Daily Archives: ஜனவரி 9, 2009

பாஸ்போர்ட் – சீனப் புரட்சி

உரிமைதுறப்பு: நான் சீனா சென்றதில்லை. சீனாவில் என்னுடன் கல்லூரியில் படித்த இரு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்தக் கட்டுரையைக் காட்டியபோது, கருத்து சொன்னால் தலை கொய்யப்படும் என்று சொல்லி, மாற்றங்களைப் பரிந்துரைக்க மறுத்துவிட்டார்கள். எனவே, இந்த செய்திக் கோர்வை முழுக்க முழுக்க ஊடகத் தகவலை அடிப்படையாகக் கொண்டது.

அடக்குமுறையைத் தவிர வேறொன்றையும் அறிந்திருக்கவில்லை சீனா. வெகுண்டு எழுந்து சீனர்கள் போராட ஆரம்பிக்கும் ஒவ்வொரு சமயமும் அவர்கள் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டனர். ஆண்டான் அடிமை மனோபாவம் தகர்த்தெறியப்படவேண்டும். உழைக்கும் மக்களின் ஆட்சி அமையவேண்டும்.

சீனா ஒரு குடியரசாக மலர வேண்டும்.

புத்தக அறிமுகத்தில் இருந்து.

தொடர்பான சமீபத்திய செய்தி இரண்டு

1. மக்கள் எழுச்சி, வேலையில்லாத் திண்டாட்டம், சோசலிசம்

China warned to expect greater public unrest as job prospects worsen – Times
Online
:

முதற்கண் சீனப் புத்தாண்டு வாழ்த்து.

சீன அரசு வெளியீடு (The Outlook Magazine, published by the Government’s Xinhua news agency) புத்தாண்டு வாழ்த்து சொன்ன கையோடு வன்முறை கலந்த போராட்டங்கள் நிறைந்த வருடமாக அடுத்த வருடம் அமையும் என்றும் கணித்திருக்கிறது.

புதிதாக பட்டம் பெறும் கோடிக்கணக்கான மாணவர்களும் ஏற்கனவே வேலையில்லாமல் இருக்கும் பத்து மில்லியன் கூலியாள்களும் கோபப்பட்டு இந்த எழுச்சி நிகழும் என்று அரசே ஒத்துக் கொண்டிருக்கிறது.

சீன கம்யூனிசக் கட்சிக்கு இது மணி விழா ஆண்டு. வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி அறுபதாம் கல்யாணம் கட்டிக் கொள்ளும் தருணத்தில் ஒலிம்பிக்சின் போது செய்த மோடி மஸ்தான் வேலையை மீண்டும் அரங்கேற்றும் கணத்தில், இந்தப் போராட்டம் எழலாம்.

சென்ற ஆண்டில் மட்டும் எண்பத்தி மூன்று லட்ச தொழிலாளர்களுக்கு வேலை பறிபோனதையும் அரசாங்க ஆய்வு குறிப்பிட்டிருக்கிறது.

இதைப் போன்ற ஆயிரக்கணக்கான (அரசுக் கணக்குப் படி ஆயிரம் என்றால், பத்தாயிரம் எழுச்சிகளாவது இருக்கும்) கொடி தூக்கல்களை நசுக்கி எறிவது போல் இந்த உரிமைக்கோறலையும் துச்சமாக தூக்கி எறிய கபர்தார் போட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.


2. கம்யூனிசமும் ஊழலும் – பிரிக்கமுடியாத இரத்த உறவு!

*Corruption taints every facet of life in China – Los Angeles Times:

லியாவ் (Liao Mengjun) பள்ளிக் கல்வியை முடித்து விட்டான். ‘ஸ்கூலில் இருந்து டிசி வாங்கப் போறேம்மா’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பியவனை பிணவறையில்தான் அடுத்துப் பார்ப்போம் என்பதை பெற்றோர் அறிந்திருக்கவில்லை.

பதினைந்து வயது பாலகனின் நெற்றியைப் பிளந்திருந்தார்கள். வலது முட்டி எலும்புக்கூடாக காட்சியளித்தது. கைகள் இரன்டும் உடைந்து தனியாக இருந்தது.

அனாதரவாக இருந்த கையிலிருந்த சுட்டு விரலை கோரமாக சிதைத்திருந்தார்கள்.

எதையோ ஒப்புதல் வாக்குமூலம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். யார்?

அவனுடைய வாத்தியார்தான்.

ஏன்?

பள்ளிக்கூடங்களில் நடைபெறும் ஊழலையும் அநியாயமாகப் பறிக்கப்படும் பணத்தையும் கல்விச்சாலையில் பிடுங்கப்படும் முறைகேடான லஞ்சமும் காரணம்.

சீனாவில் ஊழல் செய்து எவராவது பெருந்தலை மாட்டிக் கொண்டால் பேரளவிற்கு உடனடியாக தூக்கில் போட்டுவிடுவார்கள். அவரை விசாரித்தால், தாங்களும் மாட்டிக் கொண்டு விடுவோம் என்னும் அச்சம் முதல் காரணம். ஆக்சன் கிங் போல் செயலில் உத்வேகம் கொண்டிருப்பதாய் காட்டுவது இரண்டாம் காரணம்.

ஆனால், சைனாவில் ஊழலும் லஞ்சமும் புரையோடி வளர்ந்து சர்வ அடுக்குகளிலும் வியாபித்து கோலோச்சி வருகிறது.

இப்படி ஊழல் இராச்சியமாக இருப்பது அறிந்திருந்தால் சீன கம்யூனிசக் கட்சி என்ன செய்கிறது? தங்கள் நலனிற்கும் ஆட்சிக்கும் பங்கம் விளையாத வரை ‘நீ பிறரை எவ்வளவு அடித்தாலும் பிரச்சினை இல்லை’ என்று தாராள சிந்தனையோடு நீருற்றி வளர்த்து வருகிறது.

சுதந்திரம் இருந்தால்தானே இதை காவல் நிலையத்திலோ, நீதிமன்றங்களிலோ, சட்டமன்றத்திலோ முறையிட முடியும்?

சுதந்திரம் இருந்தால் பேச்சுரிமை பெற்று கொத்தடிமை முறையும் ஒழிந்துவிடுமே?

எதுக்கு சுதந்திரம் தந்து, ஊழலை அம்பலமாக்கி, தங்கள் பதவியை, அதிகார போதையை, பணந்தரும் கல்பதருவை இழக்க வேண்டும் என்கிறது சீன கம்யூனிசம்.

அவர்கள் நிலையில் நீங்கள் இருந்தாலும் இப்படித்தான் முடிவெடுப்பீர்கள்.

சீனப் பொருளாதாரம் ஏழு ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. இதில் ஒரு டிரிலியன் லஞ்ச வர்த்தகம்.

‘ஊழலை எல்லோரும் வெறுக்கிறார்கள். குறிப்பாக பொதுசனத்துக்கு கடுங்கோபம் வருது. அதற்கு காரணம் அவர்களுக்கு லஞ்சம் வராததுதான்!’ என்று கூலாக சொற்பொழிவாற்றுகிறார் இரயில்வே துறை மீது வழக்கு தொடுக்க முயற்சித்த ஜியாவ் (Qiao Zhanxiang).

Foshan, or “Buddha Mountain” :: ஃபோஷான் (அ) புத்தமலை

  • குருவி படத்தில் கொத்தடிமையாக இருந்தது போல் உழைப்பாளிக் கூட்டம் இங்கே நிஜத்தில் நடத்தப்படுகிறது.
  • உடம்பு சரியில்லையா? அவசரமாக கவனிக்கணுமா? சோசலிச நாட்டில் பணம் அதிகம் கொடுத்தால் உடனடி மருத்துவ சேவை உத்தரவாதம்.
  • வண்டி ஓட்டத் தெரியாமல் உரிமம் வேண்டுமா? அப்படி ஓட்டிய வண்டு எவரையாவது கொன்றால் வழக்கு தள்ளுபடி ஆக வேண்டுமா? வெட்டுங்க பணத்தை!

“போசான் மட்டுமல்ல; ஒட்டு மொத்த சீன அரிசிக்கு ஃபோசான் ஒரு பருக்கை பதம்,” என்கிறார் ரென் (Ren Jianming, vice director of the Clean Government Research Center at Beijing’s Qinghua University)

திபெத் விடுதலை அடைய தலாய் லாமா எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று யாராவது சீன ஜனாதிபதியிடம் கேட்டு சொல்லுங்களேன்.

சென்னை புத்ததகக் காட்சி – மனுஷ்யபுத்திரன் (சென்ற வருடம்)

நன்றி: உயிர்மை :: இதழ் 54 – பிப்ரவரி 2008

wrappers-publishers-generic-tamil-booksநடந்து முடிந்த 31 ஆவது சென்னை புத்தகக் காட்சி, மாறுபட்ட மங்கலான சித்திரங்களை பதிப்பாளர்கள், வாசகர்களிடையே உருவாக்கி இருக்கிறது. சென்னை புத்தகக் காட்சி கடந்த சில ஆண்டுகளாக தமிழில் எழுத்தியக்கம், பதிப்புத் தொழில் சார்ந்த மாற்றங்களை அளவிடும் ஒரு பெரும் நிகழ்வாக நடந்தேறி வருவதால் அதன் குணாதிசயங்கள் பற்றிய கேள்விகளும் விவாதங்களும் எழுப்பப்படுகின்றன. சென்னை புத்தகக் காட்சியின் வளர்ச்சி ஏறாளமான பதிப்பகங்கள் தோன்றுவதற்கு உந்துதலாக இருப்பது மட்டுமல்ல, தமிழகத்தின் முக்கிய மையங்களில் புத்தகக் காட்சிகள் நடத்தப்படுவதற்கும் காரணமாக இருக்கிறது.

:::

புத்தகங்களின் மீதான ஆர்வம் ஒரு பண்பாட்டின் விழிப்புணர்ச்சியோடு தொடர்புடையது. இந்த விழிப்புணர்ச்சியே புத்தகங்கள் வாங்குவதை ஒரு அத்யாவசிய தேவையாக மாற்றக்கூடியது. ஒரு சமூகத்தில் அத்தகைய விழிப்புணர்ச்சி பெருகாத வரை புத்தக சந்தையை ஒரு எல்லைக்கு மேல் விரிக்க முடியாது.

:::

கடந்த சில ஆண்டுகளாக சென்னை புத்ததகக் காட்சி கண்ட வளர்ச்சி பல புதிய முதலீட்டாளர்களையும் பெரிய நிறுவனங்களையும் பதிப்புத் துறை நோக்கி ஈர்த்திருக்கிறது. பதிப்புத் தொழில் வளர்ச்சி அடைவதற்கும் விரிவடைவதற்கும் புதிய முதலீட்டாளர்கள் வருவது மிகவும் அவசியம். தமிழ் எழுத்தாளனின் பிரசுரம் சார்ந்த நெருக்கடிகள் ஏற்கனவே பெருமளவு தீர்ந்துவிட்டதுடன் புதிய துறை சார்ந்த நூல்கள் தொடர்ந்து வெளிவருவதற்கான சூழலும் உருவாகி இருக்கிறது.

அதே சமயம் எந்த ஒரு மாற்றமும் தமிழில் நிகழும்போது அதன் எதிர்மறை அம்சங்களே மேலோங்குவது தமிழின் துரதிஷ்டங்களில் ஒன்று.

பதிப்பகத் துறைக்குள் நுழைந்திருக்கும் பெரிய நிறுவனங்கள் சந்தையைக் கைப்பற்றிக் கொள்ளும் ஆவேசத்தில் துறை சார்ந்த நூல்களை வாங்கும் வாசகனின் ஆர்வத்தை சுரண்ட முற்படுகின்றன. மேலோட்டமான தகவல்களுடனும் உவப்பற்ற மொழி நடையுடனும் அவசர அவசரமாக எழுதப்பட்டு, பதிப்பிக்கப்பட்டு, சந்தைப்படுத்தப்படும் இந்த நூல்கள் வாசகர்களிடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்துவதை பரவலாகப் பார்க்க முடிந்தது.

ஒரு நூலை எழுதுவதற்கான குறைந்தபட்ச உழைப்போ மொழி ஆளுமையோ இன்றி எழுதப்படும் இத்தகைய நூல்களை பதிப்பிப்பவர்கள் தமிழில் செயல்படும் வெகுசன இதழியல் கலாச்சாரத்தை பதிப்புத் துறைக்குள்ளும் கொண்டுவந்து வெற்றியடையலாம் என நம்புகின்றனர்.

பத்திரிகை வாசகனும் புத்தக வாசகனும் குணாம்ச ரீதியில் வேறுபட்டவர்கள் என்பதை இந்த புதிய முதலீட்டாளர்கள் அறியாததற்கு காரணம் தமிழின் கலை, கலாச்சாரம், அறிவுத்துறைக்கும் இவர்களுக்கும் இடையிலான இடைவெளியே.

தமிழ் பதிப்புத்துறையை முழுக்க ஒரு சந்தையாக மட்டுமே அணுகுகிறவர்கள் இதற்குள் நீண்ட காலமாக செய்யப்பட்டு வரும் அறிவியக்கத்தையும் பண்பாட்டு இயக்கத்தையும் கடுமையாக அவமதிக்கிறார்கள்.

புத்தக கண்காட்சி ஒரு வர்த்தக மையம் மட்டுமல்ல. அது ஒரு பண்பாட்டு நிகழ்வு. அதில் ஏற்படக்கூடிய தளர்ச்சியினை போக்கி அதை வளர்த்தெடுப்பது காட்சி ஊடகங்களால் அழிக்கப்படும் ஒரு சமூகத்தின் பண்பாடியக்கத்தினை பாதுகாக்கும் ஒரு செயல்பாடு.

குறிப்பு: காலச்சுவடு பிப்ரவரி 2007 இதழிலும் இதே போன்ற ஒத்த கருத்துடைய தலையங்கம் வெளியாகியுள்ளது.

மலையாளம், மலையாளி – ஓர் எச்சரிக்கை: சக்கரியா

நன்றி: பத்தி: அரபிக் கடலோரம் – காலச்சுவடு :: தமிழில்: சுகுமாரன் [இதழ் 98 – பிப்ரவரி 2008]

மலையாள மொழி இன்று அடைந்திருக்கும் நிலைமை விநோதமானது. மலையாளம் என்பது என்ன? மூன்றேகால் கோடி எண்ணிக்கையுள்ள கேரளயர்கள் அன்றாடம் பேசுகிற மொழி. எழுதுகிற மொழி. நிச்சயமாகக் கேரளத்திலுள்ள பெரும்பான்மை மக்களின் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் மலையாளம் மட்டுமே. உடனடியாக அப்படி இல்லாமல் போய்விடுமென்றும் தோன்றவில்லை.

:::

சட்டபூர்வமான ஆட்சிமொழி மலையாளம். ஆனால், அரசாங்கப் பணிகளில் பெரும்பான்மையும் நடப்பது ஆங்கிலத்தில்தான். எழுத்தறிவு இல்லாத குடிமகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டிய நீதிமன்ற மொழியும் ஆங்கிலந்தான்.

அதே சமயம்

  • நாளிதழ்கள்,
  • தொலைக்காட்சிகள் பயன்படுத்தும் மொழி மலையாளம் மட்டுமே.
  • சட்டமன்ற விவாதங்களின் மொழி மலையாளம்.
  • மதப் புரோகிதர்களும் சாதியமைப்புகளும் மக்களுடன் பேசுவது மலையாளத்தில்தான். சமஸ்கிருதத்திலோ அரபியிலோ லத்தீனிலோ அல்ல.
  • சினிமாவின் மொழியும் சினிமாப் பாட்டுகளின் மொழியும் மலையாளமே.
  • நாடகங்கள் மலையாளம்.
  • கதையும் கவிதையும் நாவலும் மலையாளம்.
  • அரசியல் சொற்பொழிவுகள் மலையாளம்.

ஆனால், பாலவாடி முதல் மலையாளியின் முதல் மொழியாகக் கருதப்படுவது ஆங்கிலமே. மலையாளம் வெறும் ‘செக்கண்ட் லாங்வேஜ்’. இந்த விசித்திரமான இரட்டை முகம் எப்படி உருவானது?

‘பயன்பாடு’ என்ற ஒற்றை வார்த்தையே இதற்குப் பதில். மலையாள மொழி மூலம் பயனடைபவர்களுக்கும் பயனடையாதவர்களுக்குமான வேறுபாடு இங்கே தெளிவாகிறது. ‘பயன்’ என்பது என்ன பொருளைத் தருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். நமது வாழ்க்கையை எந்த வகையிலாவது மேம்படுத்துகிற ஒன்று. வாழ்க்கையைப் பராமரிக்க உதவும் ஒன்று. வாழ்க்கையில் நம்பக்கூடிய ஒன்று. இவைதாம் அந்தப் பயன்கள்.

சராசரி மலையாளியைப் பொறுத்தவரை அன்றாட வாழ்க்கையில் கருத்துப் பரிமாற்றத்துக்கான கருவி மலையாளம் மட்டுமே. வீட்டில், வழியில், கடையில், அலுவலகத்தில் எங்கும். அல்லது செய்திகள் வாசிக்க, தொலைக்காட்சி பார்க்க, புரோகிதனின் சொற்களைக் கேட்க எல்லாவற்றுக்கும். பத்திரிகை வாசிக்கும்போதும் தொலைக்காட்சி பார்க்கும்போதும் அவன் அரசியல் கட்சிகள், எழுத்தாளர்கள் போன்ற கருத்துத் தொடர்பாளர்களின் சொற்களையும் மறைமுகமாகக் கேட்கிறான். தொலைக்காட்சிகளில் வரும் கலை நிகழ்ச்சிகளும் சினிமாவும் அவனை மலையாளம் வழியாகவே உல்லாசப்படுத்துகின்றன.

பத்திரிகைகள், தொலைக்காட்சி, இலக்கியம், அரசியல், மதச் சொற்பொழிவுகள், சினிமா இவற்றைவிட்டால் வேறு என்ன? அவன் இவற்றுக்கு ஒரு சந்தை மட்டுமே.

அவன் மூலம் இவர்களெல்லாம் வாழ்கிறார்கள். அவர்கள் அவனிடம் மலையாளத்தில் அரசியலை விற்கிறார்கள்; மதத்தை விற்கிறார்கள்; இலக்கியத்தை விற்கிறார்கள்; பத்திரிகையை விற்கிறார்கள்; தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விற்கிறார்கள். அவன் கொடுக்கும் சந்தாக்கள், காணிக்கைகள், நன்கொடைகள், விலைகள் ஆகியவற்றால் அவர்கள் கேரளத்தில் வலிமையானவர்களாகவும் செல்வந்தர்களாகவும் செல்வாக்குள்ளவர்களாகவும் மாறுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அவர்கள் அதிகார வர்க்கமாகிறார்கள். சராசரி மலையாளி அதிகாரம் செய்யப்படுபவனாகிறான்.

அரசியல் கட்சிகளும் மதங்களும் ஊடகங்களும் அறிவுஜீவிகளும் அடங்கிய இந்த ஆளும் வர்க்கம் சுதந்திரத்துக்குப் பின் வந்த அரை நூற்றாண்டு கால ஆட்சியில் சராசரி மலையாளியை இந்தியா முழுவதும் அல்லது உலகம் முழுவதும் அப்பத்துக்காக அலையும் ஒரு அகதியாக்கிவிட்டிருக்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பிற கட்சிகளின் பங்களிப்பு இதுதான். மதத் தலைவர்கள், சாதியமைப்புகள், அறிவுஜீவிகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி அலைவரிசைகள் எல்லாவற்றின் பங்களிப்பும் இதுதான். அவர்கள் உண்டு கொழுத்தார்கள்.

:::

மலையாளிக்குக் கேரளத்தில் தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டது, மலையாளத்தால் தன்னுடைய பிள்ளைகளுக்குப் பயனில்லை என்பது புரிந்துவிட்டது. அவர்களுக்கு ஒரு வேலையோ வருமான மார்க்கமோ கிடைக்க வேண்டுமானால் அவர்கள் கேரளத்தை விட்டு வெளியேற வேண்டுமென்பதும் புரிந்துவிட்டது. அதற்கு மலையாளம் பிரயோஜனமில்லை என்பதும் புரிந்துவிட்டது. மலையாளம் மூலம் பயனடைந்தவர்கள் வரிசையில் தனக்கும் தன்னுடைய பிள்ளை களுக்கும் இடமில்லை என்பதும் புரிந்துவிட்டது. அப்படியாகத்தான் மலையாளம் செகண்ட் லாங்வேஜாகவும் ஆங்கிலம் முதல் மொழியாகவும் மாறியது.

பெரும்பான்மை மக்களுக்குச் சோறுபோடும் மொழியாக இல்லாமற்போயிருக்கிறது என்பதுதான் இன்று மலையாள மொழியின் அவலம். அது சோறுபோடுவது அரசியல் கட்சிகளுக்கும் பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கும் மதத் தலைவர்களுக்கும் சினிமாக்காரர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் மட்டுமே. (இதில் அப்பாவி மலையாள ஆசிரியர்களும் உண்டு). மலையாளம் அவர்களுடைய மொத்தக் குத்தகையாகிவிட்டது. அதனால்தான் நான் பல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்: ‘மலையாளம் உண்மையைப் பேசத் தெரியாத ஒரு மொழியாக மாறியிருக்கிறது. அதைக் குத்தகையாகக் கொண்டிருப்பவர்கள் எவரும் பொதுவாக உண்மை பேசுபவர்களுமல்ல.’

தமிழின் நிலைமை பற்றி எனக்குத் தெரியாது. அண்டை வீட்டு நிலைமையைத் தமிழ் ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டுமா என்றும் எனக்குத் தெரியாது.