Tag Archives: Literary

டேய்… அவனா நீ

என்னோட பள்ளித் தோழனை 96 படம் மாதிரி இருபதாண்டு கழித்து பார்த்த போது நடந்த உரையாடல்.

“பொழுதுபோக்கிற்கு என்னடா பண்றே!?”

“எழுத்தாளரா இருக்கேண்டா…”

“அச்சச்சோ… உங்கிட்ட கவனமா இருக்கணுமே! எத எடுத்தாலும் ஆராஞ்சுண்டு, எதிலும் குத்தம் கண்டுபிடிச்சுண்டு, எல்லாவத்தையும் காமாலக் கண்ணோடு பாக்கிறவனா நீயு!”

“அப்படியெல்லாம் பொத்தாம் பொதுவில் சொல்ல முடியாதுடா! அலுவலில் கூட இப்படி பாக்கிறவங்கள QAனு சொல்லி மரியாதையா டெஸ்ட்டர், குவாலிடி அஷுயூரன்ஸ், பிசினஸ் அனலிஸ்ட்னு சொல்லிண்டு இருக்கோமே?”

“என்ன வேணா சொல்லிக்க மச்சீ… நீங்க எல்லாம் கிட்டத்தட்ட சைக்கோ! வாழ்க்கைய எப்படி அனுபவிக்கணும்னு தெரியாம திண்டாடற ஜென்மங்கதான் எழுத்தாளராத் திரியுது!”

”டேய்… ஏண்டா இந்த கொலவெறி?”

“நான் ஃபேஸ்புக்கில் ஆரம்பிச்சு அந்துமணி வர பாத்துட்டேண்டா! எல்லோரும் கோணப் பார்வை பாக்கிறேன்… என்னது கேவலமாப் போகும்னு யோசிக்கிறேனு பைத்தியமா ஆக்கி; சகாக்களை பயமுறுத்தி; பார்க்காத நீலிய பொண்டாட்டியா ஆக்கி; அமாவாசக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சுப் போட்டு தீவிரவாதம் துவங்கி டைவோர்ஸ் வரை… நம்ம சிக்கலுக்கு சிரிப்புத் திருடன் சிங்காரவேலுவாக சித்தரிக்க வேண்டியவங்க — சாஹித்ய அகாடெமி ஆசையில் சின்னாபின்ன அச்சுபிச்சு சித்தாளாக சீரியசாக்கி வைக்கிறாங்க!”

”அதுதாண்டா… அடையாள நெருக்கடி. உனக்கு என்ன பிரச்சினை என்று அறிந்து கொள்ள உதவ நல்ல கட்டுரைகளையும் கதைகளையும் என்னால் பரிந்துரைக்க முடியும்.”

“வேணாண்டா…”

“வெறுமனே சூப்பர் சிங்கர், பிக் பாஸ், ரீல்ஸ் பார்க்காம, சமூகச் சிக்கல்களையும் குடும்பப் பிரச்சினைகளையும் தனி மனித உரிமைகளையும் உணர, அறிய, புரிந்து கொள்ள… நாங்க வேணும்!”

“வேணாண்டா…”

“பொது புத்தி, திரள் மந்தை, கூட்ட மந்தி அறிவிலித்தனத்தில் இருந்து அறிவார்ந்த தளத்திற்கு மாற்றும் கடமை எனக்குண்டு தோழா! தமிழ்ச் சமூகமே ராம்ஜி யாஹூ ஆக மாறும் போது பத்ரித்தனமாக நாங்கள் தேவை”

பரட்டையை சப்பாணி பளாரென்று அடித்துவிட்டான்.

“அண்ணாத்த… சப்பாணிகளுக்கு மயிலு கிடைக்கிறார்கள். ஆனால், இருபதாண்டு கழித்து இங்கிலீஷ் விங்லிஷ் அஜீத் கிடைப்பார்களா என்னும் இருத்தலிய யதார்த்தவாத மாந்திரீக அகநிலைக் கருத்துமுதல்வாதத்தின் நவீன வடிவமாக நேர்காட்சிவாதம் இது நண்பா”

அவன் அழ ஆரம்பித்து விட்டான்.
லிட்ஃபெஸ்ட்டுக்கு வர ஒப்புக் கொண்டு விட்டான்.

பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா

புதுமையான சூழ்நிலை உதவுகிறது. சந்தேகமற்ற முறையில் மனவலுவால் நகர்த்தப்படுகிறது. தன்னைக் கட்டுப்படுத்திய சங்கிலிகளையும் உடல் பலவீனங்களையும் தள்ளிவைத்து துள்ளி எழுகிறாள் அம்மையார். அவளது “இல்லை” மறைந்து, அதன் இடத்தில் “புதியது” மற்றும் “இப்பொழுது” மலருகின்றன.

மார்ச், மா, மற்றும் சகுரா – கீதாஞ்சலி ஷ்ரீ எழுதிய இந்த கதையை அனுராதா கிருஷ்ணசாமி மொழிபெயர்த்துள்ளார். கதையின் மையமாக எழுபதுகளில் உள்ள முதியோள், ஜப்பானில் தனது மகனை சந்திக்க வருகிறார். ஆரம்பத்தில், அவள் தயக்கத்துடன் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தாள்; தெரு முனைக்குக் கூட செல்ல மறுக்கிறாள். ஆனால் பிப்ரவரி, மார்ச் மாதங்கள் உருண்டோடிக்கொண்டிருக்கும் போது, அவளது மாற்றம் வெளிப்படுகிறது. மகனின் பார்வையில்—அதே நேரத்தில் கதையாசிரியையின் பார்வையிலும்—ஒரு முழு தேசமே அவளுடன் இணைந்து மலர்கிறது.

மகனின் பயணமும் கதைக்கு அவ்வளவு முக்கியமானது. தாய் மாறுவதோடு, ஒரு தாய், ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான மகனின் உள்ளார்ந்த எண்ணங்கள் வெளிப்படுகின்றன—அச்சத்துடனும் சந்தேகத்துடனும். பழையதை விட்டு வெளியேறுவது, மகனுக்கும் அவ்வளவு அவசியமான செயலாக மாறுகிறது.

சொல்வனம்.காம் மொழியாக்கங்கள் முக்கியமானவை. தி. இரா. மீனா, எம். ஏ. சுசீலா போன்றோர் தொடர்ந்து எழுதுவடு சிறப்பு,

அனுராதா கைவண்ணத்தில் தமிழுக்குக் கிடைத்த மறக்க முடியாத கதை.

Invitation: Articles for Solvanam

சொல்வனம் பத்திரிகை இதழ் எப்பொழுதும் புது எழுத்துகளைச் சிறப்பிக்கும் இதழாக அமையும். புதியவர்களையும் இளையவர்களையும் பற்றிய கட்டுரைகளை வரவேற்கிறோம். ஆர்வமுள்ள வாசகர்கள், தங்கள் என்ன தலைப்பில், எதைக் குறித்து எழுதப் போகிறோம் என்பதை எங்களுக்கு solvanam.editor@gmail.com தெரிவியுங்கள்.

