Tag Archives: சினிமா

Kochadaiyaan – கோச்சடையான் விமர்சனம்

தமிழராக இருப்பதற்காக இரண்டு பேரை மரியாதையுடன் பாராட்டத் தோன்றும். ஒருவர் சாங் முதற்கொண்டு எல்லாவற்றிலும் பரிபூரணமாய் இயக்கும் சாங்கர் எனப்படும் இயக்குநர் ஷங்கர். இவரோடு ரஜினிகாந்த் இரண்டு படம் செய்திருக்கிறார். இரண்டாவது விமர்சனத்தில் கறார்தன்மையும் அந்த மாதிரி விமர்சனம் தன்னிடம் வராமல் இருக்க செதுக்கும் ஸ்வச்ச எழுத்துக்காரர் ஜெயமோகன். இவருடன் மணிரத்னம் படம் செய்திருக்கிறார்.

அதன் பிறகு “கோச்சடையான்” போன்ற ஆக்கங்களும் தமிழ்ச்சூழலில் இயங்குகின்றன.

கதை மட்டும் வெகு சிரத்தையாக முழுமையாக உருவாக்கி இருக்கிறார்கள். அந்தக் கதைக்கு எந்த மாதிரி காட்சிகள் வைத்தால் அசைப்படம் (அனிமேஷன்) சிறப்பாக இருக்கும் என்பதையும் அறிந்தே இருக்கிறார்கள். ஆனால், அந்த நுட்பம் ஓரளவாவது பார்க்க சகிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறதா என்பதில் அசிரத்தையா? அலட்சியப் போக்கா? அறியாமையா? என விவாதிக்க வைக்கிறார்கள்.

“வேட்டையாடு விளையாடு” படம் பார்த்தவுடன் அமெரிக்கத் தொலைக்காட்சியில் வாராவாரம் ஒளிபரப்பாகும் சி.எஸ்.ஐ. போன்ற எந்த போலீஸ் சீரியலும் நம்பகத்தன்மையிலும் கதாம்சத்திலும் பரபரப்பிலும் “வே… வி.”ட்டை விட பன்மடங்கு சிறப்பாக இருக்குமே என தமிழ்ப்படங்களின் நிலையை எண்ணி வருத்தப்பட வைத்தது. அதே போல் சாதாரண டிவி அனிமேஷன் கூட உயிர்ப்போடும் உள்வாங்க வைக்கும் விவரங்களோடும் சூழலின் தீர்க்கமான துல்லியமான விவரணைகளுடனும் அமைந்திருக்கும். அந்த அளவு தர உந்துதல் கூட இல்லாத அசிரத்தை ஒவ்வொரு ஃப்ரேமிலும் கோச்சடையானில் மின்னுகிறது.

வெறும் ரஜினிகாந்த் பெயரை வைத்து கல்லா கட்டலாம் என மகள் நினைக்கிறார். அதற்கேற்ப அரங்குகளும் அகிலமெங்கும் நிறைகிறது. எவருக்கும் மோசமானப் படைப்பை பார்க்கிறோம் என தர்மசங்கடம் எழவில்லை. படம் உருவாக்கியவருக்கும் அல்ப பவிஷுடன் பழுதான பொருளை சந்தையில் தள்ளுகிறோம் என்னும் மனக்கிலேசமும் எழவில்லை. இப்படியான அரசியல், கலை, விளையாட்டு, சூழலில் இயங்க இந்தியாப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது.

எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஒன்றரைக்கண். அவர்களின் பின்புலத்தில் படு கேவலமான கிராபிக்ஸ். நடுவில் சலனப் பதிவு சல்லியடிப்பு. தீபிகா படுகோனேயை ஒரு கோணத்தில் பார்த்தால் ஐஷ்வர்யா ராயைப் போல் இருக்கிறார். சண்டைக் காட்சியிலும் சிரிக்கும் முகபாவனை. காதலனை சிறையில் போட்டாலும் அதே சிரிக்கும் முகபாவம். அசப்பில் ரானா (ரஜினி கதாபாத்திர)த்தின் தங்கையைப் போலவே இருக்கிறார். இருவருக்கும் ஆடை மட்டுமே வித்தியாசம்.

“அரவான்” ஆதியைப் பார்த்தால் ராம்ராஜ் வேட்டிகள் விளம்பரத்தில் வரும் நட்சத்திரங்கள் போல் முகமற்று சொரணையற்று பாவமற்று பூசி மெழுகின களிமண் சிற்பம் போல் இருக்கிறது. டிஸ்னி படங்களில் வரும் வர்ணஜாலம் வேண்டாம். டோரா போல் கொஞ்சமாவது மினுக்கியிருக்கலாம்.

இவ்வளவு சிரமப்பட்டு சலனப் பதிவு அசைவூட்டப் படம் எடுப்பதற்கு பதிலாக அசல் ரஜினியை வைத்து எடுத்திருந்தாலே படம் பாந்தமாயிருந்திருக்கும்.

தமிழ்நாடு 2014 தேர்தலும் சினிமா நடிகர்களும்

சினிமாவிற்குப் போனால் ஹீரோ துதி பாட வேண்டும். அரசியலுக்குப் போனால் மேடைதோறும் பிரச்சாரம் செய்ய வேண்டும். படைப்பாளியாக இருப்பவர் இவற்றையெல்லாம் பின்பற்றாத விடிவெள்ளி. சிந்தனையாளராக இருப்பவர் கட்சி சார்பற்று, கொள்கை வெறியற்று, கட்டுப்பாடுகளற்று மாற்றுக் கருத்துகளை முன்வைக்கக் கூடியவர். அற்ப பணத்திற்காகவும் பின்னால் கிடைக்கப் போகும் பதவிக்காகவும் வாய் மூடி, கை பொத்தி, அடங்கிப் போகாதவர்.

