Tag Archives: Facebook

Idly Vadai 9 Year Greetings

இட்லி வடை ஆரம்பித்து பத்தாவது ஆண்டு துவங்கப் போகிறது.

பத்தாண்டுகளாக தமிழ்ப்பதிவுகள் எப்படி இருக்கிறது என்று ரிப்போர்ட் கார்ட் போடலாம். பேருந்து விபத்தில் சென்னை நகரத்தின் பள்ளி சிறுவர்கள் இறப்பது போல் அது அடிக்கடி நடப்பது.

பத்தாண்டுகளில் இட்லி வடை எழுதியதில் பெஸ்ட் எது என்று பார்க்கலாம். டெண்டுல்கர் சதம் அடிப்பது போல் ஆயிரக்கணக்கான பதிவுகளில் நூறு திக்கி திணறி தேறலாம்.

சமகால ஜாம்பவான்களான பேயோன், மனுஷ்யபுத்திரன் போன்ற புனைப்பெயர்களோடு ஒப்பிட்டு அலசலாம். கோகுலாஷ்டமிக்கு கிருஷ்ணர் வேடம் அணிவது பொருத்தம் என்பது போல் இட்லி வடையில் அசுரர்களுக்கு இடம் இல்லை.

அப்படியானால் என்ன செய்யலாம்?

நீங்களும் இட்லி வடையாக ஒன்பது யோசனைகள் கொடுக்கலாம்:

1. தற்பெருமை, சுய அங்கீகாரத்தின் வெளிப்பாடாக அகங்காரம், தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்காத தன்மை, காதல் மன்னர்களின் வசீகரம் என்று அரசியல்வாதிக்கும் வலைப்பதிவருக்கும் உள்ள ஒற்றுமைகள் நிறைய. ஆனால், அரசியலில் வாக்கு கேட்டு வெற்றி பெற்றால்தான் மதிப்பு. வலையில் எழுதினாலே குவியும் வாக்கு.

2. இட்லி-வடை என்பது வாரிசு அரசியல் மாதிரி. முன்னுமொரு மூதாதையர் காலத்தில் இருந்து தியாகி பென்சன் பெற தகுதி பெற்றவர். நேற்றைய பினாமி பாலிடிக்சில் மில்லியனரானது போல் புதிதாக முளைத்தவர் இந்த பூமியில் காலூன்றுவது எப்படி? திண்ணை, சொல்வனம், உயிரோசை எதையும் விட வேண்டாம். ட்விட்டர், பேஸ்புக், பிண்டெரஸ்ட் எங்கும் தோன்றவும்.

3. எனக்கு ரொம்ப பிடித்தமான வினா: ‘எல்லோரும் இப்படி செஞ்சா என்ன ஆகும்?’ – அஞ்சு பைசா அன்னியன் ஆகட்டும்; எனக்கு காரியம் ஆனால் போதும் என்று கூடங்குளத்தை மூடச்சொல்லும் உதயகுமார் ஆகட்டும். உலகில் உள்ள அனைவரும் எனக்கு மட்டும் இது நடந்தால் போதும் என்று நம்பும் மனநிலையை உடைக்கலாம்.

4. எனக்கு நிரலி எழுதத் தெரியும். ஆனால், கணினி ப்ரொகிராமிங் குறித்து எழுதியது ரொம்பக் குறைவு. மொத்தம் ஏழெட்டு பதிவுகளில் இரண்டாயிரம் வார்த்தைகளை தாண்டாது. இந்த மாதிரி நம் துறை சார்ந்து எழுதலாம்.

5. சுவைக்காக தண்ணியடிப்பது ஒரு ரகம். பழக்கத்திற்காக சரக்கடிப்பது ஒரு ரகம். தூக்கத்திற்காக குவார்ட்டர் அடிப்பது இன்னொரு ரகம். எப்பொழுதாவது கம்பெனிக்காக குடிப்பது என் ரகம். நீங்கள் பதிவதில் எந்த ரகம்?

6. சண்டைக் காட்சிகளில் வாத்தியார் மூன்று அடி வாங்கிய பிறகுதான் நிமிர்ந்து திரும்பக் கொடுப்பார். பாவப்பட்ட ஹீரோவிற்கு மவுசு அதிகம். சிண்ட்ரெல்லாவிற்குத்தான் அனுதாப அலை அடிக்கும். எனவே, அவ்வப்போது உங்களை மனிதராக காட்டிக் கொள்ளுங்கள். அடக்கம் அமரருள் உய்க்கும்

7. ஒரே விஷயத்தையே கட்டி அழாதீர்கள். சங்க இலக்கியமாக இருக்கட்டும்; அரசியல் குழாயடிகளாக இருக்கட்டும். கொஞ்சம் உலகம்; நிறைய உள்நாடு; அப்படியே உங்களால் மட்டுமே எழுதக்கூடிய தனியாள் அனுபவங்கள். எல்லாம் கலந்து கட்டி அவியல் மணக்கட்டும்.

8. நாய் என்றால் கரண்ட் கம்பம் பார்த்து ஒன்றுக்கிருக்கும். வலைப்பதிவர் என்றால் மூக்கை நுழைத்து சண்டை போடுவார்.

9. என் மூளை ஔவையார் மூளை. இடது சாரியாக எல்லாவற்றையும் ஒன்று, இரண்டு, மூன்று என பட்டியல் போட்டு அழகு பார்க்கும். ஆனால், இலக்கியவாதிகளுக்கு வலப்பக்க மூளை புனைந்து கவி பாடும். வைரமுத்துவாக இரண்டையும் நன்றாக குழைத்து கருப்பு மை போட்டு வாழ்க! வளர்க!!

சமூக வலைப்பின்னல் தளங்களில் தனிமனிதர்கள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து செயல்படுவதற்கான வழிகாட்டுதல்கள்

புதிய தலைமுறை இதழுக்காக எழுதியது:

விவகாரம் இல்லாமல் விவகாரத்தை முன்னிறுத்துவது எப்படி?

தமிழில் மிகவும் புகழ்பெற்ற பழமொழி இருக்கிறது. ‘அரசன் எவ்வழி; மக்கள் அவ்வழி!’ இது பாஸ்டனுக்கும் பொருந்தும். பம்பாய்க்கும் பொருந்தும்.

