Tag Archives: சிறுகதை

Fiction: Zadie Smith: “MOONLIT LANDSCAPE WITH BRIDGE”

ஜேடி ஸ்மித்தின் முழுக் கதையும் நியு யார்க்கரில் வாசிக்கக் கிடைக்கிறது.

Van_der_Neer_-_Moonlit_Landscape_with_Bridgeஇது தேர்தல் காலம். தர்மபுரி இளவரசன் இறந்தால், தொல் திருமாவளவன் தலைவராகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் தீக்குளித்தால், இரவிக்குமாருக்கு தொகுதி கிடைக்கிறது. அந்த மாதிரி மந்திரி ஒருவரின் வாழ்க்கையை இந்தப் புனைவு சித்தரிக்கிறது.

சிறுகதையை நீங்கள் எப்படித் துவங்குகிறீர்கள்? முடிவுக்கு மிக அருகேவா? அல்லது கதையின் சாரத்தைக் குறியீடாக முன்வைத்தா? பிணத்தை அலங்கரித்து நடுக்கூடத்தில் வைப்பது போன்ற தோரணையுடன் கதை துவங்குகிறது. ஆப்பிரிக்காவிலோ அல்லது ஃபிலிப்பைன்ஸிலோ அல்லது அது போன்ற சுரண்டல் தேசத்தின் தலைவர், தன்னுடைய சொந்த நாட்டை விட்டு சொர்க்கபுரிக்கு ஓடுவதுதான் கதை.

கதையின் நடுவில் தலைப்பு வந்து சேர்கிறது. வான் டெர் நீர் (Aert van der Neer) வரைந்த ஓவியத்தை எடுத்துப் போகிறார் அமைச்சர். அவருக்கு அது சொந்த ஊரை நினைவூட்டுகிறது. அயல்நாட்டு ஓவியனை வைத்துதான் தன்னுடைய பிறந்த கிராமத்தை அறியுமளவு அவர் அன்னியப்பட்டுப் போயிருக்கிறார். நெதர்லாந்து எப்படி இவ்வளவு பெரிய சக்தியாக மாறியது? கடல் கொள்ளையர்களாக இருந்த ஆதி டட்ச்காரர்கள், ஊர் விட்டு ஊர் வந்தவுடன் முதலீட்டாளராக மாறுகிறார்கள். அதே போல் லஞ்ச அமைச்சரும் தன்னுடைய திருட்டுப் பணத்தைக் கொண்டு பிரெஞ்சு நாட்டில் செல்வந்தராகிறார்.

ஏழ்மையை விவரிக்கும்போது பச்சாதாபத்தை சிலர் உருவாக்குவார்கள். அதன் மூலம் பணத்தை நன்கொடையாக வழங்கும் எண்ணம் உருவாகும். சிலர் பசியையும் பட்டினியையும் காரண காரியத்தோடு விளக்குவார்கள். அதன் மூலம் அறிவும் தர்க்கமும் பெருகுவதாக நினைப்பு உருவாகும். இந்தக் கதையில் வறியவர்களின் நிலை, இயற்கையைப் போல் சூறாவளியாக, இயற்கையாக தரப்படுகிறது. இயற்கை நிகழ்வு நடந்தபிறகுதான் தெரிந்து கொள்ள முடிகிறது. கொஞ்சம் அசௌகரியமாக இருக்கிறது. கொஞ்சம் போல் ஆத்திரமும் கோபமும் எழுகிறது. பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றுகிறது.

கதையின் உவமைகளும் செழுமையானவை.

தன்னுடைய கொட்டில் கதவை மெல்ல முட்டும் பசு போல் அமைச்சருடைய கையை வேலைக்காரி பற்றினாள்.

அமைச்சர் கட்டப் போவதாக சொல்லி பாதியில் நிற்கும் அணைக்கட்டைப் பார்த்தால் கிரேக்க காலத்து நாடக மேடையின் காலி இருக்கை போல் தென்பட்டது.

கதையின் முடிவு எல்லாவற்றையும் விட அதிர்ச்சியானவை. நல்லவன் வாழ்வான்; அல்லது செய்தவன் அழிவான என்னும் நீதிக்கதை படித்து வந்தவனுக்கு, இந்த முடிவு ஏற்பில்லைதான். ஆனால், நிஜத்தில் அதுதானே நடக்கிறது?

ஜெமோ எஃபெக்ட்: படிப்பதில் எல்லாம் வெண்முரசு

Benji_Chinelo_Short_Story_Fiction_Red_New_Yorkerநியு யார்க்கரில் சினேலோ (Chinelo Okparanta) எழுதிய ”பென்ஜி” கதை வாசித்தேன். நாற்பதுகளைத் தாண்டிய பின்னும் மனைவியைத் தேடிக் கொண்டிருக்கும் குள்ளமாய், பணக்காரனாய், அம்மா கோந்தாக இருக்கும் ஆப்பிரிக்கனை பற்றிய கதை. மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். அம்மா, குள்ளப் பையன், அம்மாவின் புதுத் தோழி. நடுநடுவே வீட்டில் வேலைப் பார்க்கும் தோட்டக்காரரும், சிப்பந்திகளும் வந்து போகிறார்கள்.

பத்து… பன்னிரெண்டு வருடக் கதையை சிறுகதையில் கொடுக்கிறார். அம்மாவிற்கும் தோழிக்கும் நடுவே நடக்கும் உரையாடல், தோழிக்கும் பையனுக்கும் உரையாடல், கூடவே நிறைய சம்பவங்கள் என அமைதியாக நகர்கிறது. நைஜீரியா அறிமுகமாகிறது. முடிவெல்லாம் ஊகிக்க முடிந்தாலும் மனிதர்களின் குணாதிசயமும் சாமர்த்தியமும் சமரசமும் சுவாரசியமாக்குகிறது.

