Tag Archives: சினிமா

இளையராஜா கச்சேரிகள்: விடாயாற்றி உற்சவம்

இளையராஜாவை இரண்டு மூன்று தடவை பார்த்திருப்பேன். கங்கை அமரன் போல் எல்லா வருடமும் ராஜா வந்ததில்லை.

கபாலீஸ்வரர் கோவில் கச்சேரிகள் மூன்று வகைப்பட்டவை. ஐந்து மணிக்கு சொற்பொழிவு + உபன்யாசம். கிருபானந்த வாரியார்கள், கீரன், திருத்தணி சுவாமிநாதன் என்று பெரியோர் பாடலுடன் உரை கொடுப்பார்கள். ஏழு மணிக்கு மெல்லிசை + பக்தி பாடல்கள். ஐயப்பன் வீரமணி, சூலமங்கலம் சகோதரிகள் போன்றோர் குரல் கொடுப்பார்கள். அதன் பிறகு இரவுக் காட்சிதான் நான் பார்த்தது.

எம்.எஸ். விஸ்வநாதனும் உண்டு. எட்டு மணி கச்சேரியை அவர் கறாராக ஒன்பது மணிக்கெல்லாம் தொடங்கிவிடுவார். பாவலர் பிரதர்ஸுக்கு கெத்து ரொம்ப ஜாஸ்தி. நிகழ்ச்சியைத் துவங்குவதற்கு பத்து மணி கூட ஆகிவிடும். பின்னிரவு ஒரு மணி வரை பேச்சும் அரட்டையும் நக்கலும் கலந்து பாடல் மிக்ஸ்களும் வந்து கொண்டேயிருக்கும்.

விநாயகர் மட்டும்தான் கச்சேரி கேட்பது போல் சன்னிதியை திறந்து வைத்திருப்பார். மற்ற தெய்வங்கள் எல்லாம் நகை நட்டுடன் பத்திரமாக உறங்க சென்றுவிடும்.

ஆர்க்கெஸ்ட்ரா எல்லாம் பிரும்மாண்டமாக இருந்ததில்லை. அந்தப் பக்கம் எட்டடி; இந்தப் பக்கம் பத்தடி என்று இருக்கும் குட்டி மேடைக்குள் கோரஸ், டிரம்ஸ், ஹம்மிங்ஸ் எல்லாம் அடைக்கணும். ஒவ்வொரு வருடமும் சுவாரசியமாக செய்வார்கள். கிளாசிக்ஸ் முதற்கொண்டு அப்பொழுது வந்த புதுப்பாடல் வரை எல்லாமும் கொடுப்பார்கள்.

கோவில் என்பதற்காக சமரசம் செய்து கொள்ளாமல், ‘வாடீ என் கப்பங்கிழங்கே’ என்று கூத்துப்பாடலும் வாழ்வே மாயத்தின் ‘தேவி’ கிண்டல்களும் கிட்டத்தட்ட கற்பகாம்பாள்களைக் குறி வைத்தே அரங்கேறும்.

ஆனால், அந்தக் காலத்தில் இவ்வளவு கற்பழிப்புகள் ஊடகங்களில் பாடல் பெறவில்லை. தனிமனித அக்னிப் பரீட்சையாகவே முடங்கிவிட்டது.

Vanji Kottai Vaaliban and Braveheart: Historical Fiction in Movies

ராகா.காம் செய்யும் மிக உத்தமமான காரியம் என்பது நான்-ஸ்டாப் கன்னலில் பாடல்களை தொடர் ஒலிபரப்பாக கோர்ப்பதுதான். ஒரு நாள் சந்திரபாபு, இன்னொரு நாள் இசையமைப்பாளர் வேதா, என்னும் வரிசையில் இன்று கிளாசிக்ஸ் ஓடிக் கொண்டிருந்தது.

அப்பொழுது வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் கொத்தமங்கலம் சுப்பு எழுதி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ‘வெற்றிவேல்… வீரவேல்’ கிடைத்தது.

பல நல்ல புறநானூறு பாடல்களையும் பரணி பாடிய வரலாற்றையும் எழரை நிமிடத்திற்கான நாடகக் காட்சியாக ஒருங்கிணைத்திருக்கிறார்கள். சட்டென்று ‘பிரேவ் ஹார்ட்’ திரைப்படத்தை நினைவிற்கு கொண்டு வந்தது.

ஸ்காட்லாந்து மக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக ஏன் சண்டை போட்டார்கள்? போர்களுக்காக வில்லியம் வாலஸ் எவ்வாறு மக்களை சேர்த்தார்? Offence is the best defense என்பதை தற்கால விளையாட்டு பயிற்றுநர்களுக்கு, அக்கால வரலாறு கொண்டு விளக்கிய படம். மெல் கிப்சன் நடித்த ’பிரேவ்ஹார்ட்’டில் சிலந்தியைப் பார்த்து விடாமுயற்சியைக் கற்றுக் கொண்ட ராபர்ட் ப்ரூஸும் இருந்தார்.

இரண்டுமே பிரும்மாண்டமான போர்ப்படங்கள். வில்லன்களாக அரசர்களைக் கொண்டவை. காதல் நிறையவே உண்டு. இரண்டு நாயகிகள் கொண்ட கதை. வீரதீரம் நிறைந்த நாயகன். 1958ல் தமிழில் வெளியான ‘வ.கோ.வா.’ சூப்பர் ஹிட். ப்ரேவ்ஹார்ட்டும் நல்ல வசூல் கொடுத்தது.

மீண்டும் இந்த மாதிரி சரித்திரத்தையும் மசாலாவையும் தேசப்பற்றையும் சரியாக மிக்ஸ் செய்யும் மசாலாக்கள் எப்பொழுது வரும்?

கும்கி: பார்க்கலாமா? போரா?

பத்து நிமிடத்தில் எடுக்க வேண்டியதை முழு நீளப் படமாக்கினால் எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கு ‘கும்கி’ நல்ல உதாரணம்.

ஹிட் ஆன பாடல்கள். ஓவர் ஆக்டிங்கில் சீனியர் சிவாஜியாக மிளிரும் தம்பி ராமையா. முறைப்பும் உடற்பயிற்சியும் ஆகிய இரண்டு பாவங்கள் மட்டுமே அறிந்த ஜூனியர் சிவாஜியாக விக்ரம் பிரபு.

