Tag Archives: புனைவு

வாசக அனுபவம்: கன்னியாகுமரி: ஜெயமோகன்

தொடர்புள்ள பதிவு: நாவலில் என்னைக் கவர்ந்த சில இடங்கள், வரிகள், நிகழ்வுகள், கருத்துகள்

மூன்று என்பது முக்கியமான எண். ட்விட்டரில் கூட விசாரித்திருந்தேன்.

சைவத்தில் படுக்கப்போட்ட மூன்று பட்டை; வைணவத்தில் நிற்கும் நாமத்தில் 3 வரிகள்; ராமரும் அணில் முதுகில் 3 கோடு. முப்புரி நூலும் உண்டு. ஏன் #3 ?

orupakkam: 3றிற்கு ஒரு விளக்கம். முழுமையான வடிவை உருவாக்க குறைந்தபட்ச தேவை. triangle is the polygon with min sides. #trilogy

கன்னியாகுமாரியில் மூன்று கடல் சங்கமிக்கிறது. பிரம்மா, சிவன், விஷ்ணு மூன்று பேரும் சேர்ந்த ஸ்தாணுமாலயன். எல்லாம் 3. ஜெயமோகனின் கன்னியாகுமரி நாவலின் நாயகி அந்த இடத்தில்தான் படைக்கப்படுகிறாள்; காக்கப்படுவதாக வாக்களிக்கப் படுகிறாள். ருத்ரனால் சுட்டெரிக்கப்படுகிறாள்.

அந்த மூன்றும் நாயகனுக்கும் அரங்கேறுவதுதான் நாவலின் அபாரம்.

பெண்ணைக் குறித்து ஆண் தெரிந்துகொள்ள விரும்புகிறான். பெண்ணின் உடை புடைவைக்குள் சுருண்டு புதிராக இருக்கிறது என்பதில் ஆரம்பித்து, எதைக் கண்டு பயப்படுவாள்? எதை ரசிப்பாள்? என்பது போன்ற உளவியல் கூறுகள் தொட்டு அனைத்திலுமே ஆணுக்கு, பெண் புரியாத புதிர்.

இந்தப் புதிரைக் கண்டு கொண்டு, சினிமா மூலம் கொஞ்சமே கொஞ்சம் தொட்டுக் காட்டியவனின் கதை கன்னியாகுமரி.

பதின்ம வயதில் உண்டாகும் இனக் கவர்ச்சி. மணமாகியவளிடம் கிடைக்கும் நிபந்தனையற்ற திருமண பரமபத விளையாட்டு. முறை தவறி நடக்கும்போது கிளறும் குற்றநெஞ்சுறுத்தல். மூன்று நிலையிலும் பெண்களைக் கண்டு அச்சமுறும் ஆண் என்று கதையை சுருக்கலாம்.

சினிமாத் தொழிலில் இருக்கும் ஏற்றத்தாழ்வு. ஸ்டோரி டிஸ்கசன் என்றால் என்ன? அட்ஜஸ்ட்மென்ட் செய்துகொள்வது எப்படி? எங்ஙனம் திரைக்கதை – வசனம் – இயக்கம் உருவாகிறது? எவ்வாறு கதைக்காக அலைகிறார்கள் என்பது backdrop.

கன்னியாகுமரி அம்மன் ஆன்மிக புராண வரலாற்றின் குறியீடு — கதாநாயகி; அல்லது நாயகனின் மௌனசாட்சியான மனப்பிராந்தி. அவற்றில் மொழு மொழு கற்பாறைகள் என கட்டி தட்டிப் போன பிம்பங்கள். எத்தனை நாள் காத்திருந்தும் வராத மூர்த்தமாக அடுத்த சினிமாவுக்கான சூப்பர்ஹிட் கதை. உப்புக் கரிக்கும் கடல் அலைகளென மனதில் மீண்டும் மீண்டும் அடிக்கும் நினைவுகள். இந்த மாதிரி குறியீடுகள் மீள் வாசிப்பைக் கோரும் இலக்கியத்தன்மையைக் கொடுக்கிறது.

சினிமாவுக்குள் முழு மூச்சாக நுழைவதற்கு முன்பே ஜெயமோகன் இந்தக் கதையை நல்ல வேளையாக வெளியிட்டுவிட்டார். இல்லையென்றால் பா ராகவனின் ‘நிலா வேட்டை’யில் சொன்ன இயக்குநரின் மறுபாதி போல் இருக்கிறதே என்றெல்லாம் ஹேஷ்யங்கள் வந்திருக்கும். ஜெயமோகனை நான் சந்தித்த பிறகு, நான் படிக்கும் அவரின் முதல் நாவல் என்பதாலோ என்னவோ, பல இடங்களில் அவரே முன்னே வந்து என்னிடம் பேசுவது போல் எனக்குள் பாவனை எழுந்தது. எழுத்தாளரை சந்திப்பது அபாயகரமானது. 🙂

சமீபத்தில் பார்த்த படங்களை ஒப்புமைக்குக் கொன்டு வருவது என்னிடம் உள்ள கெட்ட பழக்கம். அந்த மாதிரி சில படங்களும் இந்த நாவலும்:

1. மௌன கீதங்கள்: ஆனாதிக்க மனோபாவத்தின் உச்சத்திற்கும், அத்தகைய வெளிப்படையான சிலாகிப்பின் பெருமிதங்களுக்கும் பாக்கியராஜ் என்றால், ஆணாதிக்க கோர முகத்தின் பல்லிளிப்புகளுக்கும், தலைதூக்கும் தருணங்களுக்கும் — கண்ணாடியாக கன்னியாகுமரி அமைகிறது.

தன் மனைவியைத் தவிர பிறிதொருவரை கணவன் சுகித்தால் கண்டுகொள்ளக் கூடாது என்பது மௌன கீதங்களின் சப்பைக்கட்டு. அதுவே, மனைவிக்கு என்றால், சட்டதிட்டங்கள் எவ்வாறு மாறும்? கன்னியாகுமரி போட்டு உடைத்தது போல் சொன்னாலும், அழுத்தந்திருத்தமாக உணர்வுபூர்வமாக சந்திக்கு கொண்டு வருகிறது.

2. சிவா மனசில சக்தி: இந்தப் படத்துடன் எல்லாம் ஒப்பிடுவதற்கு ஷமிக்க வேண்டும். என்றாலும், புத்திசாலி பெண் தன்னுடன் அறிவார்ந்த வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதில் ஆண் சிந்தனை வெல்வது என்பது கன்னியாகுமரியின் ஹீரோ இயக்குநர் ரவிக்கு காமத்தின் உச்சம். ஷார்ப்பான வளைவுகளும் துடிப்பான மூளையும் கொண்டவள் ‘சிவா மனசுல சக்தி’யின் கதாநாயகி. இவ்வாறாகவே அனைத்து பெண்களும் அமைவதெல்லாம் கற்பனையின் உச்சம். வெள்ளித்திரையிலும் அச்சு இலக்கியங்களிலும் மட்டுமே நம்பக்கூடிய வகையில் வெளியாகும் fantasy ecstasy.

காதலைத் திரையில் காட்சியாக்குவது நிறைய பார்த்திருக்கிறோம். அந்தக் காதலை தமிழ் எழுத்தில் வடித்து பெரும்பாலும் படித்ததில்லை. கன்னியாகுமரியில் காமத்தின் உச்சகட்டங்கள் வருகின்றன. விவரிக்கப்படுகின்றன. விலாவாரியாக பின்னணியோடு சொல்லப்படுகின்றன. அவற்றை வெகு லாவகமாக கையாண்டதற்காகவே Hats off சொல்லவேண்டும்.

கன்னியாகுமரி இந்தியாவின் வேர். முக்கடல் சங்கமத்தில் உருவாகும் வித்தில், இந்தியாவே வளர்ந்து நிற்பதாகக் கொள்ளலாம். மூலஸ்தானம். எல்லாவற்றுக்கும் துவக்கமாக இருப்பதால் அங்கே வந்து தங்கள் படத்திற்கான கருவைத் தேடுகிறார்கள். கன்னியாகுமரியும் காத்திருக்கிறாள். இவர்களும் தக்க விதைக்காக காத்திருக்கிறார்கள். குமரியிடம் கருவைத் தேடுவதா? அவளே இன்னும் குமாரிதானே?