வெண்முரசு வாசித்து வரும் சமயத்தில் இந்தக் கதையும் வாசித்ததால், அந்தத் தோழி கதாபாத்திரத்தை சத்தியவதிக்கு ஒப்பிட்டுப் பார்த்தேன். பணக்கார நாற்பதுவயசுக்காரனை பீஷ்மராக வைத்துக் கொள்கிறேன். மகாபாரதத்திற்கு இப்படி ஒரு முலாம் பூசிப் பார்த்தால் மகாபாரதத்தின் சூட்சுமங்களை இன்னும் வெளிப்படையாக எழுத்தாளரும் விவரிக்கலாம். அந்த கதாபாத்திரங்களின் நிர்ப்பந்தங்களையும் நிராசைகளையும் வாசகரும் எளிதில் அணுகலாம்.

கதையில் இருந்து..

”பணம் போதலை போதவில்லையென் சிலர் எப்பொழுதும் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். அப்படி அலட்டுபவர்களிடம்தான் பணம் கொட்டிக் கிடக்கும். அல்லது பணம் குறைவாக இருப்போர்தான் செல்வச்செழிப்பில் இருப்பது போல் பாவ்லா காட்டுகிறார்கள் எனலாம். இந்த இரண்டு வர்க்கத்தில் அவள் எந்த ரகம்?”

அ. முத்துலிங்கமும் தற்கால உலக இலக்கியமும்: சிறுகதைகள்

விடுமுறையில் ரெண்டு கதைகள் படித்தேன். இரண்டுமே பயங்கர எதிர்பார்ப்போடு படித்தேன். இரண்டுமே திருப்தியான கதைகள்.

1. http://www.newyorker.com/fiction/features/2013/10/21/131021fi_fiction_munro
முதியோர் இல்லம் அனுப்ப படுபவரின் வாழ்க்கையை சொல்கிறார் நோபல் பரிசு பெற்ற ஆலிஸ் மன்றோ. இணையத்திலேயே இலவசமாகப் படிக்கலாம்.

2. http://harpers.org/archive/2013/10/sic-transit-2/
இது இணையத்தில் இலவசமாகக் கிடைக்கவில்லை. சாதாரண விஷயத்தை எப்படி பிரும்மாண்டமாக்குவது என்பதை உணர்த்துகிறார். சமூகக் கதையில் மர்மத்தை உண்டாக்குகிறார். பிறன்மனை நோக்குவதை அறப்பார்வையாக சொல்வதை சத்தமாக கத்தாமல் சன்னமாக உணர்த்துகிறார்.

தமிழில் அ முத்துலிங்கம் கொஞ்சம் இவர்களை எட்டிப் பிடித்து தாண்டிக் கூட விடுகிறார் இங்கே:
http://amuttu.net/viewArticle/getArticle/334

சிறுகதை: பாவண்ணன் – பாதை

முதியோரை நாம் எப்படி நடத்துகிறோம்? வயதான பிறகு தோன்றும் கனவுகளுக்கு என்ன அர்த்தம்? மனநிலை பாதிக்கப்பட்டவர்களை சமூகம் எவ்வாறு பார்க்கிறது?

பாவண்ணனின் “பாதை” கதை இவற்றை பேசுபொருள்களாகக் கொண்டிருக்கின்றன.

தமிழில் முக்கியமான சிறுகதை எழுதும் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஒரு நடையில் தேர்ந்த பிறகு இன்னொரு நடைக்குத் தாவிடுகிறார்கள். அதாவது, எனக்கு சி/சி++/சி# நன்றாக நிரலி எழுத வரும். அவற்றில் திறமைசாலி ஆனவுடன், சீக்வல், எஃப்# என்று வேறு நுட்பத்திற்கு சென்று பயில்வேன். அந்த மாதிரி எதார்த்தம் முடிந்த பிறகு மாயாஜாலம்; அதன் கூடவே அதிபுனை, அறிபுனை என்று கூடு விட்டு கூடு பாய முயல்கிறார்கள்.

சில சமயம் அவர்கள் அந்த புதுப் பகுதியிலும் வெற்றி காண்கிறார்கள். புதிய வாசக்ர்களை ஈர்க்கிறார்கள். தங்களைப் படிக்கும் நுகர்வோர் வட்டத்தைப் பெரிதாக்கிக் கொள்கிறார்கள். இது சாதகமான விஷயம்.

ஆனால், பாவண்னன் இப்படி எல்லாம் குரங்கு போல் கிளை பாய்வதில்லை. இது எனக்குப் பிடித்த விஷயம். எடுத்துக் கொண்டதில் முழுமையாக பரிமளிப்பது மகிழ்ச்சி தருகிறது.

இன்னும் சிலர் ஜே.பி.சாணக்யா, பெருமாள் முருகன் போன்றோர் அலைபாயாமல் ஒரு அலைவரிசையிலேயே இயங்கினாலும், அவரவர்களின் முதல் பருவத்தின் சிறுகதைகள் போல் தற்கால புனைவுகள் கவரவில்லை. இவர்களுக்கு கதை எழுதும் வித்தை கைவசப்பட்டிருப்பதால் கதை நன்றாகவே கட்டமைக்கப்பட்டிருக்கும். இருந்தாலும் கதை வாசித்து முடித்த பிறகு ஏதோ தவறவிட்டது போல் இருக்கும். பாவண்ணன் இந்த வகைக்குள்ளும் இன்றளவும் சிக்காமல் இருப்பது இன்னும் மகிழ்ச்சி தருகிறது.

நீங்களும் கதையைப் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை சொல்லுங்களேன்…
http://puthu.thinnai.com/?p=23838

Haruki Murakami’s After the Quake: Short Story Collection: Book Intro

ஹரூகி முரகாமி எழுதிய சிறுகதை தொகுப்பை வாசித்தேன். ஜப்பானில் நடந்த நிலநடுக்கத்திற்கு பின் நிகழ்ந்த சம்பவ மாந்தர்களை அறிமுகம் செய்கிறது. கூடவே கொஞ்சமாய் தொட்டுக்க பயங்கரவாத செயலான நச்சுப்புகை கொலைகளையும் வைத்துக் கொள்கிறது.