வேகமாக வண்டியை ஓட்டினால் மாட்டிக்குவோம். அரை அங்குலாம் அதிகமாக வீட்டைக் கட்டினால் தரைமட்டமாக்கப் படுவோம் என்று பயந்து வாழ்க்கையை சட்டதிட்டத்திற்கு உட்பட்டு அமெரிக்காவில் வாழ்கிறேன். அஞ்சி அஞ்சி வாழும் வாழ்வு இந்தியாவில் கிடையாது. இணையத்தில் அந்த அச்சம் சுத்தமாக நீங்கி, டார்ஜான் போல் சுதந்திரமாக சுற்றித் திரிய முடிகிறது.

என்னுடைய வாழ்க்கையே இணையத்தில் என்றாகி விட்டது. உன் நண்பர்களைச் சொல்… உன்னைப் பற்றி சொல்கிறேன் என்பது அந்தக் காலம். உன் மின்னஞ்சல் முகவரியைச் சொல்… உன் சரித்திரத்தை அப்பட்டமாக்குகிறேன் என்பது இந்தக் காலம்.

இப்பொழுதெல்லாம் நேர்காணலுக்குச் சென்றால், ‘உங்கள் பொழுதுபோக்கு என்ன?’ என்றெல்லாம் கேட்பதில்லை. நமது ஃபேஸ்புக், டுவிட்டர் பழக்க வழக்கத்தை உளவு கண்டு அவர்களே அறிந்து வைத்திருக்கிறார்கள். ரொம்ப நேர்மையாக ‘நமக்கு அந்த மாதிரி சமூகத்தளங்களில் எல்லாம் ஐடி கிடையாதுங்க’ என்றால் அதை விட மிகப் பெரிய பிரச்சினை. எல்லாக் குரங்கும் நான்கு கால் கொண்டு தாவும்பொழுது, நாம் மட்டும் இரண்டு கால் கொண்டு நடந்தால்… பிரச்சினைதான். எனவே, சமூக வலைத்தளங்களில் நம் முகவரியும் இருக்க வேண்டும். இயங்கவும் வேண்டும். அதே சமயம் உங்களின் உண்மையான விருப்பங்களில் ஈடுபாட்டோடு செயல்பட வேண்டும்.

ஹிண்டுவில் ‘லெட்டர்ஸ் டு தி எடிட்டர்’ எழுதி நான்கு நாள் தேவுடு காத்து, அதன் பின் அது வெளியாகாத கோபத்தில் ஹிந்து மீது கோபம் கொண்டு திட்டுவது எல்லாம் மலையேறிப் போயாச்சு. சன் டிவியிலோ, குமுதத்திலோ தவறான தகவல் வந்தால், அதை உடனுக்குடன் கிழித்துத் தொங்க விட்டு, நண்பர்களைக் கொண்டு பரபரப்பாக்கி, அந்தந்த மீடியாவின் போட்டியாளர்களின் பார்வைக்கு கொண்டு செல்கிறார்கள். நாளடைவில் இந்தப் பிழை அப்படியே அமுங்கிப் போகாமல், கவனத்தில் இருக்குமாறு வைத்திருக்கிறார்கள்.

இதே போன்ற சுமைதாங்கியை எந்த வலைப்பதிவர் மீதும் சாத்தலாம். இது நம் பக்கமும் வரலாம். ஒரு விஷயத்தை வலையில் பகிருமுன் சரி பாருங்கள். இதை நம் அப்பா படித்தால்… நம் மகள் படித்தால்… எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். அவர்களுக்கு தகுந்த மொழியில் எழுதுங்கள்.

நம் மகளோ மனைவியோ படித்தால் நம்மை எளிதில் தொடர்பு கொண்டு அவர்கள் தரப்பு கருத்தை சொல்லலாம். மற்றவர்களுக்கு என்ன வழி? உங்களைத் தொடர்பு கொள்ளும் முகவரியை பிரதானமாகப் போடுங்கள். மறுமொழிப் பெட்டியை வைத்திருங்கள். பதில் போட பல வழிகள் கொடுங்கள்.

அதற்காக, அனாமதேயமாக வருபவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். முகங்காட்டாமல் வருபவர்கள், உங்களின் இடத்தை உபயோகப்படுத்தி பிறரை தூற்றலாம். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம். என் வீட்டில் நடக்கும் விருந்தில் அனைவருக்கும் இடமுண்டு. அதற்காக என் முகத்தில் குத்துபவருக்கும் இலவச இடம் தரமாட்டேன். முக்கியமாக சாப்பிட வந்திருக்கும் சக விருந்தினரை குத்த நிச்சயம் அனுமதி கிடையாது.

நீங்களும் முகமூடி போட்டு போலி மின்னஞ்சல் கொண்டு எங்காவது கருத்து சொல்லும்போது கவனமாக இருக்கவும். எந்த மாதிரி முகத்திரை போட்டாலும் அது அழுந்து தொங்கும். அது விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேயாகவே இருந்தாலும் சரி. நிச்சயம் பல நாள் போலி ஒரு நாள் அகப்படுவான்.

தகவலை பகிரும் ஆசையில் எங்கிருந்து இந்தத் தகவல் கிடைத்தது என்பதை போட மறந்து விடுவோம். இன்னாரைப் பற்றி இன்னார் என்னா சொன்ன்னார் என்று தெளிவாக இடஞ்சுட்டி விடுங்கள். இது காப்பிரைட் தகராறுகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். நாளைக்கே எவறாவது அவதூறு என்று கிளம்பினாலும், ‘அந்த உடுப்பி பவன் சாம்பார்தான் இங்கே ஊற்றப்பட்டது. இது நான் சொந்தமாக சமைத்தது அல்ல!’ என்று கைகாட்டி தப்பித்து விடலாம்.

ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் யூடியூபிலும் கருத்து வந்து விழுந்தவுடன் வேகமாக எதிர்வினை செய்வது அவசியம். என்னைப் பற்றி பேசுகிறார் என்றால் சும்மா ஒட்டு மட்டும் கேட்டால் போதும். என்னைக் குறித்து தப்பான பிரச்சாரம் நடக்கிறது என்றால் அதை நிச்சயம் தட்டிக் கேட்க வேண்டும். தவறு நம் பக்கம் இருந்தால் மன்னிப்பு கேட்டு விடுங்கள். இல்லாவிட்டால், எதிராளி மன்னிப்பு கேட்கும்வரை விடாதீர்கள்.

