Daily Archives: பிப்ரவரி 13, 2008

ரான் பால் – நியூஸ்வீக்

  1. முன்னாள் ஜனாதிபதி அமரர் ரொனால்ட் ரேகனின் பரிந்துரையைப் பெற்றவராமே ரான் பால்? அப்படியா!
  2. உலக சாம்ராஜ்யத்தை கோலோச்ச, வருடத்திற்கு ஒரு ட்ரில்லியன் (எத்தனை முட்டை!) அமெரிக்க வெள்ளிகளை செலவழிக்கிறார்களாமே?? அப்பப்பா!!
  3. அதிரகசியமாய் கனடா, மெக்சிகோவுடன் கைகோர்த்து நாஃப்தா திட்டம் தயாராகிறதாமே? (இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்றாலும் !!!)

விரிவாகப் படிக்க, தெளிய…: Wrong Paul | Newsweek.com: “Fantasy, fallacy and factual fumbles from the Republican insurgent.”

தென்றல் இதழ்: அமெரிக்க அதிபர் தேர்தல் '08 – சுந்தரேஷ்

தென்றல் (இலவசம்) பதிவு செய்தால், இணையத்தில் படிக்கலாம். முழுக் கட்டுரையில் இருந்து விவாதிக்கத்தக்க கருத்துகள் சில:

  • மைக் ஹக்கபீ சதர்ன் பாப்டிஸ்ட் பிரிவைச் சார்ந்த ஒரு மதத்தொண்டர். (இந்திய வடகிழக்கு மாநிலங்களில் பாப்டிஸ்ட் சர்ச்சின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் கிறிஸ்தவத் தனிநாடு கேட்டு போராடி வருவது தெரிந்திருக்கலாம்). எவாஞ்சலிகல் கிறிஸ்தவர்களின் ஆதரவைப் பெற்றவர். அதே சமயம் மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாகப் புலம்பெயர்பவர்களுக்கு மிக ஆதரவானவர்.
  • பல பிரச்சினைகளில் தெளிவாகக் கறுப்பின மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதன் மூலம் ஹிலாரி பராக் ஒபாமாவை விடக் கறுப்பின மக்களுக்கு இணக்கமானவராகத் தெரிகிறார்.
  • இந்தியாவைப் பொறுத்தவரை மென்பொருள் தொழில் துறை, அவுட்சோர்சிங், அணுசக்தித் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ரிபப்ளிகன் கட்சி இந்தியாவுக்கு பாதகமில்லாத நிலையை எடுத்து வந்துள்ளது. டெமக்ராட்டிக் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுடனான அணுசக்தி உடன்பாடு மறுபரிசீலனைக்கு உள்ளாகலாம்.

அமெரிக்க தேர்தல்களும் இந்திய ஊடகங்களும்

US Elections - Media Importance

ஜனநாயகக் கட்சி – ஹில்லாரி வேண்டும்

Hillary Clinton for Presidentஏன்? உடனடியாகத் தோன்றிய எண்ணங்கள்:

  1. உருப்படியாகப் பேசுகிறார். வெற்று சவடால், புறக் கவர்ச்சி, பிரச்சார பூச்சு இல்லாமல், ஜாலமாக வாய்ப்பந்தலிடாமல் புள்ளிவிவரங்களுடன் ‘என்ன செய்யப் போகிறேன்?’ என்பதை பிட்டு வைக்கிறார் என்பதற்காக…
  2. அனுபவம். சபையறிந்து சமயோசிதமாக விவாதம் நடத்துதல், செனேட்டராக, முன்னாள் ஆளுநர் & ஜனாதிபதி க்ளின்டனின் மனைவியாக, பெண்களின் உள்ளக்கிடக்கைகளை அனுபவித்தவராக இருக்கிறார் என்பதற்காக…
  3. ஒபாமா என்பது மயிற்பீலிகளால் எழுப்பப்படும் மாளிகை. அன்றைய மோனிகா லூயின்ஸ்கி முதல் இன்றைய அயோவா சறுக்கல் போன்ற பல சம்பவங்களில் நெஞ்சுரத்துடன் எதிர்க்கட்சி தாக்குதல்களையும் அவதூறுகளையும் திறனாகத் தாங்கி, மக்களை தன் பக்கம் வசமாக்கக் கூடியவர் ஹில்லரி க்ளின்டன் என்பதற்காக…
  4. ஆளுமை. அழ வேண்டிய நேரத்தில் சிறிதாக நீர்த்துளி இறைத்து, புருஷனை கொம்பு சீவ வேண்டிய நேரத்தில் ஏவி, சொந்தப் பணத்தை கொடுக்க வேண்டிய நேரத்தில் தாரை வார்த்து, தலைமைப் பண்புகள் அனைத்தும் இயல்பாக வாய்க்கப்பெற்றவர் என்பதற்காக…
  5. வயது. ஒபாமாவிற்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கக்கூடும். மீண்டும் ப்ரைமரி பந்தயத்தில் தம் கட்டலாம். இன்னொரு பெண் வேட்பாளர் கிடைக்கும் அறிகுறி எதுவும் இல்லாத இந்த சூழலில் 61 வயது நிறைந்த ஹில்லரிக்கு தூஸ்ரா வராமல் போகலாம் என்பதற்காக…
  6. அரசியல்வாதி. பொதுஜனத்துடன் இணைந்து பழகி நெஞ்சில் நிறுத்தி நெருங்க வைப்பது இயல்பாக எழும் சமூக ஆர்வத்தின் பங்கு என்றால், வெல்லவேண்டிய நேரத்தில் வெற்றிக்கான உபாயங்களை ட்ரம்ப் சீட்டாய் இறக்கி தேர்ந்த அரசியல் செய்யத் தெரிந்தவர் என்பதற்காக…
  7. ஆண்கள்தான் அலைபாயக் கூடியவர்கள்; பெண்கள் வாக்கு சிந்தாமல், சிதறாமல் வந்து சேரும். ஒபாமாவை துணை ஜனாதிபதிக்கு சேர்த்துக் கொள்ளாவிட்டால் கூட எப்படியும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள், குடியரசு கட்சி பக்கம் சுண்டுவிரல் கூட சாய்க்க மாட்டார்கள் என்பதற்காக…
  8. பண்பட்டவர். செனேட்டர் தேர்தலில் நின்றபோது, ‘இறுக்கமாக இருக்கிறார்’ என்னும் குற்றச்சாட்டு எழுந்தவுடன் அச்சங்களை உதறி வாக்காளர்களோடு இயைபாக பழகியவர்; க்ளின்டன் ஆட்சியில் நிறைவேற்ற முடியாத, ஆனால் காலப்போக்கில் அதைவிட மேம்பட்ட உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களை முன்வைப்பவர்; இல்லத்தரசியலில் இருந்து இரும்புக் கோட்டை டி.சி. வரை கண்டுணர்ந்து சாதாரணர்களின் அன்றாட வாழ்க்கையை அனுபவித்தவர் என்பதற்காக…
  9. முன்னணி வேட்பாளர். பில் ரிச்சர்ட்சன் போன்ற அடக்கம் இருந்தால் மட்டும் போதாது; சகா ஜோசெப் பிடன் போன்ற அயல் அனுபவம் இருந்தால் மட்டும் பத்தாது. க்ளின்டன் என்னும் The Distinguished Gentleman போன்ற புகழ்பெற்ற பெயர் பெற்று வாஷிங்டனில் மாற்றத்தைக் கொணரக் கூடியவர் என்பதற்காக…