திருமணமான பிறகு நிலவும் வெறுமை; பதின்ம வயது வெறுமை; எல்லா கதைகளிலும் ‘எதற்காக ஓடுகிறோம்? என்ன வாழ்க்கை இது? என்னத்த செஞ்சு… என்னத்த பண்ணி…’ என்று திடீரென்று விட்டேத்தியானவர்களின் நிலையை விவரிக்கிறது. ஏன் அவர்கள் இப்படி ஆகிப் போனார்கள் என்பதை கொஞ்சம் தொட்டுக் காட்டி, வாசகனுக்கே பாக்கியை விட்டுவிடுகிறார்.

அமைதியான ஆரம்பம்; நேர்க்கோட்டில் கதை பயணித்தாலும், எல்லாவற்றையும் விளம்பாத விவரிப்பு. சூட்சுமமாக முடிக்க வேண்டும் என்பதற்காக வலிந்து திணிக்காத முடிவுகள்.

பூகம்பமும் தீவிரவாதமும் நம்முடைய இயலாமையை உணரவைத்தாலும், உதவுவதும் தெனாவட்டும் நம்மை மீட்டெடுப்பது கதைகளின் அடிநாதம்.

தொகுப்பின் பெயர் ‘ஆஃப்டர் தி க்வேக்’

Tamil Books Wishlist – 2012 தமிழ்ப் புத்தகங்கள்: ஆலோசனை (aka) விழைப்பட்டியல்

சமீபத்திய புத்தகங்களில் எதை வாங்க வேண்டும் என்று ஆசை பிறக்கிறது?

என்னிடம் இருக்கிறது தவிர, எந்த நூல்களை தருவிக்க ஆர்வம் கிடைக்கிறது?

இணையத்தில் உள்ள புத்தகக் கடைகளில் மேய்ந்தால் எவை ‘என்னை வாங்கு’ என்று அழைக்கிறது?

இதில் பிரபலமான எழுத்தாளர்கள் நிச்சயம் இருப்பார்கள்; தவிரக்க வேண்டிய நூலாசிரியர்கள் தவற விடப் பட்டிருப்பார்கள்.

பட்டியல்களுக்கேயுரிய விடுபடுதல்களும் இருக்கலாம்.

உங்கள் பரிந்துரையில் சமீபத்திய நூல் வரவுகளில் முக்கியமானவை எவை?

முதலில் நூலகம் தொடர்பான சில வலையகங்கள்:

  1. நியூ ஹொரைசன் மீடியா – கிழக்கு – காமதேனு – https://www.nhm.in/shop/home.php
  2. சென்னை ஷாப்பிங் – http://www.chennaishopping.com
  3. உடுமலை –http://www.udumalai.com/
  4. தினமலர் புத்தக விமர்சனம் + அறிமுகம்: http://books.dinamalar.com/index.asp
  5. நம்ம கோடம்பாக்கம்: http://600024.com/store/books/
  6. நூல் உலகம்.காம் – http://www.noolulagam.com/
  7. டிஸ்கவரி புக் பேலஸ்: http://discoverybookpalace.com/
  8. நியு புக் லான்ட்ஸ் – http://www.newbooklands.com/new/home.php
  9. தமிழ் புக்ஸ் ஆன்லைன்: http://www.tamilbooksonline.in/booklist1.php
  10. கன்னிமரா பப்ளிக் லைப்ரரி – http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-main.pl
  11. சிங்கப்பூர் நூலகம் –http://catalogue.nlb.gov.sg/

இப்பொழுது என்னுடைய பரிந்துரை புத்தக லிஸ்ட்:

