை சந்தித்த பொழுதும் வெள்ளைகாரர்கள் கண்மூடிதனமாக ஜான் மெக்கயனை ஆதரிக்க என்ன காரணம்? குறிப்பாக வயதான வெள்ளைக் காரர்கள் ஏன் ஓபாமாவை ஆதரிக்க மறுக்கிறார்கள்?

ஜான் மெகயினை ஆதரிக்க என்ன காரணம்?

  1. அனுபவம்: உங்கள் வீட்டில் குழாய் பழுதாகிறது. சரி பார்க்க யாரை அழைப்பீர்கள்? craigslistஇல் விளம்பரம் தந்திருக்கும் பதின்ம வயது பாலகன். பக்கத்து வீட்டில் இருக்கும் உங்கள் அத்யந்த நண்பனுக்கு ரிப்பேர் செய்த பத்து வருடம் ப்ளம்பராய் கொட்டை போட்டவர்?
  2. புடமிட்டவர்: சோதனை வரும்போது சொந்தமாக முடிவெடுக்க வேண்டும். எடுத்த முடிவில் தடங்கல்கள் வந்தாலும், நல்ல முடிவாக இருக்கும்பட்சத்தில் அசராத மனம் வேண்டும். வியட்நாமில் தான் மட்டும் விடுதலை என்பதால் மறுத்தல் போன்ற எடுத்த முடிவுகளில் பின் வாங்காதவர்.
  3. சுதந்திரமான சிந்தனை: தன்னுடைய கட்சியிட்ட ஆணைப்படி 98% செனேட்டில் வாக்களித்தவர் ஒபாமா. கட்சி என்ன சொல்கிறதோ; அதுவே சித்தாந்தம். கொறடா எப்படி வழிநடத்துகிறாரோ; அதுவே வேதாந்தம். மெகயின் அவ்வாறு கண்மூடித்தனமாக பின்பற்றாமல் தன்னுடைய குடியரசுக் கட்சியை பகிரங்கமாக எதிர்த்தவர்.
  4. நிக்ஸன் எவ்வழி? ஒபாமா அவ்வழி: உங்களுக்கு கடுமையான சோதனை. நண்பர் நிதியுதவி செய்து மீட்பிக்கிறார். கொஞ்ச நாள் கழித்து அந்த நண்பரே உங்களிடம், ‘ஒரு சோபா வாங்கி இருக்கேன். வீட்டுக்குள் தூக்கி வைக்க ஒரு கை கொடுக்க முடியுமா?’ என்று பதில் மரியாதை கோரினால் என்ன செய்வீர்கள்? இன்று ஒபாமா தேர்தல் காணிக்கையாக மில்லியன்களை தன்னுடைய கோடீஸ்வர நண்பர்களிடமிருந்து கோரி செலவழிக்கிறார். நாளைக்கு அவர்கள் ஊழல் செய்ய உதவி கேட்டால்?
  5. வாக்கு சுத்தம் உள்ளவர்: சுத்தமான அரசியல்; எனவே, தேர்தல் விளம்பரங்களுக்கு செலவழிப்பதில் வரைமுறை வேண்டும் என்பதில் ஸ்திரமாய் இருப்பவர் மெகயின். நேற்றுக்கு ஒரு சொல்; நாளைக்கு இன்னொன்று என்று கொடுத்த வாக்குறுதிகளை மீறுபவர் ஒபாமா.
  6. ஊழல் செய்தாலும் அதை ஒத்துக்கொள்ளும் துணிவும் பொறுப்புணர்ச்சியும் கொண்டவர்: கீட்டிங் விவகாரத்தில் அனுபவமின்மையால் தான் நடந்துகொண்ட விதத்திற்காக வாக்குமூலமாக புத்தகம் எழுதியவர் எங்கே? டோனி கொடுத்த பணத்தில் வீடு கட்டிவிட்டு, அதைக் கேள்வி எழுப்பினால் மழுப்புபவர் எங்கே?
  7. இன்னொரு புஷ்ஷாக மாறாதவர்: சுவாரசியமானவர், மனதில் தோன்றியதை பேசுபவர், இளரத்தம், போர்முனைக்கு செல்லாதவர் போன்ற புஷ் குணாதிசயங்கள் ஒபாமாவிடம் உண்டு. பாகிஸ்தானை தாக்குவேன் என்று பகிரங்க ஒண்டிக்கு ஒண்டி அழைப்பவர். மெகயின் ஆழம் பார்த்து காய் நகத்துபவர்.
  8. இன்னொரு கார்ட்டராக மாறாதவர்: வாஷிங்டனுக்கு வெளியாள் என்று சொல்லித்தான் அதே ஜனநாயகக் கட்சியில் இருந்து வந்தார் கார்ட்டர். இரான் விவகாரம் முதல் ஒன்றிலும் காத்திரமான அணுகுமுறை காட்டாமல், ஒபாமா செனேட்டில் அடிக்கடி போடும் ‘ப்ரெஸன்ட் சார்’ ஆக கழுத்தறுக்காதவர் மெகயின்.
  9. அரசு செலவை எக்கச்சக்கமாக்காதவர்: ஜனநாயகக் கட்சிவாசிகளுக்கு எப்போதுமே அகலக்கை. வரவு எட்டணா என்றால் அதற்குள் செலவைக் கட்டுப்படுத்துவது அவசியம்தான், என்றாலும் வரிச்சுமை ஏற்றுவதில் நீண்டகால வரலாறு கொண்டவர்கள். எல்லாவற்றிலும் அரசின் மூக்கை நுழையவைத்து ரெட் டேப் கொண்டு வந்து, திவாலாகிக் கொண்டிருக்கும் சோஷியல் செக்யூரிட்டி, மெடிகேர் போல் நிர்வகிக்கவும் தெரியாமல் நிர்க்கதி ஆக்குபவர் அல்ல மெகயின்.
  10. செனேட், ஜனாதிபதி, ரெப்ரஸேன்டேடிவ் எல்லாவற்றிலும் ஒரே கட்சியின் ஆக்கிரமிப்பு கூடாது: காங்கிரஸ் சபையில் ஏற்கனவே ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை வகிக்கிறார்கள். செனேட்டிலும் மயிரிழையில் அதே நிலை. அதிபரும் ஒபாமாவானால் கொண்டாட்டம்தான். தன்னிச்சையாக ஜார்ஜ் டபிள்யூ புஷ் எடுத்த முடிவுகள் போல் லகான் இல்லாத வெள்ளை மாளிகை ஆபத்தானது.

