Tag Archives: Life

ஜெயமோகனின் தொராண்டோ வருகை

எழுதியவர்: வெங்கட் (24 Oct 2001)

எழுத்தாளர் ஜெயமோகன் சற்றேறக்குறைய மூன்று வாரங்களை கனடாவில் கழித்துவிட்டு இல்லம் திரும்பியிருக்கிறார். இந்தப் பயணம் அவருக்கு நல்ல அனுபவங்களைத் தந்திருக்கும் என நம்புகின்றேன். அவரது அமெரிக்கப் பயணம் மாடிமோதும் விமானங்கள், மடித்த அஞ்சல்களில் வரும் வியாதிகள் இன்னபிற எதிர்பாராத காரணங்களால் நிகழாமற் போயிற்று. அமெரிக்காவின் இழப்பு; கனடாவின் இலாபம். அவர் நிறைய நாட்களை எங்களுடன் செலவிட்டுச் செல்லமுடிந்தது.

  • எழுத்தாளர் முத்துலிங்கம்
  • மகாலிங்கம்
  • காலம் செல்வம்

இன்னும்பிற ஈழத்து நண்பர்கள் அவரது பயணத்தை ஒருங்கமைத்திருந்தார்கள். கடந்த 21ம் தேதி ஜெயமோகன் வாசகர்களைச் சந்தித்தார்; மழை ஞாயிறு. சந்திப்பு என்னுடை இல்லத்திலிருந்து நடை தொலைவில்தான் (நல்லதாகப் போயிற்று, ஒண்டாரியோவின் கடுமையான வாகன ஓட்டுநர் அனுமதி விதிகளினால் நான் நாள்வரை காரிருந்தும் “கால்நடைதான்”).

காலை 10 மணி முதல் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் காலம் செல்வத்தால் “வாழும் தமிழ்” சார்பாக நிர்வகிக்கப்பட்டது. நம்பமுடியவில்லை; கண்காட்சியில் குறுந்தொகை முதல் நேற்று வந்த புளியமரத்தின் கதை மறுபதிப்பு வரை – கிட்டத்தட்ட 700 – 800 புத்தகங்கள்..

அடியேனுக்கு ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து போன்ற அருகிவரும் புத்தகங்கள் சில கிட்டின. இன்னும் சொல்புதிது, எக்ஸில், சதங்கை போன்ற எண்ணிலா சிற்றிதழ்கள். நண்பகலில் ஜெயமோகன் வாசக நண்பர்களுடன் விருந்துண்டார். (அடியேன், கரகரத்த தொண்டையுடன் குடைகீழ் இல்லம் வந்து மிளகு ரசம்-சாதம்).

பிற்பகலில் சந்திப்பு களை கட்டியது. ஜெயமோகனைப் பற்றி சம்பிரதாயமான அறிமுகம் எழுத்தாளர் மகாலிங்கம் அவர்களால் (அந்த அறிமுகத்தின் தேவையின்மை விரைவிலேயே தெரியவந்தது). ஜெயமோகன் விமர்சன மரபும் – தொடர்பும் எனும் தலைப்பில் உரையாற்றினார். தமிழ் விமர்சன மரபை மூன்று பெரும் வகைகளாகப் பகுத்து விரித்துரைத்தார்.

  1. மரபுவழி விமர்சனம் (Geneological criticism – உ-ம் தளையசிங்கம்),
  2. எதிர்வினை விமர்சனம் (Dialectical Criticism, உ-ம் கா.நா.சு / கைலாசபதி)
  3. குழப்பநிலை விமர்சனம் (Chaotic criticism, உ.ம் ஜெயமோகன்).

இறுதியில் ஒரு வாசகன் இவையெல்லாம் கடந்து தன் சுய அனுபவத்தினால் மதிப்பீடு செயதலே எல்லாவற்றிலும் காட்டிலும் சிறந்தது என்பதற்கான விளக்கங்கள். ஜெயமோகன் ஒரு நல்ல ஆசிரியர் என்றுதான் கூறவேண்டும். மிகவும் தெளிவான ஆற்றொழுக்கு உரை.

தொடர்ந்து கேள்வி-பதில் என்று அறிவிக்கப்பட வாசகர்கள் மத்தியில் மௌனம். மெதுவாக ஒரு முதிர்ந்த வாசகர் தன்னை இலக்கிய ஆர்வலனில்லை என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஜெயமோகனை ஏன் தமிழ்நாட்டுப் பல்கலைகள் ஆசிரியராகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என வினவினார். மடை திறந்தது; தொடர்ந்து சரமாரியாகக் கேள்விகள்.

அவரது விமர்சனக் கோட்பாடுகள் தொடங்கி, படைப்புகள் குறிந்தவை – மிகவும் வலுவான கேள்விகள்; உறுத்தாத குரல்களில்.

அப்பொழுதான் வாசகர்களின் வீச்சை நான் அறியத்தொடங்கினேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அரசியல், தனிநபர் குறித்த கேள்விகள் எவையும் கேட்கப்படவில்லை – முற்றிலும் கலை, இலக்கியம் சார்ந்தனவையே.

“இலக்கியம் சலனத்தைத்தான் உண்டுபண்ணுகின்றது – அது முன்னோக்கிச் செல்வதில்லை”

எனும் அவரது கருதுகோளையும், “மொழி மனிதனின் கருவி” என்ற என்னுடைய புரிதலின் மீதானதுமான கருத்துப் பறிமாறல்களில் அடியேனும். இரண்டு விடயங்களிலும் நாங்கள் ஒருமிக்கப்போவதில்லை என்று ஒருமித்து உணர்ந்துகொள்ள அவற்றிலிருந்து எளிதாக விலகவும் முடிந்தது.

