Category Archives: Tamil Blog

2 நாள் அகில இந்திய வேலைநிறுத்தம்: பாரத் பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஸ்திரமான பென்சன் + ஜாலியான சீட் தேய்ப்பு உத்தியோகம் + வேளா வேலைக்கு கை நிறைய சம்பளம் என்று இருந்தாலும் ஒழுங்காக உழைக்கும் கால் செண்டர்காரர் மேல் பொறாமை + பிசினெஸ் துவங்க இயலாத கையாலாகாத்தனம் + பங்குச்சந்தை விளையாடத் தெரியாத பயம் எல்லாம் இன்னொரு ஸ்டிரைக்கிற்கு கால்கோள் இட்டிருக்கிறது.

இரண்டு நாள் விடுமுறை… அப்படியே வாரயிறுதி! இந்தியா ஒரு கொண்டாட்டம்.

முன்பு எழுதிய பதிவுகளில் இருந்து:

1. நியு யார்க் நகரில்: கார் கண்ணாடி மீது ஓங்கித் தட்டுகிறார்களே, என்று அகஸ்மாத்தாக் கவிழ்ந்த தலை கலவரத்துடன் தூக்கினால், மிக மோசமாக பிறப்பை குறித்துத் திட்டப்படுவீர்கள். ‘உன்னால் என்னை வசை பாடத்தானே முடியும்!‘ என்று அலட்சிய புன்னகை தவழ்ந்த மேலாளர் ஒருவரின் ஹ்யுண்டாய், ‘7-ஜி ரெயின்போ காலனி‘யில் கிழிப்பாரே… அந்த மாதிரி கூரிய கத்தியால் உரசப்பட்டது. யூனியனின் சக்தியை நம்பும் போலிஸ் காரர்களும், உள்ளே இருக்கும் நபரை கிழிக்காதவரை, ‘உனக்கு வேணும்டா‘ என்று பரபிரும்மமாக இருப்பார்.

மேலும்


2. ஃப்ரான்ஸ் அமெரிக்க ஸ்டைல் பொருள்முதல்வாதத்தை முன்னிறுத்துவதில்லை. தொழிலாளர்களுக்கு ‘உறுதியான நிலையான நீடித்த வேலை’ என்று நிறுவனங்களை அச்சுறுத்துவதால், புதியவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ள மேலாளர்கள் தயங்குகிறார்கள்.
தேவையான போது தொழிலாளர்களைக் கூட்டவும், குறைக்கவும் அமெரிக்காவில் இருக்கும் சட்டங்கள் எளிதாக உள்ளன. ஆனால், ·ப்ரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில், இந்த வசதி இல்லாததால், நிறுவனங்களுக்கு கடும் மனத்தடை ஏற்படுகின்றன. பொருளாதாரம் வீழ்ந்தாலும் தொழிலாளர்களை நீக்க முடியாத நிலை. நீக்கினால், நஷ்ட ஈடாக பெரும்பணம் கொடுத்தனுப்பவேண்டிய மொகஞ்சதாரோ காலத்து சட்டதிட்டங்கள்.

மேலும்


3. காலை ஆறு மணிக்கு வந்துவிட வேண்டும். மாலை இரண்டே முக்கால் வரை அங்கேயேதான் இருக்க வேண்டும். மதிய உணவிற்கு 45 நிமிட இடைவேளை மட்டும் உண்டு. மற்றபடி மூச்சா போவதென்றால் கூட மேலாளரின் கடைக்கண் பார்வை வேண்டும்.

இப்படி அனுதினமும் கர்ம சிரத்தையாக என்ன வேலை செய்கிறார்கள்?

ஒன்றும் கிடையாது. கொஞ்சம் சீட்டு; அவ்வப்போது திரைப்படம்; நிறைய அரட்டை.

நான் கணினியில் நிரலி எழுதுபவர்களை சொல்லவில்லை. அமெரிக்க ஆட்டோ தொழிற்சாலையில் வேலை செய்த 15,000 முன்னாள் உழைப்பாளிகளை சொல்கிறேன்.