அனைத்து இதழிலும் பிரபலமடைந்த எழுத்தாளர்கள் சிலரோடு, அத்தனை பிரபலமாகாத பல எழுத்தாளர்களையும் வாசக கவனத்திற்குக் கொண்டு வர முனைய வேண்டும். என்னவெல்லாம் எழுதலாம் என்று யோசித்தவுடன் தோன்றிய எண்ணங்கள் இவை:

அ) இரண்டு குழுக்களாக வயதையொட்டிப் பிரித்துக் கொண்டு அவர்களின் படைப்புகளை மொத்தமாக அணுகலாம். இருபது வயது முதல் முப்பது வயது வரையிலானவர்கள்; முப்பதில் இருந்து நாற்பது வயதை எட்டியவர் வரை – இந்த இரு தலைமுறையினரில் எவரெவரை நீங்கள் வாசித்து இருக்கிறீர்கள்? அவர்களுக்கு இடையேயான ஒற்றுமைகள் என்ன? அந்தப் புனைவுகளை எவ்வாறு விமர்சனப் பூர்வமாக அணுகுகிறீர்கள்?

ஆ) கடந்த பத்தாண்டுகளில் உங்களைக் கவர்ந்த மூன்று முக்கியமான நூல்கள் என்ன? கட்டுரையில் வித்தியாசமான முறையில் அணுகுகிறார் என்று எவரைச் சொல்வீர்கள்? சிறுகதைத் தொகுப்பில் எதையெல்லாம் விரும்பி வாசித்தீர்கள்?

இ) முகப் புத்தகம் (ஃபேஸ்புக்), உடனடி எழுத்து (ஃப்ளாஷ் ஃபிக்ஷன்), குறுங்கதை என்றெல்லாம் எழுதித் தள்ளுபவர் எவர்? அவற்றில் எது நெஞ்சில் நிற்கின்றன?

ஈ) கவிதைகள்: ஹைக்கூ, திரைப்பாடல், யாப்பு இலக்கணத்திற்கு உட்பட்ட வெண்பா, டிவிட்டர் குறுமொழிகள் என்று பல வகைகளில் ஒவ்வொன்றிலும் உங்களைக் கவர்ந்த ஆக்கங்கள் என்ன? ஏன் அந்தக் கவிதைகள் உங்களுக்கு நெருக்கமாகின?

உ) தினசரி எவரை வாசிக்கிறீர்கள்? எப்பொழுதாவது மட்டுமே ஒருவர் எழுதினாலும், எவர் எழுதியதை தவறவிடாமல் வாசிக்கிறீர்கள்? அத்தி பூத்தது போல் எழுதுபவர்கள் யார்? காட்டுமல்லியாகப் பூத்துக் குலுங்குவது யார்?

ஊ) எந்த முன்னணி எழுத்தாளர்கள் எவரைப் பரிந்துரைக்கிறார்கள்? அவர்களின் முக்கியமானப் படைப்புகள் என்ன? எவர் அச்சுலகில் புத்தகங்கள் நிறைய வெளியிட்டிருக்கிறார்? அவற்றில் எது இலக்கியத் தரமானது?

எ) யுவ புரஸ்கார், இளம் எழுத்தாளர் விருது போன்ற பட்டியல்களில் இருந்து நீங்கள் நாவல்களையும் கதைகளையும் தேர்ந்தெடுத்து வாசித்து, உங்கள் பார்வைகளை முன்வைக்கலாம்.

ஏ) காலச்சுவடு, உயிர்மை, தமிழினி, யாவரும், டிஸ்கவரி, சந்தியா, கிழக்கு, வல்லினம், நற்றிணை, புலம், எதிர், சிக்ஸ்த் சென்ஸ், எழுத்து, ஜீரோ டிகிரி , விடியல், தேநீர், சீர்மை, செங்கனி இன்ன பிற – புதிய எழுத்தாளர்களை எவர்கள் வெளியிடுகிறார்கள்? எந்தப் புனைகதைகளை வாசித்து இருக்கிறீர்கள்?

ஐ) நீங்கள் சிறுகதைகளைப் படிக்கிறீர்களா? கேட்கிறீர்களா? ஒலிப்புத்தக வடிவில் எதை ரசித்து உள்வாங்கினீர்கள்? கிளப்ஹவுஸ், டிவிட்டர் ஸ்பேசஸ் போன்ற தளங்களில் உங்களின் இலக்கிய கருத்துக்களையும் வாசக விமர்சனங்களையும் பதிவிடுவது உண்டா?

ஒ) புனைவு எழுதுவது என்பது செயல்பாடு; ஒரு சார்பு நிலையை எடுப்பது. அதற்கு சமூக ஊடகங்களில் தன் கொள்கை சார்ந்த நிலை எடுத்து பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையைப் பெருக்குதல் அவசியம். இந்த வகையில் பிரபலமாக இரட்டைக் குதிரை சவாரி செய்பவர்கள் யார்? அவர்களின் எழுத்துக்களை எப்படி மதிப்பிடுவீர்கள்?

ஓ) கதை மீறும் கதை, நாடகம், மொழியாக்கம், மாந்திரீக எதார்த்தம், பேய்க்கதை, துப்பறியும் கதை, காதல் கதை, அறிபுனைவுகள், வரலாற்றுப் புனைவு, மர்மக் கதை, தொன்ம மருவுருவாக்கம், திகில் கதை, பதின்ம வய்தினருக்கான ஆக்கம் – இவற்றில் ஒவ்வொரு வகையிலும் எந்தப் புத்தகங்களை பரிந்துரைப்பீர்கள்?

ஔ) கதைகளின் செவ்வியல் மற்றும் நவீன வடிவங்கள், உலக மொழிகளிலும், தமிழிலும் நிகழ்ந்துவரும் பரிசோதனை முயற்சிகள் என்ன?

இணையத்தில் எத்தனை உள்ளடுக்குகள் இருந்தாலும் எதுவொன்று சுழித்து மேலெழுந்து வருகிறதோ, அதுவே பார்வையில் விழுந்து உணர்வைத் தொடுகிறது. ஒரே சமயத்தில் ஒரு பெரும் களஞ்சியமாகவும் பொங்கிப் பெருகும் புதுவெள்ளத்தின் குமிழாகவும் நித்தியத்தையும் நிலையின்மையையும் தன் இயல்பாய்க் கொண்டது இணையம். அச்சுக்கு உரிய நேர்த்தொடர்ச்சி இணையத்தில் இல்லை, அதன் போக்கு சுழன்று விரிவது. உரையாடல்களும் எதிர்வினைகளும் பகிர்தல்களுமே இணையத்தில் உள்ள படைப்புகளுக்கு உயிர் அளிக்கின்றன. எனவே வாசகர்கள் புதிய படைப்புகள் குறித்து தொடர்ந்து பகிர்ந்து உரையாட வேண்டுமென்றும் எழுத்தாள நண்பர்கள் தம் பங்களிப்பை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

எந்த ஒரு இதழுமே படைப்புகளால்தான் கவனம் பெறுகின்றது. #solvanam அந்தப் படைப்பாளிகளின் மொத்த பங்களிப்பைக் குறித்த அறிமுகத்தையும் விமர்சனத்தையும் வரவேற்கிறது. இந்த இதழுக்குப் பல நண்பர்களும் படைப்பாளிகளும் ஒத்துழைக்க அழைக்கிறோம்.

உங்கள் தொடர்ந்த நல்லாதரவிற்கு மனமார்ந்த நன்றி. உங்கள் எண்ணங்களை எடிட்டருக்கு அனுப்பவும்- அவரது மின் அஞ்சல் முகவரி இது – solvanam.editor@gmail.com

குழந்தை இலக்கிய எழுத்தாளர்: பொன்னம்மாள் பேட்டி

விடியல் இலக்கிய இதழ் – பெண் எழுத்தாளர்களின் ஆக்கங்களை தாங்கி வெளியாகி இருக்கிறது.