(மொழி – கருவி பற்றி அவர் முன்வைத்த கருத்து தற்கால மொழியியல் கோட்பாடுகளைச் சார்ந்தது என்றும்; அவரது ஆழ்மனத்தில் அதில் குறையிருப்பதாகப் படுவதாகவும் சொன்னார்)

நான் தமிழகத்தில் எந்த இலக்கியக் கூட்டங்களுக்கும் அதிகம் போனதில்லை. (அதிக பட்சம் ஆறு அல்லது ஏழு பேருக்குமேல் தாண்டாதவைதான் என்னுடைய அனுபவங்கள்). எனினும் சிற்றிதழ்களில் படிக்கும் இலக்கியக்கூட்டம் பற்றிய விபரங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.

அதிசயமான உண்மை; ஒரு வடதுருவ மூலையில், மழை வலுத்த ஒரு ஞாயிறு மதியத்தில் ஒரு தீவிர எழுத்தாளர்/விமர்சகருடன் மதிய உணவு அருந்தவும், தொடர்ந்து அவரது உரையைக் கேட்டு விவாதிக்கவும் பதினைந்து கனேடிய டாலர்கள் கட்டணத்தில் அறுபது பேர்கள். – வாழும் தமிழென்னும் நம்பிக்கை என்னுள் இலையுதிர் காலத்தில் துளிர்க்கிறது.

இக்கூட்டத்திற்கு முதல் வாரம் அடியேன், ஜெயமோகனை திரு. முத்துலிங்கம் அவர்களது இல்லத்தில் சந்திக்க முடிந்தது. ஒரு முறையான நேர்காணலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அது – திசை திரும்பிய கருத்துச் சிதறல்களாக முடிந்தது.

சென்ற புதனன்று இரவு திரும்பவும் ஜெயமோகனைச் சந்திக்க முடிந்தது – இம்முறை என்னுடைய இல்லத்தில். என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பொறுமையாக பதிலிறுத்தார். (நான் எப்பொழுது நான்கு ஒலிநாடாக்களை அச்சிலேற்ற முடியும் என்று தெரியவில்லை).

அவருடைய பல பதில்களும் கருத்துக்களும் இன்றைய “பாஷன்”-சார்ந்த இலக்கியவாதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இறுக்கம் அதிகமில்லாத அவரது நட்பு –

  • இலக்கியம்,
  • மரபு,
  • இவடிவம்,
  • காவியம்,
  • புனைகதைகள் விடுத்த இலக்கியங்கள்,
  • அறிவியல் புனைவுகள்

போன்று இன்றைய இலக்கியவாதிகளால் மறுக்கப்படும் அல்லது ஒதுக்கப்படும் பல விடயங்களைப் பற்றி எளிதாகக் கேள்விகள் கேட்கமுடிந்தது.

எந்த ஒரு போக்கினாலும் பாதிக்கப்படாமல் தன்னுடைய ஆளுமையை முற்றாகத் தனித்துவப்படுத்திச் செதுக்கிக் கொண்டுள்ளார் ஜெயமோகன்.

கிட்டத்தட்ட இரவு பதினொன்றரைக்கு – வற்றல் குழம்பு, சகிதமாக ஒரு நல்ல கும்பகோணம் சமையலை அவருக்கு அளித்து இல்லத்தையும் அவரது துணைவியாரையும் (எங்க ஊர்தாங்க – பட்டுக்கோட்டை) நினைவுபடுத்திவிட்டோம். ஜெயமோகன் வாங்கிவந்த மலர்க்கொத்து இன்னும் என் இல்லத்தின் நடுவில். ஒரு நல்ல நட்பின் தொடக்கம் என ஆழ்மனம் பரவசப்படுகின்றது.

அன்புடன்
வெங்கட்
தொராண்டொ

10 bullet points about, on, with Writer Jeyamohan

ட்விட்டரில் கதைத்தது

1. Chatted with JM abt அணியம் – வறீதையா கான்ஸ்தந்தின். Used to love Tilapia recipes; now getting a guilty feeling while eating the fish. #Books

2. Chatting with Jeyamohan on Tamil TV Media, Nandigram, Ilaiyaraja, Paula Coelho, H1b, Australia, home bldg., Movies. Anything but Ilakkiyam.

3. Probably my happiest moment as a computer type-writer. JeMo also uses phonetic keyboard layout for his jet speed blogs, writing in Tamil.

4. Inspired Quote: There r 3 reader types: 1. Who philosophizes with Vishnupuram; 2. hu adore ‘பின் தொடரும் நிழலின் குரல்’; 3. The bloggers #JM

5. Muttulingam: பிரியாவிடையில் தரப்படும் பரிசு விலைமதிப்பற்றது. Why? அது ஒன்றை எதிர்பார்த்துக் கொடுக்கப்படுவது அல்ல. (அஞ்சலிக்கும் பொருந்துமா?)

6. கண்ணதாசனுக்கும் வலம்புரி ஜானுக்கும் குறிப்பெடுத்து இலக்கியவாதியானது அந்தக்காலம். சாரதியாக வண்டியோட்டும் கைடுகள் ப்ளாகராவது இணையக்காலம். #Lit

7. Draft notes for a blog post on #JM meet: State of Eelam, Tamil Movie director working styles, what does JeMo read, Cauvery Water management.

8. Yesterday’s #JM chats: ஜெயகாந்தன் சபையிலும் சுந்தர ராமசாமி இல்லத்திற்கும் ஆறு தரிசனங்கள்; ஞானம் x கர்மம்; Translations of lit works; Ve.Saa.

9. @dynobuoy Liked ur https://twitpic.com/9moal Jeyamohan’s one liner on US was something along these lines + environment impact of consumerism

10. #JM compliment for me: ‘உங்க வாய்ஸ் டப்பிங்குக்கு ஏற்ற ஒண்ணு. உங்க உருவத்துக்கும் குரலுக்கும் சம்பந்தமேயில்ல. நல்ல கட்டையான ஆம்பளக் குரல்.”

