பத்து வயதிருக்கும். வீட்டில் எதையும் படிக்கும் சுதந்திரம். அந்த அட்டை கிழிக்கப்பட்ட நூல் வாசிக்கக் கிடைத்தது. ரஜினியின் படமான ‘தர்ம் யுத்தம்’ போல் அந்த 1983 கொலைகாரர்கள், கறுப்பு ஜூலை அராஜகவாதிகள் எல்லோரையும் தீர்த்துக் கட்ட எவராவது பிறக்க மாட்டார்களாக என மனம் துடிதுடிக்க வைத்த புத்தகம். கற்பனையில் பல்வேறு சண்டைகளை எண்ணிப் பார்த்து சமாதானம் அடைவேன்.
இன்றைய காலகட்டத்தில் இலங்கை பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் நடத்துகிறது. அதற்கான அணிகளின் பெயர்களில் இயக்கங்களின் பெயரைப் போட்டால் எப்படி இருக்கும்!?
இலங்கையில் இருக்கும் தமிழருக்கான சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பல நிலைகளில் பல்வேறு காலகட்டங்களில் இயக்கங்கள் செயல்பட்டன. ஈழ இயக்கங்களில் புகழ்பெற்றவற்றின் பெயர்கள் (அகரவரிசைப்படி):
1. ஈழ தேசிய விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எஃப். – Eelam National Democratic Liberation Front (ENDLF)) 2. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) (Eelam People Democratic Party (EPDP)) 3. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈ.பிஆர்.எல்.எஃப். – Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF)) 4. ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ் – Eelam Revolutionary Organization of Students (EROS) – ஈ.ஆர்.ஓ.எஸ்.) 5. தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ – Liberation Tigers of Tamil Eelam (LTTE) – எல்.ரி.ரி.ஈ.) 6. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (ப்ளாட் (அ) புளொட் – People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE) – பி.எல்.ஒ.டி.ஈ.) 7. தமிழீழ விடுதலை இயக்கம் (டெலொ (அ) ரெலா – Tamil Eelam Liberation Organization (TELO) – டெலோ) 8. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (டி.எம்.வி.பி. – Tamileela Makkal Viduthalai Pulikal (TMVP)) 9. தமிழர் விடுதலைக் கூட்டணி (அரசியல் கட்சி) (டுல்ஃப் (அ) ரி.யு.எல்.எப் – Tamil United Liberation Front (TULF) – டி.யு. எல்.எஃப்)
இலங்கை ப்ரீமியர் லீக் எல்.பி.எல் டி20 அணிகளின் பெயர்கள்:
1. Colombo Strikers – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் என்பதற்கு பதில்: கொழும்பு கொமாண்டோக்கள் 2. Dambulla Aura – டம்புல்லா ஆரா என்பதற்கு பதில்: தம்புள்ளை துள்ளர்கள் 3. Galle Titans – கேலே டைட்டன்ஸ் என்பதற்கு பதில்: கல்லே கெரில்லாக்கள் 4. Jaffna Kings – ஜாஃப்னா கிங்ஸ் என்பதற்கு பதில்: யாழ்ப்பாண புலிகள் 5. B-Love Kandy – கண்டி பி-லவ் என்பதற்கு பதில்: கண்டி கழுகுகள்
வாழ விருப்பமில்லாத ஆன்மாவும் சாக விருப்பமில்லாத உயிரும் சந்தித்துக் கொண்டால்?
இறுவாய் குறித்த செவ்விந்தியர்களின் கர்ண பரம்பரைக் கதைகள் எல்லாமே இருவரின் உரையாடலாக அமைந்திருக்கும். அவர்கள் இருவருக்கும் நடுவே வாக்குவாதம் நடக்கும். அதன் வழியே இறுவாயின் எழுபவத்தைச் சொல்வார்கள். கீழே வரும் சம்பவம் ஷொஷோனி (Shoshoni) பிரிவினரிடம் புழங்குகிறது:
ஒரு ஊரில் ஓநாயும் நரியும் வசித்து வருகின்றன. ஓநாயின் பேச்சை எப்போதுமே குள்ளநரி கேட்காமல் நடந்து கொண்டிருந்தது. ஓநாய் என்ன சொன்னாலும் அதற்கு எதிராகவே குள்ளநரி செயல்படும். குள்ளநரியிடம், “இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் வித்தை உனக்குத் தெரிய வேண்டுமா? அவர் வீழ்ந்த இடத்திற்கு அடியில் பூமியைத் துளைத்துச் செல்லும் அம்பை விட்டால், மாண்டவர் மீள்வார்!”, என ஓநாய் சொல்கிறது.
ஓநாய் என்ன சொன்னாலும் சிவப்புக் கொடி தூக்கும் குள்ளநரி, “அதெல்லாம் வேண்டவே வேண்டாம். செத்தவர் செத்தவராகவே இருக்கட்டும். இறந்தவரையெல்லாம் இப்படி உயிர்ப்பித்தால், பூமி பாரம் தாங்காது.” என்றது. அப்போதைக்கு அதற்கு “சரி” என்று தலையாட்டி வைக்கிறது ஓநாய். எனினும், தனிமையில் சூழ்ச்சித் திட்டத்தைத் தீட்டுகிறது ஓநாய். குள்ளநரியின் மகனை முதல் பலியாகக் கொல்ல முடிவு செய்கிறது. இரவோடிரவாக கொன்றும் விடுகிறது.
காலையில் மகனின் மரணத்தைப் பார்த்த குள்ளநரி அரற்றி பிழற்றிக் கொண்டு ஓநாயிடம் கதறிக் கொண்டே வந்தது. “என் மகன் அகால மரணம் அடைந்துவிட்டான். அவனை உயிர்ப்பித்துத் தர முடியுமா? அவன் வீழ்ந்த நிலத்திற்கடியில் பாணத்தை விட்டு அவனை மீண்டும் நடமாட வைப்பாயா?” என்று இறைஞ்சுகிறது நரி. ஓநாய், “அதெப்படி? எல்லோரும் ஒரு நாள் இறக்க வேண்டும் என்று நீதானே நேற்று சொன்னாய்! உனக்கு மட்டும் எப்படி தனி நியாயம்?” எனக் கேட்க, சாவுத்துயரில் தோய்ந்த நரி, அன்றைய நாளில் இருந்து அந்த வித்தையை பலிக்காமல் போக சபிக்கிறார்.
டிஸ்னி நிறுவனத்தின் பிக்ஸார் கிளையின் அடுத்த படம் இது போன்ற இரு மாந்தரை மையமாக வைத்து “சோல்” (Soul – ஆன்மா) படத்தை வெளியிட்டு இருக்கிறது. வெள்ளித்திரைகளில் படம் வெளியாகவில்லை. சின்னத்திரையான டிஸ்னி+ மூலமே இதைப் பார்க்க முடியும். பியானோ வாசிப்பாளர் பெயர் ஜோ. சிறுவர்களுக்கு வாத்தியங்களைக் கற்றுத் தருகிறார். ஒரு பக்கம் பள்ளிக்கூடத்தில் நிரந்தர வேலை உறுதியாகும் வாய்ப்பு. இன்னொரு பக்கம், ஷ்ரேயா கோஸல் போன்ற ஆதர்ச + புகழ்பெற்ற பாடகியின் பக்கவாத்தியமாக விரும்பியதை வாசித்து ரசிகர்களின் கரகோஷங்களை அள்ளும் வாய்ப்பு. சாலை விபத்தில் கிட்டத்தட்ட இறக்கிறார். மரணத்தின் வாயிலில் அவ்வுலகம் செல்கிறார். அங்கே பல்வேறு உயிர்களையும் இன்ன பிற ஆன்மாக்களையும் சந்திக்கிறார்.
