வேலையில்லாதவன்தான்! வேலை தெரிஞ்சவன்தான்?

Jobs-Employment-recession-life-alternate-IT-Info-Techரிச்சர்டை எனக்கு பத்து வருஷமாகத் தெரியும். அமெரிக்காகாரன். என்னுடன் ஆறு வருடம் கூட வேலை பார்த்தவன். செய்ய சொன்னதை மட்டும் செய்து முடிக்காமல், சொல்லாததையும் சூட்சுமமாக செய்து தருபவன். சாமர்த்தியம் இருக்கிறது என்னும் தன்னம்பிக்கை நிறைந்தவன்.

கடந்த ஒன்பது மாதங்களாக வேலை தேடிக் கொண்டிருக்கிறான்.

என்னுடைய உலகம் எனப்படுவது தமிழ்ப் பதிவுகள், பதிவு அரசியல் என்று முடங்கியதாக கருதப்பட்டால், அவனுடையதில் கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ, லீனக்ஸ், வீட்டிலேயே பியர் தயாரிப்பது என்று பிறிதொரு திரிசங்கு சொர்க்கம். ஃபேஸ்புக், லிங்ட் இன், ப்ளாக்ஸோ எதிலும் எப்போதும் காணக் கிடைக்க மாட்டான். ஏதோ நினைப்பு வர, எப்படியோ தொடர்பு கொண்டால், வேலை போன விஷயத்தை சொன்னான்.

வாயுள்ள புள்ள பொழச்சுக்கும் என்பது தமிழ் பழமொழியாக இருந்தாலும், அந்தக் காலத்திலேயே டவுன்லோட் எழுத்தாளர் எவராவது அதை அமெரிக்காவில் இருந்து இடம் பெயர்த்திருக்க வேண்டும் என்பது என்னுடைய சம்சயம்.

ரிச்சர்ட் அக்மார்க் கீக். இந்த மாதிரி ISTJ பசங்களுக்கு வேலை போனால் ரொம்ப துர்லபம் என்று சொல்லி இருக்கிறார்கள்

வாசிக்க: Why Layoffs Hit IT Professionals So Hard | CIO – Blogs and Discussion: “Sure, IT jobs are difficult to find. But making matters worse, many IT professionals lack the personality traits that make career change easier, even exciting, for others.”

Introverted Sensing Thinking and Judging – அகமுக ஆய்வு உணர்வு சிந்தனைத் தீர்ப்பாளர் – ஆளுக்கு காற்றில் வாய்ப்பந்தல் போட வராது. எத்தனாந் தேதிக்குள் எவை வேண்டும் என்று திட்டவட்டமாக சொல்லிவிட வேண்டும். டைடானிக் கப்பல் நிறைய தகவல் கொடுத்தாலும், வகுந்தெடுத்து, முத்துக் குளிப்பார்கள். அனுபவத்தின் அடிப்படையில் முடிவெடுப்பார்கள்.

Statue-of-liberty-suicide-finance-USA-America-Suicideஇளைய தளபதி விஜய் சொல்வது போல் இதயத்தில் யோசிக்கும் க்ரூப் அல்ல. மூளையை உபயோகித்து முடிவை எடுப்பவர். ‘ஏதோ… பட்சி சொல்லுது!’ என்றால், எந்தப் பட்சி, எவ்வாறு தோற்றம் இருந்தது என்று கனவைக் குதறி, நினைவுலகத்திற்கு மீட்பவர்.

ரிஸ்க் எடுப்பதை ரஸ்க் உண்பது போல் செய்யும் INTPs (Introverted Intuitive Thinking Perceiving – அகமுக ஆய்வு இயலுணர்வு சிந்தனை உணர்வாளர்) & ENFPs (Extroverted Intuitive Feeling Perceiving) தரப்பினரின் தாரக மந்திரம் ‘மாற்றம் மட்டுமே நிரந்தரம்’. நொடிக்கொரு புது சாஃப்ட்வேர் பிறக்கும் ISTJ மக்களுக்கோ மாற்றமே அலர்ஜி.

ரிச்சர்ட் அனேகமாக ISTJ ஆகத்தான் இருப்பார். ஐ.டி துறையில் வேலை பார்ப்பவரில் மிகப் பெரும்பான்மையானோர் ISTJ என்கிறது ஆய்வு.

இந்தியர்கள் Introverted; சாதாரணமாக தனக்குள்ளேயே யோசித்துக் கொள்பவர்கள். ஏதாவது பார்ட்டி நடந்தால் கூட ஒதுக்குப்புறமாக தனியாகப் போய் தெரிந்தவர்களோடு அரட்டை அடிப்பதை விரும்புவர்கள். Judgingம் கூட வந்து சேர்ந்து கொள்ளும். சட்டு சட்டென்று ஆளை எடை போடுவதில் இருந்து, தக்காளியை பொறுக்குவது வரை தீர்ப்பு எழுதித் தருபவர். ‘அவரவருக்கு அதது’ என்று Perceiving ஆக விட்டுத் தள்ளாத சமூக அமைப்பு. ‘நீங்க நல்லவரா கெட்டவரா?’ என்று கதையின் முடிவில் ஈசாப் நீதி சொன்னால்தான் சமாதானம் ஆகும் குமுகம்.

ஆனால், கணினித் துறையில் நிறைய இந்தியர்கள் நுழைந்ததற்கு காரணம் வேளாவேளைக்கு வேலை என்பதனால்தானேயொழிய இந்த ISTJ காரணம் அல்ல. எனவே, தெற்காசியர்களுக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஸ்னான ப்ராப்தி வாய்த்ததற்கு ISTJஐ மட்டும் கை காட்டக் கூடாது.

ரிச்சர்டின் பாஸ் எப்படி இருக்கிறார் என்று விசாரித்தேன். அவருக்கும் வேலை போய் விட்டது தெரியவந்தது. நாலு ஈமெயில், ஏழு போன் வாயிஸ் மெயில் தாண்டியவுடன் என்னுடைய பழைய பாஸ் குரல், லாரி டிரைவர் ராஜாக்கண்ணுவாக கேட்க கிடைத்தது.

Dilbert-Outsourcing-Employment-Obama-Rich-Bangalore‘என்ன செய்யறீங்க இப்போ?’

‘டிரக் ஓட்ட ஆரம்பிச்சிருக்கேன். உன்னோட முதலாளியா இருந்தப்ப கிடச்சத விட அதிகமா கொடுக்கிறாங்க. அலாஸ்கா முழுக்க சுத்தியாச்சு. இந்த அனுபவத்த வச்சு பெஸ்ட்செல்லர் எழுடிண்டு இருக்கேன்.’

எவனாவது முட்டை வீசினால், அதை கேட்ச் பிடித்து ஆம்லெட் போட்டுக்க என்பார்கள். அது போல், வீசப்பட்ட தக்காளியை சேர்த்து, ரசம் ஆக்கி குடித்துக் கொண்டிருக்கிறார். மாற்றத்தை சப்புக் கொட்டி சாப்பிடுகிறார்.

இந்த வேலைதான் செய்வேன். இதுதான் எனக்குப் பிடித்தமானது. வெள்ளை சொக்கா உத்தியோகம் கிடைத்தால் மட்டுமே உழைப்பேன் என்று இராமல், கிடைத்ததை வைத்து கொண்டாடுகிறார்.