சட்டென்று செயல்படுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

பத்து பேரை கேட்காமல், புத்தகங்களை நாலு மணி நேரம் புரட்டாமல் கீபோர்ட் துணையோடு கூகிள் வேகம் பிடித்திருக்கிறது. கால்பந்தாட்டத்தின் கடைசி நிமிடத்தில் குறுக்கே பாய்ந்து கோல் போடும் விறுவிறுப்பான ஆட்டம் ரசிக்கிறது. திறமைக்கும் இளமைக்கும் அடையாளமாக வேகம் திகழ்கிறது. ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பது போல் நான் ஈயாக இருந்தாலும் இக்கட்டான சூழ்நிலையிலும் உடனடி பாய்ச்சல் அனைவரையும் வசீகரிக்கிறது.

இந்த அபார வேகம் சமூக வலைப்பின்னல் தளங்களில் இயங்க மிகவும் தேவை. இந்த வேகத்தை நிதானம் இழக்காமல் இயக்க அசுர நிதானம் அதைவிட அத்தியாவசியமான தேவை.

டென்னிஸ் வீரரையே எடுத்துக் கொள்வோம். எதிராளி பந்து போட்டவுடன் அவசரப்படுபவரை விட அனுமானித்து ஆடுபவரே வெற்றி அடைகிறார். பந்து எங்கே விழும், எப்படி சுழலும், பந்தை எங்கே இருந்து எப்படி போடுகிறார், என்றெல்லாம் கணித்து ஆடுபவரால் மட்டுமே வேகமான பந்தை சரியாக ஆட முடிகிறது. சொல்லப்போனால் விரைவாக அடிப்பதை விட பந்தைக் குறித்த தகவல்களை சேமிப்பதே முக்கியமாகி விடுகிறது.

ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் யூடியூபிலும் கருத்து வந்து விழுந்தவுடன் வேகமாக எதிர்வினை செய்வது அவசியம். நாம் சார்ந்திருக்கும் நிறுவனம் குறித்த அவதூறையோ, நம்முடைய உயரிய விழுமியத்திரற்கு எதிரான பிரச்சாரத்தையோ தோன்றிய புதிதில் தடுத்தாட்கொள்ளுதல் மிகவும் முக்கியம்.

ஆனால், டென்னிஸ் வீரரின் கணிப்பு போல் இந்தக் விவாதம் எவ்வாறு மாறும், எங்ஙனம் உருப்பெறும் என்று யோசிக்கவும் வேண்டும்.

இதற்கு மூன்று கட்டமாக திட்டம் வகுக்கலாம்.

1) பத்தியம் – சாதாரணமாகச் சொன்னால் கவனமாக இருத்தல்; பத்தியமாக இருப்பது என்றால் பாதுகாப்பாக இருத்தல். தகவல்களையும் நண்பர்களையும் உசாத்துணைகளையும் சேர்த்தல்.

2) செயற்பாங்கு – திரும்ப திரும்ப ஒன்றை செய்வதன் மூலமே நம் வேகம் அதிகரிக்கிறது. ’எனக்கு பத்தாயிரம் வித்தை தெரிந்தவனைக் குறித்து கவலையில்லை; ஆனால், ஒரே வித்தையை பத்தாயிரம் தடவை பயிற்சி செய்தவனை நினைத்துதான் அஞ்சுகிறேன்’ என்று ப்ரூஸ்லீ சொன்ன மாதிரி பயின்ற செயல்முறையில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்.

3) கூத்து – நடவடிக்கையை செவ்வனே நிறைவேற்றுவது.

வாரத்திற்கு ஒரு முறை என்பதற்கு பதில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என்றோ, ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடம் என்றோ தொடர்ந்த கவனிப்பில் இருக்க வேண்டும். கெட்ட பழக்கங்களை நீக்க கடும் பிரயத்தனத்தில் இறங்க வேண்டாம்; சிறப்பான நடவடிக்கைகளை அன்றாட செயல்பாடாக ஆக்கவும். அன்றாட செயல்களை தொடர்பயிற்சியின் மூலம் கூராக்கவும்.

தோட்டக்காரனைப் போல் யோசித்து, தச்சனைப் போல் செயல்படவும்.

அன்றாட செய்திகளுக்கு விமர்சனம், சமூக அவலங்களுக்கு எதிராக ஆமீர் கான் போல் அரட்டை கோஷம் என இவை எல்லாவற்றையும் விட உங்களுக்கு லட்சியமான ஒரு விஷயத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அது கனடாவின் கரடிகளைக் காப்பாற்றும் பிரச்சாரமாக இருக்கலாம்; போபால் விஷவாயுவிற்கான நஷ்டஈடாக இருக்கலாம். உங்கள் பெயரைச் சொன்னால், அனைவருக்கும் அந்த சிக்கல்தான் நினைவிற்கு வரவேண்டும்.

சிக்கல் இல்லாமல் வலையில் உலா வாருங்கள்.

இறுதியாக புத்தகத்தைப் பயில வேண்டுமானால், படித்த புத்தகத்தை மூட வேண்டும். அதே போல் சமூக நட்புகளை நிஜமாக்க வேண்டுமானால், அவர்களோடு சமூக வலைப்பின்னல் தளம் தாண்டியும் நட்பு பயில வேண்டும். அவ்வாறு தோழமைக்கு உருவமும் உயிரும் இருந்தால்தான் நம்மைக் குறித்து அவர்களுக்கு அக்கறையும் அவர்களைக் குறித்து நமக்கு பொறுப்பும் இயல்பாக உருவாகும்.

குடுகுடுவென்று காரியத்தில் இறங்காதே! காலத்தே பயிர் செய்யாமலும் இராதே!!

தொடர்புள்ள பதிவு: BBC News – Need a job? Learn to impress the robots

அளிப்பான் அந்தரங்கம்: எப்பொருள் – மெய்ப்பொருள் – உட்பொருள்

கட்டுரை அசலாக வெளிவந்த சொல்வனம்.காம் தளத்திற்கு நன்றிகளுடன்

ஐஐடியிலும் ஐஐஎம்மிலும் நான்கு வருடம் படித்து தேறி வருபவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்வது ஒரு ரகம். பிளஸ் டூ முடித்தவர்களை அப்படியே அள்ளிக் கொண்டு போய், தனக்கு வேண்டியதை மட்டும் சொல்லிக் கொடுத்து, வியாபர நுணுக்கத்தின் தேவைக்கு ஏற்றவாறு பாடங்களை வடிவமைத்து, அனுபவமும் இரண்டு சொட்டு சேர்த்து, தன் நிறுவனத்தின் நெளிவு சுளிவுக்கேற்ப வளைய வைத்து வார்ப்பெடுப்பது இன்னொரு கலை.

