Daily Archives: ஜனவரி 21, 2009

நான் கடவுள்: சென்சார் விமர்சனம் + கதை

இந்து மதத்திற்கு எதிரான படமா?

முந்தைய நான் கடவுள் பதிவு

இளையராஜாவின் இசைக்கூடம். திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது நான் கடவுள். படத்தை ராஜா பார்க்க, ராஜாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார் பாலா. டென்ஷன்…டென்ஷன்… ஒவ்வொரு விரல் நகமாக கடித்துத் துப்பிக் கொண்டிருக்கிறார் பாலா! படம் முடிந்ததும் விருட்டென்று எழுந்து தனது அறைக்குள் போய்விடுகிறார் இசைஞானி. அவ்வளவுதான், பல மணி நேரங்கள் யாரையுமே அவர் சந்திக்கவில்லை பாலா உட்பட!
bala-arya-movies-ilaiyaraja-films-reviews-naan-kadavul-stills-029
படத்தை பார்த்து பிரமித்து போயிருக்கும் சென்சார் போர்டு உறுப்பினர் ஒருவரிடம் பேசினோம். “சண்டைக்காட்சிகள் மிகவும் அச்சமூட்டும் படியாக இருந்ததால் யு/ஏ சர்டிபிகேட் கொடுத்தோம்.”

“காஞ்சிபுரம் அருகில் குடியிருக்கும் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. இந்த குழந்தை உங்களிடம் வளர்ந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று ஜோதிடர் சொல்ல, குழந்தையை காசியில் விட்டு விட்டு வருகிறார்கள். அவன் அங்குள்ள சாமியார்களிடம் வளர ஆரம்பிக்கிறான். பாஷையிலிருந்து அனைத்து பழக்க வழக்கங்களையும் சாமியார்களிடம் கற்றுக் கொள்கிறான் சிறுவன். அவனை வாலிப வயதில் மீண்டும் சந்திக்கிறார் அவனது அப்பா. பிள்ளை இப்படி இருக்கிறானே என்ற அதிர்ச்சியில் மறுபடியும் சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். இங்கு வருபவன், குழந்தைகளை கடத்தி முடமாக்கி பிச்சையெடுக்க வைக்கிற வில்லன்களுக்கு தானே கடவுளாகி தண்டனை கொடுக்கிறான். இதில் பூஜாவும் குழந்தை பருவத்தில் கடத்தி வரப்பட்டு வில்லன்களால் கண்கள் குருடாக்கப்பட்ட பெண். அவளையும் அந்த கூட்டத்திலிருந்து மீட்கிறான் என்று முடிகிறது கதை. இதில் வருகிற க்ளைமாக்சை நான் சொல்வது தர்மமில்லை” என்று முடித்துக் கொண்டார் அந்த சென்சார் போர்டு உறுப்பினர்.

bala-arya-movies-kasi-varanasi-reviews-naan-kadavul-stills-009
நர மாமிசம் சாப்பிடுபவர்களை கொடூரி என்பார்களாம். இந்த கொடூரியாகவும் ஒரு காட்சியில் வருகிறாராம் ஆர்யா. பல்லாயிரக்கணக்கான சாமியார்கள் ஓரிடத்தில் கூடும் கும்பமேளா நிகழ்ச்சியில், எவ்வித ஆர்ப்பாட்டமும் செய்யாமல் கேமிராவோடு ஊடுருவி பல காட்சிகளை எடுத்திருக்கிறார்களாம்.

கடந்த மூன்று வருடங்களாக நான் கடவுளை உருவாக்கி வருகிறார் பாலா. ஆனாலும், படப்பிடிப்பு நடந்தது மொத்தம் 369 நாட்கள்தானாம். பாலா, பூஜா தவிர்த்து படத்தில் 50க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இவர்களில் பலர் நிஜமான மன நோயாளிகள். ஊடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்கள். இவர்களை நடிக்க வைப்பதற்கு பெரும் பிரயத்தனம் எடுத்துக் கொண்டாராம் பாலா. இதன் காரணமாகவும், பெரிய குளம் ஏரியாவில் எப்போதாவது தலை காட்டும் வெயிலாலும்தான் படப்பிடிப்பு தாமதமானது என்கிறார்கள் யூனிட்டில்.
bala-arya-movies-previews-films-reviews-naan-kadavul-stills-018
சரி, முதல் பாரா சஸ்பென்சுக்கு வருவோம். இளையராஜா பாலாவிடம் என்னதான் சொன்னார்? ஒரு முழு நாள் அமைதிக்கு பிறகு அவர் சொன்னது இதுதான். “என்னாலே பேசவே முடியலே. இந்த படத்தை உலகமே கொண்டாட போவுது பாரு…!”
bala-arya-movies-watch-downloads-reviews-naan-kadavul-stills-020
நன்றி: தணிக்கை துறையின் விமர்சனம்

மறுமொழிவதில் எத்தனை வகை உண்டு?