விடுதலை சிறுத்தைக்கு ரவிக்குமார் இருக்கிறார். திமுக-விற்கு மனுஷ்யபுத்திரன். ஆம் ஆத்மி-க்கு ஞாநி. முக அழகிரிக்கு ரஜினி இருக்கிறார்.

பாலு மகேந்திரா – அஞ்சலி

பாலு மகேந்திரா குறித்து சுஜாதா எழுதியது ஆழமாகப் பதிந்திருப்பதற்கு காரணம், அதில் இருக்கும் ஹீரோயினும் என்னுடைய ஆதர்சம் என்பதால் கூட இருக்கலாம். அதை விட வம்பு என்பதால் இருக்கலாம் என்பதை ஒப்புக் கொள்ள என்னுடைய சுய பிம்பம் மறுக்கிறது.

உதவி இயக்குநர்கள், நண்பர் குழாம், வாத்தியார் சுஜாதா என ஜமாபந்தியான கூட்டம். பாலு மகேந்திரா நடு நாயகமாக வீற்றிருக்கிறார். சுவாரசியமான அரட்டை. திடீரென்று ஹோட்டல் அறை படாரென்று திறக்கப்படுகிறது. மெல்லிய தட்டல் இல்லை; ‘உள்ளே வரலாமா’ அனுமதி கோரல் இல்லை. உள்ளே நுழைந்தவர் எவரையும் கவனிக்கவில்லை. நேரடியாக பாலுமகேந்திராவின் மடியில் சென்று அமர்கிறார். எல்லோருக்கும் சங்கடம். பேச்சு அமைதியாகிறது.

பாலுவும் “நான் இதோ வந்திடறேன். நீ உன் அறைக்குப் போ…” எனக் கெஞ்சுகிறார். அமர்ந்தவரோ அதை பொருட்படுத்தாமல், பாலு மகேந்திராவின் தாடையைக் கொஞ்சுகிறார். காதைக் கிள்ளுகிறார். கன்னத்தில் உரசுகிறார். ஒவ்வொருவராக இருக்கையை விட்டு நெளிந்து கொண்டே விலகத் துவங்குகிறார்கள். இப்பொழுது அலட்டலாக பாலு, “இப்போ இங்கே உனக்கென்ன வேலை? எங்களோட பேசணும்னா அந்தச் சேரை இழுத்துப் போட்டு உட்கார். இங்கிய விட்டு எந்திரி!” என்கிறார். அவளோ கண்டு கொள்ளவேயில்லை.

தர்மசங்கடத்தில் சுஜாதா விடை பெறாமல் வந்ததற்கான காரணம் நடிகை ஷோபா. அஞ்சலி.

பாலு மகேந்திரா பற்றி சுஜாதா | அவார்டா கொடுக்கறாங்க?


0. அ. முத்துலிங்கம்

1. என்னை ‘நான்’ ஆக்கியவர் . . . – சுகா

2. ஜெயமோகன்

3. எஸ் ராமகிருஷ்ணன் – தலைமுறைகள்

முந்தையது – பூவண்ணம் போல நெஞ்சம்

4. இரா முருகன்

5. அகிலா, ஷோபா, மௌனிகா மற்றும் பாலு மகேந்திரா!

மௌனிகாவும் என் மனைவி தான். இந்த இடத்தில் மௌனியைப் பற்றியும், எனக்கும் அவளுக்குமான உறவு பற்றியும் நான் கொஞ்சம் விரிவாகப் பேசவேண்டியிருக்கிறது. மௌனிக்கும் எனக்குமான உறவு ஒரு நடிகைக்கும், டைரக்டருக்குமான படுக்கையறை சம்பந்தப்பட்ட உறவு என்றுதான் பலர் நினைப்பார்கள். ஆனால், உண்மை அதுவல்ல!

ஏறக் குறைய இருபது வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த உறவு அது. இனியும் எதையும் நான் மறைப்பதற்கில்லை. ரொம்பவும் உடைந்துபோன ஒரு தருணத்தில், நான் உங்ககூடவே இருந்திரட்டுமா? என்று கண்கலங்கி நின்ற, அந்த சின்னப் பெண்ணுக்குப் புரியும்படி புத்திமதி சொல்லி, அந்த உறவை நான் முளையிலேயே கிள்ளிப் போட்டிருக்க வேண்டும். ஏனோ, அதை நான் செய்யவில்லை.

எனது ஷோபா பற்றிய ஒரேயொரு பதிவை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொண்டு நிறுத்திக் கொள்கிறேன். ஒரு மழைக் காலைப் பொழுது. குளித்துப், பூஜை முடித்து, அவளுக்குப் பிடித்தமான காட்டன் புடவையும், காலணா சைஸ் பொட்டும், ஈரத் தலையுமாக வந்து உட்கார்ந்தவளைப் பத்திரிகை நிருபர் ஒருவர் பேட்டி கண்டுகொண்டிருந்தார்.

அவர்கள் பேசுவது காதில் விழாத தொலைவில் உட்கார்ந்து நான் எதோ படித்துக்கொண்டிருந்தேன். அன்றைய பேட்டி அடுத்த வாரமே பிரசுரமாகியிருந்தது.