1. என்னைத் தீண்டிய கடல் By வறீதையா — வகை : கட்டுரைகள்
2. கவிதை என்னும் வாள்வீச்சு By ஆனந்த் — வகை : கட்டுரைகள்
3. கரை தேடும் ஓடங்கள் By ராமச்சந்திரன் உஷா
4. நாமார்க்கும் குடியல்லோம் By கரு.ஆறுமுகத்தமிழன்
5. எங்கள் நினைவில் சு.ரா. (குடும்பத்தாரின் நினைவுகள்)
6. தாயார் சன்னதி By சுகா
7. தோள்சீலைக் கலகம் : தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் By கணேசன்
8. சினிமா அனுபவம் (அடூர் கோபாலகிருஷ்ணன்) By அடூர் கோபாலகிருஷ்ணன்
9. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது By அ.முத்துலிங்கம்
10. ஒன்றுக்கும் உதவாதவன் By அ.முத்துலிங்கம்
11. நளிர் — நாகார்ஜுனன்
12. சொல்லாததும் உண்மை (பிரகாஷ்ராஜ்)
13. முக்குவர்: வரலாறு, வாழ்வியல், எதிர்காலம் By வறீதையா கான்ஸ்தந்தின்
14. மயிலிறகு குட்டி போட்டது By பிரபஞ்சன்
15. எழுத்தென்னும் நிழலடியில் By பாவண்ணன்
16. அமெரிக்காவில் மூன்று வாரம் By ம.பொ.சிவஞானம்
17. இலக்கிய ஆராய்ச்சி காலாண்டு இதழ் ( பாகம் – 1 ) By இந்திரஜித்
18. பிறக்கும் ஒரு புது அழகு By காலச்சுவடு கண்ணன்
19. காலத்தைச் செரிக்கும் வித்தை By குட்டி ரேவதி
20. ஓவியம் கூறுகளும் கொள்கைகளும் By புகழேந்தி
21. புனைவின் நிழல் By மனோஜ்
22. நான் கண்ட ரஷ்யா By அகிலன்
23. பல நேரங்களில் பல மனிதர்கள் By பாரதி மணி
24. அடடே! By மதி கார்ட்டூன்கள்
25. உவன் இவன் அவன் By சந்ரு
26. ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு
27. அக்கிரகாரத்தில் பெரியார் By பி.ஏ.கிருஷ்ணன்
28. நம் தந்தையரைக் கொல்வதெப்படி By மாலதி மைத்ரி
29. இருப்பும் விருப்பும் By கி.பி. அரவிந்தன்
30. கர்ப்பமாய் பெற்ற கன்னிகள் By அ.கா.பெருமாள்
31. கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் By தொகுப்பாசிரியர்: ராஜமார்த்தாண்டன்.
32. அம்மாவின் ரகசியம் By சுநேத்ரா ராஜகருணாநாயகதமிழில் :- எம். ரிஷான் ஷெரீப்
33. அனுபவங்களின் நிழல் பாதை By ரெங்கையா முருகன் ,வி .ஹரி சரவணன் — வகை : குறுநாவல்கள்
34. நஞ்சையில நாலு மா By சுந்தரபுத்தன்
35. விழா மாலைப் போதில் By அசோகமித்திரன்
36. குருதியில் நனையும் காலம் By ஆளுர் ஷாநவாஸ் (முன்னுரை: ஆ.மார்க்ஸ்)
37. எழுதுவதெல்லாம் எழுத்தல்ல By பாமரன்
38. ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! By கோபிநாத்
39. சினிமாவின் மூன்று முகங்கள் By சுதேசமித்திரன்
40. எசப்பாட்டு By இந்தியா டுடெ தமிழ்ப் பதிப்பின் எக்ஸிக்யூட்டிவ் எடிட்டர் ஆனந்த் நடராஜன்
41. கலி புராணம் By மு.தளையசிங்கம்
42. இராசேந்திரசோழன் குறுநாவல்கள்
43. பேய்க்கரும்பு By பாதசாரி
44. சனங்களின் சாமிகள் கதை By அ.கா.பெருமாள்
45. தெரிந்த கோவை தெரியாத கதை By கவியன்பன்.கே.ஆர்.பாபு
46. இவன்தான் பாலா By பாலா
47. சுண்ணாம்பு கேட்ட இசக்கி By அ.கா.பெருமாள்
48. நான் நீ மீன் By கலாப்ரியா (கவிதை)
49. முதல் 74 கவிதைகள் By யுவன் சந்திரசேகர்
50. சூரியன் தகித்த நிறம் By பிரமிள்
51. மேன்ஷன் கவிதைகள் By பவுத்த அய்யனார்
52. எனது மதுக்குடுவை By மாலதி மைத்ரி
53. திரும்பிச் சென்ற தருணம் By பி.ஏ.கிருஷ்ணன்
54. பலார்ஷாவிலிருந்தும் நாக்பூருக்கு By தெலுங்கில் ஸ்ரீ விரிஞ்சி (தமிழில் :- கெளரி கிருபானந்தன்.)
55. களவு போகும் புரவிகள் By வேணுகோபால்
56. பூரணி பொற்கலை By கண்மணி குணசேகரன்
57. தஞ்சை ப்ரகாஷ் கதைகள் By காவ்யா சண்முகசுந்தரம்
58. மரணத்தின் வாசனை By அகிலன்
59. மயில்வாகனன் மற்றும் கதைகள் By அஜயன் பாலா
60. மிதமான காற்றும் இசைவான கடலலையும் By தமிழ்ச்செல்வன்
61. லீலை By சுகுமாரன்
62. பிரமிள் படைப்புகள் (முழுத் தொகுப்பு)
63. வெள்ளி விரல் By ஆர்.எம்.நெளஸாத்
64. நான் கொலை செய்யும் பெண்கள் By லதா (காலச்சுவடு)
65. நகரத்தில் மிதக்கும் அழியா பித்தம் By ம.தவசி
66. பதுங்குகுழி By பொ.கருணாகரமூர்த்தி
67. ஒரு பனங்காட்டுக் கிராமம் By மு.சுயம்புலிங்கம்
68. இலட்சுமணப்பெருமாள் கதைகள்
69. கருப்பாயி என்கிற நூர்ஜஹான் By அன்வர் பாலசிங்கம்
70. தொலைகடல் By உமா மகேஸ்வரி
71. லயோலா என்ற பெரும்பாம்பின் கதை By சுகுமாரன்
72. கனவுகளுடன் பகடையாடுபவர்கள் By ஜி.குப்புசாமி (மொழிப்பெயர்ப்பு )
73. என் தாத்தாவுக்கொருதூண்டில் கழி By ஜெயந்தி சங்கர்
74. அப்பாஸ்பாய் தோப்பு By எஸ்.அர்ஷியா
75. லண்டன் டயரி By இரா.முருகன்
76. ஆறா வடு By சயந்தன்
77. எட்றா வண்டியெ By வா.மு.கோமு
78. ராஜூ ஜோக்ஸ் (கார்டூன் நகைச்சுவை)
79. இதழாசிரியர்கள் மூவர் By விக்கிரமன்
80. அதிமனிதர்களும் எதிர்மனிதர்களும் By பிரேம்
81. கரித்தாள் தெரியவில்லையா தம்பீ… By பெருமாள் முருகன்
82. உடைந்த மனோரதங்கள் By பெருமாள் முருகன் (கு.ப.ரா. பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு)
83. சிலுவையின் பெயரால் By ஜெயமோகன்
84. கர்நாடக சங்கீதம் : ஓர் எளிய அறிமுகம் By மகாதேவன் ரமேஷ்
85. சுபமங்களா மொழிப்பெயர்ப்புக் கதைகள்
86. சங்க இலக்கியத்தில் பொது மக்கள் By முனைவர் கு.ராச ரத்தினம்
87. கோப்பை தேநீரும் கொஞ்சம் கவிதையும் By ஹரி கிருஷ்ணன்
88. டயலாக் By ஜூனியர் விகடன்
89. தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள் By யு.சுப்ரமணியன்
90. மதன் ஜோக்ஸ்
91. காவல் தெய்வங்கள் ( காலங்களை கடந்தும் நிக்கிற கிராம தேவதைகள் வழிபாடு ) By பி.சுவாமிநாதன்
92. சுதந்திரப் போரில் தமிழ் சினிமா By அறந்தை நாராயணன்
93. நான் எப்படிக் கம்யூனிஸ்ட் ஆனேன்?..வி.பி.சிந்தன் (இளையபாரதி )
94. :நேரு வழக்குகள் – ஆசிரியர் : ஞாலன் சுப்பிரமணியன்
95. சகுனம் By எஸ்.வி.ராமகிருஷ்ணன்
96. ஆ மாதவன் கதைகள்
97. ஒரு புகைப்பட நிருபரின் அனுபவங்கள். : ஆசிரியர்: மதுரை எஸ்.எஸ். ராமகிருஷ்ணன்
98. சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள் : ஆசிரியர் : சபீதா ஜோஸப்
99. சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1,2) : ஆசிரியர் : பாக்கியம் ராமசாமி
100. உரையாடலினி By   அய்யனார் விஸ்வநாத்
101. கு.அழகிரிசாமி கடிதங்கள் (கி.ரா.வுக்கு எழுதியது) By கி. ராஜநாராயணன்.
102. தொலைக்காட்சி விளம்பரத்தின் உள்முகங்கள் By கழனியூரன்
103. ஆறுமுகசாமியின் ஆடுகள் By சா.கந்தசாமி
104. புதுமொழி 500 – ரவிபிரகாஷ் (விகடன் பிரசுரம்)
105. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் – தொகுப்பு: பி.இ.பாலகிருஷ்ணன்
106. விட்டில் – சமகால அரசியல் பகுப்பாய்வு By இராகவன் (காலச்சுவடு பதிப்பகம்)
107. ஈழத்து நாட்டார் பாடல்கள் By ஈழவாணி
108. தமிழினி ஒரு வருட உள்நாட்டு சந்தா