நன்றி: In a Word – The Atlantic (January/February 2009)

முதலில் ‘Get A Life’ () ‘போங்கடா! போய் பிள்ளகுட்டிங்கள படிக்க வைங்கடா’ பதிலடிக்காரர் அறிமுகம்:

  • இணையத்தில் தங்களுக்கு உவப்பில்லாத இடங்களில் வலம்வருவது வாடிக்கை.
  • வித்தியாசமான கிண்டல் கூடிய உவமை நிறைய கைவசம் வைத்திருக்கவும். உதாரணம்: ஊசி நுனியில் யானையைக் கூட நுழைத்துவிடலாம். ஆனால், உங்களுக்கு புத்தியை புகட்ட முடியாது.

gotcha-get-a-life-internet-debates-comments-atlantic-word-fugitives-wide

அடுத்து ‘Gotcha‘ () ‘புரியல; தயவு செய்து விளக்கவும்’ கண்டுபிடிப்பாளர் குணாதிசயம்:

  • அடுத்த பிறவியிலும் இலக்கண ஆசிரியராக மறுஜென்மம் கிடைக்காத இவருக்கு சந்தி, பால் பொருத்தம், பன்மை ஒழுங்கமைவு மட்டுமே முக்கியம்.
  • ‘ஈழம் பிண்ணனி சரித்திரம்’ கட்டுரையில் தமிழீழம் குறித்த தகவலை விட்டுவிட்டு, “பிண்ணனி சரியில்லையே; பின்னணிதானே வரும் என்று கூட அறியாத தாங்கள்…” என்று தன்னுடைய மொத்த மறுப்பையும் முடித்துவிடுவார்.

போய் வா பிள்ளையாண்டானே – புஷ் வருடங்கள்

நன்றி: Then and Now – The Atlantic (January/February 2009)

bush-map

நான் வித்யா: புத்தகம்

ஏற்கனவே நிறைய விமர்சனம் படித்து இருந்தாலும், பால் மாற்றிக்கொண்ட சிலரோடு பழகி இருந்தாலும், நான் சரவணன் வித்யா, எடுத்தவுடன் கீழே வைக்க முடியாத அளவு பதைபதைப்பான நடையுடனும் வீரியத்துடனும் எழுதப்பட்டிருக்கிறது.

அவசியம் வாசிக்கவும்.


ஆசிப் மீரான்

‘கோத்தி’யாக உலாவரும் சரவணன் தனது ‘நிர்வாணத்து’க்காக ஆந்திரா செல்லும் பகுதியிலிருந்து துவங்கும் அவரது சுயசரிதையில் அவருக்கேற்பட்ட அவமரியாதைகள், துணிச்சலோடு செயல்பட்ட தருணங்கள், அதையும் மீறி காரணமின்றி மிதிக்கப்பட்ட தருணங்கள், எதிர்கொண்ட சவால்கள், உதவிய நண்பர்களின் மீதிருக்கும் அன்பு, தங்களில் ஒருத்தியாக ஏற்றுக்கொண்ட திருநங்கை தோழிகள், திருநங்கைகளின் எழுதப்படாத சட்டம், திருநங்கைகளின் நானிகள், திருச்சி, சென்னை, பூனா, ஆந்திரா, மதுரை சென்னை என்று அலைக்கழித்த வாழ்க்கையில் கடந்து போன சம்பவங்கள், சந்தித்த அவலங்கள் என்று உயிர்வலியைச் சொல்லும் புத்தகம் இது.

“சாத்தான்”குளத்து வேதம்


இகாரஸ்

வாசித்ததும் மனசு கனத்துப் போனது என்று சொன்னால் அது க்ளிஷே ஆகப் பார்க்கப் படுமோ என்று தோன்றுகிறது.