இந்த இதழில் என் அம்மாவின் பேட்டியைக் கேட்டு வாங்கிக் கொண்டார் புதுவை ரா. ரஜினி. அவரின் தொடர்ச்சியான நினைவூட்டல்களும் நிலையான உறுதிப்பாடும் விடாமுயற்சியும் இல்லாவிட்டால் இந்த நேர்காணல் சாத்தியமாகி இருக்காது.

பலரும் இலக்கியம் என்றால் இன்ன வரைமுறை என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிலருக்கு ஆதர்சங்கள் – தலைவர்களைப் போன்ற ஆளுமைகள்.
சிலருக்கு கொள்கைகள் – மார்க்சியம், பெண்ணியம், சுற்றுச்சூழல்
சிலக்கு கட்சிகள் – திராவிடம், கம்யூனிசம், இந்துத்துவம்
சிலருக்கு கோட்பாடுகள் – முதலியம், சமத்துவம், சூழலியம்
சிலருக்கு இயக்கன் க்கள் – செம்மொழி இயல், அறிவொளி இயக்கம், அபத்தவியல், இருத்தலியல், கட்டமைப்பு இயல், புனைவியல், புது புனைவியல், எதார்த்தம், மீ எதார்த்தம், நவீனத்துவம், பின் நவீனத்துவம், பின்காலனியத்துவம், பின்-பின் நவீனத்துவம்

இதெல்லாம் நம்பிக்கை சார்ந்தது. புதுவை எழுத்து என்றில்லாமல் எல்லோருக்கும் இடம்; புகழ் பெற்றவர்கள் என்றில்லாமல் அனைவரையும் அனைத்துப் போகும் குணம்; சுமார், பரவாயில்லை என்று பூரணத்துவத்தை மட்டும் எதிர்நோக்காமல் ஊக்குவிக்கும் மனோபாவம் – இதழுக்கும் இதழாசிரியர்களுக்கும் என் நன்றிகளும் வாழ்த்துகளும்.

குழந்தை இலக்கிய எழுத்தாளர் ஆர். பொன்னம்மாள் பேட்டியைப் படிக்க வாருங்கள். சந்தா கட்டுங்கள். ஆதரியுங்கள்!

மாயப் பெரு நதி – ஹரன்பிரசன்னா

நான் ஹரன்பிரசன்னாவின் கட்டுரைகளின் ரசிகன். அவரின் சிறுகதைகளை அவ்வப்போது வாசித்து இருக்கிறேன். ஆதிகாலத்து யாஹூ குழுமங்களில் இருந்து அறிமுகமானவராக இருந்தாலும் இன்றளவும் ஃபேஸ்புக்கில் நண்பர் ஆகத் தொடர்பவர். அவரின் பதிவுகளும் விமர்சனங்களும் ரசனைகளும் பரிந்துரைகளும் என்னை கவனம் கொள்ள வைக்கும். அவரின் முதல் நாவல் வெளிவந்திருக்கிறது. அமேசான் கிண்டில் நூலாக வாங்கி கடகடவென்று வாசித்து விட்டேன்.

நீங்கள் முதன் முதலாக பிரவேசித்தது எங்கே? பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக மேடையேறி இருக்கலாம். பிடித்த துணையை வசப்படுத்துவதற்காக காதலரைக் கவர நிஜ வாழ்க்கையில் அசல் நாடகம் போட்டிருக்கலாம். நேர்காணலில் பயத்துடன் உளறாமல் இருக்க ஒத்திகை பார்த்த சொற்றொடர்களை ஒப்பித்து இருக்கலாம். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்பை திட்டமிட்டு, பயத்தை வெளிக்காட்டாமல், சந்தேகங்களை மனதுக்குள் போட்டு புழுங்காமல் போட்டுடைத்து, ஆபத்துகளை நிவர்த்தி செய்து, சமர்த்தராக முடித்து வெற்றிக் கொடி நாட்டி இருக்கலாம். இங்கே ஹரன்பிரசன்னா, தன் நாவலை அவ்வாறு தன் தோற்றத்தை இலக்கியப் பதிவேட்டில் ஆஜர் ஆக்குகிறார்.

முதல் நாவல் ஒரு அகக் கொந்தளிப்பு இல்லையா? எல்லா நாவலுமே அகக் கொந்தளிப்புத்தான். ஒவ்வொரு நாளும் மனைவியுடன் கூடும்போதும் ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு வெறி வரத்தான் செய்கிறது. ஆனாலும் முதல் நாள் தொடுகையுடன் அதை ஒப்பிடமுடியுமா? முதல் நாவல் அப்படி இல்லையா? முதல் நாவலிலேயே ஒட்டுமொத்தத்தையும் யோசிக்கமுடியுமா? யோசிக்கத்தான் வேண்டுமா? நாவலுக்கு அழகு அகத்தில் இருந்து வரும் சொற்கள் இல்லையா? இங்கே எல்லாமே வெறும் சொற்களா? லே அவுட்டுக்குள் சிக்கி நிற்கும் சொற்களா நாவல்? ராகவனுக்குத் தலை சுற்றியது.

Haran prasanna, ஹரன் பிரசன்னா. மாயப் பெரு நதி (நாவல்) (Tamil Edition) . தடம் பதிப்பகம் | Thadam pathippagam. Kindle Edition.

நாவலின் களம், கதை, அதன் கருத்து என்று எண்ணிப் பார்ப்பதற்கு முன் சில சுருக்கமான எண்ணங்கள்:

  • தேவையற்ற இடையூறு: ராகவன் என்று நாயகனின் பெயரை இனிஷியல் போடாமல் சூட்டியதற்கு தனி தைரியம் வேண்டும். அதை விட அவர் வேலை பார்க்கும் பதிப்பகத்தையும் மூன்றெழுத்தில் அமைத்ததற்கு கொஞ்சம் உதாசீனம் கலந்த தெனாவட்டு இருக்கிறது. எனினும், வடம் பெயரையும் கற்பனையற்ற எழுத்தாளர் பெயரையும் தவித்திருக்க வேண்டும்.
  • மருட்புனைவு: அந்த அலட்சியமும் நம்பிக்கையும் உற்சாகமும் எழுத்தாளர்களின் அரசியலை வெளிப்படையாக சொல்ல வைக்காமல், வெறுமனே கதை 1, 2… என 10 பட்டியலிட்டது தெனாவட்டின் எல்லைகளை பல்லிளித்து சுட்டுகிறது. அவற்றை நேர்மையாக புனைவின் சாத்தியங்களுடன் உருவாக்கி இருந்தால் இன்னொரு “ஜே.ஜே.” என்றிருக்கலாம்.
  • கனா வினா: கட்டுரைக்கு கேள்விகள் பயனளிக்கும். கதைக்கு வாசகர் தான் கேள்வியைத் தொடுக்க வேண்டும். அகப் பயணங்களை வினாக்களாகப் பட்டியலிட்டுத் தொடுப்பது நாவலா அல்லது நாவலுக்கான குறிப்புகளா என கதாசிரியரின் புத்திசாலித்தனத்தின் மீது அயர்ச்சியைக் கொடுத்து கதையை அன்னியமாக்குகிறது.
  • இச்சா அதிகாரம்: கிட்டத்தட்ட சரோஜா தேவி எழுதிய பலான புத்தகமோ என பயம் வருமளவு ஏடாகூட வருணணைகள். விலாவாரியான செக்ஸ் விவரிப்புகள். புணர்தலை எழுதுவது என்பது பல உலக இலக்கியவாதிகளால் இயலாத காரியம். ஹாருகி முரகாமி முதல் சுஜாதா வரை சறுக்கிய தருணங்களை உதாரணங்களுடன் பட்டியலிடலாம். ஆனால், ஹரன்பிரசன்னா கில்லி அடித்திருக்கிறார். காமத்திற்கும் போகத்திற்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம் என்பது போல் பிசகாமல் தரமாக எழுத்து வடிவாக்கி இருக்கிறார்.
  • உள்ளுடையும் உறையும்: பிரசன்னாவின் நாயகன் ஆன ராகவனுக்கு அட்டை குறித்த கவலை இருக்கிறது. இருந்தும் இப்படி ஒரு அட்டையைப் படம் போட்டு இருப்பது கவர்ச்சியாக இல்லை. கனவு, மாயை, இரட்டை எனச் சுழலும் நாவலுக்கு கொஞ்சம் எதார்த்தம் இல்லாத தன்மை கொண்ட முகப்புப் படம் சுவாரசியம் தந்திருக்கும்.
  • பாஷா முரண்கள்: விக்கிரஹத்தை ஒத்தி எடுங்கள் என்று வருகிறது; துடையுங்கள் என்றும் வருகிறது. சென்னையில் வசிப்பவர்களின் மொழி, கன்னடம் கலந்த தமிழின் மொழி போன்ற சுவைகளை கொடுத்திருக்கலாம். அதிபூதா துக்கம், தாரதம்யம் என்றெல்லாம் மொழி நடனமாடுபவர் இன்ன பிற இடங்களிலும் அசல்தன்மையை நடமாட விட்டிருக்க வேண்டும்.
  • சொப்பன தரிசனம்: சில விஷயங்களை “சொல்லவியலாது” என்று எழுதுபவரே கையை விரித்து விடுவது ஏமாற்றம் தந்தது. கனவு என்று சொல்லாமல் அந்த மாய உலகை உலவவிட்டு அதனுள்ளே நம்மை இழுத்து சென்றிருக்கலாம்.
  • தூங்கலோசை: நாவலில் திகைப்புகளே இல்லை. க்ளைமேக்ஸ் எனப்படும் தருணத்தில் அசாதரணமான விஷயங்களோ, அத்தியாயத்திற்கு அத்தியாயம் அவிழாத முடிச்சுகளோ, அதிர்ச்சியூட்டும் திருப்பங்களோ, பரபரப்பான விஷயங்களோ இல்லாமல் இராமாயணம் தெரிந்தவர் கம்பராமாயணம் வாசிப்பது போல் அமைதியாக சொல்லிச் செல்கிறது.

அவளைக் கூர்ந்து பார்த்தான். மூக்கு குத்தி இருக்கிறாள். அதனால்தான் முகத்தில் மாற்றம் வந்திருக்கிறது. தாவணி அணிந்திருக்கிறாள். பெரியவளானதால் உடலில் செழுமை வந்திருக்கிறதா அல்லது தாவணி உடுத்தி இருப்பதால் அப்படித் தெரிகிறதா? மார்புகள் லேசாக மேடாகி இருக்கின்றன. அவற்றின் மேல் இரட்டை ஜடை படுத்திருக்கிறது. தாவணியில் அவளது இடுப்பு கொஞ்சம் தெரிந்தது. அந்த வெண்ணிறம் அவனைப் பித்துக்கொள்ளச் செய்தது. பூப் போட்ட பாவாடை அணிந்திருந்தாள். கால் பாதங்கள் பளிச்சென இருந்தன. மஞ்சள் பூசிக் குளித்திருப்பாள் போல. அவன் இன்னும் கொஞ்சம் நெருங்கி அவளருகில் வந்தாள்.

நாவலில் நேரடித்தன்மை எளிதாகப் புரிகிறது. ராகவன் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். பதிப்பகத் துறையில் பல்லாண்டு காலமாக பணியாற்றுபவன். நாவல் எழுதுகிறான். அதை சொந்தமாக வெளியிடுகிறான். தான் வேலை பார்க்கும் நிறுவனம் மூலம் வெளியிட கூச்சமோ தன்னடக்கமோ தடுக்கிறது. அதன் கூட புத்தகக் கண்காட்சியில் நடக்கும் குளறுபடிகளும் வருகிறது. சற்றே ஊறுகாய் ஆக புத்தக எழுத்தாளர்களின் உள்ளடி வேலைகளும் தூவப்படுகிறது. அவனின் குழந்தையும் மனைவியும் ரஜினி படத்தில் த்ரிஷா போல் எட்டிப் பார்க்கிறார்கள்.

இதன் முற்பிறவி அசல் நாவலுக்கான சகல சாமுத்ரிகா லட்சணங்களையும் கொண்டிருக்கிறது. அதில் கதாபாத்திரங்களுக்கு அஸ்திவாரம் இருக்கிறது. அவர்களின் காரியங்களுக்கு காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. தானே பதிப்பித்த நூல் போல் சுயம்பு உருவாகும் தருணங்கள் கோர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதி இன்னும் விரிவாக தத்துவ சிக்கல்களுடன் வந்திருக்க வேண்டும். பாரத தேசம் முழுக்க பயணம் செய்திருக்க வேண்டும். பட்டியல்களைப் படையலாக ஆக்காமல் அந்தப் புத்தகங்களின் உள்ளார்ந்த கிரகிப்புகளைப் பகிர்தலாக ஆக்கியிருக்க வேண்டும்.

முதல் பாகத்தை மின்சார ரயில் பகுதி எனலாம். தெரிந்த விஷயங்கள். அதே குப்பை நாற்றங்கள். பழகிய முகங்கள். இருப்பிடம் வந்தாலும் நாளையும் இதே பயணம் என்னும் எதிர்பார்ப்பில்லாத திக்கில் முடிவு. அடுத்த பகுதி சென்னை முதல் டெல்லி செல்லும் ராஜதானி வண்டி. அவசரகதியில் எக்ஸ்பிரெஸ் ரயிலாக சேரிடத்தில் முடிந்தாலும், அந்தப் பயணம் சுவாரசியம் மிக்கது. தெரியாத, புதிய விஷயங்களை உணர்த்துவது. தூங்கி எழுந்தவுடன் கடைசி ஸ்டேஷன் வந்து விடுவது போல் சடாரென்று முடிவுக்கு வருவது மட்டுமே குறை.

மீதம் இருக்கும் குழம்பையும் சாதத்தையும் எண்ணெய்யும் உப்பும் போட்டுப் பிசைந்து உருட்டிக் கொடுக்கச் சொல்லி உண்டால் எத்தனை சந்தோஷமாக இருக்கும் என்று தோன்றியது.

புத்தகக் கண்காட்சியில் சாப்பிடச் செல்கிறான் நாயகன் ராகவன். ஆத்துச் சாப்பாட்டில் திளைக்கிறவன் ராகவன். வெறும் பொரியலிலும் வத்தக் குழம்பிலும் ஜமாய்க்கிற மனைவின் கைப்பக்குவத்தை நினைத்துப் பார்க்கிறான். அதே சமயம் கூடை சோற்றைப் போட்டு அதை அவக்கு அவக்கென்று விழுங்கும் கூட்டத்தை சமபந்தியில் பார்க்கிறான். இது நாலே பக்கக் கதையில் கூட நளபாகத்தைப் போடும் இலக்கியகர்த்தாவையும், நாலு ஃபாரம் கொடுத்தாலும் கூறியதையேக் கூறும் அ-புனைவு விற்பனை எழுத்தாளனையும் ஒப்பிட்டது போல் அமைந்துள்ளது.

