Salma – Links


————————————————————————————–
எனக்கு மதப்பற்று கிடையாது
கவிஞர் சல்மா – நேர்காணல் – வி.சி.வில்வம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் ரொக்கையா என்கிற கவிஞர் சல்மா. பெண்ணுரிமைப் போராளி, கவிஞர், எழுத்தாளர், பேரூராட்சி தலைவர், சமூகநல வாரியத் தலைவர் என்கிற பயனுள்ள பல முகங்கள் இவருக்குண்டு. இவரின் பச்சை தேவதை, ஒரு மாலையும் இன்னும் ஒரு மாலையும், இரண்டாம் ஜாமங்களின் கதை ஆகியவை புகழ்பெற்ற ஜெர்மன் புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

அண்மையில் அமெரிக்கா சிகாகோ பல்கலைக் கழகம் சென்று வந்திருக்கிறார். மே 4,5இல் நிகழ்ந்த தெற்காசிய இலக்கியம் மற்றும் இலக்கிய வளர்ச்சி குறித்தான கருத்தரங்கில் இவரின் கவிதைகள், நாவல்கள் சிறந்த படைப்பாக தேர்வாயின. தெற்காசியாவில் இருந்து கலந்து கொண்ட ஒரே படைப்பாளர் இவர். அவரை ‘உண்மை’ இதழுக்காகச் சந்தித்தோம்.
உங்களுக்கான ‘தொடக்கம்’ எப்போது?

பதினாறு வயதில் கவிதை துவங்கியது. பிறகு வாசிக்கும் ஆர்வம் வந்தது. இசுலாமிய சமூகத்தில் எனக்கான கல்வி ஒன்பதாம் வகுப்போடு முடிக்கப்பட்டது. இந்த முடிவு என்னை வெகுவாகப் பாதித்தது. இந்நிலையில் என் எழுத்தும், வாசிப்பும் பல மடங்கு அதிகரித்தன. நிறைய வாசிக்க வேண்டும் என்கிற வேட்கை, என் தேடலை அகலப்-படுத்தியது. கிராமம் போன்ற பகுதியில் வசித்-தாலும், அங்குள்ள நூலகத்தை வெகுவாகப் பயன்படுத்தினேன். வசிக்கும் இடத்தில் வாசிக்கத் தடை விதித்தார்கள். மீறிப் படித்-தேன். தேடித் தேடிப் படித்தேன்.

அத்தேடலில் தான் பெரியார் என் கைக்கு வருகிறார். எத்தனையோ நூல்கள் படித்திருப்-பேன். பெரிய பாதிப்புகள் என்னுள் நிகழ-வில்லை. ஆனால் பெரியார் எழுத்துகள் என் உடலில் வேதியல் மாற்றத்தை ஏற்படுத்தின. குறிப்-பாக பெண்ணுரிமைக் கருத்துக்கள் என்னை வியப்படையச் செய்தன. குழப்பமான பல நிலைகளிலும் நான் தீர்வு பெற்றேன். எழுதவும், வாசிக்கவும் எனக்கிருந்த எதிர்ப்பை பெரியாரின் துணை கொண்டு முறியடித்தேன்.

எழுதவும், படிக்கவும் இவ்வளவு எதிர்ப்புகள் – இதில் அரசியல் நுழைவு எப்படி சாத்தியம்?

அது இயல்பானது. துவரங்குறிச்சி பகுதி மகளிர் தொகுதியாக மாறிய நேரம். அப்போது பேரூராட்சி தேர்தல் அறிவிக்கப்படுகிறது. நானும் வேட்பாளராக நிற்கும் நிலை. சுயேச்சையாக நின்று வென்றேன். ‘வென்றேன்’ என்கிற வார்த்தைக்குப் பின் நிறைய போரா-டியுள்-ளேன். ஜமாத் பெரியவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தந்தார்கள். மீண்டு வந்தேன்.

பேரூராட்சி தலைவராக உங்களின் பணி எப்படியிருக்கிறது?