ஐபிஎம் (IBM), எச்.பி. (HP), டெல் எல்லாம் முதல் ரகம். அமேசானும் ஃபேஸ்புக்கும் முன்னேறும் இரண்டாவது ரகம்.

முதல் ரகத்தில் நம்பகத்தன்மை இருக்கும். கடுமையான பரீட்சைகளுக்குப் பிறகு தேர்வாகி வெளியில் வந்தவற்றையே நாம் வாங்குகிறோம். ஃபேஸ்புக்கிலோ ஒரு தடவை ஸ்டேட்டஸ் அப்டேட் போட்டுப் பார்ப்போம். இரண்டு நிமிடம் கழித்தும் அது தோன்றாவிட்டால், அதையே மீண்டும் போடுவோம். இரண்டு தடவை வந்தால் கூட பரவாயில்லை.

ஆனால், எச்.பி.க்களை பெருவிலை கொடுத்து வாங்கிப் போடும் வங்கிகளில் இந்த மாதிரி இரண்டு தடவை வரவு கழித்தலோ பற்று கூட்டலோ கூடவே கூடாது. தரம் இங்கே அதிமுக்கியம்.

முதலாம் ரக ஐபிஎம்-களில் முஸ்தீபுகள் அதிகம். முதலீட்டு செலவு நிறைய ஆகும். பரிசோதனை எல்லாம் செய்யாமல், முன் வைத்த காலை பின் வைக்காமல் நுழைய வேண்டும். நேற்று ஆர்குட்; இன்றைக்கு கூகிள் பிளஸ்; நாளைக்கு கிரோம் என்று மாறும் தட்பவெப்பத்திற்கேற்ப ஆய்வகமாக, இரண்டாவது ரகம் இயங்குகிறது.

அயலாக்கம் x கிளைத் துவக்கம்

1990களின் இறுதியில் அமெரிக்க நிறுவனங்கள் அவுட்சோர்சிங்கைக் கண்டு பயப்படாமல் களத்தில் குதித்த காலம். அதுவரை “இந்தா பிடிச்சுக்கோ! இருநூறு டாலரோ… முன்னூறு டாலரோ!” என்று கணக்கு பார்க்காமல் இன்ஃபோசிஸ்களுக்கும் விப்ரோகளுக்கும் டி.சி.எஸ்.களுக்கும் அள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச காலம் சென்றபின் “இதே வேலையை உங்க நாட்டில் போய் செய்தால், இரண்டு சதவீதம் தள்ளுபடி கிடைக்குமா?” என்று பேரம் பேசினார்கள்.

புது நூற்றாண்டு பிறப்பதற்கு முன் பழைய உத்தி, தூசி தட்டப்பட்டு மறு வாழ்வு கண்டது. அன்று பருத்தி ஆலை ஏற்றுமதி; காலணித் தொழிற்சாலைகளை சீனாவிலும் தெற்காசியாவிலும் துவங்குதல்.

இப்பொழுது கணினி நிபுணர்களுக்காக இந்தியாவிலேயே கிளை தொடங்குதல். பெரு நிறுவனங்கள், தொழில் நுட்ப முதலாளிகள் என்று எந்த வட்டத்திற்குள்ளும் அடங்காமல், அனைத்து மேற்கத்திய பிரகிருதிகளும், இந்தியாவில் கணினி நிபுணர்களைக் கொண்டிருக்கிறார்கள்.

இடைத்தரகர் வேண்டாம்; காண்ட்ராக்டர்களை, மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்த வேண்டாம்; பொட்டி தட்டுபவர்களும் விட்டேத்தியாக இல்லாமல், பொறுப்பாக இருப்பார்கள்.

நிரலி எழுதுபவர்களிடமே இந்தப் பரிவு என்றால்…

இப்பொழுது அந்த நிரலிகளை இயக்கும் சர்வர் என்றழைக்கப்படும் அளிப்பான்கள்களுக்கும் – முழு வடிவமைப்பும் உள்கட்டுமானமும் கொண்டு இயங்க நினைக்கிறார்கள்.

முதலீடு முடக்கம் x சில்லறை வணிகம்

ஆயிரம் ஹெக்டேருக்கு அரிசியும் பணப்பயிரும் விதைப்பார்கள். இப்பொழுது ஆப்பிள் போடுகிறார்கள். ஐபோன், ஐபேட் பயனர்களுக்கு ஐக்ளௌட் (மேலும் வாசிக்க: http://solvanam.com/?p=14812) தருகிறது ஆப்பிள். நமது புகைப்படங்கள், விழியங்கள், டாரெண்ட்டில் தரவிறக்கிய திரைப்படங்கள் எல்லாவற்றையும் இணையத்தில் சேமித்து வைக்கலாம்.

ஆப்பிள் மட்டுமல்ல… மைக்ரோசாப்ட், அமேசான், கூகிள் போன்றோர், என்னைப் போன்ற நுகர்வோருக்கு இந்த வசதியை செய்து தருகிறது. என்னை வேலைக்கு வைத்திருக்கும் பெரு நிறுவனங்களுக்கு இதே வசதியை அதே நிறுவனங்களும் ராக்ஸ்பேஸ், சேல்ஸ்ஃபோர்ஸ் போன்றோரும் சினிமாஸ்கோப் முப்பரிமாண பிரும்மாண்டமாக இயக்குகிறார்கள்.

இதில் என்ன வசதி?

அ) ‘வை திஸ் கொலவெறி டீ’ வெளியாகும் சமயத்தில் திடீரென்று அளிப்பான்களின் தேவை அதிகமாகிறது. உடனடியாக, விநாடிகளில் அளிப்பான்களைக் கூட்டலாம்; குறைக்கலாம்.

ஆ) புதிதாக வெளியிடும் நிரலிகளை, சோதித்துப் பார்க்கலாம்.