ஆட்டிசம் குறைபாடு: திரைப்படம் & குடும்பம்

உயிரோசை: மாமிக்கு ஏன் மீசை? ஊன வகைமாதிரியின் அபத்தங்கள் – அபிலாஷ். ஆர்

ஓட்டிசம் (autism) எனும் மூளைச்சிதைவு (mental impairment) பிறவி நோயாளிகளில் மிகச் சிலர் சாவண்ட் (Savant) எனும்

  • அதிநினைவுத்திறனுடன், கணிதத்திறனுடன் இருப்பர் (ஒருவர் ஐன்ஸ்டனின் சூத்திரத்தில் கணிதப்பிழை கண்டுபிடித்தார்).
  • படித்த புத்தகத்தை ஒரு வார்த்தை விடாமல் அவர்களால் ஒப்பிக்க முடியும்.
  • இந்த நாள் 2080-இல் என்ன கிழமை என்றால் நொடியில் சொல்வார்கள்.

ஹாலிவுட்டில் ஓட்டிச சாவண்டை (savant syndrome have autistic disorder) முக்கிய பாத்திரமாய் பயன்படுத்தின குறிப்பிடும்படியான ஆரம்ப கால படம் மழைமனிதன் (Rain Man). டஸ்டின் ஹாப்மேன் (Dustin Hoffman) தான் சாவண்டு.

ஒரு நாள் படிக்க புத்தகம் இல்லாமல் போக தொலைபேசி டைரக்டரியை உட்கார்ந்து படிக்கிறார். மறுநாள் உணவகப் பணிப்பெண்ணின் மார்புப் பட்டையில் பெயர் பார்த்து உடனே டஸ்டின் அவளது தொலைபேசி எண்ணை ஒப்பிக்க அவள் கலவரமாகிறாள்.

Autism-Awareness-Month-April-Flickr-For-The-Love-of-Fionaமற்றொரு விபரீதத் திறமையாக கலைந்த சீட்டுக்களை பார்த்தால் ஆட்டத்தின் போது யாரிடம் எதுவென துல்லியமாய் சொல்கிறார். இதை பயன்படுத்தி இவரது தம்பி (டாம் குறூஸ்Tom Cruise) ஒரு ஆட்டத்தில் கோடிகள் சம்பாதிக்க ஒருங்கிணைப்பாளர்கள் குழம்புகிறார்கள்.

இதைத் தொடர்ந்து பல படங்களில் ஓட்டிச நபர்கள் பிரபலமானார்கள். ஆனால் ஊடகங்கள் சுவாரஸ்யத்துக்காக அனைத்து குறைவளர்ச்சி மூளைக்காரர்களையும்  (Mental disorders aka psychiatric or psychosocial disability) (சாவண்டுகளாகக் காட்ட ஆரம்பித்தன.

1998-இல் வெளியான “பாதரசம் உயருது” (Mercury Rising) படத்தில் இரண்டு அதிகணினிகளால் கண்டுபிடிக்க முடியாத 2 பில்லியன் மதிப்பு ரகசிய சேதி சங்கேதக் குறியை சிமன் எனும் ஒரு 8 வயதுப் பையன் கண்டுபிடித்து விடுவான்.

எப்படி?

அவன் ஒரு சாவண்டு என்பதால். இந்த உண்மைக்கு புறம்பான விபரீத சித்தரிப்புகளால் இந்த குறைமூளை மனிதர்கள் பற்றி ஒரு மிகை எதிர்பார்ப்பு அமெரிக்காவில் உருவாகி உள்ளது.

ஸ்டுவார்ட் முரேய் எனும் ஒரு ஓட்டிச குழந்தையின் தகப்பன் சொல்கிறார்: “என் குழந்தையை பார்த்தால் எல்லோரும் கேட்பது ‘அவன் சாவண்டா’ என்றே. ‘இல்லை’ என்றால் முகம் சுளிக்கிறார்கள்.”


City Journal: Autism, Non-Hollywood Version – Stefan Kanfer

  • அமெரிக்காவில் பிறக்கும் 150ல் குறைந்தது ஒரு குழந்தைக்கு — ஏதாவது ஒரு விதமான ஆட்டிசம் தாக்குகிறது.
  • ரெயின் மேன்’ திரைப்படம் என்பது மிகை நாடும் கலையின் உதாரணம் என்பதை நிஜ வாழ்வு சம்பவங்களை புத்தகமாக்கும் அனுபவப் பகிர்வு.
  • பெற்றோரின் கவனிப்பு முழுக்க பாதிக்கப்பட்ட குழந்தையிடமே போவதால், சகோதரர்களிடையே உருவாகும் பிளவு; மன உளைச்சல் போன்ற ஆத்ம சிக்கல்களைப் பேசுகிறது.

புத்தகம்: Boy Alone: A Brother’s Memoir, by Karl Greenfeld (Harper, 368 pp., $25.99)

Vital Statistics: 32 Personal Questions

உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

வெட்டிப்பயல் எழுத்து இளநீர் மாதிரி. சல்னு நேச்சுரலா உண்மையா இருக்கும்; கொஞ்சம் தேங்காய் சரக்கும் உள்ளே இருக்கும். அப்படி ஒன்று.

உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?

பாலாஜி, பாஸ்டன் என்னும் மின்னஞ்சல் கையெழுத்தை மாற்றிப் போட்டவர் பாரா(கவன்). பாபா என்றழைத்து மரத்தடியில் மதிமயங்கச் செய்தது பின்னர் பலர்.

உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர்; ஆயிரம் பேரில் வலைப்பதிபவர் அரை எழுத்தாளர் என்றால் ம்ஹும்; மற்றபடி பவர்லெஸ் பாபா என்பதால் ம்ம்ம்.

கடைசியாக அழுதது எப்போது?

போட்டு உடைத்த மாதிரி சொல்ல வெட்கப்படுவதால், சிறுகதையே உகந்தது; எனினும், ‘குட்டி‘ மாதிரி சினிமாப் படங்களுக்கு கூட கண் தளும்பும்.

உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

ஆங்கிலம் – ரொம்ப; தமிழ் – ஐஸ் க்ரீம் மாதிரி; துவங்கும்போது சப்புக் கொட்டும்; போகப் போக உருகி ஆறாக ஓடி, குச்சி குச்சியாய் நிற்கும்.

பிடித்த மதிய உணவு?