இப்படி சும்மா கிடப்பதற்கு எவ்வளவு சம்பளம்?

அதிகமில்லை. ஆண்டுதோறும் அமெரிக்க டாலரில் 100,000தான் கிடைக்கிறது.

மேலும்

விரைவு நகரம்: அவசர உணவும் தனிமை வாழ்க்கையும்

மலிவு விலை சிற்றுண்டி கடைகள் சிலப்பதிகார காலத்திலேயே கோலோச்சியதை சாலமன் பாப்பையா முதல் சாரு நிவேதிதா வரை பதவுரை கொடுப்பார்கள். மாநகராட்சி சார்பில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி வழங்கும் சாப்பாட்டு கடைகளை ஜெயலலிதா இன்று திறந்திருக்கிறார்.

அமெரிக்காவில் ஃபாஸ்ட் ஃபுட் மிகவும் பிரபலம் ஏன்?

* தினக்கூலிக்கு ஓடும் மக்கள் அவசர அவசரமாக வேலைக்கு ஓடுவார்கள். ஒரு நிமிடம் தாமதமாக வந்தால் கூட சம்பளப் பிடிப்பு நிறைந்த வாழ்க்கை. அவதி அவதியென ஏதாவது உண்டு கொண்டே உழைப்பதற்கு ஏற்ற உணவு

* அன்றாடங்காய்ச்சி வீட்டில் அரிசி ஸ்டாக் இருக்காது. காய்கறி, பருப்பு எல்லாம் தினந்தோறும் வாங்கி அறுசுவையாக சமைக்க முடியாது. எனவே, சம்பளம் வந்தால் சோறு

* உடைந்த குடும்பங்கள் நிறைந்த அமெரிக்காவில், இல்லத்தரசி இல்லாத சூழலில், மெக்டொனால்ட்சும் சிபோட்லேவும் சுடச்சுட பரிமாறும்.

* சுவையை விட வயிறு ரொம்புதல் முக்கியம். கொஞ்சமாய் சாப்பிட்டாலும், அடுத்த வேளை வரை பசி எடுக்கக் கூடாது. நடு நடுவே நொறுக்குத் தீனிக்கு எல்லாம் பிரேக் கிடைக்காது. ஃபிரென்சு ஃப்ரைசும் கோழிக்காலும் கொழுப்பு நிறைந்த திருப்தி தரும்.

இந்தியாவில் கே.எஃப்.சி. என்பது நண்பர்கள் கூடும் தலமாகவும், சப்வே என்பது பத்தியக் கட்டுப்பாட்டுக்காரர்களின் விருப்ப உணவகமாகவும் இருப்பதுதான் பாரதீய கலாச்சாரமோ?

போரும் அரசியலும்: ரத்தசரித்திரம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருக்கிறார். உலக வர்த்தக மையத்தை இடித்த தாலிபான் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்துகிறது. அப்படியே, சும்மா கொஞ்சம் மகாபாரத புராணக் கதை.

துரோணருக்கு முன்பு பாண்டவர்களுக்கு ஆசிரியராக, குருவாக இருந்தவர் கிருபர். கிருபருடைய சகோதரி கிருபியை, துரோணருக்கு மணம் செய்வித்தார்.

கிருபர், கௌரவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். துரியோதனனிடம் நன்றியுடன் வாழ்ந்து வந்த அவர், மகாபாரதப் போரில் கௌரவப் படையின் 11 படைத்தலைவர்களுள் ஒருவராகவும் இருந்தார். அர்ஜுனன் மகன் அபிமன்யுவை தீர்த்துக் கட்டியவர்களில் முக்கியாமானவர்.