அவருக்கோ மீண்டும் பூமிக்குள் வந்துவிட ஆசை. இப்பொழுதுதான் வாழ்நாள் லட்சியம் சாத்தியம் ஆகப் போகிறது. காலையில் நிரந்தர வருமானம். மாலையில் கனவு உத்தியோகம். ஒவ்வொரு நாளும் விதவிதமாக இசையில் மூழ்கலாம். பியானோ வாசிப்பில் லயிக்கலாம். கேட்போரையெல்லாம் சொக்க வைக்கலாம். அந்த நேரம் பார்த்து மரணம். ஆசையில் மண்.
இன்னொரு பக்கம் அவ்வுலகத்தில் “22” என்னும் ஆன்மாவிற்கு மீண்டும் பூமிக்கு வரப் பிடிக்கவே பிடிக்கவில்லை. மனிதராகப் பிறந்து உண்டுண்டு உறங்குவதை வெறுக்கும் ஜீவன். மாயாப் பிறவி மயக்கம் அறுத்த அகவுயிர். ஓயாமல் இரவு பகலாய் உழைத்துக் கொட்டி, அதில் அர்த்தம் தேடுவதை ஒதுக்கும் ஆவி – “22”.
பிக்சர் படம் என்றால் குழந்தைகள் படம். என்றாலும், அதில் சினிமாவில் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடும் என் போன்றோருக்கு நிறையவே சரக்கு இருக்கும். சடாரென்று தூக்கத்தில் எழுப்பினால் கூட “அப்”, “இன்சைட் அவுட்”, “மான்ஸ்டர்ஸ் இன்க்” என்று அடுக்கி, அதன் தத்துவங்களை விலாவாரியாக ஆர்வமாக விளக்குவேன். ஒரு தடவைக்கு பல தடவை பார்த்தாலும் அலுக்காதவை.
அலுக்காத தன்மைக்கு அந்த அனிமேஷன் லாவகத்தைச் சொல்லியே ஆக வேண்டும். இந்த “சோல்” படமும் நாக்கில் கரையும் மைசூர்பா என கண்ணில் கரையும் புத்திசாலித்தனமான காட்சிகள் கொண்டது. தொழில்நுட்பம் ஆகட்டும்; கலாபூர்வம் ஆகட்டும். இரண்டும் பார்ப்போரை ஏகாந்த நிலைக்குக் கொண்டுபோகிறது. அதுவும், இறப்பு, வாழ்க்கையின் பூரணத்துவம் போன்ற எசகு பிசகான கேள்விகளை எழுப்பும்போது கூட அந்த இருட்டு தெரியாமல் ரம்மியமாக செல்கிறது. காட்சிக்கேற்ற பரவச இசை; தத்ரூபமான இசை சபா மேடை; ஜோதியில் ஐக்கியமாவது; எல்லாமே சரியான பதத்தில் வந்திருக்கிறது. பியானோவும் ட்ரம்பெட்டும் எக்காளமிட்டு ஒன்றோடன்று போட்டி போடும் இசையமைப்பிற்கு என்னால், ‘பேஷ்’ மட்டுமே வைக்க இயலும். அதில் தோய்ந்த ஆப்பிரிக்க-அமெரிக்கரார்களாலேயே அதன் ஆலாபனைகளை உணர இயலும்.
எனவே, படத்தில் நான் உணர்ந்த தொன்மவியலுக்குள் சென்று விடுகிறேன்.
ஒரு கிளையில் உள்ள இரு பறவைகளாக ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் சில உபநிஷத்துகள் காண்கின்றன. இங்கேயும் அந்த மாதிரி ‘22’ம் ஜோ என்னும் வாத்தியக்காரரும் வருகிறார்கள். ஜீவாத்மா என்னும் பறவை, மரத்தின் கனிகளை உண்கிறது. அதில் சில பழங்கள் இனிக்கும்; சிலது கசக்கும் – மாணாக்கர்களின் சேஷ்டை ‘ஜோ’ என்னும் இசை வாத்தியருக்கு வெறுக்கிறது; அதே சமயம் இசையை ரசித்து வாசிக்கும் மாணவரின் ஆர்வம் இனிக்கிறது. கச்சேரி வாய்ப்பிற்காக, ஒவ்வொரு சபா ஆக சென்று, வாய்ப்பு கேட்டு, மறுக்கப்படுவது வெறுக்கிறது; அதே சமயம் கிடைத்த வாய்ப்பில் பரிமளிக்கும் போது, கிடைக்கும் பார்வையாளர்களின் கைதட்டல், சந்தோஷம் – இனிக்கிறது. பரமாத்மாவிற்கோ இதில் எல்லாம் அபிலாஷை இல்லை. அது சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும். இந்தப் பழங்களை, “சீச்சீ… இந்தப் பழம் புளிக்கும்”, என்று ஒதுக்கும். இது ‘22’
ஜீவாத்மாவிற்கு எப்பொழுது பரமாத்மாவின் மகத்துவம் புரிகிறதோ, அப்போது இவ்வுலகின் துக்கங்களில் இருந்தும் துன்பங்களில் இருந்தும் விடுதலை அடைந்து முக்தி பேறடைகிறது. படத்திலும் ‘ஜோ’ அடைகிறார். இறுதியில் எல்லா பிக்ஸர் படங்களிலும் முக்கிய கதாபாத்திரம் மோன நிலையை அடைந்துவிடும். அது பெரிய விஷயமேயில்லை. எப்படி, எவ்வாறு, எந்தப் பாதையில் சென்று உய்யலாம்? அந்தப் பாதையை, பரிணாம மாற்றத்தை, இந்தப் படம் சுவாரசியப்படுத்திச் சொல்லியிருக்கிறது.
இந்தப் பாதை அடையும் வழி என்ன என்று உபநிஷத்துகள் என்ன சொல்கிறது? கடனே என்று காரியத்தை, கருமங்களை செய்யாதே என்கிறது. எளிதானவற்றையும் பிரயாசையின்றி செய்வதையும் விட்டுவிடு; சரியானதையும் ஷ்ரேயஸானவற்றையும் செய் என்கிறது. ஆன்மாவை நோக்கி உள்முகமாக பயணி என்கிறது. அனைவரிடத்தும் அன்பு செலுத்து; அவர்களிடம் அக்கறை கொள்; பொருத்தமான ஆன்மிக குருவைத் தேர்ந்தெடு; அவரிடம் கேள்விகளை முன் வை; அவரிடம் சந்தேக நிவர்த்தி பெறு என்கிறது.
அனுபூதி அடைவது எளிதல்ல. குருவின் சோதனைகளை செவ்வனே முடிக்க வேண்டும். கடைசியில் அவரவர்க்கு அவரவர் ஆத்மாவே குருவாகிறது. மனிதப் பிறவியில் ஞானமும் (சிரவண மனனம்) யோகமும் (நித்தியாசனமும்) அடையப்பெற்ற விவேகர்கள், தன்னை சர்வ சக்தியுள்ளவர் என்று அறிந்து கொள்கின்றார். (மேலும் வாசிக்க – பின் – இணைப்பு: யது மகாராஜன், அவதூதர் சம்பாஷணை)
மீண்டும் “சோல்” திரைப்பட பார்வைக்கு திரும்புவோம்.