இதுவே பின் பகுதியான இரண்டாம் பாக நாவலில் ஆனந்தனையும் மாதவனையும் உணர்த்த இன்னொரு வழியில் சொல்லப்படுகிறது. ஆனந்தனுக்கு லௌகீக உணவே கொண்டாட்டம். வாசனையை வைத்தே என்ன சமையல் என்பதைக் கண்டுபிடிக்கிறான். அதில் லயிக்கிறான். தத்துவமும் துறவும் எண்ணமாகக் கொண்ட மாதவனுக்கு உணவு என்பது அத்தியாவசியம். ஏதோ கொஞ்சமாய் உண்ண வேண்டும். ருசிக்கும் பசிக்கும் அல்ல. கவளம் கிடைத்த சிந்தைக்காக சற்றே உட்கொள்கிறான்.

He gazed sadly at the threatening sky, at the burned-out remnants of a locust-plagued summer, and suddenly saw on the twig of an acacia, as in a vision, the progress of spring, summer, fall and winter, as if the whole of time were a frivolous interlude in the much greater spaces of eternity, a brilliant conjuring trick to produce something apparently orderly out of chaos, to establish a vantage point from which chance might begin to look like necessity …and he saw himself nailed to the cross of his own cradle and coffin, painfully trying to tear his body away, only, eventually, to deliver himself—utterly naked, without identifying mark, stripped down to essentials—into the care of the people whose duty it was to wash the corpses, people obeying an order snapped out in the dry air against a background loud with torturers and flayers of skin, where he was obliged to regard the human condition without a trace of pity, without a single possibility of anyway back to life, because by then he would know for certain that all his life he had been playing with cheaters who had marked the cards and who would, in the end, strip him even of his last means of defense, of that hope of someday finding his way back home.

An excerpt from the beginning (and end) of László Krasznahorkai’s novel Satantango. English translation by George Szirtes.

Title(Eng)Maaya Peru Nadhi
Authorஹரன்பிரசன்னா
FormatPaperback
Year Published2020
Pages360
Imprintதடம் பதிப்பகம்

இந்நாவலைப் பற்றி:

இரண்டு காலகட்டங்களுக்குள் விரியும் நாவல். ஒன்று இன்றைய காலகட்டம். இன்னொன்று நூறு ஆண்டுகளுக்கும் முன்பான ஒரு காலகட்டம். பழங்காலத்தில் மாத்வ பிரமாணர்களின் அன்றைய வாழ்க்கையைத் தொட்டுச் செல்லும் நாவல், இன்றைய காலத்தில் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குள் விரிகிறது. இரண்டையும் பிணைக்கும் ஒரு சரடென எப்போதும் கூடவே ஓடிவரும் ஒரு மாயப் பெரு நதி. திருநெல்வேலியில் பிறந்து இளமையைக் கழித்த எந்த ஒருவனுக்கும் தாமிரபரணியே மாயப் பெரு நதி. எங்கே எதன் நிமித்தமாக எப்படி வாழ்ந்தாலும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு கனவு நதி.

ஹரன் பிரசன்னாவின் முதல் நாவல் இது. அவரது தீவிரமான மொழி இந்நாவலுக்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. எப்போதும் கனவுலகத்துக்குள்ளே சுழன்றபடி இருக்கும் இந்நாவல் ஒரு கனவைப் போலவே நமக்குள் நிகழ்கிறது.

S Ramakrishnan’s Felicitation Function: Canada’s Iyal Award Event at Chennai by Uyirmmai

’உலக நாயகன்’ விஸ்வரூபம் எடுக்கும் பத்மஸ்ரீ கமல் தோழர் கு ஞானசம்பந்தன் உரை

கவிப்பேரரசு வைரமுத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு

இரண்டாம் பாகம் (தொடர்ச்சி)

எஸ் ராமகிருஷ்ணன் ஏற்புரை

தமிழ்ச் சிறுகதைகள்: ஆகஸ்ட் 2009

இந்த மாதம் படித்த கதைகளில் என் மனதை அசைத்துப் பார்த்து, கவனத்தை ஈர்த்து, உங்களுக்கும் குறிப்பிடத்தக்கவையாக இருந்த சில:

1. ஹரன்பிரசன்னா :: சொல்வனம் » அலை

நாவல்களிலே ஃப்ளாஷ்பேக் என்னும் வஸ்து சிரமமானது. சிறுகதையிலேயே நிகழ்த்தி காட்டுகிறார். சில வார்த்தைகள் கதையில் வரும்போது, அப்படியே நெகிழச் செய்து விடும். இங்கே ‘கந்தரப்பம்’. அப்படியே என்னை எங்கோ கொண்டு போய் விட்டது.

வம்பு கேள்வி: அதெல்லாம் சரி… ஹரன் பிரசன்னா ஏன் பைத்தியக்காரன் நடத்திய ‘உரையாடல்‘ போட்டியில் பங்குபெறவில்லை?

2. வ. ஸ்ரீநிவாசன் ::சொல்வனம் » உயிரிழை

முதல் வரியில் கதை முடிஞ்சுடணும் என்னும் கோட்பாட்டை பின்பற்றுகிறார். அந்த ஆரம்பத்தை வாசித்தவுடன் மேஜிகல் நியலிசமோ, குறியீட்டு இம்சையோ என்னும் பயத்தை அறவே போக்கியும் விடுகிறார்.

வம்பு கேள்வி: கதை கூட புரிஞ்சுக்கலாங்க. அது என்னங்க! அப்ஸ்ட்ராக்டா தோட்டா வட்டம் போட்ட படம்?

3. கர்ட் வானகட் :: சொல்வனம் » ஹாரிசன் பெர்ஜரான்மொழிபெயர்ப்பு :: விஷ்வநாத் சங்கர்

இம்சை இல்லாத மொழிபெயர்ப்பு. கதை ரொம்ப கவலைப்படுகிறது. கனவு லோகத்தில் சஞ்சரிக்கிறது. வெகு தீவிரமாக பிரசாரிக்கிறது.

வம்பு கேள்வி: கர்ட் வானகட் இப்ப இருந்தா ஒபாமாவின் உடல்நலத் திட்டமான சம்ச்சீர் ‘சேமநலக் காப்பீடு’ குறித்து என்னங்க சொல்லியிருப்பார்? அதற்கும் கத விட்டிருப்பாரோ!

4. கிச்சாமி | சத்யராஜ்குமார்.காம்

அமெரிக்க வாழ்க்கையை இவ்வளவு வெளிப்படையாக எழுதினால் தாங்காது சாமீ. ஆனாலும், நம்ம இணைய வாசகர்கள், கதையை கதையாகப் பார்க்காமல், ‘நீங்களா?’, ‘அப்படி சட்டம் கிடையாதே?’, ‘என் மனைவி அவ்வாறு இல்லையாக்கும்‘ என்று மறுமொழிவது தனிக் கதை.

வம்பு கேள்வி: கதைக்கு கீழே கருத்து சொல்ல முடியாம, வலைப்பதிவிலே தனியா இன்னொரு இடத்திலே பதில்பொட்டிய வச்சிருக்கீங்களே! ஏனுங்க?