ரிச்சர்ட் மாதிரி வேலை இழந்த பல நண்பர்கள் சொந்த நிறுவனம் தொடங்குவதைத்தான் முதலில் விரும்புகிறார்கள். நிறைய பயணம். புதிய சந்திப்பு. நிலையில்லா இருப்பிடம். தினம் ஒரு க்லையன்ட் என்று வழக்கப்படுத்துவது ISTJ மக்களுக்கு சிரமமானது. நல்ல நாளிலேயே இந்தியனுக்கு இடர்நிறைந்த பாதையை தேர்ந்தெடுப்பது பயங்கொடுப்பது. ஆனால், வியாபாரத்தில் சோதனை செய்துதானே ஆக வேண்டும்?

குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டிப் பழக்கப்பட்ட நெஞ்சத்திற்கு Comfort zoneஐ விட்டு வெளியே வர வேண்டும். ஆனானப்பட்ட, மணிரத்னமும் ஷங்கரும் சூப்பர் ஸ்டாரும் கூட ஃபார்முலாவை விட்டு இம்மி நகருவதில்லை. நம்ம பாடு எப்படியோ!

வானிலே மிதக்கும் வலை

Mi-Fi என்னும் Personal Network படித்தீர்களா? இல்லாட்டி சத்யராஜ்குமாரின் ஒளி வட்டம் « இன்று – Today வரைக்கும் ஒரு எட்டு போயிட்டு வாங்க.

வந்தாச்சா?

இப்பொழுது இணையம் விமானத்திலும் கிடைக்கிறது. இதுகாறும் GoGo எனப்பட்டால், பலான பார்களில் சப் குச் துறக்கும் பெண்டிரைக் குறித்தது. அவ்வாறு இல்லாமல் அமெரிக்காவுக்குள் பறக்கும் டெல்டா போன்ற வானூர்திகளுக்குள் கோகோ கொண்டு வலை மேயலாம்.

என்ன தேவை?

உங்களின் மடிக்கணினி வைத்துக் கொள்ளலாம். அல்லது ஐ-ஃபோன், ப்ளாக்பெரி போன்ற Wi-Fi திறன் கொண்ட செல்பேசியாக இருக்கலாம். விமான நிலையம் மட்டுமல்ல; விமானத்தினுள்ளும் இனி Wi-Fi hotspot கொண்டாட்டம் தொடரும்.

செய்தி: Aircell (Delta’s partner), Panasonic, and Row44: “Several years after withdrawing from now-defunct Connexion by Boeing’s satellite-based Internet project, American Airlines, Delta Air Lines and United Airlines have all now turned to Aircell for air-to-ground (ATG) connectivity.”

மூன்று மணித்துளிகளுக்கு மேல் நேரமெடுக்கும் விமானப் பயணம் என்றால் $12.95. இல்லை சொல்ப தூரம்தான் என்றால் பத்து டாலர். (அதாங்க 9.95 வெள்ளிகள்)

செல்பேசி கொண்டு மேய்பவருக்கு தடாலடி விலைக்குறைப்பு – $7.95.

தமிழ்த் தளங்களுக்கு செல்லத் தடையேதுமில்லை. ஆனாக்க, ஸ்கைப் (VoIP services like Skype) கொண்டு பேச இயலாது. செக்ஸ் வலையகம் செல்வதற்கு தடா. பக்கத்து சீட்டுக்காரர் உங்களைப் பார்த்ததால் கிடைத்த மன உளைச்சலுக்கு வழக்கு தொடுத்தால், ஏற்கனவே திவாலாகும் நிலையில் உள்ள யுனைடெட் ஏர்லைன்ஸ், மொத்தமாக மூழ்கிவிடாதா?

விமானத்தில் மூணு டாலர் கொடுத்து உருளை வறுவல் கொறிப்பதற்கு பதிலாக, இணைய வறுவல் நொறுக்க தயாரா?

புத்தக லிஸ்ட்

மே 20 முதல் மூன்று வார சென்னைப் பயணத்தில் வாங்க நினைக்கும் புத்தகப் பட்டியல்:

  1. உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) –  பக்கங்கள் 112. விலை ரூபாய் 65. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்
  2. ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – பக்கங்கள் 168. விலை ரூபாய் 95. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்
  3. இலக்கிய உரையாடல்கள் (நேர்காணல்களின் தொகுப்பு): ஜெயமோகன் & சூத்ரதாரி – Rs.150.00; பதிப்பாளர்: எனிஇந்தியன்; பக்கங்கள்: 288
  4. அம்மன் நெசவு: சூத்ரதாரி – Rs.70.00; பதிப்பாளர்: தமிழினி
  5. மீஸான் கற்கள்: புனத்தில் குஞ்ஞப்துல்லாதமிழில்: குளச்சல் மு. யூசுப்; Rs.150.00; பதிப்பாளர்: காலச்சுவடு
  6. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை: நாஞ்சில் நாடன்; Rs.60.00; பதிப்பாளர்: காலச்சுவடு
  7. அஞ்சலை: கண்மணி குணசேகரன்; Rs.160.00; பதிப்பாளர்: தமிழினி
  8. ரப்பர் (நாவல்): ஜெயமோகன் – Rs.75.00; பதிப்பாளர்: கவிதா
  9. உண்மை கலந்த நாட்குறிப்புகள்: அ. முத்துலிங்கம் – Rs.170.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 287
  10. ஏழாம் உலகம்: ஜெயமோகன் – Rs.170.00; பதிப்பாளர்: தமிழினி
  11. எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்: சாருநிவேதிதா – Rs.60.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 104
  12. என் வீட்டின் வரைபடம்: ஜே. பி. சாணக்கியா; Rs.75.00; பதிப்பாளர்: காலச்சுவடு
  13. தமிழ் மண்ணின் சாமிகள்: மணா; Rs.50.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 80
  14. கூளமாதாரி: பெருமாள் முருகன் – Rs.90.00; பதிப்பாளர்: தமிழினி
  15. டேபிள் டென்னிஸ்: கோபிகிருஷ்ணன்; Rs.15.00; பதிப்பாளர்: தமிழினி
  16. வெள்ளெருக்கு: கண்மணி குணசேகரன் – Rs.90.00; பதிப்பாளர்: தமிழினி
  17. கு.அழகிரிசாமி கடிதங்கள் – கி.ரா.வுக்கு எழுதியது: Rs.140.00; உயிர்மை; பக்கங்கள்: 238
  18. சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்: ஜெயமோகன் – Rs.100.00; உயிர்மை; பக்கங்கள்: 216
  19. கிருஷ்ணப் பருந்து: ஆ.மாதவன் – Rs.35.00; அன்னம்; பக்கங்கள்: 75
  20. கங்கணம்: பெருமாள்முருகன் – RS 235/-
  21. வட்டத்துள்:வத்சலா – Rs.175.00 – உயிர்மை; பக்கங்கள்: 300
  22. ஒரு பனங்காட்டுக் கிராமம்: மு.சுயம்புலிங்கம் – Rs.90.00; உயிர்மை; பக்கங்கள்: 160
  23. வார்ஸாவில் ஒரு கடவுள்: தமிழவன் – Rs.275.00; உயிர்மை – பக்கங்கள்: 438
  24. நான் பேச விரும்புகிறேன்: ச.தமிழ்ச்செல்வன் – Rs.150.00; வம்சி புக்ஸ் – பக்கங்கள்: 152
  25. மிதமான காற்றும் இசைவான கடலலையும்: ச.தமிழ்ச்செல்வன் – Rs.150.00; தமிழினி; பக்கங்கள்: 223
  26. பேசாத பேச்செல்லாம்: தமிழ்ச்செல்வன்- RS 80 /-
  27. சொல்லில் அடங்காத இசை: ஷாஜி; தமிழில்: ஜெயமோகன்: Rs.120.00; உயிர்மை; பக்கங்கள்: 200
  28. பாபுஜியின் மரணம்: நிஜந்தன் – Rs.120.00; உயிர்மை; பக்கங்கள்: 208
  29. மேகமூட்டம்: நிஜந்தன்உயிர்மை; Rs:90.00
  30. மரம்: ஜீ. முருகன் உயிர்மை; Rs:140.00
  31. கண்ணகி: சு.தமிழ்ச்செல்வி உயிர்மை; Rs:120.00
  32. பல நேரங்களில் பல மனிதர்கள்: பாரதி மணி உயிர்மை; Rs: 100.00
  33. வெளிச்சம் தனிமையானது: சுகுமாரன் உயிர்மை; Rs: 120.00
  34. ஏறுவெயில் (நாவல்): பெருமாள்முருகன்: காலச்சுவடு: ரூ. 160
  35. சாயாவனம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்): சா. கந்தசாமி: காலச்சுவடு: ரூ. 150
  36. பள்ளிகொண்டபுரம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்): நீல. பத்மநாபன்: ரூ. 225
  37. சில தீவிர இதழ்கள் (கட்டுரைகள்): காலச்சுவடு: கல்பனாதாசன்: ரூ. 225
  38. வடு: கே.ஏ.குணசேகரன் : காலச்சுவடு: Rs.65.00
  39. வாடிவாசல் (நாவல்): சி. சு. செல்லப்பா : காலச்சுவடு: ரூ. 40
  40. சாய்வு நாற்காலி (நாவல்): தோப்பில் முஹம்மது மீரான் : காலச்சுவடு: ரூ.175
  41. ஒரு கடலோர கிராமத்தின் கதை (நாவல்): தோப்பில் முஹம்மது மீரான் : காலச்சுவடு: ரூ.150
  42. பொய்த் தேவு (நாவல்): க.நா. சுப்ரமண்யம் : காலச்சுவடு: ரூ. 150
  43. வேள்வித் தீ (நாவல்) : எம்.வி. வெங்கட்ராம் : காலச்சுவடு: ரூ. 90
  44. புனலும் மணலும் (நாவல்): ஆ. மாதவன் : காலச்சுவடு: ரூ.90
  45. நான் காணாமல் போகும் கதை (குறுநாவல்): ஆனந்த் : காலச்சுவடு: ரூ.50
  46. போரின் மறுபக்கம்: ஈழ அகதியின் துயர வரலாறு – (அகதியின் அனுபவங்கள்): தொ. பத்தினாதன் : காலச்சுவடு: ரூ.175
  47. அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப் (வாழ்க்கைச் சித்திரம்): பழ. அதியமான் : காலச்சுவடு: ரூ.75
  48. உபதேசியார் சவரிராயபிள்ளை – யோவான் தேவசகாயம் சவரிராயன்: (ப-ர்) ஆ. சிவசுப்பிரமணியன் : காலச்சுவடு: ரூ.175
  49. ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்(அனுபவப் பதிவு): டி.வி. ஈச்சரவாரியர்: தமிழில்: குளச்சல் மு. யூசுப் : காலச்சுவடு:  ரூ.100
  50. ஜானு (ஸி.கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு): பாஸ்கரன்: தமிழில்: எம். எஸ். : காலச்சுவடு: ரூ. 40

    பட்டியல் அவ்வப்போது சேகரிக்கப்படும். உங்கள் பரிந்துரை ஏதாவது இருந்தால் சொல்லுங்க…

    Campaign Biodata: Tamil Murasu Thala Datasheets

    பெயர் : சிரஞ்சீவி
    பிறந்த தேதி : 22-8-1955 (வயது 53)
    தலைவர் : பிரஜா ராஜ்யம்
    கட்சி தோற்றம் : 100 நாளை தாண்டிவிட்டது
    மாநிலம் : ஆந்திரா
    இதற்கு முன் : நடிகர்
    பட்டம் : மெகா ஸ்டார்
    1978 : முதல் சினிமா
    திருமணம் : 1980
    பிடித்த ஹீரோயின் : ஹேமமாலினி
    அதிக படங்களில்
    ஜோடி : விஜயசாந்தி (19 படம்)
    திருப்பம் : அரசியலில் குதிப்பு
    தேர்தலில் : தனித்து போட்டி
    களம் : சட்டசபை, மக்களவை
    நடிகை ரோஜா : அன்று கதாநாயகி, இன்று வில்லி
    நம்புவது : சினிமா கவர்ச்சி
    எதிர்பார்ப்பு : முதல்வர் பதவி
    முன்னுதாரணம் : என்.டி.ஆர்.
    கடந்தகாலம் : படப் பெட்டியில்
    எதிர்காலம் : ஓட்டுப் பெட்டியில்
    ரிலீஸ் : 16ம் தேதி


    தல!
    பெயர் : நிதிஷ்குமார்
    பிறந்த தேதி : 1-3-1951 (வயது 58)
    கட்சி : ஐக்கிய ஜனதா தளம்
    மாநிலம் : பீகார்
    சின்னம் : அம்பு
    இதற்கு முன் : 6 முறை எம்.பி.,
    மத்திய அமைச்சர்,
    முதல்வர்
    இப்போது : முதல்வர்
    2004 தேர்தலில் : 8 எம்.பி.க்கள்
    சாதனை : 15 ஆண்டு லாலு
    ஆட்சிக்கு முற்றுப்புள்ளி
    இருப்பது : தே.ஜ. கூட்டணியில்
    போட்டி : 25 தொகுதியில்
    லட்சியம் : லாலு அண்ட் கோவை வீழ்த்துவது
    பிரதமர் பதவி : இருப்பதில்
    நீடித்தால் போதும்


    பெயர் : ராமதாஸ்
    கட்சி : பா.ம.க.
    தொழில் : அரசியல்
    கொள்கை : சூழ்நிலையை பொறுத்து
    எப்போதும் : கூட்டணி
    இருப்பதில்லை : ஒரே அணி
    சென்னை வரை : அன்பு சகோதரி
    டெல்லி வரை : அன்பு மணி
    நிரந்தர முகவரி : தைலாபுர தோட்டம்
    தற்காலிக முகவரி : போயஸ் தோட்டம்
    பிடித்த நிறம் : பச்சை
    பிடித்த கேம்ஸ் : லாங்க் ஜம்ப்
    பிடித்த சினிமா : குரு என் ஆளு
    பிடித்த பாட்டு : மாம்பழமாம் மாம்பழம்…
    (சினிமா பாட்டல்ல)
    பிடித்த சபா : ராஜ்யசபா
    2004 தேர்தலில் : சூரியனோடு
    2009ல் : இலையோடு
    நம்புவது : இலங்கையை
    நம்பாதது : கையை
    எலக்ஷனில் : நிற்பதில்லை
    மகனை : நிறுத்துவதில்லை
    சாதனை : தாவுவதில்
    தவறு : மரம் வெட்டியது
    பரிகாரம் : செடி நடுவது
    லட்சியம் : அணிமாறுவதில் கின்னஸ்