கணிப்பொறி அறிவியலில் இளநிலைப் பட்டமும், மொழியியல் பாடத்தில் முதுகலையும் படித்துவிட்டு, நாடகத்துறையில் ஈடுபாடு கொண்ட ஒருவர், தன்னுடைய ஆண் என்கிற அடையாளத்தைத் துறக்க மேற் கொண்ட முயற்சிகளையும், துறந்த பின்னர் சமூகம் அவரை எதிர் கொண்ட முறைகளையும், சந்தித்த வன்முறைகளையும், நிராகரிப்புகளையும் உள்ளடக்கி எழுதியிருக்கும் இந்த தொகுப்பு, தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் ஒரு மைல்கல்.

Prakash’s Chronicle 2.0


கிருத்திகா

மிகவும் சுயம் சார்ந்த உணர்ச்சிகளையும் அதற்கான ஜீவ மரணப்போராட்டத்தையும் எந்த வித சுய பச்சாதாபமும் இன்றி மிகத்தெளிவாக அதே சமயம் புனைவுகளின் சாயல்களின்றி ஓர் கம்பீரமான் எழுத்து நடையில் படைத்துள்ளார். “Non fiction/Autobiography” என்ற பிரிவின் கீழ் இந்தப்புத்தகம் தொகுக்கபட்டிருந்தாலும், இது அவரது சொந்த வாழ்க்கையாக மட்டும் கருதப்படாமல் மொத்த திருநங்கைகளின் ஒரு வாழ்வியல் போராட்டத்தை விளக்கும் விதமாக அமைந்திருப்பது இந்த புத்தகத்தின் வெற்றிக்கு ஒரு வித்து.

வடிகால்


பத்ரி

இதை எழுதும்போது வித்யா எத்தனை மனச்சங்கடங்களை அனுபவித்திருப்பார் என்பதை வாசிக்கும்போது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

திருநங்கைகள் குறித்து நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுமே இல்லை என்று நிராகரித்துவிடுகிறது இந்தப் புத்தகம். கஷ்டம் என்றும் துன்பம் என்றும் துயரங்கள் என்றும் ஆண்களும் பெண்களும் சொல்வதெல்லாம் உண்மையில் கஷ்டங்கள்தானா, துன்பங்கள்தானா என்று வாசித்ததும் நம்மைக் கேட்கவைக்கிற தன்மை இந்நூலின் முக்கிய அம்சம்.

எண்ணங்கள்


சுரேஷ் கண்ணன்

சு.சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’ என்கிற நாவல். ‘பெரும்பாலும் ஒரு ஆணுக்குள் சிறைப்பட்டிருக்கிற பெண்மைதான் ஒரு காலகட்டத்தில் விழித்தெழுந்து ஆண்மையை மறுதலித்து உச்சநிலையில் திருநங்கையாக உருமாற வைக்கிறது’ என்கிற அரைகுறையான புரிதலே அப்போதுதான் ஏற்பட்டது.
:::

‘என்னைத் தவிர எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்களோ’ என்கிற தாழ்வுணர்ச்சி பெரும்பாலோருக்கு தோன்றுவதைப் போலவே எனக்கும் அவ்வப்போது தோன்றுவதுண்டு. துக்ககரமான மனநிலையில் ‘எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறேன்” என்று வாழ்க்கையை திரும்பிப்பார்க்கும் போது சுயபரிதாபம் மனமெங்கும் நிறைந்து வழியும்.

பிச்சைப்பாத்திரம்


புத்தகப்பார்வை

நான்கு பேர் வரிசையாக ஓரிடத்தில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுள் மூன்று பேர் வாட்டசாட்டமாக, விறைப்பாக இருந்தார்கள். ஒருவன் மட்டும் கொஞ்சம் சாது போல் தெரிந்தான். பொதுவாக முரடாகத் தோற்றமளிக்கும் ஆள்களைத் தவிர்ப்பது என் வழக்கம். எனவே, அந்த மூவரைத் தவிர்த்துவிட்டு நான்காவதாக இருந்த அந்தச் சாது நபரிடம் போய்ப் பிச்சை கேட்டேன்.

தந்தார். இரண்டு ரூபாய். அவர் தமிழர்தான். எனவே, இயல்பாக ஓர் உரிமை எடுத்து ‘என்ன தமிழ்க்காரரே, ஒரு அஞ்சு ரூபா தரக்கூடாதா?’ என்று கேட்டேன்.

நான் வாக்கியத்தை முடித்திருக்கவில்லை. சற்றும் எதிர்பாரா விதத்தில் பளாரென்று கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. நிலை குலைந்து போனேன்.


