296ஆம் இதழை – சொல்வனம்.காம் புதிய பதிப்பை – கவிதை குவிமைய இதழ் எனலாம்.
முகப்புக் கட்டுரையாக நம்பி கிருஷ்ணன். நான் அறிந்ததெல்லாம் ஷெல்லி, ஷேக்ஸ்பியர். இவர் வழக்கம் போல் தெரிந்து கொள்ளத்தக்க, வாசிக்க வேண்டிய மற்றுமொரு முக்கியமான எழுத்தாளரை ரசித்து, விதந்தோதுகிறார்: ”*எலிசபெத் பிஷப்*: இரு மொழிபெயர்ப்புகளும் சில குறிப்புகளும்”
அடுத்ததாக, மீனாக்ஷி பாலகணேஷ். ஆங்கிலத்தில் அரவிந்தரை வாசிக்க இலகுவாக இல்லை என்று சொன்னவுடன், அவரின் உன்னத காவியமான ஊர்வசீயை அழகுத் தமிழில் கொணர்ந்திருக்கிறார். இந்திய இலக்கியம் பலவிதமான தொன்மங்கள் மற்றும் புனைவுகளில் நிறைந்துள்ளது. அதில் அப்ஸரசுகளுக்கு முக்கிய சிம்மாசனம் உண்டு. இங்கே ரிக் வேதத்தில் வந்த புராணக் கதையை கவிதையாக்கின ஸ்ரீ அரவிந்தரை தமிழாக்கம் செய்துள்ளார்.
காம்பின்றித் தானே மலர்ந்த மலரென ஊர்வசியை வர்ணிக்கிறார். அவள் இந்தியக் கவிகளை வரலாறு நெடுகிலும் கடுக்க முடியாத வலிமையுடன் ஈர்க்கும் தன் கவர்ச்சிக்கு உட்படுத்தியிருக்கிறாள். ஸ்ரீ அரவிந்தர் இவ்விஷயத்தை மிகமேம்பட்ட முறையில் தீட்டியுள்ளார். இக்காவியத்தின் மாண்பு அவலச்சுவை அடங்கியிருக்கும் நிலையிலோ காமத்தின் வெறியுணர்ச்சி துடிதுடிக்கும் நேரத்திலோ, ஓவ்வொரு நிலையிலும் வெளிப்படுகின்றது.
உட்பொருளானது இரு காதலரும் தாம் தகுதியுடன் பெற்ற இன்பத்தைக் கடந்து இருக்கின்றது. உண்மையாகவே, புரூரவஸ் மரணத்திற்குட்பட்ட இம்மண்ணுலக மானுட நிலையிலிருந்து மரணமிலாத் தேவர் வாழும் விண்மண்டலத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளான். காதலர் இப்புவியை அடியோடு துறந்து விட்டனர். ஆயினும், கீழே தொலைவிடத்தில் மோனம் நிறைந்ததும் வல்லமை வாய்ந்ததுமான அண்டவெளியின் ஊடே பசுமை நிறைந்ததும், விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் உடையதுமான இப்பூமி இடைவிடாமல் சுழன்று கொண்டேதான் வருகின்றது.
சுழல்வது என்றவுடன் 300ஆம் இதழ் நினைவிற்கு வருகிறது. நீங்கள் வாசித்த புதிய எழுத்தாளர்களை, தற்கால புனைவுகளை, சமீபத்திய புத்தகங்களைக் குறித்து எழுதி விட்டீர்களா?
உடனடியாக அவற்றை solvanam.editor@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
சொல்வனம் பத்திரிகை இதழ் எப்பொழுதும் புது எழுத்துகளைச் சிறப்பிக்கும் இதழாக அமையும். புதியவர்களையும் இளையவர்களையும் பற்றிய கட்டுரைகளை வரவேற்கிறோம். ஆர்வமுள்ள வாசகர்கள், தங்கள் என்ன தலைப்பில், எதைக் குறித்து எழுதப் போகிறோம் என்பதை எங்களுக்கு solvanam.editor@gmail.com தெரிவியுங்கள்.
அனைத்து இதழிலும் பிரபலமடைந்த எழுத்தாளர்கள் சிலரோடு, அத்தனை பிரபலமாகாத பல எழுத்தாளர்களையும் வாசக கவனத்திற்குக் கொண்டு வர முனைய வேண்டும். என்னவெல்லாம் எழுதலாம் என்று யோசித்தவுடன் தோன்றிய எண்ணங்கள் இவை:
அ) இரண்டு குழுக்களாக வயதையொட்டிப் பிரித்துக் கொண்டு அவர்களின் படைப்புகளை மொத்தமாக அணுகலாம். இருபது வயது முதல் முப்பது வயது வரையிலானவர்கள்; முப்பதில் இருந்து நாற்பது வயதை எட்டியவர் வரை – இந்த இரு தலைமுறையினரில் எவரெவரை நீங்கள் வாசித்து இருக்கிறீர்கள்? அவர்களுக்கு இடையேயான ஒற்றுமைகள் என்ன? அந்தப் புனைவுகளை எவ்வாறு விமர்சனப் பூர்வமாக அணுகுகிறீர்கள்?
ஆ) கடந்த பத்தாண்டுகளில் உங்களைக் கவர்ந்த மூன்று முக்கியமான நூல்கள் என்ன? கட்டுரையில் வித்தியாசமான முறையில் அணுகுகிறார் என்று எவரைச் சொல்வீர்கள்? சிறுகதைத் தொகுப்பில் எதையெல்லாம் விரும்பி வாசித்தீர்கள்?
இ) முகப் புத்தகம் (ஃபேஸ்புக்), உடனடி எழுத்து (ஃப்ளாஷ் ஃபிக்ஷன்), குறுங்கதை என்றெல்லாம் எழுதித் தள்ளுபவர் எவர்? அவற்றில் எது நெஞ்சில் நிற்கின்றன?
ஈ) கவிதைகள்: ஹைக்கூ, திரைப்பாடல், யாப்பு இலக்கணத்திற்கு உட்பட்ட வெண்பா, டிவிட்டர் குறுமொழிகள் என்று பல வகைகளில் ஒவ்வொன்றிலும் உங்களைக் கவர்ந்த ஆக்கங்கள் என்ன? ஏன் அந்தக் கவிதைகள் உங்களுக்கு நெருக்கமாகின?
உ) தினசரி எவரை வாசிக்கிறீர்கள்? எப்பொழுதாவது மட்டுமே ஒருவர் எழுதினாலும், எவர் எழுதியதை தவறவிடாமல் வாசிக்கிறீர்கள்? அத்தி பூத்தது போல் எழுதுபவர்கள் யார்? காட்டுமல்லியாகப் பூத்துக் குலுங்குவது யார்?
ஊ) எந்த முன்னணி எழுத்தாளர்கள் எவரைப் பரிந்துரைக்கிறார்கள்? அவர்களின் முக்கியமானப் படைப்புகள் என்ன? எவர் அச்சுலகில் புத்தகங்கள் நிறைய வெளியிட்டிருக்கிறார்? அவற்றில் எது இலக்கியத் தரமானது?