இ) பத்தாயிரக் கணக்கில் செலவு செய்யும் முதலீடு கிடையாது. பத்து டாலர் தள்ளினால் போதுமானது. அதிவிரைவு அளிப்பான்கள், ஆயிரம் கொடுப்பார்கள். சிறுவணிகர்களுக்கு கந்து வட்டியில் கணினிகள் வாங்கும் நிலையை விட்டு விடுதலை.

மேகம் – கிளவுட்

2000-ம் ஆண்டு வருகிறது… y2k என்று ஓடினார்கள்; அவுட்சோர்சிங் செய்தால் மட்டுமே சேமிக்க முடியும் என்று ஓடினார்கள்; எல்லோரும் செல்பேசி கொண்டே இயங்குகிறார்கள் என்று ஐபோன் அப்ளிகேஷனுக்கு ஓடினார்கள்.

இன்றைய தாரக மந்திரம் – கிளவுட்.

விண்டோஸ் கொண்ட கணினி வேண்டுமா? எத்தனை வேண்டும்? எவ்வளவு நாளுக்கு வேண்டும் – மேகத்திற்கு செல்லுக.

என்னது… விண்டோஸ் எல்லாம் வேண்டாம். நூறு இண்டெல் சில்லு கொண்ட சக்தி மட்டுமே வேண்டுமா? – மேகத்திற்கு வருக.

எனக்கு தேவதர்ஷினி நாயகியாகக் கொண்ட சீரியல் பிடிக்கும். கே பாலச்சந்தர் இயக்கினால் நல்லது. ஜெயமோகனின் காடு நாவலை கதையாகக் கொண்டிருக்க வேண்டும்; ஆனால், அவரின் வசனம் இயல்பாக இருக்காது; பா ராகவனை வசனம் எழுத வையுங்கள். என்னால் இந்த வாரம் மட்டும்தான் பார்க்க முடியும். என்னிடம் கேபிள் கிடையாது. எனவே, ஐந்து நாளைக்கு மட்டும் தூர்தர்ஷனில் ஒளிபரப்புங்கள் என்று கேட்பது போல் எதை வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், எப்பொழுது தேவையோ அப்பொழுது வாங்கிக் கொள்ள விழைகிறீர்களா – கிளவுடுக்கு வாங்க.

கொஞ்சம் சீரியசாகக் கணக்குப் போட்டுப் பார்க்க விரும்புபவர்களுக்கு: http://spreadsheets.google.com/ccc?key=0AgWfa8v6EGzjdElXQVFzU1plSXdEQmVHZ3M5YjlsNVE&hl=en&authkey=CM_RzL0E

நீங்கள் மாதத்திற்கொருமுறை மதுரையில் இருந்து சென்னை சென்று வருகிறீர்கள். அதற்காக பேருந்தை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனால், தினசரி திண்டுக்கல் வரை போய் வந்தால், டூ வீலராவது சொந்தமாக வைத்துக் கொள்வோம்.

அன்றாடம் ஏதாவது பயன் இருக்குமா? – வாங்கிப் போடு.
என்றாவது எதற்காவது மட்டுமே உபயோகமா? – வாடகைக்கு எடு.

எச்.பி.யிடத்திலும் ஐ.பி.எம்.மிடத்திலும் எங்களுக்கு இந்த மாதிரி தேவை. இதற்கு ஏற்ற மாதிரி வண்டி செய்து கொடு என்று கேட்டு கேட்டு, அலுத்துப் போன ஃபேஸ்புக், அமேசான்கள், தாங்களே டாட்டா நானோக்களை வடிவமைத்ததுடன், அவற்றை வாடகைக்கும் விடுகிறார்கள்.

கலிபோர்னியா பக்கம் அளிப்பான்களின் பலு அதிகரிக்கிறதா? பலு அதிகரித்தால் அளிப்பான்களின் உஷ்ணம் உச்சத்தை அடையும். உஷ்ணம் அதிகரித்தால், குளிரூட்டிகளின் வேலையும் அதிகரிக்கும். குளிரூட்டிகளினால், மின்கட்டணமும் எகிறும்.

அளிப்பான் அறையில் கிட்டத்தட்ட ஒரு டிகிரி பாரன்ஹீட் ஏறினால், மின்கட்டணத்தில் நான்கு சதவிகிதம் ஜாஸ்தி கட்டவேண்டிய நிலை. அதற்கு பதிலாக, அளிப்பான்களின் வேலையை இன்னொரு ஊருக்கு திசை திருப்பி அனுப்பி வைக்கும் நுட்பத்தை கூகிள் கையாள்கிறது.

சாதாரணமாக பக்கத்து ஊருக்குப் போ; அங்கே இருக்கும் அளிப்பான்கள் மூலமாக தகவல் அனுப்பு. ஆனால், பக்கத்து ஊர் அளிப்பான் அறையில் வெப்பம் ஏறி விட்டதா? கொஞ்சம் தள்ளிப் போய், அடுத்த கட்ட அளிப்பானிடமிருந்து தகவல் பெற்றுக் கொள்.

இரண்டு லட்சம் வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை கூகிள் மட்டுமே பயன்படுத்துகிறது. இந்த நுட்பத்தினால் மட்டும் பில்லியன் கணக்கில் மின்கட்டணம் குறைகிறது.

தொடர்பான விழியம்:

முகப்புத்தகம் x கூகிள்

கணினி என்று எடுத்துக் கொண்டால்…

அதற்குள்ளே இண்டெல் அல்லது ஏ.எம்.டி. (AMD) சில்லுகள்; அவற்றிற்கு ஊட்டம் கொடுக்க கிராஃபிக்ஸ் கார்டுகள்; அதை இயக்க, சக்தி கொடுக்கும் மின்விசை அளிப்பு; இவற்றை எல்லாம் காற்றோட்டமான பெட்டியில் அடைக்கும் அடிச்சட்டம்; அதை அடுக்கு அடுக்காக கட்டு கட்டாக வரிசைப்படுத்தும் வடிவமைப்பு; இதற்கான மின்சார திட்டம்; குளிர்காலத்தில் வெப்பமும், கோடை காலத்தில் குளிரூட்டமும் தரும் சூழல்; மின்கட்டணம் எகிறாத கட்டிடக் கலை ஆக்கம்.