ஹில்லரி க்ளின்டன் வேண்டும்.

தொடர்புடைய இடுகை: ஒபாமா வெல்லட்டும் – வெங்கட்

அமெரிக்க தேர்தல் களம் – பிரச்சார முழக்கங்கள்

‘போடுங்கம்மா ஓட்டு, ரெட்டை இலையப் பார்த்து!’ என்பது அதிமுக முழக்கம்.

‘சொல்வதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்’ – திமுக.

இனி அமெரிக்க விசிலடிச்சான் குஞ்சுகள்:

Change You Can Believe In; Stand for Change:

Barack Obama

Candidate Of Change:

CARI - Mitt Romney

Agent of Change:

Hillary Clinton

தொடர்புள்ள ஒலிப்பதிவு: NPR: 'Change': An Empty Word in the 2008 Campaigns?

மேரிலான்ட், வெர்ஜீனியா, டிசி: ஒபாமா & மெகெயின் வெற்றி

அமெரிக்காவில் இன்று நடந்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான தேர்தல்களில் குடியரசு கட்சி சார்பாக ஜான் மெக்கெயினும், ஜனநாயகக் கட்சி சார்பாக பராக் ஒபாமாவும் வென்றனர்.

ஒபாமா கடந்த எட்டு மாகாணங்களைத் தொடர்ச்சியாக வென்றதன் மூலம் பெரும்பான்மை பிரதிநிதிகளை ஹில்லரி க்ளின்டனிடமிருந்து கைப்பற்றியிருக்கிறார். எனினும் மார்ச் 4 நடக்கும் அடுத்த கட்ட ப்ரைமரிகளில் ஹில்லாரி தலைதூக்கினால் மீண்டும் முன்னிலை பெறமுடியும்.

அடுத்த செவ்வாய் அன்று, இரண்டு மாகாணங்கள் – விஸ்கான்சினும் ஹவாயும் வாக்களிக்க இருக்கிறது.

மார்ச் நான்கு வாக்குப்பதிவு நடக்க இருக்கும் டெக்சாஸில், இன்று நடந்த மேரிலாந்து மாகாணம் போலவே – பெருமளவில் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் இருப்பதும் அவர்களில் பெரும்பானமையோர் ஒபாமாவுக்கு வாக்களிப்பதும் குறிப்பிடத்தக்கது.

அனைத்துப் போட்டிகளிலும் வென்றதன் மூலம் மெகெயின் பலமடைந்திருந்தாலும், வெர்ஜீனியாவில் இழுபறியாக ஊசலாடி நூலிழையில் மைக் ஹக்கபீயை தோற்கடித்திருக்கிறார். எவாஞ்சலிகல் கிறித்துவர்களின் வாக்கையும், குடியரசு கட்சியின் பாரம்பரிய (பழமைவாத) வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறவும் மேலும் முயற்சியெடுக்க வேண்டும் என்று நோக்கர்கள் அபிப்ராயம் தெரிவித்துள்ளார்கள்.

பத்ரி ♥ பராக் ஒபாமா

முழுப் பதிவும் வாசிக்க