மக்கள் பாராட்டும்வண்ணம் செயல்-பட்டேன். துவரங்குறிச்சி பேரூராட்சி தேர்தல் பல ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தது. உள்ளூரில் சிலரின் ஆதிக்கத்தில் அது அகப்-பட்டுக் கிடந்தது. என் பொறுப்புக்குப் பின்-னால் முறையான தேர்தல் நடந்தது. அதே-போன்று பேரூராட்சிக்கு 11 கடைகள் இருந்தன. 20 ஆண்டுகளுக்கு மேல், மிகக் குறைந்த வாடகையில் பலரும் அனுபவித்தார்கள். குறிப்பாக ஆர்.எ°.எ°. ஆட்களின் ஆக்கிர-மிப்பில் இருந்தது. அவர்களை அப்புறப்படுத்தி 11 கடைகளை 18 கடைகளாக மாற்றியமைத்து, இன்றைக்கு ஆண்டு வருமானம் 14 இலட்சம் வருகிறது. இதுபோன்று பல.

அண்மையில் உங்களின் அமெரிக்க வாய்ப்பு மற்றும் வேறு பயணங்கள் குறித்துச் சொல்லுங்களேன்?

அமெரிக்கா, சிகாகோ பல்கலைக்கழகத்தில் தெற்காசிய இலக்கியம் மற்றும் இலக்கிய வளர்ச்சித்துறை இருக்கிறது. தெற்காசிய மொழிகள் அனைத்திலும் இருந்து ஒருவரின் படைப்புகள் தேர்வாகிறது. இம்முறை தமிழில் என் எழுத்துக்களை விவாதத்திற்கு எடுத்திருந்-தனர். அதற்காக அமெரிக்கா சென்றேன். 2002ஆம் ஆண்டு பெண்ணுரிமை மாநாட்டில் பங்கேற்க இலங்கை சென்று வந்தேன். உள்ளாட்சி அமைப்பில் சிறப்பாக செயல்பட்-டதற்காக 2005ஆம் ஆண்டு பாகி°தான் சென்றேன். இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் ஜெர்மன் புத்தகக் கண்காட்சிக்கு சிறப்பு அழைப்பாளராக 2006இல் சென்று வந்தேன்.

பொது வாழ்க்கையில் பலப்பல இடையூறுகளைச் சந்திக்க வேண்டி வருமே, உங்களுக்கு எப்படி?

இல்லாமல் இருக்குமா? அதிகபட்சமாய் சந்தித்து விட்டேன். என் அரசியல் நிகழ்வு-களுக்கு என் குடும்ப ஆதரவு உண்டு. அதனால் கொஞ்சம் பலம் பெற்றேன். எழுத்து, பயணம், அரசியல் இவைகளைக் கடக்க ஆண்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உண்டு. ஒரு பெண்ணாய் நான் நிறைய போராடியுள்ளேன். பல நிலைகளையும் கடந்துதான் இன்றைக்கு தமிழக அரசால் சமூகநல வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன்.

திராவிடர் கழகம் குறித்த உங்களின் பார்வை?

என் வாழ்வின் தொடர் போராட்டங்களில், எனக்கு எல்லாமுமாக இருந்தது தந்தை பெரியார் கருத்துகளே! அந்த இயக்கத்தின் மீது எப்போதுமே நான் அபிமானம் கொண்டுள்-ளேன். அரசியலுக்கு வராமல் பல சாதனை-களை நிகழ்த்துவது திராவிடர் கழகமே! குறிப்பாக ஆசிரியர் மீது நான் தனி மரியாதை வைத்துள்ளேன். அவர்களின் தொடர் உழைப்பும், சுறுசுறுப்பும் என்னை வியப்-படையச் செய்துள்ளன. இந்த இயக்கமே பெண்களை மேம்படச் செய்யும்.

மதம் குறித்து?

எனக்கு மதப்பற்று கிடையாது. மனிதராக வாழவே ஆசை. பெண்ணுரிமைக் கருத்துகளை அதிகம் வலியுறுத்துவேன். பெண்களின் பெயருக்குப் பின்னால் கணவன் அல்லது தந்தையின் பெயரை இணைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தனித்த அடையாளம் தேவையாக உள்ளது.