    பெயர் : சந்திரசேகர ராவ்
    பிறந்த தேதி : 17-2-1954 (வயது 55)
    மாநிலம் : ஆந்திரா
    தாய் வீடு : தெலுங்கு தேசம்
    தனிக்குடித்தனம் : தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி
    காரணம் : தெலுங்கானா
    சின்னம் :கார்
    இதற்கு முன் : எம்.எல்.ஏ., மத்திய அமைச்சர்
    2004 தேர்தலில் : காங்கிரஸ் கூட்டணி
    கிடைத்தது : 5 எம்.பி., 26 எம்.எல்.ஏ.
    ஆட்சியில் பங்கு : மத்தியிலும், மாநிலத்திலும்
    13-9-2006 : ஆதரவு வாபஸ்
    காரணம் : தெலுங்கானா
    2009 தேர்தலில் : மூன்றாவது அணி
    எத்தனை சீட்? : கிடைத்த வரை லாபம்
    சாதனை : பிரிந்து வந்த கட்சியுடன் கூட்டு
    மகா சாதனை : விஜயசாந்தி கட்சி இணைப்பு
    காரணம் : தெலுங்கானா

    Why should you vote for DMK Alliance?

    கமல் மீது என்ன கோபம்?

    Movie-Location-Shooting-Spot-Films-Street-Disruptionமவுஸைக் க்ளிக் செய்வதில் கூட ஓரவஞ்சனை செய்வது பிடித்திருக்கிறது. இடது பக்கத்தை இரு முறை இரு முறையாக அடுக்குத் தொடர் தொடல்கள். ஆனால், எப்பொழுதாவது மட்டுமே வலப்பக்க விசை திருகப்படுகிறது. முக்கியமான மெனுக்கள் வலப்பக்கம் தொட்டால் மட்டுமே வந்து விழும். எனினும் இடப்பக்கம் தொட்டு தொட்டு தேய்ந்து போன உணர்வு.

    எனக்கு ரஜினி இடப்பக்க மவுசு. கமல் வலப்பக்க எலி கிராக்கி.

    ஏன் இப்படி ஆகிப் போனது? டாக்டர் ருத்ரனிடமோ ஆவி மாத்ரூபூதத்திடமோ மானசீகமாக வினவ வேண்டும். அதற்கு முன்னரே இன்று விடை கிடைத்தது.

    நாம் சரியாக செல்லும் பொழுதெல்லாம் இரயில் தாமதமாக ஓடும். என்றாவது அரைக்கால் விநாடி பிசகினால், நேரந்தவறாமையாக ட்ரெயின் ஓடியே போய் விடும்.

    இன்று முந்தைய மண்டகப்படி. நான் டிக்கெட் வாங்கி டாணென்று இருவுள் நிலையத்தில் காத்திருக்க, பணம் வாங்கியபின் கால்ஷீட் கொடுக்க மறுக்கும் நடிகராக ட்ரெயின் ஏதோ யோசனையில் லேட்.

    திங்கள்கிழமை மங்கள்வார் எனப்படும். பாஸ்டன் கோடையை வரவேற்க ஜெயராஜ் ஓவியங்கள் சாலையில் உலா வரும் காலை ஒளிக்கதிர் நேரம். காலை ஒன்பதரை சந்திப்புக்கு ஓடும் அவசரம். ஒவ்வாமைத் தும்மல் ஒரு புறம். (வாசிக்க: My Allergy to Rising Sun & Two Leaves) கோடாங்கி முடிச்சுடன் முழங்கால் பாவாடை சரசரக்க கவனம் கலைப்பவர் இன்னொரு புறம்.

    சிந்தனை வட்டத்தை நிறுத்தி தடுத்தாட்கொண்டார் குளிராடி குண்டர். கூடவே அல்லக்கை குண்டர்.

    ‘தயவு செய்து நில்லுங்கள். நீங்கள் எப்பொழுது செல்ல வேண்டும் என்று நாங்கள் சொல்வோம்!’

    ‘எதுக்கு? “நட ராசா” என்று பச்சை விளக்கு எரியுது… என்ன விட்டுடு! எனக்கு நேரமாச்சு!’

    பதில் கொடுக்காத மரியாதை. பயில்வான் உடம்பு. பெரிய வெள்ளை பேனர். ட்ராலியில் கேமிரா. பாஸ்டன் தெருவில் ஒத்திகையாக ஓடிப் பிடித்து விளையாடுபவர்களை அது சக்கரம் மாட்டித் துரத்தியது.

    ‘ஏய்… பென் அஃப்லக் வந்திருக்கானாம்!’, ‘கெவின் காஸ்னர் தெரிகிறானா பாரேன்!’ ஷூட்டிங் பார்க்க வந்த கும்பலில் ஒருவனாய் நிறுத்தப் பட்டிருக்கிறேன்.

    Kamalahassan

    Kamalahassan

    இப்பொழுது ஃப்ளாஷ்பேக்; கருப்பு வெள்ளைக்கு மாறிடலாம்.

    ‘தொம்’ என்று சத்தம். மீண்டும் மொட்டை மாடியில் பக்கத்து வீடு, எதிர்த்த வீட்டு, கோடியாத்துப் பசங்க ஓடிப்பிடித்து விளையாடுகிறார்கள் என்று சூலம் இல்லாத துர்கையாக மாறிய அக்கா விடுவிடுவென்று மாடி ஏறுகிறார். அங்கே தடிதடியென்று தடியன்கள் குதித்தோடுகிறார்கள்.

    ‘யாரும்மா அங்கே! ஷாட் எடுக்கப் போறோம்மா… ஒதுங்கி நில்லு’

    ‘எங்க வீட்டு மாடி. நான் நிற்பேன்; படுப்பேன்; சூரியக்குளியல் போடுவேன். நீ யாரு ஒதுங்க சொல்ல? வாட்டர் டேங்க் மேல குதிச்சா, உடஞ்சி போனா உங்கப்பனா வந்து காசு கொடுப்பான்? யாரு இங்கே ப்ரொட்யூசர்? கூப்பிடு அவன… ஏற்கனவே விரிசல் விட்டதுக்கு நஷ்ட ஈடு தந்தாத்தான் மேல ஒரு எட்டு வெக்க முடியும்’

    சுத்துப்பட்டி மாட வீதி முச்சும் பாத்துண்டிருக்கு. ‘விக்ரம்’ கமலுக்கு தர்மசங்கடம். லிஸியுடனோ அம்பிகாவுடனோ கொஞ்சவே நேரம் போதவில்லை. நேரில் வரவில்லை.

