Tag Archives: தமிழ்

அமெரிக்காவில் தமிழ் வாத்தியாரும் தேஸி மாணவரும்

தலைப்பை விட சிறிய பதிவு. மகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கிறேன். அவள் எழுதிய கடிதத்தின் முதல் வரி:

நான் பெபொ த்த டம்ர்ல பனன் ர்கன்

அவள் படித்துக் காட்டியது:

நான் இப்பொழுது இதைத் தமிழில் பண்ணி இருக்கிறேன்.

முந்தைய பதிவுகள்:
1. சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா?
2. இந்தியாவைப் பற்றி வரைக
3. வெற்றிகரமான நூறாவது நாள்
4. ஔவையார் வேஷம்: நியு இங்கிலாந்து தமிழ் சங்கம்
5. Dasavatharam – Eight Year old’s Take

அமெரிக்காவில் திராவிட கலாச்சாரம்

மதியம் பதினொன்றே முக்கால்.

‘இன்று எங்கே சாப்பிடலாம்?’

‘மினர்வா போகலாமா?’

‘சரி’

நானும் அவளும் என்னுடைய காரில் பயணிக்க ஆரம்பித்தோம்.

‘ஏதாவது இந்தியப் பாட்டு போடேன்’

கொஞ்சம் தர்மசங்கடம். ஐ-பாடில் ‘ஆடுங்கடா என்ன சுத்தி’, ‘கெடா காறி’; தூக்கத்தை விரட்டும் பாடல்கள் எனக்கு உவப்பானவை. அதிர்ஷ்டவசமாக சிடி-யில் ரங்கீலா இருந்தார்.

‘அனிமல் கிங்டம் மாதிரி ம்யூசிக் ஆக இருக்கே? காட்டுவாசி தீமா?’

இல்லை என்று மறுத்தேன். அமெரிக்காவில் இந்திய ப்ரெட்டும், சிக்கன் டிக்கா மசாலாவும் பிடித்த தக்கினியூண்டு இடத்தை, ஆஸ்கார் ரெஹ்மான் கூட பிடிக்க முடியாது. சாரு, ஷாஜி சொல்வதிலும் பாயின்ட் இருக்கிறது.

வழக்கம் போல் பஃபே தேர்ந்தெடுத்தேன்.

அமெரிக்காவில் மதுவருந்தும் பப்களில் மாபெரும் தொலைக்காட்சி திரை இருக்கும். நாலு டிவியும் நாற்புறம் நிறைந்திருக்கும். எல்லாவற்றிலும் ஏதாவது விளையாட்டு காண்பிப்பார்கள். அவர்களுக்குப் போட்டியாக இந்திய உணவகங்களில் பெரிய திரை வைக்கிறார்கள்.

இந்திப் பாடல், தெலுங்கு ஆட்டம், தமிழ் குத்து என்று ஒருங்கிணைப்புடன் தேசிய உணர்வு பொங்க விடுகிறார்கள்.

‘யூ ட்யூபில் உங்க சண்டைக் காட்சி பார்த்தேன். பஞ்சதந்திரக் கதை மாதிரி மேஜிக்கலா இருந்தது. மலைக்கு நடுவில் கயிற்றுப் பாலம். நட்ட நடுவில் ஒருத்தன் ஆக்ட்ரெஸோட விரலப் பிடிச்சுண்டு இருக்கான். இன்னொருத்தன் அவனோட காலைத் தழுவித் தொங்கிண்டு இருக்கான். தீடீர்னு தன்னோட லெக் பீஸை கட் பண்ணிக்கிறான். பாலத்தை அறுத்து பறந்து போய் ஹீரோயினை அந்தப் பக்கம் விடறான். ரொம்ப காமெடியா இருந்துச்சு.’

‘இராவணன்?’

‘தெரியல… ரெண்டு மூணு பார்த்தேன்! எல்லாமே ஒரே மாதிரி இருந்தது. வெரி கன்ஃப்யூஸிங்.’

மணி ரத்தினத்தின் வழுக்கலுக்கு சுகாசினியே காரணம் என்பதை சுருக்கமாக விளக்கினேன்.

‘இதென்ன சாங்? இஸ் இட் தி எக்ஸ்ப்ளாயிடெடிவ் சீக்வென்ஸ்?’

“என் பேரு மீனாகுமாரி” போய்க் கொண்டிருந்தது. ‘அதென்ன exploitative song?’

‘நீதானே சொல்லிக் கொண்டிருந்தாய். ரொமான்ஸ், சோகம், வீரம், ருத்ரம் போன்ற நவரசங்களும் ஒவ்வொரு படத்தில் எட்டு பாடலாக அமையும் என்று… அது போல் இது போல் டான்சிங்?’

‘இது குடும்பப் படம். இது சூப்பர் மேன் பற்றியது. இந்தியாவில் “தெய்வம் மனுஷ ரூபம்” என்னும் தொன்மத்தை பின்பற்று முருகரை அடியொற்றி “கந்தசாமி” என்று யூ செர்டிஃபிகேட்… அதான் G for General Audiences அத்தாட்சி முத்திரையுடன் வெளியான படம்.’

இந்த முறை அவள் ம்ம்ம்ம்.

‘இதென்ன ரோட்டில் யாருமே இல்லை. வழிப் போக்கர்கள் கூட டீக்கா இருக்காங்களே!’

‘கஜினி; அவனுக்கு அஞ்சு நிமிஷம்தான் உலகம் நினைவில் இருக்கும். அதன் பிறகு மறந்து போகும். மெமண்டோ பார்த்திருப்பியே? அதன் முன் தோன்றிய தமிழன். நீ குந்தர் கிராஸ் மாதிரி. ரொம்பக் கேள்வி கேட்கிறே. உனக்கு ஒரு சமூகமே நொந்து நூடில்ஸாய் இருக்குனு புரிய வாய்ப்பேயில்ல. கலைகள் எங்க நாட்டில் இருக்கக் கூடாதா? உனக்கு இது சதைக் காட்சிசாலை. எங்களுக்கு நிர்வாணா!’

தெம்பாய் இன்னொரு நாப்கின் எடுத்து துடைத்தெறிந்தோம்.

சாரு நிவேதிதா சந்திப்பு

பத்தாண்டுகளுக்குப் பிறகு உறவினர்கள் சந்தித்துக் கொண்டால், கோவிலில் வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். பத்து மாதங்கள் கழித்து சந்திக்கும் சிறுவர்கள் பூங்காவின் விளையாட்டரங்கத்தில் ஆடத் துவங்க வேண்டும். பத்து புத்தகங்களை வாசித்தபிறகு, எழுதியவரை எங்கு சந்திக்க வேண்டும்?

எல்லாவிதமான கேள்விகளுக்கும் உலகப்பொதுவிடை: ‘It depends!’

வருடாவருடம் சென்னைக்கு ஒரு முறை எட்டிப் பார்ப்பதுண்டு. கிழக்கின் மொட்டை மாடிக் கூட்டம், ஞாநியின் கேணி, தமிழ் ஸ்டூடியோவின் முழுநிலா இரவுப்படக்காட்சி எல்லாம் நடக்காத சமயமாக தோன்றுவது வழக்கம். பாலபாரதியின் பீச் பதிவர் சந்திப்பு, ரோசா வசந்த்துடன் மேன்ஹட்டன் பார்வை என்று முடிந்து போகும்.

அப்போதெல்லாம் லக்கிலுக், அதிஷா போன்ற சென்ன தாதா பதிவர்களிடம் ‘சாரு நிவேதிதாவோடு ஒரு நைட் அரேஞ்ச் செய்து தர முடியுமா?’ கேட்டதுடன் சரி.

‘ரேட் அதிகம்’ என்பது போல் ஏதோ பதிலொன்றை உதிர்த்து அவர்களும் நழுவி விடுவார்கள்.

