Tag Archives: Tickets

Life Is What Happens When You Are Busy Making Other Plans

நான் அமெரிக்கா கிளம்புவதற்கு இரண்டு நாள் முன்பு ஏர் ஃபிரான்ஸ் விமானம் நடுவானில் காணாமல் போனது. என்னை வழியனுப்ப, சொல்லிக் கொள்ள, ஆசீர்வதிக்க வந்த அனைவருமே, ஏனோ இந்த செய்தியை எனக்கு சொன்னார்கள்.

எங்கள் வீட்டிலும் தி ஹிந்து வாங்குகிறார்கள் என்பதை அறிந்திருந்தும் இந்த நிகழ்வை சுட்டிக் காட்டிப் பேச்சைத் துவக்கினார்கள்.

நானும் அவர்களுக்கு அமெரிக்க மாமா கதையை அலுக்காமல் சொல்லி ஆறுதல் அளித்தேன்.

ஹைவேயில் வேகமாகப் போகிறோம். சடாரென்று கொஞ்ச தூரத்தில் போலீஸ் கார் தென்படுகிறது. ஒன்றும் தெரியாத பூனைக்குட்டி போல் இரண்டு அப்பாவி கார்களுக்கு நடுவில் சொருகிக் கொண்டு, பம்மி, பாவனையாகக் கடக்கிறோம்.

அடுத்த பத்து, இருபது மைல்களுக்கு கவலை வேண்டாம். உடனடியாக இன்னொரு காவல்துறை வண்டி இருக்காது. திருப்பத்திற்கொரு போக்குவரத்து காவலர் இருக்கமாட்டார் என்பது விதி அல்ல; சம்சயம்.

அதே போல் காலாண்டுக்கு ஒரு விமான விபரீதம்தான் நிகழும் என்பது ஒருவிதமான மனப்பிராந்தி ப்ராபபிளிடி.

ஆனால் விதி வலியது.

இப்படி நினைத்து வேகமூட்டும்போது, கையுங்களவுமாகப் பிடிக்கப்பட்டு $300 தண்டம் அழுததுண்டு.

அதை விட இந்த அம்மணியின் நிலை பரிதாபமானது

Woman who missed Flight 447 is killed in car crash – Times Online

பிரேசிலில் விடுமுறை. ரொம்பவே உல்லாசமாக இருந்ததாலோ என்னவோ, பாதுகாப்பு பரிசோதனைக்கு தாமதமாக வந்துசேர்ந்து, போய்ச்சேர வேண்டிய விமானத்தைத் தவறவிடுகிறார். மரணத்தையும் தட்டிக் கழிக்கிறார்.

காலன் கைவிடவில்லை.

God’s contingency plan வந்துசேர, சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

சாமர்செட் மாமின் கதையான Appointment in Samarraவை ஸ்ரீகாந்த் பரிந்துரைத்திருந்தார்.

சாமான் வாங்கிவர சந்தைக்கு செல்லும் வேலைக்காரர் அரக்க பரக்க ஓடி வருகிறார்.

‘பெண்ணைக் கண்டேன்… பேயைக் கண்டேன்’

‘ஒழுங்கா சொல்லுடா!’

‘நீ சாவப் போறேன்னு மரணதேவதை சொல்லிடுச்சு. நான் ஓடி ஒளியணும்.’

அந்தக்காலத்தின் அதிகாரபூர்வ நடராஜா சர்வீசுக்கு பதிலாக, தன் குதிரையைக் கொடுத்து வேலைக்காரரை எழுபத்தைந்து மைல் தள்ளியிருக்கும் சமரா நகருக்கு துரிதகரமாக அனுப்பி வைக்கிறார் வியாபாரி.

அப்படியே சந்தைக்கும் சென்று காலதூதரை கண்டுபிடித்து ‘ஏன் சின்னப் பையனை பயமுறுத்தினாய்?’ என்று குறுக்கு விசாரணையும் நடக்கிறது.

‘இன்னிக்கு ராத்திரி அவனை சமராவில் நான் கொல்லணும். இன்னும் இங்கேயே இருந்தா எப்படி! அதனால்தான் போக வைத்தேன்…’ என்கிறது எமன்.

சின்ன வயதில் இந்த மாதிரி கதையொன்றை இந்து மதக் குறியீடுகளைக் கொண்டு கேட்ட ஞாபகம்…

சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

‘நாளை வருவேன்’ என்று விநாயகரிடம் சனி ஏமாந்ததும், ‘என்றும் பதினாறு’ மார்க்கண்டேயர்களும் தவிர இப்படி துரத்தி செலுத்தப்பட்டவர் எவரேனும் இருக்கிறாரா?