மீண்டும் டொனால்டு டிரம்ப் வருவதற்கான கால்கோள்


அமெரிக்காவில் அடிக்கடி தேர்தல் நடக்கும்.

இந்தியாவில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை லோக் சபா தேர்தல். நடுவில் உள்ளாட்சி, இடைத் தேர்தல் எல்லாம் இருந்தாலும் ஒரு வாக்குப் பதிவு முடிந்து, அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிந்து, அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவர் தேர்தல் வாக்குறுதியை மசோதாவாக்க மக்களவை, மேல்சபை என்று அனுப்புவதற்குள் அடுத்த தேர்தல் முடிந்து அவரின் கட்சி பெரும்பான்மையை இழந்து பல் பிடுங்கப்பட்ட பாம்பாக இருக்கும்.

உலகின் பெரிய பொருளாதாரமாக சீனா வளர்ந்து நிற்கிறது. டொனால்டு டிரம்ப் இருந்த மட்டும் வாலைச் சுருட்டிக் கொண்டு அமெரிக்காவை ஆண்ட ருஷியா, ஜான் பைடன் வந்த பிறகு உக்ரைன் நாட்டை படையெடுத்து உலகா தாதா ஆகி நிற்கிறது. சமாதானம் செய்வது, நடுவராக இருப்பது எல்லாம் இந்தியாவின் கையில் இருக்கிறது. வட கொரியாவும் ஏவகணையாக விட்டுத் தள்ளுகிறது. வளைகுடாப் பகுதியில் ஈரான் பெரிய புள்ளியாக சர்வ வல்லமையுடன் கோலோச்சுகிறது.

இது அயல்நாடு சமாச்சாரம்.

உள்நாட்டில்… இன்னும் கேவலமான சூழல்!

வரலாறு காணாத பணவீக்கம். எகிறும் பெட்ரோல் விலை. வீடு வாங்க முடியாத சொந்த வளையில் குடிபுக முடியாத தலைமுறை. அமெரிக்காவைப் பார்த்தால் இங்கிலாந்தே தேவலாம் என்று சொல்லிவிடுவீர்கள்.

இந்த நிலையில் ஆளுங்கட்சியான டெமொகிராட்ஸ் – ஜனநாயகக் கட்சி தேர்தலை சந்திக்கிறது. அவர்கள் வைத்திருக்கும் ஒரே அஸ்திரம் – தனக்கான முடிவை பெண்களே எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் தேவையா? வன்புணரப்பட்ட மகளிர் உடலைக் கூட மசோதா போட்டு வேண்டாத மகவைப் பெற்றெடுக்க வைக்கும் அராஜகத்தை முன்வைத்து வாக்கு கேட்கிறார்கள்.

கருக்கலைப்பு என்பது சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது. அதை ரத்து செய்து சட்டம் இயற்ற தங்களுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்கிறார்கள்.

எதிர்க்கட்சியான ரிபப்ளிகன் – குடியரசு கட்சி எந்த விஷயத்தைக் கையில் எடுப்பது என்று திணறும் அளவு தெரிவுகள். நிதி நிலைமையையும் பொருளாதார சரிவையும் முன் வைக்கிறார்கள். தட்டித் தடுமாறி நடந்து கொண்டு, குப்பாச்சு குழப்பாச்சு ஆக திணறிப் பேசி, எந்த முடிவையும் தீர்க்கமாக நடைமுறையாக்காத, கையாலாகாத ஜனாதிபதி ஜான் பிடன் தலைமையைச் சுட்டுகிறார்கள். டொனால்ட் டிரம்ப் மீண்டும் வந்து விடுவார் என்று நம்பிக்கை நட்சத்திரத்தைச் சொல்கிறார்கள். அமெரிக்காவின் எரிவாயுவையும் எண்ணெய் ஊற்றுகளையும் திறந்து டீஸல் விலையைக் குறைக்கிறோம் என்கிறார்கள்.

கிறித்துவ மதக் கொள்கைகளை கொடி பறக்க விடுவோம் என்னும் சித்தாந்தத்தின் பின்னணியில் வெள்ளையர்களும் கருப்பர்களும் ஒரே அணியாகத் திரண்டு இருக்கிறார்கள். கருச்சிதைப்பை எல்லா மாநிலங்களிலும் எப்பொழுதும் குற்றமாக்குவது… துப்பாக்கியை எங்கேயும் எவ்வாறும் எடுத்துச் செல்வது… பக்கத்து நாடுகளில் இருந்து கள்ளத்தோணிகளில் திருட்டுத்தனமாக அமெரிக்காவிற்குள் புகுபவர்களை குடியேற விடாமல் துரத்துவது… வருமான வரியைக் குறைப்பது… தற்பால் விரும்பிகள் குழந்தைகளைத் தத்தெடுக்க விடாமல் தடுப்பது… அள்ள அள்ளக் குறையாத சமூகக் கொள்கைகள்.

மாநிலங்களவை / ராஜ்ய சபா போன்ற செனேட் நிலைமை – 50 டெமோகிராட் மற்றும் 50 ரிபப்ளிகன் கட்சிக்காரர்கள்.
மக்களவை / லோக் சபா போன்ற காங்கிரஸ் நிலைமையும் இதே போல் இழுபறி தான். சற்றே சறுக்கினாலும் இப்போது இருக்கும் டெமோகிராட் (ஜனநாயகக் கட்சி) பெரும்பான்மையை இழந்து விடும்.

கடந்த இரண்டு வருடத்தில் டெமோகிராட் (ஜனநாயகக் கட்சி) காரகளால் ஒழுங்காக எந்த புதிய சட்டத்தையும் அமலாக்க முடியவில்லை. டொனால்ட் டிரம்ப் சதி செய்தார். அவருடன் இருந்தவர்கள் ஊழல் செய்தார்கள். அவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார்கள் என்று நிரூபிப்பதில் மட்டுமே குறியாக இருந்தார்கள்.

சென்ற ஆட்சிக்காரர்களை குற்றஞ்சாட்டி ஆளுங்கட்சி ஜெயிக்க முடியாது. அடுத்த இரண்டாண்டுகளாவது ஜனாதிபதி ஜான் பிடென் அரசாட்சியிலும் நிர்வாகத்திலும் மக்கள் சேவையிலும் கவனம் செலுத்த வேண்டும்.

அதற்கான வாக்குப் பதிவு இன்று நடந்து முடிந்துவிட்டது.

இனி மேலாவது ஒழுங்காக ஆக வேண்டிய காரியங்களையும் உண்மையான பிரச்சினைகளுக்கான தொலைநோக்கு தீர்வுகளையும் உலக வெம்மையாக்கலையும் டெமோகிராட் (ஜனநாயகக் கட்சி) கையில் எடுக்குமா?

அல்லது பூச்சாண்டி டிரம்ப் வராரு என்று கிளிப்பிள்ளையாக புலம்பிக் கதறிக் கொண்டேயிருப்பார்களா?

அப்புறம் டிரம்ப் மீண்டும் உலகநாயகர் ஆவதை புடின் நினைத்தாலும் தடுக்க முடியாது!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.