யார் தெரியுமா? நான்தான்!


கேள்வி: “முதலில் கதை எழுதலாமா? கட்டுரை எழுதலாமா?”

கல்கி பதில்: “கதை எழுதுவதை விடக் கட்டுரை எழுதுவதுதான் நல்லது என்பது என்னுடைய அபிப்பிராயம். ஏனென்றால், கதை எழுதுவது கஷ்டம். கதை எழுதுவதற்கு முதலாவது கதை ஒன்று வேண்டும். அது கிடைப்பது லேசல்ல. பிறகு அதை வைத்துக் கொண்டு சுவாரஸ்யமாக எழுத வேண்டும். கொஞ்சம் காது மூக்கு வைக்கலாமே தவிர, கதையின் மத்திய சம்பவத்தை விட்டு அதிக தூரம் போக முடியாது. இன்னொரு பெரிய தொந்தரவு இருக்கிறது. கதையென்றால் ‘நன்றாயிருக்கிறது. இல்லை’ என்பதாகச் சுலபமாய்ப் பத்திரிகையாசிரியர் தீர்மானித்து விடுவார். பத்திரிகாசிரியர் மீது பழி வாங்கும் விருப்பம் உனக்கிருந்தால் கட்டுரை எழுதுவதுதான் நல்லது. அது சுலபமும் கூட…

கட்டுரை எழுதுவதற்கு வரம்பு ஒன்று வைத்துக் கொள்வது அவசியம் இல்லை. எதிலேயோ பிடித்து, எதிலேயோ முடிக்கலாம். கட்டுரையின் தலைப்புக்கும், கட்டுரையின் விஷயத்திற்கும் சம்பந்தம் இருக்கவேண்டிய அவசியமில்லை. இந்தச் சம்பந்தம் எவ்வளவுக்குக் குறைவாயிருக்கிறதோ, அவ்வளவுக்கு நன்றாயிருப்பதாய் ஜனங்கள் எண்ணிக் கொள்வார்கள். அத்தகைய கட்டுரைகளைப் பார்க்கும் பத்திரிகாசிரியர்களும் கொஞ்ச தூரம் படிப்பதற்குள் குழப்பமடைந்து விடுவார்கள். அதைப் படிக்கும் தொல்லையை விடப் பிரசுரித்து விடுவது நல்லதென்று தீர்மானித்து விடுவார்கள்!”

*

தமிழில் சிறு பத்திரிகைகள்: வல்லிக்கண்ணன்

கேள்வி: “பத்திரிகாசிரியர்களுக்கு எவ்வாறு கடிதம் எழுத வேண்டும்?”

கல்கி பதில்: “கீழே சில நகல் கடிதங்கள் கொடுத்திருக்கிறேன். அவைகளில் ஏதேனும் ஒன்றைத் தழுவிக் கடிதம் எழுதலாம்:

* இது என் ஆயுளிலேயே நான் முதன் முதலாக எழுதியது. ஆதலால், இதில் குற்றங்குறைகள் இருந்தாலும் சீர்திருத்தி வெளியிட்டு ஊக்கமளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

* அன்பீர்! சென்ற முப்பத்திரண்டு வருஷ காலமாய் நான் பல தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் விஷயதானம் புரிந்து வைத்திருக்கிறேன் என கட்டுரைகள் வெளிவந்த பத்திரிகைகள் எல்லாம் மாண்டு போயின. நான் மட்டும் உயிரோடிருக்கிறேன். ஆகையால், இத்துடன் அனுப்பியுள்ள கட்டுரையைத் தவறாது வெளியிடவும்.

* என் வாழ்நாளில் ஒரு கட்டுரையாவது எழுதிப் பத்திரிகையில் வெளியிட வேண்டுமென்பது என் ஜீவிய மனோரதம். ஆகையால், இந்தக் கட்டுரையை அடுத்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி இதழில் அவசியம் வெளியிட்டு என் மனோரதத்தை நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

* மானேஜர் அவர்களுக்கு, நான் உங்களுடைய 17,235-வது சந்தாதாரர். இந்தக் கதையை நீங்கள் வெளியிட்டால், எங்கள் சிநேகிதர்களிடம் சொல்லி, அவர்களையும் சந்தாதாரராகச் செய்வேன்.

* ஐயா! நான் ஒரு ஜரிஜனன். உங்கள் பத்திரிகை ஹரிஜனங்களுக்காகப் பாடுபடுவது உண்மையானால், நான் அனுப்பி இருக்கும் இந்தக் கட்டுரையைப் பிரசுரிக்க வேண்டியது. இல்லாவிட்டால், உங்களுடைய குட்டு வெளியாகிவிடும்!

*

– ஆனந்த விகடன்
15.01.1933
‘யார் தெரியுமா? நான்தான்!’ என்னும் தலைப்பில் வெளியானது

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.