அலுவலில் இருந்தால் சத்து bar; அலுவல் உலாவில் அமெரிக்க நளபாகம்; வீட்டில் மோர்க்குழம்பு + ரசம் + பருப்புசிலி; சுற்றுலாவில் பீட்ஸா.

நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?

ஃபேஸ்புக்கில்தானே? உடனடியாய் நானும் பின் தொடர்ந்து விடுவேன். Hi5, Piczo, Bebo, Tagged எல்லாம் நட்பு வைத்துக் கொள்வதில்லை.

கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

பிறந்ததில் இருந்து சென்னை, நியு யார்க், சிகாகோ, பாஸ்டன் என்று கடற்கரை அலுப்பிலேயே வாசஸ்தலம் என்பதால், அருவி மீது பற்று.

ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

அறிமுகமானவர் என்றால் கையை – குலுக்க; இல்லை என்றால் முகத்தை – புன்சிரித்து வைக்க; அவர் பார்க்கவில்லை என்றால் – மே.கீ டு இ.வ.

உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

எதுவும் முடியும் என்று நம்பிக்கை வைப்பது; அதுவும் நம்மாலும் இயலும் என்று முயலாதது.

உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விசயம் எது?

பொறுமை; நான் புத்தகம் வாங்கிய நூல் மூட்டை தபாலில் வரும்போது, அதை காற்றில் பறக்க விடுவது.

மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்?

சமையல்.

இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

அக்கா.

இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெள்ளை அரைக்கை சட்டையில் சிவப்பு கோடுகள்; பழுப்பு காக்கி முழுக்கால் சராய்.

என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

வெக்கை பிடுங்கும் இரவில், குளிரூட்டப்படாத அறையின் மின்விசிறியில் காற்று வருகிறதா என்னும் சத்தம்.

வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கறுப்பு.

பிடித்த மணம்?

சந்தனம்; காபி; பட்சண வாசம்.

பிடித்த விளையாட்டு?

நான் கலந்து கொண்டால் கால்பந்து, ஃப்ரிஸ்பீ, ராக்கெட் பால்; கண்டு களிக்க கூடைப்பந்து, டென்னிஸ்.

கண்ணாடி அணிபவரா?

ஆமென்.

எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

எழுபத்தியோரு விமர்சனம் படித்தால் மட்டும் புரியக்கூடிய படமாக இராமல், அதே சமயம் சிறார்களும் நிராகரிக்கும் அறிவுகூர்மையற்ற மசாலாகவும் இல்லாதவை.

கடைசியாகப் பார்த்த படம்?

தொலைக்காட்சியில் ‘சேது‘; வெள்ளித்திரையில் முப்பரிமாண ‘Up

பிடித்த பருவ காலம் எது?

பிடிக்காதது – வசந்த காலம்; மற்றது எல்லாம் நேசிப்பேன்.

என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

1. What every American should know about the Middle East / Melissa Rossi
2. The Pushcart prize: Best of the small presses

உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

படம் எல்லாம் போட்டால், கணினி வேகத்தைக் கட்டுப்படுத்தி இடத்தை அடைக்கும் என்பதால், வெறும் நீல நிறம்.

பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

நேரத்தே ட்ரெயின் வருவதன் அறிகுறியாக எழுப்பும் ஒலி இனிமை; அதைப் பிடிப்பதற்கு எழுப்பிவிடும் கடிகாரம் அலறம்.

வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

முதன் முதலாக நுழைவுத் தேர்வு எழுத தன்னந்தனியாக சென்ற காரைக்குடி. புதிய அறிமுகங்களுடன் அப்படியே பிள்ளையார்பட்டி, திருச்சி என்று உலாவியது.

உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நாலாயிரம் வார்த்தை கட்டுரையின் சக்கை இதுதான் என்று முழுக்கப் படித்தோ படிக்காமலோ ட்விட்டுவது.

உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

கருக்கலைப்பும் செய்யாமல் காப்பாற்றவும் முடியாமல், வதவதவென்று மக்களைப் பெற்றுப்போட்டு, கடவுள் நம்பிக்கையில் பழிபோடும் பொறுப்பற்றவருக்கு வக்காலத்து வாங்குபவர்.

உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சும்மாயிருக்காத பொழுதுகள்… நண்பரைக் குத்திக் கிழிக்கும்; பயனிலருக்கு சாமரம் வீசும்.

உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஜார்ஜ் ஏரி, ப்ளாசிட் ஏரி, நியு யார்க்.

எப்படி இருக்கணும்னு ஆசை?

இருபது கிலே கம்மியாக; ஒரு மணி நேரத்தில் ஐந்து மைலாவது ஓடுபவனாக; அம்மாவுடன் இன்னும் நேரஞ்செலவழிப்பவனாக; சம்பளத்தில் 5%க்கு மேல் தொண்டு நிதி ஒதுக்குபவனாக.

வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கை வரிக்குதிரை மாதிரி. கருப்பு நிறைய இருக்கா, வெள்ளைக் கோடு நிறைந்திருக்கா என்றெல்லாம் கணக்கு பார்க்காவிட்டால் டக்காரா பறக்கும். Life Is What Happens When You Are Busy Making Other Plans.

நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

1. வார்த்தைகளின் விளிம்பில் – இவரைக் குறித்து அதிகம் தெரியாது. சமீப காலத்தில் நான் படிக்கத் துவங்கியதில், கவனிக்கத்தக்க வகையில், பொருளடக்கத்துடன் எழுதுகிறார்.

2. குரல்வலை – முன்பொருமுறை இந்த மாதிரி மீம் அழைப்பு விட்டிருந்தார். இன்னும் நான் அதை நிறைவேற்ற இயலவில்லை. அதற்காகவும், நீண்ட நாளாக அவரின் பதிவு கிடப்பில் இருப்பதாலும்.

3. கண்ணோட்டம் – நானும் இலக்கியவாதி என்பதற்கு அடையாளமாக, தமிழ்ச்சூழலில் புரியாத பெயர்கள் பலவற்றை அவிழ்த்துவிடும் பெரும்புள்ளியை அழைக்கும் ஒதுக்கீடு.