அதில் ஒரு கேள்வி: மற்றவர்கள் ஒளிப்பதிவில் படு சுமாராகத் தெரியும் நீங்கள் பாலு சார் ஒளிப்பதிவில் பேரழகியாகத் தோன்றுகிறீர்களே… எப்படி இது…?

ஷோபா சொல்லியிருந்த பதில்: “மற்றவர்கள் என்னை காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் கொண்டு ஒளிப்பதிவு செய்கிறார்கள். எங்க அங்கிள் என்னைக் காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் இந்த மூன்றோடும் நிறையப் பாசத்தையும் குழைத்து ஒளிப்பதிவு செய்கிறார். அவர் ஒளிப்பதிவில் நான் பேரழகியாக ஜொலிப்பதற்கு இதுதான் காரணம்.”

எடக்குமுடக்கான கேள்வி ஒன்றிற்கு ஷோபா சொல்லியிருந்த ஸ்பொன்டேனியசான பதிலில் தென்பட்ட அவரது அறிவுக் கூர்மை என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.அதே போழ்தில், அவர்மீது நான் வைத்திருந்த அளவுகடந்த பாசத்தைப் பகிரங்கமாக மரியாதைப்படுத்துவதில் அவருக்கிருந்த ஆர்வம் என்னை நெக்கி நெகிழ வைத்தது.

6. சாரு நிவேதிதா

Anandha_Vikadan_Cartoon_Balu_Mahendra_Director_Tamil_Movies_Vikatan_Cap_13_hasifkhan_feb

7. இயக்குநர் பாலா – ஆனந்த விகடன்

பாலு மகேந்திரா இல்லாவிட்டால் நானெல்லாம் எப்பவோ செத்துப் போயிருப்பேன்

என்ன செய்வதெனப் புரியாமல் தவித்தேன். ‘அம்மா இங்க வாங்க…’ என அழைத்தேன். அகிலாம்மாவும் டைரக்டரும் அவர்களுக்குள் பெரிதாகப் பேசிக்கொள்வது இல்லை அப்போது. ‘ந்தா போதும் போதும் உங்க சண்டை… புருஷனும் பொண்டாட்டியும் மொதல்ல நல்லா லவ் பண்ணுங்க…’ என்றதும் டைரக்டர் சிரித்துவிட்டார்.

நாலைந்து நாட்களுக்குப் பிறகு, டிஸ்சார்ஜ் செய்துவிட்டனர். சார் நார்மலாக இருந்தார். சரியாக 10-வது நாள் அதிகாலை 4 மணி… ஏனோ தூங்கப் பிடிக்காமல் அவஸ்தையான ஒரு மனநிலையில் அமர்ந்திருந்தபோது, அகிலாம்மாவிடம் இருந்து போன். பதறியபடி எடுத்தேன்… ‘உடனே ஆஸ்பத்திரிக்கு வாப்பா’ என்றார். வண்டி எதுவும் கிடைக்காமல், ஜெமினி மேம்பாலம் வரை ஓடி, கிடைத்த ஆட்டோ ஒன்றில் தொற்றிப் போய்ச் சேர்ந்தேன்.

Balu_mahendira_Bala_Directors_Tamil_Akila_Films_Movie_Icons

8. படலை

அவள் பெயர் செல்வராணி என்று நினைக்கிறேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும். காதலன் வெளிநாட்டுக்கு அகதியாக போனவன். விசா கிடைக்கவில்லை. வருடக்கணக்காயிற்று. நாடு திரும்பமுடியாது. அவன் கடிதங்கள் வீட்டில் குவிந்துகிடக்கின்றன. தனிமையும் வயதும் பிரிவையும் தாண்டி தாபத்தை தூண்டுகிறது. காமத்துப்பாலில் பிரிவித்துயரால் வருகின்ற அத்தனை உடல் உபாதைகளும் செல்வராணிக்கு ஏற்படுகிறது. கட்டுப்படுத்த முடியவில்லை.

9. பிபிசி:

1970களில் வெளியான மலையாளப் படமான ” நெல்லு”வில் முதன் முதலில் ஒளிப்பதிவாளராக வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படம் அவருக்குக் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற விருதை பெற்றுத்தந்தது.
பின்னர் பல மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பாலு மகேந்திராவுக்கு, கன்னடப் படமான “கோகிலா”வின் மூலம் தேசிய விருதும் கிடைத்தது.

தமிழ்த் திரையுலகுக்கும் ஜே.மகேந்திரனின் “முள்ளும் மலரும்” படம் மூலம் அறிமுகமாகிய பாலு மகேந்திரா, 1979ல், தனது இயக்கத்தில் ” அழியாத கோலங்கள்” படத்தைத் தந்தார்.

பின்னர் தெலுங்கு திரைப்படங்களிலும் பணியாற்றிய பாலு மகேந்திரா, தமிழ்த் திரையுலகில், ‘மூடுபனி’, ‘மூன்றாம் பிறை’ ‘ நீங்கள் கேட்டவை’, ‘ரெட்டைவால் குருவி’, ‘வீடு’ ‘ மறுபடியும்’ , ‘சதி லீலாவதி’ போன்ற படங்களைத் தந்தார்.