இறந்தோர் செலும் வரிசையில் ஜோதியில் ஐக்கியமாவதற்காக ஜோ என்னும் கதாபாத்திரம் காத்திருக்கிறது. அப்பொழுது, அந்த வரிசையில் இருந்து எகிறி குதித்து, இன்னொரு இடமான திரிசங்கு நிலையத்திற்கு வந்து சேர்கிறது. இந்த இடம் Defending Your Life என்னும் படத்தை நினைவூட்டியது. அதில் மரணித்த ஒவ்வொருவரும் தங்களின் வாழ்க்கையை மீண்டும் பார்ப்பார்கள். அதில் சிற்சில மாறுதல்களை செய்ய விரும்புகிறார்களா அல்லது தற்காப்பாக அவர்களின் முடிவுகளை ஆதரித்துப் பேசுவார்களா என்பதைப் பொறுத்து அடுத்தகட்ட பயணம் அமையும்.
அந்த இடைப்பட்ட இடத்தில்தான் ஜோ கதாபாத்திரம் “22”ஐ சந்திக்கிறது. பல்வேறு பெரிய கைகளை பார்த்து பழம் தின்று கொட்டை போட்ட கதாபாத்திரம் “22”. மகாத்மா காந்தி, ஆபிரஹாம் லிங்கன், அன்னை தெரசா, கொபர்னிகஸ், மேரி ஆன்டொனெட், கார்ல் யொங் என்று பலர் “22”ஓடு கலந்துரையாடி, பூலோகத்திற்கு தயார் செய்ய முயன்று, பலரும் தோற்றோடியிருக்கிறார்கள். அந்த 22ன் வாயினாலாயே சொல்வதானால், “தெரஸாவையே அழ அழ ஓட்டியவளாக்கும் நான்!” அந்த ஆசிரியர்களால் முடியாததை ஜோ செய்கிறார். தன் உருவத்தில் 22ஐ சில மணித்துளிகள் நடமாட விடுகிறார். அதன் மூலமாக வாழ்வின் அற்புதத்தை உணர்த்துகிறார்.
ஆன்மாக்களின் ஆளுமைகளை உருவாக்கும் பண்புகளையும், ஆர்வங்களையும் திறமைகளையும் கண்டறியும் இடம் தான் இந்த “கால்கோள் சந்தி” எனப்படும் The Great Before. ஆன்மாக்கள் இன்னும் முழுமையடையவில்லை. இரண்டும்கெட்டான்களாக அலைகிறது. அங்கிருக்கும் குருவானவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆன்மாக்களை, பக்குவப்படுத்திய பிறகு, பூமிக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதன் பின் அந்த ஆசிரியர்கள் “மகா உம்மை” எனப்படும் Great Beyondக்கு சென்று பிரும்மாண்ட பிரகாச ஒளியில் ஐக்கியமாகி விடுவார்கள்.
“கால்கோள் சந்தி”யில் குணாதிசயங்களைப் பொருத்தலாம்; விருப்பங்களை உருவாக்கிக் கொள்ளலாம்; ஆனால், ஒவ்வொரு உயிருக்கும் ஒரு உந்து சக்தி வேண்டாமா? உங்களை இயக்க, உங்களின் ஒவ்வொரு நாளையும் உத்வேகமிக்கதாக ஆக்க, ஆற்றலின் முழு வீச்சையும் உணரவைக்கும் ஜீவாதாரம் எது? அதை அடையாளம் காண்பிக்க வேண்டியது குருவின் பொறுப்பு.
மனிதன் மீண்டும் ஜனனம் ஆவதை பஞ்சாக்னி வித்தை எப்படி சொல்கிறது என்று பார்க்கலாம். மனிதன் ஐந்து அக்னிகள் மூலமாகப் பிறக்கிறான். ஒன்றிலிருந்து ஒன்றாக அர்ப்பணிக்கப்பட்டு மனிதன் பிறக்கிறான். அது வரும் பாதை:
தன் கர்ம வினைகளுக்கு ஏற்ப, சரீரத்தையும் வாழ்க்கையையும் அனுபவிக்க, பிறப்பெடுக்கத் ஜீவன் தயாராகிறது.
ஜீவாத்மா மேகத்திற்குள் நுழைகிறது. நெருப்பை அணைக்கும் சக்தி மழை நீருக்கு இருப்பதால், அந்த நெருப்பை உள்வாங்கி அதை அணைப்பதால் நீரும் அக்னி எனப்படுகிறது. பிறக்கத் தயாராகும் ஜீவன் மழையோடு கலந்து பூமியில் விழுகிறது.
பூமி. உஷ்ணத்தை உள்வாங்கிக் கொள்வதால் பூமியும் ஒரு அக்னி. மழை மூலமாக வந்த ஜீவன் பூமிக்குள் செல்கிறது.
பூமிக்குள் சென்ற ஜீவன் செடிக்குள் நுழைகிறது. அதனுள் இடைவிடாது செயலாக்கம் நடந்து கொண்டிருப்பதால் அது உஷ்ணத்துடன் இருக்கிறது. எனவே அதுவும் அக்னி எனப்படுகிறது. செடியின் வேர் வாயிலாக நுழையும் ஜீவன் அந்தச் செடியின் காய் அல்லது கனியில் நிலை கொள்கிறது.
ஜீவன் நிலை பெற்ற காய் அல்லது கனியை உண்ணும் மனிதரும் அக்னி. அவரது உணவுக் குழாய் மூலமாகச் சென்று அவர்களது விந்தில் அந்த ஜீவன் நிலைபெறுகிறது.
திரைப்படத்திலும் இந்த மாதிரி ஒவ்வொரு ஜீவனுக்கும் ஐந்து பண்புகளையும், ஆர்வங்களையும் திறமைகளையும் பொருத்துகிறார்கள். ஆனால், விந்து என்பது எது என்பதை அந்த ஜீவனே கண்டறிய வேண்டும். அதைக் கண்டறிவதற்கு, குருவின் துணை தேவை என்பதை வலியுறுத்துகிறது.
பிரபஞ்சம் என்பது 24 தத்துவங்களில் அடங்கியிருக்கிறது என்று ஸாங்கியம் சொல்கிறது.
பிரகிருதி, மஹத், அஹங்காரம், மனம், ஐந்து ஞானேந்திரியம், ஐந்து கர்மேந்திரியம், பஞ்ச தன்மாத்திரைகள், பஞ்ச மஹாபூதங்கள் என்று மொத்தம் 24 இருக்கின்றன.
ஞானேந்திரியங்கள் என்பவை
சப்தம் (காது)
ஸ்பரிசம் (சர்மம்) / தோல்
ரூபம் (கண்)
ரஸம் அல்லது சுவை (வாய்)
கந்தம் என்ற வாஸனை (மூக்கு)
ஜீவனே நேராகக் காரியம் செய்ய உதவுபவை கர்மேந்திரியங்கள்.