இவையனைத்தும் தொலைதூரத்தில் இருந்து நிர்வகிக்கும் வல்லமை; தொல்லை தராமல் கூட்டவும் குறைக்கவும் மாற்றவும் முடியும் திறமை.

இவ்வளவு நுட்பங்களையும் பொதுவில் வைத்திருக்கிறது ஃபேஸ்புக். (மேலும்: http://opencompute.org/)

சாதாரணமாக இந்த மாதிரி முன்னோடி பொறியியல் சமாச்சாரங்களை கூகிள் பகிரும்; மைக்ரோசாஃப்ட் கட்டிக் காக்கும். ஆனால், மைக்ரோசாஃப்ட் கூட தங்கள் மேக (அசூர்: http://www.theregister.co.uk/2009/09/25/microsoft_chillerless_data_center/) தரவு மையங்களுக்கான விவரங்களை வெளிக்காட்டுகிறது.

சர்வருக்கேற்ற மென்பொருளா? மென்பொருளுக்கேற்ற சர்வரா?

சரவண பவனுக்கு சென்றால் சகலமும் கிடைக்கும். கொஞ்சமாய் பசிக்கிறதா? மதியம் இரண்டு மணிக்குக் கூட இட்லி சாப்பிடலாம். இன்னும் கொஞ்சம் பசியா? மினி மீல்ஸ் கிடைக்கும். அகோறப் பசியா? அன்லிமிட்டட் சாப்பாடு உண்ணலாம்.

ஆனால், பக்கத்து சந்தில் மாமி மெஸ் இருக்கிறது. திங்கள் கிழமை என்றால் தோசையும் சட்னியும் சாம்பாரும் மட்டுமே கிடைக்கும்; செவ்வாய் போனால் சப்பாத்தி + தால். வெரைட்டி இல்லாவிட்டாலும், மாமி மெஸ் ருசியே தனி.

முதல் பாணியில், சரவண பவன் போல் சகல வசதிகளுடனும் எச்.பி., டெல் போன்ற வணிகர்கள் சர்வர் கொடுக்கிறார்கள். இட்லிக்கும் அதே சாம்பார்; சாதத்திற்கும் அதே சாம்பார் என்பது மாதிரி விண்டோஸ் ஆஃபீஸ் இயக்குவதற்கும் அதே சர்வர்; ஆரக்கிள் டேட்டாபேஸ் இயக்குவதற்கும் அதே சர்வர்; ஆங்ரி பேர்ட்ஸ் விளையாடுவதற்கும் அதே சர்வர்.

வீட்டு சாப்பாடு மாதிரி தினம் தினம் மாறும் வேண்டுதலுக்கேற்ப, ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஸ்பெஷலாக செய்து தரும் சர்வர் நுட்பத்தை ஃபேஸ்புக் விரும்புகிறது.

என்னுடைய நண்பர்களின் ஸ்டேட்டஸ் எனக்குத் தெரிய வேண்டும். கடைசியாகப் பார்த்த இடத்தில் இருந்து பார்க்கக் கிடைத்தால் போதுமானது. பத்து மாதங்களுக்கு முன்பு ஜூலையில் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதை பெரும்பாலும் தினசரி தேடிக் கொண்டிருக்க மாட்டேன். நேற்று என்ன நடந்தது என்பது க்விக்காக திரையில் தோன்ற வேண்டும். பழையதைத் தேடி வினவினால், பொறுமையாகக் காத்திருக்கும் தயார் நிலையில் இருப்பேன்.

எச்.பி., டெல் ஆகியோர் நேற்றைய விஷயத்தைத் தேடினாலும் அதே நேரம்; பத்து வருஷம் ஆகிப் போனதை விசாரித்தாலும் ஒரே நேரம் என்று கட் அண்ட் ரைட்டாக பேசுகிறார்கள். ஃபேஸ்புக்கிற்கும் கூகிளுக்கும் இது தோதுப்படவில்லை. தாங்களே சமைத்து, அதற்கான ரெசிப்பியையும் உலகுக்கு ஓதுகிறார்கள்.

பங்குச்சந்தையில் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்கிற்கு இது ஐ.பி.ஓ. எனப்படும் (மேலும்: http://online.wsj.com/article/SB10001424052970203935604577066773790883672.html) பங்குச்சந்தையை நாடும் காலம். அதற்காக பல அஸ்திரங்கள். ஒரு புறம் வாடிக்கையாளர் எண்ணிக்கை பலத்தைக் காட்டுகிறது. இன்னொரு புறம் அந்த வாடிக்கையாளர், எத்தனை மணி நேரம் ஃபேஸ்புக்கிலேயே கட்டுண்டு கிடக்கிறார் என்று புள்ளிவிவரம் திரட்டுகிறது. அதே சமயம், இது தவிர எங்களிடம் நில புலம் போன்ற அளிப்பான் – கடல் போல் அசையா சொத்தாக குவிந்து கிடக்கிறது என்பதையும் முன்வைத்து, முதலீடு கோருகிறது.

அது சரி… இத்தனை அளிப்பான்கள் எதற்கு தேவை?

இன்றைக்கு எல்லோரும் பேஸ்புக்கை நாடுகிறோம். பாமாயில் கொடுக்கும் ரேஷன் கடை க்யூவாக, பேஸ்புக்கில் புதிதாக என்ன கருத்து வந்திருக்கிறது, எங்கே குழு அமைகிறது என்று பழியாய் கிடக்கிறோம். ஆனால், நாளைக்கே கூகிள் பிளஸ் என்று வேறு எங்காவது சென்று விட்டால்?

அந்தக் காலத்தில், உங்களில் பழைய தகவல், அப்பொழுது வலையேற்றிய நிழற்படங்கள், உளறிய கருத்துகள், விரும்பிய லைக் தொகுப்புகள் எல்லாவற்றையும் பத்திரமாக சேமித்து வைத்து, விளம்பரதாரர்களிடம் விற்க நினைக்கிறது ஃபேஸ்புக்.

750 மில்லியன் வாடிக்கையாளர்களின் நுணுக்கமான விவரங்கள், காலங்காலமாக ஒருங்கிணைக்கத்தான் இத்தனை அளிப்பான்கள்.