அவரது படமான ‘மூன்றாம் பிறை’ சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதையும் அவருக்குப் பெற்றுத்தந்தது. மேலும் அந்தப் படம் ஹிந்தியிலும் ‘சத்மா’ என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

10. வழக்கு எண் 18/9 :: பாலாஜி சக்திவேல் பாராட்டு

11. தலைமுறைகள் – சினிமா விமர்சனம் :: சினிமா விகடன்

12. தருமி

Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 1

Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 2

Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 3

Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 4

Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 5

Director Balu mahendra talking about Tamiliam Subas`s short film Vanni Mouse on Makkal TV “Ten Minute Stories”

Balu Mahendra – An Era: STAR Vijay

Balu Mahendra – The Legendary Era Of Indian Film: Puthu Yugam TV

Balu Mahendra about Vaali -Vaali Birthday Special

New Year Special : Thalaimuraigal with Director Balu Mahendra

Director Balu Mahendira Special In Rewind Ep-64 Dt 06-10-13

Thalaimuraigal Tamil Movie Press Meet | Balu Mahendra


இயக்குனர் பாலு மகேந்திரா – நினைவுக் கூட்டம் நாள்: 23-02-2013, ஞாயிறு
இடம்: கோல்டன் ஜூப்ளி ஆடிட்டோரியம், சென்னை பல்கலைக் கழக மெரினா வளாகம், வள்ளுவர் சிலை எதிரில், எழிலகம் அருகில்.

நேரம்: மாலை 5.30 மணிக்கு.

நினைவை பகிர்பவர்கள்:

  1. கவிஞர் & ஆவணப்பட இயக்குனர் ரவி சுப்பிரமணியம்
  2. ஆவணப்பட இயக்குனர் அம்ஷன் குமார்
  3. எழுத்தாளர் சந்திரா
  4. எழுத்தாளர் தமயந்தி
  5. தயாரிப்பாளர் UTV தனஞ்செயன்
  6. பத்திரிகையாளர் ஞாநி
  7. எழுத்தாளர் பவா செல்லத்துரை
  8. எழுத்தாளர் மாலன்
  9. ஒவியார் ட்ராட்ஸ்கி மருது
  10. எழுத்தாளர் சா. கந்தசாமி
  11. இயக்குனர் தாமிரா
  12. எழுத்தாளர் & நடிகர் வ.ஐ.ச. ஜெயபாலன்
  13. நடிகை ரோகினி
  14. எழுத்தாளர் பிரபஞ்சன்
  15. நடிகர் நாசர்
  16. எழுத்தாளர் கவுதம சித்தார்த்தன்
  17. ஒளிப்பதிவாளர் (திரைப்படக் கல்லூரி) ஜி.பி. கிருஷ்ணா
  18. பத்திரிகையாளர் அசோகன் அந்திமழை
  19. ஒளிப்பதிவாளர் சி.ஜெ. ராஜ்குமார்
  20. ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கில் ரவிசங்கர்
  21. எழுத்தாளர் கே.வி.ஷைலஜா
  22. இயக்குனர் வஸந்த்
  23. கல்வியாளர் எஸ்.கே.பி கருணா
  24. கலரிஸ்ட் சிவராமன் (பிரசாத் லேப்)
  25. எடிட்டர் லெனின்
  26. ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வர்
  27. இயக்குனர் வெற்றிமாறன்
  28. பாடலாசிரியர் ந. முத்துக்குமார்

ஒருங்கிணைப்பு: கன்னடத் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் & தமிழ் ஸ்டுடியோ & வம்சி புக்ஸ்


Kamal Haasan’s tribute to Balu Mahendra | Business Line:

Letter_Kokila_Moonraam_Pirai_kamal-on-balumahendra


Balu Mahendra: A fascinating journey in filmdom – The Hindu

The Balu Mahendra I knew – The Hindu

Naturalism was his signature

Master craftsman who was also a great teacher

In a first, Balu Mahendra faces the camera

ராஜா ஆண்டாலும்: Gangai Amaran Rocks!

Never knew that “உறவுகள் தொடர்கதை” in “அவள் அப்படித்தான்” was written by ஜீனியஸ், மேதை என்னும் தோரணை இல்லாத கங்கை அமரன்.

முள்ளும் மலரும் படத்தின் ‘ராமன் ஆண்டாலும்’ பாடலை அசலாக எழுத இருந்தவர் கண்ணதாசன்.

அவரும் “வாழ்க்கையெனும் வட்டத்தில் விட்டதை வெல்லும் காலமும் மறக்கும் வேகமும் புத்தனாகினால் கிடைக்குமோ” என்பது போல் எழுதி வைத்திருக்கிறார். அதைப் படித்த மகேந்திரன், “தண்ணியைப் போட்டுட்டு மிகக் குறைந்த ஏட்டறிவே கொண்ட ‘காளி’ இப்படி தத்துவார்த்தமாகப் பாட மாட்டானே… வாய்க்கு வந்ததை கோபமாக சொல்லவேண்டும்.” என்கிறார்.

கண்ணதாசனைக் கூப்பிட்டு மாற்றச் சொல்ல அவகாசமில்லை. அப்போது எழுதிய எளிய வரிதான்

“ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான்தான்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் கேக்குற வரத்தை கொடுப்பேன்
கேக்குற வரத்தை கேட்டுக்கடா”

கல்லுக்குள் ஈரம்: திரைப்பட விமர்சனம்

‘கல்லுக்குள் ஈரம்’ பார்த்த போது ஏழு வயசு. இந்தப் பக்கத்தில் அம்மாவும் அந்தப் பக்கத்தில் அண்ணாவும் அமர்ந்திருப்பார்கள். தேவி காம்ப்ளெக்ஸா, வெலிங்டனா, சித்ராவா என நினைவில் இல்லை. இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு 21ல் உட்கார்ந்திருக்கும் தூக்கக் கலக்கத்தில் இப்படி சேர்த்து வைக்காமல் சாகடிச்சுட்டாங்களே என்பது மட்டுமே தோன்றியது.