5. நாகார்ஜுனன் :: திணை இசை சமிக்ஞை: 108

ஒரு கதை. அதை எப்படியெல்லாம் சொல்லலாம்? நாகார்சுனன் மறுமொழியில் இருந்து: தமிழ் எழுத்தாளர்கள் ஒரே ஸ்டைலில் பல கதைகளை எழுதியதை, எழுதுவதை (இதற்கு ஒரே major விதிவிலக்கு புதுமைப்பித்தன்) வாசிக்கிற, எழுதப்போவதையெல்லாம் வாசிக்கப்போகிற நமக்கு ஒரே கதையை பல ஸ்டைலில் எழுதினால் ஏன் வாசிக்க முடியாது..

வம்பு கேள்வி: உங்களுக்கு கதைக்கான கரு பஞ்சமா சார்? வேணும்னா நான் ரெண்டு knot சொல்லட்டுமாங்க!

6. முரளிகண்ணன் :: நீரோடை: துண்டு சிகரெட்

வெட்டிப்பயல் மாதிரி சொல்ணுமின்னா, இவரோட எழுத்து ‘சும்மா நல்லா இருக்கு நல்லா இருக்குனு சொல்லி போர் அடிச்சி போச்சி...’

வம்பு கேள்வி: உங்களுக்கு மெய்யாலுமே கற்பனை ஜாஸ்தியா? அல்லது நாட்குறிப்பை அப்படியே எழுத சங்கோசமா?

7. சித்ரன் :: நீரோட்டம் « புள்ளி

சமீபத்திய ‘கல்கி’ பத்திரிகையில் வெளியான கதை. சோடை போகுமா? நல்ல வேளையாக இந்த மாதம் கதை எழுதியிருக்கிறார். இவரெல்லாம் நம்ம லிஸ்டில் இருப்பது லிஸ்ட்டுக்கு பெருமைங்க.

வம்பு கேள்வி: அந்தக் கடைசி திருப்பம்தான் இதனுடைய மிகப் பெரிய உச்சம் என்றாலும், அப்படிப்பட்ட இறுதிவரி திகில் இல்லாவிட்டால், இந்தக் கதையை எப்படி முடித்திருப்பிர்கள்?

8. ஆல்பர்ட்டோ மொராவியா :: பறவையின் தடங்கள் » Blog Archive » உத்தரவிடு பணிகிறேன்மொழிபெயர்ப்பு :: நாகூர் ரூமி

மொழியாக்கம் என்பதெல்லாம் சொன்னால்தான் தெரியும். அப்படியொரு அசல் படைப்புக்கு நிகரான மொழி லாவகம். இன்னொரு முறை ஆசுவாசப் படுத்திக் கொண்டு வாசித்தால் உள்ளே பொதிந்திருக்கும் மற்ற விஷயங்கள் புலப்படும்.

வம்பு கேள்வி: கப்பலுக்கு போன மச்சான்‘ மாதிரி அடுத்த நாவல் எப்பங்க?

9. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: மெளன கோபுரம்

பறவைகள் விமானத்தில் மோதுவதால் அறுநூறு மில்லியன் டாலர் சேதம் ஆகின்றன. வானூர்தியில் வந்து விழும் பறவைக் கூட்டத்தின் மேல் 583 விபத்துகளின் பழியைப் போட முடியும். செத்த கணக்கு சேர்க்கவில்லை. இப்படியெல்லாம் புள்ளி விவரம் அடுக்குபவரை நேர்த்தியாக எதிர்கொள்ள உதவுவது புனைவுலகம். வாழ்வை சொல்லி, அதன் நியாயங்களை சரித்திர பூர்வமாக, கலாச்சார ரீதியாக புரிய வைக்கும் முயற்சிதான் இலக்கியம். இந்தக் கதை அந்த ரகம்.

வம்பு கேள்வி: உங்களுக்கு கதை எழுதுவது தவிர வேற எதாவது வேல உண்டுங்களா?

10. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: நண்டு சொன்ன `பெரியவங்க` கதை

வித்தியாசமான, அநாயசமான ஆரம்பம். கதை சொல்லி முடிக்கும் அவசரத்தில் நண்டு இருப்பதால், ஆசிரியரைப் பழிக்க வேண்டாம்.

வம்பு கேள்வி: நண்டு சொன்ன நாவலின் சுருக்கம் என்பதுதானே உண்மை?


தொகையறா

அந்தக் கால கவிதைகளில் தொகை (எட்டுத்தொகை போன்ற) நூல்களில் இருப்பதுதான் புகழ்பெற்று கோலோச்சுக்கிறது. அதே போல், இந்தக் கால சிறுகதைகளுக்கும் அறிமுகம் வேண்டுபவர், ‘நெஞ்சில் நிறைந்தவை‘ (சிவசங்கரி வானதி பதிப்பகம்), ‘முத்துக்கள் பத்து‘ (அம்ருதா பதிப்பகம்), ஐம்பதாண்டு கால தமிழ்ச் சிறுகதைகள் (சா. கந்தசாமி கவிதா பப்ளிகேஷன்ஸ்), ‘எனக்குப் பிடித்த கதைகள்‘ (பாவண்ணன்) போன்ற தொகுப்புகளையும் எஸ் ராமகிருஷ்ணன், சுஜாதா, ஜெயமோகன், க.நா.சு. இரா முருகன், போன்றவர்களின் பரிந்துரைப் பட்டியலையும் நாடுகிறார்கள்.

இவர்கள் எல்லோருமே சொல்லி வைத்தது போல் தற்கால இணைய எழுத்துகளை, வலையில் மட்டும் புழங்கும் தமிழ்ச் சிறுகதைகளை முற்றாக புறக்கணித்துவிடுகிறார்கள். இதற்கு நிவர்த்தியாக, தமிழ் வலையகங்களில் (சொல்வனம், திண்ணை, உயிரோசை, நிலாச்சாரல், தமிழோவியம், தமிழ்ப்பதிவுகள், இன்ன பிற) கிடைப்பதில் குறிப்பிடத்தக்க ஆக்கங்களை ஒரு இடத்தில் சுட்டி கொடுத்து தொகுத்தால் செமையாக இருக்கும்.

இணையத்தில் தடுக்கி விழுபவர்களுக்கும் பயனாக இருக்கும். இணையமே கதியாக கட்டுரைகளையும் ட்விட்டுகளையும் மட்டுமே வாசிக்கும் என் போன்றோருக்கும் உருப்படியான விஷயமாக இருக்கும்.

எழுத்தாளர் பெயரோ, எழுதியவரின் மூலமோ கூட தெரியாமல் போகலாம். ஆனால், நாளைய பின்னும் ‘முக்கியமான புனைவு’ என்று தேடினால் எளிதில் மாட்டும்.

Manushyaputhiran & Uyirmmai’s Uyirosai 1st Anniversary

அறிவிப்புகள்:

உயிர்மை.காம் வழங்கும் வார இணைய இதழ்: “இது உயிரோசையின் 50ஆவது இதழ் :: மனுஷ்ய புத்திரன்எழுதியதில் இருந்து:

  • நமது பண்பாட்டு வேர்கள், கலை, இலக்கியம், தத்துவம், சமூகம், அரசியல், சர்வதேச விவகாரங்கள், சினிமா என ஏராளமான துறை சார்ந்த எண்ணற்ற கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
  • 1500க்கும் மேற்பட்ட படைப்புகள் பல்லாயிரம் பக்கங்களுடன் மிக அரிதான பிழைகளுடன் பதிவேற்றம்.
  • எதையும் எழுதலாம் என்ற எழுத்து சுதந்திரத்தையோ இணைய சுதந்திரத்தையோ சிறிதும் ஏற்கவில்லை.
  • ஓராண்டாக உயிரோசை கடும் பொருட் செலவுடன் — ஓராண்டில் கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய்.
  • உயிரோசைக்கு ஒரு சிறிய அளவிலான சந்தா தொகை

Uyirmai.com & Manushyaputhran in Uyirosai.com: “உயிரோசை ஓராண்டு நிறைவு விழா: இணைய எழுத்துக்கள் இன்றும் நாளையும்: உயிரோசையை முன் வைத்து — சிறப்புரைகள்: சாருநிவேதிதா & எஸ்.ராமகிருஷ்ணன்

என்னுரை

உயிர்மை போன்ற பத்திரிகை நடத்துமிடத்தில், உயிரோசை போன்ற இணையத்தில் மட்டும் வெளியாகும் வார இதழ் நடத்துவது வெகு சுலபம்.