கிருஷ்ணரின் சதியால் அசுவத்தாமாவை படைத் தளபதியாக நியமிக்கவே இல்லை. மகாபாரதப் போரின் இறுதியில் எஞ்சிய கௌரவர்களுள் கிருபர், கிருதவர்மன், அஸ்வத்தாமா ஆகிய மூவரே. மூவரும் பாண்டவர்கள் அடைந்த வெற்றிக்குப் பிறகு, துரியோதனனின் வீழ்ச்சியால் மனம் கொதித்திருந்தார்கள். அஸ்வத்தாமா, பாண்டவர்களை வேரோடு அழிக்க நினைத்தான்.

கிருபர், அவனுக்குப் பல அறிவுரைகளைக் கூறினார். கிருஷ்ணரின் சகாவான கிருதவர்மா என்ற யாதவ குல மன்னரும் அவ்வாறே கூறினார். ஆனால் கிருபரின் யோசனையை அஸ்வத்தாமா ஏற்கவில்லை. அஸ்வத்தாமா கிருபரின் உடன் பிறந்த கிருபியின் மகன். துரோணருக்கு முன்பே அஸ்வத்தாமன் கருத்தரிப்பு நடந்துவிட்டது.

அஸ்வத்தாமா இரவோடு இரவாக பாண்டவர்களின் பாசறை நோக்கிச் சென்ற போது, கிருபரும், கிருதவர்மனும் உடன் சென்றார்கள். அஸ்வத்தாமா பாசறைக்கு உள்ளே சென்றபோது, கிருபர், கிருதவர்மன் இருவரும் பாசறையின் முன்வாசலில் ஒருவரும், பின்வாசலில் ஒருவருமாக காவலுக்கு நின்றார்கள். பாஞ்சாலியின் புதல்வர்களையும் திருஷ்டத்யும்னனையும் கொன்ற பிறகு, மூவரும் துரியோதனனின் இருப்பிடத்துக்குச் சென்று இந்தச் செய்தியைக் கூறிய பின்பே துரியோதனனின் உயிர் பிரிந்தது.

கிருபர் ஹஸ்தினாபுரத்தில் அனைவராலும் போற்றத்தக்கவராக வாழ்ந்தார். அபிமன்யுவின் புத்திரன் பரிக்ஷித்து இளவரசனுக்கு கிருபரே, ஆசாரியராக இருந்து அஸ்திர வித்தைகளைக் கற்றுத்தந்தார்.

Harvard Education vs Pondycherry Congress: Politicians Cheat

பல ஜனாதிபதிகளையும் செனேட்டர்களையும் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் உருவாக்குகிறது. டெல்லி ஜே.என்.யூ.வில் படித்தால் இந்தி(ரா)யா கம்யூனிஸ்ட் காங்கிரசில் தஞ்சமடையலாம் என்பார்கள்; ஹார்வார்டில் படித்தால் அமெரிக்க காங்கிரஸில் நுழையலாம்.

அவ்வளவு புகழ்பெற்ற ஹார்வார்டு ‘காங்கிரஸ் 101’க்கு இறுதி பரீட்சை எழுதிய எழுபது மாணவர்களை இடைநீக்கம் செய்திருக்கிறது. அரசாங்கம் குறித்தும் சட்டசபை குறித்தும் அறிமுகம் செய்யும் வகுப்பில் காப்பியடித்த குற்றத்திற்காக அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.

பாண்டிச்சேரி போல் புத்தகம் பார்க்காமல் எழுதும் தேர்வு அல்ல. வீட்டிற்கே கேள்வித்தாளைக் கொடுத்தனுப்பி விட்டார்கள். இணையத்தைப் பார்த்து எழுதலாம். புத்தகத்தைத் திறந்து வைத்து விடை அளிக்கலாம். நண்பர்களிடம் கலந்தாலோசித்து, சொந்த நடையில் பதில் போடலாம். ஆனால், ஒரே விடைத்தாளை அனைத்து மாணவர்களும் காப்பி பேஸ்ட் செய்ததால் மாட்டிக் கொண்டார்கள்.