சினிமாகாரர்களை கொஞ்சம் சொல்வதால் மனம் இன்றும் ‘க.ஈ.’ படத்தை நினைவில் வைத்திருக்கவைக்கிறதோ? மற்ற பாரதிராஜா எடுத்த, தற்போதைய அமீர் / சசிகுமார் வகையறா எடுக்கும், மதுரைப் பக்கத்தில் உள்ள டவுன் பஸ் மட்டுமே நிற்கும் சந்து பொந்துகளை முதலில் காட்டியதால் நிழலாடுகிறதோ? மனோபாலா, ரங்கராஜன், மணிவண்ணன் போன்ற பிற்கால பிரபலங்களின் கன்னி தொடக்கம் இங்கே இருந்திருக்குமே?

தெரியவில்லை. எனவே, மீண்டும் பார்த்தேன்.

‘முதல் மரியாதை’யின் இளவட்டக் கல் இருக்கிறது. அந்தப் படத்தில் ஜெயிலில் இருந்து திரும்பும் சத்யராஜ் போலவே பாசமிகு மாமன் (சேனாதிபதி?) இருக்கிறார். கவுண்டமணிக்கு மிக விரிவான கதாபாத்திர உருவாக்கம். ’க.ஈ.’ வந்ததற்கு அடுத்த ஆண்டு வந்த பாலைவனச் சோலை கும்பலில் இருந்து இதில் உடல் ஊனமுற்றவராக சந்திரசேகரும், பள்ளி ஆசிரியராக ஜனகராஜும் இருக்கிறார்கள்.

மனதிற்கு நெருக்கமான கதை. திரைப்பட கதாநாயகனை கணவனாக அடைய விரும்பும் சினிமா மோக மனம் கொண்ட விஜயசாந்தியும் டீக்கா டிரெஸ் போட்டிருக்கும் ஆங்கிலம் பேசும் அடாவடி ஆதர்ச இயக்குநரை விரும்பும் அருணாவும் வசிக்கும் கிராமம். நாள் முழுக்க உழைத்து, அரை வயிற்றுக்கு சாப்பிட்டு, கோலமிக்க ஆறும், ஓய்வெடுக்க மலைமுகடுகளும், அடர்த்தியான காடுகளும் கொண்ட கனவு கிராமம். முனிக்கு படையல் போட்டதில் தெய்வ குற்றமும், அடுத்தவர் வாழ்க்கையை மெல்வதில் சுகமும் காணும் நெருக்கமான உறவு வேண்டாமலேயே உங்களைத் துரத்தும் கிராமம்.

படத்தில் உள்ள அத்துணை கதாபாத்திரங்களை ஆழமாக உலவவிடவில்லை. மாடன் வழிபாட்டை விரிவாகக் காட்டவில்லை. உள்ளூர் பெண்ணொடு ”டைரக்டர்” இப்படியெல்லாம் நடந்து கொள்வது சாத்தியமேயில்லை. இதற்கு முந்தைய ஆண்டு வந்த “புதிய வார்ப்புகள்” போல் அசல் தெருக்கூத்தைக் காணமுடியவில்லை, என்றெல்லாம் விமர்சிக்கலாம்.

ஆனால், இரண்டு மணி நேரத்தில் கட் அவுட் மாந்தர்களையும் தோட்டி குடும்பத்தையும் இன்று கூட யாரும் இவ்வளவு இயல்பாக கோர்க்கவில்லை என்பதால் சபாஷ் போட வைக்கிறது. அப்படி கோர்த்தால் என்ன ஆகும் என்பதை நிதர்சனமாக முடிப்பதால் முக்கியமாகவே நிற்கிறது. எல்லாவற்றையும் விட ஊரில் இருப்போர் வாழ்க்கையையும் வருகை தருவோர் இயல்பையும் உணர்த்துவதால் இன்றும் விருப்பத்துடன் ரசிக்க வைக்கிறது.

John Abraham’s Madras Cafe – Movie Review

அசல் தலைப்பு: மெட்ராஸ் கஃபே
வைத்திருக்க வேண்டிய தலைப்பு: ராஜீவ் காந்தியைக் கொன்றதை ஏன் இந்தியாவால் தடுக்க முடியவில்லை என்பதற்கான சப்பைக்கட்டு

சான் ஓஸே பக்கம் போனீர்கள் என்றால் மெட்ராஸ் கஃபே நிச்சயம் எட்டிப் பாருங்கள் என்பார்கள் பே ஏரியாவசிகள். இந்தியா – இலங்கை – ஈழ முக்கோண பிரச்சினை அறிவதற்கு மெட்ராஸ் கஃபே உதவும்.

ராஜீவ் காந்தி இறந்ததற்காக நாடே வருத்தப்படுகிறது. ஆனால், எண்ணற்ற தனி மனிதர்களின் சொந்த இழப்புகளை பிரச்சார தொனியின்றி போகிற போக்கில் இந்தப் படம் இயல்பாக முன்வைப்பது பிடித்திருந்தது. அன்னிய நாட்டின் அமைதிக்காக செல்லும் தூதுவர் ஈ.பி.ஆர்.எல்.எஃப்.புக்கும் புலிகளுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு சாவது; துப்பறிபவர்களின் குடும்பம் சீரழிவது போன்றவை போகிற போக்கில் வந்து போகின்றன.