மேலே சொன்ன மாதிரி மொத்தமாக நாவல் எழுதினால் பெரும்பாலாரிடம் கொண்டு செல்ல இயலாது. அதை ஜெயமோகன் அறிந்தே இருக்கிறார். அதனால், தாய்மையைக் குறித்து, பாரதம் எழுந்து மரமாக கிளைவிடும் தோற்றுவாய் குறித்து, வாக்குவாதங்களில் ஈடுபடும் துணைவி அதில் சாமர்த்தியமாக தோற்பது குறித்து, நல்ல சினிமா குறித்து, மிட் லைஃப் போராட்டங்கள் குறித்து, வாழ்ந்து கெட்டது போல் பேர் வாங்கத் துடிக்கும் படைப்பாளியின் கோராமை குறித்து, முன்னேற வேண்டுபவர்களின் சமரசங்கள் குறித்து கதையாகவும் குறியீடுகளாகவும் பேசியிருக்கிறார்.

அ முத்துலிங்கத்தை சந்தித்தபோது ஜெயமோகன் குறித்து சொன்ன விஷயம் இது:

இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்னை ஒளிரும் பொற்கம்பளமாக கீழே இறங்கி இறங்கி காணாமல்போகும் நானும் சில அன்னியர்களும் இருண்ட வானில் மிதந்து கொண்டிருபோம் என நினைக்கிறேன்.

ஒரு சாதாரண வலைப்பதிவை முடிக்கும்போது கூட இவ்வாறு கவித்துவ எழுச்சியுடன், அசாதரணமான சித்தரிப்புடன், படம் பிடிக்கும் ஒளிக்கலைஞனின் சிரத்தையுடன் விட்டுச் செல்கிறார்!’ என்பது அ முத்துலிங்கத்தின் பாராட்டு. இந்த புனைவிலும் ஒவ்வொரு அத்தியாயத்தின் உச்சகட்டத்திலும் அதே போன்ற காட்சியமைப்பு இருக்கிறது. அந்தப் பகுதிக்கு முத்தாய்ப்பாக, எண்ணங்களை விட்டு அகலாத படிமமாக, நுரை என்னும் ட்விட் போன்ற வார்த்தைகளையும், அலை என்னும் அனுபவம் போன்ற நிகழ்வுகளையும், கடல் என்னும் வாழ்க்கை போன்ற புரிதல்களையும் மீண்டும் மீண்டும் எழுப்புகிறது.

ஜே ஜே சில குறிப்புகளின் ஜே ஜே போல் இங்கும் ஒரு அவார்டு டைரக்டர் இருக்கிறார். பெயர் கூட ஜார்ஜ். நாவலில் வரும் ஜார்ஜ் ஆதர்ச நெறியாளுநர். ஜோசப் ஜேம்ஸை ஒத்த குறிப்பிடத்தக்க படைப்பாளி.

எண்பதுகளில் வந்த தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கு மைக்கேல், சூசை என்று கிறித்துவப் பெயர் சூடப்பட்டிருக்கும். அதே போல், அனால், குமரி மாவட்டத்தில் நிறைய மைனாரிட்டி இருப்பதாலும் நாவலில் புழங்கும் எதிர்மறை கதாபாத்திரத்திற்கு ஸ்டீபன் என்று பேர் வைக்கப்பட்டிருக்கிறது.

புனைவு எழுத்தாளர்களுக்கு எழுதக் கற்றுத்தரமுடியாது என்பது என்னுடைய தீவிரமான நம்பிக்கை. விசிறியிலிருந்து காற்றை வரவழைக்கலாம். வெளியில் வெக்கையடித்தால், விசிறியும் வேகும். ஆனால், மாலை நேர கடற்கரைக் காற்றில் (என்னதான் கார்பன் நச்சு கலந்திருந்தாலும்), அந்தக் காற்றை வாங்கப் போகும் சுகமே அலாதி. உணர்ச்சிகளை, உள்ளப் பிரவாகத்தை, ஆழ்மனக் கிடக்கையை அப்படியே தங்குதடையின்றி சொல்லிக் கொண்டு போகிறார்.

கன்னியாகுமாரியின் பிரச்சினைகள் என்று பார்த்தால் முன்னுரையில் உரிமை துறப்புகள் (சற்று இளைப்பாறும் பொருட்டு நான் எழுதிய நாவல் இது. இதன் எளிய கதை நகர்வின்…), உத்தம தமிழச்சியாக வந்துபோகும் நாயகி, சினிமாத்தனமாக இயங்கும் சில பெண் கதாபாத்திரங்களை சொல்ல வேண்டும்.

உரையாடல்களினாலும் எண்ணவோட்டங்களினாலும் சம்பவங்களினாலும் இயக்குநரின் மனைவி இரமணிக்கு கொடுக்கும் விவரிப்பும் அழுத்தமான சித்தரிப்பும் பிற பெண்களுக்கு உருவாகவில்லை.

ஆண்களின் குழப்பங்களைக் குறித்து அறிந்துகொள்ள வேண்டுமா? அவர்களின் வெளிப்படையான புன்சிரிப்புக்கு கீழே புதைந்து கிடக்கும் அழுக்குகளை அவசியம் ஆராய வேண்டுமா? ஆணாகிய நீ படித்தாலும் தன்னிரக்கத்தோடு தன்னல செய்கையை புரிய வைக்க முடியுமா? ‘ஜெமோ’வின் கன்னியாகுமரியை எடுங்கள்.

பிற விமர்சனங்கள்:

1. வ.ந.கிரிதரன்: இந் நாவலிற்கான கரு கி.ராஜநாராயணின் கன்னியாகுமரியை மையமாக வைத்துப் ,பின்னப் பட்ட சிறுகதைகளிலொன்றான ‘கன்னிமை’ என்னுமொரு சிறுகதையினை மையமாக வைத்து உருவானதாக நாவலின் நாயகன் ரவிகுமாரினூடாக நாவலாசிரியர் ஜெயமோகன் நினைவு கூருகின்றார்.

2. ஹரி வெங்கட்: ரவி மற்றும் வேணு ஆகியோர் வார்த்தைகளில் அவர் அறிந்த சினிமாவை பேசுகிறார். மேலும், “அவளை துளைத்து மறுபக்கத்தை அடைந்து மெத்தையின் வெறுமையை அடையலாம்”, எனும் வரியில் ஜெயமோகனின் காமம் தெரிக்கிறது.

3. ஜெயக்குமார்: பொதுவாக ஆண்களுக்கு முதிர்ச்சியான மனநிலை கொண்ட பெண்களைப் பார்த்ததும் ஏற்படும் பயமும் அவர்கள் பால் ஏற்படும் இனம் புரியாத பயமும் அவர்களை தவிர்க்க முடியாமல் நேசிக்கவும் செய்யாமல் செய்துவிடுகிறது.

தமிழ்ச் சிறுகதைகள்: ஆகஸ்ட் 2009

இந்த மாதம் படித்த கதைகளில் என் மனதை அசைத்துப் பார்த்து, கவனத்தை ஈர்த்து, உங்களுக்கும் குறிப்பிடத்தக்கவையாக இருந்த சில:

1. ஹரன்பிரசன்னா :: சொல்வனம் » அலை

நாவல்களிலே ஃப்ளாஷ்பேக் என்னும் வஸ்து சிரமமானது. சிறுகதையிலேயே நிகழ்த்தி காட்டுகிறார். சில வார்த்தைகள் கதையில் வரும்போது, அப்படியே நெகிழச் செய்து விடும். இங்கே ‘கந்தரப்பம்’. அப்படியே என்னை எங்கோ கொண்டு போய் விட்டது.

வம்பு கேள்வி: அதெல்லாம் சரி… ஹரன் பிரசன்னா ஏன் பைத்தியக்காரன் நடத்திய ‘உரையாடல்‘ போட்டியில் பங்குபெறவில்லை?

2. வ. ஸ்ரீநிவாசன் ::சொல்வனம் » உயிரிழை

முதல் வரியில் கதை முடிஞ்சுடணும் என்னும் கோட்பாட்டை பின்பற்றுகிறார். அந்த ஆரம்பத்தை வாசித்தவுடன் மேஜிகல் நியலிசமோ, குறியீட்டு இம்சையோ என்னும் பயத்தை அறவே போக்கியும் விடுகிறார்.

வம்பு கேள்வி: கதை கூட புரிஞ்சுக்கலாங்க. அது என்னங்க! அப்ஸ்ட்ராக்டா தோட்டா வட்டம் போட்ட படம்?

3. கர்ட் வானகட் :: சொல்வனம் » ஹாரிசன் பெர்ஜரான்மொழிபெயர்ப்பு :: விஷ்வநாத் சங்கர்

இம்சை இல்லாத மொழிபெயர்ப்பு. கதை ரொம்ப கவலைப்படுகிறது. கனவு லோகத்தில் சஞ்சரிக்கிறது. வெகு தீவிரமாக பிரசாரிக்கிறது.

வம்பு கேள்வி: கர்ட் வானகட் இப்ப இருந்தா ஒபாமாவின் உடல்நலத் திட்டமான சம்ச்சீர் ‘சேமநலக் காப்பீடு’ குறித்து என்னங்க சொல்லியிருப்பார்? அதற்கும் கத விட்டிருப்பாரோ!