எருமையைக் கண்டு யானை பின்வாங்குவது படத்தின் ஹைலைட். யானைகளுக்கும் லைசன்ஸ் பேப்பர் வேண்டும் என்றறிய வைத்தார்கள். இவ்வளவு மரங்கள் நிறைந்த காடுகளுக்கு தப்பிச் செல்லாமல் போயிட்டோமே என்று வீரப்பன் & கோ வருந்தியிருப்பார்கள்.

என்னதான் செல்லப் பிராணி வளர்த்தாலும், காதலின் முன் அது தூசு என்பது படத்தின் நீதி. அடிதடியை விட பாசமும் ப்ளாக்மெயிலும் காதலை உடைக்க கை கொடுக்கும் என்பது கொசுறு மெஸேஜ்.

ஒரு படமோ, இரண்டு படமோ நன்றாக இயக்கிவிட்டு, அதன் பிறகு, அசிஸ்டெண்ட் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தயாரிப்பில் இறங்கி, பிறரின் படங்களை மெருகேற்றுவதுதான் இப்போதைய டிரெண்ட். பிரபு சாலமனும் அவ்வாறே ஷோ யானையாக மாறி கும்கிகளை அடையாளம் காட்டணும்.

Steven Spielberg’s Lincoln Movie: Amendments, Wars and Elections

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எடுத்த ’லிங்கன்’ திரைப்படத்தை தியேட்டரில் பார்த்தேன். ‘லைஃப் ஆஃப் பை’ படத்திற்கு பிறகு பார்த்த படம். உணர்ச்சிகரமாக எடுத்து இருக்கிறார்.

குழந்தைகளுக்கு ஆங்காங்கே அலுப்பு தட்டலாம். ஆங்கிலம் ஓரளவு புரிகிற எனக்கு கூட சில இடங்களில் கவனக்குறைவினால் வசனம் புரியாமல் தவறவிட்டேன். துணை எழுத்து இல்லாமல் படம் பார்ப்பதை தவிர்க்கலாம்.

ஏற்கனவே கென் பர்ன்ஸ் எடுத்தது, பி.பி.எஸ். தொலைக்காட்சியில் வந்தது என நாலைந்து லிங்கன் பார்த்தாலும் ஸ்பீல்பெர்க் லிங்கன் வித்தியாசமானவர். அரசியல்வாதி. சமரசங்கள் செய்து சாதுரியமாக முன்னேற்றத்திற்கு உழைப்பவர்.

போர் என்றால் லட்சக்கணக்கில் பொதுமக்கள் சாவார்கள்; தலைவர்கள் சௌகரியமாக தப்பிப் பிழைப்பார்கள்; பொருளாதார காரணங்கள் இருக்கும் என்றெல்லாம் திரையில் காட்ட ஸ்பீல்பெர்க் வேண்டும்; ஆனால், ஐம்பது மாநிலங்களுக்கு 50 நட்சத்திரங்கள் என்று 36 மாகாணக் கொடி ஏற்றாத சறுக்கல்களுக்கும் ஸ்பீல்பெர்க் மேல் பழி போடவேண்டும்.

வெள்ளையர் மட்டுமே கறுப்பின் சமத்துவத்திற்கு போராடியதாக நிலை நிறுத்துவது படத்தின் மிகப் பெரிய குறை அல்ல; The Last King of Scotland, Blood Diamond, The Help என அது என்றென்றும் ஹாலிவுட்டின் தேய்வழக்கு.

Kamal’s விஸ்வரூபம் FAQ

அ) படம் எப்படி?
நல்லாருந்துச்சு. சுவாரசியமாப் போகுது.

ஆ) எது பிடிச்சிருந்தது?
பிராமணப் பொண்ணு சிக்கன் சாப்புடறது; முதல் சண்டைக் காட்சி; ஆப்கானிஸ்தான் லொக்கேஷன்

இ) என்ன இருந்திருக்கலாம்?
ஆண்ட்ரியாவுடன் டூயட்; கோடை கால ஆடை அணிந்த ஹீரோயின்; அப்புறமாய் கொஞ்சம் கதை

ஈ) குழந்தைகளைக் கூட்டிப் போலாமா?
செக்ஸ் வச்சுக்கறதுனா என்னன்னு கேப்பாங்க; கை வேறு கால் வேறா வருவதைப் பாத்து பயப்படலாம்

உ) இயக்குநர் கமலுக்கு எவ்வளவு மார்க்?
விருமாண்டி அளவு உணர்ச்சி இல்லை; ஹே ராம் அளவுக்கு சரக்கும் இல்லை. இருந்தாலும் ஃபோகஸ் இருப்பதால் எழுபது.

ஊ) இஸ்லாமியர்கள் ஃபீலிங் ஆகிறார்களே?
பனியில் நடந்தா பார்த்து நடங்க; அல்லது வழுக்கிரும்னு சொல்லுற மாதிரி, மார்க்கத்தில் பார்த்து நடக்க சொல்லுறாரோனு நெனச்சேன். அந்த மாதிரி அட்வைஸ் கூட இல்ல. டைட்டில் மட்டும் வலமிருந்து இடம் வருவது மாதிரி சின்னச் சின்ன நகாசு மட்டுமே.

எ) கார் சேஸிங் இருக்காமே?
அதற்கு பதிலா இன்னும் கொஞ்சம் கேரக்டர் டெவலப்மெண்ட் செஞ்சிருக்கலாம்.

ஏ) துப்பாக்கி, எந்திரன் – ஒப்பிடுக.
விஜய் படம் புத்திசாலித்தனம். ரஜினி படம் பிரமிப்பு. கமல் படம் இரண்டும் கலந்து வந்திருக்கணும்; ஆனா, டைரக்டர் பேச்ச கேட்கமாட்டாரே

ஐ) என்னோட அமெரிக்க நண்பருக்கு போட்டுக் காட்டலாமா?
இது தூய இந்தியருக்கு மட்டுமே ரசிக்கக் கூடியது. அவர்களுக்கு புதுசா எதுவும் சரக்கு இல்லை. போர்ன் ஐடெண்ட்டியும் ட்ராஃபிக்கும் பாக்குற கும்பலுக்கு விசுவரூபமெல்லாம் சரிப்படாது

ஒ) ஆக்டர் கமலுக்கு எவ்வளவு மார்க்கு?
உறுத்தாம வந்து போகிறார். தேய்வழக்காக வசனகர்த்தா சொல்லுறத கூட சகிக்க வைக்கிறார். முக்கியமா அந்த பயங்கரவாதி கெட்டப்புக்காகவே நூற்றுக்கு நூறு போடலாம்.