நிறைய எழுதுபவர் பேச்சில் கெட்டிக்காரராக இருப்பார். இடையே ஒரு கண்ணாடிச் சுவர் இருக்கும். அதை உடைத்துவிட்டால், சம்பாஷணை சுவாரசியம் அளவிட முடியாதது. சிலர் துவக்கத்திலேயே அவற்றை கிள்ளி எறிவர்; ஆத்மார்த்தமான உரையாடல் நிலையை போதை இல்லாமலேயே ஊட்டுவர். சிலரோ தங்களின் புத்தகங்களின் நீட்சியாக சொற்பொழிவை அமைத்துக் கொள்வர். எப்படியாக இருப்பினும் மாலை நேரத்து மீட்டிங் சுகம் தரும்.

சாருவின் எழுத்தை மேலோட்டமாக படிப்பவருக்கே அவர் மேல் அச்சம் கலந்த குழப்பம் நேரிடும். எந்திரன் விமர்சனம் வாசித்தவுடன் நண்பர் சொன்ன மதிப்பீடு நினைவில் தோன்றியதைத் தவிர்க்கமுடியவில்லை.

‘சுஜாதா யாரையாவது திட்டினால், அது அந்தாளுக்கு அழைப்பு விடுவதாக அர்த்தமாக்கும். ஒரே வருடத்தில் ரெண்டு படம் வருது. ஒண்ணு புது வசந்தம்; இன்னொண்ணு அஞ்சலி. எந்தப் படத்த சுஜாதா “ஆஹா… ஓஹோ…”ன்னு பாராட்டினார்? எதத் தாளிச்சு அதகளமாக்கினார்னு நெனக்கிறீங்க? – “அஞ்சலி திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றின் மோசமான மைல்கல்” என்றார் சுஜாதா. விக்ரமன் படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். அடுத்த வருஷம் மணிரத்தினத்துடன் இணைந்து விட்டார்’.

சாரு நிவேதிதாவும் கமலைத் திட்டுகிறார். இளையராஜாவைத் தாக்குகிறார். ரஜினி, ஷங்கர் படங்களையும் விட்டுவைக்கவில்லை. நாமும் நிறையவே விமர்சித்திருக்கிறோம். ராசலீலாவை கிழிக்கிறோம். சாரு மடலில் தந்த கவிதை கிவிதையாக்குகிறோம். நானும் கூட்டு சேர நிறையவே சங்கேதம் விட்டுப் பார்த்தாகிவிட்டது.

‘உங்கொப்புரான் சத்தியமா நான் குடிகாரன் இல்ல’ என்று சாரு ஆனந்த விகடனிலும் அவரின் பதிவிலும் தொடர்ச்சியாக எழுதி வந்த காலகட்டம் அது. அப்படியானால் சந்திக்க உகந்த இடம் மதுவகமே என முடிவானது. நித்யானந்தா மாதிரியே குடிப்பழக்கத்திற்கும் ஏதாவது பதில் வைத்திருப்பார் என்று தோன்றாமல் போனது வேறு பிரச்சினை.

சாருவிற்கு மின்மடலிட்டேன். தொலைபேசி தந்தார். அழைத்தேன். பேசினோம். ஒரேயொரு சந்தேகம் கேட்டார்.

“பாலா, ஆனந்த விகடன் கட்டுரை எழுதுகிறேன். இந்த பிராமணர்கள் எல்லாம் பூணூல் மாற்றிக் கொள்வார்களே… அந்த நாள் எந்த மாதத்தில் எப்பொழுது வரும் என்று  தெரியவில்லை; திண்டாடுகிறேன். கூகிள் கைவசம் இல்லை. உங்களுக்குத் தெரியுமா?”

இதற்கு மேல் சாரு நிவேதிதாவுடன் ஆன சந்திப்பு குறித்து குறிப்பிடத்தக்க விஷயம் எதிவும் கிட்டாததால், இந்தக் கட்டுரை இத்துடன் நிறைவடைகிறது.

ஆ இரா வேங்கடாசலபதி – பயோ டேட்டா

நன்றி: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் – Madras Institute of Development Studies

கல்வி/படிப்பு

  1. பி. காம். – சென்னை பல்கலை, 1987
  2. எம் ஏ (சரித்திரம்), மதுரை காமராஜர், 1989
  3. பிஎச்டி (வரலாறு), ஜவஹர்லால் நேரு, புது தில்லி, 1995

ஆராய்ச்சித் துறை

  • Social History
  • Cultural History
  • Intellectual History
  • Literary Historiography – இலக்கிய வராலாற்றியல்
  • Social and Cultural Change – சமூக மற்றும் கலாச்சார மாற்றம்

Visiting Faculty, Fellowships and Awards

  1. April-July 2006, Charles Wallace Visiting Fellow, Center of South Asian Studies, University of Cambridge
  2. February-March 2005, UPE Visiting Fellow, University of Hyderabad.
  3. Fall Quarter 1999, Visiting Assistant Professor, Department of South Asian Languages and Civilizations, University of Chicago.
  4. December 1997-January 1998, Visiting Fellow, Indo-French Cultural Exchange Programme, Maison des Sciences de l’Homme, Paris.
  5. October 1996, Visiting Fellow, Maison des Sciences de l’Homme, Paris.
  6. September-October 1996, Research Grant,Charles Wallace India Trust, U.K.
  7. August 1992-January 1994, Junior Research Fellowship,Indian Council of Historical Research, New Delhi.
  8. 1999, Bursary to complete a manuscript on popular literature in Tamil, V.S. Sethuraman Centre for Culture Studies.

வேலை/அனுபவம்:

  1. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் – Madras Institute of Development Studies, Chennai (from June 2001)
  2. Department of Indian History, University of Madras, Chennai (from December 2000 – May 2001)
  3. வரலாற்றுத்துறை, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை, திருநெல்வேலி, April 1995- December 2000

புத்தகங்கள் (ஆங்கிலம்) :: Books (English)

  1. 2006 (ed.) A.K. Chettiar, In the Tracks of the Mahatma: The Making of a Documentary, Orient Longman, Hyderabad.
  2. 2006 In Those Days There Was No Coffee: Writings in Cultural History (New Perspectives on Indian Pasts, Series Editor: Saurabh Dube), Yoda Press, New Delhi.
  3. 2006 (ed.) Chennai, Not Madras: Perspectives on the City, Marg, Mumbai.
  4. 2003 (trans.) Sundara Ramaswamy, J.J.: Some Jottings, Katha, New Delhi.

புத்தகங்கள் (தமிழ்) :: Books (Tamil)

  1. 2006 (ed.) புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள்third volume of the chronological and variorum edition of the complete works of Pudumaippithan), Nagercoil.
  2. 2005 (trans.) துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம் – பாப்லோ நெருதா :: (Tamil Translation of Pablo Neruda), காலச்சுவடு.
  3. 2004 (ed.), பாரதியின் ‘விஜயா’ கட்டுரைகள் – காலச்சுவடு.
  4. 2004 முச்சந்தி இலக்கியம் (Popular Literature in Colonial Tamilnadu), Nagercoil.
  5. 2004 முல்லை – ஓர் அறிமுகம், Mullai Pathippagam, Chennai.
  6. 2003 (ed.), ஏகே செட்டியார் – அண்ணல் அடிச்சுவட்டில் (The making of the documentary, Mahathma Gandi), Kalachuvadu Pathippagam, Nagercoil.
  7. 2002b நாவலும் வாசிப்பும் – ஒரு வரலாற்றுப் பார்வை(Early Novels and Reading Practices: A Historical View), Nagercoil (second edition 2003).
  8. 2002a (ed.) புதுமைப்பித்தன் கட்டுரைகள் (second volume of chronological and variorum edition of the complete works of Puthuumaippithan), Nagercoil (second edition 2003).
  9. 2000b அந்தக் காலத்தில் காப்பி இல்லை முதலான ஆய்வுக் கட்டுரைகள் (collection of research papers on Tamil cultural history), Nagercoil (second edition 2001).
  10. 2000a (ed.) புதுமைப்பித்தன் கதைகள் (first volume of chronological and variorum edition of the complete works of Pudhumai piththan), Nagercoil (third revised edition 2002).