4. கிச்சாமி | சத்யராஜ்குமார்.காம்

அமெரிக்க வாழ்க்கையை இவ்வளவு வெளிப்படையாக எழுதினால் தாங்காது சாமீ. ஆனாலும், நம்ம இணைய வாசகர்கள், கதையை கதையாகப் பார்க்காமல், ‘நீங்களா?’, ‘அப்படி சட்டம் கிடையாதே?’, ‘என் மனைவி அவ்வாறு இல்லையாக்கும்‘ என்று மறுமொழிவது தனிக் கதை.

வம்பு கேள்வி: கதைக்கு கீழே கருத்து சொல்ல முடியாம, வலைப்பதிவிலே தனியா இன்னொரு இடத்திலே பதில்பொட்டிய வச்சிருக்கீங்களே! ஏனுங்க?

5. நாகார்ஜுனன் :: திணை இசை சமிக்ஞை: 108

ஒரு கதை. அதை எப்படியெல்லாம் சொல்லலாம்? நாகார்சுனன் மறுமொழியில் இருந்து: தமிழ் எழுத்தாளர்கள் ஒரே ஸ்டைலில் பல கதைகளை எழுதியதை, எழுதுவதை (இதற்கு ஒரே major விதிவிலக்கு புதுமைப்பித்தன்) வாசிக்கிற, எழுதப்போவதையெல்லாம் வாசிக்கப்போகிற நமக்கு ஒரே கதையை பல ஸ்டைலில் எழுதினால் ஏன் வாசிக்க முடியாது..

வம்பு கேள்வி: உங்களுக்கு கதைக்கான கரு பஞ்சமா சார்? வேணும்னா நான் ரெண்டு knot சொல்லட்டுமாங்க!

6. முரளிகண்ணன் :: நீரோடை: துண்டு சிகரெட்

வெட்டிப்பயல் மாதிரி சொல்ணுமின்னா, இவரோட எழுத்து ‘சும்மா நல்லா இருக்கு நல்லா இருக்குனு சொல்லி போர் அடிச்சி போச்சி...’

வம்பு கேள்வி: உங்களுக்கு மெய்யாலுமே கற்பனை ஜாஸ்தியா? அல்லது நாட்குறிப்பை அப்படியே எழுத சங்கோசமா?

7. சித்ரன் :: நீரோட்டம் « புள்ளி

சமீபத்திய ‘கல்கி’ பத்திரிகையில் வெளியான கதை. சோடை போகுமா? நல்ல வேளையாக இந்த மாதம் கதை எழுதியிருக்கிறார். இவரெல்லாம் நம்ம லிஸ்டில் இருப்பது லிஸ்ட்டுக்கு பெருமைங்க.

வம்பு கேள்வி: அந்தக் கடைசி திருப்பம்தான் இதனுடைய மிகப் பெரிய உச்சம் என்றாலும், அப்படிப்பட்ட இறுதிவரி திகில் இல்லாவிட்டால், இந்தக் கதையை எப்படி முடித்திருப்பிர்கள்?

8. ஆல்பர்ட்டோ மொராவியா :: பறவையின் தடங்கள் » Blog Archive » உத்தரவிடு பணிகிறேன்மொழிபெயர்ப்பு :: நாகூர் ரூமி

மொழியாக்கம் என்பதெல்லாம் சொன்னால்தான் தெரியும். அப்படியொரு அசல் படைப்புக்கு நிகரான மொழி லாவகம். இன்னொரு முறை ஆசுவாசப் படுத்திக் கொண்டு வாசித்தால் உள்ளே பொதிந்திருக்கும் மற்ற விஷயங்கள் புலப்படும்.

வம்பு கேள்வி: கப்பலுக்கு போன மச்சான்‘ மாதிரி அடுத்த நாவல் எப்பங்க?

9. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: மெளன கோபுரம்

பறவைகள் விமானத்தில் மோதுவதால் அறுநூறு மில்லியன் டாலர் சேதம் ஆகின்றன. வானூர்தியில் வந்து விழும் பறவைக் கூட்டத்தின் மேல் 583 விபத்துகளின் பழியைப் போட முடியும். செத்த கணக்கு சேர்க்கவில்லை. இப்படியெல்லாம் புள்ளி விவரம் அடுக்குபவரை நேர்த்தியாக எதிர்கொள்ள உதவுவது புனைவுலகம். வாழ்வை சொல்லி, அதன் நியாயங்களை சரித்திர பூர்வமாக, கலாச்சார ரீதியாக புரிய வைக்கும் முயற்சிதான் இலக்கியம். இந்தக் கதை அந்த ரகம்.

வம்பு கேள்வி: உங்களுக்கு கதை எழுதுவது தவிர வேற எதாவது வேல உண்டுங்களா?

10. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: நண்டு சொன்ன `பெரியவங்க` கதை

வித்தியாசமான, அநாயசமான ஆரம்பம். கதை சொல்லி முடிக்கும் அவசரத்தில் நண்டு இருப்பதால், ஆசிரியரைப் பழிக்க வேண்டாம்.

வம்பு கேள்வி: நண்டு சொன்ன நாவலின் சுருக்கம் என்பதுதானே உண்மை?


தொகையறா

அந்தக் கால கவிதைகளில் தொகை (எட்டுத்தொகை போன்ற) நூல்களில் இருப்பதுதான் புகழ்பெற்று கோலோச்சுக்கிறது. அதே போல், இந்தக் கால சிறுகதைகளுக்கும் அறிமுகம் வேண்டுபவர், ‘நெஞ்சில் நிறைந்தவை‘ (சிவசங்கரி வானதி பதிப்பகம்), ‘முத்துக்கள் பத்து‘ (அம்ருதா பதிப்பகம்), ஐம்பதாண்டு கால தமிழ்ச் சிறுகதைகள் (சா. கந்தசாமி கவிதா பப்ளிகேஷன்ஸ்), ‘எனக்குப் பிடித்த கதைகள்‘ (பாவண்ணன்) போன்ற தொகுப்புகளையும் எஸ் ராமகிருஷ்ணன், சுஜாதா, ஜெயமோகன், க.நா.சு. இரா முருகன், போன்றவர்களின் பரிந்துரைப் பட்டியலையும் நாடுகிறார்கள்.

இவர்கள் எல்லோருமே சொல்லி வைத்தது போல் தற்கால இணைய எழுத்துகளை, வலையில் மட்டும் புழங்கும் தமிழ்ச் சிறுகதைகளை முற்றாக புறக்கணித்துவிடுகிறார்கள். இதற்கு நிவர்த்தியாக, தமிழ் வலையகங்களில் (சொல்வனம், திண்ணை, உயிரோசை, நிலாச்சாரல், தமிழோவியம், தமிழ்ப்பதிவுகள், இன்ன பிற) கிடைப்பதில் குறிப்பிடத்தக்க ஆக்கங்களை ஒரு இடத்தில் சுட்டி கொடுத்து தொகுத்தால் செமையாக இருக்கும்.

இணையத்தில் தடுக்கி விழுபவர்களுக்கும் பயனாக இருக்கும். இணையமே கதியாக கட்டுரைகளையும் ட்விட்டுகளையும் மட்டுமே வாசிக்கும் என் போன்றோருக்கும் உருப்படியான விஷயமாக இருக்கும்.

எழுத்தாளர் பெயரோ, எழுதியவரின் மூலமோ கூட தெரியாமல் போகலாம். ஆனால், நாளைய பின்னும் ‘முக்கியமான புனைவு’ என்று தேடினால் எளிதில் மாட்டும்.

Top 3, 10, 20 in உரையாடல் போட்டிக்கான கதைகள்: Quick Reviews

‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பின்’ சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளியாகி விட்டன.