ஓ) நெஜத்தில் இப்படி எல்லாம் நடக்குமா?
தீவிரவாதிகளுக்கு புது புது ஐடியா எல்லாம் கொடுத்திருக்காரே

ஔ) “தூங்காத என் கண்ணில் துயில் உரித்த கண்ணன்… விதை இல்லாமல் வேர் இல்லையே’ போல் கவித்துவமாக சிந்தனை சொல்லுப்பா…

புறாவில் என்ன பாகுபாடு என்பது பயலாஜிஸ்டுக்குத்தான் தெரியும்; அது போல் மனிதனின் பிரிவுகள் அறிவியலாருக்கு மட்டுமே புலப்பட வேண்டும். புறா கோவில் மாடத்திலும் தங்கும்; அங்கிருந்து மசூதிக்கும் பறக்கும். நாயகனும் அவ்வாறே.

Vicky Donor: Hindi Movie Intro: Life as a Sperm donor after Marriage

இந்தியாவின் #1 மூலதனமான மக்கள்தொகை பிரச்சினையை இந்திப்படம் ’விக்கி டோனர்’ விவாதிக்கிறது. தில்லி டாக்டர்கள் தமிழக காளிமுத்துகள் போல் ரொம்ப காலமாகவே பிரபலம்.

விவாகரத்து ஆனவர்களை மருமகளாக ஆக்குவதில் பெற்றோர் காட்டும் பக்குவம்; திருமணங்களில் ஈகோவும் இனக்கவர்ச்சியும்; மன அழுத்தம் காரணமாக பாலியல் சிக்கல்; முதிர்கன்னியை மணப்பதால் மகப்பேறு இல்லாமை; கவலை இல்லா வாழ்க்கைக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் இடையே உள்ள paradox; தத்து எடுப்பதில் உள்ள அசூயை; ஆற்றல் மிகுந்த நல்ல விந்து கிடைப்பதில் உள்ள சிக்கல்; மரபணு சார்ந்து கிடைக்கும் பாரம்பரிய திறமையா அல்லது வளர்ப்பதின் மூலமே வெற்றித் திருமகனை உருவாக்க முடியுமா என்னும் விவாதம்…

இவ்வளவு விவகாரமான விஷயங்களை அலசினாலும், ரொம்பவே அலட்டிக்காமல், அதிகம் அழுவாச்சி சிந்தாமல் நகைச்சுவையுடன் எதார்த்தமாக சொல்லிச் சென்றார்கள். படத்தின் வெற்றிக்கு சேலம் சிவராஜ் – அன்னு கபூர் அவசியமான காரணம்.

உலகம் ஒரு நாடக மேடை; சினிமா ஒரு வாழ்க்கை பாதை

விஸ்வரூபம் வெளியிடுவதில் பிரச்சினை. இந்தியில் ‘ஓ மை காட்’ வெளியாவதில் பிரச்சினை எதுவுமே இல்லை.

விவகாரமான விஷயங்களை நாடகமாகப் போட்டால் எந்தப் பிரச்சினையும் வராது. கிரேசி மோகனின் ‘சாக்லேட் கிருஷ்ணா’ போல். அதை விட கதையாக எழுதி புத்தகமாகப் போட்டால் எந்த அரசியல்வாதியும் தடா போட மாட்டார்.

கடந்த இருபதாண்டுகளாகத்தான் பரேஷ் ராவல் படங்களுக்கு அறிமுகமாகி இருக்கிறேன். இதிலும் கலக்குகிறார். சிரமமான கருத்துகளை எதார்த்தமாக வாதாடுவதில் ஆகட்டும். புனித தொன்மங்களை இன்றைய நிலைக்கு ஏற்ப கேள்வி கேட்பதில் ஆகட்டும். காலத்திற்கு ஒவ்வாத கண்மூடி நம்பிக்கையை கிண்டல் அடிப்பதில் ஆகட்டும். வசனகர்த்தாவும் பரேஷும் பின்னுகிறார்கள்.

‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படத்தில் வருவது போல், தெய்வத்துடன் டீல் போடாதீர்கள் என்கிறார்கள். ‘பித்தா புறைசூடி’ சுந்தரர் போல் கடவுளுடன் தோள் மேல் கை போடு என்கிறார்கள். தினகரன் & கோ, நித்தியானந்தா அண்ட் கோ மாதிரி சேல்ஸ் பசங்களை நம்பாமல் இறைவரை ஏழையின் சிரிப்பில் கண்டு கொள்ள அழைக்கிறார்கள்.

ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு எதிராகவும் தேவதூதர்களுக்கு போட்டியாகவும் விஸ்வரூபம் எடுக்க படத்தின் ஹீரோவிற்கும் மீடியா தேவைப்பட்டிருக்கிறது என்பதுதான் புதிய கடவுள் தரிசனம்.

கடல் திரைப்படம் – விமர்சனம், சுட்டிகள்

என்னைக் கவர்ந்த வசனங்களில் சில

* ‘கெட்டவங்களுக்குத்தான் கடவுள் துணை தேவை. நோயாளிதான் டாக்டர்கிட்ட போவாங்க… அது மாதிரி தப்பு செய்யறவங்கதான் தெய்வத்துகிட்ட வருவாங்க!.’

* சாத்தான் சொல்வதாக… ‘ஜீஸஸ் ஜெயிச்சுட்டார். என்னைக் கொல்வதன் மூலம் பாஸ்டர் சாமுவேல் போராளி ஆயிட்டார். சாத்தானை சாகடிப்பதன் மூலம் நேர்மையும் அமைதியும் வென்று விட்டதா?’

எல்லாம் நினைவில் இருந்து தோராயமாக எழுதியது. என்னுடைய புரிதலுக்கு ஏற்ப மாற்றி விட்டேன்.

அடுத்ததாக சமகால தமிழ்ப்படங்களை பார்க்கலாம். ஒரு வகை நவீன மொழியில் திரைக்கதையை நம்பி வருபவை. பீட்சா, நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம், நான் ஈ வகையறா.