பத்தி/கட்டுரை/ஆய்வு வெளியீடு/Translations

  1. 2007 ‘Exaggerated Obituaries: The Tamil Book in the Age of Electronic Reproduction’, in Nalini Rajan (ed.), Digital Culture Unplugged: Probing the Native Cyborg’s Multiple Locations, Routledge, London, New York & New Delhi, 2007.
  2. 2006 ‘Madras Manade: How Chennai remained with Tamilnadu’, in A.R.Venkatachalapathy (ed.), Chennai, Not Madras: Perspectives on the City, Marg, Mumbai.
  3. 2005d ‘Andha Kalathil Kapi Illai: Tamilagathe Kapiyude Samskariga Charithiram’, Pachakuthira, August (Malayalam translation of 2002c)
  4. 2005c ‘Enna Prayocanam: Constructing the Canon in Colonial Tamilnadu’. Indian Economic and Social History Review, 42(4), October-December, special number on Language, Genre and Historical Imagination in South India.
  5. 2005b ‘Review symposium: Literary Cultures in History’, Indian Economic and Social History Review, 42(3)
  6. 2005a ‘Drinking Coffee: Contending with Modernity in Late Colonial Tamilnadu’ in Satish Poduval (ed.), Re-figuring Culture: History, Theory and the Aesthetic in Contemporary India, Sahitya Akademi, New Delhi.
  7. 2004c ‘Triumph of Tobacco: The Tamil Experience’, in Jean-Luc Chevillard, Eva Wilden (eds.), South-Indian Horizons: Felicitation Volume for Francois Gros, Institut Francais de Pondichery & Ecole Francaise d’Extreme-Orient, Pondicherry.
  8. 2004b ‘In Those Days There was no Coffee: Coffee-Drinking and Middle-Class Culture in Late Colonial Tamilnadu,’ in Sanjay Subrahmanyam, Land, Politics and Trade in South Asia, Oxford University Press (reprint of 2002c).
  9. 2004a ‘Street Smart in Chennai: The City in Popular Imagination’, in C.S. Lakshmi (ed.), The Unhurried City: Writings on Madras, Penguin.
  10. 2003c ‘Caricaturing the Political: A Brief History of the Cartoon in Tamil Journalism’, Art India, 8(4), Quarter 4.
  11. 2003b ‘In Print, On the Net: Tamil Literary Canon(s) in the Colonial and Post Colonial Worlds’, in Sumit Gupta, Tapan Basu (eds.), Globalisation, Conflict and Identity, Nehru Memorial Museum and Library, New Delhi.
  12. 2002c ‘In Those Days There was no Coffee: Coffee-Drinking and Middle-Class Culture in Late Colonial Tamilnadu,’ Indian Economic and Social History Review, 39(2-3), Dharma Kumar Memorial Volume.
  13. 2002b ‘Coining Words: Politics and Language in Late Colonial Tamilnadu’ in Vasant Kaiwar & Sucheta Mazumdar (eds.), Antinomies of Modernity: Essays on Race, Orient, Nation, Duke University Press
  14. 2002a ‘Fiction and the Tamil Reading Public’, in Meenakshi Mukherjee (ed.), Early Novels in India, Sahitya Akademi, New Delhi.

தற்போதைய ஆய்வு & ஆர்வம்/Current Research Work

  • Indo-Danish Interaction in the 18th century with special reference to Print (in collaboration with the National Museum of Denmark)
  • Studies in the social history of the Dravidian movement.
  • The making of middle-class culture in colonial Tamilnadu.
  • Tamilnadu: Academic Perspectives from Without
  • A multi-volume biography of and documentation on V.O.Chidambaram Pillai (1872-1936).
  • Editing the collected works of Pudumaippithan (thus far three volumes published; three more are under preparation).

Benny Dayal – A Performer

பென்னி தயால் பாடி நீங்கள் கேட்டிருப்பீர்கள். ரவியைப் போல் மெச்சியிருப்பீர்கள். அவர் பாடி நீங்கள் பார்த்ததுண்டா?

மெகா டிவி புண்ணியத்தில் ‘சங்கர்ஷ் 2010’ நிகழ்ச்சியில் பார்த்தேன். கொண்டாட்டமாக ஆடினார்; உற்சாகமாக ‘ஊலலா’ ரீங்காரித்தார்; இளமைத் துள்ளலுக்கு definition கேட்டால் உத்தரவாதமாக பென்னியை சொல்லலாம்.

Infectious enthusiasm என்பார்கள். ‘வேதம் புதிது’ அமலாவின் ஜாக்கெட்டுக்குள் நுழைந்த மீன் என்பேன். அமலாவின் நளினம்; மீனின் லாவகம் – இரண்டும் குழையும் குரலுடன்,மேடையில் நடனமாடியது.

கர்னாடக சங்கீதம் பதினைந்து வருடம்; தாம்பரம் கிறிஸ்டியன் கல்லூரி வாசம்; அபு தாபி வளர்ப்பு; இவையெல்லாம் போதாதென்று பரதநாட்டியமும் பயின்றுவிட்டார்.

ஹிந்தியிலும் கொஞ்சுகிறார். சின்னச் சின்ன ஆசையில் துவங்கி, ‘ஒமானப் பெண்’ண்ணிற்கு சிரமமில்லாமல் பாய்கிறார். சகாக்களை சுவாரசியமாக அறிமுகம் செய்கிறார்.

ஹரிஹரன், ஷங்கர் மகாதேவன் எல்லாம் ஸோ நைன்ட்டீஸ்… பென்னி இஸ் இன்!

Tamilmanam

‘தமிழ்மணம்’ காசி உரையாடல்

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா?

எதைத் தேடினாலும் கிடைக்கிறது. எப்படித் தேட வேண்டும்

  • (ஒருங்குறி எழுத்துக்களை அடிப்பது,
  • தூய தமிழ்ப்பதங்கள் x ஒத்த தமிங்கிலம்,
  • ஆங்கிலத்தில் தட்டச்சினால் தமிழில் வரும் முடிவுகள்)

போன்றவற்றில் சிக்கல் இருந்தாலும், தமிழிணையத்தில் இல்லாத தலைப்பு என்பது அரிதாகவே அமைகிறது.

கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம்
செய்யவேண்டும்?

கணினிக் கிடைக்கப் பெற்றவர்களை

  1. அயலகத் தமிழர்,
  2. தமிழ்நாட்டினர்

என்று இரண்டாகப் பிரிக்கலாம். முந்தையவருக்கு இணைய நேரம் அதிகம்.

தமிழகத்தில் இருந்து உபயோகிப்போருக்கு தொலைக்காட்சி, பத்திரிகை தாண்டி கேளிக்கைக்கு செலவிட இணைய நேரம் குறைச்சல்.

இவர்களை மூன்று குழுக்களாக வைத்துக் கொள்ளலாம்.

  1. ஓய்வுபெற்றவர்களுக்கான குழுமங்கள் (mello.in போல்) பிரபலமாக வேண்டும்.
  2. நடுத்தரவயதினர் தட்டுத் தடுமாறி வெப்2.0 நுட்பங்களைப் பிடித்து, வலைப்பதிவு குழாம்களுக்குள் வெற்றிகரமாக நுழைந்து விடுகிறார்கள்.
  3. இளசுகளுக்கு ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் அறிமுகம் அதிகம். இவர்கள் வலைப்பதிவுகளுக்குள் இருக்கும் பெருசுகளின் உட்குழுக்கள் பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை.

Digital divide போக்க ஊர்ப்புற கிராமங்களுக்கு குறைந்த விலை கணினியும் வலையும் எளிதில் சாத்தியப்ப்பட வேண்டும். நாட்டாமை குடும்பம் தவிர கடைநிலை குடும்பங்களுக்கும் அது, செல்பேசி போல் சென்றடைய வேண்டும். அதில் தமிழ் இடைமுகம், தட்டச்சு போன்ற சமாச்சாரங்கள் தொடக்கம் முதலே அறிமுகமாக வேண்டும். அது மட்டுமே முக்கியம்.