போட்டி குறித்த பதிவுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன: Snap Judgement: Uraiyadal: Jyovram Sundar & Paithiyakkaaran Short Story Contests: Tamil Bloggers Fiction Competition Results

இனி வென்றதிலும் கலந்து கொண்டதிலும் நான் படித்த சில கதைகளும் கருத்துகளும்:

  • யோசிப்பவர்: பிரசன்னம்: கதை பிடித்திருக்கிறது; தலை பத்தில் இடம்பெற வேண்டும் என்று சொல்லுமளவு பிடித்திருக்கிறது. அறிவியல் இருந்தது. மாயாஜாலம் இருந்தாலும் நம்பக்கூடிய, அசர வைக்கும் முடிவு.
  • அம்மாவுக்குப் புரியாது – RV « கூட்டாஞ்சோறு: ஆர்.வி. நிறைய வாசிப்பவர். அவ்வளவு பரந்த வாசிப்பு, நல்ல சிறுகதையைத் தரும் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை என்பதற்கு இந்தக் கதை ஒர் உதாரணம். (உரிமைதுறப்பு: நானும் நிறைய இலக்கியம் படிப்பவன்; சிறுகதை எழுத வரவில்லை 😦 முடிவை மட்டும் நம்பும் புனைவு. தட்டையான விவரிப்பு. சுவாரசியமான வாசிப்பு என்பதாலும் இதை விட மோசமான கதைகள் கூட தலை 20ல் இடம் பிடித்திருப்ப்பதாலும், 250க்குள் பெஸ்ட் ஆக இருந்திருக்கும்!?
  • கவிதா | Kavitha: அப்பா வருவாரா?: வலையில் எழுதுபவர்களில் பெண் பதிவர்கள் வெகு குறைவு. எனவே, இட ஒதுக்கீடு என்னும் எண்ணத்தில் இந்தக் கதை தெர்ந்தெடுக்கப்படலாம். பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது தவிர இந்த ஆக்கத்தில் கரு கிடையாது; முடிச்சு கிடையாது; ரொம்ப மேலோட்டமான விவரிப்பு. கிழக்கு பதிப்பகம் புத்தகம் போட்டு, இணைய அறிமுகம் இல்லாதவர் இந்த மாதிரி கதைகள்தான் இணையத்தில் வலம் வருகிறது என்று எண்ண நினைத்தால், அது மிகப் பெரிய துரதிர்ஷ்டம். நான் ஆதவன்’ மறுமொழி அவசியம் வாசிக்க வேண்டும்.
  • நல்ல கதை என்பது பாஸ்டன் நகரத்து Deciduous மரம் போன்ற தன்மையுடையது. படிக்கும் போது பூப் பூக்கும் வசந்த காலம். முடிவு நெருங்க நெருங்க வண்ணம் மாறி மாறிக் காட்சியளிக்கும் இலையுதிர் காலம். பனிக்காலமாக கதை முடிந்த பிறகும், அந்த மரமாகிய புனைவு மனதில் நிற்க வேண்டும். வேறெங்கோ பச்சை பாசியைப் பார்க்கும் போதோ, சூரியோதய ஆரஞ்சை கவனித்தாலோ, அந்த மரம் உதிக்கும். கதையும் அது மாதிரி நிறம் பலகாட்டி நிலைத்து நிற்க வேண்டும்.

  • சேரல்: கருப்பு வெள்ளை: நீர் வழிப்படூஉம் புணை: எழுத்து என்றால் அப்படியே உள்ளே இழுக்கணும். இந்தக் கதை கொக்கி போட்டு கதையினுள் மூழ்க வைக்கிறது. தலை மூன்றில் இடம்பிடிக்கத்தக்க ஆக்கம். தெரிந்த பின்னணியைக் கூட வித்தியாசமான சித்தரிப்புகளும் விலாவாரியான விவரணைகளும் கொண்டு படம்பிடிக்கிறார். மேற்கோள் காட்ட தூண்டும் நடை:
  • வேட்டியைத் தூக்கிக் கட்டி இருந்ததில் கால்களிரண்டும், எலும்பும் தோலுமாகச் சப்பிப்போட்டது போல் தெரிந்தன.

  • நந்தவேரன் :: அவளாக இருந்திருக்கலாம் « Associated Directors of Tamil Movies: சும்மா துள்ளிக் கொண்டு போகிறது. நெஞ்சை லபக்கும் ஒயில் ஓட்டம். இராஜேஷ் குமாரும் பட்டுக்கோட்டை பிரபாகரும் கலந்தாலோசித்து எழுதிய கதையின் முடிவை சுஜாதா கொடுத்தால் எப்படி இருக்கும். தலை பத்து நம்ம சாய்ஸ்.
  • பட்டாம்பூச்சி விற்பவன் » Rejovasan » பெண்கள் இல்லாத ஊரின் கதை …: தலைப்பில் கதை சொல்லக் கூடாது என்பது எல்.கே.ஜி பாடம். அதுவும் இந்த , ¹ ‘??’ அடுக்கு கேள்விகளினால் தொக்கி நிற்கும் வினா, ² Ellipsis ‘…’, ³ ‘ஏதோ ஒரு உணர்வு’ போன்ற ஃபீலிங்ஸ் சிதறல், ஆகியவை தவிர்த்து, விரிவாக்கவேண்டும் என்பது அரிச்சுவடி. புதியவர்களுக்கான இட ஒதுக்கீடாக இந்த மாதிரி சின்ன விஷயங்களை விட்டுவிடலாம். மிக நல்ல முஸ்தீபு. அதை விட சிறப்பான premise. ஆனால், சொல்வதற்கு தடுமாறுகிறார். வார்த்தை தேர்வுக்கு அகராதியைத் துணைக்கழைக்கலாம்; அல்லது வாசிப்பை விரிவாக்கலாம். மிக மிக அருமையான முயற்சி. முயற்சி மட்டுமே.

பார்ப்பதற்கு பளபளவென்றிருக்கும் பழுதாகிப்போன பார்க்கர் பேனாவை விட, படபடவென் எழுதும் பால்பாயின்ட் பேனாவே மேல். திறமை இருக்கிறது. ஆசை இருக்கிறது. அவசரமும் நிறையவே இருக்கிறது. உழைக்கத் தெம்பில்லை. உங்களுக்கு இராமநாதன் கிருஷ்ணன் தெரிந்திருக்கும். அமிர்தராஜ் சகோதரர்கள் கூட அறிந்திருப்பீர்கள். திறமை என்பது கஷ்டப்படுவதாலும், வாய்ப்பு கிடைப்பதாலும் மட்டும் எட்டப்படுவதில்லை.

  • ஸ்ரீதர் நாராயணன் :: ஒருபக்கம்: காதோரமாய்: எனக்கு நரசிம்ம ராவைத் தெரியும் என்று பீற்றிக் கொள்வது மாதிரி, நான் orupakkam அறிவேன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்பட வைக்குமாறு கதைகள் எழுதுபவர். ‘என்னமா எழுதறாரு?!’ என்னும் மலைப்பிலேயே ஒட்டக்கூத்தராய், என் கதைகளை ட்ராஃப்டிலேயே வைத்திருக்க வைப்பவர். இது தலை மூன்றில் இடம்பிடிக்கத்தக்க கரு + விவரிப்பு + முடிவு.
  • வெட்டிப் பயல்: வாழையடி வாழை: சென்ற ஆசிரியரின் இடுகை போலவே எதிர்பார்ப்புடன் எதிர்கொண்ட கதை. வெட்டி பாலாஜியின் குட்டிப் பாப்பா இதை விட சிறந்த ஆக்கம். விவாதப் பொருள் தரும் அழுத்தம், புதுமையான தற்காலச் சூழல் போன்றவற்றில் மேலும் சிறப்பானதால், அதுதான் தலை பத்தில் இடம்பிடிக்கும் என்று கணித்திருந்தேன். ஜெயகாந்தன் காலத்து சித்திரத்தை, இந்த இணையக் காலத்தில் எவரும் இவ்வளவு நேர்த்தியாய் தரவில்லை என்றாலும், ஃப்ரெஷ்னெஸ் லேது.
  • இரா வசந்தகுமார் :: என் பயணத்தின் பிம்பங்கள்…!: மனையியல்.: வெளியானவுடன் வாசித்தது. அப்போதைக்கு இதுதான் #1. இப்போதைய வாசிப்பிலும் தலை மூன்றில் ஒன்று. மிக கச்சிதமாக, சொல்ல வந்ததை ஆயிரம் வார்த்தைக்குள் முழுமையாக கொடுப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார்.
  • நுனிப்புல்: அவள் பத்தினி ஆனாள்- ராமச்சந்திரன் உஷா: நான் ரா.கா.கி., தமிழோவியம் எழுத ஆரம்பித்தபோது இவரும் திண்ணை, கல்கி என்று சூறாவளியாக நுழைந்ததால், ‘என்னோடு எழுத வந்தவர்’ என்று சொல்லிக் கொள்ளப் பிரியப்படுபவர். ஆனால், நான் இன்னும் ஆங்காங்கே எழுதிக்கொண்டிருக்க, இவரோ அமெரிக்காவின் ஆக்ரோஷத்தோடு புதிய எல்லைகளைத் தொட்டு, பன்னாட்டு இதயங்களைத் தொட்டு, பல எல்லைக்கோடுகளைத் தாண்டி எங்கும் ஆக்கிரமிக்கும் ஆற்றலுடையவர் என்பதற்கான ஒரு பதம், இந்த ஆக்கம். தலை மூன்று இடம்பிடிக்க வேண்டும்.
  • மைய விலக்கு « இன்று – Today :: சத்யராஜ்குமார்: பரிந்துரை முன்பே எழுதியாச்சு
  • அகநாழிகை: தற்செயலாய் பறிக்கப்பட்ட ஒரு மலர் – அகநாழிகை வாசுதேவன் : நான் கூட எதையாவது கிறுக்கியிருந்தால், பேரை வைத்து மிரட்டியே தலை இருபதிற்குள் இடம்பிடித்திருக்கலாம் என்னும் நப்பாசையைத் தூண்டிய புனைவு. அச்சுப் புத்தகத்தில் இடம்பெறும் அருமையான வாய்ப்பை கோட்டை விட்டுட்டோம் என்னும் வருத்தம் மட்டுமே இந்தப் புனைவைப் படித்தவுடன் மேலோங்கியது.
  • ட்விட்டரில் சொன்னது: Tht piece lacked freshness, was more adjective oriented, pretentious & preachy.