வாய் பேசுவது
பல காரியங்களைச் செய்ய உதவும் கை
நடக்கிற கால்,
மலஜல விஸர்ஜனம் செய்கிற அவயவம் / உடற்கழிவுகளை வெளியே தள்ளும் உறுப்புகள் (குதம் மற்றும் சிறுநீர் குழாய்)
ஜனனேந்திரியம் / பிறப்புறுப்புக்கள்
அருவத்தின் உருவ மாற்றமே தன்மாற்றம். நிலை மாற்றம் அலை. தன்னிலை மாற்றம் தன்மாற்றம். தன் தன்மையின் மாற்றம் தன்மாத்திரை. பஞ்ச தன்மாத்திரைகள்;
சப்தம் / ஓசை
ஸ்பர்சம் / தொடுதல்
ரூபம்
ரசம்
கந்தம் / ஒளி
எல்லாவற்றுக்கும் ஆதாரமான – ஆத்மாவைப் ‘புருஷன்’ என்றும், எல்லாவற்றையும் நடத்தி வைக்கிற சக்தியான மாயையை ‘ப்ரக்ருதி’ என்றும் சொல்வது ஸாங்கியம். அதுபோல், இந்தப் படம் ‘புருஷன்’. அதில் இருந்து கிடைப்பது ப்ரக்ருதி. திரைப்படம் என்ன சொல்கிறது என்பதை முழுமையாக வெளிப்படுத்த முடியாது. வாழ்வதைப் போலவே, இந்த அனுபவத்தை தவறவிட வேண்டாம்.
யது மகாராஜன், அவதூதர் சம்பாஷணை
முன்பொரு சமயம் யது மகாராஜன் எங்கும் அச்சமின்றித் திரியும் ஓர் அவதூதரிடம், “உலக சுகபோகங்களில் ஈடுபாடு இல்லாத உமக்கு உள்ளத்தில் பரிபூர்ண மகிழ்ச்சி நிரம்பி இருக்கிறதே எதனால்?” என்று கேட்டார். அதற்கு அவதூதன் கூறலானான், நான் பலரை எனது குருவாகக் கொண்டு அவர்களிடமிருந்து பல செய்திகளை அறிந்து கொண்டேன். தான் இருபத்து நான்கு ஆச்சாரியர்களை ஆச்ரயித்து தெரிந்து கொண்டவை பல.
1. ப்ருத்வி – பொறுமையும் மன்னித்தருளும் குணமும் விடாமுயற்சியும் சகிப்புத்தன்மையும் கற்போம். பூமியை எங்கு வேண்டுமானாலும் தோண்டலாம். மூத்திரம் அடிக்கலாம். மலஜலம் கழிக்கலாம். அல்லது வீடுகள் கட்டலாம். மண்ணில் இருந்து புதையல் எடுக்கலாம். பூமியிலுள்ள அனைத்தும் எப்படிப் பிறருக்குப் பயன்படுகிறதோ அவ்வாறு சாதுக்கள் தான் பிறருக்கு உரியவன் என்று உணர வேண்டும். 2. வெற்பு – பிறரின் நன்மைக்காக வேலை செய்வது எப்படி என்பதை மலைகளிடம் இருந்து கற்கலாம். மலைகளில் இருந்து மரங்களும் மூலிகைகளும் நதிகளும் கிடைக்கின்றன. இவை அனைத்தும் மற்ற விலங்குகளுக்குப் பயன்படுகின்றன. உன் வாழ்க்கை பிறருக்காக இருக்கட்டும். மேலும், மலைகள் என்பவை தனிமையை அடையாளப்படுத்துபவை. அமைதியாக இறை சிந்தனையில் ஈடுபட மலைகள் உதவுகின்றன.
3. காற்று போல யோகியானவன் குண தோஷங்களால் கறைபடாதவனாக அதாவது பற்றற்றவனாக இருக்க வேண்டும். 4. ஆகாயம் போல் ஆத்மா பிரபஞ்சமெல்லாம் பரவி இருந்தாலும் எதிலும் ஒட்டாமல், தாமரை இலை நீர் போல இருக்க வேண்டும். 5. நீரைப் போல் யோகி தூயவனாய், குணமுற்றவனாய், மிருதுவான இதயம், மக்களிடம் இனிமையாகப் பழகுதல் வேண்டும். பார்ப்பது, பேசுவது, தொடுப்பது ஆகியவற்றால் அண்டினவர்களைத் தூய்மைப்படுத்த வேண்டும். 6. அக்கினியைப் போல் அழுக்கற்றவனாய் ஒளியுடன் விளங்க வேண்டும். 7. சந்திரனில் தேய்தல், வளர்ச்சி இருப்பினும் சந்திர மண்டலத்திற்கு மாறுதல் இல்லாததுபோல் ஆத்மாவிற்கு ஜனனம், மரணம் கிடையாது. 8. சூரியன், கடல் நீரைக் கிரகித்து மழையாகப் பொழிவதைப் போல் யோகி இந்திரியங்களால் விஷயங்களைக் கிரகித்து அதைத் தகுதி உள்ளவன் கிடைக்கும் போது அவனிடம் கொடுத்து, கொடுத்ததை மறந்துவிட வேண்டும். 9. மாடப்புறா பாசத்தின் காரணமாக குடும்பத்துடன் மாண்டது போல் குடும்பப் பற்றுள்ளவன் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்ளுவான். 10. மலைப்பாம்பு போல் தன் முயற்சி இன்றி கிடைத்ததைப் புசித்து உதாசீனனாய் இருக்க வேண்டும்.
11. பாம்பு – நாகம் தனியே வாழும்; தனியே பயணிக்கும். சில சமயம் எலிப் பொந்துகளில் வசிக்கும்; எங்கோ, எப்படியே, யார் வீட்டிலோ வாழும். நாகம் மிகவும் பாதுகாப்பாக தன் அடிகளை எவரும் அறியாவண்ணம் எடுத்துவைக்கும். உங்களின் இமைத்துடிப்பே, பாம்பிற்கு, உங்களை அடையாளம் காட்டிவிடும். அது போல், நீயும் மாயை குறித்து எச்சரிக்கை கலந்த விழிப்புணர்வுடன் இரு.
12. குளவி – கூட்டில் இருக்கும் பூச்சியானது, சதாசர்வ காலமும் குளவியையே நினைத்துக் கொண்டிருக்கிறது. குளவியைக் கண்டு பய உணர்ச்சியையும் விரோதத்தையும் வளர்த்துக் கொள்கிறது அந்தப் பூச்சி. அதன் பின், முழுதாக வளர்ந்த பின், அது குளவியாகவே மாறி விடுகிறது. அதே போல் நித்தியத்துவத்தையும் சத் அறிவையும் பேரின்பத்தையும் (சச்-சித்-ஆனந்த-விக்ரஹ) சொரூபமாகக் கொண்டவரை உள்ளத்தில் நிலை நிறுத்தியவர், பாவங்களில் இருந்து விடுதலை அடைகிறார்கள். 13. கடலைப் போல், பகவானிடம் மனதைச் செலுத்தி ஆசைகள் நிறைவேறும்போது மகிழ்ச்சியும், இல்லாத போது துயரமில்லாமலும் இருத்தல் நல்லது. 14. விட்டில் போல் அழியாமல் இந்திரியங்களை வென்றிருக்க வேண்டும். 15. தேனீயைப் போல் முனிவன் கிரகஸ்தர்களைச் சிரமப்படுத்தாமல் தேவையான அளவே பெற்று உண்ண வேண்டும். அடுத்த வேளைக்கு என்று சேர்த்து வைத்தால் கூட்டில் தேன் போல் அழிவு ஏற்படும். மேலும் சாஸ்திரங்களுடன் சாரத்தை மட்டும் அறிந்து வாழ வேண்டும். 16. பிடியின் (பெண் யானை) காரணமாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் ஆண் யானை போல் ஸ்திரீ பந்தத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது. 17. இனிய கானம் கேட்டு மயங்கிய மான் வேடனால் பிடிபட்டு அவதியுறுவதுபோல் பகவத் குணங்களை மட்டுமே கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவதியுற்று அழிய நேரக்கூடும். 18. தூண்டில் மீன் உணவை விரும்பி முள்ளில் சிக்கிக் கொள்வதுபோல் நாவடக்கம் (சுவையின் மீது ஆசை) இல்லாதவன் புலனடக்கம் இல்லாதவனே.