– நேர்காணல் – வி.சி.வில்வம்

“பெண்ணியத்தை வாழ்க்கைதான் கற்றுக்கொடுக்கிறது?”Penne Nee (Sify)

திருச்சியிலிருந்து மதுரைக்குப் பயணிக்கும் நெடுஞ்சாலையில் 58 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலையோர கிராமம் துவரங்குறிச்சி. அக்கிராமத்தின் ஊராட்சி ஒன்றியத் தலைவர் திருமதி றொக்கையா. இவரின் இன்னொரு பெயர் ராசாத்தி. தமிழ் இலக்கிய உலகுக்கு நன்கு அறிமுகமான பெயர் சல்மா.

சல்மா பிறந்தது, வளர்ந்தது, படித்தது, திருமணம் செய்து கொண்டது, பணியாற்றுவது என சகலமும் இந்தத் துவரங்குறிச்சியில்தான்.

சம்சுதீன் – சர்புனிசா தம்பதியருக்கு 1968ல் பிறந்த சல்மாவின் பள்ளிப்படிப்பு ஒன்பதாம் வகுப்பு வரைதான். அந்தப் பகுதியில் இஸ்லாமியப் பெண்கள் வயதுக்கு வந்த பிறகு பள்ளிக்குச் செல்லவோ மேற்கொண்டு படிக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. ஏன், வீட்டுக்குள் ஒரு பெண் இருக்கிற விசயமே வெளியில் தெரியக்கூடாது. அப்படி ஒரு கட்டுப்பாடு.

வீட்டுக்குள் தனிமையான சூழலில் (அப்போது தொலைக்காட்சி வசதி கூட கிடையாது) வார, மாத இதழ்களையும், கதைப் புத்தகங்களையும் படித்தே பொழுதைப் போக்கிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

சல்மாவின் பெரியப்பா மகன் மனுஷ்யபுத்திரன். பக்கத்து வீடு. இருவரும் துணுக்குகள், ஜோக்ஸ்கள் எழுதி “ராணி”, “அரசி” போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்கள். அவை பிரசுரமாகி, சன்மானங்களும் பரிசுகளும் கிடைத்துக் கொண்டிருந்தன. அவற்றைப் படித்துவிட்டு மனுஷ்யபுத்திரனைப் பார்க்க சில நண்பர்கள் வருவார்கள். அவர்கள் வெளியுலகங்களிலிருந்து புத்தகங்களையும், புத்தகளைப் பற்றிய தகவல்களையும் கொண்டு வருவார்கள். நிறைய இலக்கியம் பேசுவார்கள். அவர்கள் சென்றபிறகு மனுஷ்யபுத்திரன் மூலமாக அவற்றை எல்லாம் சல்மா தெரிந்துகொள்வார். பெரியார் நூல்களும், ரஷ்ய இலக்கியங்களும், தமிழின் முக்கியப் படைப்புகளும் அவர்கள் மூலமே தெரிய வருகின்றன. படிப்பு பரவலாகிறது. எழுதுவதற்கான ஆர்வமும் அதிகமாகிறது. கவிதை முயற்சி தொடங்குகிறது.

திருச்சியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த “சோலைக்குயில்”, “சுட்டும் விழிச்சுடர்” இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவருகின்றன. தொடர்ந்து கோவை ஞானியின் “நிகழ்”, மனுஷ்யபுத்திரன் பங்களிப்பு செய்த “காலச்சுவடு” என சல்மாவின் கவிதைப் பயணம் தொடர்கிறது.”சுட்டும் விழிச்சுடர்” இதழில் வெளிவந்த “சுவாசம்” கவிதையையே தனது முதல் கவிதையாக அங்கீகரிக்கிறார் சல்மா.

எப்போதும்
எல்லா காரியங்களும்
நான் இல்லாதபோதே நிகழ்கின்றன

என வருத்தத்துடன் தொடங்கும் அக்கவிதை,

நான் அனுமதிக்கத்தான் வேண்டுமா
என் சுவாசம் நானின்றி நிகழ்வதை

என்கிற ஆதங்கத்தோடு முடிகிறது. அப்போது “சல்மா” எனும் புனைப்பெயரை அவர் வைத்துக் கொள்ளவில்லை.