இப்பொழுது உங்களுக்கான வினாக்கள்:

2012-ல் என்ன வாங்கினீர்கள்?

முக்கியமாக புனைவுகளில் சுவாரசியமானவை எவை?

புதிய புத்தகங்களில் தங்களைக் கவர்ந்த கதாசிரியர் யார்?

What have you read among Jeyamohan books?

ஜெயமோகன் எழுதிய புத்தகங்களின் பட்டியலை (http://www.jeyamohan.in/?p=11233) கொடுத்தார்.

எனக்கு மூன்று வினாக்கள் எழுந்தன:

1. உங்களுக்கு இந்த லிஸ்ட்டில் மிகவும் பிடித்தது எது?

2. அவசியம் இந்த வருடம் படிக்க வேண்டும் என்று நினைப்பது?

3. அனுராதா ரமணன்/சுஜாதா மட்டுமே அறிமுகமான நண்பருக்கு, பரிசாக எந்த படைப்பை கொடுப்பீங்க?

தர்மசங்கடத்திற்கு தயார் என்றால்… கொசுறு கேள்வி:
இவற்றுள் தங்களைக் கவராத நூல்?

வாக்கெடுப்பு (தற்போதைய நிலை) – தொகுக்கப்பட்ட பதில்:

மனதில் நிற்பவை

காடு – 7

பின் தொடரும் நிழலின் குரல் – 4

விஷ்ணுபுரம் – 3

சங்கச் சித்திரங்கள் – 3

இன்றைய காந்தி – 3

பனிமனிதன் – 2

ஏழாம் உலகம் – 2

நவீன தமிழிலக்கிய அறிமுகம் – 2

ஜெயமோகன் குறு நாவல் முழுத் தொகுப்பு – 2

சிறுகதைத் தொகுப்பு – 2

கொற்றவை

பத்ம வியூகம்

இலக்கிய முன்னோடிகள் வரிசை

நாவல் கோட்பாடு

ஊமைச்செந்நாய் (மத்தகம்)

வாசிக்க விழைபவை

கொற்றவை – 6

விஷ்ணுபுரம் – 4

ரப்பர் – 2

சங்க சித்திரங்கள்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

பின் தொடரும் நிழலின் குரல்

காடு

ஏழாம் உலகம்

குறுநாவல் தொகுப்பு

பரிந்துரை

ஜெயமோகன் குறு நாவல் முழுத் தொகுப்பு – 3

அனல்காற்று – 2

வாழ்விலே ஒருமுறை – 2

சங்கச் சித்திரங்கள் – 2

ஏழாம் உலகம் – 2

காடு

கன்னியாகுமரி

நிகழ்தல்

ஊமை செந்நாய் தொகுப்பு

நிழல் வெளி கதைகள்

நினைவின் நதியில்

இன்றைய காந்தி

தேவகி சித்தியின் டயரி, ஒன்றுமில்லை, விரல், மாடன் மோட்சம்

சிரமதசை

சங்கச் சித்திரங்கள்

இலக்கிய விமர்சனம் தொகுப்பு

ஏழாம் உலகம்

கொற்றவை

விஷ்ணுபுரம்

உங்கள் பதில்களை – https://groups.google.com/forum/#!topic/jeyamohan/R6CvIwQYmfM குழுமத்தில் தரலாம்.

ஆசாரக்கோவை கதைகள் 1 – ஆசார வித்து

தூரத்தில் விமானம் தெரிந்தது. அதில் அப்பா வருவார். தூங்குவதற்கு முன் கட்டியணைத்துப் போர்த்திவிட்டு ‘குட் நைட்’ சொல்வார். நாளைக்கு சனிக்கிழமை. வந்துவிடுவார்.

இப்பொழுது விமானம் நெருங்குகிறது. அல்ல… கலிஃபோர்னியா கான்டோர் வந்து இறங்கியது.

“நீ அழிந்து கொண்டிருக்கிறாயாமே”

“சேச்சே! உன் அப்பாவ கிட்டக்கயே வச்சுக்கணும்னு நீ கேட்ட இல்லியா! அதுக்காக வந்திருக்கேன்.”