படம் என்றால் வில்லன் இருக்கவேண்டும். இதுவோ கிட்டத்தட்ட ஆவணப்படம். விறுவிறுப்பாக சம்பவங்களைக் கோர்த்து, நடுநடுவே லட்சணமான மனைவியை ஊறுகாய் போல் தொட்டுக் கொண்ட சாகசப்படம். சுட்டுவிரல் நீட்டி தப்பு செய்தவர்கள் இவர்கள்தான் என்று குற்றஞ்சாட்டாமல், என்ன நடந்தது, எப்படி நடந்தது, எப்பொழுது நடந்தது என்பதை மட்டும் விவரிக்கிறார்கள்.

இலங்கையா… அவர்கள் 1983 படுகொலைகளை நிறைவேற்றினார்கள்.
விடுதலைப் புலிகளா… அவர்கள் நிறைய முதுகில் குத்தல்களும் கண்மூடித்தனமான கொள்கைகளும் கொண்டிருந்தார்கள்.
இந்திய ராணுவமா… மேலிடத்து உத்தரவை சிரமேற்கொண்டு பணிந்தார்கள்.
உளவுத்துறையா… எவர் யாருக்கு விசுவாசமாக இருந்தார்கள் என்பது அவர்களே அறியாமல் இயங்கினார்கள்.
இந்தியாவா… எந்த இந்தியர் என்பதைப் பொறுத்து விதவிதமாக மனிதருக்கே உரிய மாபாதகங்களுடன் நடந்துகொண்டார்கள்.
ராஜீவ் காந்தியா… யேசுவிற்குப் பிறகு உலகத்தில் உதித்த மகான். புத்தர் வழியில் அகிம்சையை போதித்து சென்னைக்கு வந்தவர். மகாத்மாவிற்குப் பிறந்த இந்தியாவில் உதயமான உத்தமர்!

படத்தின் குறைகள்? சென்னைத் தமிழுக்கும் ஈழத்தமிழுக்கும் வித்தியாசம் காட்டவில்லை என்று பொங்கலாம். மட்டக்களப்பு பிரதேசங்களையும் யாழ்ப்பாணத்தையும் குழப்புகிறார்கள் எனலாம். ஜான் ஆபிரகாம் படகில் போகும்போது சவரம் செய்த வழவழ முகத்துடன் பயணிக்கிறார் என விசனிக்கலாம். எனினும், அந்த நிருபர் ஜெயா கதாபத்திரத்தை அனிதா பிரதாப் போல் கோர்த்து வைக்காத துரோகத்தை மன்னிக்கவே முடியாது. அந்த ஒரு சங்கதிக்காகவே மேதகு தலைவரின் கட்டை வேகாது!

படத்தில் எல்லா மொழியும் பேசுகிறார்கள். நடுவே தமிழக திராவிட கட்சித் தலைவரை விளித்து, ‘தலைவா… பணம் வந்துடுச்சு! காரியத்த முடிச்சுடலாம்!’ போன்ற பேச்சுகள் பின்னணியில் ஓடுகின்றன. பொருளியல் வரலாற்று அறிவும், திரைமொழியின் நுணுக்கமான பார்வையும், பல்வேறு அரசியல்களை கிரகிக்கும் சக்தியும் கிடைக்கப் பெற்றவர்கள் மட்டுமே இந்தப் புலனாய்வுப் புனைவை புரிந்து கொண்டு பார்க்க இயலும்.

நல்ல வேளை… படம் எல்.டி.டி.ஈ. பிரபாகரன் இறந்த பிறகு வந்திருக்கிறது. இல்லையென்றால், கொஞ்ச நாளில் ஜான் ஆபிரஹாம் போட்டுத் தள்ளப்பட்டிருப்பார்.

State of Tamil Cinema Reviewers: Movies vs Books

கடந்த பதினைந்து வருடங்களாக பட அறிமுகங்களை எழுதுபவன் + இணையத்திலும் பத்திரிகைகளிலும் விமர்சனங்களை அவ்வப்போது வாசித்தும் வருபவன் என்ற முறையில் எனக்குப் பட்டது….

* பெரும்பலான சமயம் படம் வெளியானவுடன் டாரெண்ட் தரவிறக்கத்தில் படம் பார்ப்பதால், திரையரங்கின் மன ஒருமை கிடைப்பதில்லை. அதை விடக் கொடுமை, ஆங்கிலப் படத்திற்கு ப்ளூ ரே ப்ரிண்ட்டும் தமிழ்ப்படங்களுக்கு திருட்டு விசிடியும் பார்க்க வேண்டும் என்னும் மனப்பான்மை.

* விகடன் விமர்சனம் போல் மார்க் போட்டு வாடிக்கை. எல்லாப் படத்திற்கும் மதிப்பெண் மட்டுமே வழங்கத் தெரியும்.

* திக்குவாய், குருடி போன்ற குறைபாடுகளை நல்ல நடிப்பு என்றும் ரஜினி, விஜய் படங்களை மசாலா என்றும் வகைப்படுத்துவோம்.

* கேமிராவில் ஒளிப்படம் எடுப்பதாலும், நாலைந்து முறை குழந்தைகள் நிகழ்ச்சியை வீடியோ எடுத்ததாலும் சினிமா எடுக்கும் அனைத்து வித்தையும் தெரிந்ததாக நினைக்கிறோம்.

* தொலைக்காட்சி சீரியல் (என்னைப் போல் ஆசாமிகள் தூர்தர்ஷன் நாடகம்) பார்த்தே பழக்கம். திரைப்படங்களிலும் அதே வாசனை எதிர்பார்க்கிறோம்.