இறுதிப் பகுதி

எனக்குத் தெரிந்து இந்தியாவில் இயங்கும் ஒரு தொண்டு நிறுவனமும் திருநங்கைகள் பிச்சை எடுப்பதிலிருந்தோ பாலியல் தொழில் புரிவதில் இருந்தோ மீள்வதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுத்ததில்லை. ‘நீ பாலியல் தொழிலே செய்; ஆனால் பாதுகாப்பாகச் செய்’ என்கிற போதனை ஒருவர் வாழ்வில் என்ன மறுமலர்ச்சியை உண்டாக்கும் என நினைக்கிறீர்கள்? வெறும் அபத்தம்.
:::
திருநங்கைகளில் பலர் விநோதமாக நடந்துகொள்வதும், உரக்கப் பேசி நடுவீதியில் தர்ம சங்கடம் உண்டாக்குவதும், பாலியல் தொழிலுக்கு வலிய அழைப்பதும், ஆபாசமாக பேசி அருவருப்பூட்டுவதும், முற்றிலும் அவர்களின் தற்காப்புக்காக மட்டுமே என்று நான் சொன்னால், தயவு செய்து நம்புங்கள். அதுதான் உண்மை.

பாதுகாப்பற்ற சமூகத்தில், எங்களுக்கான குறைந்தபட்ச பாதுகாப்பை நாங்கள் இவ்வாறெல்லாம் செய்துதான் உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. உடல் வலிமை மிக்க முரட்டு ஆண்கள் வம்புக்கு வந்தால், எங்களால் எதிர்த்து நிற்க முடியாது. பணிந்துபோகவும் விருப்பமில்லாவிட்டால், அருவருப்புணர்வை உருவாக்கி அவர்களை விலகிச் செல்ல வைப்பதே எங்களுக்குத் தெரிந்த வழி.
:::

விளிம்புநிலை பிரதிநிதி ஒருவரின் நூலை பதிப்பிக்க முன்வந்ததற்காக கிழக்கை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.


பேட்டி

மனதால் ஏற்றுக் கொண்டாலும், வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதற்கு சமூகமும், சமூக நியதிகளுமே காரணமாக உள்ளது. முதலில் வீட்டில் ஒரு திருநங்கை இருப்பது அவ்வீட்டிற்கான அவமானசின்னமாக கருதப்படுகிறது. இது உறவுகள் மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. சகோதர/சகோதரிகளின் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு தடையாகிறது. உதாரனத்திற்கு சொல்வதென்றால், ஒரு குடும்பத்தில் திருடன், கொலைகாரன் போன்ற குற்றவாளி இருந்தால் எத்தகைய இருக்கமான சூழல் நிலவுமோ அதைவிட மோசமான விளைவுகளை எங்கள் குடும்பம் சந்திக்க நேர்கிறது. மட்டுமன்றி தன்னால் தன் குடும்பத்திற்கு எந்த லாபமும் இல்லை ஆனால், அவமானம் மட்டும் நேர்கிறது என்ற குற்றவுணர்வும் எங்களை வெளியேற்றுகிறது.

சட்டமும், சமூகமும் ஏற்றுக் கொண்டால் குடும்பம் தானாகவே எங்களை ஏற்றுக் கொள்ளும்.

பார்வைகள்: கேப்பங்கஞ்சி with கவிதா


ஆழியூரான்

26 வயதென்பது வாழ்வை தொடங்க வேண்டிய வயது. சுய சரிதை எழுத வேண்டிய வயதல்ல. ஆனால், இதற்குள் லிவிங் ஸ்மைல் கடந்து வந்திருக்கும் வலி மிகுந்த பாதை, ரணங்களை மட்டுமே அவருக்கு வழங்கியிருக்கிறது.
:::
‘கண்ணாடி எல்லோருக்கும் அவரவர் ஸ்தூல உருவத்தை மட்டுமே பிரதிபலிக்க, திருநங்கைகளுக்கு மட்டும் அவர்களின் மனத்தை, உள்ளே கொந்தளிக்கும் உணர்வுகளை, உள்ளார்ந்த அவர்களுடைய பெண்மையை ஒரு சித்திரமாக மாற்றி கண்ணெதிரே காட்டும். இதை மற்றவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது. உங்களுக்கு முகத்தையும், எனக்கு முகத்துக்குப் பின்னால் உள்ள மனதையும் காட்டும் கருவி அது. எனக்கு என்றால் எங்களுக்கு.. எங்கள் எல்லாருக்கும்.!’