“கருடன் மேல் பெருமாள் பறப்பது போல் நீதான் எங்கப்பாவ கூட்டிகிட்டு வரப்போறியா?”

“இல்ல… நான் படைச்ச மக்களையெல்லாம் அழிக்கணும்.”

“என்னது?”

“உனக்கு தெரியுமில்லியா? நாந்தான் இந்த உலகத்தை சிருஷ்டிச்சேன். முன்னுமொரு தினத்தில் மேலேயிருந்த முதியவர் பிரளயத்தை உண்டுசெஞ்சார். வாக்கு சாதுர்யம் இல்லாதவங்க எல்லாரும் அம்பேல். நான் மச்சாவதாரம் எடுத்து ஏட்டுச் சுரைக்காய்களைக் காப்பாற்றினேன். இப்பொழுதும் அந்த மாதிரி செய்யணும்”

“எனக்கு ஆசாரக்கோவை ஞாபகத்துக்கு வருது. உனக்கு நன்றி சொல்லணும்.”

நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார வித்து

“இருக்கட்டும். உங்கப்பாவை அமெரிக்க ஜனாதிபதி ஆக்கட்டுமா? டைம்ஸ் பத்திரிகையின் ஆண்டுநாயகர் ஆக்கட்டுமா? முதலாவதாக ஆனால் உலக வெம்மையினால் பனிக்கட்டி உருகி, பூமிச்சூட்டினால் சுனாமி கொணர்ந்த கோபன்ஹேகான் நாயகர் என்று புராணம் பாடலாம். இரண்டாமவர் ஆனால், பணமுதலைகளுக்கு டாலர் மாலை தொடுக்கும் கஜேந்திர யானை என்று வரலாறு போடலாம்.”

“இது இட்லி-வடையில் வரும் முனி கடிதம் போல் விஷயக்கோர்வை ஆகிறது. எனக்குப் புரிகிற மாதிரி சொல்லு.”

“ரொம்ப சிம்பிள். கூடிய சீக்கிரமே ஹைதியில் பூகம்பம் வரப்போகிறது. அதற்கு முன் கடவுளுக்கு பலிகடா தேவை. உங்கப்பன் மேல் பழியைப் போடலாம் என்று யோசிக்கிறோம். போதிய பஞ்சப்படியும் பதவியும் கொடுத்து விடுவோம். ரெடியா?”

விக்கிக் குறிப்பு: The Wiyot tribe of California say that the condor recreated mankind after Above Old Man wiped humanity out with a flood.[49] However, other tribes, like California’s Mono, viewed the condor as a destroyer, not a creator. They say that Condor seized humans, cut off their heads, and drained their blood so that it would flood Ground Squirrel‘s home. Condor then seized Ground Squirrel after he fled, but Ground Squirrel managed to cut off Condor’s head when Condor paused to take a drink of the blood.

தமிழ்ச் சிறுகதைகள்: ஆகஸ்ட் 2009

இந்த மாதம் படித்த கதைகளில் என் மனதை அசைத்துப் பார்த்து, கவனத்தை ஈர்த்து, உங்களுக்கும் குறிப்பிடத்தக்கவையாக இருந்த சில:

1. ஹரன்பிரசன்னா :: சொல்வனம் » அலை

நாவல்களிலே ஃப்ளாஷ்பேக் என்னும் வஸ்து சிரமமானது. சிறுகதையிலேயே நிகழ்த்தி காட்டுகிறார். சில வார்த்தைகள் கதையில் வரும்போது, அப்படியே நெகிழச் செய்து விடும். இங்கே ‘கந்தரப்பம்’. அப்படியே என்னை எங்கோ கொண்டு போய் விட்டது.

வம்பு கேள்வி: அதெல்லாம் சரி… ஹரன் பிரசன்னா ஏன் பைத்தியக்காரன் நடத்திய ‘உரையாடல்‘ போட்டியில் பங்குபெறவில்லை?

2. வ. ஸ்ரீநிவாசன் ::சொல்வனம் » உயிரிழை

முதல் வரியில் கதை முடிஞ்சுடணும் என்னும் கோட்பாட்டை பின்பற்றுகிறார். அந்த ஆரம்பத்தை வாசித்தவுடன் மேஜிகல் நியலிசமோ, குறியீட்டு இம்சையோ என்னும் பயத்தை அறவே போக்கியும் விடுகிறார்.

வம்பு கேள்வி: கதை கூட புரிஞ்சுக்கலாங்க. அது என்னங்க! அப்ஸ்ட்ராக்டா தோட்டா வட்டம் போட்ட படம்?

3. கர்ட் வானகட் :: சொல்வனம் » ஹாரிசன் பெர்ஜரான்மொழிபெயர்ப்பு :: விஷ்வநாத் சங்கர்

இம்சை இல்லாத மொழிபெயர்ப்பு. கதை ரொம்ப கவலைப்படுகிறது. கனவு லோகத்தில் சஞ்சரிக்கிறது. வெகு தீவிரமாக பிரசாரிக்கிறது.

வம்பு கேள்வி: கர்ட் வானகட் இப்ப இருந்தா ஒபாமாவின் உடல்நலத் திட்டமான சம்ச்சீர் ‘சேமநலக் காப்பீடு’ குறித்து என்னங்க சொல்லியிருப்பார்? அதற்கும் கத விட்டிருப்பாரோ!

4. கிச்சாமி | சத்யராஜ்குமார்.காம்

அமெரிக்க வாழ்க்கையை இவ்வளவு வெளிப்படையாக எழுதினால் தாங்காது சாமீ. ஆனாலும், நம்ம இணைய வாசகர்கள், கதையை கதையாகப் பார்க்காமல், ‘நீங்களா?’, ‘அப்படி சட்டம் கிடையாதே?’, ‘என் மனைவி அவ்வாறு இல்லையாக்கும்‘ என்று மறுமொழிவது தனிக் கதை.