எ) யுவ புரஸ்கார், இளம் எழுத்தாளர் விருது போன்ற பட்டியல்களில் இருந்து நீங்கள் நாவல்களையும் கதைகளையும் தேர்ந்தெடுத்து வாசித்து, உங்கள் பார்வைகளை முன்வைக்கலாம்.
ஏ) காலச்சுவடு, உயிர்மை, தமிழினி, யாவரும், டிஸ்கவரி, சந்தியா, கிழக்கு, வல்லினம், நற்றிணை, புலம், எதிர், சிக்ஸ்த் சென்ஸ், எழுத்து, ஜீரோ டிகிரி , விடியல், தேநீர், சீர்மை, செங்கனி இன்ன பிற – புதிய எழுத்தாளர்களை எவர்கள் வெளியிடுகிறார்கள்? எந்தப் புனைகதைகளை வாசித்து இருக்கிறீர்கள்?
ஐ) நீங்கள் சிறுகதைகளைப் படிக்கிறீர்களா? கேட்கிறீர்களா? ஒலிப்புத்தக வடிவில் எதை ரசித்து உள்வாங்கினீர்கள்? கிளப்ஹவுஸ், டிவிட்டர் ஸ்பேசஸ் போன்ற தளங்களில் உங்களின் இலக்கிய கருத்துக்களையும் வாசக விமர்சனங்களையும் பதிவிடுவது உண்டா?
ஒ) புனைவு எழுதுவது என்பது செயல்பாடு; ஒரு சார்பு நிலையை எடுப்பது. அதற்கு சமூக ஊடகங்களில் தன் கொள்கை சார்ந்த நிலை எடுத்து பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையைப் பெருக்குதல் அவசியம். இந்த வகையில் பிரபலமாக இரட்டைக் குதிரை சவாரி செய்பவர்கள் யார்? அவர்களின் எழுத்துக்களை எப்படி மதிப்பிடுவீர்கள்?
ஓ) கதை மீறும் கதை, நாடகம், மொழியாக்கம், மாந்திரீக எதார்த்தம், பேய்க்கதை, துப்பறியும் கதை, காதல் கதை, அறிபுனைவுகள், வரலாற்றுப் புனைவு, மர்மக் கதை, தொன்ம மருவுருவாக்கம், திகில் கதை, பதின்ம வய்தினருக்கான ஆக்கம் – இவற்றில் ஒவ்வொரு வகையிலும் எந்தப் புத்தகங்களை பரிந்துரைப்பீர்கள்?
ஔ) கதைகளின் செவ்வியல் மற்றும் நவீன வடிவங்கள், உலக மொழிகளிலும், தமிழிலும் நிகழ்ந்துவரும் பரிசோதனை முயற்சிகள் என்ன?
இணையத்தில் எத்தனை உள்ளடுக்குகள் இருந்தாலும் எதுவொன்று சுழித்து மேலெழுந்து வருகிறதோ, அதுவே பார்வையில் விழுந்து உணர்வைத் தொடுகிறது. ஒரே சமயத்தில் ஒரு பெரும் களஞ்சியமாகவும் பொங்கிப் பெருகும் புதுவெள்ளத்தின் குமிழாகவும் நித்தியத்தையும் நிலையின்மையையும் தன் இயல்பாய்க் கொண்டது இணையம். அச்சுக்கு உரிய நேர்த்தொடர்ச்சி இணையத்தில் இல்லை, அதன் போக்கு சுழன்று விரிவது. உரையாடல்களும் எதிர்வினைகளும் பகிர்தல்களுமே இணையத்தில் உள்ள படைப்புகளுக்கு உயிர் அளிக்கின்றன. எனவே வாசகர்கள் புதிய படைப்புகள் குறித்து தொடர்ந்து பகிர்ந்து உரையாட வேண்டுமென்றும் எழுத்தாள நண்பர்கள் தம் பங்களிப்பை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
எந்த ஒரு இதழுமே படைப்புகளால்தான் கவனம் பெறுகின்றது. #solvanam அந்தப் படைப்பாளிகளின் மொத்த பங்களிப்பைக் குறித்த அறிமுகத்தையும் விமர்சனத்தையும் வரவேற்கிறது. இந்த இதழுக்குப் பல நண்பர்களும் படைப்பாளிகளும் ஒத்துழைக்க அழைக்கிறோம்.
உங்கள் தொடர்ந்த நல்லாதரவிற்கு மனமார்ந்த நன்றி. உங்கள் எண்ணங்களை எடிட்டருக்கு அனுப்பவும்- அவரது மின் அஞ்சல் முகவரி இது – solvanam.editor@gmail.com
கல்கி பதில்: “கதை எழுதுவதை விடக் கட்டுரை எழுதுவதுதான் நல்லது என்பது என்னுடைய அபிப்பிராயம். ஏனென்றால், கதை எழுதுவது கஷ்டம். கதை எழுதுவதற்கு முதலாவது கதை ஒன்று வேண்டும். அது கிடைப்பது லேசல்ல. பிறகு அதை வைத்துக் கொண்டு சுவாரஸ்யமாக எழுத வேண்டும். கொஞ்சம் காது மூக்கு வைக்கலாமே தவிர, கதையின் மத்திய சம்பவத்தை விட்டு அதிக தூரம் போக முடியாது. இன்னொரு பெரிய தொந்தரவு இருக்கிறது. கதையென்றால் ‘நன்றாயிருக்கிறது. இல்லை’ என்பதாகச் சுலபமாய்ப் பத்திரிகையாசிரியர் தீர்மானித்து விடுவார். பத்திரிகாசிரியர் மீது பழி வாங்கும் விருப்பம் உனக்கிருந்தால் கட்டுரை எழுதுவதுதான் நல்லது. அது சுலபமும் கூட…
கட்டுரை எழுதுவதற்கு வரம்பு ஒன்று வைத்துக் கொள்வது அவசியம் இல்லை. எதிலேயோ பிடித்து, எதிலேயோ முடிக்கலாம். கட்டுரையின் தலைப்புக்கும், கட்டுரையின் விஷயத்திற்கும் சம்பந்தம் இருக்கவேண்டிய அவசியமில்லை. இந்தச் சம்பந்தம் எவ்வளவுக்குக் குறைவாயிருக்கிறதோ, அவ்வளவுக்கு நன்றாயிருப்பதாய் ஜனங்கள் எண்ணிக் கொள்வார்கள். அத்தகைய கட்டுரைகளைப் பார்க்கும் பத்திரிகாசிரியர்களும் கொஞ்ச தூரம் படிப்பதற்குள் குழப்பமடைந்து விடுவார்கள். அதைப் படிக்கும் தொல்லையை விடப் பிரசுரித்து விடுவது நல்லதென்று தீர்மானித்து விடுவார்கள்!”
*
தமிழில் சிறு பத்திரிகைகள்: வல்லிக்கண்ணன்
கேள்வி: “பத்திரிகாசிரியர்களுக்கு எவ்வாறு கடிதம் எழுத வேண்டும்?”