  • இவள் என்பது பெயர்ச்சொல்: வழியனுப்பிய ரயில் – உமாசக்தி: வாசித்து ரொம்ப நாளாகி விட்டது. தேர்வாகும் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஓரளவு நல்ல கதை. ஆனாலும், முழுமை உணர்வு கிட்டவில்லை. ரொம்ப அவசரப்படுத்தும் அவஸ்தை. இன்னும் கொஞ்சமாவது காரண காரியங்களின் அஸ்திவாரம் இல்லாததால் ஆட்டம் கண்ட கதை.
  • தமிழன் – காதல் கறுப்பி...: மலைகளில் காணாமல்போன தேவதைகள்…: இது மெஜிக்கல் ரியலிஸம் என்பதை விட உள்மன கிடக்கையை எழுத்தில் கொணரும் முயற்சி. வித்தியாசமான பெயர்கள், அதிகம் அறிந்திராத தலம் போன்றவற்றிற்காக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம். மற்றபடிக்கு ‘பாய்ஸ்’ படத்தில் ஃபேண்டசி கதைகளை அவிழ்த்துவிடும் குண்டுப் பையனிடம் ஜொள்ளொழுக கேட்பதையொத்த அனுபவம்.
  • நீரோடையில் தக்கை…: வள்ளியம்மையின் பழுப்பு கண்கள் – புபட்டியன்: பதின்ம வயதினரின் பருவக் கோளாறையும் ஃபேன்டசியையும் செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ முன்னோட்டத்தையும் பார்த்து சூடு போட்டுக் கொண்ட கதை.
  • நந்தாவிளக்கு: நான் அல்லது நான் – நந்தா குமாரன்: அசத்தலான ஆரம்பம். அடைப்புக்குறி ஆரம்பத்தில் கடுப்பேற்றினாலும், போகப் போக சுவாரசியத்தைக் கூட்டியது. ஆனால், தமிழ்ப்படத்தில் இரு வேடம் தரிப்பது போல் இரண்டு ‘நான்’களுக்கும் போதிய கதாபாத்திர வடிவமைப்பு இல்லாமை அலுக்க வைக்கிறது. முடிவில் கொஞ்சம் தட்டி கொட்டி மேலும் உருப்படியாக கொணர்ந்திருக்கலாம். என்னுடைய தலை இருபதில் நிச்சயம் இடம் உண்டு.
  • வெண்ணிலா பக்கங்கள்: நீரும் நெருப்பும்: பிடித்திருந்தது. ஏற்கனவே இது போன்று பல ஆக்கங்கள் வாசித்திருந்தாலும், போட்டிக்கு வந்ததில் இது போல் ஒன்று தேர்ந்தெடுக்கப்படுவது வெகு பொருத்தம். தலை பத்து.
  • GURU: காத்திருத்தல் – சரவணன்.P: எளிமையான வடிவம்; உள்ளடக்கம். அதைக் கொணர்ந்த விதம் சிறப்பு. நடுவர்கள் தீர்ப்பளித்திருக்காவிட்டால் தவறவிட்டிருப்பேன். தலை பத்து.
  • கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் – நிலா ரசிகன் :: சிறுகதைகள் & பாடல்கள: நிறைய கதை இருப்பதால் நிறைந்த உணர்வைக் கொணர முடியாது. வாய் முழுக்க தண்ணீரை வைத்துக் கொண்டு பேச முடியுமா? ‘அச்சமில்லை… அச்சமில்லை’ ஆரம்பித்து பார்த்த ஆதிகால ஆதிச்சநல்லூர் கருவின் அத்தியாய சுருக்கங்கள்.
  • எண்ணச் சிதறல்கள்: அம்மாவின் மோதிரம் – எம் ரிஷான் ஷெரீப் : பிடித்திருந்தது. வித்தியாசமான பொறுமையான நடை. தலை பத்து.

பரிந்துரை: இரண்டு இணையத்து சிறுகதைகள்

சமீபத்தில் இரு நல்ல புனைவு வாசிக்க கிடைத்தது. அவை:

1. சத்யராஜ்குமார் :: மைய விலக்கு « இன்று – Today

2. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: தேவதைகள் காணாமல் போயின – சிறுகதை

அவற்றை முடித்து விட்டு இந்தப் பதிவைப் படிப்பது கதைகளுக்கு நீங்கள் செய்யும் ஷேமம்.


மேற்கோள் மூலை

ச.ரா.குமார் கதையில் இருந்து கவர்ந்த இரு இடங்கள்:

அ) இன்பாக்சில் நிஷா அனுப்பிய மின்னஞ்சல். ரொம்பவும் கோபமாகி விட்டால் நிஷா இமெயிலில்தான் பேசுவாள். பத்து கிலோ பைட்களுக்கு திரையில் தெரிந்தது அவள் கோபம்.

ஆ) ‘நீயும், நிஷாவும் ஏன் இப்படி கஷ்டப்படணும்? பார்த்துக்க ஆயிரம் பேர் இருக்காங்க. இங்கே நிறைய சொகுசு இருக்கு. ஆனா லைஃப் இல்லை. நாலு சுவத்துக்குள்ள நாம நாலு பேருமே முகத்தைப் பார்த்துக்கிட்டு… மெட்ராசுக்குப் போயிரலாம்டா.’


ரா.கி.யில் கவர்ந்தவற்றிற்கு சாம்பிள்:

அ) ஜீரணமாகாத உணவை தள்ள முயற்சிப்பதுபோன்ற கடலின் முயற்சி ஒவ்வொறு முறையும் அலையென தோற்கும் காட்சி வியப்பானதே. எதைஎதையோ விழுங்குவதும், பின்னர் எதுவுமே தெரியாதுபோல் கிடப்பதும் இதற்கு வாடிக்கையாகிவிட்டது.

ஆ) ஜப்பான் நாட்டவர்களின் முகவடிவம், எங்கு ஆரம்பித்தாலும் கூர்மையான தாடையிலேயே விழும்.


ஆறு வித்தியாசங்கள்

இரு கதைகளுமே அதிர்ச்சி அல்லது வித்தியாசமான முடிவில் நம்பிக்கை கொண்டவை. இரு கதைகளுக்குமே அது தேவையில்லை என்பது வேறு விஷயம்.

ஒன்று போட்டிக்காக எழுதப்பட்டது. மற்றொன்று அந்தவித நிர்ப்பந்தங்களுக்குட்பட்டு உருவாகாவிட்டாலும், போட்டியில் கலந்துகொள்வதற்கான முஸ்தீபுகளும் முகாந்திரங்களும் நிறைந்தது.

வார்த்தைகளின் விளிம்பில் நிற்பவரிடம் கதை ஜாஸ்தி. இன்று – டுடேவிடம் மூக்கு மேல் வரவைக்கும் விவாதப்புள்ளிகள் ஜாஸ்தி.


விமர்சனம்

சத்யராஜ் கதையில் விமர்சிக்க விஷயம் ஏதுமில்லை. பட்டிமன்றம் மாதிரி இன்னும் கொஞ்சம் எண்ணவோட்டமோ, உரையாடல் மன்றமோ கட்டி, மெரீனா பீச் மணல் அளவு வியாபிக்க கூடிய சமாச்சாரத்தை சுண்டல் மாதிரி பொட்டலம் கட்டி இருக்கிறார்.

குறைந்த பட்சம் அந்த மின்னஞ்சலையாவது அனுபந்தம் ஆக்கி இருக்கலாம் என்னும் ஏக்கம் இருக்கிறது.

oOo

காதலியின் நினைவுகள் என்று இன்னொரு கதை எவராவது எழுதினால் அலுவலை நோக்கி(யே) வடக்கிருக்கலாம் என்று எண்ணுமளவு அலுத்துப் போன டாபிக்கில் பூந்து விளையாடியிருக்கிறார் கிரி. சம்பிரதாயமான ஆரம்பம்.