    தெருக்காரர்களுக்கு ‘எங்க தெருவும் “வனிதாவணி… வன மோகினி” பாடல் பெற்ற தலம்’ என்று சொல்ல முடியாமல் போயிடுமோ என்னும் வருத்தம் கலந்த கோபம். ‘கமல் மட்டும் வந்து மன்னிப்பு கேட்டுட்டாருன்னா அவரோட கெத்து என்னாறது?’ என்று வம்புக் கூட்டம். ‘அவங்க வீட்டுக்கு வந்தா எங்க வீட்டுக்கும் வரவெச்சிடுவேன்’னு முறைவாசல் கும்பல்.

    கமலும் கடைசி வரை வரவில்லை. ஆபீஸ் மேனேஜரும் உடைந்த சிமென்ட் பலகைக்கு எட்டணா கூட சுண்டவில்லை. ஆனால், அம்மா, அப்பா, அடியேன் இறைஞ்சலுக்கும், கொஞ்சலுக்கும், மிரட்டலுக்கும் அடிபணியாமல் மேலும் tan ஆகிக் கொண்டே அன்று படப்பிடிப்பை ரத்து செய்யவைத்த புகழ் அக்காவை சென்றடைந்தது.

    அந்த வீரம் என்னுள் பாஸ்டனில் எட்டிப் பார்த்தது.

    குண்டன் அசந்த நேரம் நடு வீதியில் சாவதானமாக நடக்க ஆரம்பித்தேன். என்னைப் பார்த்து பின் தொடரும் நிழலின் குரலாக ஸ்கர்ட்டுகளும், சூட்டுகளும் கடுக்கா கொடுத்து மிடுக்காக வந்தன. பாதி வழியில் உக்கிர பார்வையுடன்… குளிர் கண்ணாடி வழி உக்கிர பார்வை எப்படி தெரியும் என்கிறீர்களா? அது சரி, கையை உயர்த்தி நாலு பேர் வந்தார்கள்.

    நிலைமையை உணர்ந்த போலீஸ், ‘அவங்களப் போக விடுங்க’ என்றதும் ‘அய்யய்யே… கட்’ என்று கல்லுக்குள் நிழலாய் எங்கோ ஒலி.

    செய்தி: Kevin Costner: actor, director, crooner – The Names Blog – Boston.com: “Boston shooting ‘The Company Men’ with Ben Affleck, Tommy Lee Jones, Chris Cooper and Maria Bello.”

    முந்தைய கமல் புராணம்:

    1. Daedalus & Kamalhasan

    2. ஆளவந்தான்

    3. Dasavatharam – Minute details, questions, trivia, goofs, movie connections

    Dinamani Cartoons: DMK JK Ritheesh Special

    ஆஸ்பத்திரி – சுதேசமித்திரன்: புத்தக விமர்சனம்

    காக்டெயில் தந்த போதையில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு கலந்த ஆர்வத்துடன் வாங்கி, உடனடியாக வாசிக்கவும் எடுத்த புத்தகம்.

    ஒரு தப்படி கூட தவறவிடாத நெத்தியடி. படித்து முடித்தவுடன் ட்விட்டியது:

    சுதேசமித்திரனின் ‘ஆஸ்பத்திரி’ (உயிர்மை வெளியீடு) வாசிக்கிறேன். சாருவின் பாணி என்று சொல்லப்பட்டாலும் சாருவை விட 1001 தடவை நல்லாருக்கு. – February 9th, 2009


    அம்ருதா – விஜய் மகேந்திரன்:

    வெறும் கதை சொல்லல் மட்டும் நாவல் அல்ல. தமிழ் நாவல்களில் பல புதுவகையான உத்திகள் கையாளப்பட்டன. அதில் நான் லீனியரும் ஒன்று. கை போன போக்கில், எழுதிச் செல்வது, முன் மாதிரியான முடிவுகள் எதுவும் வைத்துக்கொள்ளாமலே, ஊடே ஆசிரியரின் மனமொழி இவற்றில் வெளிப்படும்.

    பெரும்பாலும் நான் லீனியர் முறையில் எழுதப்படும் கதைகள் தமிழில் கவனத்தைப் பெறுவதில்லை. காரணம் இந்த எழுத்து முறையை கையாள்பவருக்கு அதீத மொழிநுட்பமும், சரளமான மொழிநடையும் அவசியம். அவ்வாறு இல்லாவிட்டால் ஆசிரியர் இதைத்தான் சொல்ல வருகிறார் என்பதே புரியாமல் போய் விட வாய்ப்புகள் அதிகம்.

    சுதேசமித்திரனின் “ஆஸ்பத்திரி” நான்-லீனியர் முறைப்படி எழுதப்பட்டுள்ௗ நாவல் என்றாலும் அந்த முறைமைக்குள் மட்டும் முற்றிலும் அடக்கிவிட முடியாத நாவல். இரு மகன்கள் மற்றும் அவர்களது அப்பாவின் மரணம் நிகழும் ஆஸ்பத்திரியையும் மையமாக கொண்டு, முன், பின்னாக சம்பவங்களைக் கோர்த்து “ஆஸ்பத்திரி” என்ற ஸ்தாபனத்தின் மீதான தனது விமர்சனங்கௗயும், ஆற்றாமைகளையும் முன் வைக்கிறார்.

    “கொலை செய்வதற்கு எனப் பிரேத்யேகமான சில இடங்கள் உண்டு” என்ற வாசகத்துடன் இந்நாவல் ஆரம்பமாகிறது.

    அப்பா உயிருக்காக போராடிக் கொண்டிருந்த போது, நாங்கள் வீட்டில் இந்தியா-ஆஸ்திரேலியா இரவு மேட்ச் டிவியில் பார்த்துக் கொண்டிருந்தோம். ஸ்ரீகாந்த் பேட் செய்து கொண்டிருந்தார் எனவும் நாவலின் ஆரம்பத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்த ஒருவரி கதை நடைபெறுவது கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்பதைக் குறிப்பால் உணர்த்திவிடுகிறது.

    பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ வசதிகள் இந்த அளவு எல்லா மருத்துவ மனைகளிலும் பரவலாக்கப்படவில்லை. முக்கியமாக, சென்னையில் இரு பெரும் மருத்துவமனைகள் அனைத்து வசதிகளையும் கொண்டிருந்தது என்பதையும் நாம் நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம். அந்த இரு மருத்துவமனைகளில் வசூலிக்கும் கட்டணங்கள் நடுத்தர வர்க்கத்தினரின் தரத்தை விட மிக அதிகமாக இருந்ததால் வேறு வழியில்லாமல், சொத்துக்களை விற்று, அங்கு மருத்துவம் பார்த்தவர்களையும் நானே கண்டிருக்கிறேன். அங்கு ஒரு நாளைக்கு ஐ.சி.யூ.வில் இருக்க வசூலிக்கப்படும் கட்டணம், இன்று சென்னையில் சாப்ட்வேர் இஞ்சினியராக இருப்பவரின் ஒரு மாதச் சம்பளம் ஆகும்.