2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

நான் அஸ்காவும் க்ரௌனிங் க்ளோரியும் வாங்கிய அண்ணாச்சி கடையில் துண்டு சீட்டில் ரசீது கொடுத்தல் வழக்கம். (வணிகம்)

மின் கட்டணத்திற்கு ஆங்கிலம் உபயோகித்த சென்னை வாசம். (அரசாளுமை)

பள்ளியில் ஊடாடியதெல்லாம் கிரிக்கெட்டின் மிட் ஆன், சில்லி பாயின்ட்ஸ்; கல்லூரியில் அரட்டை அடித்தால் க்ரூப் டிஸ்கசனுக்கு உதவும் ஆங்கிலம்.

நல்ல கேள்வி. தவறான ஆளிடம் கேட்கப்பட்டுவிட்டது.

3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

விஜய்காந்த்துக்கு தொலைபேசி இருக்கலாம். லியாகத் அலி கானிடம் கேட்டாவது என்னுடைய கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் தந்திருப்பார்.

தமிழகத்தில் எத்தனை பல்கலைக்கழகங்கள் இருக்கு? இந்தியாவின் செம்மொழிக்கு எத்தனை நகரங்களில் துறை இருக்கு? உலகம் முழுக்க எவ்வளவு கல்லூரிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது? என்றெல்லாம் புள்ளிவிவரம் அடுக்கியிருப்பார்.

அவர்களில் பயிலும் எம்.ஃபில்களும் முதுகலைகளும் முனைவர் பட்டதாரிகளும் தங்கள் ஆய்வை இணையத்தி(லும்) வெளியாகும் peer reviewed journalஇல் சமர்ப்பித்து (பின்னூட்டங்களுக்கும்) பதிலளித்தால் மட்டும் டிகிரி கிடைக்க வைக்கலாம்.

காப்பியடித்து டாக்டரேட் வாங்கும் கனவான்களும், காசு கொடுத்து கரெக்ட் செய்யும் பேராசிரியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்திற்கு வேலை வாங்க முடியும்.

இந்தியாவில் எங்கு சென்றாலும் மாடு இருக்கும்; அடி பம்பு காற்று வாங்கும்; கணேசர்ருள்பாலிப்பார் என்பதெல்லாம் so 1950கள். செல்பேசிகள் நீக்கமற இரண்டு கைகளிலும் குடியிருக்கும் ஒளிர்காலம் இது. எளிய முறையில், செல்பேசியில் தமிழ் கொண்டு புழங்குவது எங்ஙனம்?

பேசுவதை தானியங்கியாக தமிழில் தட்டச்சி (முடிந்தால் ஆங்கில மொழிபெயர்ப்பும்) மைக்ரோசாஃப்ட் வோர்ட் கோப்பாக சேமிப்பது; ‘தேங்கா மண்டி ராசேந்திரனை வீட்டில கூப்புடு’ என்றால் உடனடியாக அழைப்பது; ‘ப்ரெசில் மிளகா நேத்து என்ன விலை’ என்று கேட்டால் விடை கொடுப்பது — சாத்தியம் ஏராளம்.

4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

அ) தமிழக கிராமங்களில் நூலகத்தில் இலவச கணினி மையமும், இணைய வசதியும் கிடைக்க செய்வது. அங்கு வருவோருக்கான தேவைகளை அறிந்து பூர்த்து செய்ய, சிறப்பு பயிற்சி அளிப்பது.

ஆ) ஆங்கில நிரலி ஏதாவது போட்டால் கண்டுபிடிக்கும் ‘கிருமி’ கொண்ட, தமிழில் மட்டும் ஊடாடும் வசதி கொண்ட செல்பேசிக்கு வரிவிலக்கு தருவது.

இ) சிறப்பான முறையில், திறமூல மென்பொருளாக தமிழ் OCR செய்பவருக்கு உரிய மானியத் தொகை தரப்படும் என்னும் தண்டோரா.

5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

தமிழ்ப்பதிவுகள் ஜோராக இருக்கின்றன. எதிர்பார்த்த விதத்தில், அபரிமிதமான வளர்ச்சி அடைந்திருக்கிறது. குறிப்பிட்ட வகையினரே (கல்லூரி முடித்து முப்ப்பத்தைந்து வயதுக்குள்ளான கணினி வல்லுநர்) பெரும்பாலும் நிறைந்திருப்பது காலப்போகில் சமனாகும்.

புதிய பதிவர்களுக்கு சில துப்புகள்:

அ) தமிழ்மணம், தமிலீஷ், திரட்டி, ப்ளாகுட், தமிழ்வெளி போன்ற எந்தத் திரட்டியும் விட வேண்டாம். எல்லாவற்றிலும் இணைந்துவிடுங்கள்.

ஆ) திண்ணை, தமிழோவியம், நிலாச்சாரல், அந்திமழை, சொல்வனம், தமிழ் ஹிந்து, கீற்று, என எல்லா இணைய சஞ்சிகைக்கும் உங்கள் ஆக்கங்களை அனுப்புங்கள். ஒவ்வொன்றுக்கும் எல்லாவற்றையும் அனுப்பாமல், ஒருவருக்கு அனுப்பியதையே இன்னொருத்தருக்கும் மீண்டும் பார்சல் செய்யாமல், அனுப்பிப் பாருங்கள். அவர்கள் அங்கீகரித்தால், உங்கள் எழுத்துக்கு பலம் கூடும்.

இ) குறிச்சொல் (லேபிள் அல்லது tag) நிறைய கொடுங்கள். ஓரிரண்டு பகுப்பு (category) வைத்துக் கொள்ளுங்கள். கவர்ச்சியான தலைப்பை விட பொருத்தமான தலைப்பாக வைக்கவும். தடித்த எழுத்துக்களை ஆங்காங்கே பயன்படுத்தவும். சம்பந்தமுள்ள புகைப்படம் ஒன்றாவது இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

கடைசியாக, அவியல், குவியல், மிக்சர் என்று எல்லாவற்றையும் கலந்து கட்டி அடிக்காமல், ஒரு விஷயத்தைக் குறித்து மட்டும் ஒரு பதிவு இடவும். கூகிளுக்கு அதுதான் பிடிக்கும். நான்கு மேட்டரை ஒன்றாக குவிக்காமல், one thing at a time என்று எழுதுவது நிறைய பதிவுகளை, எண்ணிக்கையையும் தரும்.

கட்டாங்கடைசியாக, உங்கள் பதிவு ஒவ்வொன்றிலும், நீங்களே self referenceஆக சுட்டி தரவேண்டும்:

1. பதிவர் டிப்ஸ்

2. புதிதாய் பதிபவர்களுக்கு வழிகாட்டிகள்

6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

ட்விட்டரைக் குறித்து நக்கலடிப்பவர்கள், குறை சொல்லுபவர்கள் எல்லோருமே, ட்விட்டருக்குள் இருந்துகொண்டேதான் அதை செய்து வந்திருக்கிறார்கள். தமிழ்மணமும் அதே போல் அதனை விமர்சித்தவர்களையும், சேறு அப்பினவர்களையும், DDoS செய்தவர்களையும் வைத்துக் கொண்டே இயங்கி வந்திருக்கிறது; இயங்குகிறது; இயங்கும்!

ஈழப்பிரச்சினை குறித்த தகவல்களையும் கட்டுரைகளையும் முன்னிறுத்தியது வேறு எந்த தமிழ் ஊடகமும் செய்யாத விஷயம். அதற்காக சிறப்பு நன்றிகள்.

ஆலோசனை சொல்வது எளிது என்பதை அறிவேன். எனவே, இன்று போல் என்றும் தமிழ்மணம் தொடர்ந்தாலே போதுமானது என்றாலும்…

1) சூடான இடுகைகள் இல்லாத தமிழ்மணம், பாடல் இல்லாத படம் போல் சோபிக்கவில்லை. பாட்டு ஹிட்டானால்தான், படம் ஜெயிக்கும் என்றில்லைதான். இருந்தாலும், ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம். அதிகம் சுட்டப்பட்ட பதிவுகள் மீண்டும் வேண்டும்.