* புத்தகத்திற்கு அறிமுகம் எழுதுவதை விட சினிமாவிற்கு அறிமுகம் கொடுப்பது எளிதானது. உதாரணமாக இயக்குநர் பாலா போன்ற புகழ்பெற்ற எழுத்துலக ஜாம்பவானை விமர்சிக்க நிறைய திராணி வேண்டும். ஆனால், ‘பாலா’ போன்றவரை விமர்சிப்பதால் சாதாரண மனுஷனாக அடையாளம் காட்டிக் கொள்ளலாம். இன்னும் விரிவாகச் சொன்னால் ஆயிரம் பக்க புத்தகத்தை தாக்கி எழுதினால் இலக்கியவாதியாக ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. ‘கடல்’ படத்தையும் பரதேசியையும் விமர்சித்தால் humble ஆளாகி விடலாம்.

* மோசமான படத்தைப் பாராட்டியும், சுவாரசியமான படைப்பை மட்டம் தட்டியும் எழுதினால் மட்டுமே கவனம் கிடைக்கிறது.

* சென்ற கால சினிமாவில் இருந்து வித்தியாசமாய் நின்று தமிழ்த் திரைப்படங்களை எது முன்னகர்த்துகிறது என்று கவனித்து பகிர்வதை விட, அந்தத் திரைப்படங்களின் கதையை வைத்து மன்றாடுவது எளிது.

என்னுடைய ஆண்டிராய்ட் போனிற்கு புதிதாக ஏதாவது நிரலியை நிறுவிக் கொண்டே இருப்பேன். சில சமயம் அதைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவேன். சில சமயம் உடனடியாக நீக்கிவிடுவேன். அது எனக்கு எப்படி உபயோகமாகிறது, ஏற்கனவே இருக்கும் மற்ற அப்ளிகேஷன்களில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதைப் பொறுத்து என் முடிவு அமைகிறது. வைரஸ் போன்ற தாக்குதல் கொடுத்தால் மட்டுமே, கூகுள் கடை சென்று மட்டகரமான தரமதிப்பீடு தருகிறேன்.

சினிமாவிற்கும் அதே அளவீடு பயன்படுத்தலாம். நோய்க்கிருமி போல் கலையை கீழே இழுக்கிறதா? அல்லது தனிப்பட்ட முறையில் உபயோகமான விதத்தில் முன்னேற்றுகிறதா?

Paradesi – FIR: Quick Review

பரதேசி பாலாவின் படம். டிஸ்னி படம், ஜேம்ஸ் பாண்ட் படம், குவெண்டின் டாரெண்டினோ படம் என்று சொல்வது போல் பாலாவின் படம் பார்த்து கொஞ்ச நாளாச்சு.

ஆறு படம்தான் செய்திருப்பவருக்கு டிரேட்மார்க் இருக்குமா?

கடவுள் நம்பிக்கையை வைத்து ஏமாற்றுபவரை நையாண்டி செய்வது; ஒடுக்கப்படுபவர்களின் பரிதாப நிலையை கதைக்களானாக்குவது; புதிய முகங்களை கதாபாத்திரங்களாக்குவது; இளகிய மனம் படைத்தோரையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சமரசமில்லா காட்சியாக்குவது… இவை இயக்குநர் பாலா பட முத்திரைகள்.

வலிந்து திணிக்கப்பட்ட நகைச்சுவை; சிம்ரன் போன்ற அயிட்டம் பாடல்; இவை எல்லாம் முந்தையவற்றில் துருத்தி நிற்கும்; இங்கே காணோம். ‘பரதேசி’யின் ஒவ்வொரு பாடலையும் திரையில் காண்பித்த விதத்தில் பாலு மகேந்திராவின் கோர்வையும் மணி ரத்னத்தின் செதுக்கலும் ஒருங்கே கிடைக்கின்றன.

எஸ் ராமகிருஷ்ணன் வசனம் எழுதும் படங்களில் சாதாரண தமிழ்ப்பட எழுத்து மட்டுமே தென்படும். ஜெயமோகன் சம்பந்தப்பட்ட படங்களில் மொழி ஆக்கிரமித்து நிற்கும். இரா முருகன் படங்களில் டைட்டிலில் மட்டுமே காணப்படுகிறார். ’பரதேசி’ நாஞ்சில் நாடனோ, “யாருங்க வசனம்” என்று விசாரிக்க வைக்கிறார்.

சமீபத்திய எதிர்பார்ப்புகளான ‘கடல்’ பல கோணங்களில் சென்று அலைபாய்ந்து மூழ்கடித்தும், ‘விஸ்வரூபம்’ சர்ச்சைகளில் மட்டும் பிரமிக்க வைத்தும் ‘நீதானே என் பொன் வசந்தம்’ சாக்லேட் கல்லூரி காதலை மறுஒளிபரப்பியும் குண்டுசட்டி கோடம்பாக்கத்தினுள் ஆமை ஓட்டிய நேரத்தில், உருப்படியான தமிழ் சினிமாவிற்கான அடி பரதேசி.

Designer Fashion houses: Indian Art vs US Capital Business

முதிய வயதினரின் குணாதிசயத்தை சொல்லும் இரண்டு படம் பார்த்தேன். அமெரிக்க புருஷ லட்சணத்தின் கோர முகத்தையும் ஏழை இந்திய கோதையின் சின்னச் சின்ன ஆசைகளையும் முன்னிறுத்தினார்கள்.