புதுச்சேரி அமைச்சர் கல்யாணசுந்தரம் போல் நமது ஊர் காங்கிரஸ்காரர்கள் நிலைமை இன்னும் மோசம். பொதுத் தேர்வு மோசடிக்கு எவ்வளவு முஸ்தீபுகள் தேவையாக இருக்கிறது? பிட் வேண்டும்; ஆள் மாற்றாட்டத்திற்கு சூட்டிகையானவர் வேண்டும்; பள்ளி ஆசிரியர் முதல் பியூன் வரை கவனிக்க வேண்டும்.

என்னவாக இருந்தாலும் அமெரிக்க ஐவி லீக் பல்கலை படிப்பு போல் ஆகாது!

இளையராஜா கச்சேரிகள்: விடாயாற்றி உற்சவம்

இளையராஜாவை இரண்டு மூன்று தடவை பார்த்திருப்பேன். கங்கை அமரன் போல் எல்லா வருடமும் ராஜா வந்ததில்லை.

கபாலீஸ்வரர் கோவில் கச்சேரிகள் மூன்று வகைப்பட்டவை. ஐந்து மணிக்கு சொற்பொழிவு + உபன்யாசம். கிருபானந்த வாரியார்கள், கீரன், திருத்தணி சுவாமிநாதன் என்று பெரியோர் பாடலுடன் உரை கொடுப்பார்கள். ஏழு மணிக்கு மெல்லிசை + பக்தி பாடல்கள். ஐயப்பன் வீரமணி, சூலமங்கலம் சகோதரிகள் போன்றோர் குரல் கொடுப்பார்கள். அதன் பிறகு இரவுக் காட்சிதான் நான் பார்த்தது.

எம்.எஸ். விஸ்வநாதனும் உண்டு. எட்டு மணி கச்சேரியை அவர் கறாராக ஒன்பது மணிக்கெல்லாம் தொடங்கிவிடுவார். பாவலர் பிரதர்ஸுக்கு கெத்து ரொம்ப ஜாஸ்தி. நிகழ்ச்சியைத் துவங்குவதற்கு பத்து மணி கூட ஆகிவிடும். பின்னிரவு ஒரு மணி வரை பேச்சும் அரட்டையும் நக்கலும் கலந்து பாடல் மிக்ஸ்களும் வந்து கொண்டேயிருக்கும்.

விநாயகர் மட்டும்தான் கச்சேரி கேட்பது போல் சன்னிதியை திறந்து வைத்திருப்பார். மற்ற தெய்வங்கள் எல்லாம் நகை நட்டுடன் பத்திரமாக உறங்க சென்றுவிடும்.

ஆர்க்கெஸ்ட்ரா எல்லாம் பிரும்மாண்டமாக இருந்ததில்லை. அந்தப் பக்கம் எட்டடி; இந்தப் பக்கம் பத்தடி என்று இருக்கும் குட்டி மேடைக்குள் கோரஸ், டிரம்ஸ், ஹம்மிங்ஸ் எல்லாம் அடைக்கணும். ஒவ்வொரு வருடமும் சுவாரசியமாக செய்வார்கள். கிளாசிக்ஸ் முதற்கொண்டு அப்பொழுது வந்த புதுப்பாடல் வரை எல்லாமும் கொடுப்பார்கள்.

கோவில் என்பதற்காக சமரசம் செய்து கொள்ளாமல், ‘வாடீ என் கப்பங்கிழங்கே’ என்று கூத்துப்பாடலும் வாழ்வே மாயத்தின் ‘தேவி’ கிண்டல்களும் கிட்டத்தட்ட கற்பகாம்பாள்களைக் குறி வைத்தே அரங்கேறும்.

ஆனால், அந்தக் காலத்தில் இவ்வளவு கற்பழிப்புகள் ஊடகங்களில் பாடல் பெறவில்லை. தனிமனித அக்னிப் பரீட்சையாகவே முடங்கிவிட்டது.

மனைவியை மயக்குவது எப்படி?

