Daily Archives: பிப்ரவரி 25, 2008

'ஹிலாரியைவிட நம்பகமானவர் ஒபாமா'

ஹிலாரி கிளின்டனை காட்டிலும் அதிக நம்பகமானவர் பராக் ஒபாமா என அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட தரப் பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

தயாரிப்புகளை நுகர்வோர் மத்தியில் பிரபலப்படுத்தும் திறன் பெற்றவர்களை பட்டியலிட்டு வெளியிட்டு வரும் நிறுவனம் டேவி பிரௌன். டேவி பிரௌன் பிரபலங்கள் குறியீட்டெண் என்ற இந்த மதிப்பீடு மூலமாக தங்களது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதை நிறுவனங்கள் முடிவு செய்கின்றன. நுகர்வோர்களிடம் நட த்தப்படும் கருத்துக் கணிப்புகளின் அடிப்படையிலேயே இந்த குறி யீட்டெண் தயாரிக்கப்படுகிறது.

அண்மையில் இந்த நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளின்டன், குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கைன் ஆகியோரைக் காட்டிலும் அதிகப் புள்ளிகளைப் பெற்று முன்னணியில் இருக்கிறார் பராக் ஒபாமா. நம்பகத்தன்மை, விழிப்புணர்வு, கவர்ச்சி, செல்வாக்கு, வேட்கை உள்ளிட்ட எட்டு முக்கியப் பண்புகள் இந்த பட்டியலில் கணக்கிடப்படுகின்றன.

இதில் விழிப்புணர்வு என்ற ஒரே பண்பில் மட்டுமே ஒபாமாவைவிட ஹிலாரிக்கு அதிகப் புள்ளிகள் கிடைத்துள்ளன. நம்பகத்தன்மை உள்ளிட்ட மற்ற அனைத்துப் பண்புகளிலும் ஒபாமா முன்னிலை பெற்றுள்ளார்.

திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் ஒபாமாவுக்கு 3-வது இடமும், ஹிலாரிக்கு 8-வது இடமும் கிடைத்துள்ளது.

குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கைன் மற்றும் மைக் ஹக்கபீ ஆகியோர் முறையே 20 மற்றும் 74-வது இடங்களைப் பிடித்துள்ளனர்.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்துபவரும், ஒபாமாவின் தீவிர ஆதரவாளருமான ஓபரா வின்ஃபிரே, இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

நன்றி: தினமணி

ஆங்கிலத்தில்: Celebrity Index: U.S. Consumers Find Obama More Appealing, Trustworthy Than Clinton, McCain: Financial News – Yahoo! Finance

ரால்ஃப் நாடர் – சில குறிப்புகள்

அமெரிக்காவில் இரண்டே கட்சிகள்தான்; ஒன்று ஆளுங்கட்சி; மற்றொன்று எதிர் கட்சி. ஒரு வளர்ந்த மேற்கத்திய நாட்டுக்கு அடையாளமாக இரண்டு கட்சிகள்தான் வேண்டுமென்பது ப.சிதம்பரம் போன்ற படித்த ஜனநாயகவாதிகளின் கருத்து. குடியரசு (Republican party) மற்றும் ஜனநாயகக் கட்சி (Democratic party) இரண்டுக்கும் மாற்றாக பசுமை கட்சி (Green Party), மறுமலர்ச்சி கட்சி (Reform Party) போன்ற அமெரிக்க துக்கடாக்கள் முயன்று வருகிறார்கள். எட்டு வருடம் முன்பு நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஆல் கோரும் ஜார்ஜ் புஷ்ஷும், கலைஞர் டிவியின் ‘நம்ம குடும்பமும்’ சன் டிவியின் ‘அரசி’யும் போல மோதிக் கொள்ள, நடுவில் ‘தமிழன் டிவி’யாக நுழைகிறார் ரால்ப் நாடெர்.

தமிழ்நாட்டில் பெயர் குழப்பம் செய்வார்கள். திமுக சார்பாக மைலாப்பூரில் ‘ராமஜெயம்’ என்பவர் தேர்தலில் நின்றால், அதே பெயர் கொண்டுள்ள இருவர், இராமஜயம், ராம ஜெயம் என்பது போல் சுயேச்சையாக போட்டியிடுவார்கள். திமுக-வை சேர்ந்த இன்னும் சிலர் போட்டி வேட்பாளராக எதிர்கட்சியின் சார்பில் களமிறக்கப் படுவார்கள். அவரின் சாதி, இனம், மொழி இன்ன பிற பாகுபாடை சேர்ந்தவர்களும் சுயேச்சையாக நிற்கவைக்கப் படுவார்கள். திமுகவும் இதே மாதிரி வேலையை, தன்னுடைய எதிர்கட்சி வேட்பாளருக்கு பதில் மரியாதை செய்யும்.