    நடுத்தர வர்க்கத்தினரின் தரவை மட்டுமே பெரும்பாலும் நம்பி நடைபெறும் இம்மருத்துவமனைகளில் அவர்கள் மருந்துக்குக் கூட மதிப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். அதை பல்வேறு இடங்களில் நாவலில் சுவாரசியமாக பதிவு செய்துள்ளார் சுதேசமித்தரன். பணக்காரராக இருப்பின் வெளிநாடுகளிலும், ஏழையாக இருப்பின் அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவம் பார்த்துக் கொள்வது சகஜம். ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டியுள்ளது. இதற்கு இந்நாவலில் தகுந்த காரணத்தையும் விளக்கியுள்ளார்.

    சுதேசமித்திரனின் முந்தைய நாவலான “காக்டெய்லை” விட பல படிகள் உயர்ந்து நிற்கக் கூடியது ஆஸ்பத்திரி. மெல்லிய அங்கதமும், சுவாரஸ்யமான எழுத்தின் வேகத்தோடும் சேர்த்து சிறந்த கதை ஒன்றையும் சொல்லி விடுகிறார். நான்-லீனியரில் கதை சொல்வது கடினம், ஆனால் அதையும் இஇதில் செய்து காட்டியிருக்கிறார்.

    உண்மைகள் உறவாடும் எழுத்துக்களில், நான்-லீனியரின் தனிக்குரலாக சுதேசமித்திரனின் ‘ஆஸ்பத்திரி’ நாவலை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

    வௌயீடு : உயிர்மை பதிப்பகம்
    பக்கங்கள் : 144
    விலை : ரூ.80/-


    நாஞ்சில் நாடன் முன்னுரையிலிருந்து:

    நாவல் வடிவம் சர்வ சுதந்திரங்களையும் வழங்கும் ஒன்று. அந்தச் சுதந்திரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எழுதப்பெற்ற நாவல் ஆஸ்பத்திரி. சுதேச மித்திரனின் சிறப்பு என அவரது மொழியையும், கழிவிரக்கமற்ற சுயஎள்ளலையும், அங்கதத்தையும், வெளிப்படைத்தன்மையையும் கருதுவதுண்டு. அச்சமற்று நினைத்ததை எழுத்தில் கொணரும் நேர்மையும் அவருக்கு உண்டு. அவை யாவும் இந்த நாவலில் தருணம் தெர்ந்து வெளிப்பட்டுள்ளன.

    இத்தனை வெளிப்படையான எழுத்து தமிழில் அபூர்வமானது. வாசகனைக் கூசச்செய்யும் உண்மை கொண்டு அறைவது. நேரடித்தன்மையும் நியாயமும் கொண்டது. மொழியைக் கையாளும் திறனும் தீவிரமும் கொண்டது எனவே தனித்தன்மையானது.

    அவரது பாதிப்பு முன்னோடியின் சிறகுக் கதகதப்பில் முடங்கிக் கொள்வதல்ல. சுறுசுறுப்பாய் கொத்தித் திரிவது, சிறகடித்துப் பறக்க முயல்வது, சொந்தமாய் இரைதேட வல்லது.

    பன்முகப்பட்ட உடல் சிக்கல்களுக்காக மருத்துவமனையும் வீடுமாக அலைக்கழியும் தகப்பனாரையும் மருத்துவமனையையும் அவரது இரண்டு மகன்களையும் முக்கியக் கதாபாத்திரங்களாகக் கொண்டது. மருத்துவமனைகளின் செயல்பாடுகளை அங்கதத்துடன் காட்டமாய் விமர்சனம் செய்வது. அதைப் பயன்படுத்தி சமூக விமர்சனம் செய்வது.

    மருத்துவமனையில் அப்பாவை அனுமதித்ததே அவரைக் கொலை செய்வதற்கான முகாந்திரம்தானோ எனும் ஐயத்துடன் தொடங்கும் நாவல், அவரை மின் மயானத்தில் எரியூட்டி முடிந்த பின்பும் அந்தக் கேள்வியுடன்தான் முடிகிறது –

    இந்த நாவலில் கொலை நடந்ததா இல்லையா என்று?


    சுதேசமித்திரன் வலையுரை:

    கவிஞர் விக்ரமாதித்யனுக்கு எனது அன்பு கலந்த நன்றியை இப்போதே வெளியிட்டு விடுகிறேன். எனது முதல் புத்தகமான அப்பா (கவிதைகள்) வெளிவந்தபோது விக்ரமாதித்யன் என்னிடம் தன் இசைவின்மையை மிகவும் மென்மையாக வெளியிட்டார்.

    அயல் மொழிகளில் ஒரே வி்ஷயத்தை வேறு வேறு வடிவங்களில் எழுதிப் பார்க்கும் வழக்கம் உண்டு என்பதைக் குறிப்பிட்டு, நீங்கள் ஏன் இதை வேறு வடிவத்தில் எழுதிப் பார்க்கக்கூடாது என்று அவர் கேட்டார்.

    ‘அப்பா’வைப் பொறுத்தவரை அது அந்த வடிவத்தில் எழுதப்பட்டதுதான் புதிது என்பதை நான் நன்கறிவேன் என்பதால் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் (அப்பா எழுதிய காலத்திலிருந்து கணக்கிட்டால் 11 வருடங்கள்) கழித்து ஆஸ்பத்திரியை ஒரு சிறுகதையாக முதலில் எழுதினேன். சிறுகதை என்கிற அளவில் அது சிறப்பானதாகவே இருந்தபோதும் எழுதியவனின் மனத்துள் கொட்டிக் கிடக்கும் மிச்ச சொச்ச சரக்கை உத்தேசித்து அதை முழுமையாக எழுதி விடுவதுதான் சரியானது என்பதாக தோன்றிக்கொண்டேயிருந்தது. கிட்டத்தட்ட இருபதே நாட்களில் அதைச் செய்து முடித்துவிட்டேன். முடித்துவிட்டு ஒரு முறை வாசித்துப் பார்த்தபோது, விக்ரமாதித்யன் சொன்னதைத்தான் ஓரளவு முயன்று பார்த்திருக்கிறேனோ என்கிற வியப்பு என்னுள் எழுந்தது. அது உண்மையானால் அவருக்கு இன்னுமொரு முறை நன்றி.


    என்னுரை

    கதை சொல்லும் கலை என்றால்:

    • இயல்பு, எதார்த்தம் என்று உதார் விடுவிடாமல் உண்மை நிலையை பிரதிபலிக்குமா?
    • உவமை, ஒப்புமை, எடுத்துக்காட்டு எல்லாம் எப்பொழுது வெற்றிபெறும்?
    • எங்ஙனம் கதாபாத்திரத்தை மனசுக்குள் உட்கார்த்தி நிரந்தர படுக்கையறை உருவாக்குவது?
    • விவரணை எப்படி தேவையில்லாமல் போகிறது? விவரிப்புக்கும் தகவல்களுக்கும் எங்கே முக்கியத்துவம் கிடைக்கிறது?
    • கதாசிரியர் கருத்து, வாசகரின் எண்ணவோட்டம், கதைசொல்லியின் இயக்கம், கதாமாந்தரின் நியாயம் எல்லாம் எப்படி ஒன்றுக்கொன்று உரசாமல் உலாவுகிறது?
    • அட… கற்பனை மனிதர் மேல் கழிவிரக்கம் தோன்றுவது ஏன்?

    இதெல்லாம் சுதேசமித்திரனின் ஆசுபத்திரியில் சாத்தியமாவதால் நிறைந்த வாசக அனுபவம் கிடைக்கிறது.

