3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது?
மெக்கெய்னுடைய ஒரேநிலைப்பாடு எப்பாடுபட்டாவது அதிபர் ஆவது. அவருக்கு இதுவே கடைசி வாய்ப்பு.
மெக்கெய்னைப் பற்றி அதிகமாக அறியாத காலத்தில், அதாவது 2000 ஆம் ஆண்டுத் தேர்தலின்போது, அவர் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது. இப்படிப்பட்ட ஒரு அனுபவமிக்க மிதவாதியைப் புறக்கணித்து கத்துக்குட்டித் தீவிரவாதி புஷ்ஷை தேர்ந்தெடுத்திருக்கிறார்களே என்று அவர் மீது பரிதாபம் கூட இருந்தது.
மெக்கெய்ன்-ஃபெய்ன்கோல்ட் தேர்தல் நிதி சட்டம், மெக்கெய்ன் – கென்னடி குடியேற்றச் சீர்த்திருத்த மசோதா போன்றவற்றில் அவர் பங்காற்றியபோது அவருடைய ‘மேவரிக்’ பிம்பம் மீது ஒரு கவர்ச்சி இருந்தது.
தேர்தல் மீது ஒரு கண்வைத்து கடந்த சில வருடங்களாக புஷ்ஷின் ஒவ்வொரு சொல்லையும், செயலையும் ஆதரிக்க ஆரம்பித்ததிலிருந்து தற்போது ஒபாமாவின் மீது சேறு வாரி இறைக்கும் தேர்தல் உத்திவரை மெக்கெயினின் நடவடிக்கையைப் பார்த்தால் அவர் மீது இருந்த மரியாதை முற்றிலுமாக மறைந்துவிட்டது.
அவருடைய நிலைப்பாடுகள் எதுவும் இப்போது நிலையானதாக தெரியவில்லை. அடிக்கடி மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம் குடியேற்ற சீர்த்திருத்தம்.
இரண்டாண்டுகளுக்கு முன்னர் டெமாக்ரடிக் செனட்டர் எட்வர்ட் கென்னடியுடன் இணைந்து குடியேற்றச் சீர்த்திருத்தச் மசோதாவை அறிமுகப்படுத்தியவர் முதற்கட்ட வேட்பாளர் தேர்தலின்போது கன்சர்வேடிவ்களின் வாக்குகளை மனதில் வைத்து அதைப் பற்றி பேசவே மறுத்தார்.
பிறகு லத்தினோக்களின் வாக்குகளை மனதில் வைத்து குடியேற்றச் சீர்த்திருத்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார். பிறகு மீண்டும் மாற்றிக்கொண்டார். எப்படியாவது இந்த தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் பல விஷயங்களில் முன்னுக்குப் பிறகு முரணாக பேசிக்கொண்டிருக்கிறார்.
அவருடைய நிலைப்பாடு மாறாமலிருப்பது ராணுவவிஷயங்களில் மட்டுமே. எனக்கு இவ்விஷயங்களில் ஆர்வமில்லை.
4. இந்த இருவரும் இல்லாமல், இன்னொருவர் ஜனாதிபதியானால் சரியாக இருக்கும் என்று சொல்ல நினைத்தால் எவரை கைகாட்டுவீர்கள்? எதற்காக?
முதல் கேள்வியில் சொன்னமாதிரி ரால்ப் நேடரைச் சுட்டிக்காட்டலாம். பெரிய கட்சிகளில் இருந்து தான் வரவேண்டுமென்றால் ஜனநாயகக் கட்சியில் இருந்து ஹில்லரியும், குடியரசுக் கட்சியில் இருந்து மைக் ஹக்கபியையும் காட்டுவேன்.
முதற்கட்ட வேட்பாளர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக ஹில்லரியே வெற்றி பெற வேண்டுமென்று விரும்பினேன்.
என்னுடைய எதிர்பார்ப்பு ஹில்லரி அதிபராகவும், அவருடைய துணை அதிபராக நியூ மெக்சிகோ ஆளுநர் பில் ரிச்சர்ட்சனும் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என்று இருந்தது. ஹில்லரி வேட்பாளராக தேர்வாகாதது ஏமாற்றமாக கூட இருந்தது.
காரணம் ஹில்லரி, ஒபாமா இருவரது அனுபவம், வயது வித்தியாசம்.
பல பிரச்சினைகளில் இருவரது நிலைப்பாடுகளும் ஒரே மாதிரியிருந்தாலும், இந்த வாய்ப்பை விட்டால் ஹில்லரிக்கு அல்லது அவர் போன்ற முற்போக்கு பெண்ணுக்கு இன்னொரு வாய்ப்பு அடுத்த சில தேர்தல்களில் கிடைப்பது அரிது. அவரது தோல்வியின் எதிரொலி இப்போதே தெரிந்துவிட்டது.
அவருக்கு மாற்றாக ஒரு பிற்போக்குப் பெண்மணி முன்னிருத்தப்படுகிறார். இது என்னைப் பொருத்தமட்டில் ஒரு பெண் அதிபராவதற்கு பின்னடைவைத் தான் ஏற்படுத்தும்.
ஒபாமா இளம்வயதுக்காரர். இன்னும் சில ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்று ஹில்லரிக்குப் பிறகு 2016 இல் இப்போதிருப்பதை விட இன்னும் தீவிரமாக, அனுபவ முதிர்ச்சியோடு களமிறங்கினால் நிச்சயமாக வெற்றி பெறுவார். இத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் அது முழுக்க அவரது வெற்றி என்று சொல்ல முடியாது.
ஜார்ஜ் புஷ்ஷின் எட்டாண்டு ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியும், தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளும் ஒபாமாவுக்கு பெருமளவு உதவியாக இருக்கப்போகிறது.
5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா? வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை? எவ்வாறு வேறுபடுகிறது?