19. திருமணமாகாத பெண் வீட்டில் தனியே இருந்தபோது, அவளின் வருங்கால மாமனார் வீட்டிற்கு வருகிறார். வீட்டில் சில காய்கறிகள் மட்டுமே இருக்கின்றன. சோறு பொங்க அரிசி இல்லை. பெற்றோரும் இல்லத்தருகில் இல்லை. சாதம் வடிப்பதற்காக பிச்சை கேட்டு வீடு வீடாகச் செல்கிறாள். அவள் கை நிறைய வளையல்கள் அணிந்திருந்தாள். அந்த சத்தத்தை உணரும் அவள், “இந்த வளையல் ஒலி கேட்டால் எங்களின் ஏழ்மை நிலை புகுந்த வீட்டாருக்குத் தெரிந்துவிடும். சோற்றுக்காக பிச்சை எடுப்பது அறிந்துவிட்டால், தன் மகனுக்கு இந்த வீட்டில் பெண் எடுக்க மாட்டார்.” என நினைத்து, எல்லா வளையல்களையும் அகற்றிவிடுகிறாள். ஜன-சங்க-த்யாக அத்வைத-தியாக: கடவுளை ஒப்புக் கொள்ளாதவரிடமிருந்து தூர இருப்பாயாக. அபவாதம் பேசுவோருக்கு நீ குழந்தையாகத் தென்படுவாய். அவர்களிடம் விரிவாக விவாதித்தோ விளக்கியோ யாதொரு பயனுமில்லை. மாமனாருக்குத் தெரியக் கூடாது என்று வளையலை நீக்கியது போல் பக்தியில் நாட்டம் இல்லாதோரிடம் இருந்து உன் பக்தி ஆபரணத்தை அபவாதிகளிடமிருந்து விலக்கி கொள். ஒரே ஒரு வளையலைக் கையில் கொண்ட பெண்ணைப் போல், துறவி ஆனவன் தனிமையாகவே இருக்க வேண்டும்.
20. தன் எச்சிலில் இருந்தே சிலந்தி வலை பின்னும். வலையில் மாட்டிய பூச்சிகளை உண்ணும். வலையின் தேவை முடிந்தபின், அந்த வலையை விடுவித்து தன்னுள்ளேயே சேர்த்துக் கொண்டு விடும். அதே போல் கடவுள் தன் மாயவலையினால் உன்னை உலாவ விடுகிறார். பின் அவருள்ளே எல்லாமே ஐக்கியமாகிறது. அவரின் விருப்பத்திற்கேற்ப அவரின் நோக்கத்திற்கேற்ப பயன்படுத்துவார் என்பதை அறி. அதன் பின் அவருள்ளேயே உன்னை முழுவதுமாக திரும்பப் பெற்றுக் கொள்கிறார். 21. மாமிசத்தைக் கொத்திச் சென்ற மீன்குத்தி மற்ற பறவைகளால் துன்புறுத்தப்படும். அது மாமிசத்தைக் கீழே போட்டவுடன் அப்பறவை நலம் பெற்று விடும். ஞானம் பெற்றவளாய் பகவானையே சரணமாக அடைந்து மேன்மை அடைந்தாள். எனவே ஆசையே துன்பம்; நிராசையே பரமசுகம் என்று அறிதல் வேண்டும். 22. தனக்குத் தானே விளையாடிக் கொண்டு மகிழ்ச்சி அடையும் குழந்தை போல் தன்னில் தானாகவே ஆத்மாவில் ரமித்து ஆனந்தமாக சஞ்சரிக்கின்றேன். 23. பிங்களை என்ற வேசி தன் தொழிலில் வெறுப்புற்று அன்புடன் ஆராதிப்பவருக்குத் தனது ஆத்மாவையே அளிக்கும் அச்சுதனை நாடி அடையாமல், அந்திய புருஷனைத் தேடி ஓடுகிறேனே? என்று ஞானம் பெற்றவளாய் பகவானையே சரணமாக அடைந்து மேன்மை அடைந்தாள். எனவே ஆசையே துன்பம்; நிராசையே பரமசுகம் என்று அறிதல் வேண்டும். 24. அம்பு தொடுக்கும் வில்லாளி இலக்கின் மீது கவனமாக இருப்பது போல், ஆத்ம சொரூபத்திலே ஒன்றி விட்டவன், வெளியிலே தன்னைச் சுற்றிலும் நடப்பவற்றையும், உள்ளே நடப்பவற்றையும் கூட அறிய மாட்டான். ஆகவே யோகியானவன் சுகாசனத்தில் அமர்ந்து சுவாசத்தை அடக்கி, வைராக்கியத்தாலும் பகவத் தியானத்தாலும் வெற்றி பெறுவான்.
சமகாலத்தில் நம்மைப் போன்ற முட்டாள்கள்தான் அதிகம், புரிகிறது
இதைத்தானே பெர்ட்ரண்ட் ரஸல் அன்றே சொன்னார்:
”இந்த உலகத்தில் என்ன பிரச்சினை என்றால், முட்டாள்கள் இரும்புப்பிடி முடிவுகளுடனும், அறிவாளிகள் சந்தேகவாதிகளாகவும் இருப்பதுதான்”
– Bertrand Russell, The Triumph of Stupidity in Mortals and Others: Bertrand Russell’s American Essays, 1931-1935 (Routledge, 1998), p. 28
பெர்ட்ரண்டு ரஸ்ஸல் சொன்னது ஒரு எண்ணம். வெறும் விவாதம் இதை விலாவாரியாக ஆராய்ந்து, பல பேரிடம் கணிப்பு நடத்தி, அந்தத் தரவுகளைக் கோர்த்து, ஜஸ்டின் க்ரூகர் (Justin Kruger) என்பவரும் டேவிட் டன்னிங் (David Dunning) என்பவரும் கார்னெல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி நடத்தினார்கள். இந்த சிந்தனையை ஆதாரபூர்வமாக நிரூபித்தார்கள். இதற்கு டன்னிங் – குருகர் விளைவு (Dunning-Kruger Effect) என பெயரிட்டார்கள்.
அது என்ன சொல்கிறது?
1. திறமையற்றவர்களிடம் தங்கள் திறமை பற்றி அளவுக்கதிகமான மதிப்பீடு இருக்கிறது
2. தங்களை விட அதிதிறன் கொண்டவர்களை திறமையற்றவர்கள் சரியாக மதிப்பிடுவதில்லை
3. தங்களின் போதாமைகளையும் தங்களுக்குத் தெரியாத விஷயங்களையும் அறியும் சக்தியை – திறமையற்றவர்கள் பெற்றிருக்கவில்லை.
4. அந்த மாதிரி திறமையற்றவர்களுக்கு போதிய அளவு பயிற்சியும் முறையாகக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் கொடுத்தால், தங்களின் திறனற்ற தன்மையை புரிந்து கொள்வார்கள்.
இதையே கொஞ்சம் நீட்டித்து,
– கமல் கவிதை எழுதுவதையும்,
– பத்மா சேஷாத்ரி / ஐஐடி மாணவர்கள் எல்லோரும் தங்களை முதல் மாணவர்கள் என எண்ணம் உருவாக்கிக் கொள்வதையும்,
– ஜெயமோகனின் எல்லா நிலைப்பாடுகளும் தெளிவானவை என்று அவர் நினைப்பதையும்
– மகஸேசே விருது குறித்து உலகமே பெருமிதப் படுவதாக சில தமிழ் பாடகர்கள் கருதுவதையும்
– ஏற்கனவே குண்டாக இருக்கும் என் போன்றோரிடம் கிருஷ்ண ஜெயந்தி பட்ஷணம் எடுத்துக் கொண்டாயா எனக் கேட்டால், ‘ரெண்டே ரெண்டு விள்ளல்’ என்று பதில் அளிப்பதையும்
நினைத்துப் பார்க்கலாம்.