கல்கி பதில்: “கீழே சில நகல் கடிதங்கள் கொடுத்திருக்கிறேன். அவைகளில் ஏதேனும் ஒன்றைத் தழுவிக் கடிதம் எழுதலாம்:
* இது என் ஆயுளிலேயே நான் முதன் முதலாக எழுதியது. ஆதலால், இதில் குற்றங்குறைகள் இருந்தாலும் சீர்திருத்தி வெளியிட்டு ஊக்கமளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
* அன்பீர்! சென்ற முப்பத்திரண்டு வருஷ காலமாய் நான் பல தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் விஷயதானம் புரிந்து வைத்திருக்கிறேன் என கட்டுரைகள் வெளிவந்த பத்திரிகைகள் எல்லாம் மாண்டு போயின. நான் மட்டும் உயிரோடிருக்கிறேன். ஆகையால், இத்துடன் அனுப்பியுள்ள கட்டுரையைத் தவறாது வெளியிடவும்.
* என் வாழ்நாளில் ஒரு கட்டுரையாவது எழுதிப் பத்திரிகையில் வெளியிட வேண்டுமென்பது என் ஜீவிய மனோரதம். ஆகையால், இந்தக் கட்டுரையை அடுத்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி இதழில் அவசியம் வெளியிட்டு என் மனோரதத்தை நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.
* மானேஜர் அவர்களுக்கு, நான் உங்களுடைய 17,235-வது சந்தாதாரர். இந்தக் கதையை நீங்கள் வெளியிட்டால், எங்கள் சிநேகிதர்களிடம் சொல்லி, அவர்களையும் சந்தாதாரராகச் செய்வேன்.
* ஐயா! நான் ஒரு ஜரிஜனன். உங்கள் பத்திரிகை ஹரிஜனங்களுக்காகப் பாடுபடுவது உண்மையானால், நான் அனுப்பி இருக்கும் இந்தக் கட்டுரையைப் பிரசுரிக்க வேண்டியது. இல்லாவிட்டால், உங்களுடைய குட்டு வெளியாகிவிடும்!
*
– ஆனந்த விகடன் 15.01.1933 ‘யார் தெரியுமா? நான்தான்!’ என்னும் தலைப்பில் வெளியானது
எழுத்தாளர் அம்பையைக் குறித்த தமிழ்.விக்கி பதிவை பார்த்தேன். அதன் பிறகு கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவையும் பார்த்தேன்.
இரண்டுமே திருப்தி தரவில்லை. இரண்டிலுமே கணக்கு இருக்கிறது. மாற்றங்களைச் செய்யலாம். அதன் பிறகு அந்தப் பரிந்துரைகளை திருத்துவோரும் ஒப்பளிப்பவரும் சான்றுரைஞரும் தாண்டி வர வேண்டும். வந்தாலும் நிலைக்க வேண்டும்.
அம்பை என்றால் புயல்.
அம்பை என்றால் ஸ்பாரோ.
அம்பை என்றால் காலச்சுவடு பேட்டி.
அம்பை என்றால் இயக்கம், செயல்பாடு, வேகம், பூரணம்.
இதையெல்லாம் முழுமையாக அம்பை ஈடுபடுவது போல் கச்சிதமாக, முழுமையாக எழுதவேண்டும். இதையெல்லாம் நினைத்தால் கூகிளே சிறப்பென தோன்றுகிறது.
என். ஆர். தாசன் என்பவரைத் தேடுகிறீர்கள். இவருக்கு பெரிய இலக்கிய இடம் இல்லை. கண்ணதாசன் பத்திரிகையில் எழுதிக் குவித்தவர். கே.என்,சிவராமன், பாவை சந்திரன், கோலப்பன், மணா, நா.கதிர்வேலன், கடற்கரய் போல் அந்த நாளில் பரவலாக அறியப்பட்டவர். சிறுபத்திரிகை ஆசிரியர். புத்தக, பத்திரிகை உலகில் தெரிந்திருந்தவர்.
இந்த இதழாளர்களை, எழுதிக் குவிப்பவர்களை, அன்றைய பா. ராகவர்களை நினைக்கும்போது தாமரை மணாளன் நினைவிற்கு வந்தார். அவருக்கும் எந்த விக்கியிலும் இடமில்லை. அசல் விக்கிபிடியாவைத் தேடினேன். அங்குமில்லை; புதிய ஜெயமோகன் விக்கியிலும் இடமில்லை. தாமரைமணாளன் – பொன். பாஸ்கர மார்த்தாண்டன் என்று பக்தி சொட்ட பரணீதரன் ஆக மாறுவார். சுஜாதா மாதிரி ‘கல்கி’ இதழில் சில்லுக்கருப்பட்டி தொடர் எழுதுவார்.
விடியல் இலக்கிய இதழ் – பெண் எழுத்தாளர்களின் ஆக்கங்களை தாங்கி வெளியாகி இருக்கிறது.
இந்த இதழில் என் அம்மாவின் பேட்டியைக் கேட்டு வாங்கிக் கொண்டார் புதுவை ரா. ரஜினி. அவரின் தொடர்ச்சியான நினைவூட்டல்களும் நிலையான உறுதிப்பாடும் விடாமுயற்சியும் இல்லாவிட்டால் இந்த நேர்காணல் சாத்தியமாகி இருக்காது.
பலரும் இலக்கியம் என்றால் இன்ன வரைமுறை என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிலருக்கு ஆதர்சங்கள் – தலைவர்களைப் போன்ற ஆளுமைகள். சிலருக்கு கொள்கைகள் – மார்க்சியம், பெண்ணியம், சுற்றுச்சூழல் சிலக்கு கட்சிகள் – திராவிடம், கம்யூனிசம், இந்துத்துவம் சிலருக்கு கோட்பாடுகள் – முதலியம், சமத்துவம், சூழலியம் சிலருக்கு இயக்கன் க்கள் – செம்மொழி இயல், அறிவொளி இயக்கம், அபத்தவியல், இருத்தலியல், கட்டமைப்பு இயல், புனைவியல், புது புனைவியல், எதார்த்தம், மீ எதார்த்தம், நவீனத்துவம், பின் நவீனத்துவம், பின்காலனியத்துவம், பின்-பின் நவீனத்துவம்
இதெல்லாம் நம்பிக்கை சார்ந்தது. புதுவை எழுத்து என்றில்லாமல் எல்லோருக்கும் இடம்; புகழ் பெற்றவர்கள் என்றில்லாமல் அனைவரையும் அனைத்துப் போகும் குணம்; சுமார், பரவாயில்லை என்று பூரணத்துவத்தை மட்டும் எதிர்நோக்காமல் ஊக்குவிக்கும் மனோபாவம் – இதழுக்கும் இதழாசிரியர்களுக்கும் என் நன்றிகளும் வாழ்த்துகளும்.