2) அகரவரிசைப்படி அழைக்கும் வகுப்பு போல், நேரப்படி காட்டும் முறை மாற்றியமைக்க வேண்டும். வாசகர் பரிந்துரை பெரிதாக்கப்பட்டு, முகப்பில் இன்னும் பிரதானமாக்கலாம். அந்தக்கால ‘பூங்கா’ போல் தமிழ்மண ஆசிரியர் குழுவினரின் ‘பெட்டக’த் தெரிவுகளும் முன்வைக்கலாம்.

3) சாரு, எஸ் ராமகிருஷ்ணன், பா ராகவன், ஜெயமோகன் என்று பெரிய எழுத்தாளர் கும்பலே இருக்கிறது. இந்த மாதிரி செய்தியோடை வழங்குபவர்களை தமிழ்மணத்தின் ஓரத்திலாவது தொடுப்பு காட்டுவது, காலத்தின் கட்டாயம்.

4) விளம்பரம். என் பதிவுக்கு நான் காசு தந்து 24 மணி நேரம் முகப்பில் வைத்திருக்க தயார் என்றால், அதற்கு திரட்டி இடம் கொடுக்கலாம். புத்தக விளம்பரங்களுக்கு காலச்சுவடு முதல் வார்த்தை போன்ற பத்திரிகைகள் வரை 50% தள்ளுபடி தரும். அந்த மாதிரி, விளம்பரப் பதிவுகளுக்கு ஆடித் தள்ளுபடி கொடுக்கலாம்.

5) ‘அண்மையில் இணைக்கப்பட்ட பதிவுகள்’, ‘நீங்கள் உறங்கியபோது எழுதப்பட்ட பதிவுகள்’, ‘நேற்று சூடான இடுகைகள்’ என்றெல்லாம் கலந்துகட்டி ஆங்காங்கே தூவப்பட்டோ, தனியாக tabஇடப் பட்டோ வந்தால் சுவாரசியம் அதிகரிக்கும். இப்பொழுது செத்தவன் கையில் வெத்தலை பாக்காக, ரொம்ப சைவமாக இருக்கிறது.

இளையராஜா போல் ‘உலகம் இப்போ எங்கோ போவுது; எனக்கு இந்த சொந்த நாடு போதும்!’ என்றில்லாமல், திக்கெட்டும் சென்று பன்மொழிகளிலும் கால் பதித்து, மேன்மேலும் உயரும். அடிச்சு தூள் கெளப்புங்க!

மலையாளம், மலையாளி – ஓர் எச்சரிக்கை: சக்கரியா

நன்றி: பத்தி: அரபிக் கடலோரம் – காலச்சுவடு :: தமிழில்: சுகுமாரன் [இதழ் 98 – பிப்ரவரி 2008]

மலையாள மொழி இன்று அடைந்திருக்கும் நிலைமை விநோதமானது. மலையாளம் என்பது என்ன? மூன்றேகால் கோடி எண்ணிக்கையுள்ள கேரளயர்கள் அன்றாடம் பேசுகிற மொழி. எழுதுகிற மொழி. நிச்சயமாகக் கேரளத்திலுள்ள பெரும்பான்மை மக்களின் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் மலையாளம் மட்டுமே. உடனடியாக அப்படி இல்லாமல் போய்விடுமென்றும் தோன்றவில்லை.

:::

சட்டபூர்வமான ஆட்சிமொழி மலையாளம். ஆனால், அரசாங்கப் பணிகளில் பெரும்பான்மையும் நடப்பது ஆங்கிலத்தில்தான். எழுத்தறிவு இல்லாத குடிமகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டிய நீதிமன்ற மொழியும் ஆங்கிலந்தான்.

அதே சமயம்

  • நாளிதழ்கள்,
  • தொலைக்காட்சிகள் பயன்படுத்தும் மொழி மலையாளம் மட்டுமே.
  • சட்டமன்ற விவாதங்களின் மொழி மலையாளம்.
  • மதப் புரோகிதர்களும் சாதியமைப்புகளும் மக்களுடன் பேசுவது மலையாளத்தில்தான். சமஸ்கிருதத்திலோ அரபியிலோ லத்தீனிலோ அல்ல.
  • சினிமாவின் மொழியும் சினிமாப் பாட்டுகளின் மொழியும் மலையாளமே.
  • நாடகங்கள் மலையாளம்.
  • கதையும் கவிதையும் நாவலும் மலையாளம்.
  • அரசியல் சொற்பொழிவுகள் மலையாளம்.

ஆனால், பாலவாடி முதல் மலையாளியின் முதல் மொழியாகக் கருதப்படுவது ஆங்கிலமே. மலையாளம் வெறும் ‘செக்கண்ட் லாங்வேஜ்’. இந்த விசித்திரமான இரட்டை முகம் எப்படி உருவானது?

‘பயன்பாடு’ என்ற ஒற்றை வார்த்தையே இதற்குப் பதில். மலையாள மொழி மூலம் பயனடைபவர்களுக்கும் பயனடையாதவர்களுக்குமான வேறுபாடு இங்கே தெளிவாகிறது. ‘பயன்’ என்பது என்ன பொருளைத் தருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். நமது வாழ்க்கையை எந்த வகையிலாவது மேம்படுத்துகிற ஒன்று. வாழ்க்கையைப் பராமரிக்க உதவும் ஒன்று. வாழ்க்கையில் நம்பக்கூடிய ஒன்று. இவைதாம் அந்தப் பயன்கள்.

சராசரி மலையாளியைப் பொறுத்தவரை அன்றாட வாழ்க்கையில் கருத்துப் பரிமாற்றத்துக்கான கருவி மலையாளம் மட்டுமே. வீட்டில், வழியில், கடையில், அலுவலகத்தில் எங்கும். அல்லது செய்திகள் வாசிக்க, தொலைக்காட்சி பார்க்க, புரோகிதனின் சொற்களைக் கேட்க எல்லாவற்றுக்கும். பத்திரிகை வாசிக்கும்போதும் தொலைக்காட்சி பார்க்கும்போதும் அவன் அரசியல் கட்சிகள், எழுத்தாளர்கள் போன்ற கருத்துத் தொடர்பாளர்களின் சொற்களையும் மறைமுகமாகக் கேட்கிறான். தொலைக்காட்சிகளில் வரும் கலை நிகழ்ச்சிகளும் சினிமாவும் அவனை மலையாளம் வழியாகவே உல்லாசப்படுத்துகின்றன.

பத்திரிகைகள், தொலைக்காட்சி, இலக்கியம், அரசியல், மதச் சொற்பொழிவுகள், சினிமா இவற்றைவிட்டால் வேறு என்ன? அவன் இவற்றுக்கு ஒரு சந்தை மட்டுமே.

அவன் மூலம் இவர்களெல்லாம் வாழ்கிறார்கள். அவர்கள் அவனிடம் மலையாளத்தில் அரசியலை விற்கிறார்கள்; மதத்தை விற்கிறார்கள்; இலக்கியத்தை விற்கிறார்கள்; பத்திரிகையை விற்கிறார்கள்; தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விற்கிறார்கள். அவன் கொடுக்கும் சந்தாக்கள், காணிக்கைகள், நன்கொடைகள், விலைகள் ஆகியவற்றால் அவர்கள் கேரளத்தில் வலிமையானவர்களாகவும் செல்வந்தர்களாகவும் செல்வாக்குள்ளவர்களாகவும் மாறுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அவர்கள் அதிகார வர்க்கமாகிறார்கள். சராசரி மலையாளி அதிகாரம் செய்யப்படுபவனாகிறான்.

அரசியல் கட்சிகளும் மதங்களும் ஊடகங்களும் அறிவுஜீவிகளும் அடங்கிய இந்த ஆளும் வர்க்கம் சுதந்திரத்துக்குப் பின் வந்த அரை நூற்றாண்டு கால ஆட்சியில் சராசரி மலையாளியை இந்தியா முழுவதும் அல்லது உலகம் முழுவதும் அப்பத்துக்காக அலையும் ஒரு அகதியாக்கிவிட்டிருக்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பிற கட்சிகளின் பங்களிப்பு இதுதான். மதத் தலைவர்கள், சாதியமைப்புகள், அறிவுஜீவிகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி அலைவரிசைகள் எல்லாவற்றின் பங்களிப்பும் இதுதான். அவர்கள் உண்டு கொழுத்தார்கள்.