“ராசாத்தி, துவரங்குறிச்சி” என்ற பெயரில் அந்தக் கவிதை “சுட்டும் விழிச்சுடர்” இதழின் பின்னட்டையில் வெளியாகி இருந்தது. இஸ்லாமியப் பெண் தனக்குரிய இருத்தலை எக்காரணம் கொண்டும் வெளியில் காட்டிக் கொள்ளக் கூடாது என்கிற சூழலில், இவரின் பெயர் பத்திரிகையில் வெளிவந்தது சமூகத்துக்கு எதிரான செயலாக கருதப்பட்டு, அந்த ஊரையே மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. “தவறான செயலில் ஈடுபட்ட ஒரு பெண்ணை இந்தச் சமூகம் எப்படி மோசமாகவும் அசிங்கமாகவும் பேசுமோ, அப்படி நான் அவமானத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது” என்கிறார்.

அப்போதுதான் சல்மாவுக்குத் திருமணம் ஏற்பாடாகியிருந்தது. மாப்பிள்ளையின் தந்தை, “இந்த மாதிரிப் பெண்ணை எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது?” என்று சண்டை போட்டிருக்கிறார். “இனிமேல் எழுதக்கூடாது” என்று உத்தரவாதமும் கேட்டிருக்கிறார். அதற்கு, “என்னால் எழுதாமல் இருக்க முடியாது. நீங்கள் வேண்டுமானால் உங்கள் பையனுக்கு வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்பதுதான் இவரின் பதிலாக இருந்திருக்கிறது. பிறகு, வேறு வழியின்றி, “கல்யாணத்துக்குப் பிறகு எல்லாம் சரியாகிடும்” என்கிற சமாதானத்தோடு அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்தது. திருமணம் ஆயிற்று.

“என்னைப் போலத்தான் மனுஷ்யபுத்திரனும் கவிதை எழுதினார். அவரைப் பார்க்க நண்பர்களெல்லாம் வந்தார்கள். அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் பெண் என்பதனால்தான் இப்படியான பிரச்சனைகள்” என்கிறார்.திருமணத்துக்குப் பிறகு சல்மா கவிதை எழுதாமல், ரொம்ப நல்ல பெண்ணாய் செக்குமாட்டு வாழ்க்கைக்குத் தயாராகிவிட்டார் என்றுதான் குடும்பத்தினர் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், நடந்ததோ வேறு. அவரால் கவிதை எழுதாமல் இருக்க முடியவில்லை. அதனால், யாருக்கும் தெரியாமல் தான் எழுதிய கவிதைகளை ஒரு துணியில் சுற்றி பையில் வைத்து ரகசியமாக அம்மாவின் மூலமாக மனுஷ்யபுத்திரனுக்குக் கொடுத்து அனுப்புவார்.

மனுஷ்யபுத்திரன் அந்தக் கவிதைகளைப் படித்துப் பார்த்து, பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பார். மனுஷ்யபுத்திரன் முகவரிதான் இவருக்குத் தொடர்பு முகவரி. அதுபோல இவருக்கு வருகிற கடிதங்கள், பத்திரிகைகள் யாவும் துணியில் சுற்றப்பட்டு, அம்மாவின் மூலமாக மனுஷ்யபுத்திரனிடமிருந்து ரகசியமாக வந்து சேரும். இப்படியாக பன்னிரண்டு வருடங்கள் தனது கவிதைப் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார். “சல்மா” என்ற புனைப்பெயரில் கவிதைகள் வந்து கொண்டிருந்ததால் யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை.

“புனைப்பெயர் வைத்துக் கொள்வதில் எனக்கு எப்போதும் விருப்பம் இருந்ததில்லை. திருமணத்துக்கு முன்பு “தலாக்”குக்கு எதிராக ஒரு கவிதை எழுதியிருந்தேன். இஸ்லாமிய மதவாதிகளால் தஸ்லிமா நஸ்ரின், சல்மா ருஷ்டி ஆகியோர் அச்சுறுத்தப்பட்ட காலம் அது. “சுட்டும் விழிச்சுடர்” தோழிகள் ஏதாவது புனைப்பெயரில் இந்தக் கவிதையை வெளியிடலாம் என்று ஆலோசனைக் கூறினார்கள். ஆனால், புனைபெயருக்குள் ஒளிந்துகொண்டு எழுத நான் உடன்படவில்லை. “என் கவிதை என் பெயரிலேயே வந்தால் வரட்டும். இல்லையென்றால் தேவையில்லை” என்று உறுதியாகக் கூறிவிட்டேன். அந்தக் கவிதை பிரசுரமாகவே இல்லை. ஆனால், திருமணத்துக்குப் பிறகு குடும்பத்துக்குத் தெரியாமல் எழுதியே ஆக வேண்டும் என்கிற சூழலில்தான் புனைப்பெயரை வைத்துக் கொண்டேன்.”

“சல்மா” என்கிற புனைப்பெயரில் இவர் எழுதிய முதல் கவிதை “ஒப்பந்தம்”. அக்கவிதையின் இறுதி வரிகள் இவை:

முடியுமானால்
உன்னைச் சிறிதளவு அதிகாரம் செய்ய
நான் சிறிதளவு அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள
எல்லா அறிதல்களுடனும்
விரிகிறதென் யோனி

இன்றைக்கு பெரும் எண்ணிக்கையில் பெண் கவிஞர்கள் தங்கள் உடலுறுப்புகள் பற்றி கவிதை புனைவதற்கு முன்னுதாராணமாக அமைந்த இக்கவிதை “நிகழ்” இதழில் வெளிவந்தது.

“பெண்ணியம் என்கிற விசயத்தை என் வாழ்க்கைதான் எனக்குக் கற்றுக் கொடுத்தது. என் அனுபவத்தைத்தான் இயல்பாக எனது கவிதைமொழியில் பதிவு செய்தேன். இக்கவிதை வெளிவந்த காலத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு, பல பெண் கவிஞர்கள் இப்படியாக எழுத முனைந்தவுடன் என்னுடைய கவிதையை தேடி எடுத்து இப்போது விமர்சிக்கிறார்கள்.”

சல்மாவின் முதல் கவிதைத் தொகுதி “ஒரு மாலையும் ஒவ்வொரு மாலையும்” “காலச்சுவடு” வெளியீடாக ஆகஸ்ட் 2000#ல் வெளிவந்தது. இத்தொகுப்பில் பல நல்ல கவிதைகள் உள்ளன. பெரும்பாலான கவிதைகள் தனிமை குறித்தே பேசின. இதனை சல்மாவும் உணர்ந்திருந்தார்.

“எனது பெரும்பாலான கவிதைகளின் பாடுபொருளாகத் தனிமை மட்டுமே இருப்பதும் குறிப்பிட்ட சில புள்ளிகளைச் சுற்றியே கவிதைகள் உருவாகியிருப்பதும் அலுப்பூட்டுவதாக இருக்கலாம். திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் சங்கடத்திலிருந்தே இக்கவிதைகளை நீங்கள் அடையக்கூடும்” என அதற்கான நியாயத்தை அந்நூலின் முன்னுரையில் முன்வைக்கிறார்.

ஒரு சராசரி இஸ்லாமியப் பெண்ணுக்கான கட்டுப்பாடுகளோடு வீட்டுக்குள்ளே தனிமையில் தகித்துக் கொண்டிருந்த சல்மா, 2001 செப்டம்பரில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றியத் தேர்தலில் போட்டியிட்டு, இப்போது ஊராட்சி ஒன்றியத் தலைவராகவும் இருக்கிறார். இது எப்படி சாத்தியம்?

சல்மாவின் கணவர் மாலி, அந்தப் பகுதியில் செல்வாக்கான மனிதர். அவர் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி உறுதி என்கிற நிலை. ஆனால், அது பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதி. அதனால் “நம்ம குடும்பத்துக்கு ஒரு பதவி வேணும். அதற்காக பெயரளவுக்கு இருந்துட்டுப் போகட்டுமே” என்று இவர் தன் மனைவியை நிறுத்துகிறார்.

எந்தப் பெண்ணின் பெயர் பத்திரிகையில் அச்சானதற்காக கேவலமாகப் பேசினார்களோ, அதே பெண்ணின் பெயரை மட்டுமல்ல, அவரது புகைப்படத்தையும் அச்சிட்டு ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். யாரை வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது, யாரையும் பார்த்துப் பேசக் கூடாது என்று கண்டித்தார்களோ அவரை வீடு வீடாக அழைத்துச்சென்று ஓட்டு கேட்க செய்திருக்கிறார்கள். இவை மட்டுமல்ல, மேடையேறி பேசவும் வைத்திருக்கிறார்கள்.

பத்திரிகைகளில் பேட்டிக்கு அனுமதிக்கிறார்கள். நடப்பதெல்லாம் கனவா, நனவா என்று புரியாமல் திக்குமுக்காடி கொண்டிருந்த சூழலில் வெற்றியும் பெற்று விடுகிறார்.ஒரு நவீன பெண்கவிஞர் முதல்முதலாக ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்றிருப்பதை மையப்படுத்தி “விகடனில்” இவரது பேட்டி வெளியாகிறது. இவருக்கு “சல்மா” என்று இன்னொரு பெயர் இருப்பதும், இவர் தொடர்ந்து கவிதை எழுதிக் கொண்டிருப்பதும், ஒரு கவிதை நூல் வெளிவந்திருப்பதும் கணவருக்குக்கூட தெரிய வருகிறது. ஆனால், விளைவு முன்புபோல பயப்படும்படியாக இல்லை.

இப்போது நிலைமை வேறுமாதிரியாக இருந்தது. “கவிஞர்” என்கிற அடையாளம் அதிகாரத்துக்கு கூடுதல் அங்கீகாரமாகி விட்டது. அதிகாரிகள் கௌவரத்துடன் நடந்து கொள்ளும் சூழலும் உருவாகி இருக்கிறது. ஆனாலும், பொது வாழ்க்கைக்கு வரும் பெண்கள் எதிர்கொள்ளும் அவமானங்களை இவரும் சந்திக்கத்தான் வேண்டியிருந்தது.

ஊராட்சி ஒன்றியத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டபிறகு, “நந்தன்” இதழில் இவருடைய “ஒப்பந்தம்” கவிதையின் கடைசி ஆறு வரிகளை (நாம் மேலே படித்தோமே அதே வரிகள்தான்) மறுபிரசுரம் செய்து “இப்படியெல்லாம் பெண்கள் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்” என்கிற வகையில் அதை பெருமையுடன் வெளியிட்டிருந்தார்கள். ஆனால், அந்தக் கவிதை வரிகளை அடிக்கோடிட்டு, “இப்படியொரு கேவலமான பெண் நமது பஞ்சாயத்து தலைவராக இருக்கலாமா?” என்று கீழே எழுதி, அதை ஜெராக்ஸ் எடுத்து, ஒரு வீடு, கடை மீதமல்லாமல் ஊர் முழுவதும் மிக சாமர்த்தியமாக விநியோகித்திருக்கிறார்கள்.

“இது நிச்சயமாக என்மீது வெறுப்பு கொண்ட இஸ்லாமியர்களின் செயல்தான். இந்த செயலுக்காக எனக்கு வருத்தம் ஏதுமில்லை. ஏனென்றால், அது என்னுடைய கவிதைதானே. ஆனாலும் அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. நான் வேறு நோக்கத்தில் பலிதீர்த்துக் கொள்ளப்பட்டேன். என் குடும்பத்தினர் ரொம்பவே கலங்கிப் போனார்கள்” என்கிறார். இவரும் கலங்கித்தான் போனார் என்பது கலங்கும் இவரது கண்களில் இப்போதும் தெரிகிறது.

சல்மாவின் இரண்டாவது கவிதைத் தொகுதி “பச்சை தேவதை” 2003 செப்டம்பரில் “உயிர்மை” வெளியீடாக வந்தது. இத்தொகுதியில் தனிமையிலிருந்து விடுபட்ட சல்மாவின் விசாலமான உலகை உணர முடியும். ஆனாலும், இந்த இரண்டாம் தொகுதி சரியாக கண்டுகொள்ளப்படவில்லை என்கிற ஆதங்கம் சல்மாவுக்கும் இருக்கிறது.

கவிஞராக அறியப்பட்டிருக்கும் சல்மா, சிறுகதையாசிரியராக, நாவலாசியராக, விமர்சகராக, கட்டுரையாளராக பல்வேறு பரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார்.

“இரண்டாம் ஜாமத்துக் கதை” இவரது முதல் நாவல். இப்போது வெளிவந்திருக்கிறது.இரண்டாண்டுகளுக்கு முன்பு, வெளிவந்திருக்க வேண்டிய இந்த நாவல் சமீபத்தில் பெண் படைப்பாளிகளின் படைப்புகள் மீது வைக்கப்படுகிற மோசமான விமர்சனங்களுக்கு மத்தியில் தாமதமாகவே வந்திருக்கிறது” என்று கூறுகிறார்.சமீபத்தில் தில்லியிலுள்ள ஐ.எஸ்.எஸ். அமைப்பின் ஏற்பாட்டில் பாகிஸ்தான் சென்று திரும்பியுள்ள இவர் தனது பயண அனுபவங்களை ஓர் இதழில் தொடராக எழுதியுள்ளார்.

இவரது கதைகளும், விமர்சனங்களும், பாகிஸ்தான் பயண அனுபவக் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு, தனித்தனி நூல்களாக விரைவில் வெளிவர உள்ளன. அவை வெளியான பிறகு சல்மா பற்றிய முழுமையான தோற்றம் கிடைக்கும்.இவர் கோப்புகளில் மட்டுமே கையெழுத்துப் போடுகிற தலைவராக இல்லாமல், செயல்படுகிற தலைவராகவும் இருக்கிறார். மக்கள் பிரச்சனைகளை அறிவது, அதிகாரிகளை சந்திப்பது, வெளியூர்பயணம் செய்வது என வீட்டுக்குள்ளிலிருந்து விடுதலையாகி இருக்கும் சல்மாவின் இந்தச் சூழல் படைப்புக்கு உதவியாகவே இருக்கிறது.

“முன்பு வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போன வாழ்க்கை. அதனால் நிறைய எழுத நேரமிருந்தது. ஆனால், இப்போது எழுதுவதற்கான நேரம் குறைந்திருக்கிறது. ஆனால், புதிய புதிய அனுபவங்கள் நிறைய கிடைத்துள்ளன. இந்த அனுபவங்கள் அவகாசம் கிடைக்கும்போது படைப்புகளாகலாம்” என்கிறார். இவரிடமிருந்து சிறந்த படைப்புகளை நிறையவே எதிர்பார்க்கிறோம்.

Analysis, Feedbacks, Related Counterpoints

முத்துப்பேட்டை: மருங்காபுரி ருகையா மாலிக் என்ற சல்மா
தமிழ்முஸ்லிம் மன்றம்: திருந்திய சல்மா?
சில நிகழ்வுகளும் சலனங்களும் – Sify.com

தமிழ் வலைப்பதிவு » ஓர் ஆணாதிக்க ஆங்கிலப் பேராசிரியர் என்ன எழுதுவார்?..
உருப்படாதது: ஒற்றை தராசும், ஒரிரு வார்த்தைகளும்
அலைஞனின் அலைகள்: கருப்பணி: மதத்தில் மற/றைந்தது மாமதயானை

4 responses to “Salma – Links

  1. தெரியாத பல தகவல்கள்!

    நன்றி, பாலா!

  2. A related question raised by Malan (in Narain’s blog):

    ஆணுக்கும் பெண்ணிற்குமிடையே ஒரே ஒரு வித்தியாசம்தான் உண்டு. அது அவர்களது பாலுறுப்புக்கள். மற்றபடி சிந்தனை, ஆற்றல், செயல்திறம், கடமைகள், அதிகாரங்கள் எல்லாம் ஒன்றுதான். ஆனால் அதிகார அமைப்புக்கள் (மதம்,அரசியல், ஊடகங்கள்) இந்த இயல்பான வித்தியாசத்தைத் தங்கள் நலன்களின் பொருட்டு மிகைப்படுத்திக் காலங்காலமாகப் பெண்களை ஒருவித பிணைநிலையில் வைத்திருக்கின்றன. பெண் சமநிலை பெற வேண்டுமானால் சமூகத்தின் கவனம் அவளது பாலுறுப்புகளின் மீதிருந்து திருப்பப்பட வேண்டும். ஆனால் சில அண்மைக்காலப் படைப்புக்கள் அந்த உறுப்புகளை நோக்கியே கவனத்தை ஈர்க்கும் விதமாக உருவாக்கப்படுவது பெண் சமநிலை பெற வேண்டும் என்ற இலட்சியத்திற்கு எதிரானது அல்லவா?

  3. பிங்குபாக்: 2008 - Tamil Books « Snap Judgment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.