4. இகாரஸ் பிரகாஷ்: வித்தியாசமாக யாரையாவது தொடர அழைப்பார்; பதில்களில் அன்னியோன்யம் தொற்றிக் கொள்ளும்.

5. தேன் துளி: இவர்களை சந்தித்தவுடனேயே பதிவு போட வேண்டுமென்று ட்ராஃப்டில் வைத்து அது ஊசிப் போனதால், மன்னிப்பு விடு தூது.

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை

நன்றி: Pajama Diaries

வாலிபம் – வளப்பம் – வணிகம்

அமெரிக்காவின் புதிய தலைமுறைபணக்காரரின் அலுப்பு :: The Phoenix > Lifestyle Features > Living beyond their means?: “The go-go ’80s have receded into the oh-no aughties, but not everyone has gotten the memo.”

ஏற்றிவிடுவதில் அமெரிக்காவின் கெட்டிக்காரத்திற்கு நிகர் கிடையாது. இந்தியாவில் காதலில் மட்டுமே ஊக்க வார்த்தை கொண்டு நிரப்பும் நண்பர் உலகம் என்றால், இங்கே பள்ளியில் துவங்கி பெற்றோர் வரை எல்லோருமே ‘உன்னால் முடியும் தம்பி’ உதயமூர்த்திகள். இப்படி உசுப்பேற்றியே உருப்படாமல் போனதின் குணச்சித்திரமாக Seinfeld தொடரின் ஜார்ஜ் பாத்திரம், நடப்பு ஆண்டில் பட்டதாரியானவரின் முன்னோடியாக காணப்படுகிறார்.

இந்த வருடம் கல்லூரியை முடித்தவர் என்ன செய்கிறார்?

  • ஃப்ளிக்கரில் புகைப்படம் ஏற்றி, ட்விட்டரில் இருக்கும் இடத்தை சொல்லி, நாளொன்றுக்கு எட்டு டாலர் பொக்கீடில் உலகம் சுற்றக் கிளம்புகிறார்.
  • இன்னும் கொஞ்சம் கடன் வாங்கி, மேற்படிப்புக்கு சென்று விடுகிறார்.
  • முதலீட்டு தேவதைகளின் துணை கொண்டு, சொந்தமாக வெப் 3.0 நிறுவனம் துவங்குகிறார்.
  • அப்பாவின் கோடை வாசஸ்தலத்தில் ஆறு மாசம்; அம்மாவின் இரண்டாவது விவாகரத்தில் கிடைத்த ஐரோப்பிய வீட்டில் ஆறு மாசம் தங்க ஆரம்பிக்கிறார்.
  • மருத்துவத்துறையில் நர்ஸ், உள்நாட்டு பாதுகாப்பு, ஆசிரியப் பயிற்சி என்றெல்லாம் சீக்கிரமே அலுக்கும் வேலையைப் புறக்கணித்து, சிரம பரிகாரம் எடுக்கிறார்.

மேற்கத்திய உலகில் வேலை எப்போதுமே அவசியமாக ஒன்றாக இருந்ததில்லை. சமூக அந்தஸ்து செய்யும் தொழிலினால் நிர்ணயிக்கப்படுவதில்லை. பொருளாதார அந்தஸ்து என்பது ரஜினி படம் மாதிரி – சில சமயம் அமோகமாக சோபிக்கும்; சில சமயம் பாபா ஆகி விடும்.

இந்தியாவிலும் இந்தத் தலைமுறையினரின் எண்ணம் இவ்வாறே உள்ளது. “என் அண்ணனைப் போல் எனக்கு குழந்தை, குட்டி கிடையாது. அப்பாவை போல் பிடிக்காத வேலை செய்யப் போவதில்லை. வாலிபம் இருக்கும்போதே வளப்பமாக இல்லாவிட்டாலும், ஆடிப் பாடி கொண்டாடுவோம்” என்னும் நிகழ்காலத்தைக் கொண்டாடுபவர்கள்.

எனக்குக் கிடைக்கும் ஊழியத்தை விட, மாதா மாதம் சம்பளம் தரும் சம்பாத்தியத்தை விட, நான் விரும்பி செய்ய நினைப்பதை — அன்றாடம் பணியாக அமைவதே லட்சியம் என்கிறார்கள்.

நாலு நாள் குண்டி காஞ்சா பவுசும் பராக்கிரமும் தெரியவரும்.

வறுமையின் நிறம் சிகப்பு நிஜ வாழ்க்கையின் பகிடி :: iowahawk: Hot New Trend: Carefree Hipsters Go For Funemployment, Starve-cation: Jobless jitters? Not for these young folks, who are embracing idleness and finding fulfillment in local Del Taco dumpsters.

தொடர்புள்ள முந்தைய பதிவு: வேலையில்லாதவன்தான்! வேலை தெரிஞ்சவன்தான்?

பரிந்துரை: இரண்டு இணையத்து சிறுகதைகள்

சமீபத்தில் இரு நல்ல புனைவு வாசிக்க கிடைத்தது. அவை:

1. சத்யராஜ்குமார் :: மைய விலக்கு « இன்று – Today

2. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: தேவதைகள் காணாமல் போயின – சிறுகதை

அவற்றை முடித்து விட்டு இந்தப் பதிவைப் படிப்பது கதைகளுக்கு நீங்கள் செய்யும் ஷேமம்.


மேற்கோள் மூலை

ச.ரா.குமார் கதையில் இருந்து கவர்ந்த இரு இடங்கள்:

அ) இன்பாக்சில் நிஷா அனுப்பிய மின்னஞ்சல். ரொம்பவும் கோபமாகி விட்டால் நிஷா இமெயிலில்தான் பேசுவாள். பத்து கிலோ பைட்களுக்கு திரையில் தெரிந்தது அவள் கோபம்.

ஆ) ‘நீயும், நிஷாவும் ஏன் இப்படி கஷ்டப்படணும்? பார்த்துக்க ஆயிரம் பேர் இருக்காங்க. இங்கே நிறைய சொகுசு இருக்கு. ஆனா லைஃப் இல்லை. நாலு சுவத்துக்குள்ள நாம நாலு பேருமே முகத்தைப் பார்த்துக்கிட்டு… மெட்ராசுக்குப் போயிரலாம்டா.’