இத்தினியூண்டு கதையில் உலாவும் அத்தனை பாத்திரங்களுக்கும் மனதில் நிற்கும் அறிமுகங்கள். தண்ணீரில் மிதக்கும் ப்ளாஸ்டிக் ஆக, கவிஞர்களே உவமைகளுக்கு பஞ்சம் பாடும் இந்தக் காலத்தில் சக்கையான தக்கை கொண்ட மிதவையான உறுத்தாத பயன்பாடு அமர்க்களம்.

அப்படியே, ‘நான் அந்தக் காலத்தில் லால் கிலாவில் இப்படித்தான்…’ என்று காதலி காலடி தேட வைப்பதே கதையின் வெற்றி.

இருவருக்கும் என் நன்றி.

குத்திக்கல் தெரு – அறிமுகம்

இதற்கு முன்பு தமிழோவியத்தில் இரு குறுநாவல் வெளியாகியுள்ளது. அவை:
1. கங்கை இல்லாத காசி
2. சுய சாசனம்

இப்பொழுது ‘குத்திக்கல் தெரு‘:

அ) நாவல் – பாகம் 1

ஆ) இரண்டாம் பகுதி

நாவலின் முதல் பகுதிகளுக்கு உங்கள் விமர்சனம் என்ன?

ஆர். வெங்கடேஷ் – மூன்று கதை

ஆர். வெங்கடேஷ் சமீபத்தில் எழுதிய கதைகள் கிடைத்தது. வாய்ப்பைத் தவறவிடாமல் விமர்சனம்.

இலகுவான வாசிப்புக்கு ஏற்றவை. வாசகனுக்கு சிரமம் தராத நடை. தற்கால இடங்களும் நகரத்தின் விரிவாக்கங்களும் பின்னணியாக உள்ளது. பதைபதைக்கும் விறுவிறுப்பு கிடைக்காது. சுவாரசியத்திற்கும் பஞ்சமில்லை.

~oOo~

temple-elephant-sundar-venkatesh-story-heroஅழகான பெண் வேண்டும்!

‘நான் விசுவலாகத்தான் இதை விளக்க முடியும்’ என்று மார்க்கரும் போர்டுமாக அலைபவரா நீங்க?

அப்படியானால் சுந்தர் நம்மவன். அசகாயமாக செய்து முடிப்பதை பேச்சில் சூரத்தனம் இல்லாமல் கருமமே தொடர்ச்சியாக காலங்காலமாக நடத்த விதிக்கப்பட்டவன்.

அமெரிக்காவின் திருப்பதியாம் நயாகரா நீர்வீழ்ச்சிப் பயணத்தை நினைவூட்டுகிறார். விச்ராந்தியாக உடற்பயிற்சிக்குப் பின்னுள்ள களைப்புற்று உட்காரும்போது தெய்வம் பிரசன்னமாகி அருள்பாலிக்கிறார்.

~oOo~

காதலென்பது…

lovers-lane-together-college-bikes-hold-hands-valentine‘இதயமே! இதயமே! உன் மௌனம் என்னைக் கொல்லுதே!’ என்று முகாரி தலை ராகம் பாடும் இளசு.

இப்பொழுதைய தலைமுறை ‘அதிரடி’ என்பது அதீதமான கற்பனை. இன்று தாடி வளர்க்காமல், தம்/தண்ணி அடித்து பூச்சி மருந்து அருந்தாமல் மருகும் கல்லூரி மாணவனின் களம்.

தெரிந்த முடிவை நோக்கிய பயணம்: கதையிலும் கதைநாயகனிலும்.

~oOo~

தொடரும்…

lonely-top-busy-lazy-rest-actress-story-flickrஅது யாரு சிம்ரனா? மீனா? மாதுரி தீக்சிட்?

முன்னாள் நடிகை நாடகம் பார்க்கும் கதை. அழுத்தம் குறைவு. சம்பவங்களினால் கோர்க்காமல் விவரிப்பில் வளர்வதால் மனதில் எதுவும் வெண்பஞ்சு snowஆக உரசாமல் பனிக்கட்டியாக இடறுகிறது.

மூன்று கதைகளில் இது கொஞ்சம் ஏமாற்றம் தரும் ஆக்கம்.

~oOo~

வெங்கடேஷ் சிறுகதைத் தொகுப்பு வெளியாகி உள்ளதா? அடுத்த கலெக்சன் ரெடி என்று பட்சி சொல்லுகிறது.

என்னைப் போன்ற புதிய எழுத்தாளர்கள, எழுத முயல்பவர்கள் கற்றுக் கொள்ள இந்தக் கதைகளை மனனப் பகுதியாக ஈராறு முறை படிப்பது நலம்.

எவ்வாறு காட்டாறாக துவங்குவது, ஆரம்பித்த வேகத்தை சீராக்குவது, பின்னோக்கி ஃப்ளாஷ்பேக் சொல்லிவிட்டு, அடுத்த காட்சிக்கு கதாசிரியர் சென்றுவிட்டதை எங்ஙனம் உணர்த்துவது, சொற் சிக்கனம், வடிவ நேர்த்தி, என்று சிறுகதையின் சூத்திரங்களைத் தெளிய உதவலாம். இதெல்லாம் சித்திக்காவிட்டாலும் நல்ல கதை படித்த திருப்தி கிட்டும் என்பதற்கு நான் கியாரண்டி.

ஆரஞ்சிப் பழம்

uncoil-hand-life-orange-eat-enjoy-live-hunger

இது நேற்று கனவில் நடந்தது. நிஜமாகவே.

“அரிவராசனம் விச்வமோஹனம்”

மின்விளக்கு அணைத்த அகல்விளக்கு இருளில் பஜனை. ஜிப்பாவும் ஜீன்ஸ் பேன்ட்டும் போட்டிருக்கிறேன். ”

ஓம் சக்தி! ஆதிபராசத்தி!!”

ஐயப்ப சாமிமார் கூட்டமா? மேல்மருவத்தூர் வழிபாடா? சந்தேகம் தெளிந்தது.

“ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர”.

என்னிடம் மட்டும்தான் மேல்சட்டை. மற்ற எல்லாரும் திறந்த மார்புடன் தோற்றமளிக்கிறார்கள்.

சர்வமத மையத் தலைவர் என்னை நோக்குகிறார்.

“போலோ ஜெய் ஸ்ரீ சத்ய சாய்பாபாஜி கீ ஜே!”

கனவில் கூட நான் இப்படி எக்குத்தப்பாக வரமாட்டேனே? எப்படி மாட்டிக் கொண்டேன்?

“முதல் முறையா மகனே?”

இல்லை என்பது போல் மேலும் கீழும் தலை ஆடுகிறது.

brain-mandarin_orange-fruit-petal-individual-flickr“நீங்கள்தான் அடுத்த பாபா என்று கடவுள் கை காட்டியுள்ளார். உங்களிடம் இரு ஆரஞ்சிப் பழத்தை ஒப்புவிக்கவும் கட்டளை இட்டுள்ளார். நம்மை வெகு விரைவில் அசுரர்கள் தாக்கவுள்ளனர். அப்போது நாம் ஸ்தம்பித்து நிற்க இந்த முதல் ஆரஞ்ச் உதவும். மனிதர் பிரமை பிடித்தது போல் நிற்பதால் குழம்பிப் போகும் எதிரி சோர்வுற்று ஓய்ந்து போவர். அவர்கள் மறைந்த பின் இரண்டாவது ஆரஞ்சு கொண்டு எம்மை உயிர்ப்பிக்கவும்”.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் மாதிரி ரம்மியமான குரலில் தேஜஸான சர்ஃப் சால்வை அணிந்தவர் சொல்லிவிட்டு பஜனையில் மூழ்கிவிட்டார்.

நான் அடுத்த பாபா ஆகிவிட்டேனா? கையில் இரண்டு ஆரஞ்சு இருந்தது. பரிசோதித்துப் பார்ப்போமா?

ப்ரொடக்சனுக்கு செல்வதற்கு முன் எந்த சாஃப்ட்வேரையும் டெவலப்மன்ட்டில் சோதனை செய்து விடுவேனே! அதே மாதிரிதானே? ஒரு முறை டெஸ்ட் செய்து ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பார்த்துவிடுவோம்.

முதல் பழத்தை விட்டெறிய எல்லோரும் வீழ்ந்தார்கள். பயந்து போய் உடனடியாக இரண்டாவதையும் போட்டு அனைவரையும் தெளிவித்தேன்.