இன்னொன்று எண்பதுகளின் தேய்வழக்கோடு வருபவை. தாண்டவம், ’கண்ணா லட்டு திங்க ஆசையா’, மாற்றான் போன்றவை.

இந்தச் சூழலில் கடல் போன்ற படங்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எண்பதுகளின் காலகட்ட திரைப்படம், பீரியட் படம் என்றெல்லாம் சகஜமாக ஹாலிவுட்டில் வரும். அந்த மாதிரி ஒன்றாக கடல் படத்தைப் பார்க்கிறேன்.

சாதாரண கதை. வில்லன் மகளை ராபின்ஹுட் வளர்க்கும் அனாதை ஹீரோ காதலிக்கிறான். ரஜினி அல்லது கமல் நடித்து வெளியான பல படங்களில் சொல்லப்பட்ட விஷயம்.

அதை எப்படி புதுசாக சொல்வது?

ஆனால் முப்பதாண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையை சொல்வதா அல்லது கிறித்துவ இறையியலை மையப்படுத்துவதா என்று அங்குமிங்கும் அலைபாய்கிறது.

எதிர்பார்ப்புகளை பொய்ப்பதில் அர்விந்த்சாமி முன்னணியில் இருக்கிறார். டச் விட்டுப் போனதோ, அல்லது அடக்கி வாசித்தாரோ… தமிழருக்கு ஓவர் ஆக்டிங் பிடிக்கும்; அவர் தேமே என்று ஏம்போக்கி மாதிரி வந்து போகிறார்.

எவராலும் தவறு மட்டுமே செய்து வாழ முடியாது. உற்றார் உறவினருக்கோ அல்லது கூட்டாளிக்கோ… எங்காவது யாருக்காவது நன்மை செய்து விடுவார்கள். ஆனால், குற்றம் மட்டுமே வாழ்க்கையாக பெர்க்மான்ஸ் கொண்டிருக்கிறார்.

ஆனால், ஒரே ஒரு நன்மை செய்கிறார். மிக இறுதியில். தேவனின் பாதைக்கு வந்து விடுகிறார். ஒரு நல்ல காரியம் மட்டுமே போதும்… அதன் சுவை அப்படியே மெதுவாக நம்மை திருத்தி விடும் என்பதாக யேசுவின் வழியை குறிக்கிறார்கள். இதை பொருளாதாரத்தில் multiplier effect என்பார்கள்.

ஏ ஆர் ரெகுமானின் இசையைக் குறித்து விமர்சனம் செய்யும் முன் மூன்று விஷயம் செய்தாக வேண்டும்.

1. படத்தை இரு முறையாவது பார்த்திருக்க வேண்டும்
2. மூன்றாவது முறை படத்திற்கு நீங்கள் செல்லும்போது, தயவு செய்து கண்னை இறுகக் கட்டிக் கொண்டு முழுப்படமும் பார்க்க வேண்டும்.
3. இந்த மாதிரி குறைந்த பட்சம் ஏழெட்டு திரைப்படங்களையாவது பார்த்திருக்க வேண்டும்.

இப்படி எல்லாம் அனுபவிப்பதற்கு முன்பே, இங்கே வயலின் வந்திருக்கலாம்; அங்கே குழைந்திருக்கலாம் என்று அனுமாணிக்க இயலாது.

இரண்டாவதாக அருமையான நாவலை காட்சிப்படுத்தல். வசந்த பாலன் ஒரே ஒரு விஷயத்தைத்தான் ‘காவல் கோட்டம்’ போன்ற மிகப் பெரிய புத்தகத்தில் இருந்து எடுக்கிறார். மிக மிக ஜனரஞ்சகமாக ‘லிங்கன்’ எடுக்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எப்பொழுதுமே ஒரே ஒரு குறிக்கோளை நோக்கித்தான் பயணிக்கிறார்.

சட்டதிருத்தத்தை கொண்டு வர லிங்கன் என்ன செய்கிறார் என்பதுதான் முக்கிய புள்ளி. அது செய்தார் என்பதை படம் பார்க்கும் அனைவருமே அறிந்திருந்தாலும், இருக்கை நுனிக்கு வரவைக்கிறார். கறுப்பர்களுக்கு நேர்ந்த அநீதிளை கொடூரமாக சித்தரிக்கவில்லை. தேர்தலில் எப்படி வென்றார் என்பதை விளக்கவில்லை. போரை எப்படி நடத்தினார் என்று காட்சியாக்கவில்லை. இந்த உபகதை அனைத்துமே தொட்டுக் கொள்ள கொஞ்சமாய் வைத்துக் கொண்டார்.

நாவலை ஒரே தினத்தில் வாசித்து முடிப்பதில்லை. திரைப்படத்தை இரண்டரை மணி நேரத்தில் முடித்து விடுகிறேன். அனேக திரைப்படங்களை ஒரு தடவைதான் பார்க்கிறேன். நாவல்களை இரண்டு முறையாவது படிப்பது சகஜம்.

அதனால், ‘கடல்’ திரைப்படத்தில் இந்த மாதிரி ஃபோகஸ் இல்லாதது என்னை அலைக்கழித்தது.

ஆய்வுகள், சுட்டிகள் & விமர்சனங்கள்:

1. மனவெளிப் பயணம்: கடல்:

அர்ஜுன், யாருடனோ தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருக்கும் வசனமிது. ”பாவம் செய்றது, மனுசன் இயல்பா நடக்குற மாதிரி.. ஈசியா பழக்கிடலாம்.. நன்மை செய்றதுதான் வானத்துலே பறக்க செய்ற மாதிரி.. ரொம்ப கஷ்டம்”. இந்த வசனம்தான் படத்தின் மூலம்.