மாத இதழ். அதுவும் அச்சில் வெளியாகும் இதழ். ஒல்லியாக விளம்பரம் இன்ன பிறவெல்லாம் கழித்தால் 150 ஒருங்குறி கிலோபைட்டுக்குள் அடங்கும் இதழ். அதற்குள் எல்லோரையும் திருப்தி செய்ய இயலாது.

அதை விட புத்தகமாக்கல் லாபகரமானது. ஜூன் 2009 உயிர்மையை வாங்கமாட்டீர்கள். ஆனால், ஜூன் 2000த்தில் வெளியான புத்தகத்தை பத்தாண்டு கழித்தாலும் வாங்குவீர்கள். விமர்சிப்பீர்கள். வாசிக்கக் கூட செய்துவிடுவீர்கள்.

ஆகவே,

  1. புத்தகத்திற்கு ஆள் பிடிப்பது எப்படி? எழுதவும் ஆள் வேண்டும்; படிக்கவும் கூட்ட வேண்டும்.
  2. பத்திரிகையில் விற்பனையாகாத பெயரை எப்படி சந்தைப்படுத்துவது?
  3. அச்சில் கழித்துக் கட்டப்பட்டதை, மனம் புண்படாமல், தேர்வானதாக சொல்வது எப்படி?
  4. துணை ஆசிரியர் கவிதைகளையும், வளரும் உதவி ஆசிரியர் தலையங்கங்களையும் வெளிவரச் செய்யும் வழி எது?
  5. ப்ராண்ட் அம்பாசடர்களை உருவாக்குவது எப்படி?
  6. அறுபது பக்கத்திற்குள் இடங்கொடுக்க முடியாதவருக்கு, மனதில் மட்டுமல்லாமல், பாலம் அமைத்து, இடங்கொடுப்பது எப்படி?
  7. மூத்த தலைமுறையினருக்கு அறிமுகமானவர்களை வைத்து உயிர்மை பதிப்பகத்திற்கு ரெகுலர் விளம்பரம் பெறுவது எப்படி?
  8. சாரு.ஆன்லைன், ஜெயமோகன். இன், எஸ். ராமகிருஷ்ணன்.காம் போன்ற தனி மனிதர்களே புகழைத் தட்டிச் செல்லாமல், அவரின் வெளியீட்டாளரும் எப்படி தன்னை நிலை நிறுத்திக்கொள்வது?
  9. இணையம் வந்தபிறகு இலக்கியச்சண்டை என்பது நொடிக்கு நொடி பதிவிடுவது. அதற்கு ஈடுகொடுக்க வாரம்தோறுமாவது வெளியாவது.
  10. வாரப் பத்திரிகை குமுதம், மாதமொருமுறை இலக்கியம் சமைக்க ‘தீராநதி‘ ஆகும்போது, மாதாந்தரி சிற்றிலக்கிய சிற்றேடு, வாராந்தரி ஆகக் கூடாதா? கூடுமா?

What did Uyirosai achieve? உயிரோசை என்ன சாதித்தது?

1. தமிழ் சினிமா குறித்த சுவாரசியங்கள் இலக்கியமாகா என்பதை தமிழ்மகன் கொண்டு முறியடித்தது.

2. தனிவலை இல்லாத சுகுமாரன், வாஸந்தி, இந்திரா பார்த்தசாரதி, தமிழவன் போன்ற மூத்த இலக்கியவாதிகளை தொடர்ச்சியாக எழுதவைத்தது.

3. சொந்த வலையகமாக இருந்தால் அமிதாப் பச்சன் போல் ‘என்னை எல்லாரும் திட்டறாங்க’ என்று அழுதோ, மறுமொழிகளை மறைத்து/பின் திறந்து/மீண்டும் மட்டுறுத்தி என்று சுழற்சிக்குள் சிக்கியோ காணாமல் போகும் அபாயத்தை தவிர்த்தது.

3. சுதேசமித்திரனின் potentialல் துளி ஆளுமையாவது வெளிக்கொணர்ந்தது.

4. இந்திரஜித் பத்தி நிஜமாகவே தவறவிட முடியாததாக இருப்பது.

5. Lack of consistency in மனோஜ், மாயா, சஞ்சித், அபிலாஷ் என்பதைக் குறையாக சொல்ல வந்தாலும், அவர்கள் எல்லாம், புது எழுத்தாளர்களாமே!?!

6. இலக்கியவிருதுகள் குறித்து பன்முக விமர்சனம் வராவிட்டாலும், முழுமையான ஆளுமை சித்திரம் கிடைக்காவிட்டாலும், பின்னணியும் அரசியலும் அறியச்செய்திரா விட்டாலும், இன்னின்னாருக்கு இப்படி என்று செய்தியாக்கியது.

7. ‘உரையாடல்‘ மாதிரி போட்டி இல்லாவிட்டாலும், இதழுக்கு ஒரு சிறுகதையாவது வெளியிடுவது. (கவிதைகளும் வருகிறது. எவராவது வாசித்ததுண்டா?)

8. எழுத்தாளருக்குத் தேவை அங்கீகாரம். படைப்பை ‘நல்லாருக்கு!’ என்று குறிப்பால் உணர்த்தி, உயிர்மை வெளியீட்டீல் இடங்கொடுத்து, பீடத்தில் ஏற்றி அமரவைப்பது.

9. தமிழகத் தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்து தொடர் எழுதாமல் இருந்தது.

10. ஒரு வருடம்; 50 இதழ் என்பது லேசுப்பட்ட சமாச்சாரம் இல்லை. அதுவும் இணையத்தில். முணுக்கென்றால் வோர்ட்பிரெஸ், சட்டென்று ப்ளாக்ஸ்பாட் நிலவும் சூழலில், நாலு குதிரை, மூன்று மாடு, ஓரிரு கழுதை, என்று animal farmஐ கட்டி மேய்த்திருப்பது.

How Uyirosai could have done better? உயிரோசை எவ்வாறு மேலும் பரிமளித்திருக்கலாம்?

1. பாபுஜியின் கருத்துப் படம்

2. உயிரோசையின் வடிவமைப்பு

வலையில் உள்ள சில வண்ணங்கள் கண்களுக்கு உறுத்தலாக இருப்பதைச் சரி செய்தால் படிப்பவர்களை அசதியுறாமல் இருக்கச் செய்யும். புகைப்படங்களும் மிகவும் சிதறிப்போன ஒரு தோற்றத்தை அளிக்கின்றன. – வெங்கடாசலம் / சிங்கப்பூர்

3. தமிழ்ப் பெயர்ப்பு

மொழிகளினூடான பயணத்தில், கவித்துவம் பின்தங்கிவிடுகிறதோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. – மெ.உலகநாதன் / சென்னை

4. புது நூல்கள் அறிமுகம் (அல்லது) புது புத்தக விளம்பரம்தானே?