அதே ஸ்ரீஸ்ரீ; எதிரொலிக்கும் தியானக்குரலில் கடுமை துளிக்கூட இல்லாமல் வருகிறார்.

hold-me-please-sun-orange-world-baba-flickr“என்ன காரியம் செய்தாய் மகனே? இதில் கூடவா நம்பிக்கை இல்லை? என்னிடம் இரு ஜோடி ஆரஞ்சி மட்டுமே உள்ளது. இதுதான் மனிதகுலத்திடம் உள்ள கடைசி காபந்து பழங்கள். இதையாவது பத்திரமாய் வைத்து எம்மை பாதுகாப்பாய்”

வெகு சிரத்தையுடன் இரு கையில் ஒன்றாய் வைத்திருக்கிறேன். காலை பஜனை பிற்பகலிலும் வெகு ஜோராகத் தொடர்கிறது.

என்னைப் பார்த்து அந்தச் சிறுமியும் சிறுவனும் ஓடி வந்தார்கள்.

“சார்! ரொம்பப் பசிக்குது. மயக்கமா வருது. நைவேத்தியம் செய்யாம எதுவுமே கொடுக்க மாட்டேங்கிறாங்க. அந்தப் பழத்தைத் தந்தா வயித்தைக் கிள்ளும் பசி கொஞ்சமாவது தீரும்.”

ஆளுக்கொன்றாக கொடுத்துவிட்டேன். புசித்து விட்டார்கள்.

விழித்துக்கொண்டேன்.

விகடன் அவார்ட்ஸ் 2008

நன்றி: Twitter / nklraja
வெளியான இதழ்: ஆனந்த விகடன்
தொடர்புள்ள விருது: நிலாரசிகன் கவிதைகள்..: நிலா விருதுகள் 2008

இலக்கியம்

சிறந்த நாவல்: காவல் கோட்டம் (சு. வெங்கடேசன்)
சிறந்த சிறுகதை தொகுப்பு: தவளைகள் குதிக்கும் வயிறு (வா.மு.கோ.மு)

சிறந்த கவிதை தொகுப்பு: தண்ணீர் சிற்பம் (சி.மோகன்)
சிறந்த கட்டுரை தொகுப்பு: குழந்தைகளுக்கு சாத்தான் பெரியவர்களுக்கு கடவுள் (லஷ்மி மணிவண்ணன்)

சிறந்த வெளியீடு: திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (கவிதாசரண் வெளியீடு)
சிறந்த சிறுபத்திரிக்கை: தலித் முரசு (ஆசிரியர்: புனித பாண்டியன்)


திரைப்படம்

சிறந்த இயக்குநர்: மிஸ்கின் (அஞ்சாதே)
சிறந்த படம்: அஞ்சாதே
சிறந்த தயாரிப்பு: மோஸர் பேயர் (பூ)

சிறந்த நடிகை: பார்வதி (பூ)
சிறந்த நடிகர்: கமலஹாஸன் (தசாவதாரம்)

சிறந்த புதுமுக நடிகர்: சசிகுமார் (சுப்ரமண்யபுரம்)
சிறந்த புதுமுக நடிகை: ருக்மணி விஜயகுமார் (பொம்மலாட்டம்)

சிறந்த குண நடிகர்: ராமு (பூ)
சிறந்த குண நடிகை: ரம்யா நம்பீஸன் (ராமன் தேடிய சீதை)

சிறந்த நகை நடிகர்: நாசர் (பொய் சொல்ல போறோம்)
சிறந்த நகை நடிகை: சரண்யா மோகன் (யாரடி நீ மோகினி)

சிறந்த இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ் (தாம் தூம், வாரணம் ஆயிரம்)
சிறந்த பாடலாசிரியர்: தாமரை (வாரணம் ஆயிரம்)

சிறந்த பின்னணி பாடகர்: ஹரிஹரன் (நெஞ்சுக்குள் பெய்திடும்)
சிறந்த பின்னணி பாடகி: ஷ்ரேயா கோஷல் (முகுந்தா முகுந்தா)

சிறந்த ஒளிப்பதிவாளர்: ரத்னவேலு (வாரணம் ஆயிரம்)
சிறந்த படத்தொகுப்பு: பிரவீன் ஸ்ரீகாந்த் (சரோஜா)

சிறந்த கதை: ச.தமிழ்செல்வன்: (பூ)
சிறந்த திரைக்கதை ஆசிரியர்: கமலஹாஸன் (தசாவதாரம்)
சிறந்த வசனம் : சி.பி.நாராயணன், ஆர். சுப்ரமணியன் (அபியும் நானும்)

சிறந்த சண்டைப் பயிற்சி: கனல் கண்ணன் (பீமா)
சிறந்த நடன இயக்குநர்: தினா (கத்தாழ கண்ணாலே)
சிறந்த ஒப்பனை: பானு, யோகேஷ், வித்யாதர் (வாரணம் ஆயிரம்)

சிறந்த கலை இயக்கம்: தோட்டா தரணி , எம். பிரபாகரன், சமீர் சந்தா (தசாவதாரம்)
சிறந்த ஆடை வடிவமைப்பு: நளினி ஸ்ரீராம் (வாரணம் ஆயிரம்)


சிறந்த விளையாட்டு வீரர்: விஸ்வநாதன் ஆனந்த்
சிறந்த விளையாட்டு வீராங்கனை: இளவழகி (கேரம்)

சிறந்த பயிற்சியாளர்: ஃப்ராங்க் (உயரம் தாண்டுதல்)


தொலைக்காட்சி

சிறந்த சேனல்: விஜய் டிவி
சிறந்த டிவி நிகழ்ச்சி: மானாட மயிலாட

சிறந்த தொகுப்பாளர்: கோபிநாத் (நீயா நானா)
சிறந்த தொகுப்பாளினி: சின்மயி (சூப்பர் சிங்கர் – விஜய் டிவி)

சிறந்த நெடுந்தொடர்: திருமதி. செல்வம் (சன் டிவி)


வானொலி

சிறந்த பண்பலை: ஹெலோ FM

சிறந்த பண்பலை தொகுப்பாளர்: அஜய் (ரேடியோ மிர்ச்சி)
சிறந்த பண்பலை தொகுபாளினி: ஒஃபீலியா (பிக் FM)


இன்ன பிற
சிறந்த விளம்பரம்: மேக்ஸ் நியூயார்க் லைஃப்
சிறந்த மோட்டார் பைக்: யமஹா RI5
சிறந்த கார்: நியூ ஹோண்டா சிடி
சிறந்த செல்பேசி: ஆப்பிள் 3ஜி ஐபோன்

கிருஷ்ணா! கிருஷ்ணா!

மலந்துடைக்க தாள்களை கடகடவென பறித்த சமயம் திரௌபதியை துச்சாதனன் துகிலுரிந்தது நினைவுக்கு வருகிறது.
10:33 AM Nov 20th

அதே போன்ற இன்னொரு மலங்கழிக்கும் இடம். ஆத்மார்த்தமாக தியானித்து நச்சுகளை வெளியேற்றுகையில் கிருஷ்ணனே வந்துசேர்ந்தார்.

‘என்னடா! நீ ‘ஒன்லி விமல்’ சூட்டிங், ஷர்ட்டிங் பார்த்தது இல்லையாடா?’

‘ஏஞ்சாமி?’

‘அங்கே கூட இப்படி துணிக்கட்டுகளை பண்டில் பண்டிலாக அடுக்கி வைத்திருப்பார்கள். எண்பதுகளின் தமிழ்நாட்டு கோ ஆப்டெக்ஸில் இதைப் பார்த்தவன் நீ. இருந்தும் ஏன்டா என்னோட இன்சிடென்ட்டை வம்புக்கு இழுத்தாய்?’

‘உங்கள எங்க சாமி உள்ளே இழுத்தேன்? நான் துச்சாதனன். வெள்ளைப் புடைவையாக பேப்பர். கொடுத்தது காஸ்ட்கோ; வாங்கி வைத்தது நான்; தயாரித்தது ஸ்காட் கம்பெனியாம்’.

த்வைதம் பேசுகிறாயா? டாய்லெட் பேப்பருக்காக மரத்தை வெட்டியது தவறு என்பாய். அங்கு மீண்டும் பச்சை தழைக்காவிட்டால் க்ரீன்பீஸ் கொண்டு போராட்டம் நடத்துவாய். தண்ணீரைக் கொட்டி ஃப்ளஷ் செய்யாதே என்றும், அதை அப்படியே வைத்திருந்து உரமாக்கலாம் என்றும் பேதம் பாராட்டுவாய்!’

‘சாமீ! ரொம்ப விக்கிப்பீடியா பக்கம் போகாதீங்க. அப்படியே டெமொக்ரசி நௌ எல்லாம் வேணாம்.’

‘அது இருக்கட்டும். மீண்டும் கேட்கிறேன். அள்ள அள்ளக் கொடுத்தவன் கிருஷ்ணன். பத்து தடவை பீ பெய்தால் தீர்ந்து போகும் உருளையோடு ஒப்பிடலாமா?’