அமெரிக்காவின் ரால்·ப் நாடரும் கிட்டத்தட்ட இதே போன்ற உதவியை புஷ்ஷுக்கு செய்தார். 2000- ஆம் ஆண்டு தேர்தலில் ப்ளோரிடா மற்றும் நியு ஹாம்ப்ஷரில் மல்லிகா ஷெராவத்தின் மெல்லிய ஆடை நெய்த இழை போன்ற ஓட்டு வித்தியாசத்தில், ஆல் கோர் தோற்கக் காரணமானவர் நாடெர். ஆனால், புளித்துப் போன இரு கட்சிகளுக்கு நல்ல மாற்றாகவும் விளங்குபவர். சிகரெட் விற்பவர்களும், காப்பீடு நிறுவனங்களும், மருந்து தயாரிப்பவர்களும், கார் கம்பெனிகளும் பணத்தைக் கொட்டி வளர்க்கும் இரு கட்சிகளுக்கு நடுவே, தேர்தல் நிதி கையூட்டு வாங்காமல் போட்டியிட முயற்சிப்பவர்.

“‘The Buying of the President 2004′” என்னும் புத்தகத்தை முன்வைத்து, திண்ணையில் நரேந்திரன் எழுதும் அறிமுகத்தில் கூறுவது போல், குடியரசு வேட்பாளராக முயற்சித்த ரான் பால் உட்பட, சராசரி மனிதனின் தேர்தல் நிதியைக் கொண்டு போட்டியிட நிற்கும் எவருக்குமே தேர்தலில் ஜெயிப்பதற்கு வாய்ப்பேயில்லை.

அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் அனைத்துமே இரு கட்சி வேட்பாளர்களுக்கும் பணத்தை வாரி வழங்குகிறது. தங்களுக்குத் தேவையான சட்டதிட்டங்களை நிறைவேற்ற இது வழிவகுக்கும். கொடுக்கும் விகிதாசாரங்களில்தான் வேறுபாடு. இந்த டிவி சீரியல் மந்தை கூட்டத்தில் தனித்து நிற்பவர் நாடர். நாடெருக்கு வோட்டுப் போடக் கூடாது என்று ஜனநாயகக் கட்சியில் ஒவ்வொருவரும் அறைகூவுகிறார்கள். அவருக்கு ஈகோ, தான் என்னும் அகங்காரம், புகழ் போதை என்று விதவிதமாக வசவுகள் வருகிறது.

ஆனால், 2000-த்தில் கோர் தோற்பதற்கு நாடெர் மட்டும்தான் காரணம் என்பது மிகத் தவறான வாதம். அமெரிக்காவின் நாற்பத்தி மூன்று மாகாணங்களில் போட்டியிட்ட நாடெருக்குக் கிடைத்த மொத்த வோட்டு என்னவோ மூன்று மில்லியன்தான். ·ப்ளோரிடாவில் புஷ் 537 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாடெருக்கு 97.488 வாக்குகள் கிடைத்திருந்தது. நியு ஹாம்ப்ஷைரில் 7,211 வாக்கு அதிகமாகப் பெற்று புஷ் ஜெயித்தார். நாடெருக்கு 22,198 வோட்டு கிடைத்தது. இவை ஆல் கோர் எதிர்ப்பு வாக்குகள்; சுற்றுபுறச் சூழலை வாகன தயாரிப்பளர்களுக்காக விட்டு கொடுத்தது, இணையம் கண்டுபிடித்தது என்று கோரின் அருமை பெருமைகளை அறிந்தவர்கள் அளித்த ஓட்டு. கிறித்துவத்தின் பிரதிநிதியாக இங்கு பாட் புக்காநன் (Pat Buchanan) பெற்ற ஓட்டுகள் அனைத்தும் புஷ்ஷையே சேர்ந்திருக்க வேண்டும். அப்படி சேர்த்துக் கொண்டால் ஐந்து மாநிலங்களில் புக்கானன்+புஷ் ஜோடி, கோர்+நாடெர் பெற்ற வோட்டுக்களை விட அதிகமாகவேப் பெற்றிருக்கும்.

ஃப்ளோரிடாவின் நாடெர் போல சென்ற 2004- ஆம் தேர்தலில் மூன்றாவது அணியின் மைக் பெட்நாரிக் புஷ்ஷுக்கு தலைவலியாக விளங்கியதை பாஸ்டன் க்ளோப் அலசியது.

ஒரு சராசரி உழைப்பாளியை விட அந்த நிறுவனங்களின் தலைவர் ஐந்நூறு மடங்கு அதிகமாக சம்பளம் கிடைக்க வைத்துக் கொள்கிறார். இவரை தட்டிக் கேட்க ஒருவர் தேவை. ஈராக் போரை ஆதரித்தாரா இல்லையா என்று புரியாமல் ஜனநாயகக் கட்சியின் ஹில்லரி முழம் நீளத்துக்கு பதில் கொடுக்கிறார். இ(ரு)வரையும் எதிர்கொள்ள திராணியுள்ள ஒருவர் தேவை. ‘ஸ்பெஷல்’ ஆர்வ குழுக்களைத் துரத்துவதாக வாய்கிழித்துக் கொண்டே அவர்களில் சிலரிடம் இருந்து தேர்தல் நிதி பெறும் ஜான் மெகெயின் போன்றவரகளை சுட்டி காட்ட ஒருவர் தேவை. அவர் ஜெயிப்பது வேறு விஷயம். ஆனால், அந்த சக்தி அவசியம் மக்களிடம் மாறுதலை உந்தவேண்டும்.