மேற்கத்திய உலகின் ஆண்மகனை பிரதிநிதித்துவப்படுத்தும் Arbitrage முதற் படம். சாதித்துக் காட்டிய தலைமகனின் கதை. எப்பொழுதும் வெற்றியே பார்த்தவன், தடுமாறாமல் எப்படி பார்த்துக் கொள்கிறான்? பெரிய பணக்காரர்களிடம் இன்றைய காலம் வரை, எவ்வாறு பொருட் பெண்டிரை வைத்துக் கொள்வது சாதாரணமாக இருக்கிறது? பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்பும், பெர்னீ மாடாஃப் தகிடிதத்தங்களுக்குப் பிறகும் கூட, இன்னும் பெரிய நிதி நிறுவனங்களில் கணக்கு வைப்பில் கண்துடைப்பு எங்ஙனம் நிறைவேறுகிறது?

மஹாராஷ்டிராவின் மலைகிராம சொகுசு பங்களாவில் வேலை பார்ப்பவர் ’கங்குபாய்’. இளவயதிலேயே கணவனை எழுந்தவர். ‘The Help’ கதையின் நாயகிகள் போல் அடிமை வாழ்வு. ஆண்டாண்டு காலமாக, தலைமுறை தலைமுறையாக குழந்தைகளைப் பேணி பராமரித்து வளர்த்து விட்டுக் கொண்டேயிருப்பவள். தினசரி இரண்டு வேளை கஞ்சி. எதிர்பார்ப்பு இல்லாத அன்றாடம்.

ஆரெம்கேவியின் ஐம்பதாயிரம் வண்ணம் கொண்ட பட்டுப் புடைவை போல் இல்லாமல், கலைநயம் நிறைந்த கதையோவியங்கள் கொண்ட சரிகையும் வேலைப்பாடும் மின்னும் பட்டுப் புடவையை பார்க்கிறார். ஆசைப் படுகிறார். டி.என்.எஸ்.சி. வங்கி விளம்பரத்தின் குருவிகள் போல் சிறுக சிறுக சேமித்து வாங்கியும் விடுகிறார்.

டிசைனர் கடைகள் எவ்வாறு இயங்குகின்றன? அசலான பேஷன் ஷோக்கள் எப்படி இருக்கும்? கொஞ்சம் உள்மாந்தரம் கிடைக்கிறது.

H&M, Forever 21, Zara என்று கோடிகளில் புழங்கும் அமெரிக்க ஆடை பாணிகள் சாதாரணருக்கும் எளிதாக கிடைக்கிறது. இந்திய வடிவமைப்பாளர்கள் இவ்வாறு அணுகக் கூடிய விலைகளில் தங்கள் உடை அலங்காரங்களை அமைப்பதில்லை. இந்தியாவில் அரசர்களுக்கு மட்டுமே நவநாகரிகம் சாத்தியம்.

ராஜசபையில் பகட்டாக புதுப்பாங்குகளை அணிவது அசோகர் கால பாரதத்தில் இருந்து வந்தாலும், தையற்காரி என்று சில்லறைக் காசு மட்டுமே சாத்தியம் என்கிறது ’கங்குபாய்’. அமெரிக்காவில் எல்லாமே வியாபாரம். இந்தியாவில் அது கலை வடிவம்.

சஞ்சலம் நீக்க சிறந்த உபாயம்: ரஜினியா? கமலா?

மன அழுத்தம் நீங்க நான் மூன்று உபாயங்களை பின்பற்றுகிறேன். எல்லோரும் சொல்கிற உடற்பயிற்சியை விட வீட்டை சுத்தம் செய்கிற பராமரிப்பு. அமைதியான இசையின் பின்னணியில் தியானம் என்பதை விட நிசப்தமான புத்தக அறையில் பூனையுடன் தஞ்சம். உளவியலாளரிடம் பகிர்வதை விட நாலு ஃபேஸ்புக் கருத்தாளர்களுக்கு கேள்வியாக பதில் போடுவது.

ரஜினி படம் பிடிக்குமா? கமல் படம் பிடிக்குமா? என்னுடைய இடையீடு சுணக்கங்களை களைவதற்குப் பின்னால் இந்தக் காரணமும் இருக்கிறது.

’நான் சிவப்பு மனிதன்’ அதிரடியாக இறங்குவார். ‘ராமன் ஆண்டாலும்’னு வாழ்க்கையை கொண்டாடுவார். ’நல்லவனுக்கு நல்லவ’னாக நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்துவார். ’பில்லா’ மாதிரி உளவாளியாக சென்றால் கூட ஆக்‌ஷன் இருக்கும்.

அந்த ஜென்மத்திலேயே பழிவாங்காமல் இன்னொருவரை எதிர்நோக்கும் ‘கல்யாணராமன்’. சிம்லா ஸ்பெஷல், உயர்ந்த உள்ளம் எல்லாமே நம்பக்கூடிய முகங்களின் பிரதிபலிப்பு. ’வாழ்வே மாயம்’ போல் உண்மையைப் போட்டு உடைக்க சஞ்சலப்படும் மனிதன். சகல கலா வல்லவன் முதல் விஸ்வரூபம் வரை கமல்ஹாசன் ஒற்றராக செல்வது கூட லாஜிக் நிறைந்ததாக இருக்கும்.

கமல் கதாபாத்திரங்கள் சாதுவானவை. நான் அன்றாடம் எதிர்கொள்கிறவர்கள். தொண்ணூறு சதவிகிதத்தினர் இவ்வாறே தங்கள் குணாதிசயங்கள வைத்திருக்கிறார்கள்.

ரஜினி நட்சத்திரம். கண்டிப்பு நிறைந்தவர். வாட்டத்தைப் போக்க நம்ப இயலாதவற்றை சாதிக்கிறார். என் கலக்கங்களை நீக்க முடியும் என உறுதியான உற்சாகம் தருகிறார்.

நீங்க ரஜினி விசிறியா? கமல் ஃபேனா?