இந்த பத்தில் வெள்ளைக்காரன், வயசானவன், மகளிரணி என்பதெல்லாம் ஏதுமில்லை. சந்தேகமாக இருந்தால், ஹிப் ஹாப் ரிபப்ளிகன் போன்ற பல்லாயிரக்கணக்கான கறுப்பர்களின், தற்பால் விரும்பிகளின், இளைஞர்களின் குடியரசு சார்பைப் பரப்பும் வலையகம் பக்கம் எட்டிப்பார்க்கவும்.

ஓபாமாவை வரவிடாமல் தடுக்க அவர் கறுப்பர் என்றாலும் பரவாயில்லை, அவரை இஸ்லாம் என்றும் தீவிரவாத தொடர்புகள் கொண்டர் என்றும் சித்தரிக்க முயற்சிப்பதன் பின்புலம் என்ன?

ஒபாமா மட்டுமல்ல. ஜான் கெர்ரியும் இந்த சித்தரிப்புக்குள் ஆணியடித்து மாட்டப்பட்டிருக்கிறார். அதாவது பல்வேறு தலைவர்கள், தங்களுடைய எதிர்க்கட்சிகளால் இவ்வாறு சாயம் பூசப்பட்டிருக்கின்றனர்.

சிறுபான்மையினருக்கு சம உரிமை கோரிய வேட்பாளரை விமர்சிக்கும் விதமாக வெள்ளைக்காரரின் கை — வேலை மறுக்கப்பட்ட கடிதத்தை கசக்குவதாக வந்த விளம்பரம் முதல் சிகப்பழகு களிம்பு வரை எல்லாவிதமான விளம்பரங்களும் மிகை நாடும் கலையே.

ஒபாமாவும் இந்த மாதிரி எதிர்மறை பிரச்சாரத்தில் மெகயினை விட பன்மடங்கு வீரியத்துடனும் பணபலத்துடனும் ஈடுபடுகிறார்.