ரா.கி.யில் கவர்ந்தவற்றிற்கு சாம்பிள்:

அ) ஜீரணமாகாத உணவை தள்ள முயற்சிப்பதுபோன்ற கடலின் முயற்சி ஒவ்வொறு முறையும் அலையென தோற்கும் காட்சி வியப்பானதே. எதைஎதையோ விழுங்குவதும், பின்னர் எதுவுமே தெரியாதுபோல் கிடப்பதும் இதற்கு வாடிக்கையாகிவிட்டது.

ஆ) ஜப்பான் நாட்டவர்களின் முகவடிவம், எங்கு ஆரம்பித்தாலும் கூர்மையான தாடையிலேயே விழும்.


ஆறு வித்தியாசங்கள்

இரு கதைகளுமே அதிர்ச்சி அல்லது வித்தியாசமான முடிவில் நம்பிக்கை கொண்டவை. இரு கதைகளுக்குமே அது தேவையில்லை என்பது வேறு விஷயம்.

ஒன்று போட்டிக்காக எழுதப்பட்டது. மற்றொன்று அந்தவித நிர்ப்பந்தங்களுக்குட்பட்டு உருவாகாவிட்டாலும், போட்டியில் கலந்துகொள்வதற்கான முஸ்தீபுகளும் முகாந்திரங்களும் நிறைந்தது.

வார்த்தைகளின் விளிம்பில் நிற்பவரிடம் கதை ஜாஸ்தி. இன்று – டுடேவிடம் மூக்கு மேல் வரவைக்கும் விவாதப்புள்ளிகள் ஜாஸ்தி.


விமர்சனம்

சத்யராஜ் கதையில் விமர்சிக்க விஷயம் ஏதுமில்லை. பட்டிமன்றம் மாதிரி இன்னும் கொஞ்சம் எண்ணவோட்டமோ, உரையாடல் மன்றமோ கட்டி, மெரீனா பீச் மணல் அளவு வியாபிக்க கூடிய சமாச்சாரத்தை சுண்டல் மாதிரி பொட்டலம் கட்டி இருக்கிறார்.

குறைந்த பட்சம் அந்த மின்னஞ்சலையாவது அனுபந்தம் ஆக்கி இருக்கலாம் என்னும் ஏக்கம் இருக்கிறது.

oOo

காதலியின் நினைவுகள் என்று இன்னொரு கதை எவராவது எழுதினால் அலுவலை நோக்கி(யே) வடக்கிருக்கலாம் என்று எண்ணுமளவு அலுத்துப் போன டாபிக்கில் பூந்து விளையாடியிருக்கிறார் கிரி. சம்பிரதாயமான ஆரம்பம்.

இத்தினியூண்டு கதையில் உலாவும் அத்தனை பாத்திரங்களுக்கும் மனதில் நிற்கும் அறிமுகங்கள். தண்ணீரில் மிதக்கும் ப்ளாஸ்டிக் ஆக, கவிஞர்களே உவமைகளுக்கு பஞ்சம் பாடும் இந்தக் காலத்தில் சக்கையான தக்கை கொண்ட மிதவையான உறுத்தாத பயன்பாடு அமர்க்களம்.

அப்படியே, ‘நான் அந்தக் காலத்தில் லால் கிலாவில் இப்படித்தான்…’ என்று காதலி காலடி தேட வைப்பதே கதையின் வெற்றி.

இருவருக்கும் என் நன்றி.

Life Is What Happens When You Are Busy Making Other Plans

நான் அமெரிக்கா கிளம்புவதற்கு இரண்டு நாள் முன்பு ஏர் ஃபிரான்ஸ் விமானம் நடுவானில் காணாமல் போனது. என்னை வழியனுப்ப, சொல்லிக் கொள்ள, ஆசீர்வதிக்க வந்த அனைவருமே, ஏனோ இந்த செய்தியை எனக்கு சொன்னார்கள்.

எங்கள் வீட்டிலும் தி ஹிந்து வாங்குகிறார்கள் என்பதை அறிந்திருந்தும் இந்த நிகழ்வை சுட்டிக் காட்டிப் பேச்சைத் துவக்கினார்கள்.

நானும் அவர்களுக்கு அமெரிக்க மாமா கதையை அலுக்காமல் சொல்லி ஆறுதல் அளித்தேன்.

ஹைவேயில் வேகமாகப் போகிறோம். சடாரென்று கொஞ்ச தூரத்தில் போலீஸ் கார் தென்படுகிறது. ஒன்றும் தெரியாத பூனைக்குட்டி போல் இரண்டு அப்பாவி கார்களுக்கு நடுவில் சொருகிக் கொண்டு, பம்மி, பாவனையாகக் கடக்கிறோம்.

அடுத்த பத்து, இருபது மைல்களுக்கு கவலை வேண்டாம். உடனடியாக இன்னொரு காவல்துறை வண்டி இருக்காது. திருப்பத்திற்கொரு போக்குவரத்து காவலர் இருக்கமாட்டார் என்பது விதி அல்ல; சம்சயம்.

அதே போல் காலாண்டுக்கு ஒரு விமான விபரீதம்தான் நிகழும் என்பது ஒருவிதமான மனப்பிராந்தி ப்ராபபிளிடி.

ஆனால் விதி வலியது.

இப்படி நினைத்து வேகமூட்டும்போது, கையுங்களவுமாகப் பிடிக்கப்பட்டு $300 தண்டம் அழுததுண்டு.

அதை விட இந்த அம்மணியின் நிலை பரிதாபமானது

Woman who missed Flight 447 is killed in car crash – Times Online

பிரேசிலில் விடுமுறை. ரொம்பவே உல்லாசமாக இருந்ததாலோ என்னவோ, பாதுகாப்பு பரிசோதனைக்கு தாமதமாக வந்துசேர்ந்து, போய்ச்சேர வேண்டிய விமானத்தைத் தவறவிடுகிறார். மரணத்தையும் தட்டிக் கழிக்கிறார்.