டிரம்ப் தேர்தலில் நிற்பதையும், அவருடைய ஆதரவாளர்கள் எப்படி டொனால்ட் டிரம்ப் சொல்வதையெல்லாம் நம்புகிறார்கள் என்பதும் கூட இதே டன்னிங்-க்ரூகர் தாக்கம் என்கிறார் மிச்சிகன் பல்கலை தத்துவப் பேராசிரியர்.
இந்தியாவில்தான் நாடி ஜோசியம், ஜாதகம், பரிகாரம், கைரேகை, கிளி சீட்டெடுத்தல் என்று நினைத்திருந்தேன். அமெரிக்காவும் அதே கதிதான் என்பது ஜார்ஜ் டபிள்யூ புஷ் (பெரியண்ணன்) நீதிபதிகள் என்னும் கிளிகளின் சீட்டுக்களில் ஜெயித்தபோது தெரிந்தது. அதன் பின் நேற்றைய தேர்தலில் யேசு கிறிஸ்துவின் உதவியுடன் டெட் குரூஸ் (ஜோ. டி. குரூஸ் மாதிரியே பெயர் கொண்டிருப்பவர்) ஜெயிப்பது வரை உறுதியாகிக் கொண்டே இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக அறிவியல்தனமான இரு புத்தகங்கள்:
Medical Medium: Secrets Behind Chronic and Mystery Illness and How to Finally Heal by Anthony William
அறிவியல் என்றால் கவனிப்பது, கவனித்ததை அளவெடுப்பது, அளவுகளைப் பரிசோதிப்பது, பரிசோதனையை மீண்டும் மீண்டும் செய்து பார்ப்பதன் அடிப்படையில் இறுதி முடிவை நிரூபிப்பது என்பார்கள். அந்தோணி வில்லியம் அந்த வகையைச் சேர்ந்தவர் அல்லர்.
கியானு ரீவ்ஸ் நடித்து ‘கான்ஸ்டாண்டின்’ என்று ஒரு பேய் + சாமியார் + கிறித்துவ பூதம் படம் வரும். அதில் வருவது மாதிரி நான்கு வயதில் அவருக்கு முன் அரூப உருவங்கள் தோன்றி அவருக்கு ஞானப்பால் கொடுத்திருக்கிறது. நான்கு வயதிலேயே நேராகச் சென்றார். பாட்டியின் மார்பில் கை வைக்கிறார். ‘பிஞ்சிலேயேப் பழுத்திடுச்சு’ என்போமே… அது போல். அப்பொழுதே கையடித்து சொல்லி இருக்கிறார்: “நுரையீரல் புற்றுநோய்” (தமிழில் சொல்லவில்லை; லங் கேன்சர் என்று ஆங்கிலத்தில் மழலையாகச் சொன்னதை கற்பூரம்… சாரி… மெழுகுவர்த்தி அடித்து சத்தியம் செய்கிறார்).
அடுத்த நாள் காலையே மருத்துவமனைக்கு பாட்டியை அழைத்துச் செல்கிறார்கள். சரியான கருநாக்கு. அப்படியே பலித்துவிட்டது.
நீங்கள் வில்லியமை நினைத்தவுடன் தரிசிக்க முடியாது. அதற்கு பெரிய க்யூ நிற்கிறது. லாட்டரியில்தான் நோயாளிகளைத் தேர்ந்தெடுக்கிறார். அவர் தேர்ந்தெடுத்தாலே உங்களின் பிணி பரிபூரண குணமடையும். அறுவை சிகிச்சையின்றி மருந்தின்றி மாத்திரையின்றி குமுதம் பிரார்த்தனை கிளப் இல்லாமல் நலமடைவீர்கள்.
இவருக்கு வரும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்று சொல்லவும் வேண்டுமோ! நீங்கள் விசுவாசியா?
Cure: A Journey into the Science of Mind Over Body by Jo Marchant
எஸ்.வி. சேகரின் ‘காட்டுல மழை’யில் சில புகழ்பெற்ற கடிஜோக்குகள் உண்டு. கீழ்கண்ட சம்பவத்தைப் படித்தால் வடிவேலு, விவேக் கூட நினைவிற்கு வரலாம்.
”முதல் நாள் கொதிக்கும் தண்ணீரில் கால் வைத்தேன். என்னால் அதைத் தாங்கவே முடியவில்லை.
அடுத்த நாள் என்னுடைய பிடித்தமான விளையாட்டை ஐ-பேட் எடுத்து விளையாடிக் கொண்டே, அதே கொதிக்கும் வென்னீரில் காலை வைத்தேன். என்ன ஆச்சரியம்… சூடே தெரியவில்லை!”
காதலன் காதலியிடம் மயங்குகிறான். சிலர் ஃபேஸ்புக்கில் விழுகிறார். சிலர் ஆசானிடம் அடிமையாகிறார்கள். மனவசியம் எனலாம். தொழுகையில் லயிக்கலாம்.
எல்லாம் நம் சிந்தையில்தானே இருக்கிறது. பூதம் இருக்கிறது என நினைத்தால் அது நம்மை விழுங்கும். பூச்சிதான் இருக்கு, என்று நினைத்து எல்லாப் பிரச்சினைகளையும் நசுக்கு என்கிறார்.
’ஏமாறாதே… ஏமாற்றாதே’ என்று வாத்தியார் பாடியிருக்கலாம். கடைபிடிக்கவில்லையே!
புத்தகம் படிப்பதோடு நிற்காமல் எழுதியவருக்கு மடல் போடவும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். பத்து வயதில் கோகுலம் ஆசிரியரான அழ. வள்ளியப்பா பதில் போட்டது என்னை ஊக்குவித்தது. அப்புறம் பதில் போடாத சுஜாத இன்னும் நிறைய.
வாழ்க்கையினால் ஏதாவது உபயோகம் இருக்க வேண்டும். என்னுடைய உயிரினால் ஏதாவது பலன் இருக்க வேண்டும்.
எழுத்தாளரை வாசிப்பதால், பிறருக்கும் தம் எண்ணங்களைப் பகிரவேண்டும். வெறுமனே கருத்துகளை உறிஞ்சிக் கொண்டு இருக்கக் கூடாது. கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு சாலிட்டேர் மட்டும் விளையாடுவது போல் தனிமையைக் கொண்டாட, எதற்காக குழுமத்தில் இருக்க வேண்டும்?
கன்ஃபூசியசு சொன்னது: ‘reading without thinking gives one a disorderly mind; thinking without reading makes one flighty’
ஜெயமோகன்.காம் மட்டும் படித்துவிட்டு, அவருடைய குழுமத்தில் பதில் போடாவிட்டால் அலட்சியம் கலந்த சோம்பேறித்தனம் பெருகிவிடும். புத்தகம் வாசித்து முடித்தவுடன் எழும் எண்ணங்களைத் தொகுத்து அஞ்சல் செய்யாவிட்டால் எதிர்வினையாற்றவே பயம் நிறைந்த அசிரத்தை தோன்றிவிடும்.
உங்கள் பதிவுகளுக்கு சாதாரணமாக யார் பதில் போடுகிறார்கள்? இரண்டு மூன்று வரிகளுக்குள்ளேயே பதில் எழுதிப் போடுவதால், மறுமொழி எழுத அயர்ச்சி ஏற்படுகிறதா? எழுதுபவரை விமர்சித்து காயப்படுத்துவதற்கு பதிலாக, மௌனம் காப்பது சிறந்ததா?
நாம் ஒவ்வொருவரும் தனித் தனி நாடு. அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளை பல உயிரினங்கள் ஆக்கிரமித்துள்ளன. நம்முடைய சோத்தாங்கையில் இருக்கும் பாக்டீரியாக்களுக்கும் பீச்சாங்கை பாக்டீரியாக்களுக்கும் மாமன், மச்சான் உறவு கூட இல்லை. இரண்டுமே வெவ்வேறு நுண்ணுயிரி இனங்களைச் சேர்ந்தவை.
தூய பிரதேசங்களில் சௌகரியமாக வளர்ந்தவர் துணிச்சலான காரியங்களில் பயப்படாமல் இறங்குவதற்கும், சராசரியான மனிதர்கள் செட்டில்ட் வாழ்க்கைக்கு பிரியப்படுவதற்கும் கூட நமக்குள்ளே குடித்தனம் செய்யும் உயிரிகள் காரணம்.
உடலையும் சிந்தனையையும் பிரித்துப் பார்க்க முடியாது என்பதை இருபதாம் நூற்றாண்டின் மருத்துவ சாதனையாக சொன்னால்… என்னுள்ளே இருக்கும் கோடிக்கணக்கான உயிரினங்களின் தொகுப்புதான் நான் என்றும் என்னுடைய செயல்பாடுகள் என்றும் அறிவது இக்கால கண்டுபிடிப்பு.
கிராமத்திற்கு புதிதாக வந்திருந்த இளம் பாதிரியாரை விருந்துக்கு அழைக்கிறார் மறை மாவட்ட ஆயர். ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் பார்க்கும்போது பக்கத்தில் வரும் பரிந்துரைகள் கவனத்தை சிதறடிப்பது போல், உணவின் ருசியுடன் உணவை செய்த வீட்டு வேலைக்காரியின் மீதும் பாதிரியாருக்கு கண் அலை பாய்கிறது. இவ்வளவு லட்சணமான பெண்ணை சும்மாவா பிஷப் வைத்திருப்பார் என்று சிந்திக்க வைக்கிறது.
பிஷப் நாடி பிடித்து விடுகிறார். “நீ நெனக்கிற மாதிரி எதுவும் இல்ல… அவ எனக்கு சமைச்சுப் போடறதுக்கும் துணி தோய்க்கிறதுக்கும் மட்டுமே துணையா இருக்கா!”
ஒரு வாரம் போன பின் வேலைக்காரி பிஷப்பிடம் சொல்கிறாள். “யாராவது ஸ்பெஷலா வந்தால் மட்டுமே அந்த வெள்ளிக் கரண்டி பயன்படுத்துவேன். அருட் தந்தை வந்துட்டுப் போனப்புறமா அதைக் காணவில்லை. அவர் எடுத்திருக்க மாட்டார்… இல்லியா?”
“ஆவர் எடுத்திருப்பார்னு தோணல. இருந்தாலும் கடுதாசு போடறேன்”னு சொன்ன ஆயர் எழுதினார்: “நீங்கள் வெள்ளிப் பாத்திரங்களை எனது இல்லத்தில் இருந்து எடுத்ததாக நான் சொல்லவில்லை. ஆனால், உண்மை என்னவென்றால் தாங்கள் இரவு உணவிற்கு வந்த நாளில் இருந்து அந்த சாமானைக் காணவில்லை!”
கொஞ்ச நாள் கழித்து பாதிரியிடம் இருந்து பதில் வந்திருந்தது: “மேன்மை பொருந்திய ஆயர் அவர்களுக்கு, நீங்கள் பணிப்பெண்ணுடன் படுப்பதாக நான் சொல்லவில்லை. ஆனால், நிஜத்தை சொல்லவேண்டுமென்றால், உங்கள் படுக்கையில் நீங்கள் உறங்கிக் கொண்டிருந்தால், அங்கே உள்ள அந்த வெள்ளிக் முட்கரண்டி உங்களை உறுத்தியிருக்கும்.”
ஆஃபீஸ்ஸ்பேஸ்
அலுவல் மீட்டிங்குகளும் இப்படித்தான்… எதையோ நினைப்போம். சொல்ல மாட்டோம். அவர்களாகவே ஏதோ புரிந்து கொள்வார்கள். பின்னணியில் அரசியல் சூழ்ச்சி திட்டம் நடக்கும். உள்ளடி வேலை இருக்கும். சின்னச் சின்ன குழுவாக சந்திப்புகள் அரங்கேறும். மின் மடலில் காய் நகர்த்தப்படும்.
அதை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சொல்கிறது:
The Quiet Plotter
Deadly Meetings in the Workplace – WSJ.com: CRIME: Practices passive-aggressive insubordination. MODUS OPERANDI: Remains quiet at meetings; later undermines bosses and decisions. LEVEL: First degree nuisance
இந்த மாதிரி பெயர்கள் எல்லாம் எங்கிருந்து கிடைக்கின்றது? எப்படி முத்திரை குத்துகிறார்கள்?
The Multitasker?
The Jokester?
The Dominator
The Rambler?
Placater
Decimator
Detonator
Naysayer
விவாத விளையாட்டு
எல்லாமே கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் புழக்கத்தில் இருப்பவை. சொல்லப் போனால், ரோல் ப்ளே எனப்படும் இன்னின்னார் இப்படி இப்படி செய்வதில் வல்லவர் என உருமாறும் ஆட்டங்கள்.
சிலர் இதில் உருப்படியானவர்கள். காரியத்தை முடிக்க உதவுபவர்கள். முன்னேற்றத்திற்கு வழிகோல்பவர்கள். ப்ராஜெக்ட்டையும் கம்பெனியையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துபவர்கள். செயல்வீர்ர்கள். அப்படிப்பட்டவர்களின் பங்குகளை இப்படி பிரிக்கலாம்:
கல்வியாளர் (பயிற்றுனர்)
சமரச மார்க்கவியலாளர் (Compromiser)
க்ரியா ஊக்கி (Encourager)
தகவல் தேடி (Seeker of Information)
சந்தேகாஸ்தபமானதை கேள்விக்குள்ளாக்குபவர் (Questioner of dubious Assertions)
சரிபார்ப்பவர் (Validator)
பொறுமையாக காது கொடுப்பவர் (Attentive Listener)
பிணக்குகளை ஊடல்களாக்கி கொசுவாக்குபவர் (Diffuser of Tension)
This country, with its institutions, belongs to the people who inhabit it. Whenever they shall grow weary of the existing Government, they can exercise their constitutional right of amending it or their revolutionary right to dismember or overthrow it.
ஏர் உழுவைத் திருப்பிப் போட்டது போல் கேள்விக்குறி இருப்பது தற்செயல் அல்ல! பழைய மண்ணாக இருக்கும் மூடநம்பிக்கைகளை உடைக்கவும் அடுத்து விதைகள் வளர்ந்து பூத்துக் குலுங்க புத்துணர்வாக்கவும் வினாக்குறி ஏர்.
விவாதிப்பதற்கான விஷயங்கள் உலகெங்கும் எக்கச்சக்கம். ஒரு பட்டியல்.