ஆனால், மெகயின் தன்னுடைய கூட்டங்களில் ‘ஒபாமா இஸ்லாமியன்’ என்றாலோ, ‘தீவிரவாதி’ என்றாலோ, மிகக் கடுமையாக அந்தப் பேச்சை நேரடியாக கண்டிக்கிறார். இங்கே தனித்து நிற்கிறார்.

சாரா பேலின் குறித்து மட்டரகமான வாசகங்களுடன் வரும் டி-ஷர்ட் வாக்காளர்கள் ஒருவரைக் கூட ஒபாமா இவ்வாறு முகத்திற்கு நேராக முகஞ்சுளிக்காதது இங்கு குறிப்பிடத்தக்கது. தனக்கு வோட்டு பெரிதல்ல என்றால், நன்றல்லதை கண்டவுடன் களைய வேண்டும் என்னும் மனப்பக்குவமும் திறமும் தைரியமும் வேண்டும்.

அமெரிக்க தேவாலயங்களில் வெள்ளைக்கார பாதிரியார்கள், ஜான் மெக்கயனுக்கும் ஓட்டளியுங்கள் என்று சொல்லாமல் சொல்வதன் காரணம் என்ன?

போன பதில்தான். கெர்ரிக்கும் இதை செய்தார்கள்.

ஜான் கெரி தற்பால் திருமணத்தை செய்து வைக்கும் மாகாணத்தில் இருந்து வருகிறார். கிறித்துவரே அல்ல என்று பிரச்சாரம் களைகட்டியது. அவர் கறுப்பர் அல்ல.

குடியரசு கட்சிக்கு தேவை வாக்கு. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

அதாவது தற்போது நடந்து கொண்டிருக்கும் வீட்டுமனை மதிப்பு சரிவு, நிதிநிலை நெருக்கடி, வங்கி திவால் எல்லாவற்றையும் பில் க்ளின்டன் காலத்தின் கொள்கைகளினால் ஆரம்பித்தது என்று ஒப்புக்கொள்ளாமல், சாமர்த்தியமாக ஜார்ஜ் புஷ் தலையில் மட்டும் கட்டிவிடும் ஜனநாயகக் கட்சி போல்.

கடந்த 10 ஆண்டுகளில் நிறைய கறுப்பு இளைஞர்கள் வெள்ளைக்கார பெண்களுடன் சுற்றுவதை அல்லது காதலிப்பதை நான் பார்த்து இருக்கிறேன், ஆனால் ஒரு வெள்ளைக் கார இளைஞன் கறுப்பு பெண்ணுடன் சுற்றுவதை அல்லது காதலிப்பதை நான் பார்த்தது மிக மிக குறைவு!

இந்தத் தகவல் எல்லாம் அமெரிக்க சென்ஸஸ் வலையகத்தில் விரிவாகக் கிடைக்கிறது. அதன் அடிப்படையில் ஆராய்ந்து அறிந்ததை பகிர வேண்டுகிறேன்.

நான் வேலைப் பார்க்கின்ற நிறுவனத்தில் முடிவுகள் எடுகின்ற அதிகாரத்தில் கறுப்பர்கள் இல்லை! கடந்த 10 ஆண்டுகளில் நான் பார்த்த தினக் கூலி வேலைகளில் நிறைய கறுப்பர்கள் இருக்கிறார்கள். எடுத்து காட்டாக பேருந்து ஓட்டுனர், புகை வண்டி ஓட்டுனர், தபால் அலுவலகத்தில், நிறைய ஷாப்பிங் மால்களில் துப்பரவு தொழிலாளியாக இப்படி பல. சிறிய வேலைகளில் கறுப்பர்கள்! மிகப் பெரிய அதிகார பதவிகளில் வெள்ளைக்கார மக்கள்!

அமெரிக்கன் எக்ஸ்பிரெஸ் போன்ற பல நிறுவனங்களில் ஆப்பிரிக்க – அமெரிக்கர்கள் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள்.

உங்கள் ஒரு நிறுவனத்தை வைத்து மட்டும் முடிவெடுக்க முடியாது. அமெரிக்காவில் மொத்தம் எத்தனை நிறுவனங்களில் உள்லன? அவற்றில் எத்தனை கறுப்பர்கள் CxOவாக இருக்கிறார்கள்? எந்தப் பொறுப்பு வரை ‘முடிவு எடுக்கும் அதிகார’மாக கருத்தில் கொள்ளவேண்டும்?

எல்லாவற்றிக்கும் மேலாக நடந்து முடிந்த இரண்டு கலந்துரையாடலில் (Debate) ஜான் மெக்கயன் ஓபாமாவை நேரிடையாக பார்த்து பேசவேயில்லை! கண்களை பார்க்கவே இல்லை! வெள்ளைக் காரன் என்ற திமிரா? ஓபாமா என்ன தீண்ட தகாதவாரா?

கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு என்று பாட்டு பாடவா அங்கு போய் இருந்தார்கள்? வாக்குவாதம் புரியும் இடத்தில் முகத்தைப் பார்த்து பேச வேண்டும் என்பது அமெரிக்க பழக்கவழக்கம்.

அதிபர் தேர்தலை குறிவைத்தே பன்னெடுங்காலமாக இயங்கு வரும் ஒபாமா, இந்தத் தேர்வில் புன்சிரிப்பு சிந்தி மண்ணாந்தையாக நிர்ச்சலன முகம் காட்டுவதால் வென்றவர் ஆக மாட்டார். நான் கூட காதில் பஞ்சு அடைத்துக் கொண்டு, கிளிப்பிள்ளையாக சொல்லிக் கொடுத்ததை ஒப்பித்து காரியத்தில் கண்ணாயிருக்கலாம். இரத்தமும் சதையும் உணர்ச்சியின் பால்பட்ட மெகயினால் பொய்யை பொறுத்துக்கொள்ளமுடியவில்லை.

உங்களிடம் இல்லாத ஒன்றை மட்டும் வைத்து உங்களைப் பார்த்து (நீ புஷ்! நீதான் புஷ்!! உன் இன்னொரு உருவம் புஷ்!!!) என்று சதா எந்தக் கேள்விக்கும் வெறுப்பேற்றிக் கொண்டிருந்ததால் வருத்தம் கலந்த புறக்கணிப்பு வெளிப்பட்டால் அதற்குப் பெயர் திமிரா?

தொடர்புடைய சில இடுகைகள்:

1. ஒபாமா கறுப்பரா ? ஒபாமா கறுப்பர்களின் பிரதிநிதி அல்ல… : தமிழ் சசி

2. கறுப்பர் பிரச்சனைகளை பேச மறுக்கும் ஒபாமா கறுப்பர்களின் வேட்பாளரா ? : தமிழ் சசி

3. ஒபாமா கறுப்பர்களின் வேட்பாளர் அல்ல : வெங்கட்

4. ‘வெள்ளை’ மனதும் வெள்ளை மனதும் : சிறில் அலெக்ஸ்

5.  ஒபாமாவின் ‘இனப்பிரச்சனை’ பேருரை : சிறில் அலெக்ஸ்

விரிவான வாசிப்புக்கு:

1. The Role of Race–Maybe Not So Much – Swampland – TIME

2. David Von Drehle’s cover story has yet another perspective, this one from the ground in Missouri

3. Peter Beinart column in Time about how the McCain campaign are playing the race card in this election–not through the usual methods of stoking fears of black criminality and freeloading, but through insinuations that Barack Obama is a foreigner, not “the American president Americans have been waiting of,” as the McCain campaign artfully says of its candidate, but a Kenyan, a Muslim, something weird and un-American.

4. The New Race Card – The Plank

5. Immigrant Perspectives – News21 Project

6. Gender and Race: The Battle Rages Beneath the Surface – Harvard Business Online’s HBR Editors’ Blog: Why do women leaders provoke more anxiety than men — black or white?

7. The Chronicle: 3/17/2006: Race, Politics, and the Census: looks at how the election will affect America’s conceptions of race. In 2006, David A. Hollinger suggested reforms that would make racial Census categories more meaningful and useful.

8. The End of Race as We Know It – ChronicleReview.com: Where does the Obama campaign leave the black narrative of victimization?

9. Race Will Survive the Obama Phenomenon – ChronicleReview.com: By David R. Roediger – Barack Obama has been presented as the transracial emblem of a postracial era. The realities of inequality and identity politics say otherwise.

10. Hot Air » Obama ad: McCain’s an anti-amnesty Republican racist like Rush Limbaugh

தலைவா! – ஒபாமா புகைப்படங்கள்

நன்றி: Callie Shell – Obama – Digital Journalist