குழந்தை இலக்கிய எழுத்தாளர் ஆர். பொன்னம்மாள் பேட்டியைப் படிக்க வாருங்கள். சந்தா கட்டுங்கள். ஆதரியுங்கள்!
தமிழினி, கனலி, வல்லினம், யாவரும், உயிர்மை, வாசகசாலை என சொல்வனத்திற்கு வெகுகாலம் பின்னர் உருவாகி வந்த எல்லா இதழ்களுக்கும் ஃபேஸ்புக்கில் / சமூக ஊடகத்தில் வலுவான தளம் உள்ளது.
பிற தளங்களில் இருக்கும் நடைமுறையை அனுசரிக்க வேண்டுவது
இந்தப் பதிவு கனலி வலைத்தளத்திற்கான பரிந்துரைகள் மட்டுமே என்றாலும் சொல்வனம் உட்பட அனைத்து வலைத்தளங்களுக்கும் சுட்டுவது
பொறுப்புத் துறப்பு
சொல்வனம் போன்ற தளங்களிலும் இதே போல் பல குறைகள் இருக்கின்றன. அவற்றில் சில்வற்றையாவது பொதுவெளியில் உரையாடலுக்கு நேரம் கிடைக்கும்போது முன்வைக்கிறேன்.
சொல்வனம் போன்ற தளங்களில் இருக்கும் குறைகளையும், அந்தத் தளங்களை மேம்படுத்தும் ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். வெப் அட்மின் ஆக இருப்பதால், நம் குறைகள், நமக்கேத் தெரியாமல் போகின்றன.
இந்தப் பதிவில், கனலி தளைத்தில் வெளியான மொழியாக்கத்தின் தரம், புனைவுகளின் முக்கியத்துவம், கட்டுரைகளின் செறிவு போன்றவற்றை கவனிக்கவில்லை. அதற்கு இன்னொரு தடவை அனைத்து விஷயங்களையும் மீண்டும் கனலியில் வாசித்து விட்டு வருகிறேன்.
மேம்படுத்த வேண்டியவை
1. வலது பக்க மவுஸ் பொத்தான் இயங்கவில்லை
ரைட் க்ளிக்கை கனலி அனுமதிப்பதில்லை. நான் ஒரே சமயத்தில் நாலைந்து டாப்-களைத் திறந்து படிப்பவன். வலது பக்க சொடுக்கை நீக்குவதால் எந்த வித லாபமும் கிடையாது. இதனால் காப்புரிமையை பாதுகாக்க முடியாது. திருட நினைப்பவர்கள் எப்படி இருந்தாலும் மேட்டரை உருவி விடுவார்கள்.
இது ஒரு மோசமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.
தேடுவதில் கூட பிறிதொரு இடத்தில் எழுதியதை, வெட்டி எடுத்து, ரைட் பொத்தானை சொடுக்கி ஒட்டுவது பலரின் வழக்கம். இன்றைக்கு கணினியில் இப்படியெல்லாம் எழுத்தைப் பாதுகாக்க முடியாது. உங்களின் எழுத்து அதிகம் வாசிக்கப் பட வேண்டும்; அதன் மூலம் வருவாய் வர வேண்டும் என எண்ணுவது நியாயமே. அதற்கான வழிகள் பல உள்ளன. அதையெல்லாம் நாடாமல், ரைட் க்ளிக்கை நீக்குவது முடக்கும் செயல்பாடு.
நமக்குப் பிடித்த விஷயங்களை மேற்கோள் காட்ட இந்த காபி + பேஸ்ட் நுட்பத்தை பயன்படுத்துகிறோம். நறுக்குகளை சேமிப்பது என்பது காலந்தோறும் நாம் படிக்கும் வழக்கம். புத்தகத்தின் வெள்ளையோரங்களில் குறிப்பு எழுதி வைப்போம். அவ்வாறு ரசித்த சொற்றொடர்களை பிரதியெடுக்கும் வசதி கொடுக்காமல் இருப்பது அக்கிரமம்.
இவ்வளவு சொல்லிவிட்டு எப்படி சரக்கை சுடுவது என்று சொல்லாமல் இருப்பது உகந்ததல்ல. கனலியில் இருந்து கோப்பை எடுப்பது மிக எளிது:
கண்ட்ரோல் + எஸ் பொத்தானை அமுக்குங்கள். அதன் மூலம் உங்கள் கணினியில் மேட்டர் இறங்கும்.
அதை உங்களின் நோட்பேட் போன்ற எடிட்டரில் திறக்கவும்
இப்பொழுது வேண்டிய விஷயங்களை வெட்டி எடுத்துக் கொள்ளலாம்
இதற்கென்றே பிரத்தியேகமான நிரலிகள் எக்கச்சக்கமாய் இருக்கின்றன – அவற்றையும் பயன்படுத்தி, மொத்த தளத்தையும் கூகிள்/யாஹூ/மைக்ரோசாஃப்ட் பிங் போன்ற தேடுபொறிகள் உருவுகின்றன
கனலியில் இந்த மாதிரி சுடுவது எளிது. பிரதிலிபி போன்ற தளங்கள் இந்த மாதிரி மோசமான கெடுபிடிகளின் அடுத்த கட்டம். அவர்களிடமிருந்தும் ஸ்க்ரீன் ஸ்க்ரேப் செய்யும் வித்தைகள் எளிதே.
கள்ளன் எப்பவுமே பெருசு; காப்பான் எப்பவுமே சிறுசு.
2. பார்த்தவர்களின் எண்ணிக்கை – Post Views
பார்வையாளர் வருகை என்பது இலக்கிய இதழ்களில் அப்பட்டமான பொய். இது மாயத் தோற்றத்தை உருவாக்கும். இணைய இதழுக்கு வருபவர்களில் தேடுபொறி யார், உண்மையான மனிதர் யார் என்று பிரித்தறிவது இயலவே இயலாத காரியம். முகமூடி போட்டுக் கொண்டு வருபவர்கள், ப்ராக்ஸி மூலம் வருபவர்கள், தங்களில் தளம் இயங்குகிறதா என பரிசோதிக்க வருபவர்கள், வலையகத்தை சீக்கிரமாகத் தருவதற்காக உள்ளூர் சி.டி.என். மூலமாக இறக்கிக் கொள்பவர்கள், அது தவிர சமூக மிடையங்கள் (ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவை), சுட்டிகளை சோதிக்க வரும் பாட்-கள் என எல்லோரும் இந்தக் கணக்கில் சேர்வார்கள்.
இந்த வருகையாளர் எண்ணிக்கையை பகிரங்கமாகச் சொல்வதால் எந்த இலாபமும் கிடையாது. நான் நூற்றுக்கு 82 மதிப்பெண்… நீ எவ்வளவு என்று கேட்பது போல் சின்னபிள்ளைத் தனமாக இருக்கிறது. எத்தனை பேர் வந்தார்கள் என்று கணக்கிடுவது அரதப் பழசு. எத்தனை பேர் எங்கே கண்ணை செலுத்தினார்கள்; எவ்வளவு நேரம் வாசித்தார்கள்; எப்படி எந்தப் பத்திகளில் ஆழ்ந்து ஊன்றி கவனித்தார்கள்; எப்படி ஸ்க்ரால் செய்தார்கள்; எங்கே கவனம் தப்பியது என்றெல்லாம் கூட கணக்கிட கூகிள் அனலிடிக்ஸ் போன்ற பல தளங்கள் இருக்கின்றன.