ஆண்களுக்கு அழகே வீட்டைக் கலைத்துப் போட்டு வைத்திருப்பதுதான். அவர்களால் தங்கள் இல்லங்களை அருங்காட்சியகம் போல் கலை மிளிர, சமையலறையில் சுத்தம் சோறு போட வைக்க முடியும். பூந்தோட்டம் அமைத்து, வைத்தது வைக்கப் பட வேண்டிய இடங்களில் பொருந்தி வைக்க முடியும்.

ஆனால், இல்லத்தரசிகளுக்கு பொறுப்புணர்வு கூடிய கர்வம் தர விரும்பும் ஒவ்வொரு குடும்பத் தலைவனும், ‘நீ மட்டும் இல்லேன்னா… நான் அதோகதி’ என்று சொல்லி ஏமாற்றி, வெற்றி காண்பான்.

அப்படி ஒரு ‘மௌன ராக’ தருணத்தை மெரினோ லாமினேட்ஸ் விளம்பரம் ஆக்கியிருக்கிறது:

அம்மா கோந்து கணவன், பொறுப்பான புருஷலட்சணமிக்க பராமரிப்பாளனாக மாறுவதை சுட்டுகிறார்கள். இளைய வயதினர் அவசரம் அவசரமாக முடிவெடுப்பதை சுட்டுகிறார்கள். சென்ற தலைமுறையினர் நாலு சுவருக்குள் புனருத்தாரணம் செய்யாத வீட்டிற்குள் குடித்தனம் செய்த காலம் இறந்து போனதை சுட்டுகிறார்கள்.

இப்படி சட் சட்டென்று டைவோர்ஸ் முடிவுகளையும், கண்ணாலம் கட்டிக்கிறியா உறுதிமொழியும் மாற்றி மாற்றி முடிவெடுக்கும் மின்னல் யுகத்தில் இருக்கிறோம்.

Vanji Kottai Vaaliban and Braveheart: Historical Fiction in Movies

ராகா.காம் செய்யும் மிக உத்தமமான காரியம் என்பது நான்-ஸ்டாப் கன்னலில் பாடல்களை தொடர் ஒலிபரப்பாக கோர்ப்பதுதான். ஒரு நாள் சந்திரபாபு, இன்னொரு நாள் இசையமைப்பாளர் வேதா, என்னும் வரிசையில் இன்று கிளாசிக்ஸ் ஓடிக் கொண்டிருந்தது.

அப்பொழுது வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் கொத்தமங்கலம் சுப்பு எழுதி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ‘வெற்றிவேல்… வீரவேல்’ கிடைத்தது.

பல நல்ல புறநானூறு பாடல்களையும் பரணி பாடிய வரலாற்றையும் எழரை நிமிடத்திற்கான நாடகக் காட்சியாக ஒருங்கிணைத்திருக்கிறார்கள். சட்டென்று ‘பிரேவ் ஹார்ட்’ திரைப்படத்தை நினைவிற்கு கொண்டு வந்தது.

ஸ்காட்லாந்து மக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக ஏன் சண்டை போட்டார்கள்? போர்களுக்காக வில்லியம் வாலஸ் எவ்வாறு மக்களை சேர்த்தார்? Offence is the best defense என்பதை தற்கால விளையாட்டு பயிற்றுநர்களுக்கு, அக்கால வரலாறு கொண்டு விளக்கிய படம். மெல் கிப்சன் நடித்த ’பிரேவ்ஹார்ட்’டில் சிலந்தியைப் பார்த்து விடாமுயற்சியைக் கற்றுக் கொண்ட ராபர்ட் ப்ரூஸும் இருந்தார்.

இரண்டுமே பிரும்மாண்டமான போர்ப்படங்கள். வில்லன்களாக அரசர்களைக் கொண்டவை. காதல் நிறையவே உண்டு. இரண்டு நாயகிகள் கொண்ட கதை. வீரதீரம் நிறைந்த நாயகன். 1958ல் தமிழில் வெளியான ‘வ.கோ.வா.’ சூப்பர் ஹிட். ப்ரேவ்ஹார்ட்டும் நல்ல வசூல் கொடுத்தது.