நடைவண்டி


லிவிங் ஸ்மைல் சுயசரிதையில் என்னை மிகவும் பாதித்த சில வாழ்க்கைச் சிதறல்:

எல்லாவிதமான கஷ்டங்களையும் சகித்துக் கொண்டு விடலாம். எப்போதாவது நாம் ஓர் அனாதை என்று தோன்றிவிடுமானால் பெரிய பிரச்னை. சுய இரக்கம் ஒரு வலுவான விஷம். [பக். 135]

திருநங்கைகளிடம் வியாபாரம் செய்தால் என்ன? பொருள் முக்கியமா? விற்போர் முக்கியமா? இது என்ன மனோபாவம் என்று எனக்குப் புரியவே இல்லை.

கைதட்டிப் பிச்சை எடுத்தபோது கூடக் காசு தர முன் வந்தவர்கள், வியாபாரம் என்று வந்தபோது, வேறுபக்கம் திரும்பிக் கொண்டார்கள். ஒரு நாளைக்கு ஒரு முரையாவது ‘உழைச்சு திங்க வேண்டியதுதானே! போங்க போங்க’ என்று விரட்டிய மகராசன் யாரும் அந்த ரயில்களில் ஏனோ வரவில்லை. [பக். 153]

யோசித்துப் பார்த்தால் என் பிரச்னைகள் எல்லாவற்றுக்கும் நானேதான் காரணமாக இருந்துவந்திருக்கிறேன். நானே விரும்பித் தேடிக் கொண்டவைதான் எல்லாம். இன்னொருத்தரைக் குறை சொல்ல முடியாது.

ஆனால், என் தேவைகள், என் இருப்பு, என் வாழ்க்கை அடுத்தவர்களுக்குப் பிரச்னை தரக்கூடியவையாக அமைவதற்கு நானா காரணம்? புனே எனக்குப் பிடித்திருந்தது. முக்கியமாக அங்கு எனக்கு கிடைத்த சுதந்திரம். ஒரு பெண்ணாக சுதந்தரமாக வலையவர முடிந்ததில் இருந்த ஆனந்தம். ஆனால் அங்கு நான் பிச்சை எடுக்கவோ, விபசாரம் செய்யவோ மட்டும்தான் முடியும். இரண்டுமே எனக்குப் பிடிக்காதபோதுதான் புனேவை விட்டு வெளியேற முடிவு செய்தேன். [பக். 164]

அவரது பழைய சிறு லெண்டிங் லைப்ரரி இப்போது அதிநவீனமாகிவிட்டிருந்தது. உலகம் ரொம்பத்தான் வேகமாக முன்னேறுகிறது என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அவரால்தான் என் முடிவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. [பக். 168]

இது என்ன வாழ்க்கை என்று புரியவேயில்லை. எல்லாமே நிச்சயமற்றதாக இருந்தது. வேலை கிடைக்கலாம். கிடைக்காமல் போகலாம். தங்க ஓரிடம் கிடைக்கலாம். அதுவும் கிடைக்காமல் போகலாம். ஊர் உறவுகள், சொந்தங்கள் அனைவரும் இருந்தாலும் இல்லாதது போலவே சமயத்தில் தோன்றுகிறது. [பக். 179]

“போற வர்ற வழியில யாராவது உங்களைக் கிண்டல் பண்ணா எப்படி எடுத்துக்குவீங்க?”
சிறிய புன்னகையோடு ஆரம்பித்தேன். “ஒண்ணும் பிரச்னை இல்லை சார். அதெல்லாம் பழக்கமானதுதான். இப்பக்கூட வர்ற வழியில ஆட்டோ ஸ்டாண்ட்லேருந்து கிண்டல் சத்தம் கேட்டுது. நான் நேரா அவங்ககிட்டயே போயி ஆட்டோ வருமான்னு கேட்டேன். உடனே சைலண்ட் ஆயிட்டாங்க. ‘எங்க மேடம் போகணும்’னு மரியாதையாத்தான் கேட்டாங்க. எந்தப் பிரச்சினையும் இல்லாமப் பத்திரமா கொண்டுவந்து இறக்கி விட்டுட்டான். நாம நடந்துக்கற விதத்துலதான் சார் இருக்கு. அதையும் மீறி கிண்டல் பண்றவங்க எல்லா இடத்துலயும் இருக்கத்தான் செய்வாங்க. அதுக்கெல்லாம் கவலைப்பட்டுக்கிட்டிருக்க முடியாதே சார்? சமாளிச்சித்தான் ஆகணும்.” [பக். 190]

