அசல் தலைப்பு: மெட்ராஸ் கஃபே
வைத்திருக்க வேண்டிய தலைப்பு: ராஜீவ் காந்தியைக் கொன்றதை ஏன் இந்தியாவால் தடுக்க முடியவில்லை என்பதற்கான சப்பைக்கட்டு
சான் ஓஸே பக்கம் போனீர்கள் என்றால் மெட்ராஸ் கஃபே நிச்சயம் எட்டிப் பாருங்கள் என்பார்கள் பே ஏரியாவசிகள். இந்தியா – இலங்கை – ஈழ முக்கோண பிரச்சினை அறிவதற்கு மெட்ராஸ் கஃபே உதவும்.
ராஜீவ் காந்தி இறந்ததற்காக நாடே வருத்தப்படுகிறது. ஆனால், எண்ணற்ற தனி மனிதர்களின் சொந்த இழப்புகளை பிரச்சார தொனியின்றி போகிற போக்கில் இந்தப் படம் இயல்பாக முன்வைப்பது பிடித்திருந்தது. அன்னிய நாட்டின் அமைதிக்காக செல்லும் தூதுவர் ஈ.பி.ஆர்.எல்.எஃப்.புக்கும் புலிகளுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு சாவது; துப்பறிபவர்களின் குடும்பம் சீரழிவது போன்றவை போகிற போக்கில் வந்து போகின்றன.
படம் என்றால் வில்லன் இருக்கவேண்டும். இதுவோ கிட்டத்தட்ட ஆவணப்படம். விறுவிறுப்பாக சம்பவங்களைக் கோர்த்து, நடுநடுவே லட்சணமான மனைவியை ஊறுகாய் போல் தொட்டுக் கொண்ட சாகசப்படம். சுட்டுவிரல் நீட்டி தப்பு செய்தவர்கள் இவர்கள்தான் என்று குற்றஞ்சாட்டாமல், என்ன நடந்தது, எப்படி நடந்தது, எப்பொழுது நடந்தது என்பதை மட்டும் விவரிக்கிறார்கள்.
இலங்கையா… அவர்கள் 1983 படுகொலைகளை நிறைவேற்றினார்கள்.
விடுதலைப் புலிகளா… அவர்கள் நிறைய முதுகில் குத்தல்களும் கண்மூடித்தனமான கொள்கைகளும் கொண்டிருந்தார்கள்.
இந்திய ராணுவமா… மேலிடத்து உத்தரவை சிரமேற்கொண்டு பணிந்தார்கள்.
உளவுத்துறையா… எவர் யாருக்கு விசுவாசமாக இருந்தார்கள் என்பது அவர்களே அறியாமல் இயங்கினார்கள்.
இந்தியாவா… எந்த இந்தியர் என்பதைப் பொறுத்து விதவிதமாக மனிதருக்கே உரிய மாபாதகங்களுடன் நடந்துகொண்டார்கள்.
ராஜீவ் காந்தியா… யேசுவிற்குப் பிறகு உலகத்தில் உதித்த மகான். புத்தர் வழியில் அகிம்சையை போதித்து சென்னைக்கு வந்தவர். மகாத்மாவிற்குப் பிறந்த இந்தியாவில் உதயமான உத்தமர்!
படத்தின் குறைகள்? சென்னைத் தமிழுக்கும் ஈழத்தமிழுக்கும் வித்தியாசம் காட்டவில்லை என்று பொங்கலாம். மட்டக்களப்பு பிரதேசங்களையும் யாழ்ப்பாணத்தையும் குழப்புகிறார்கள் எனலாம். ஜான் ஆபிரகாம் படகில் போகும்போது சவரம் செய்த வழவழ முகத்துடன் பயணிக்கிறார் என விசனிக்கலாம். எனினும், அந்த நிருபர் ஜெயா கதாபத்திரத்தை அனிதா பிரதாப் போல் கோர்த்து வைக்காத துரோகத்தை மன்னிக்கவே முடியாது. அந்த ஒரு சங்கதிக்காகவே மேதகு தலைவரின் கட்டை வேகாது!
படத்தில் எல்லா மொழியும் பேசுகிறார்கள். நடுவே தமிழக திராவிட கட்சித் தலைவரை விளித்து, ‘தலைவா… பணம் வந்துடுச்சு! காரியத்த முடிச்சுடலாம்!’ போன்ற பேச்சுகள் பின்னணியில் ஓடுகின்றன. பொருளியல் வரலாற்று அறிவும், திரைமொழியின் நுணுக்கமான பார்வையும், பல்வேறு அரசியல்களை கிரகிக்கும் சக்தியும் கிடைக்கப் பெற்றவர்கள் மட்டுமே இந்தப் புலனாய்வுப் புனைவை புரிந்து கொண்டு பார்க்க இயலும்.
நல்ல வேளை… படம் எல்.டி.டி.ஈ. பிரபாகரன் இறந்த பிறகு வந்திருக்கிறது. இல்லையென்றால், கொஞ்ச நாளில் ஜான் ஆபிரஹாம் போட்டுத் தள்ளப்பட்டிருப்பார்.