வம்பு கேள்வி: கதைக்கு கீழே கருத்து சொல்ல முடியாம, வலைப்பதிவிலே தனியா இன்னொரு இடத்திலே பதில்பொட்டிய வச்சிருக்கீங்களே! ஏனுங்க?

5. நாகார்ஜுனன் :: திணை இசை சமிக்ஞை: 108

ஒரு கதை. அதை எப்படியெல்லாம் சொல்லலாம்? நாகார்சுனன் மறுமொழியில் இருந்து: தமிழ் எழுத்தாளர்கள் ஒரே ஸ்டைலில் பல கதைகளை எழுதியதை, எழுதுவதை (இதற்கு ஒரே major விதிவிலக்கு புதுமைப்பித்தன்) வாசிக்கிற, எழுதப்போவதையெல்லாம் வாசிக்கப்போகிற நமக்கு ஒரே கதையை பல ஸ்டைலில் எழுதினால் ஏன் வாசிக்க முடியாது..

வம்பு கேள்வி: உங்களுக்கு கதைக்கான கரு பஞ்சமா சார்? வேணும்னா நான் ரெண்டு knot சொல்லட்டுமாங்க!

6. முரளிகண்ணன் :: நீரோடை: துண்டு சிகரெட்

வெட்டிப்பயல் மாதிரி சொல்ணுமின்னா, இவரோட எழுத்து ‘சும்மா நல்லா இருக்கு நல்லா இருக்குனு சொல்லி போர் அடிச்சி போச்சி...’

வம்பு கேள்வி: உங்களுக்கு மெய்யாலுமே கற்பனை ஜாஸ்தியா? அல்லது நாட்குறிப்பை அப்படியே எழுத சங்கோசமா?

7. சித்ரன் :: நீரோட்டம் « புள்ளி

சமீபத்திய ‘கல்கி’ பத்திரிகையில் வெளியான கதை. சோடை போகுமா? நல்ல வேளையாக இந்த மாதம் கதை எழுதியிருக்கிறார். இவரெல்லாம் நம்ம லிஸ்டில் இருப்பது லிஸ்ட்டுக்கு பெருமைங்க.

வம்பு கேள்வி: அந்தக் கடைசி திருப்பம்தான் இதனுடைய மிகப் பெரிய உச்சம் என்றாலும், அப்படிப்பட்ட இறுதிவரி திகில் இல்லாவிட்டால், இந்தக் கதையை எப்படி முடித்திருப்பிர்கள்?

8. ஆல்பர்ட்டோ மொராவியா :: பறவையின் தடங்கள் » Blog Archive » உத்தரவிடு பணிகிறேன்மொழிபெயர்ப்பு :: நாகூர் ரூமி

மொழியாக்கம் என்பதெல்லாம் சொன்னால்தான் தெரியும். அப்படியொரு அசல் படைப்புக்கு நிகரான மொழி லாவகம். இன்னொரு முறை ஆசுவாசப் படுத்திக் கொண்டு வாசித்தால் உள்ளே பொதிந்திருக்கும் மற்ற விஷயங்கள் புலப்படும்.

வம்பு கேள்வி: கப்பலுக்கு போன மச்சான்‘ மாதிரி அடுத்த நாவல் எப்பங்க?

9. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: மெளன கோபுரம்

பறவைகள் விமானத்தில் மோதுவதால் அறுநூறு மில்லியன் டாலர் சேதம் ஆகின்றன. வானூர்தியில் வந்து விழும் பறவைக் கூட்டத்தின் மேல் 583 விபத்துகளின் பழியைப் போட முடியும். செத்த கணக்கு சேர்க்கவில்லை. இப்படியெல்லாம் புள்ளி விவரம் அடுக்குபவரை நேர்த்தியாக எதிர்கொள்ள உதவுவது புனைவுலகம். வாழ்வை சொல்லி, அதன் நியாயங்களை சரித்திர பூர்வமாக, கலாச்சார ரீதியாக புரிய வைக்கும் முயற்சிதான் இலக்கியம். இந்தக் கதை அந்த ரகம்.

வம்பு கேள்வி: உங்களுக்கு கதை எழுதுவது தவிர வேற எதாவது வேல உண்டுங்களா?

10. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: நண்டு சொன்ன `பெரியவங்க` கதை

வித்தியாசமான, அநாயசமான ஆரம்பம். கதை சொல்லி முடிக்கும் அவசரத்தில் நண்டு இருப்பதால், ஆசிரியரைப் பழிக்க வேண்டாம்.

வம்பு கேள்வி: நண்டு சொன்ன நாவலின் சுருக்கம் என்பதுதானே உண்மை?


தொகையறா

அந்தக் கால கவிதைகளில் தொகை (எட்டுத்தொகை போன்ற) நூல்களில் இருப்பதுதான் புகழ்பெற்று கோலோச்சுக்கிறது. அதே போல், இந்தக் கால சிறுகதைகளுக்கும் அறிமுகம் வேண்டுபவர், ‘நெஞ்சில் நிறைந்தவை‘ (சிவசங்கரி வானதி பதிப்பகம்), ‘முத்துக்கள் பத்து‘ (அம்ருதா பதிப்பகம்), ஐம்பதாண்டு கால தமிழ்ச் சிறுகதைகள் (சா. கந்தசாமி கவிதா பப்ளிகேஷன்ஸ்), ‘எனக்குப் பிடித்த கதைகள்‘ (பாவண்ணன்) போன்ற தொகுப்புகளையும் எஸ் ராமகிருஷ்ணன், சுஜாதா, ஜெயமோகன், க.நா.சு. இரா முருகன், போன்றவர்களின் பரிந்துரைப் பட்டியலையும் நாடுகிறார்கள்.