சிறந்த வேட்பாளர் ஜனாதிபதியாக வேண்டும். நமக்கு கோக் பிடித்திருக்கிறதா? சாப்பிடுவோம். மாருதியை விட ஹூண்டாய் கொடுக்கிற காசுக்கு பயனுள்ளதாகத் தோன்றுகிறதா? வாங்கிக் கொள்வோம். வீட்டு ஊறுகாயை விட ‘ருச்சி’யும், அம்மாவால் மசாலா செய்ய முடியாததால் ‘ஆச்சி’ மசாலாவுக்கும் தாவுகிறோம். எது சரியெனப் படுகிறதோ, எது சௌகரியமோ, எவை முக்கியமோ, எது நன்றாக உழைக்கிறதோ, அதைத் தேர்வு செய்கிறோம். சிறந்த வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் படுவார்.

நாடெரின் தேர்தல் அறிக்கைகள் ஆசைகள் நிறையக் கொண்டது. ஒரு மணி நேரத்துக்கு எட்டு டாலர் மட்டுமே கிடைக்கும் தொழிலாளர்களின் கூலியை பத்து டாலராக்குவது; (இதை ஹில்லரி மட்டும் இப்போது முன்வைத்திருக்கிறார்); அலாஸ்காவில் ஆயில் எடுத்து சுற்றுப்புற சூழலைக் கெடுத்த நிறுவனங்களிடம் நஷ்ட ஈடு கறப்பது; குழந்தைகளுக்கு சென்சார் செய்யப்படாத ‘நமீதாவின் மச்சான்‘ வட்டுகளும் விருமாண்டி போன்ற வன்முறைப் படங்களும் எட்டமல் தடுப்பது; என்று நடுத்தர வர்க்கத்தின் வயிற்றில் பாயசம் இடும் எண்ணங்கள்.

ஐரோப்பாவில் இத்தாலி போன்ற பல நாடுகளில் இரண்டுக்கு மேற்பட்ட கட்சிகள், இந்தியாவில் உள்ளது போல் தேர்தல் களத்தில் மக்களை ஈர்க்கிறது. அமெரிக்காவில் மட்டும் இரண்டு கட்சிகளே ஆதிக்கம் செய்யவேண்டும் என்று ஊடகங்கள் வலியுறுத்துகின்றன. சில நாடுகளில் உள்ளது போல் ‘ரெண்டாவது சாய்ஸ்’ வேட்பாளர் யார் என்று டிக் போடுவது, பல பேரை போட்டியிட செய்து அதிக வாக்கு பெறும் இருவருக்கு மட்டும் ‘·பைனல்ஸ்’ நடத்துவது என்று புதிய தேர்தல்முறைகளை அறிமுகபடுத்தாமல், ஜனநாயகத்தில் பங்குபெற விரும்பும் ஒருவரை தடுப்பது நியாயம் அல்ல.

நாடெரின் நிலையை நினைத்தால் என்.டி.ஆரும் பானுப்ரியாவும் நடித்த தூர்தர்ஷன் தொடர் நினைவுக்கு வருகிறது. கடுமையான தவத்தில் இருக்கிறார் விஸ்வாமித்திரர். நாரதரின் மூலம் தன்னுடைய தலைமைக்கு ஆபத்து வருவதை இந்திரன் அறிகிறான். ஊர்வசி, ரம்பா, திலோத்தமை எல்லோரும் கவர்ச்சி நடனம் ஆடியும் அசைய மாட்டேன் என்கிறார் என்.டி.ஆர். மன்மதனின் துணையோடு மேனகை தவத்தை கலைத்து, விஸ்வாமித்திரரோடு வாழ ஆரம்பிக்கிறாள். ஆனந்தமாக சிற்றின்பத்தில் ஆண்டுகள் செல்கிறது. சகுந்தலையும் பிறக்கிறாள். தன் வலிமையை மீண்டும் பெருக்கிக்கொள்ள முனிவர் தவத்துக்கு செல்ல நினைக்கிறார். வானுலகுக்கு மானிடரை கூட்டிச் செல்ல முடியாததால் மேனகை, குழந்தையை மண்ணுலகத்திலேயே தவிக்கவிட்டு சென்று விடுகிறாள்.

புஷ் என்னும் இந்திரன் மேனகை என்னும் நாடெர் மூலம் 2000- ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலை வென்றார். சகுந்தலை போல் இராக்/பொருளாதார, இத்யாதி பிரச்சினைகள் அனாதையாய் இருக்கிறது. கன்வ முனிவராக எவர் அமெரிக்க குழந்தையை தத்தெடுக்கப் போகிறார்களோ?!

அசல்: ஈ – தமிழ்: பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்?