காலன் கைவிடவில்லை.

God’s contingency plan வந்துசேர, சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

சாமர்செட் மாமின் கதையான Appointment in Samarraவை ஸ்ரீகாந்த் பரிந்துரைத்திருந்தார்.

சாமான் வாங்கிவர சந்தைக்கு செல்லும் வேலைக்காரர் அரக்க பரக்க ஓடி வருகிறார்.

‘பெண்ணைக் கண்டேன்… பேயைக் கண்டேன்’

‘ஒழுங்கா சொல்லுடா!’

‘நீ சாவப் போறேன்னு மரணதேவதை சொல்லிடுச்சு. நான் ஓடி ஒளியணும்.’

அந்தக்காலத்தின் அதிகாரபூர்வ நடராஜா சர்வீசுக்கு பதிலாக, தன் குதிரையைக் கொடுத்து வேலைக்காரரை எழுபத்தைந்து மைல் தள்ளியிருக்கும் சமரா நகருக்கு துரிதகரமாக அனுப்பி வைக்கிறார் வியாபாரி.

அப்படியே சந்தைக்கும் சென்று காலதூதரை கண்டுபிடித்து ‘ஏன் சின்னப் பையனை பயமுறுத்தினாய்?’ என்று குறுக்கு விசாரணையும் நடக்கிறது.

‘இன்னிக்கு ராத்திரி அவனை சமராவில் நான் கொல்லணும். இன்னும் இங்கேயே இருந்தா எப்படி! அதனால்தான் போக வைத்தேன்…’ என்கிறது எமன்.

சின்ன வயதில் இந்த மாதிரி கதையொன்றை இந்து மதக் குறியீடுகளைக் கொண்டு கேட்ட ஞாபகம்…

சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

‘நாளை வருவேன்’ என்று விநாயகரிடம் சனி ஏமாந்ததும், ‘என்றும் பதினாறு’ மார்க்கண்டேயர்களும் தவிர இப்படி துரத்தி செலுத்தப்பட்டவர் எவரேனும் இருக்கிறாரா?

நல்வா(ர்)ழ்த்தை நான் சொல்லுவேன்

நண்பருக்கு கடிதம்

நலம். நாடலும் அதுவே.

கடிதம் பார்த்தவுடன் பதில் எழுதணும்னு தோணிச்சு. ஆனால், என்ன எழுதலாம் என்று தெரியல.

வேலையில் காய்ச்சு எடுத்துக் கொண்டிருந்தார்கள்னு ஒரு சால்ஜாப்பு சொல்லத் தோணுது. அதற்கப்புறமா இந்தியா + சென்னை போய் மூணு வாரம் ஓய்வெடுத்தப்போ கூட எழுத முடியாமப் போனதுக்கு வருத்தம் சொல்லிக்கறேன்.

மன்னிக்க 🙂

ஆணி புடுங்கறதுனு அலுத்துக்கொள்வது எங்களுக்கு கைவந்த கலை. எழுத்துத் திறமைக்கு மதிப்பில்ல என்று சலித்துக் கொள்வது படைப்பாளிக்கு வலை வந்த கலை.

சென்னையில் ஆட்டோ ஓட்டுறவனோடு பேசிக் கொண்டிருந்தேன். கார்த்தால நாலு மணிக்கு எந்திரிச்சு நாலரைக்கு வண்டிய ஆரம்பிக்கிறவன், மதியானம் ஒன்றரை மணி வரை ஓட்டுறான். அப்புறம் சாப்பாடு; கொஞ்சம் ரெஸ்ட். வெயில் தாழ, நாலு மணிக்கு மீண்டும் இன்னொரு ஷிஃப்ட் போட்டு ராத்திரி 11 மணி வரை அடுத்த ஓட்டம். அதற்கப்புறமும் உழைக்க அவன் ரெடியாம். சவாரி வருவதில்லை என்பதால் உறக்கம்.

நானா இருந்தா இந்தக் கொடுமைய நினைந்து நினைந்து உருகி நாலு பதிவு போட்டிருப்பேன். அவன் ‘சொந்த ஆட்டோ’ என்று பெருமிதம் கொண்டிருந்தான்.

அடுத்தவரை நினைத்து தன்னை மதிப்பிடுபவனுக்கு என்றுமே நிம்மதியில்லை என்பதை இன்றைய நியு யார்க் டைம்சில் பிகோ ஐயரும் சொல்லியுள்ளார். மகிழ்ச்சி என்பது காசினால் வருவதில்லையாம்.

வீட்டில் அனைவரும் நலம்.

மகளுக்கு அவ்வப்பொழுது பொது அறிவு சிற்றுரையாடுகிறேன். கொஞ்சமாய் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க முயல்கிறேன். தினமும் அரை மணி நேரம் அவளுடன் செலவழிக்க முடிகிறது.

மற்ற நேரம் டிவி.

வாரயிறுதியில் காரில் பயணிக்கும் நேரம் அவள் கூட இருந்தாலும், இன்னும் சரியாக உபயோகிக்கலாம் என்னும் குற்றவுணர்வுடன் பறக்கிறது.

எம்பிஏ-விலோ எஞ்சினியரிங்கிலோ குழந்தை வளர்ப்பை கட்டாயப் பாடம் ஆக்கலாம். திருமணம் ஆவதற்கு முன் செர்டிஃபிகேட் படிப்பு முடித்தால்தான் தாலி என்றாவது வைக்க வேண்டும். சமைக்கக் கற்று கொடுத்தல் முதல் முதலுதவி மருத்துவம் வரை இதில் சேர்க்க வேண்டும்.

மனைவியுடன் சிறு சிறு பிணக்குகள். பிறகு சமாதானங்கள் என்று சௌகரியமாகவே வாழ்க்கை செல்கிறது.