:::

மலையாளிக்குக் கேரளத்தில் தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டது, மலையாளத்தால் தன்னுடைய பிள்ளைகளுக்குப் பயனில்லை என்பது புரிந்துவிட்டது. அவர்களுக்கு ஒரு வேலையோ வருமான மார்க்கமோ கிடைக்க வேண்டுமானால் அவர்கள் கேரளத்தை விட்டு வெளியேற வேண்டுமென்பதும் புரிந்துவிட்டது. அதற்கு மலையாளம் பிரயோஜனமில்லை என்பதும் புரிந்துவிட்டது. மலையாளம் மூலம் பயனடைந்தவர்கள் வரிசையில் தனக்கும் தன்னுடைய பிள்ளை களுக்கும் இடமில்லை என்பதும் புரிந்துவிட்டது. அப்படியாகத்தான் மலையாளம் செகண்ட் லாங்வேஜாகவும் ஆங்கிலம் முதல் மொழியாகவும் மாறியது.

பெரும்பான்மை மக்களுக்குச் சோறுபோடும் மொழியாக இல்லாமற்போயிருக்கிறது என்பதுதான் இன்று மலையாள மொழியின் அவலம். அது சோறுபோடுவது அரசியல் கட்சிகளுக்கும் பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கும் மதத் தலைவர்களுக்கும் சினிமாக்காரர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் மட்டுமே. (இதில் அப்பாவி மலையாள ஆசிரியர்களும் உண்டு). மலையாளம் அவர்களுடைய மொத்தக் குத்தகையாகிவிட்டது. அதனால்தான் நான் பல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்: ‘மலையாளம் உண்மையைப் பேசத் தெரியாத ஒரு மொழியாக மாறியிருக்கிறது. அதைக் குத்தகையாகக் கொண்டிருப்பவர்கள் எவரும் பொதுவாக உண்மை பேசுபவர்களுமல்ல.’

தமிழின் நிலைமை பற்றி எனக்குத் தெரியாது. அண்டை வீட்டு நிலைமையைத் தமிழ் ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டுமா என்றும் எனக்குத் தெரியாது.

State of Tamil Blogs & 2009 Predictions

வருடா வருடம் அறிஞர் அண்ணா சிலைக்கு மாலையிடுவோம். அது போல் இந்த வருடத்திற்கான ஆய்வு:

  1. வரி, விளம்பரம்/க்ரெய்க்ஸ் லிஸ்ட்: தமிழ்ப்பதிவுகளுக்கு பராக் ஒபாமா போன்ற மாயாஜாலக்காரர் தேவைப்படுகிறார். பில் க்ளின்டன் போன்ற தமிழ்மணம் ஹில்லரி போல் ஏதாவது புதுப்பித்துக் கொண்டாலும், புஷ் கூட்டாளிகளுடன் கும்மாளம் போடுவது போல் க்ரூப்கள் மிகுந்திருப்பதால், கடல் வழியாக அத்துமீறும் பாகிஸ்தானிய தீவிரவாதி போல் புதுப் பதிவர் தேக்கநிலையை நீக்கத் தேவைப்படுகிறார்.
  2. வாய்ஸ் கிடையாது/ரஜினி: தமிழ்ப்பதிவர் பரம சாது. சவுண்டு விடுவார். எதிராளி ஏவுகணையோ இளக்காரப் பார்வையோ பார்த்தால் அடங்கி அல்லது ஒதுங்கி விடுவார். இதை விட மோசமாக கடைக்குழு ஒன்று இருக்கிறது. இன்னும் இரண்டு பேர் உங்க பதிவிற்கு வரவைக்குமாறு ஹிட் தருவோம் என்றால் சகல ஸ்க்ரிப்ட்களையும் இணைத்து பச்சோந்தியாய் விளம்பரம் கொடுத்து சமூக ஒருங்கிணைப்பிலோ உள்ளடக்க வீரியத்திலோ ஈடுபாடில்லாத குழு. ஆங்கிலப் பதிவு நிகழ்வு: Abstract: How Twittering Critics Brought Down Motrin Mom Campaign – Digital: “Bloggers Ignite Brush Fire Over Weekend, Forcing J&J to Pull Ads, Issue Apology”
  3. நேரடி கவரேஜ்/தஸ்லீமா நஸ்ரின்: ‘ஐயா! நீங்க மலேசியாவில்தானே இருக்கீங்க? உங்க லோக்கல் விஷயத்தை எழுதுங்களேன்?’ என்றால் ஓடி ஒளிந்துவிட்டு, பத்தாயிரம் மைல் தள்ளி இருக்கும் ‘க்ரீன்லாந்தில் பசுமைப்புரட்சிக்கு வித்திடுவோம்’ என்று சவடால் விடும் பதிவு நிறைந்த வலையுலகில் நுழைந்துள்ளோம். சீன ஒலிம்பிக்ஸ் பற்றி எழுதினால் அரசு வெட்டிடும் என்பதில் துவங்கி சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவரின் பரிதாப நிலை வரை − ஐந்தாண்டு அனுபவமுள்ள பதிவுலகில் அருகில் இருந்து அவதானிக்க எவரும் இல்லாத உள்ளூர் அனுபவசாலியின் அவல நிலை.
  4. செருப்பு புஷ்/அ – அருந்ததி ராய்: ஜார்ஜ் புஷ் மேல் செருப்படிக்கும் விளையாட்டை ஊக்குவிக்கும் சுதந்திரத்தைத் தரும் அமெரிக்காவை சவூதியில் இருந்து விமர்சிக்கும் வார்ப்புரு எழுத்தாளர். சாரா பேலினின் தொப்புள் படம் கிடைக்குமா என்று தேடிக் கொண்டே பெண்ணுரிமை பேசும் கருத்து சுதந்திரவாதியின் ஸ்டீரியோடைப் எழுத்தை மதிக்கும் சக வாசகர் வட்டம் எனத் தொடரும் infinite recursive loop.
  5. சமூகப் பொறுப்பு/’சத்யம்’ ராஜு: ஐந்து வருடமாக ஒரு whistleblower உருவாகவில்லை. அரசு, பத்திரிகை, நிறுவனம், விளம்பர உலகம் என்று பதிவு பரவவில்லை. டீக்கடை பெஞ்சாகவே ஒதுங்கி பழைய பேப்பரில் உண்டான கருத்தை மறுவாந்தியெடுத்து கொள்கை நம்பிக்கையும் சிருஷ்டி கற்பனையும் படைப்பூக்கமும் இன்றி கிணற்றுவாளியில் சிக்கிய தவளையாக இன்னும் கிணற்றுக்குள்ளே குதிக்கவே சிரமகதியில் வாளிக்குள் துள்ளி விளையாடுகிறது.
  6. ஆனந்த விகடன் டு குமுதம்/ஞாநி: தமிழ்மணம் போனது; தேன்கூடு வந்தது என்று ‘வாலு போச்சு; கத்தி வந்தது’ குரங்கு கதையாக வலைப்பதிவர் ஆரம்பத்தில் மாறினார். பின்னால் தமிழ்வெளி பக்கம் சென்று பார்த்தார். இப்பொழுது தமிழீஷ் புளகாங்கிதம் அடைகிறார். சொவ்வறை குந்துரத்தனாகிய நான் நேரங்காட்டுவதுதான் முக்கியம் → அதனால் தினக்கூலி கிட்டுவது அதை விட முக்கியம் என்பதாக எழுதுவதுதான் முக்கியம்; எழுதுபொருள் குறித்த கவலை இல்லாத இணையம்.
  7. தெரிந்த முகம்/சீனா: தமிழ்நாட்டின் பெட்டிக்கடையிலாவது முன்பின் அறியாதவருடன் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் அகஸ்மாத்தாக அரங்கேறும். தமிழ் வலையுலகோ, சீனாவைப் போன்றது. நாலு சுவருக்குள் நடக்கும் பேச்சில்தான் போதிய சோதனைக்குப் பின் உள்ளத்துக் கிடக்கை வெளியேறும். அரட்டையில் சொன்னால் பொதுவில் போட்டு விடுவார்; தொலைபேசியில் பேசினால் பதிந்துவிடுவார் என்று அச்சம், மடம், நாணுபவர் இங்கு நிறைந்திருப்பர். சைனாவைப் போலவே மக்கள் கூட்டம் நிறைய இருந்தாலும், அவர்களால் எக்கச்சக்கா சாமான்/பதிவு தயாரிக்கப்பட்டாலும், அவற்றால் அவர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. ‘செம்மொழி’, கூகிள் மொழி என்று பம்மாத்து பல சீனாவைப் போலவே ஒளிர்ந்தாலும் உள்ளுக்குள்ளே ஈறும் பேனும், ஈயும் பீயுமாக மகிழ்ந்திருக்கும்.
  8. அங்கீகாரம்/சு.சுவாமி: “பூங்காவில் இடமுண்டா? தமிழீஷில் எண்ணிக்கை ஏறுமா? தமிழ்மணத்தில் வாக்கு கிடைக்குமா?” என்பது போய் “‘உயிர்மை.காம்’இல் ஒரு எழுத்து வராதா? ‘வார்த்தை‘யில் ஒரு வார்த்தை வெளியாகாதா?” என்பதும் விலகி “ஆனந்த விகடன் வலையகத்தில் பெயர் பெறுவேனா? சன் டிவி பிறந்த நாள் வாழ்த்து உதிர்க்கப்படுவேனா?” என்பதுதான் பதிவரின் அலட்சியமாக, குறியாக இருக்கிறது. எப்பாடு பட்டேனும் அமைச்சர் பதவியை மகனுக்கு வாங்கிக் கொடுக்கும் தந்தையாக வலைஞர் செயல்பட்டு திருப்தியடைகிறார்.
  9. விசங்கக்குபவர்/பாஸ்டன் பாலாஜி: ‘நீ எத்தனை புத்தகம் எழுதி மாற்றத்தை உருவாக்கினாய்? ‘அச்சமுண்டு அச்சமுண்டுஅருண் மாதிரி ஏதாவது படித்து படமாக்கினோம் என்றாவது சொல்லமுடியுமா? கலை தாகம் எவ்வாறு ஆக்கசக்தியானது? தொழில்நுட்பக் கல்வி எவ்வளது தூரம் தமிழானது? தமிழிலக்கியம் எங்ஙனம் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பானது?’