ரகசிய அளிப்பான் x திறமூல கணினி

ஃபேஸ்புக்கிற்கு தேவையான மென்பொருளை ஃபேஸ்புக் எழுதிக்கொள்கிறது. அப்படியானால், பேஸ்புக்கிற்கு தேவையான வன்பொருளை மட்டும், ஏன் ஐ.பி.எம்.மும், ஆரக்கிளும், எச்.பி.யும், டெல்லும் செய்துதர வேண்டும்?

தாங்கள் எழுதும் மென்பொருளுக்கு ஏற்ற வன்பொருள் வழங்கியை வடிவமைக்க விரும்புகிறார்கள். வன்பொருள் நிறுவனங்களான டெல், எச்.பி. போன்றோர், பொதுவான வழங்கிகளையே தயார் செய்கிறார்கள்.

ஒரே அளவில் அனைத்து உள்ளாடைகளையும் தயார் செய்து, சீனாக்காரரிடமும் கொடுக்கிறார்கள்; அமெரிக்காவின் போஷாக்கானவர்களிடமும் கொடுக்கிறார்கள். எப்படி பொருந்தும்?

2004களிலேயே இந்தப் பிரச்சினைகளை கூகிள் எதிர்கொண்டது. வண்ணமயமாக, விருப்பத்திற்கேற்ப, பயன்பாட்டுகேற்ப, வன்பொருள் வளைந்து கொடுக்க வடிவமைக்க ஆள் போட்டார்கள். தாய்வானுக்கும் தாய்லாந்துக்கும் ஆளனுப்பி சி.பி.யூ முதல் மதர்போர்டு வரை கொள்முதல் விலையில் சல்லிசாக வாங்கினார்கள்.

அமெரிக்காவில் ஆயிரமாயிரம் ஏக்கர் நிலம் வாங்கி, வழங்கிப்பண்ணைகளுக்கு கூகிள் கால்கோள் இட்டது.

அண்ணன் எவ்வழி; பேஸ்புக் அவ்வழி என்று அளிப்பான்-பண்ணைகளை, இப்பொழுது ஃபேஸ்புக்கும் துவங்கி இருக்கிறது.

தங்களின் சிட்டிவில், ஃபார்ம்வில், ஜாம்பிலாண்ட் போன்ற விளையாட்டுகளுக்கான நுட்பத்திற்கேற்ற கணினி வடிவமைப்பு; ஐபோனில் முகப்புத்தகம் தெரிவதற்கான சிற்ப்பு வழங்கி வடிவமைப்பு; செய்தியோடை மற்றும் மாற்றுத் தளங்களில் பகிர்வதற்கான அளிப்பான் வடிவமைப்பு என்று செயல்பாட்டுகேற்ப மாற்றியமைத்து தெரிவு செய்கிறார்கள்.

இவற்றையெல்லாம் கூகிள் போல் கமுக்கமாக வைக்காமல், பகிரங்கமாக படம் போட்டு விளக்குகிறார்கள். எழும் பிரச்சினைகளை பிரசங்கம் செய்கிறார்கள். நாலு பேர் எட்டு விதமாக தீர்வு கொடுக்கிறார்கள். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, அடுத்த தலைமுறைக்கான வழங்கிநுட்பத்தை மேம்படுத்துகிறார்கள்.

அப்படியானால், எச்.பி., டெல் போன்ற கணினி வன்பொருள் நிறுவனங்களின் கதி? அவர்களும் இதே போன்ற வழங்கி நுட்பத்திற்கு மாறலாம்; மேகதூதராக கிளவுட் கம்ப்யூட்டிங்கில் இறங்கலாம்.

ஃபேஸ்புக் அடிபற்றி, ஈ-பே, நெட்ஃப்ளிக்ஸ், சீனாவின் பைடூ, மொசில்லா எல்லாரும் இந்தப் பாதையில் காலடி வைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இன்னும் கூட உங்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லையா?

அமெரிக்க வீட்டுச்சந்தை வீழும் என்றும் மனை விற்பகத்திற்கான கடன் ஏமாற்றப்படும் என்றும் ஆருடம் சொல்லி, அந்த ஆருடத்தின் மீது ஊகச் சந்தையில் பந்தயம் கட்டிச் சூதாடி பெரும்பணமும் ஈட்டிய கோல்ட்மன் சாக்ஸ் இந்த ஓபன் கம்ப்யூட் – திறமூல வழங்கி நுட்பத்தில் பிரதான இயக்குநராக சேர்ந்துள்ளது போதாதா?

இணையத்தில் திருடுவதும் அதைத் தடுப்பதற்குமான சட்டம் குறித்து சமீபத்தில் வாசித்த சுவாரசியமான கட்டுரை: சங்கைப் பிடிக்கும் சோபா (SOPA)

நானும் ராம் கோபால் வர்மாவும்

நீங்களும் இவ்வாறு ஒப்பிட: Twitterize Yourself: How To Create A Visualization Of Your Twitter Profile [INFOGRAPHIC] – AllTwitter

உங்களுடன் ஒப்பிட சிலர்:

  1. ஏ ஆர் ரெஹ்மான்
  2. சுருதி ஹாஸன்
  3. பிரிட்டிஷ் நந்தி
  4. பர்க்கா தத்
  5. கரன் ஜோஹர்
  6. ஷாரூக் கான்
  7. சசி தரூர்
  8. சேகர் கபூர்
  9. சுசித்ரா
  10. சச்சின் டெண்டுல்கர்

Party with Superstar Rajinikanth: 80s Actor, Actress Alumini Meet

Balaji Santhanam Album: 80s Tamil Cinema Snippets

A for Apple – Tag version for Twitter IDs

சென்ற வருடத்தில் A for Apple tagஐ ரவி உபயத்தில் போட்டிருந்தேன். அவ்வாறே ட்விட்டர்.காம் பயனர் பெயர்களில், எவர் பெயர் என்னுடைய பட்டியலில் வந்து நிற்கிறது என்னும் கேள்விக்கான விடை:

செய்முறை:
1. ஃபயர் ஃபாக்ஸ் திறக்கவும்
2. http://twitter.com/ தட்டச்சவும்
3. ‘ஏ’ விசையைத் தட்டியவுடன் எந்த முகவர் ஐடி வந்து நிற்கிறது?

