Daily Archives: பிப்ரவரி 4, 2008

சு.தமிழ்ச்செல்வியின் ‘அளம்’ நாவலிலிருந்து (கதிர்)

ஆரம்ப காலத்தில் இப்படித்தான் கடல் கொந்தளித்ததாம். எல்லோரும் உயிர் பிழைக்க எதிலெல்லாமோ புகுந்து கொண்டார்களாம். ஓர் ஆணும் பெண்ணும் மட்டும் தங்களுடைய வீட்டிலிருந்த சுரைக் குடுக்கைக்குள் புகுந்து கொண்டார்களாம்.

உலகத்திலுள்ள மரம் செடி கொடி உயிரினங்கள் மற்ற பொருட்கள் எல்லாம் அழிந்துவிட்டதாம். ஆனால் சுரைக்குடுக்கைக்கு மட்டும் எந்தச் சேதமும் ஏற்படவில்லையாம். வெள்ளம் வடியும் வரை தண்ணீரிலேயே மிதந்து கொண்டிருந்ததாம். சுரைக்குடைக்குள்ளிருந்த ஆணும் பெண்ணும் பலநாள் பட்டினியால் குடுக்கைக்குள்ளேயே மயங்கிக் கிடந்தார்களாம்.

வெள்ளம் வடிந்தபோது சுரைக்குடுக்கை ஏதோ இரண்டு பாறைகளுக்கிடையில் சிக்கிக் கொண்டதாம். நன்றாக வெயில் எரித்த போது, அந்த வெயிலின் சூட்டால் சுரைக்குடுக்கை வெடித்து அந்த ஆணும் பெண்ணும் வெளியே வந்தார்களாம்.

பாறைகளுக்கு நடுவில் கையில் வேல் வைத்துக் கொண்டு நின்ற ஒரு சாமியின் சிலை மட்டும்தான் இருந்ததாம். உலகத்தில் வேறு எதுவுமே இல்லையாம். அந்த ஆணும் பெண்ணும் சேர்ந்து அவர்கள் மூலமாகப் பெருகியவர்கள்தாம் மனிதர்கள் என்பது இந்த சனங்கள் அடிக்கடி சொல்லும் கதை.


தொட்டுக்க நகைச்சுவை: ஷாலினி, சென்னை.

‘தாத்தா…தாத்தா… நான் ஒண்ணு கேப்பேனாம்…நீ கரெக்ட்டா சொல்லிடுவியாம்…’

‘என்ன சொல்லு?’

‘ஆமையும் முயலும் நுழைவுத்தேர்வு எழுதிச்சாம். ஆமை 80 % எடுத்துச்சாம். முயல் 81 % எடுத்துச்சாம். ஆனா ஆமைக்குத்தான் ‘காடு‘ பொறியியல் கல்லூரில அட்மிஷன் கிடைச்சுச்சாம்….ஏன்?…சொல்லு’

‘ஆங்….தெரியலையே’

‘நீ ஒண்ணாங்கிளாஸ் படிக்கிறப்ப வந்த லெசன்ல முயலுக்கும் ஆமைக்கும் நடந்த போட்டில யார் ஜெயிச்சது?’

‘ஆமை’

‘அதான் தாத்தா…ஆமைக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில அட்மிஷன் கிடைச்சிடுச்சி…இதுகூடத் தெரியலை…சரியான மக்கா இருக்கியே?…’

The In-Laws – Michael Douglas & Albert Brooks (2003)

ஆல்பர்ட் ப்ரூக்ஸ் நடந்தால் சிரிப்பு வரும். ‘Defending Your Life’ போல் சிரித்தால் யோசனை வரும். கமல் போன்ற திறமையான இயக்குநர், நடிகர் கம் எழுத்தாளர். இந்தப் படத்தில் நாசர் ஏற்று நடிக்கும் முசுடு போன்ற கதாபாத்திரம்.