5. குறுந்திரைப்படங்கள் விமர்சனம் + பார்வை

6. பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு

7. ஓவியங்கள், சிற்பம், நுண்கலை

8. அரசியல் சப்தங்களுக்கு பதில் அனுபவங்களின் பகிர்வு

9. ஈழம், இலங்கை கவனிப்பு

10. பாலியல், பொருளாதாரம்/வர்த்தகம்/நிதிநிலை போன்ற பேசப்படாத & தட்டையான தமிழ் ஊடகப் பார்வை பெறும் தலைப்புகள்.

Where did Uyirosai mimic other websites? உயிரோசை எங்ஙனம் பிற வலையக செயல்பாடுகளை பிரதிபலித்தது?

1. வெட்டி, ஒட்டும் Ctrl+C வகையறா → ஹைக்கூ தொடர், முல்லா கதைகள், சூஃபி கதைகள்

2. திண்ணை

3. சொல்வனம் போல் வாசகர் கருத்துகளைத் தடை செய்தல்

4. கீற்று போல் விளம்பரங்கள்

5. அந்திமழை போல் ஆதிகால வெப்1.0 தோற்றம்

6. தமிழோவியம் போல் அ.ராமசாமி போல் சில எழுத்தாளர்களுக்கு நிழற்படம்; பாவண்ணன் போல் வேறு சிலருக்கு எந்த ஒளிப்படமும் mastheadம் இடாமை.

7. இஷா (ஈசா?) யோகம் மாதிரி பக்கத்திற்குப் பக்கம் திரு. மனுஷ்யபுத்திரன் அவர்களின் திருவுருவப்படம்.

8. பதிவுகள் மாதிரி marquee scrolling செய்தி ஓடவிடுவது.

9. தமிழ்மணத்தில் இருக்கும் தனிப் பதிவரின் இடுகை போல் ஒற்றைப் பார்வையை மட்டும் தருவது. பத்திரிகைக்கு அழகு பல்நோக்கில் பல்லூடகமாக வருவது.

10. ஆறாம்திணை கொஞ்ச நாள் கழித்து தென்றலானது. அது போல்?

Interview with Jeyamohan: Videos & Audio Chat

நேர்காணுபவர்கள்: தூள்.காம் பிபிபாலாஜி ஸ்ரீனிவாசன் & ச திருமலை ராஜன்

1. தமிழ் இலக்கிய சூழல் இப்போது எப்படி இருக்கு?

2. இணையத்தினால் ஏற்பட்ட பாதிப்பு

3. விஷ்ணுபுரம் உருவான கதை

4. எழுத்தாளர் விமர்சகராக இருப்பதில் +ve -ve (இருக்கும் ”சிறந்த”
லிஸ்டில் எல்லாம் இவர் எழுத்துக்களை இவரே சேர்த்துக்கொள்வது)

5. அமெரிக்க பயணம் எப்படி இருக்கு?

6. அவர் ஊர் மக்களின் நகைச்சுவை உணர்வு

7. இலக்கிய சர்ச்சைகளில் ஈடுபடும் எழுத்தாளர்கள்

8. தன் எழுத்தை மார்க்கெட்டிங் செய்ய வேண்டிய சூழல்

நன்றி: http://www.itsdiff.com/Tamil.html

My experiences with A Muttulingam

சொல்வனம் இதழில் வெளியான வியத்தலும் உண்டே கட்டுரையில் இருந்து:

நெடுஞ்சாலைப் பயணத்தின் நடுவே ஜெயமோகன் இணைந்து கொண்டார். கையில் பத்துத் தோட்டாக்குறிகள் போட்ட சிறு குறிப்பு வைத்திருக்கிறார். அதில் இருந்து கேள்விகள் விழுகின்றன. ‘உங்கள் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் எங்ஙனம் உள்ளன?’; ‘கனவுக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பு?’

முழுவதும் வாசிக்க: முத்துலிங்கத்துடன் ஒரு தினம்


தொடர்புள்ள பேட்டி & சுட்டி:

அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்: “நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்!” :: சொல் புதிது ஏப்ரல் 2003 இதழில் வெளியான பேட்டி

ஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கல்லூரியில் படிக்கும்போதே தன் முதல் சிறுகதை தொகுதியான ‘அக்கா ‘ வை கைலாசபதி முன்னுரையுடன் வெளியிட்டு பரவலான கவனத்தை கவர்ந்தார் . பிறகு வேலை நிமித்தம் வெளிநாடு சென்றார் .

ஐ நா அதிகாரியாக ஆப்ரிக்க நாடுகளிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றினார். இந்த வலுவான அனுபவப்பின்னணியுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத வந்தார் . அவரது அடுத்த சிறுகதை தொகுப்பை மித்ர வெளியிட்டது . ‘திகட சக்கரம். ‘ தொடர்ந்து ‘ வடக்கு வீதி ‘ முதலிய தொகுதிகள் வெளிவந்தன.

சமீபத்தில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ள ‘மகாராஜாவின் ரயில் வண்டி ‘ மிகவும் இலக்கிய முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. அ.முத்துலிங்கத்தின் கட்டுரைகளும் புகழ்பெற்றவை. இலங்கை அரசின் சாகித்ய விருது பெற்றுள்ளார் .


A Muttulingam « Tamil Archives

A Muttulingam is free! But, why? « Snap Judgment

கடற்கரய் in தீராதநதி (குமுதம்) – ஜூன் 1, 2007: “ஜனநாயக்தில் எனக்கிருந்த நம்பிக்கையும், மதிப்பும் போய்க்கொண்டிருக்கிறது – அ.முத்துலிங்கம்”

சமகால தமிழிலக்கியத்திற்கு ஈழம் வழங்கியுள்ள கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். ஒரு வனத்தின் புதிர்ப் பாதையைப்போன்று விரியும் இவரின் படைப்புகள் ஒரு வானத்தின் திடீர் திடீர் வண்ணமாறுதலுக்கு ஒத்து இயங்குபவை. கூடவே இவரின் படைப்புலகம் மரபின் வேர்களிலிருந்து விடுபட்டுவிடாதவை.

1958 முதல் எழுதிவரும் முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தில் பிறந்து பல அரசியல் நெருக்கடிகளால் புலம் பெயர்ந்தவர். இருபது வருடங்களாக ஐக்கியநாடுகள் சபையில் அதிகாரியாகப் பணிபுரிந்துவிட்டு ஓய்வு பெற்றபின் தன் மனைவியுடன் தற்சமயம் கனடாவில் வசிக்கிறார்.

இலங்கை அரசின் ‘சாகித்ய விருது’ (1998), ‘இலக்கியச் சிந்தனை விருது’, ‘இந்திய ஸ்டேட் வங்கி பரிசு’ என பல விருதுகள் பெற்றவர். இவரின் 75 சிறுகதைகள் அடங்கிய முழுத் தொகுதி ‘அ. முத்துலிங்கம் கதைகள்’ ஒன்றும், ‘அங்கே இப்ப என்ன நேரம்’ என்ற முழு கட்டுரைத் தொகுதி ஒன்றையும் ‘தமிழினி’ வெளியிட்டிருக்கிறது. ‘வியத்தலும் இலமே’ என்ற, இவர் எடுத்த உலக எழுத்தாளர்கள் நேர்காணல் நூல் காலச்சுவடு வெளியீடாகவும் வந்திருக்கிறது.

‘கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது’’ ‘உயிர்மை’ வெளியிட்டிருக்கும் நூலின் தொகுப்பாசிரியர் இவர்.