A for anathai
B for bseshadri
C for cvalex
D for dynobuoy
E for elavasam

F for twitter.com favorites
G for gchandra
H for hemanth
I for ivansivan
J for joe_milton

K for ksrk
L for lazygeek
M for msathia
N for narain
O for ommachi

P for peyarili
Q for யாருமில்லை
R for ravidreams
S for srikan2
T for TamilDiaspora

U for யாருமில்லை
V for valarmathi2008
W for writerpara
X for யாருமில்லை
Y for yathirigan

Z for யாருமில்லை

தொடர்புள்ள பட்டியல் பதிவுகள்:

1. Top Tamil Twitter users (by status update numbers) « 10 Hot

2. Top 16 Tamil Twitter Users (by influence) « Snap Judgment

Oasis’ 91: 333 031

ஓபாமா: ட்விட்டிடும் அமெரிக்க ஆண்

உதவி: Non Sequitur — UCLICK GoComics.com | Doonesbury@Slate – Daily Dose | Prickly City – Cartoons & Comics

முதல் கருத்துப்படத்துக்கான புத்தக விமர்சனம்:
Use who you know to help get ahead: ‘The Power of Who’ aims to change how you network « மெட்ரோ

Top 16 Tamil Twitter Users (by influence)

How to evaluate Twitter/Microblog Influence?

Top Tamil Twitter users (by status update numbers) பதிவுக்கு ட்விட்டர் பதில்கள்:

TamilDiaspora — re:Top Tamil Twits, following/followers ratio & followcost should be the prime factors in ranking the users,status update is plus

ரவி — a combination of Number of followers, following Vs followers ratio, google page rank would be a good way to rank.

TamilDiaspora — But I want quality Tweets as well, following/follower ratio (sans celebrities) &followcost will give some idea about the user


இன்னாரின் தமிழ் வலைப்பதிவுக்கு எவ்வளவு மவுசு என்று கணக்கிடுவது போலவே, ஒருவரின் ட்விட்டர் தகவல்களுக்கு எவ்வளவு கிராக்கி என்பதை கணிக்கலாம்.

சில புள்ளிகள்:

  1. ரவி சொல்வது போல் கூகிள் பேஜ்ரேங்க் எண் என்ன?
  2. எத்தனை பேர் இவரை பின் தொடர்கிறார்கள்?
  3. இவரை பின் தொடர்பவர்களில் முக்கியஸ்தர்கள் இருக்கிறார்களா?
  4. இவர் பின் தொடர்பவர்களில் முக்கியஸ்தர்கள் இருக்கிறார்களா? அவர்களிடமிருந்து வரும் சுவாரசியங்களைப் போதிய இடைவெளியில் ரீ ட்வீட்டுகிறாரா?
  5. தலையுமில்லாமல், வாலுமில்லாமல் ட்வீட்டாமல், கொஞ்சம் இடஞ்சுட்டி, பொருள் விளக்கி, முழுச்செய்தியைக் குறுக்கித் தருகிறாரா?
  6. அடர்த்தி (அ) பல்சுவை: ஒரே தலைப்பில் வரும் விஷயங்களைக் கொடுக்கிறாரா? அந்தப் பொருள் அலுக்கும்போது, சாமர்த்தியமாக சொந்த வாழ்க்கை, பிற செய்தி அலசல் என்று வித்தியாசங்காட்டுகிறாரா?
  7. முகத்தைக் காட்ட வேண்டாம். கேரக்டர் தெரியுமாறு, பின்னாலிருக்கும் இரத்தமும் சதையும் கொஞ்சமாவது உருப்பெறுமாறு இயங்குகிறாரா?
  8. ஏற்கனவே வலையில் இயங்கியவரா? புகழ்பெற்றவரா? நில, புலம், அந்தஸ்து மாதிரி இணையபட்டா பெற்றவரா?
  9. தன்னிடம் வினா கேட்பவரிடம் பதில் கொடுக்கிறாரா?
  10. சும்மா கீச்சு, கீச்சு என்று தான் மட்டும் கத்திக் கொண்டிராமல், உரையாடலில் ஈடுபடுகிறாரா?
  11. தன் ஸ்டேட்டஸ்களை பாதுகாத்து வைத்துள்ளாரா? (பின் தொடரும் கூட்டத்தைவிட, பின் தொடர்பவர்களின் அறிமுகம் கோருபவரா?)
  12. ரஜினி படம் போல் அத்தி பூக்கும். அந்த மாதிரி எப்பொழுதாவதுதான் டிவிட்டுகிறாரா?
  13. அவரைத் தவிர வேறு எவருக்கும் தெரிந்திராத தகவல்களை, உங்களின் கேள்விகளுக்குப் பொருத்தமான விடையாக்கித் தருகிறாரா?
  14. யாரைப் படிக்காவிட்டால், தலைவெடித்துவிடும்?
  15. கடைசியாக, சொல்லும் அப்டேட்களினால் ஏதாச்சும் நேரடி பலன் எனக்குக் கிடைக்கிறதா?

ஒவ்வொன்றுக்கும் இன்னாரைத்தான் குறிப்பிடுகிறேன் என்பது அவரவருக்குத் தெரியும் என்பதால், நோ பட்டியல். இருந்தாலும், எனக்கே காலப்போக்கில் இந்தப் பதிவு புரியாமல் போகும் அபாயம் இருப்பதால்:

(எண்கள் ஒரு வசதிக்காகத்தான்… எந்த வரிசையிலுமில்லை)

  1. வளர்மதி (valarmathi2008)
  2. ஆர் செல்வராஜ் (rselvaraj)
  3. பரத் (barath)
  4. ரோசாவசந்த் (rozavasanth)
  5. எழுத்தாளர் பாரா (writerpara)
  6. சிவராமன் ஜி (sivaramang)
  7. அரவிந்தன் கே (Aravindank)
  8. சஜீக் (sajeek)
  9. விக்கி (vickydotin)
  10. கேப்ஸ் (kaps_)
  11. இரா முருகன் (eramurukan)
  12. வெங்கட் (donion)
  13. செந்தில் (chenthil)
  14. அனாதை (anathai)
  15. சஞ்சய் சுப்ரமணியன் (sanjaysub)
  16. -/பெயரிலி. (peyarili)

ட்விட்டர் குறித்த முந்தைய பதிவு:

1. ட்விட்டர்: எளிய அறிமுகம்

2. அடுத்த யுகப் புரட்சிக்குள் நுழைய நீங்கள் தயாரா? A Concise Introduction to Twitter.com and Why you should join there?