மீண்டும் இந்த மாதிரி சரித்திரத்தையும் மசாலாவையும் தேசப்பற்றையும் சரியாக மிக்ஸ் செய்யும் மசாலாக்கள் எப்பொழுது வரும்?

சுயமனை புகுதல்: செய்தொழில் ஆக்கமும் தன்வினை ஊக்கமும்

எது வேலை செய்யாவிட்டாலும், யாரையாவது அழைத்து சரி செய்வது பால்ய கால வழக்கம். ஃப்யூஸ் போய் விட்டதா… எலெக்ட்ரீஷீயனை கூப்பிடு. மோட்டார் ஓடவில்லையா… ரிப்பேர் செய்பவர் வீடு வரை சென்று கையோடு அழைத்து வா.

இப்படி வளர்ந்தவனை, லைட் பல்ப் மாற்றுவது; உடைந்ததை சரி செய்வது என்று ஹாஸ்டல் வாசம் கொஞ்சமாக மாற்றியது. அமெரிக்கா வாசம் இன்னும் கொஞ்சம் மாற்றியிருக்கிறது.

கொஞ்சம் மாற்றியதற்கு அடையாளமாக பாத்ரூம் சிக்கல்களை சீர் செய்து, அதன் ஆய பயனைக் கண்டு பெருமிதமும் பெற ஆரம்பித்திருக்கிறேன்: Unclog a Stopped Bath Drain – Lowe’s Creative Ideas

ஒரு மணி நேரத்திற்கான சாஃப்ட்வேர் எஞ்ஜினீயர் சம்பளமும் தச்சர் சம்பளமும் கிட்டத்தட்ட சமம். என்னுடைய சனி, ஞாயிறுகளை சும்மா கழித்துக் கொண்டு வீணாக்காமல், நாலு காசு சேமிக்க வேண்டுமானால், நானே ப்ளம்பர் ஆகவும், நானே மர வேலை செய்பவன் ஆகவும் மாறுவதுதான் ஆக்கபூர்வமான செயல்.

இந்த மாதிரி அமெரிக்காவும் வரும் ஒவ்வொருவம் அமெரிக்கக் கலாச்சாரத்திற்கு மாறுவதற்கு பெயர் ‘மெல்டிங் பாட்’ – கலந்துருகும் கலயம்.

இதற்காகவே ஹோம் டிப்போவும் லோவ்சும் வாரயிறுதிகளில் பயிற்சி வகுப்பு எடுக்கிறார்கள். முற்றிலும் இலவசமாக. அதற்கு எல்லாம் போய் ’இயல், இசை, நாடகம் எல்லாம் அறிய வைத்தாய்… தேவீ’ என்று அறிவிப்பதற்கு பதில் சோபாவில் பஜ்ஜியும் தொலைக்காட்சியில் ‘கண்ணா லட்டு திங்க ஆசை’யும் பார்ப்பதற்கும் அமெரிக்காவில் பெயர் உண்டு – சாலட் பார் (பழ/காய்கறிக் கலவை சந்தை)

கும்கி: பார்க்கலாமா? போரா?

பத்து நிமிடத்தில் எடுக்க வேண்டியதை முழு நீளப் படமாக்கினால் எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கு ‘கும்கி’ நல்ல உதாரணம்.

ஹிட் ஆன பாடல்கள். ஓவர் ஆக்டிங்கில் சீனியர் சிவாஜியாக மிளிரும் தம்பி ராமையா. முறைப்பும் உடற்பயிற்சியும் ஆகிய இரண்டு பாவங்கள் மட்டுமே அறிந்த ஜூனியர் சிவாஜியாக விக்ரம் பிரபு.

எருமையைக் கண்டு யானை பின்வாங்குவது படத்தின் ஹைலைட். யானைகளுக்கும் லைசன்ஸ் பேப்பர் வேண்டும் என்றறிய வைத்தார்கள். இவ்வளவு மரங்கள் நிறைந்த காடுகளுக்கு தப்பிச் செல்லாமல் போயிட்டோமே என்று வீரப்பன் & கோ வருந்தியிருப்பார்கள்.