எத்தனை பேர் க்ளிக்கினார்கள் என்பதை விட எவர் படிக்கிறார்கள் என்பதும் எப்படி உள்வாங்கினார்கள் என்பதுமே முக்கியம் என்பதை இலக்கிய இதழ்களாவது வலியுறுத்த வேண்டும். ஃபேஸ்புக் மூலமாக ஆயிரக்கணக்கான நண்பர்களைப் பெற்றிருப்பவர்களுக்கு இந்த எண்கள் முக்கியமாகத் தெரியலாம். ஆனால், கனலி போன்ற தீவிர இதழ்கள் இந்த எண்ணை நிராகரிக்க வேண்டும்.
வெறும் வாசகர் எண்ணிக்கை முக்கியமென்றால், பத்திரிகை.காம் வைக்கும் தலைப்புகள் போல் சுண்டியிழுத்து விடலாம்; ஒன் இந்தியா போடும் கவர்ச்சிகரமான துணுக்குகள் மூலம் க்ளிக்க வைக்கலாம். வாசகர் எண்ணிக்கையை கூட்டிக் காட்டுவது வியாபாரிகளின் நோக்கம். பரபரப்பு என்பது விளம்பரதாரர்களுக்குத் தேவை. வாசகர் எண்ணிக்கை என்பது விளம்பரத்தை நாடுவோருக்கான தேவை.
3. எழுத்தாளர் பெயர்
எழுதியவர் பெயர் எப்பொழுதுமே கனலி என்றே இருக்கிறது. எனக்குப் பிடித்த எழுத்தாளர் “சித்துராஜ் பொன்ராஜ்” என வைத்துக் கொள்வோம். அவர் எழுதிய எல்லாம் மட்டும் வாசிக்க விழைகிறேன். இப்பொழுது அப்படி என்னால் பருந்துப் பார்வை பார்க்க முடிவதில்லை. தேடினாலும் கிடைப்பதில்லை.
4. நிலை நிற்றல் – இயைபு
ஆசிரியரின் பெயரை தலைப்பின் அடியில் போடுவது மரபு. ஆசிரியரின் புகைப்படத்தைப் போடுவது சற்றே முகத்திலடித்தது போல் இருக்கிறது. சில எழுத்தாளர்களுக்கு நிழற்படம் போடுவதும் சிலருக்கும் போடாமல் இருப்பதும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
ஒரே மாதிரி வடிவமைப்பை எல்லாருக்கும் பின்பற்ற வேண்டும். நர்மி எழுதும் தொடர் ஒவ்வொன்றுக்கும் அவரின் ஒவ்வொரு புகைப்படங்கள் போடுவது; பாலா கருப்பசாமிக்கும் கமலக்கண்ணனுக்கும் அவ்வப்போது அவர்களின் படங்கள்; அவ்வப்போது வேறு பொருத்தமான படங்கள் என்று முரன்பாடாக இருக்கக் கூடாது.
ஒவ்வொரு பதிவுக்கும் எழுத்தாளரின் பெயர்
ஒவ்வொரு பதிவின் முடிவில் (கட்டாங்கடைசியாக) அந்த எழுத்தாளரைக் குறிக்கும் ஒளிப்படம் அல்லது அவதாரப் படம் (சிறிய ஸ்டாம்ப் அளவில்)
ஒவ்வொரு பதிவின் துவக்கத்தில் – அந்தப் பதிவை, எழுத்தை, கதையை ஒட்டிய பெரிய ஓவியம் அல்லது ஒளிப்படம் (எடுத்தவர் (அ) வரைந்தவர் யார், காப்புரிமை எவருக்கு போன்ற விவரங்களை படத்தின் அடியில் சொல்ல வேண்டும்)
5. தொடர்கள்
தொடர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரே ஒரு சுட்டி கொடுத்தால் போதுமானது. ஒரு தொடருக்கு ஒரு உரல். அந்த உரலுக்குள் சென்றால், அந்தத் தொடரின் அனைத்து பகுதிகளுக்குள்ளும் செல்லும் வசதி என அமைக்கலாம்.
இப்போதைய நிலையில் தொடர் என்று பட்டியலிடப்பட்ட அனைத்தும் கூட்டமாக ஒரே இடத்தில் கொத்தாக தேதி வாரியாக இருக்கின்றன. ஒரு தொடரின் முந்தைய பகுதிக்கும் அடுத்த பகுதிக்கும் நடுவே முன்பின்னாக எளிமையாக சென்று வர முடிவதில்லை.
கீழே பாருங்கள். இது தொடரின் ஆறாம் பகுதி. நான் ஐந்தாம் பகுதிக்கு செல்ல விரும்புகிறேன். இது எளிதாக வேண்டும். மூன்றாம் பகுதியில் இருந்து அடுத்த பகுதியான நான்காம் பகுதிக்குச் செல்ல “ஏழு கடல், ஆறு மலை” தாண்டக் கூடாது.
6. ஆங்கிலம்
எங்கேயும் தமிழிலேயே தளம் அமைய வேண்டும். மறுமொழி சொல்வதற்கான பெட்டிகள் ஆங்கிலத்தில் அமைந்துள்ளன. ”Home” போன்ற சொற்றொடர்களை தமிழில் “முகப்பு” என்றோ “இல்லம்” என்றோ “வாயில்” என்றோ அழைக்குமாறு மாற்றலாம்.
7. தொடர்புடைய பதிவுகள்
கவிதைகளுக்கான பதிவில் (சார்லஸ் சிமிக் கவிதைகள் | கனலி) கீழே காணும் தொடர்பான பதிவுகள் காணக் கிடைக்கின்றன. மொழிபெயர்ப்பு கவிதையை வாசிப்பவர், அப்படியே சிறுகதைக்குச் செல்லலாம் என்பது உண்மையே. இருந்தாலும் கவிதைகளையோ மொழியாக்கங்களையோக் கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்.
இதை வகைப்படுத்தல் மூலமாகவோ, குறிச்சொற்கள் கொடுப்பது மூலமாகவோ செய்யலாம். கணினி நிரலியே தானியங்கியாக இதைத் தேர்ந்தெடுப்பது சாலச் சிறந்தது. நாமே இங்கேத் தொடுப்பு கொடுப்பது எப்போதும் ஒரே விஷயத்தையே முன்னிறுத்தும். புதிய + பழைய + வித்தியாசமான என்று சரக்கை மாற்றி மாற்றிக் கலந்து கொடுக்கும் வித்தை நிரலிக்கு எளிது. மனித மூளைக்கு அப்படிக் கலைத்துப் போட்டு தேர்ந்தெடுப்பது முடியாத விஷயம்.