    சாரு நிவேதிதா – ராஸ லீலா: புத்தக விமர்சனம்

    எங்கேயோ, எப்பொழுதோ, ஃப்ரீயாக கிடைப்பதால் பினாயில் குடிக்கும் தமிழன் ஆகாமல், இரப்பவருக்கு இடவேண்டிய தட்சிணையாக புத்தகத்தை வாங்கிவிட வேண்டும் என்று வாசித்த நினைவு. கருத்தை சொன்னவர் இவராக இருக்கலாம்.

    சாருவின் எழுத்து இலவசமாகக் கிடைக்கிறது. அதற்காகவே சாருநிவேதிதாவின் ராஸலீலா வாங்கினேன்.

    சாருவின் புதிய புத்தகங்கள் குறித்த அறிவிப்பு பார்த்தவுடன், படித்து முடித்த ராஸ லீலா பற்றி, சமீபத்தில் மிகவும் பிரயத்தனப்பட்டு கொணர்ந்த இரண்டு வரி:

    பாத்ரூமில் வைத்திருந்த சாருவின் ‘ராஸ லீலா’, சுத்தம் செய்ய பேப்பர் கிழிக்கும் அவசரத்தில் தவறுதலாக குப்பைத் தொட்டியில் விழுந்துவிட்டது. – Mar 5

    இவ்வளவு சிறிய விமர்சனம் ஆகாது என்றால், கொஞ்சம் பெரிய அலசல்: வார்த்தைகளின் விளிம்பில்: Rasa Leela review

    நானூறு ரூபாயை சாருவிற்கு தர விருப்பமிருந்தால், நேரடியாக டிடி எடுத்து அனுப்பி விடவும். ராச லீலாவிற்கு செலவழிப்பதை புத்தகம் வாயிலாக ஆசிரியர் வார்த்தையில் சொல்வதானால்: (பக்கம் 286)

    ‘நான் இப்போது ஒரு நம்பிக்கை துரோகம் செய்து கொண்டிருக்கிறேன்.’

    Stage Friends USA & New England Tamil Sangam: Crazy Mohan’s Tenant Commandments

    சென்ற வருடம் சென்னையில் ‘சாக்லேட் கிருஷ்ணா‘ தரிசனம். அதிலே வந்தவர் கிரேசி மோகனும் மாது பாலாஜியும். அந்த முப்பதாண்டு கால மேடை அனுபவத்திற்கு நிகரான நாடகத்தை நிகழ்த்திக் காட்டினார்கள் நியூ ஜெர்ஸி ஸ்டேஜ் ஃப்ரென்ட்ஸ் குழு.

    எஸ் வி சேகர் நடித்து சுந்தா இயக்கிய ‘ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது‘ நாடகம். அன்றைய மதராஸில் வாடகைக்கு வீடு கிடைப்பது கஷ்டம். கைக்குழந்தை இருந்தால் மொசைக் தரை பாழாகி விடும் என்று நிராகரிப்பார்கள். அதற்குப் பதிலாக வளர்ந்த குழந்தை இருந்தாலோ, வயசுப்பயன், பிரும்மச்சாரி சேஷ்டை என்று புதிய காரணம் கண்டுபிடிப்பார்கள். வீடு வாங்குவதற்கோ ரொக்கத் தொகை கொண்டு கிரயம் முடிக்கவேண்டும். திவாலாகும் சிட்டி பேங்கும், கூவிக் கூவி வீட்டுக்கடன் தரும் ஐசிஐசிஐயும் உதயமாகாத எண்பதுகளில் கிரேசி மோகனால் எழுதப் பட்டது.

    இவ்வளவு சிரமதசையில் வாடகை வீடு கிடைத்தால், அதை எவராவது காலி செய்வார்களா?

    இதுவே எண்பதுகளின் சூப்பர்ஹிட் நாடகத்தின் கரு. அதை அமெரிக்காவிற்கு ஏற்றபடி Enfamilம், மில்லேனியத்திற்கு ஏற்றபடி ஸ்வைன்ஃப்ளுவும் கொண்டு உற்சாகம் கொப்புளிக்க படைப்பு மெருகேற்றி இயக்கியுள்ளார் குரு.

    வளைகுடாவில் வின்டோஸ் வெளியானால் கூட அராபிய மொழியில் வெளியாகும். அதே போல் அமெரிக்காவில் அசலில் இருந்த கபாலி கோவில் தெப்பக்குளமும், 200 ரூபாய் வாடகையும் அப்படியே வைத்திருப்பதற்கு பதில் பாஸ்டன் காம்ன்ஸையும் டாலர் சோகத்தையும் பாலயோகிக்கு பதில் மகாலஷ்மி கோவிலையும் கொணர்ந்திருக்கலாம். அன்றும் இன்றும் பாகிஸ்தான் ஊடுருவல் தொடர்வதுதான் நகைச்சுவை நாடகத்தின் சோக மெஸேஜ்.

    தமிழக சபாக்களில் நாடகம் பார்த்தால் முசுடுக்களையும் சிரிக்க வைக்க சில உபாயம் கையாள்வார்கள். முக்கியமான வசனத்தை சொன்னவுடன் ‘டொய்ங்ங்ங்ங்…’ என்று சத்தம் ஒலிக்கும். இன்னொரு விலா நோகவைக்கும் உரையாடல் முடிந்தவுடன் ‘ட்ட்டுர்ர்ருக்க்க்…’னு பிறிதொரு சவுண்ட் கொடுப்பார்கள். அதெல்லாம் பாஸ்டனில் கொடுக்காததாலோ என்னவோ, சிரிப்பு மழை பொழியாமல் அமைதி காத்தார் பார்வையாளர். அடுத்த முறை ஒரு கை ஓசையாக cue தந்தால் நாங்களும் இரு கைத்தட்டலாக புன்னகைப்போம் என்று நம்புகிறேன்.

    nj-drama-tenant-commandments-bosotn-performance

    ஸ்டேஜ் ஃப்ரென்ட்சிடம் மிகவும் பிடித்த விஷயம் அவர்களின் அரங்கப் பொருளின் பொருத்தமும் நிறைவான மேடை அமைப்பும். அது ஏனோ, இந்த தடவை, ரொம்ப எளிமையாக, நாட்டு நடப்பை பிரதிபலித்தது. அமெரிக்காவில் recession என்றால் ஸ்டேஜ் ப்ரென்ஸும், ஸ்டேஜை குறைத்து விட்டார்கள்.

    சாது சங்கரனின் நீண்ட தலைமுடியை வெட்டுவது கூட ஒரு டெனன்ட் கமான்ட்மென்ட் ஆக்கலாமே என்று நாடகத்தில் வருவதால் நிஜமாகவே கூந்தலை வளர்க்குமளவு கமிட்மென்ட் கொண்ட மோகன்; மீசையை முறுக்கி விட்டு அட்ஜஸ்ட் செய்துகொண்டே வீட்டு சொந்தக்காரராகவே ஆன ஆதிகேசவன் ஆகிய இருவரும் டாப் க்ளாஸ். குறையே சொல்ல இயலாத இயல்பான நடிப்பு.