களங்கமற்ற தன்மை, அறிவாளிகளை விட அசடுகளுக்கே கைக்கூடும். எனவே அவர்களின் களங்கமற்ற தன்மையால், எளிதாக இயேசுவை நெருங்குவார்கள். சாம் பாத்திரத்தால், ஒருபோதும் தீமையை செய்ய முடியாது என்று படம் முழுவதும் நாம் உணர்கிறோம். இறுதியில், அவனுடைய களங்கமற்ற தன்மை, சாத்தானால் பரிசோதிக்கப்பட்டு உடைக்கபடுகிறது. பரிதாபமாக தோல்வியை தழுவுகிறான் சாம். புனிதனான சாம் தனது நற்குணத்தை இழந்து, பெர்க்மான்ஸை தண்ணீரில் முழ்க விட எத்தனிக்கையில், சாத்தான் வெற்றி களிப்பில் எக்காளமிடுகிறான். தேவதை போன்ற பியாட்ரிஸினால் மன்னிக்கப்பட்டு தேவனான தாமஸ், பெர்க்மான்ஸை மன்னித்து மீட்கிறான். இப்போது, மன்னிக்கப்பட்டு உயிர்தெழும் பெர்க்மான்ஸால், இயேசுவை மிக எளிதாக நெருங்க முடியும்தானே.

2. கலங்கிய குட்டை: மணிரத்னத்தின் ‘கடல்’ | எம்.டி.முத்துக்குமாரசாமி:

சிறுவன் ‘அம்மா அம்மா’ என்று அலறுவது மணிரத்னத்தின் அஞ்சலி படத்தில் ‘எந்திரி அஞ்சலி எந்திரி அஞ்சலி’ என்று ஒரு அலறல் வருமே அது போல நீடிக்குமோ என்ற என் பீதியை ‘மகுடி மகுடி’ உற்சாகப்பாடல் நீக்கி என்னை அமைதிப்படுத்திவிட்டது.

பிணத்தின் காலை மண்வெட்டியால் உடைத்து சவப்பெட்டிக்குள் அலட்சியமாக இருத்தினானே அவனிடம் சாத்தானின் சாயல் இருக்கிறது

‘அடியே எங்கே கூட்டிப் போறெ’ என்று சித் ஶ்ரீராம் உருகி உருகி பாடும் காட்சியில் துளசி டிசைனர் சேலை கட்டிக்கொண்டு பாசி மணியெல்லாம் அணிந்து இடுப்பை நோக்கி முக்கோணமாய் வளைந்த இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு பூதகி போல நிற்கிறார். பூதகி நடனத்தில் எங்கே நீ கூட்டிபோறே அடியே என்று கேட்டு கதாநாயகன் பாடும்போது அவன் மேல் நமக்கு கழிவிரக்கம் பிறக்கிறது.

3. The Hindu : Life & Style / Metroplus : Sea of imagination:

According to him, Kadal narrates the “story of a wounded boy who is transformed or elevated to a higher spiritual plane by a girl called Beatrice who comes into his life. It is a film on two youngsters from the fishing community, but not in the genre of Malayalam films such as Chemeen and Amaram, which was on the fishing community. The sea in Kadalis merely a backdrop to the story of a man’s transformation.”

Pointing out that Beatrice was the name of the angel who takes Dante to heaven in the epic work Divine Comedy, he says that the movie’s theme is about how it takes just one step or action to turn man into God but it takes several steps to turn a man into the devil.

4. “Kadal”… Coast analysis « Baradwaj Rangan:

When done, they lower the body, now inside an open coffin, and find a leg sticking out – that old joke about the whore who couldn’t keep her legs crossed comes to mind – and one of them sets about breaking the limb, in order to make it fit inside.

5. கடல் – அலைகளைக்கடந்து ஆழம் ~ வேழவனம்:

தான் தான் மிகுந்த அறிவாளி, சைத்தானின் பிரதி என நினைக்கும் அவரை, தான் எதிரியாக நினைக்கும் அனைவரையும் அவர்கள் யோசிக்க இடம் கொடுக்காமல் தனது திறமையால் தோற்கடித்துக்கொண்டே வரும் அவரை, தன் அறிவால் யோசிக்க கூட முடியாத ஒரு சிறு பெண், எளிய அன்பினால் வெற்றி கொள்வதே இந்தக் கடல்.

துணை நடிகர்களின் பங்களிப்பு அபாரம். ஃபாதருக்கு உதவியாக வருபவர்(யேசுவையே நேருல பார்த்தவரு), மீன் விற்கும் பெண் என பலர்.

6. Karundhel:

தாந்தேவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். புகழ்பெற்ற இடாலியன் கவிஞர். இவரது ‘Divine Comedy’ என்ற கவிதையைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கலாம். நரகம், சொர்க்கம் மற்றும் இதனிடையே இருக்கும் purgatory என்ற மூன்று உலகங்களுக்குள் தாந்தேவின் பயணத்தைப் பற்றிச் சொல்லும் ஒரு நீண்ட கவிதை இது. இந்தப் படத்துக்காக அந்தக் கவிதையைப் படித்துப் பார்த்தேன். மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்தக் கவிதையில், சொர்க்கத்தில் தாந்தேயின் பயணத்தை வழிநடத்திச் செல்லும் பெண்ணின் பெயர் – Beatrice. சொர்க்கத்தில் பல்வேறு புனிதர்களையும் சந்தித்துப் பேசுகிறார் தாந்தே. பியாட்ரிஸ் என்ற இந்தக் கதாபாத்திரம், தாந்தேவின் நிஜவாழ்வில் அவருக்கு மிகவும் பிடித்தமான பெண்ணின் பெயர். இந்தப் பெண்ணை தாந்தே இரண்டே தடவைகள் மட்டுமே சந்தித்திருக்கிறார். இருந்தும் பியாட்ரிஸின் மீதான அவரது காதலை அவரது படைப்புகளில் வெளியிடும் அளவு அவருக்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்துப் போயிருந்தது. அவரது டிவன் காமெடியில் பியாட்ரிஸ், அன்பின் மொத்த உருவமாக சித்தரிக்கப்படுகிறாள். அதேபோல், கடவுளிடம் நேரடியாகப் பேசக்கூடிய ஒரு உயரிய நிலைக்கு (beatific vision) தாந்தேவை உயர்த்தவும் செய்கிறாள் பியாட்ரிஸ்.