வாஸந்தி: 'தமிழ்நாட்டிற்கும் ஒபாமா தேவை'

ஒபாமா: மாற்றத்தின் மந்திரச் சொல் : வாஸந்திஉயிர்மை

ஒபாமா எழுதியிருக்கும் The audacity of hope‘ என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அமெரிக்க அரசியலின் மிக அருமையான அதன் அலசலும் பட்சமற்ற விமர்சனமும் புதிய அறிவார்த்த முதிர்ச்சி மிகுந்த பார்வையும், அதில் தொனிக்கும் நேர்மையும் என்னை ஆட்கொள்கிறது.

:::

கருப்பர் என்பதால் பேச்சில் காழ்ப்பையோ, சரித்திர கால உள்ளார்ந்த வெறுப்போ பேச்சில் காண்பிப்பதில்லை.

::

அமெரிக்காவில் மட்டுமல்ல, இன்றைய தமிழ் நாட்டு அரசியல் சூழலிலும் மாறுபட்ட சிந்தனைக்கு ஒரு அவசரத் தேவை ஏற்பட்டிருகிறது.

  • கண்ணியமும் நாணயமும் மிக்க பரந்த உலகளாவிய பார்வைக்கு இடம் தேவை.
  • புதிய எழுச்சி மிகுந்த நேர்மையான பார்வை.
  • பலகாலமாக சித்தாந்தம் கொள்கை தமிழ் உணர்வு என்கிற போர்வையில் எழும் கூக்குரல்களும் அரங்கேறும் நாடகங்களும் மக்களுக்கு அலுத்துவிட்டன.
  • யாருக்காகக் குரல் கொடுக்கப் படுவதாகச் சொல்லப்படுகிறதோ அவர்களுக்கு நிச்சயம் உதவுவதாக இல்லை.
  • நாட்டுப் பற்று, மக்கள் நலன் என்பது வெற்று கோஷங்களில் நீர்த்துப் போகின்றன.
  • அரசியல் அரங்கில் இருக்கும் போட்டா போட்டிகளும் தலைவர்கள் ஒருவரை ஒருவர் நாகரீகமில்லாமல் சாடுவதும் சோர்வைத் தருகிறது.
  • எல்லாவிஷயங்களும், எல்லா துயரங்களும்- வெள்ளச் சேதம், சுனாமி சேதம், மனித உறிமை மீறலினால் அவதியுறும் இலங்கைத் தமிழர் பிரச்சினை என்ற எல்லாமே அரசியலாக்கப்பட்டு அவற்றில் சுயலாபத்தைத் தேடும் அவலமாகிவிட்டது.
  • உண்மையான மனித நேயக்குரல்கள் அடிபட்டுப் போகிண்றன.

நமது தலைவர்கள் ஏதோ ஒரு சக்கிரவியூகத்தில் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுவதுபோல இருக்கிறது.

முழுக்கட்டுரையின் பிரதி இனியொரு வலையகத்திலும் கிடைக்கிறது.

India Films to Indie Movies – Meme

முதலில் நாகார்ஜுனன் பதிவு. அதன் தொடர்ச்சியாக பிரகாஷ் மீம் வித்திட்டிருக்கிறார்.

1 – அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

ஐந்து வயதில் இருந்து ஓரளவு நினைவில் உள்ளது.

1 – ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

ப்ரியா.

1 – இ. என்ன உணர்ந்தீர்கள்?

  • பெண்கள் சினிமாவில் நுழைந்தால் ஆபத்து பின்தொடரும்.
  • ஸ்ரீதேவி நீச்சலுடை.
  • எவராவது கடத்தி சென்றுவிட்டால் குடும்பப் பாட்டு கற்றுவைத்துக் கொள்ளவேண்டும்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தமிழ்: தசாவதாரம் (ஆங்கிலம்; வால் – ஈ)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கடைசியாக முழுமையாகப் பார்த்த படம் ட்யூப் தமிழ் வலையகத்தில் – அஞ்சாதே.

ஆனால், மிக சமீபத்தில், பாதி பார்த்த நிலையில் விட்ட படங்கள் தாக்கத்தை நிறையவே கொடுத்தது.

  • அறை எண் 305இல் கடவுள் – மகாமக கொடுமையான நாடகத்தனம்
  • அன்பைத் தேடி – எத்தனையோ பழைய படங்களை புத்துருவாக்கம் செய்யும் நிலையில் இந்த premise நன்றாக இருந்தது. ஏதாவது கற்பனையில் சஞ்சரித்து நிஜத்தைக் கோட்டை விடும் நாயகன் சிவாஜி. (குழந்தை நடிகை) இந்திரா (காந்தி) & நாயகன் (ம.கோ.) ராமுவையும் கோர்த்து அரசியல் கிண்டல் செய்யும் சோ.
  • எவனோ ஒருவன் – சுவாரசியமான அறச்சீற்றம்

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

எல்லோரும் ‘அவள் அப்படித்தான்‘ என்கிறார்கள். ஆனால், என் வாழ்வை திசை திருப்பக் கூடிய சம்பவத்தை ‘அவள் அப்படித்தான்’ நிகழ்த்தியது.

குழந்தையாக இருந்தபோதே ‘எது கலைப்படமோ அதைச் சொல்லி ஒப்பேத்தலாம்’ என்னும் சுபாவம் innate ஆக அமைந்திருக்க வேண்டும். 1979ஆம் ஆண்டு குழந்தைகளின் ஆண்டாக கொன்டாட்டப்பட்டது. என்.எஃப்.டி.சி ஆதரவில் படம் எடுக்க, சென்னை தூர்தர்ஷனில் audition வைத்தார்கள். நானும் சென்றிருந்தேன்.