    எஸ் வி சேகர் ஏற்று நடித்த பத்து என்னும் பத்மநாபன் பாத்திரத்தில் வந்த குருவும் ஹீரோ அய்யாசாமியாக வாடகைக்கு வந்து வீட்டை ஆக்கிரமிக்கும் இரமணி – இருவரும் தேவையானதை செய்துச் சென்றார்கள்.

    எஸ் வி சேகரின் ஏற்ற இறக்கங்களையும், நீட்டமான பத்திரிகை ஜோக்குகளையும் வெகு சாதாரணமாக சம்பாஷணையில் நுழைக்கும் சாமர்த்தியமும் பத்துவாகிய குருவிடம் கிடைக்கவில்லை. ஒரிஜினலில் அவர் சடாரென்று சென்னை மொழி பேசுவார்; அங்கிருந்து கிண்டல் மொழிக்கு தாவுவார். அவ்வளவு ஈடுகட்டாவிட்டாலும், குருவால் இன்னும் நிறைய முடிந்திருக்கும் என்பது ‘ரகசிய சினேகிதியே‘ போன்றவற்றால் தோன்றியது.

    அந்த மாதிரி அய்யாசாமி இரமணியும் வந்திருக்கும் உள்ளூர் கூட்டத்திற்கு இந்த அளவு நடித்தால் போதும் என்பது மாதிரி went through the motions. பாஸ்டனில் ஜே கே ரித்திஸ் படம் போட்டால் கூட ஹவுஸ் ஃபுல்லாக்கும் தமிழர்கள், இந்த மாதிரி நேரடி மேடை நிகழ்வுகளைக் காண ஏனோ வருவதில்லை.

    சில நண்பர்களிடம் நேற்று அழைப்பு விடுத்தபோது கூட ‘இலவசமா?’ என்றார்கள். ‘நீ நடிக்கிறாயா?’ என்றார்கள். பெரும்பாலான நியு இங்கிலாந்துக்காரர்களின் பழக்கதோஷம் இது. தெரிந்தவர்கள் பங்கேற்கிறார்கள் என்றால் மட்டுமே வருவார்கள். நுழைவுக் கட்டணம் நயாபைசா கிடையாது என்றால் நிச்சயம் நுறு மைல் தாண்டி நிகழ்ச்சி இருந்தாலும் தலைக்காட்டுவார்கள். குழந்தைகளின் திறமையை அரங்கில் செய்து காட்டலாம் என்றால் எப்பாடுபட்டேனும் அட்டென்டன்ஸ் இடுவார்கள். முன்னூறு மைல் தொலைவில் இருந்து பதின்மூன்று பேர் குழு இரத்தமும் சதையுமாக உயிரோட்டமான நாடகத்தை நடித்துக் காட்ட வருகிறார் என்றால் ஏனோ காணாமல் போனவர் ஆகிவிடுகிறார்கள்.

    தமிழ்ப்படங்களே தமிழில் தலைப்பு வைத்து வரிவிலக்குப் பெறுவது போல், நாடகத்தின் டைட்டிலை தமிழிலேயே பொருத்தமாக அமைத்திருக்கலாம். வடிவேலுதான் ‘தூக்கிக் காட்டு’வை காமெடியாக்கி, விவேக்கையும் ‘உவ்வேக்’காக தமிழ் சினிமா பாரம்பரியமாக்கி இருந்தால், இங்கும் R rated ஜோக் தூவப்பட்டிருக்கிறது. சிரிப்பை வரவைக்க அடல்ட்ஸ் ஒன்லி தேவையில்லை.

    நண்பர் கணேஷ் சந்திரா வில்லன் தோற்றத்துடன் குழந்தைசாமியாக வெகுளியானப் பாத்திரப்படைப்புக்கு வேண்டியதை அளவோடு வெளிப்படுத்தி இருந்தார்.

    இந்த வருடம் புதியதாக அரங்கேறிய ஆரோக்கியசாமி & நவநீதம், புதுசு என்பதே சொல்ல இயலாதவாறு திருப்திகரமாக நடித்தார்கள். பெருமாள் & ப்ரோக்கர் பரமசிவம் ஆகிய இருவரும் மோசம் இல்லையென்றாலும் opportunities for improvement என்று உடல்மொழியை சொல்லலாம். ‘நஷ்ட ஈடுநாதமுனி & கேடி செல்வராஜ் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை, செப்பனிடச் சொல்ல எந்தக் கருத்தும் இல்லாமல் செவ்வனே செய்திருக்கிறார்கள்.

    பெண்கள் இருவரும் இளைய தளபதி விஜய் திரையில் தோன்றும் கணந்தோறும் கையைக் காலை ஆட்டி உதறலை சமாளிப்பது போல் கொஞ்சமாய் அபிநய சரஸ்வதிகளாகி இருந்தார்கள்.

    நாடகம் முடிந்து திரும்பும் சமயத்தில் வானத்தைப் பார்க்குமாறு மகள் சொன்னாள். பிடித்தமான பாதி நிலவாக பெரிய அளவில் மேகங்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்டிருந்தார் சந்திரன். அப்படியே அதன் அருகில் பார்த்தால் கண்கூச வைக்கும் மெர்க்குரி விளக்கு வரிசை. ஒவ்வொரு விளக்கைச் சுற்றியும் நூற்றுக்கணக்கான விட்டில் பூச்சி. அத்தனையும் அந்த மஞ்சள் ஒளியை மொய்த்துக் கொண்டிருந்தன.

    மனிதகுலத்துக்கு மூத்த குலம் ஈக்களின் குலம். ஆதாம் ஏவாளும் மொகஞ்சதாரோவிற்கு வருவதற்கு முன்பே அங்கே எந்தையும் தாயும் கொஞ்சிக் குலாவிய பூச்சிக்கூட்டம். அந்தக் காலத்தில் நிலவொளி மட்டுமே ஆதாரம். நிலவைப் பின்பற்றிப் பறப்பவை நேர்க்கோட்டில் பறக்கும். இருட்டின் பயணத்திலும் இலக்கை அடையும்.

    ஆனால், இந்தக் கால ஈக்களுக்கு இடைஞ்சல் எக்கச்சக்கம். மெர்க்குரி, சோடியம், வெண்குழல், வடிவேலு, விவேக் விளக்கு என்று ரகவாரியாக வெளிச்சம் தரும் இரவுப் பயணத்தில் திக்கற்ற பார்வதியாக, செயற்கை மொழியில் மோதி மறைகின்றன.

    நியூ ஜெர்சி ஸ்டேஜ் ஃப்ரென்ட்ஸ்களும் அசலான நிலாவை குறிக்கோளாக கொண்டு, கிரேசி/எஸ் வி சேகர் சோடியம் வேபர் மயங்கி தடைப்படாமல் உச்சங்களைத் தொடர விழைகிறேன்.

    தொடர்புள்ள பதிவு:

    1. வெட்டிப்பயல்: Tenant Commandments – நான் பார்த்த நாடகம்: “ஸ்டேஜ் ஃபிரெண்ட்ஸ் (Stage Friends) நடத்திய டெனண்ட் கமெண்ட்மெண்ட்”

    2. New England Tamil Sangam: Chithirai Vizha Drama Photos « 10 Hot

    3. பாஸ்டனில் ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’