7. கடல் « Charu’s blog:

கடலின் முதல் பத்து நிமிடங்கள் ஜெயமோகனின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியைப் போல் இருந்ததும் “தொலைந்தோம்” என்று பயந்து விட்டேன். பாதிரியார் உடையில் எல்லோரும் அப்படித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். பாரதி மணியைப் பார்த்ததும் நம் நாஞ்சில் நாடனும் பாதிரியார் உடையில் வந்து பேசுவாரோ என்று நடுங்கி விட்டேன். அப்புறம் பார்த்தால் படம் வேறு எங்கோ போய் விட்டது. படத்தின் ஹீரோக்கள் என்று பலரைச் சொல்லலாம் போல் இருக்கிறது. முதல் ஹீரோ ஏ.ஆர். ரஹ்மான். இப்படி ஒரு பின்னணி இசையையும் பாடல்களையும் தமிழ் சினிமாவில் பார்த்து பல காலம் ஆகி விட்டது. பல இடங்களில் கண்களைக் கலங்கச் செய்து விட்டது இசை. ஒரு ஐரோப்பியப் படத்தைப் பார்ப்பது போல் இருந்தது இசை.

படத்தின் ஒரே குறை, அந்த ஹீரோயின். அவருடைய அபரிமிதமான எடை. அவர் கௌதமின் சைக்கிளில் முன் சீட்டில் உட்காரும் போது பார்வையாளர்கள் கேலிச் சிரிப்பு சிரிக்கிறார்கள். தமிழில் வேறு நடிகையா கிடைக்கவில்லை?

8. அந்த டேப் ரிகார்ட் சீன் போன்ற நிகழ்வுள்ள ஒரு கட்டுரை :: என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன? (16-1-07 அன்று பாளையங்கோடை தூய சவேரியார் கல்லூரி தமிழ்துறை சார்பில் ஆற்றிய நினைவுச்சொற்பொழிவு)

” ஏன் அவன் அழுகிறான்? குற்ற உணர்வாலா? இல்லை. அதைவிட நுட்பமான ஓர் உணர்வு. சிந்தனைகளின் உச்சியை அடையவும் ,பெரும் வல்லமையுடன் இயற்கையை வெல்லவும் பொருட்டு படைக்கப்பட்ட ஒரு மானுட ஆத்மாவான அவன் வெறுமொரு தெருவாழ் மிருகமாக வாழ நேரிட்டமை குறித்தே அவன் அழுதான். சற்றுமுன் கோபமாக வெளிப்பட்டதும் அந்த அழுகைதான்”

நித்யா தொடர்ந்தார்.” இந்த அழுகை மானுடனைப்பற்றி நான் என்றென்றும் கொண்டிருந்த அழுத்தமான நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை உறுதிசெய்கிறது. மனிதன் இயற்கையின் சாராம்சமான ஒரு வல்லமையை தன்னுள் கொண்டிருக்கிறான். இயற்கையின் உள்ளுறையாக ஒரு பெரும் கருணை, ஒரு மாபெரும் நன்மை உறைகிறது என நான் எப்போதுமே உணர்ந்துவருகிறேன். அதுவே நாம் காணும் இவையனைத்தையும் ஆக்கி நம் முன் விரித்துள்ளது. அந்த சாரம் மானுடனின் உள்ளும் உறைகிறது.”

9. பிச்சைக்காரன்: கடல் – மீட்பு அளிக்கும் தேவதை:

ஹிரோ ஒரு ரவுடியை போட்டு அடிப்பதில் இருந்து தமிழ் சினிமா காதல் ஆரம்பிக்கும். இதை இந்த படம் உடைத்து இருக்கிறது. யோசித்து பாருங்கள் . நம்முடைய சிறந்த நட்போ,. காதலோ காரணம் ஏதுமின்றி இயல்பாகத்தான் அமைந்து இருக்கும் . இயல்பான நெருக்கம் அருமையாக சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் கொஞ்சம் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி இல்லாததைத்தான் படத்தின் பெரிய மைன்சாக சொல்ல முடியும்.

10. Dyno Buoy – Google+ – கடல் – http://www.imdb.com/title/tt2344672/ குருடர்கள்…:

இன்னொருத்தர் நஸரீன் (அதையும் ஒரு எலக்ஸ் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட “நஸ் ரீன்”றார் லூயின்றார். அது லுயிஸ்தான், ஃபிரெஞ்சு போல லூயி பண்ணவேண்டியதில்லை மிஸ்டர் எம்கே டீ காபிஜி). படத்தை பார்த்துட்டு வந்து அவசரசரமா விக்கிபீடியா ஐஎம்டிபி துலாவி அப்படிக்கா இப்படிக்கான்னு அடிச்சி விடவேண்டியது.

எனக்கு தெரிஞ்சது / புரிஞ்சது – ஒவ்வொரு நல்லவனுக்குள்ளயும் ஒரு கெட்டவன், ஒவ்வொரு கெட்டவனுக்குள்ளும் ஒரு நல்லவன். ஏதோ ஒன்னு இன்னொன்னை கொல்லும் அந்த ஒரு நொடிப்பொழுது அவரவர் வாழக்கையை நிர்ணயிக்குது.

ஹேமாமாலினி பொண்ணு போல் இருந்த அந்த பெண்மணி மோகன் பாபுவின் மகளாம். அவரும் கச்சிதமாய் மனதில் நிற்கும் கேரக்டர்.

எல்லாத்துக்கும் மேல் காமெடியன் ஒருவரை கூடவே சுத்தவிட்டு காட்சியில் வருவதை பார்வையாளனுக்கு விளக்காமல் பார்வையாளன் மேல் நம்பிக்கை வைத்ததிற்கு நன்றி மணி ரத்னம் (அந்த காமெடியன் இல்லாத்தால்தான் பலருக்கு படம் புரியவில்லையஓ என்றும் எண்ணம் வருகிறது).

லெ மிஸ்ஸரப் (Les Meserables) பார்த்திருந்தால், கடல் படத்தின் ஓட்டத்தில் சிலலிடங்களில் ஒத்து போவதை பார்க்கலாம்.