அன்னா அசாரே: தேர்தல் சீரமைப்பு – எவர் போட்டியிடலாம்? எவ்வளவு செலவழிக்கலாம்?
ஆப்கானிஸ்தான் போர்
ஆர்க்டிக் பிரதேசத்தில் இருந்து எண்ணெய் எடுக்கலாமா? சவூதி கிணறுகளே போதுமானதா?
கார்பன் குறைவாக கக்கும் நாடுகள் கரிமம் அதிகம் உபயோகிப்பவர்களிடமிருந்து பணம் மட்டும் பெற்றுக் கொள்ளலாமா? உலகமே உமிழ்வுகளை ஒட்டுமொத்தமாக குறைக்கவேண்டுமா?
எச்.ஐ.வி (அ) எயிட்ஸ்
எல்லையில் சுவரெழுப்பி பாதுகாப்பதா? உலகமே இணையத்தாலும் பொருளாதாரத்தாலும் சுருங்கிய நிலையில் திறந்தவெளியாக குடிபுகலை அனுமதிப்பதா?
வங்கிகளை திவாலாக்குவதா? மீட்டெடுப்பதா?
வலைப்பதிவுகள்
லட்சாதிபதிகள் கோடீஸ்வரர்கள் ஆவது: பெரு நிறுவனங்களில் முதன்மையான்வர்களின் சம்பளம் பன்மடங்கு அதிகரிப்பது
துப்பாக்கி தோட்டா கட்டுப்படுத்தல்: நுகர்வோர் சந்தையாக அனைவரும் பாதுகாப்புக்கு வைத்திருக்கலாமா? காவல்துறைக்கு மட்டுமே சொந்தமா?
இஸ்ரேலும் இரானும் பாலஸ்தீனமும்
கல்வியறிவு: வாழ்க்கைக்குத் தேவையான படிப்பும் வருவாய்க்கும் உபயோகமான கல்லூரி வாழ்க்கையும்
உடல்நல காப்பீடு: எகிறும் மருத்துவ செலவும் ஏறும் வயோதிகர் மக்கள்தொகையும்
வட கொரியா: போக்கிரி நாடுகளின் கையில் இராணுவ பலம்
அணு ஆயுதம்: மாற்று சக்தி
உடல் பருமன்: மாறும் உணவு கலாச்சாரம்
கடற்கொள்ளையர்: சோமாலியாவை மேற்கத்திய நாடுகள் ஊக்குவிக்கிறதா?
கலவிக் கல்வி: இந்திய நாகரிகம் காமசூத்ராவை கோவிலிலேயே கொண்டிருந்தாலும், வைய விரிவு வலையெங்கும் மிக அதிகமான பலான தேடல் கொண்டிருப்பதன் சூட்சுமம்
அறிவியல் ஆராய்ச்சி: எவாஞ்சலிகல் கிறித்துவத்தின் கட்டுப்பெட்டித் தன்மைகளை எவ்வாறு தடுத்து, ஸ்டெம் செல் போன்ற துறைகளில் மருத்துவத்தை முன்னேற்றலாம்?
தீவிரவாதம்: போரிட்டு அடக்க முடியுமா?
உலக வெம்மையாக்கம்
பள்ளிக்கூட மாணவர் பிரச்சினைகள்: சோசியல் மீடியா அச்சுற்றுத்தல்
மாற்று எரிசக்தி
பொக்கீடுகள்: வரிச்சுமை, பட்ஜெட்
அரிதாகிப் போன ஜீவராசிகள் குறித்து அஞ்ச வேண்டுமா? டைனோசார் போல் போனால் போட்டுமா?
ரயில் பெட்டியின் ஜன்னலோரம் உட்கார்ந்திருந்தான் அந்த இளைஞன். ரயில் புறப்பட்டதும் “அப்பா அப்பா மரமெல்லாம் பின்னாடி போகுதுப்பா” என்று பரபரப்பாய் ஆச்சர்யப்பட்டான். அவனருகே அமர்ந்திருந்த அவனுடைய தந்தையும் அவனுடைய ஆச்சர்யத்தை தலையசைத்து ரசித்தார்.
அதே பெட்டியில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவர்களுக்கு இது எரிச்சலூட்டியது. இந்த வயதில் ஓர் இளைஞனுக்கு இதில் எல்லாம் ஆச்சர்யமா என்று இருந்தது. சிறிது நேரத்தில் மழை பெய்தது. “அப்பா… அப்பா மழை பெய்கிறது” என்றான் இளைஞன்.
கல்லூரி மாணவன் ஒருவன் பொறுமை இழந்துபோய், “இந்த வயதில் இப்படியெல்லாமா ஆச்சர்யப்படுவார்கள்” என்றான்.
அந்த இளைஞனின் தந்தை “மன்னிக்கவும். பிறந்ததிலிருந்து இவனுக்குக் கண்பார்வை இல்லாமல் இருந்தது. இன்றுதான் பார்வை கிடைத்து மருத்துவமனையில் இருந்து ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்.” என்றார்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde
Letters to the Author: Importance of sending mails to Writers and Editors
புத்தகம் படிப்பதோடு நிற்காமல் எழுதியவருக்கு மடல் போடவும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். பத்து வயதில் கோகுலம் ஆசிரியரான அழ. வள்ளியப்பா பதில் போட்டது என்னை ஊக்குவித்தது. அப்புறம் பதில் போடாத சுஜாத இன்னும் நிறைய.
வாழ்க்கையினால் ஏதாவது உபயோகம் இருக்க வேண்டும். என்னுடைய உயிரினால் ஏதாவது பலன் இருக்க வேண்டும்.
எழுத்தாளரை வாசிப்பதால், பிறருக்கும் தம் எண்ணங்களைப் பகிரவேண்டும். வெறுமனே கருத்துகளை உறிஞ்சிக் கொண்டு இருக்கக் கூடாது. கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு சாலிட்டேர் மட்டும் விளையாடுவது போல் தனிமையைக் கொண்டாட, எதற்காக குழுமத்தில் இருக்க வேண்டும்?
கன்ஃபூசியசு சொன்னது: ‘reading without thinking gives one a disorderly mind; thinking without reading makes one flighty’
ஜெயமோகன்.காம் மட்டும் படித்துவிட்டு, அவருடைய குழுமத்தில் பதில் போடாவிட்டால் அலட்சியம் கலந்த சோம்பேறித்தனம் பெருகிவிடும். புத்தகம் வாசித்து முடித்தவுடன் எழும் எண்ணங்களைத் தொகுத்து அஞ்சல் செய்யாவிட்டால் எதிர்வினையாற்றவே பயம் நிறைந்த அசிரத்தை தோன்றிவிடும்.
உங்கள் பதிவுகளுக்கு சாதாரணமாக யார் பதில் போடுகிறார்கள்? இரண்டு மூன்று வரிகளுக்குள்ளேயே பதில் எழுதிப் போடுவதால், மறுமொழி எழுத அயர்ச்சி ஏற்படுகிறதா? எழுதுபவரை விமர்சித்து காயப்படுத்துவதற்கு பதிலாக, மௌனம் காப்பது சிறந்ததா?
பின்னூட்டமொன்றை இடுக
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Authors, Azha Valliappa, ஆசிரியர், எண்ணம், எதிர்வினை, எழுத்தாளர், சிந்தனை, சுஜாதா, பதில், மறுமொழி, Books, Children, Comments, Editors, Feedback, Gokulam, Kids, Letters, Mails, Notes, Opinion, Reader, Reply, send, Sender, Sujatha, Think, Write, Writers