என்னதான் செல்லப் பிராணி வளர்த்தாலும், காதலின் முன் அது தூசு என்பது படத்தின் நீதி. அடிதடியை விட பாசமும் ப்ளாக்மெயிலும் காதலை உடைக்க கை கொடுக்கும் என்பது கொசுறு மெஸேஜ்.

ஒரு படமோ, இரண்டு படமோ நன்றாக இயக்கிவிட்டு, அதன் பிறகு, அசிஸ்டெண்ட் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தயாரிப்பில் இறங்கி, பிறரின் படங்களை மெருகேற்றுவதுதான் இப்போதைய டிரெண்ட். பிரபு சாலமனும் அவ்வாறே ஷோ யானையாக மாறி கும்கிகளை அடையாளம் காட்டணும்.

Obama 2nd Term start: State of the Union 2013

நேற்று ஒபாமா பேசினார்.

பிடித்த தலைவர்களின் பிடித்தமான கொள்கைகளை கேட்பது சுகம். அவை நிறைவேறாவிட்டாலும் கூட கேட்பது சுகம். நாளைக்கு எழுந்தால் இவற்றுக்கு எல்லாம் பலமான முட்டுக்கட்டை விழும் என்று அறிந்திருந்தாலும், தலைவரின் உணர்ச்சிகரமான உரையின் சாத்தியக்கூறுகளையும் வருங்காலம் குறித்த கனவுகளுக்காகவும் நேரலையில் பார்ப்பது சுகம்.

கூடை கவிழ்த்த மாதிரி சிகை அலங்காரத்துடன் மிஷேல் ஒபாமா. அவருக்கு ஒரு புறம் இறந்த காலம். இன்னொரு புறம் நம்பிக்கை காலம். பதினைந்து வயது மகளை தெருச்சண்டை துப்பாக்கிச் சூட்டிற்கு பலி கொடுத்தவர் ஒரு பக்கம் அமர்ந்திருந்தார். மின்ரத்து ஆன புயல் இரவில் பதினைந்து சிசுக்களை காப்பாற்றி கரை சேர்த்த செவிலி இன்னொரு புறம் அமர்ந்திருந்தார்.

ஒபாமா பேசியதில் பிடித்த மேற்கோள்கள்:

* கென்னடி சொன்னதாக, “சட்டசபைக்கு வருவது போட்டி போட்டு ஆட்சியைப் பிடிப்பதற்காக அல்ல; முன்னேற்றத்திற்காக கை கோர்ப்பதற்காகத்தான் அரியணை போட்டி.”

* ’நிறைவேற்ற இயலாத புதிய புதிய வாக்குறுதிகளை அரசாங்கம் கொடுக்க வேண்டாம்; ஆனால், ஏற்கனவே உறுதியளித்த சத்தியங்களைக் காப்பாற்ற வேண்டும்’

* ‘கட்டற்ற குண்டுகளை கட்டுப்படுத்தும் சட்டத்திற்கான உங்கள் வாக்குகளை நியூ டவுன் சிறார்கள், உங்கள் கடமையாக ஆக்கியிருக்கிறார்கள். ஏகே47 துப்பாக்கிகளால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோர் வாக்குரிமை கேட்கிறார்கள்.’

இவ்வளவு பேசினாலும், செயலாற்றாத காங்கிரசில்தான் சூட்சுமம் இருக்கிறது. அனைவருக்கும் குறைந்த பட்ச சம்பளத்தை உயர்த்தினால் பொருளாதார தடுமாற்றம் நிறைந்த சூழலில் பணவீக்கமும் பெருகும் என்பதை குடியரசு கட்சி அல்ல… ஒபாமாவின் டெமோகிரட்ஸே அறிவார்கள்.

நினைப்பது நல்லதுதான்; ஆனால், நடக்கவேண்டியது என்ன?