8. குவிமையம் & சித்தாந்தம்
வலையகம் என்பது ஒரு விஷயத்தை முக்கியமெனக் கருத வேண்டும். கனலி அவ்வாறு எதை – தன்னுடைய கவனத்தைக் கோரும் ஏக சிந்தையாய்க் கொண்டுள்ளது என்பது இப்பொழுது தெளிவாகவில்லை. இது காலப்போக்கில் தெளிவாகாலம்.
இளைய படைப்பாளிகளின் புனைவுகளை சீர் செய்து ஒழுங்குபடுத்தி தர மேம்படுத்தல்
கவனம் கிடைக்காத அரிய கலைகளை அறிமுகம் செய்தல்
குழந்தைகளுக்கான இலக்கியம்
இப்பொழுது அகல உழல்கிறார்கள். ஆழ உழல்வது அவசியம்.
9. புகழ் பெற்ற ஆக்கங்கள்
நியு யார்க்கருக்கும் அறிமுகம் தேவையில்லை. ஹருகி முரகாமிக்கும் அறிமுகம் தேவையில்லை. ஒரு ஷினகாவா குரங்கின் ஒப்புதல் வாக்குமூலம் | கனலி போன்ற படைப்புகளை விட அதிகம் அறிமுகமாகாத உலக எழுத்தாளர்களை முன்வைக்கலாம்.
அதே நியு யார்க்கரில் முதன்முறையாக வெளியாகிறவர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் சிறுபத்திரிகைகள் எக்கச்சக்கம். அவற்றில் எழுதுபவர்களில் இருந்து அதிகம் புழங்காத பெயர்களை மொழிபெயர்க்கலாம். அல்லது பெரிய பத்திரிகைகளே சிறந்தது என்றால் கிரந்தா, அக்னி, ஹார்ப்பர்ஸ் என்று சிறகை விரிக்கலாம்.
இந்த நேரத்தில் விளம்பர இடைவேளை வைக்கிறேன். நியு யார்க்கரில் வெளியான கதைகள் குறித்த என்னுடைய பதிவுகள்:
“நவீனத்துவத்திற்குப் பிந்திய இலக்கியப் போக்குகளைப் பற்றிய பேச்சு, அமைப்பியல், பின்னமைப்பியல், பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம் போன்றவை இந்திய மொழிகளிலேயே தமிழில் அதிகமாக இருக்கலாம். அல்லது அதிகமாக இருக்கும் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கலாம்”
சுந்தர ராமசாமி
பாராட்டுகள்
இவ்வளவு ஆலோசனைகள் சொல்லியாகி விட்டது. இப்பொழுது சௌகரியமான விஷயங்களைப் பார்ப்போம்
நான்கு சமூக மிடையங்களில் இயங்குவது வெகு வெகு ஆரோக்கியமானது. இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியுப் – இரண்டுமே மாறுபட்ட தளம். ஃபேஸ்புக், டிவிட்டர் போல் இல்லாமல் வேறு விதமான பயனர்களைப் பெற்றுத்தரும். நான்கிலும் தொடர்ந்து செயலூக்கத்துடன், தொலைநோக்குத் திட்டத்துடன் அந்த ஊடகங்களின் அனைத்து பயன்களையும் முழுமையாக உபயோகித்து செயல்பட்டால், கனலி தவிர்க்க முடியாத சக்தியாக ஆகும்.
கனலி இலக்கிய நேரம் – இது போன்ற சந்திப்புகளும் சொற்பொழிவுகளும்தான் ஒரு அமைப்பை உருவாக்குகின்றன. தொடர்ச்சியாக நிகழ்வுகளை நடத்துவதன் மூலமும் அந்த நிகழ்வுகளில் பரந்துபட்ட தலைப்புகளில் நன்றாகப் பேசுவோரை உரையாட அழைப்பதும் புதிய வாசகர்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கும்.
Content is King – எவ்வளவு நேர்காணல்கள்! எத்தனையெத்தனை தமிழாக்கங்கள்!! எம்புட்டு சிறுகதைகள்!!! சரக்கு அதிகமாக இருப்பதினாலேயே தளம் மேம்படுகிறது என்பதை நான் உறுதியாக நம்புபவன். சரக்கு உயர்தரமாக இருப்பது இரண்டாம் பட்சம். சரக்கு வடிவுற அமைப்பது மூன்றாம் பட்சம்.
போட்டிகள் – தமிழில் இதற்கு நெடிய பாரம்பரியம் இருக்கிறது. குறுங்கதை ஆட்டம் மாதிரி, இன்னும் நிறைய பந்தயங்களை நடத்த வேண்டும். பயணக் கட்டுரை, அறிவியல் அறிமுகம், அனுபவப் பதிவு, என்று பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து நடத்த வேண்டும்.
ஆசிரியரின் உரிய அனுமதி – அழியாச்சுடர்கள் தளம் என்றும் பிடித்தமானது. பெட்டகம் பகுதி அது போல் மிகச் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது. அதுவும், பிறிதொரு இடத்தில் வெளியானதாக இல்லாமல், புதிய விஷயங்களாகப் பழைய ஆக்கங்களை இணையத்தில் ஏற்றுவது போற்றுதலுக்குரியது.
ஃபேஸ்புக்கில் தட்டி வைப்பது – இதை க. விக்னேஷ்வரன் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அதுவும் ஒரே வார்ப்புருவில் போடாமல் அலுப்பு தட்டாத வகையில் விதவிதமாகப் பரிமாறுகிறார். ஒரு நாள் பார்த்தால் உலக இலக்கியகர்த்தா; மற்றொரு நாள் புத்தம் புதிய படைப்பாளியின் ஆக்கம்; இன்னொரு நாள் வேறொரு சுவாரசியமான போஸ்டர். இதை இவர்கள் ஃபேஸ்புக் விளம்பரமாகவும் செய்யத் துவங்கலாம். இன்னும் பலரைச் சென்றடையலாம்.
ஆலோசனைகள்
பாட்காஸ்ட் – ஒலிப்பதிவை துவக்குவது. அன்றாடம் கிடைக்கும் இலக்கியப் பதிவுகள், படித்தவை, கிடைத்தவை என எல்லாவற்றையும் பேச்சில், ஒலிவடிவில் அறிமுகம் செய்யவேண்டும். இந்தக் காலத்தில் சவுண்ட்கிளவுட் இருந்தால்தான் எவரும் மதிக்கிறார்கள்.