11. bogan R – Google+ – கடல் விமர்சனம் ஜான் ச்டீன்பேக்கின் East of Eden என்றொரு…:

நேரடியாக அறம் போதிப்பதை /விவாதிப்பதை பொதுவாகவே இளைஞர்கள் விரும்புவதில்லை .எதிர் அறம் தான் இன்று மிகப் பெரிய ஆளுமையை அவர்களிடம் செலுத்துகிறது.ஆரண்ய காண்டம் போன்ற படங்கள் பெற்ற பெரிய வரவேற்பைக் கவனத்தில் கொள்ளவும்

12. கடல் – சினிமா விமர்சனம் ~ உண்மைத்தமிழன்:

துளசியின் அறிமுகக் காட்சியிலேயே அவளது லேசான மனநிலை பிறழ்ந்த நிலை அறிமுகப்பட்டிருந்தாலும் பின்னாளில் கலைராணி சொல்லும்போதுதான் நமக்கு உணர முடிகிறது.. படம் பார்த்து 2 நாட்கள் கழித்துதான் இந்தக் காட்சியை மணி ஏன் வைத்திருக்கிறார் என்பதே புரிகிறது..!

13. Narendiran M – Google+ – கடல் வெயிலும் உதிர் மணலும் தினம் மீட்டெடுக்கும் கருவாட்டு…:

“எனக்கு வீட்ல சோறு இல்லை, அதான் விடுதியில சேர்ந்தேன்” – “எனக்கு வீட்ல தியானம் இல்லை. அதை தேடி தான் இங்க சேர்ந்தேன்”என வசனங்களிலேயே கதையின் தளங்களை நிறுவிக்கொண்டே செல்கிறார் ஜெ.எம். உன்னிப்பாக கவனித்தால் குறைந்தபட்சம் அறுபது நாகை வட்டார வசவு சொற்களை கற்கலாம். நாவல் வடிவிற்க்காக காத்திருப்போம்.

14. பிச்சைப்பாத்திரம்: கடல் – மணிரத்னத்தின் Intellectual menopause ..:

தீவிரவாதம்+காதல், நிஜ ஆளுமைகளின் நிழலுருவாக்கம் என்கிற வார்ப்புருக்களின் வரிசையில் மணிரத்னத்திற்கு பிடித்தமானது இதிகாச ரீமிக்ஸ். அவ்வகையில் விவிலியத்தின் சில கூறுகளை எடுத்துக் கொண்டு கிருத்துவப் பின்னணயில் உருவாக்க்கப்பட்டிருக்கும் ‘கடல்

அர்விந்த் தேவனின் மகிமையை தொண்டை நரம்பு புடைக்க உச்சஸ்தாயியி்ல் கத்திச் செல்வதோடு படம் நிறைவு பெறுகிறது.

15. ஆழமும் அலைகளும் அற்ற கடல் | தமிழ் பேப்பர்:

பொருளாதார பலத்தைப் பெற ஆரம்பித்ததும் மேற்கத்திய கிறிஸ்தவ நிறுவனங்கள் எப்படியாகத் தங்கள் மத மதிப்பீடுகளை வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல் ஏற்றுவார்கள் என்பதற்கு சமீபத்தில் வெளியாகும் படங்களே சான்று. கென்னி விக்ரம் – ஜீவா அன்கோவின் டேவிட் என்ற படமும் இதே நாளில்தான் வெளியாகியுள்ளது. விண்ணைத் தாண்டி வருவாயா, பயணம், நான் ஈ, நீர்ப்பறவை, தாண்டவம் என கிறிஸ்தவச் சார்பு படங்கள் சாரைசாரையாக வர ஆரம்பித்திருக்கின்றன. ஏற்கெனவே, பாரதிராஜாவில் ஆரம்பித்து கமலஹாசன் வரை கிறிஸ்தவ மென் சாய்வுடன் பழைய ஏற்பாட்டில் இயங்கிவந்திருக்கிறார்கள்.

இன்னும் பலர்: கடல் – Google Groups

மணி ரத்னத்தின் கடல் – FIR

மணி ரத்னம் படத்தை அவரின் பாடல் திரையாக்கத்திற்காக பார்க்கலாம். சொதப்பலான தில்ஸே முதல் அடிதடி ‘தளபதி’ வரை எல்லாவற்றிலும் பாந்தமான பெண் நாயகிகளுக்காக பார்க்கலாம். ‘ஓடிப் போயிரலாமா’ கீதாஞ்சலி ஒரு வரி ஆகட்டும்; முழம் நீளத்திற்கு முழங்கும் ’நானும் பப்ளிக்தான்’ சொல்லுகிற குரு ஆகட்டும்… வசனம் ஷார்ப் ஆக குத்துவதால் பார்க்கலாம்.

இங்கே அர்ஜுன் சொல்கிறார். ‘சாமர்த்தியக்காரர்களைக் கொன்று விட்டு நிம்மதியாக வாழ்வது ஒரு ரகம். திறமைசாலியை பக்கத்தில் வைத்து வளர்த்துக் கொண்டே ஜாக்கிரதையாக ராஜ்ஜியம் வளர்ப்பது இன்னொரு ரகம். எனக்கு இரண்டாவது வகைதான் பிடிக்கும். சோம்பேறி அல்ல… உஷார் பார்ட்டி ஆக்கும்!’

கண்ணை உருட்டுவதில் ஆகட்டும்; மனக் கொந்தளிப்புகளை நாடி நரம்புகளில் கொணர்வதாகட்டும்; ஏழ்மையும் சுய பச்சாதாபமும் இயலாமையும் வந்து போவதாகட்டும். அர்ஜுன் மிரட்டுகிறார்.

ஷங்கர் மாதிரி பிரும்மாண்டத்தை எடுப்பதிலும் மணி ரத்தினத்திற்கு நாட்டமில்லை. கேயெஸ் ரவிக்குமார் மாதிரி முழுக்க முழுக்க மசாலா வைக்கவும் மனம் ஒப்பவில்லை. ‘பரதேசி’ பாலா மாதிரி ஆல்டர்நேட் ஜாகையும் ஆண்ட்டி-ஹீரோ நாயகனையும் நிலைநிறுத்தவும் முயலவில்லை.

முழுக்க முழுக்க கிறித்துவ இறையியலை பொதுசனத்திற்கு விளக்கி இருக்கக் கூடிய களம். யேசு பிறக்கிறார்; கன்னி மேரி இருக்கிறார்; பிதா கட்டமைக்கிறார்; கொல்லப்படுகிறார்; அவரின் குமரன் மீண்டு எழுகிறார்; பரிசுத்த ஆவியில் முடிக்கிறார்கள்.