குடிகாரனாக, பிச்சைக்காரனாக, ஊமையாக எல்லாம் சிவாஜித்தனமான செயற்கையில், அங்கு வந்திருந்த பிற சிறுவர்களைப் போலவே நானும் ஓவர் – ஆக்டிங்கில் மின்னினேன்.

லன்ச்-ப்ரேக்.

பிற்காலத்தில் ரகுவரனை நாயகனாகக் கொண்ட ‘ஏழாவது மனிதன்‘ உட்பட பல படங்களை இயக்கிய ஹரிஹரனின் குழுவோடு உணவருந்தும்போது எல்லோரிடமும் சும்மா கேள்வி கேட்டுக்கொன்டிருந்தார்கள்.

‘உனக்கு என்ன படம் இப்ப பார்க்கணும்? எது பிடிச்ச படம்?’

அன்னை ஓர் ஆலயம், ஆறிலிருந்து அறுபது வரை மாதிரி அப்போதைய படங்கள் அனைத்தையும் வெள்ளித்திரையில் பார்த்த வெறித்தனமான ரஜினி ரசிகன். அம்மாவின் ஒப்புதல் கிடைக்காதது அந்தப் படத்திற்கு மட்டும்தான். இத்தனைக்கும் முதல் எதிரி கமல் வேறு நடித்திருக்கும் படம். தயங்கவே இல்லை.

பட்டென்று சொன்னேன்: ‘அவள் அபப்டித்தான்’

குழுவினர் திகைத்துப் போனார்கள். அவர்கள் டீம் உழைத்த படம் அது. அங்கிருந்த பலரின் செல்லப்பிள்ளை அது. உடனடியாக எனக்கு சான்ஸ் கொடுத்தார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ?!

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – அரசியல் சம்பவம்?

பெங்களூரில் உடனடியாக வருமா? கன்னடர்கள் கல்லெறிவார்களா?

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – தொழில்நுட்ப சம்பவம்?

இரத்தத்தையும் வன்முறையையும் வலிக்க வலிக்க காட்டுவது.

சாதாரண மனிதனின் ‘சத்ரியன்‘ ஆகட்டும்; விபத்தின் பின்விளைவுகளையும் அடிபட்டவர்களாக எண்ணிக்கையில் 167ஓடு 168ஆக கூடிப் போகும் ‘அன்பே சிவம்‘ ஆகட்டும்; ஏழையாக இருந்தால் என்னவெல்லாம் அமுக்கப்படும் என்று கோடிட்ட ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்‘ ஆகட்டும்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

சிவகுமார் சுயசரிதை, தினத்தந்தி வரலாறு, தி ஹிந்து விமர்சனம், வலைப்பதிவு அசைபோடல், கனவுத் தொழிற்சாலை குறித்து வண்ணத்திரை முதல் வெகுசன ஊடகங்களில் வரும் கருத்து/கட்டுரை.

7. தமிழ்ச்சினிமா இசை?

  • திருப்புகழ் கூட டி.எம்.எஸ் பாடிய சினிமாப் பாட்டு – ஆன்மிகம்
  • எஸ்.பி.பி பாடிய பாடல் என்பதால் சங்கராபரணம் – கர்நாடக/சாஸ்திரீய சங்கீதம்
  • வேப்பமரத்து உச்சி பேய் முதல் கல்லை மட்டும் கண்டால் – சமூகம்
  • மன்றம் வந்த தென்றலுக்கு என்பதும் கல்யாண மாலை கொண்டாடுவதும் – வாழ்க்கை

என்று எல்லாவற்றுக்கும் இசையை நம்பியிருப்பதால், தனித்தீவுக்கு போக விதிக்கப்பட்டாலும் 80 ஜிபி ஐ-பாட் இல்லாமல் செல்லமாட்டேன்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் நிறைய. சில ஸ்பானிஷ்.

  • When Harry met Sally – ஆங்கிலம்
  • City of God – வேற்றுமொழி (துணையெழுத்து உபயம்)
  • Mississippi Masala (தேசி – NRI)
  • Raju Ban Gaya Gentleman – இந்தி

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடியாக நடித்த படம் – வாண்டட் தங்கராஜ்.

பிடித்ததா? படத்தில் நடித்த அனுபவம் மிகவும் பிடித்திருந்தது.

வேண்டும்போது கிடைக்கும் ஐஸ்-க்ரீம். சொகுசான படுக்கையறையும் விநோதமான விளக்குகளும் கொன்ட உல்லாச அறை வாசம். பழனி கோவிலுக்கு சென்றால் கூட மூலஸ்தானத்தில் இருந்து மூலவரின் சிறுதுளியே பெயர்த்துக் கொடுக்கும் ராஜ மரியாதை.

என்ன செய்தீர்கள்? ஆறு வயதுச் சிறுவன் தங்கராஜ் பழனிக் கூட்டத்தில் தொலைந்து போகிறான். கூத்தில் அனுமனாக வேடந்தரிக்கும் ‘வள்ளி’ நட்ராஜ், வில்லர்கள் கூட்டத்தை Home Aloneஆக ஏய்ப்பது, கடிந்து கொள்ளும் பெற்றோரின் அன்பைப் புரிந்து கொள்ளும் குழந்தை வேடம்.

சினிமா மேம்பட உதவுமா? வெகு இயல்பாக இருந்தது. பாடல் கிடையாது. மூன்று நாளின் சம்பவங்களை 90 நிமிடங்களில் பரபரவென்று தென் தமிழகமெங்கும் சுழன்று விரியும் படம். அலங்காரில் வெளியாகி இருந்தால் மேம்பட உதவி இருக்கும்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  • அருண் வைத்யநாதன் போன்ற தமிழ் சினிமாவின் நாகேஷ் குகூனூர்கள்
  • தொலைக்காட்சி, இணையம், செல்பேசித்திரை என்று விரியும் வழிகள்
  • குறைந்த பொருட்செலவும் பத்து நிமிடத்தில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கவைக்கும் நேர விரயமாகாத நுட்பங்களின் அணுக்கம்

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு வாரத்தில், ஒரு நாளில் எத்தனை நேரம் கேளிக்கைகாக ஒதுக்குகிறோம்? அதில் எவ்வளவு மணி நேரம் சினிமா ஆக்கிரமிக்கிறது?

காலையில் அலுவல் கிளம்பும் அவசரம்; செய்தித்தாள் வாசிப்பு. அதன் பின் பயணத்தில் பழைய ராஜா இசையுடன் மோனம். அலுவலில் பதிவுகள் கவனச்சிதறல்; இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேர தொலைக்காட்சி. இதில் சினிமா எங்கே இருக்கிறது?

நண்பனின் கார் சாவி தூரத்தில் இருந்தே திறக்கும் வசதி கொண்டது. ஒரு நாள் என்னை அழைத்தான்.

“டேய், கார் ரிமோட் கீ வேலை செய்ய மாட்டேங்குதுடா! எப்படிடா இப்ப காரைத் திறப்பேன்?”

“நேராக காருக்கும் அருகில் செல். உன்னிடம் இருக்கும் சாவியை துவாரத்தில் இட்டு திறக்கலாம்.”

பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் என்னும் பேட்டரி தீர்ந்து போகலாம். சினிமா என்னும் மகிழுந்தைத் திறக்க கற்பனை என்னும் சாவி, ‘விழிகள் மேடையாம்; இமைகள் திரை’யாகுமா?’

இவர்கள் தொடரவேண்டும் என்று நினைக்கிறேன்.

வழிகாட்டலுக்கு மட்டுமாக சில விதிகள்:

  1. இசை, சினிமாப்படங்கள் போன்ற புள்ளிக்கு மூன்றுக்கு மேல் பட்டியல் போடுவதை தவிர்க்கலாம்
  2. புள்ளிவிவர ஆட்டத்தைத் தொடர ஐந்து பேருக்கு அழைப்பு விடுக்கவும்
  3. இந்த வழிகாட்டல்களை முற்றுமாக நிராகரிக்கலாம்; ஆனால், டக்குன்னு பதிவிடணும் 🙂