குவிமையம் / சிறப்பிதழ் – ஆங்கில இதழ்கள் இதை மாதா மாதம், இதழ்தோறும் செய்கிறார்கள். ஏதாவது ஒரு தலைப்பு, விவாதப் பொருள், மூலக் கரு – எடுத்துக் கொள்கிறார்கள். பணிவு, தந்தை, அரங்கு என்று ஏதோ ஒரு விஷயத்தைச் சுற்றி பல பேர் எழுதுகிறார்கள். வலையகத்துக்கென்று பிரத்தியேகமாக தொலைநோக்கு பார்வை இருப்பது நெடுநாளைக்கான வேண்டுகோள் (மிஷன் / விஷன்). ஒவ்வொரு இதழுக்கும் ஒரு ஒருமிப்பு (ஃபோகஸ்) இருப்பது உடனடி வேண்டுகோள். உதாரணத்திற்கு லஃபாம்ஸ் இதழின் மையங்கள்:
பழிப்பு
நினைவு
காலநிலை
மகிழ்ச்சி
வர்த்தகம்
இரவு
போட்டி
நீர்
சட்டம்
இசை
பயம்
மனநிலை
வீடு
அதிர்ஷ்டம்
சதை
இ-புக் – கிண்டில் புத்தகங்களும் கூகுள் ப்ளே நூலகத்தில் தொகுப்புகளும் கிடைக்குமாறு செய்ய வேண்டும். இணைய அங்காடிகளில் ஈபுக் விற்க வேண்டும்.
ஆடியோ புக் – எக்கச்சக்கமான விஷயங்கள் கனலி தளத்தில் இருக்கிறது. அதையெல்லாம் ஒலிபுத்தகங்களாக மாற்ற வேண்டும். ஒரு பதிவை ஒருவர் வாசிக்கலாம். வாசிப்புக்கு ஒருவரே ஏற்ற இறக்கங்களோடு ஒலிநூலாக்கலாம்.
முந்தைய மின்னிதழ் பார்வைகள் / விமர்சனங்கள் / அறிமுகங்கள்
’வலம்’ என்னும் பெயரில் விநாயக முருகன், நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அகராதியில், இந்த பொருள்கள் இருக்கின்றன:
வலம்
– சூழ்போதல்: To go round from left to right, as in temple; வலம் வருதல். தோகையோர் பங்கன்றாளி லுவகையின் வணங்கிச் சூழ்போந்து (கூர்மபு. தக்கன்வேள். 18). பிரதட்சிணஞ் செய்தல். திருமலையே வலம் வந்தனள் (தக்கயாகப். 321).
– பரிவேட்டி: Circumambulation from left to right; வலம் வருகை. தேவரெலாமேவி விளைத்த பரிவேட்டியான் (காளத். உலா, 93).
– வலம்படுதல்: 1. To be victorious; வெற்றியுண்டாதல். வலம்படு முரசின் (பதிற்றுப். 78, 1). 2. To pass across one’s path from left to right; இடப்பக்கத்தி லிருந்து
– வலவன்: Capable man; சமர்த்தன்.
– வலக்காரம்: Falsehood; பொய். (நாமதீப. 655.); வலனாக வினையென்று (கலித். 35).; மேழி வலனுயர்ந்த வெள்ளை நகரமும் (சிலப். 14, 9).
இவ்வளவு அர்த்தங்களும் சொல்லிவிட்டு அராபிய மொழி விளக்கத்தை விட்டுவிடலாமா?
By Allah (Arabic: Wallah, وَٱللّٰه) is an Arabic expression meaning “[I promise] by God” used to make a promise or express great credibility on an expression. It is considered a sin among Muslims to use this phrase and follow it up with a lie.
எவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலாபிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.
பொருள்: எவனுடைய பெயருடன் வானத்திலும் பூமியிலும் எவ்வித தீங்கும் ஏற்படாதோ அப்படிப்பட்ட அல்லாஹ்வின் பெயரால் துதிக்கிறேன். அவன் எல்லாவற்றையும் கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
வலம் அக்டோபர் 2016 (துர்முகி வருடம், புரட்டாசி – ஐப்பசி) இதழின் உள்ளடக்கம்:
இதழைக் குறித்த எண்ணங்களைப் பதிவு செய்து வைக்கலாம். உள்ளடகத்தில் படித்த மட்டும்:
கலைச் சின்னங்களைத் தகர்க்கும் வெளி – வெங்கட் சாமிநாதன்
இந்தக் கட்டுரை நிறைவைத் தருகிறது. கொஞ்சம் சிந்திக்கவும் கற்றுத் தருகிறது. சுருக்கப்பட்ட வடிவம் என்கிறார்கள் – அந்த மாதிரி கத்திரி போட்டதே தெரியாமல் செய்ததற்கு வலம் ஆசிரியர் குழுவைப் பாராட்டலாம். ஆனால், ஏற்கனவே வெளிவந்த கட்டுரைகளை, மீண்டும் அச்சில் ஏற்றாமல் அடுத்த இதழ்களில் இருந்து புதியதாக மட்டுமே தரப் பார்க்கலாம்.
நேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்
போன கட்டுரை — எடிட்டிங் நல்ல முறையில் தொகுப்பதற்கான அத்தாட்சி என்றால், இந்தக் கட்டுரை மோசமான முறையில் வெட்டுவதற்கான அத்தாட்சி. குதறியிருக்கிறார்கள்.
சிறப்பான கட்டுரை. நான் முப்பது பைசா (அமெரிக்க டாலர் மதிப்பில்) போட்டு இந்த நூலை வாசித்தேன். கொடுத்த பணத்திற்கு நல்ல வரும்படி என்று இதைக் கொணர்ந்ததற்கே சொல்லி விடலாம். அவசியம் வாசிக்கப் பட வேண்டிய எண்ணங்கள்
மாதொரு பாகன் – என்னதான் நடந்தது? – ராஜா ஷங்கர்
சமகால வரலாற்றை சொல்லியிருக்கிறார். என்னைக் கவரவில்லை. ஏற்கனவே எனக்கு நன்கு அறிமுகமான விஷயம் என்பதால் போரடித்தது ஒரு பக்கம். இணையத்து நடை என்பதும் சிறு பத்திரிகையின் காத்திரத்தன்மைக்கு சற்றே பத்தரை மாற்றுத் தங்கம் குறைந்து, ‘குங்குமம்’ சுஜாதா கட்டுரை போல் இருந்ததும் இன்னொரு பக்கம் அலுக்க வைக்கிறது.
இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா? – லக்ஷ்மணப் பெருமாள்
இன்னும் சிறப்பாகவும் ஆழமாகவும் குவிமையத்தை நோக்கி விரிவான வாதங்களை வைத்தும் எழுதியிருக்க வேண்டிய கட்டுரை. தகவல்களும் அலைபாய்வுகளும் கவனத்தை சிதறடிக்கின்றன
அருகி வரும் யானைகள் – பி.ஆர்.ஹரன்
திண்ணையில் இவரின் சில கட்டுரைகளை (யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் ) படித்திருந்தனால், இதைப் பார்த்தால் புதியது போலவேத் தோன்றவில்லை. தொடர் என்று வேறு சொல்லி இருக்கிறார்கள். வலையில் வெளியான விஷயத்தைத் தவிர்க்கலாம்.