இது எல்லாம் ஜெயமோகன் புத்தகம் வெளியான பின் ரசிக்கலாம். இப்போதைக்கு அந்தமான் டூயட், கன்னியாகுமரி வட்டார வழக்கு, கார்த்திக் பையனின் அசத்தல் அறிமுகம் எல்லாம் கொறிக்கலாம்.

நீயா, நானா – முகங்கள்: 2012: நண்பர்களுக்கு விருது வழங்குவது எப்படி?

தமிழ்நாட்டு ஆண்களுக்கு செய்திகள் பார்க்கப் பிடிக்கும். தமிழ்ப் பெண்களுக்கு சீரியல் பார்க்கப் பிடிக்கும். இருவருக்கும் அரட்டை அரங்கம், விவாத மேடை, நீயா? நானா? போன்ற திண்ணைப் பேச்சு முழக்கங்கள் பிடிக்கும்.

தமிழ் பாப் கல்ச்சர் ரசனைகளை தொடர்ந்து கவனிப்பதால் எல்லாவற்றையும் பார்த்து வைப்பது போல் விஜய் டிவியின் ‘நீயா/நானா’ பார்த்தேன். அதுவும், தென்னக சிந்தனையாளர்களான ஞாநி, எஸ் ராமகிருஷ்ணன், பாஸ்கர் சக்தி, கடற்கரய், கவிதா முரளீதரன், குட்டி ரேவதி, ராஜகோபாலன், பாலா, சாரு நிவேதிதா, அபிலாஷ், சிவகாமி ஐ.ஏ.எஸ் போன்றோர் கலந்து கொண்டதால் இண்டெலக்சுவலாக, மாற்று சிந்தனையை முன்வைக்குமோ என்று ஆசையுடன் பார்த்தேன்.

நிறைய பட்டியல் போட்டார்கள். முன்பு உட்கார்ந்திருவர்களை வாய் நிறைய பாராட்டினார்கள். தனக்கு விருது கொடுத்தவர்களை உற்சாகமாக முன்வைத்தார்கள். வெகுசன ரசனையை விட்டு இம்மி பிசகாமல் ரசித்தார்கள்.

எஸ் ராமகிருஷ்ணன் கனடா ‘காலம்’ இதழை சிறந்த சிற்றிதழாக முன் வைத்தார். அவருக்கு இயல் விருது கிடைத்த போது காலம் பத்திரிகையை படிக்கும் வாய்ப்பை பெற்றிருப்பார்.

’அடவி’ சிற்றிதழுக்கு தந்த விருது எனக்கு புதிய பத்திரிகையை அறிமுகப்படுத்தியது:

அ) உயிர்மை இதழின் முன்னோட்டம்

ஆ) ஜனவரி – 09: கீற்று

இ) அடவி – ப்ளாக்ஸ்பாட்

பாஸ்கர் சக்தி வந்திருந்ததாலோ… என்னவோ… ஆனந்த விகடனை ஆஹா! ஓஹோ!! அற்புதம்!!! என்று பாராட்டினார்கள். எண்பதுகளின் மேட்டரை மறுபடி போடுவதால் இருக்கலாம். கிளுகிளுப்பாக செக்ஸ் தூவி எழுதுவதால் இருக்கலாம். சன் டிவி குழுமத்தின் குங்குமத்தை பாராட்ட முடியாது. எனவே, விகடனைப் பாராட்டும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கலாம். எஸ். ராமகிருஷ்ணனின் தொடர் வருவதால் இருக்கலாம். உண்மையான காரணத்தை குமுதம் ரிப்போர்ட்டர் ஆராயலாம்.

நல்ல திரைப்படமாக ‘சாட்டை’ படத்தைப் பாராட்டினார்கள். சரி… ‘அறஞ்செய விரும்பு’, ‘ஆறுவது சினம்’ என்று ஔவையார் போதனைகளை எடுத்தால்தான் ‘நீயா… நானா’ பேச்சாளர்கள் விரும்பி ரசிப்பார்கள் என்ற்றறிந்தேன்.

’அட்டகத்தி’ சிறப்பாக இருந்தது என்றார்கள். எண்டெர்டெயின்மெண்ட் என்று துளிக்கூட இல்லாத சினிமாவை எப்படி தைரியமாக முன்னிறுத்தலாம் என்பதை அறிந்தேன்.

இஸ்லாமியர்களை நல்லவர்களாக காண்பிப்பதால் ‘நீர்ப்பறவை’ பெஸ்ட் படம் என்றார் “சமநிலைச் சமுதாயம்” இதழின் எடிட்டர். வெளிப்படையாக பேசுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று அறிந்தேன்.

ஷா நவாசுக்கு அபிலாஷ் விருது கொடுத்தார். எல்லோரும் ஒரு கைத்தடியை அழைத்து வந்திருந்தார்கள். சில சாமிகள் வராத காரணத்தால் பூசாரிகள் வந்திருந்தார்கள். பேஸ்புக்கில் ஐம்பது நண்பர்கள் கூடியதை சாதனையாக சொன்னார்கள். நார்மலாக எதிரும் புதிருமாக விவாதம் நடக்கும். இந்த தடைவ எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தவர்களே முதுகு சொறிந்தார்கள். கிட்டத்தட்ட விஜயகாந்த நடிக்கும் விக்கிரமன் படம் பார்த்த சந்தோஷம். லட்டுவில் பூண்டும் வெங்காயமும் போட்டது போன்ற இனிப்பு.

வழக்கம் போல் எல்லோருக்கும் டோக்கன் போராளியான லாபியிஸ்ட் உதயகுமாருக்கு விருது தந்து நிகழ்ச்சியை பூர்த்தி செய்தார்கள்.

i) அணு உலைகளை ஏன் அமெரிக்கா உதயகுமார் எதிர்க்கிறார்?

ii) 7 Questions for America’s Udhayakumar supporters and Infrastructure critics

iii) 10 Reasons why Koodankulam Nuclear Power Plant is opposed

நிகழ்ச்சி:

தொடர்புள்ள பதிவுகள்:

1. டி.என்.முரளிதரன்: நீயா? நானா? முகங்கள் 2012 -எஸ்.இராமகிருஷ்ணனின் பரிந்துரைகள்

2. வீடு திரும்பல்: வானவில்+ தொல்லைகாட்சி – சாரு Vs எஸ். ரா, நீயாநானா, பியா இன்னபிற

3. S Ramakrishnan: எனக்குப் பிடித்தவை