மைக்கேல் டக்ளஸ் வில்லத்தனம் செய்வார். காதல் மன்னனாக காத்தரீன் ஜீடா ஜோன்ஸையொத்த பெண்களை வலையில் வீழ்த்துவார். என்றாவது இவரைக் குறித்து இன்னும் விரிவாக எழுதவேண்டும். இந்தப் படத்தில் சத்யராஜ் போன்ற சகலகலா பேர்வழி ரோல்.

சூப்பர் பௌல் பார்த்து பேட்ரியாட்ஸ் தோற்ற சோகத்தைக் கழுவ இருவரும் நடிக்கிறார்கள் என்றவுடன் பார்க்க ஆரம்பித்த படம். தவற விடாமல் பார்க்கும் ‘பாஸ்டன் லீகல்‘ தொலைக்காட்சித் தொடரின் கான்டிஸ் பெர்கனும் கவுரவத் தோற்றத்தில் வந்துபோகிறார்.

ஒன்றரை மணி நேரம் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார்கள். கொஞ்சம் லாஜிக் கூட உண்டு. அடல்ட்ஸ் ஒன்லி ரகமான காட்சிகள் எதுவும் இல்லை.

சீரியஸ் நாசரும், சிஐஏ சத்யராஜூம் இணைந்தால் நடக்கும் களேபரம், அங்க சேஷ்டைகள், கிரேசி டைமிங் காமெடிகள் நிறைந்த கதை. தமிழில் ஒழுங்குபட எடுத்தால் பிய்த்துக்கொண்டு ஓடும்.

மேலும் அறிய: ஐ.எம்.டி.பி.

கேடி – டிவித்திரை விமர்சனம்

Ilianaஇந்தப் படத்தை சமீபத்தில் சன் டிவியில் போட்டிருந்தார்கள். பார்த்த பலரும், வேண்டிய அளவு பயமுறுத்தியிருந்ததால், மிகக் குறைந்த எதிர்பார்ப்புடனே பார்க்க ஆரம்பித்தேன்.

கேர்ஃப்ரீ வாங்குவதகு கூச்சப்படும் கல்லூரி மாணவி எண்பதுகளுக்கு முந்தைய எஃபெக்டை கொடுத்தது. மற்றபடிக்கு முதல் பாதி தேவலாம். இரண்டாம் பாதி போகப் போக நெளிய வைத்து, இறுதிக்காட்சியில் இது வரை பார்த்தவர்கள் படித்து படித்து சொல்லியிருந்த எச்சரிக்கைகளை உறுதியாக்கியது.

தமண்ணாவை மொத்தமாக வில்லியாகவே நடமாட விட்டிருக்கலாம். கடைசியில் தியாகி ஆக்குவது ஹீரோ மேல் பரிதாபம் வரவைக்காமல், இலியானாவையும் கோமாளியாக சித்தரித்தது.

‘ஆதிவாசி’ பாடலில் பூச்சிகளை எல்லாம் தொப்புளில் ஊறவிடுவது தமிழகத்தில் காவேரி போன்ற கற்பனை.

சராசரி மாணவனை சாதனை மாணவனாக்குவதை ‘காதலன்‘ சொல்லியது. ரவியின் முந்தைய படம் செவன் ஜி, பத்ரி போன்ற வெற்றி பெறக்கூடிய ஃபார்முலாதான். காதலுக்காக போட்டியில் கலந்து கொள்வது; வீழ்ந்து கொண்டிருப்பவன் உந்தப்படுவது என்று ரொம்ப சுவையான, நிச்சயம் வென்றிருக்கக் கூடிய சமாச்சாரங்கள்.

கூடவே இலியானா, தமண்ணா.

கதையே இல்லாமல் ‘எனக்கு 20; உனக்கு 18’ கொடுத்த இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இனிமேல் இந்த மாதிரி திரைக்கதைகளை சொதப்பாமல் சொல்லத் தெரிந்து கொண்டால், அப்பா ஏ ஏம் ரதனத்திற்கு ‘பீமா’ கடனை மீட்கலாம்.

தொடர்புடைய தமிழோவியம் விமர்சனம்: KD / கேடி