மதர் தெரசா: இறுதித் தீர்ப்பு – ஜடாயு
ஒரு கட்டுரைக்கு ஒரேயொரு இலக்கு மட்டும்தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் என் போன்ற சாதாரணர்களின் சிந்தையில் தெளிவாகப் பதியும். எடுத்த காரியத்தை பொருத்தமான குறிப்புகளோடு கில்லியாகக் குறி பார்த்து சஞ்சலமின்றி எடுத்துரைக்கும் பாங்கும் சமகால எம்.ஜி.ஆர் போன்றோரோடு ஒப்பிடும் பார்வைகளும் – அபாரம். கடந்த இரண்டு/மூன்று கட்டுரைகள் படித்து கடுப்பான சமயத்தில், ‘பத்திரிகை பரவாயில்லை!’ என்று சொல்லவைக்கும் பதிப்பு.
பழைய பாடல் (சிறுகதை) – சுகா
ஆப்பிள் மாக்புக் என்னும் கணினியையும் விண்டோஸ் கணினியையும் ஒப்பிட்டால் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருக்கும். சொல்லப் போனால் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் கணிபுத்தகங்கள் கொடுக்கப்படும் விலைக்கும் அதன் தரத்திற்கும் சம்பந்தம் இல்லாமல், சல்லிசாக இருக்கும். அந்த மாதிரி வலம் இதழை சடாரென்று ஸ்டீவ் ஜாப்ஸ் வந்து அறிமுகம் செய்வது மாதிரி சுகா ஜ்வலிக்கிறார். கதாபாத்திரங்களின் கச்சிதமான அறிமுகம் முதல் உலா வரும் மாந்தர்களை கனவிலும் நிழலாட வைக்கும் சாதுர்யமான செதுக்கல் வரை – எல்லாமே அக்மார்க் எழுத்தாளரின் முத்திரை. இவரை படித்த பிறகு நூலை மூடிவைத்துவிட்டேன். பாக்கியை இன்னொரு நாள்தான் படிக்கணும்.
‘புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2016’ – ஒரு பார்வை – B.K. ராமசந்திரன்
பிடிஎஃப் இதழை வாங்கி அப்படியே வாசிக்க: (ஃப்ளாஷ் தேவை – எனவே ஸ்லேட், ஐபேட், டாப்லெட் போன்றவற்றில் வாசிப்பதில் சற்றே சிரமம் இருக்கும்): http://nammabooks.com/buy-valam-magazine
விமான நிலையத்தில் காத்திருப்பது வேலையத்த வேலை. ஆனால், காத்திருக்காமல் இருக்க முடிவதில்லை.
பிரியமானவர் வருகைக்காக சில சமயம். நாம் விரைவாக சென்றுவிட்டால், மனதுக்கு இனியவரின் விமானமும் சீக்கிரம் வந்து சேர்ந்துவிடும் என்னும் நம்பிக்கையில் சென்று பார்க்கிறேன்.
வீட்டில் இருப்பவர்களை துரத்துவதற்காக சில சமயம், சீக்கிரமே கிளம்பி விமான நிலையம் சென்று விடுகிறோம். இன்னும் கொஞ்ச நேரம்தான்… பொறுத்துக் கொள் என்று மனதை சமானப்படுத்தி, சண்டை சச்சரவு தவிர்க்க இந்த அவசரம் பயன்படுகிறது.
நடுத்தர வர்க்கம் எப்பொழுதுமே பேருந்து நிலையத்திற்கோ இரயில் பயணங்களுக்கோ முந்தின நாளே போய் காத்திருக்கும் வழக்கம் உடையது. அதன் எச்சங்களும், விமான நிலைய வருகைக்கு கால்கோள் இட்டு, வேரூன்றி நிற்கிறது. கொஞ்சம் முன்னாடி போனால், முந்தின ஃப்ளைட்டிலேயே இடம் கிடைத்தாலும் கிடைக்கும்.
ஒரு மாமாங்கம் முன்பு ஜார்ஜ் புஷ்ஷும் ஒசாமா பின் லாடனும் செய்த கைங்கர்யத்தால் பதினைந்து நிமிடம் முன்னாடி போய் வானூர்தியில் உட்கார்வது எல்லாம் மலையேறிப் போயாச்சு.
இந்த மாதிரி ஊருக்கு முன்னாடியே கிளம்பி காத்திருக்கும் நேரத்தில் புத்தகக் கடையை மேய்வது ரொம்பவே பிடித்த விஷயம். மேக்சிம், எஃப்,எச்.எம், ஸ்டஃப் எல்லாம் வா…வா… என்று கிளுகிளுப்பூட்டினாலும், புதிதாக என்ன பிடித்திருக்கிறது என்று மேய்ந்ததில் http://www.complex.com/ & http://www.wallpaper.com/ ஈர்த்தது.
வடிவமைப்பு, செய்நேர்த்தி, உள்ளடக்கம், சொந்த சரக்கு, வித்தியாசம் காட்டி அடையாளப்படுத்துதல் என்று பல விதங்களில் கவர்ந்தது.
அப்பாவை டிவி பார்ப்பவர் என்று சுருக்கலாம். அம்மா வெறும் சமையற்காரி. மகளோ மூளை வளர்ச்சி பெறாதவள். மனைவி பாலியல் தொழிலாளி.
இப்படி அடைமொழிக்குள்ளும் உருவகங்களுக்கும் நடுவே நிஜ வாழ்க்கை சிக்கிக் கொள்வதில்லை. ஆனால், பெரும்பாலான கலை வடிவங்களின் தமிழ் விமர்சனங்கள் அடைபட்டிருக்கிறது.
ஜெயமோகன் இந்துத்வாவாதி. சாரு நிவேதிதா திருடர். எஸ் ராமகிருஷ்ணன் தேய்வழக்கு. காலச்சுவடு கண்ணன் பிசினஸ்மேன். ’அட்டகத்தி’ தலித் காவியம்; உயிர்மை இலக்கிய பத்திரிகை; மக்கள் தொலைக்காட்சி தமிழை வாழவைக்கிறது.
சிக்குண்டவர்களே புதியவர்களை வலைக்குள் நிறுத்து வைப்பது உப வழக்கம். பெருநிதிக் கிழார், டூரிஸ்ட் இலக்கியவாதி என்று பட்டங்கள் கொடுத்து முடக்குவதும் வாடிக்கை.
திரைப்படத்திற்கு சாயம் பூசுதல், எழுத்தாளர்களை தொலைக்காட்சி சவுண்ட் பைட் பார்ட்டி ஆக்குவது, போன்றவை சந்தைப்படுத்தலின் அங்கம். கருணாநிதி மோதிரம் வாங்கி அண்ணா கையால் போட்டுக் கொண்டது போல் தன் ஆக்கங்களை தானே பிராண்டிங் செய்வது எல்லாமே மார்க்கெடிங்கில் நியாயம்.
மோஸ்தர்களை மட்டுமே முன்னிறுத்தும் தமிழக சூழலுக்கு, போதிய அளவு மாற்று சிந்தனையாளர்கள் இல்லாதது முதல் காரணம். எதிர்கருத்து சொல்பவர்களுக்கு ஆங்கில எழுத்துகள் சோறு போடுகிறது என்பது முக்கிய காரணம்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde