தமிழ்ப்பதிவர்களினூடே மிக அதிக காலம் அமெரிக்காவில் வசித்தவர் யார் என்றால் அது வாசனாகத்தான் இருக்கவேண்டும்.
வாசன் அமேரிக்காவிற்கு புலம் பெயர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. மெக்சிகோவின் அருகில் உள்ள நியு மெக்சிக்கொவில் வசிப்பதால் அமெரிக்காவினுள் அத்துமீறி குடிபுகுபவர்களால் ஏற்படும் சிக்கல்களையும் நேரடியாக உணரமுடியும் நிலையில் இருப்பவர்.
இனி அவர்:
1. உங்க ஊரில் நிலைமை எப்படி இருக்கிறது? உங்க மாகாணத்தில் யார் வெல்லக்கூடும்? ஏன்?
கருத்து கணிப்பு:
40% மெக்கெய்னுக்கும், 45% ஒபாமாவுக்கும் வாக்களிப்பார்கள் என்கிறது.
14% இன்னும் முடிவு செய்யவில்லை
இதே கணிப்பு தங்களுடைய (வாக்காளர்கள்) கொள்கைகளுடன் ஒத்து போகிற வேட்பாளர் யார் என கணித்ததில்:
- 48% ஒபாமாவையும்,
- 41% மெக்கெய்னையும் சொல்கின்றனர்.
- 7% க்கு எந்த முடிவுக்கும் வர முடியவில்லை
- 4% க்கு இரண்டு பேர்களுமே இல்லை!
2. மிக முக்கியமான ஊராச்சே… எத்தனை தடவை இது வரை ஒபாமாவும் மகயினும் வந்து போயிருப்பார்கள்! என்ன சொல்லி பிரச்சாரம் செய்கிறார்கள்? எதை முன்னிறுத்தி வாக்கு கேட்கிறார்கள்?
😉
அல்புகர்க்கி அல்லது மாநிலத்திற்கு எத்தனை தடவைகள் என்பது உடன் ஞாபகத்திற்கு வரவில்லை. 2 அல்லது 3 தடவைகள் இருக்கலாம்.
மெக்கெய்னும் சேரா பெலினும் down town Albuquerque யில் கூட்டம் நடத்திய போது நிறைய மக்கள் வந்திருந்தார்கள்; பலர் சேராவை நேரில் பார்க்கணும் என்பதற்காக வந்திருப்பார்கள் என்றன உள்ளூர் நாளிதழ் மற்றும் திறனலை (am) வானொலி. நாளிதழில் படித்தவரை கூட்டத்தில் வேட்பாளர்கள் புதிதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை.
ஒபாமா 3 வாரங்களுக்கு முன்பு கடைசியாக வந்து சென்றிருக்கலாம். மொத்தம் 4 தடவையோ..?
வட நியு மெக்ஸிக்கோ ஊர்களான எஸ்பய்னோலா மற்றும் பெர்னலியோ ஆகிய ஊர்களில் ஒபாமா கூட்டங்களுக்கு உற்சாகமான மக்கள் கூட்டம் வந்திருந்ததென சொன்ன ஊடகங்கள். இவரும் அடித்தள மக்களுக்கு காக்காய் பிடிக்கிற மாதிரி சொன்னதையே சொல்லியதாக ஞாபகம்.
‘வட நியு மெக்ஸிக்கோ’ வறுமையின் பிடியில் பல ஆண்டுகளாக இருந்து வருவது – (தலைநகரம் சேந்த ஃபே தவிர்த்து) – 65% க்கு 35 % விழுக்காடு என்பதாக ‘வாக்களிக்க பதிவு செய்தவர்கள்’ ஜனநாயக கட்சியினராக உள்ள பகுதி.
பல உள்ளூர் தேர்தல்களில் குடியரசு கட்சியினருக்கு வேட்பாளர் கிடைப்பது அரிது.
3. உங்க வோட்டு யாருக்கு? எதனால்…
இக்கணத்தில் எனது வாக்கு யாருக்கும் இல்லை.
எனது கணிப்பில் இரு வேட்பாளர்களும் கிட்டதட்ட பல விடயங்களில் ஒத்து போகிறார்கள். (தேவை இருந்தால் இது பற்றி விவரித்து எழுதலாம், nfl முடிந்த பின்!! ).
கருத்துத் தெளிவு என்பது இதுவரை கானல் நீராகத்தான் உள்ளது – இந்த தேர்தல் கூத்தாட்டத்தில்.
4. சென்ற தேர்தல்களில் வாக்களித்தவர்களில் எவர் உங்களின் எதிர்பார்ப்பை திருப்தி செய்தார்கள்? எங்கு ஏமாற்றினார்கள்?
அதிபர் தேர்தலில் ஜான் கெர்ரிக்கு துளியும் விருப்பமில்லாமல் வாக்களித்தேன். 2000 ல் டூப்யா வுக்கு வாக்களித்த போது இருந்த ஆர்வம் போலில்லை என்பதாக அர்த்தம் கொள்ளவும்.
மாநில தேர்தல்களில், congress க்கு குடியரசு கட்சியின் ஹெதர் (உ)வில்சனுக்கு வாக்களித்தேன். ஏனோ தானோ உள்ளது அவரது தற்போதைய இந்த ஆட்சி காலம்(?). மறு தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. காலியான செனெட் க்கு அவரது கட்சியின் சார்பாக போட்டியிட, கட்சியின் முன் தெரிவு தேர்தலில் வாய்ப்பினை இழந்தார்.
ஆளுநர் போட்டியில் பில் ரிசற்ட்சனுக்கு வாக்களித்தேன். எதிர்த்து நின்ற குடியரசு கட்சிக்காரருக்கு அவருடைய கட்சி வாக்குகளில் 58% தான் கிடைத்தது. “ஸால்ஸா கிடைக்காத ஊருக்கு கிடைத்த உறைப்புச் சட்னி” மாதிரிதான் பில்லுக்கு போட்ட வாக்கு.
கடந்த தேர்தலில் செனெட்டுக்கு தேர்தல் இல்லை. தற்போது உண்டு. 36 வருடங்களாக செனெட்டராக இருந்த பீற் டொமினிச்சி இடத்தை காலி பண்ணுகிறார்.
5. பில் ரிச்சர்ட்சன் எப்படி இருக்கிறார்? 2012 /16இல் தேர்தல் வேட்பாளராக வாய்ப்பு கிட்டுமா? ஒபாமாவுடன் ஒப்பிட்டால் எவ்வாறு இவர் வேறுபடுகிறார்?
2012-16 ல் என்ன நடக்கும் என யாருக்குத் தெரியும்..?
இவர் இங்கு ஆளுநராக இருந்த காலத்தில் நிச்சயமாக சில நல்ல விடயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆயினும், “மக்கள்” அரசாங்கத்தை நம்பியே வாழும் போக்கினை மாற்றிட ரிசற்ட்சன் ஏதும் செய்துவிடவில்லை.
ஒபாமாவின் பெரிய நம்பிக்கையாளர்களில் ஒருவர் ரிசற்ட்சன். வேறுபாடுகள் அவ்வளவாக இல்லை, துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமைகளை தவிர்த்து.
NRA ரிசற்ட்சனை நண்பனாக கருதுகிறது.
– வாசன்