சமீபத்தில் படித்த புத்தகம் எதுவும் மனதில் நிற்கவில்லை. குள்ளசித்தன் சரித்திரம், யாமம் போன்ற புகழ்பெற்ற வெகுசன நாவல்கள்; நூலகத்தில் எடுத்த சில ஆங்கிலப் புத்தகங்கள்… குறிப்பிட்டு பரிந்துரைக்க எதுவும் இல்லை.

நாளிதழ் வீட்டுக்கு வருவதை நிறுத்தி விட்டேன். இணையத்தில் மட்டுமே தினசரி செய்திகள். இங்கே பாஸ்டன் க்ளோப் திவாலாகும் நிலை.

இதுவரை இமையத்தை நான் வாசித்ததில்லை. இப்பொழுதுதான் கோவேறு கழுதைகள் நியு புக்லேன்ட்ஸில் வாங்கினேன்.

சென்ற வருடம் வரை கடல் ஷிப்பிங் இருந்தது. அமெரிக்கா வந்து சேர்வதற்கு இரண்டரை மாதம் எடுத்துக் கொண்டாலும் சல்லிசான காசு. இப்பொழுது அதை எடுத்துவிட்டார்கள். SAL என்கிறார்கள். சுண்டைக்காய் அரைப்பணம்; சுமகூலி முக்காப் பணம் கதை. 4000 ரூபாய்க்கு புத்தகம். அனுப்ப 5000த்திற்கு மேல் எடுக்கிறது! ஸ்பீட் போஸ்ட்டில் எட்டாயிரத்து சில்லறைதானாம்.

இன்னொருத்தர் பார்க்க புத்தகங்களை எடுப்பது எனக்கு ஒவ்வாதது. இந்த முறை உண்மைத் தமிழன அகப்பட்டு விட்டார். சொல்லவும் முடியாமல் நெளியவும் முடியாமல், படித்து, புரட்டி, அலசி தீர்மானித்தேன்.

நியூ புக்லேன்ட்சுக்கோ கடையை மூடும் நேரம். ஒரு நாள் கூத்துக்காக தாமதமாக திறந்து வைத்திருந்தார்கள்.

அங்கே ஒ ஏ கே தேவரின் மகன், சீரியலில் நடிப்பவர் வந்திருந்தார். குழந்தை வளர்ப்பு + பராமரிப்பு குறித்த புத்தகம் வாங்கிச் சென்றார்.

இருக்கும் புத்தகங்களை படித்தால்தான் புதியது வாங்குவது என்பது இனி மசான வைராக்கியம் அல்ல. வீட்டில் குவிந்திருக்கும் நூல்களை ஒரு முறையாவது அலசி ஆராய்ந்து விமர்சனமோ பதிவோ இட்ட பிறகுதான் இனி அடுத்த வாங்குதல் வைபவம்.

நியூ புக்லேன்ட்ஸ் முழுக்க நிறைய தெரிந்த, அறிந்த முகங்களின் புத்தகங்களைப் பார்க்க மகிழ்ச்சியாகவும் பொறாமையாகவும் இருந்தது. இத்தனை பேரை ஒரளவாவது நேரடியாக அறிந்திருக்கிறோமே என்பதில் சந்தோசம். இவர்கள் எல்லாம் எழுதும்போது நமக்கு எழுத வாய்க்க வகையில்லையே என்பதில் திறமை மீது ஏக்கம்.

எனக்கு இந்த வருட கோட்டா முடிந்தது. அடுத்த வருடம் பிழைத்துக் கிடந்தால் ஜனவரியில்தான் சென்னை செல்ல வேண்டும் என்று ஆசை. அது கிடக்கிறது ஜனவரி 2011! பார்ப்போம்.

விடுமுறையில் சொந்த ஊர் சென்று வந்தால் புத்துணர்ச்சியாகத்தான் இருக்கிறது. ‘என்னத்த செஞ்சு… என்னத்த பண்ணி’ என்று கன்னையாவாக அமிழ்ந்திருக்கும் மனசு புத்துணர்ச்சி அடைய வைக்கிறது. சொந்த பிசினெஸ் துவங்கணும், ஏதாவது புதுசாக் கத்துக்கணும், மனைவியை இன்னும் கொஞ்சம் ஒழுங்கா நேசிக்கணும், குழந்தைய மதிக்கணும் என்றெல்லாம் தோன்றுகிறது.

சொந்த இடம் வந்தவுடன் வேதாளம்… முருங்கை மரம்…

சீக்கிரம் ரிடையர் ஆகணும். இல்லை… கொஞ்சம் பெரிய லீவாப் போட்டு ஊர் நெடுக சுற்றிவிட்டு அலுத்தபிறகு மீண்டும் வேலைக்கு திரும்பணும்.

நிறைய புலம்பிட்டேன்.

யாரைப் பார்த்தாலும் இப்படி அட்வைஸும் ஆலோசனையுமாக சொற்பொழிவதை நிறுத்த வேண்டும் என்பதை திருப்பதியில் ஒரு மருந்துக்கடைகாரர் சொல்லிக் கொடுத்தார்.

எனக்கு தொண்டையில் கிச்கிச். ஹால்ஸ் எடுத்தோம். அதன் கூட இன்னொரு பெயர் தெரியாத வஸ்து தனிக்கட்டையாக இருந்தது. விக்ஸ் போல் இருமல் மாத்திரை என்று எடுத்துப் பார்த்தேன்.

அதுவோ, சப்புகிற மிட்டாய் அல்ல. கடித்துத் துவைக்கும் இனிப்பு மருந்து. வைத்துவிட்டேன்.

அண்ணன் பையனுக்கு அது பிடிக்கும் என்று நச்சரித்துக் கொண்டிருந்தான்.

‘சின்னப் பயன் சார்… கேட்கிறத வாங்கிக் கொடுக்காவிட்டால் துவண்டு போயிடுவான்; பிஞ்சு வெம்பிடும்’ என்று கருத்து சொல்லி தள்ளிவிடப் பார்த்த ஓனரை பொரிந்து தள்ளியவுடன் தான் இன்டெர்னெட்டில் அனானிமஸ் வசதி எம்புட்டு பெருசு என்று புரிந்து கொண்டேன்.

வாழ்த்துகளுடன்,
அடியேன்