எனது உரிமை. என் பெயரை நான் மாற்றிக்கொள்வதற்கான உரிமை. அதற்காக த.எ.அ. துறையிலிருந்து, → தாலுகா அலுவலகம், → வழக்கறிஞர் அலுவலகம், → மதுரை அரசு மருத்துவமனை என்று அலைந்து அலைந்து அதிகபட்ச அலுவலக விடுமுறையும் எடுத்தாயிற்று. நியுமராலஜி, மதமாற்றம், பெயர் ராசிக் காரணங்களுக்காக ஒரே மாதத்தில் இந்த தேசத்தில் ஒருவர் தம் பெயரை மாற்றிக் கொண்டுவிடலாம்.எத்தனையோ அரசியல் தலைவர்களே மாற்றிக் கொள்ளவில்லையா? ஆனால் என் தேவைக்காக என் உரிமைக்காக என் பெயரை நான் மாற்றிக்கொள்ள விரும்பியபோது அதற்காக ஒன்றரை வருடங்கள் அலைக்கழிக்கப் பட்டேன். [பக். 208]

பெண்களை இழிவாகக் கருதும் சமூக அமைப்பில், ஆணாகப் பிறந்த நபர் பெண்ணாக மாறுவதென்பது ஆண்வர்க்கத்துக்கும், ஒட்டுமொத்த ஆண்மைக்குமான அவமானம் என்ற தட்டையான ஆணாதிக்க சிந்தனையே திருநங்கைகளைப் பெண்ணாக ஏற்கமுடியாமைக்குக் காரணமோ? ஆணிடம் அடிமைப்பட்டே வாழ்ந்து பழகிவிட்ட சில பெண்களும் இதே சிந்தனைக்குப் பழகிவிடுகிறார்கள். [பக். 212]


வாசக அனுபவம்:

  • ‘நான் யார்?’ என்னும் தேடலை அப்படியே பகிர்ந்து கொள்வதில் அனைத்து தமிழ் எழுத்தாளர்களுக்கும் பிரச்சினை உண்டு. லிவிங் ஸ்மைல் விதிவிலக்காக தன் உள்ளத்தை அப்படியே சொல்கிறார்.
  • வறுமையில் வாடுவோர் படும் கஷ்டமும் உண்டு. படிப்பிற்கு பெரும் முக்கியத்துவம் தரும் நடுத்தர வர்க்க ஆசையின் பிரதிபலிப்பும் கிடைக்கிறது. இதை எல்லாம் புனைவில் படித்து சுரணை மங்கிப் போன சமயத்தில் சுயசரிதை என்பதே சுளீர் என்று உறைக்கிறது.
  • விதி‘ திரைப்படத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததற்காக பூர்ணிமா (ஜெயராம்) பாக்யராஜிடம் தர்மசங்கடமான கேள்வி விழுவதற்கு — பார்வையாளர் வருத்தப்பட்டு கொஞ்சம் போல் முன்னேறியும் ஆகிவிட்டது. எப்போது அந்த சினிமா, அன்றாட வாழ்க்கையில் அரவாணிகளை நோக்கி ஈவிரக்கமற்ற வினாக்களைத் தொடுப்பதை எல்லாம் திரைக்கதை ஆக்கும்?
  • இன வரைவியல் என்று ஆவணப் படம் போல் மூன்றாம் மனித ஆய்வுப் பார்வை அல்லாத, நிசமாகவே நாமறிந்த ஒருவரின் துன்பங்களையும் மனவோட்டத்தையும், ஆசாபசங்களையும் ஒருங்கே பதியவைக்கிறது.
  • She pulled herself out of the abyss and found her way to stability, but the redemptive narrative isn′t what carries the book. It is Living Smile’s brutal honesty in evaluating her life, introspective dual identity and at times painfully direct memoir of the relationships. Her refreshing penchant for straight talk keeps you reading, even when you are dreading the consequences of her choices.
  • Things I’ve Been Silent About போல் குடும்ப விஷயங்களை ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக பேசுவதற்கு தைரியமும் மனப்பாங்கும் பக்குவமும் வேண்டும். வித்யாவிற்கு எல்லாம் இருக்கிறது. வாழ்த்துகள்!

ஸ்மைல் பக்கம்