இவர்கள் எல்லோருமே சொல்லி வைத்தது போல் தற்கால இணைய எழுத்துகளை, வலையில் மட்டும் புழங்கும் தமிழ்ச் சிறுகதைகளை முற்றாக புறக்கணித்துவிடுகிறார்கள். இதற்கு நிவர்த்தியாக, தமிழ் வலையகங்களில் (சொல்வனம், திண்ணை, உயிரோசை, நிலாச்சாரல், தமிழோவியம், தமிழ்ப்பதிவுகள், இன்ன பிற) கிடைப்பதில் குறிப்பிடத்தக்க ஆக்கங்களை ஒரு இடத்தில் சுட்டி கொடுத்து தொகுத்தால் செமையாக இருக்கும்.

இணையத்தில் தடுக்கி விழுபவர்களுக்கும் பயனாக இருக்கும். இணையமே கதியாக கட்டுரைகளையும் ட்விட்டுகளையும் மட்டுமே வாசிக்கும் என் போன்றோருக்கும் உருப்படியான விஷயமாக இருக்கும்.

எழுத்தாளர் பெயரோ, எழுதியவரின் மூலமோ கூட தெரியாமல் போகலாம். ஆனால், நாளைய பின்னும் ‘முக்கியமான புனைவு’ என்று தேடினால் எளிதில் மாட்டும்.

பரிந்துரை: இரண்டு இணையத்து சிறுகதைகள்

சமீபத்தில் இரு நல்ல புனைவு வாசிக்க கிடைத்தது. அவை:

1. சத்யராஜ்குமார் :: மைய விலக்கு « இன்று – Today

2. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: தேவதைகள் காணாமல் போயின – சிறுகதை

அவற்றை முடித்து விட்டு இந்தப் பதிவைப் படிப்பது கதைகளுக்கு நீங்கள் செய்யும் ஷேமம்.


மேற்கோள் மூலை

ச.ரா.குமார் கதையில் இருந்து கவர்ந்த இரு இடங்கள்:

அ) இன்பாக்சில் நிஷா அனுப்பிய மின்னஞ்சல். ரொம்பவும் கோபமாகி விட்டால் நிஷா இமெயிலில்தான் பேசுவாள். பத்து கிலோ பைட்களுக்கு திரையில் தெரிந்தது அவள் கோபம்.

ஆ) ‘நீயும், நிஷாவும் ஏன் இப்படி கஷ்டப்படணும்? பார்த்துக்க ஆயிரம் பேர் இருக்காங்க. இங்கே நிறைய சொகுசு இருக்கு. ஆனா லைஃப் இல்லை. நாலு சுவத்துக்குள்ள நாம நாலு பேருமே முகத்தைப் பார்த்துக்கிட்டு… மெட்ராசுக்குப் போயிரலாம்டா.’


ரா.கி.யில் கவர்ந்தவற்றிற்கு சாம்பிள்:

அ) ஜீரணமாகாத உணவை தள்ள முயற்சிப்பதுபோன்ற கடலின் முயற்சி ஒவ்வொறு முறையும் அலையென தோற்கும் காட்சி வியப்பானதே. எதைஎதையோ விழுங்குவதும், பின்னர் எதுவுமே தெரியாதுபோல் கிடப்பதும் இதற்கு வாடிக்கையாகிவிட்டது.

ஆ) ஜப்பான் நாட்டவர்களின் முகவடிவம், எங்கு ஆரம்பித்தாலும் கூர்மையான தாடையிலேயே விழும்.


ஆறு வித்தியாசங்கள்

இரு கதைகளுமே அதிர்ச்சி அல்லது வித்தியாசமான முடிவில் நம்பிக்கை கொண்டவை. இரு கதைகளுக்குமே அது தேவையில்லை என்பது வேறு விஷயம்.

ஒன்று போட்டிக்காக எழுதப்பட்டது. மற்றொன்று அந்தவித நிர்ப்பந்தங்களுக்குட்பட்டு உருவாகாவிட்டாலும், போட்டியில் கலந்துகொள்வதற்கான முஸ்தீபுகளும் முகாந்திரங்களும் நிறைந்தது.

வார்த்தைகளின் விளிம்பில் நிற்பவரிடம் கதை ஜாஸ்தி. இன்று – டுடேவிடம் மூக்கு மேல் வரவைக்கும் விவாதப்புள்ளிகள் ஜாஸ்தி.


விமர்சனம்

சத்யராஜ் கதையில் விமர்சிக்க விஷயம் ஏதுமில்லை. பட்டிமன்றம் மாதிரி இன்னும் கொஞ்சம் எண்ணவோட்டமோ, உரையாடல் மன்றமோ கட்டி, மெரீனா பீச் மணல் அளவு வியாபிக்க கூடிய சமாச்சாரத்தை சுண்டல் மாதிரி பொட்டலம் கட்டி இருக்கிறார்.

குறைந்த பட்சம் அந்த மின்னஞ்சலையாவது அனுபந்தம் ஆக்கி இருக்கலாம் என்னும் ஏக்கம் இருக்கிறது.

oOo

காதலியின் நினைவுகள் என்று இன்னொரு கதை எவராவது எழுதினால் அலுவலை நோக்கி(யே) வடக்கிருக்கலாம் என்று எண்ணுமளவு அலுத்துப் போன டாபிக்கில் பூந்து விளையாடியிருக்கிறார் கிரி. சம்பிரதாயமான ஆரம்பம்.

இத்தினியூண்டு கதையில் உலாவும் அத்தனை பாத்திரங்களுக்கும் மனதில் நிற்கும் அறிமுகங்கள். தண்ணீரில் மிதக்கும் ப்ளாஸ்டிக் ஆக, கவிஞர்களே உவமைகளுக்கு பஞ்சம் பாடும் இந்தக் காலத்தில் சக்கையான தக்கை கொண்ட மிதவையான உறுத்தாத பயன்பாடு அமர்க்களம்.

அப்படியே, ‘நான் அந்தக் காலத்தில் லால் கிலாவில் இப்படித்தான்…’ என்று காதலி காலடி தேட வைப்பதே கதையின் வெற்றி.

இருவருக்கும் என் நன்றி.