‘முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க சாமீயோவ். கிறித்துவம், இஸ்லாம் போன்ற மதங்கள் த்வைதத்தின் அடிப்படையிலும் புத்தம், ஜெயினம் எல்லாம் கடவுள் அபவாதம் என்னும் அத்வைதம் போதிக்குதா?’

‘முதலில் பிரபத்தியை அணுகு மகனே. சர்வமும் சித்திக்கும்’

‘யூ மீன் பாப்பாத்தி?’

‘பிரபத்தி என்றால் பரிபூரண சரணாகதி அப்பா’.

‘எது எப்படியோ. பிரபத்தி பேர் நல்லாருக்கு. அடுத்த தமிழ் ஹீரோயினுக்கு வெச்சுக்கலாம். அதற்கப்புறம் அவளை சரணாகதி அடைஞ்சா மோட்சம் வருமே.’

‘எனக்கு மீராபாய்தான் சரி. நான் ஜூட்.’

பக்கி, நிக்கி, ஜெ.கி.

ஜெயகிருஷ்ணனுக்கு வெறுப்பாக வந்தது.

ஒவ்வொரு ராத்திரியும், அர்த்த ராத்திரியில் அழும் குழந்தைக்கு நிப்பிள், இளஞ்சூட்டில் பால், டயாபர் மாற்றுதல் என்று சகல சிஷ்ருஷைகளும் செய்துவிடுவது போல் ஒவ்வொருவரும் எழுதியிருந்தார்கள். எல்லாக் கதைகளிலும் அன்னிய புருஷர்கள் ஏவுகணை வேகத்தில் பறந்தார்கள்.

ஏதேதோ மொழி பேசி, நிலவுக்கும் திருநள்ளாறுக்கும் நடுவில் திரிசங்குவாகி, நிமிஷ நேரத்தில் ஐஐடி+ஐஐஎம் குழந்தை பெற்று, தண்ணியில்லாக் காட்டில் மாமி மெஸ் மாத்திரை முழுங்கி, குப்பை நகரங்களில் உலவி வந்த மனிதர்களின் கதைதான் வலைப்பதிவுகளில் கிடைத்தது.

பக்கத்தில் இருந்த பறவை மானிட்டர் அலறியது. படித்துக் கொன்டிருந்த அறிபுனைவுக் கதையை அப்படியே விட்டுவிட்டு பறவை பக்கம் சென்றார்.

“பாஸ் இல்லாவிட்டால் லன்ச்சுக்கு காணாமப் போகிற மாதிரி இரண்டு மணி நேரமாக என்னைப் பார்க்கவே வரவேயில்லையே?” – இது பச்சைக்கிளி.

“அப்படியில்லடா பக்கி. ‘மனுசங்களுக்குப் புரியற மாதிரி எழுதுவதில் எந்த கிரகவாசி சிறந்தவர்?’ போட்டிக்கு வந்திருந்த மேட்டர் எல்லாம் படிச்சிண்டிருந்தேனா! அப்படியே தூங்கிட்டேன். குழந்தை அழற மாதிரி கனவு. ரொம்ப நாளா வளராம அப்படியே இருக்கிற குழந்தை. அழுதுண்டே இருக்கு. யார் எடுத்து டான்ஸ் ஆடினாலும் அழறத நிறுத்த மாட்டேங்குது. ‘வரந்தந்த சாமீக்கு பதமான லாலி’ பாட்டை மட்டும் பதினெட்டாயிரம் மொழியில் பாடறோம். எதற்கும் அடங்கல. மூஞ்சியெல்லாம் செவந்து போச்சு. அப்படி ரத்தக் கண்ணீர். நரகத்தில் பிண்டம் துடிக்கிற மாதிரி இருக்கு. கருட புராணத்தில் வருமே? அந்த மாதிரி குட்டிக் கைவிரல் சைஸில் முகம்.”

“உன்னை விட்டால் அந்தக் காலத்தில் வெண்பா பாடத் தெரிஞ்சவன் எல்லாம் நாலடியில் டயலாக் விட்ட மாதிரி இருநூறு பக்கத்துக்கு குழந்தைப் புராணம் எழுதுவே!” – இது நீலக்கிளி.

“அந்த மாதிரி எழுத இப்ப யாரு இருக்கா நிக்கி? ஒவ்வொண்ணுத்தையும் இக்கினியூண்டு இக்கிணியூன்டா ஆராஞ்சு, ருசிச்சு, சக்கைய கொடுத்து, வாசகனத் திளைக்க வைக்கணும். அதானே மனுசனுக்குப் பிடிச்ச கத? நம்ம தாத்தன், பாட்டன் வாழ்ந்த கலாச்சாரம்! அன்னனின்னிக்கு நடக்கிற வாழ்க்கையின் சுவாரசியம்; உன்னிப்பா கவனிச்சு, உறவுக்குள்ள நடக்குற கலவரங்கள சொல்லணும். எத்தன மக்கள் இருந்திருக்காங்க! சுயநலம், பச்சாதாபம், பேராச பிடிச்ச பொருளாதார பித்து முதல் அடுத்தவ வீட்டுக்குள்ள நுழையற மோகம் என்று ஒவ்வொரு குழந்தையும் ஒரு விதம்!”

“ரி-நாய்-சென்ஸ் மாதிரி இவங்க எல்லாம் புது ட்ரெண்ட் உருவக்கறாங்கன்னு நீ ஏன் நெனைக்கக் கூடாது?”

“பெட்ரோல் தீர்ந்துபோச்சுன்னு கைவிரிச்ச காலத்தில் வண்டியோட்னவனுக்குத்தான் பெட்ரோலோட அருமை தெரியும். நீயே படிச்சுப் பாத்து நொந்தாத்தான் உனக்கு வெளங்கும்.”

“எங்களுக்கும் கொடுத்தா நாங்களும் படிப்பம்ல?”

“அதுதான் பெஸ்ட் நிக்கி. இதுவரைக்கும் வந்த இருபது கதைகள்ல பகல் பத்தை பக்கி படிக்கட்டும். இராப்பத்தை நீ படி நிக்கி”.

“அப்படீன்னா… உனக்கு யாரு தாலாட்டுப் பாடறது?”

நிக்கியைப் பார்த்து ஜெய கிருஷ்ணன் கண்ணை சுழற்றினார். ஒலி 96.8 ஆக தமிழ் பண்பலை போட்டுக் கொண்டார்.கைவிரலை தாளமிட்டவுடன் சத்தம் சரியாக வைக்கப்பட்டது. கண்மூடிய நிலையில் ஓடிய கருவிழிகளில் திரைப்படத்தையும் ஒளிர விட்டுக் கொண்டார்.

ஜெயகிருஷ்ணன்.

சுருக்கமாக ஜெ.கி. அருகிவரும் இலக்கிய உலகில் மீதமிருந்த ஒரே இலக்கியவாதி. தேடல்களினால் ஆய பயன் எதுவும் இல்லை என்று முடிவெடுத்த யுகத்தில் தப்பிப் பிறந்த இவரை சனிக்கிரகம் கண்டுபிடித்து தன் பார்வையில் வைத்து இரஷிப்பதற்குள் ஏழரை நாட்டு உலகத்துக்கே சென்றுவிட்டவர்.

‘கீக்கீக்கீ’ என்று கத்திக் கொண்டிருந்த பச்சைக் கிளியை பக்கி என்று பெயரிட்டு பேசிவருபவர். ‘கூக்கூக்கூ’ என்று கூவிக் கொண்டிருந்த நீலக்கிளியில் பீத்தோவன் தொட்டு பரத்வாஜ் முதற்கொண்டு பீட்டில்ஸ் வரை பாட வைத்து நிக்கியாக்கிக் கொண்டவர்.

இதற்கெல்லாம் மின் சாதனங்கள் இருக்கின்றனவே என்ற மானுட ஜாதியினரிடம் புழு பூச்சிக்கும் முனைவர் அறிவு உண்டு என்பதை உலகறிய ஓதியதால் தூக்கு மேடை வரை சென்று, மீண்டு, நிரூபிப்பதில் வாழ்நாள் ஆராய்ச்சியாளர் ஆனவர்.

பக்கத்தில் இருந்த பறவை மானிட்டர் அலறியது. ஆராய்ந்து கொன்டிருந்த புழு, பூச்சிகளின் ஆறறிவை அப்படியே விட்டுவிட்டு பறவை பக்கம் சென்றார்.

“பன்றியா மறுபிறப்பெடுத்த ரிஷி பழைய பொறப்ப மறந்தே போன மாதிரி இரண்டு மணி நேரமாக என்னைப் பார்க்கவே வரவேயில்லையே?” வரவேற்றது பச்சைக்கிளி.

அறிவியல் சிறுகதைப் போட்டி